வியாழன், 20 செப்டம்பர், 2018

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி..!

லகத்தில் செய்யக்கூடாத இழிவான ஒரு செயல் இருக்கிறதென்றால், அது நிச்சயம் யாசகமாகவே இருக்க முடியும். ஆம்! அதனால் தான் ஒருவன் எத்தகைய நிலையில் இருப்பவ னாயினும், அவன் யாரிடமாவது எதையேனும் யாசகம் பெறவேண்டிய நிலைக்குத் தள்ளப் படும்போது தன்னைக் குறுக்கி, கைகட்டி நிற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறான். 

அவன் இறைவனே ஆனாலும்கூடத் தன்னைக் குறுக்கிக்கொள்ளவே செய்கிறான். அதற்கு வாமன அவதாரத்தைவிடவும் ஒரு சாட்சி வேண்டுமா என்ன?

மகாவிஷ்ணு வாமனனாக அவதரித்தபோது, குறுகிய வடிவம் கொண்டார். தான் யாசகம் பெறப்போகிறோம் என்பதற்காக மட்டுமல்ல; அவர்,  யார் நன்மைக்காக அவதாரம் எடுத் தாரோ அந்த தேவர்களின் வஞ்சக எண்ணத்தினாலும்தான்.

‘தேவர்களுக்கு வஞ்சக எண்ணமா, எப்படி?’

பக்த பிரகலாதனின் வம்சத்தில் வந்தவன் மகாபலி எனும் மாவலி சக்கர வர்த்தி. அசுர குலத்தில் பிறந்தவன்தான் என்றாலும் நல்ல பண்புகளைப் பெற்றிருந்தான். அவனது ஆட்சியில் அனைவரும் இன்புற்றிருந்தனர். 

தேவர்கள், பாற்கடலைக் கடந்து அமிர்தம் பெற விரும்பினர். பாற்கடலைக் கடைவது என்பது, தங்களால் மட்டுமே முடியாத காரியம் என்பதால், மாவலியின் தலைமையிலான அசுரர்களின் தயவை வேண்டினர். மாவலியும், ‘தேவர்களுக்கு உதவி செய்தால் தங்கள் குலத்தவர்க்கும் அமிர்தம் கிடைக்கும்’ என்ற எண்ணத்தில் சம்மதம் தெரிவித்தான்.

பாற்கடலில் அமிர்தம் தோன்றியது. ஆனால், தேவர்கள், அசுரர்களுக்கு அமிர்தத் தைத் தராமல் தாங்களே அருந்திவிட்டனர். அந்த வஞ்சகச் செயலுடன் நிற்காமல், மாவலி உள்ளிட்ட அசுரர்களையும் கொன்றுவிட்டனர். அசுரர்களின் குருவான சுக்ராச்சார்யர், தமக்கு மட்டுமே தெரிந் திருந்த சஞ்சீவினி மந்திரத்தைப் பயன்படுத்தி அசுரர்களை உயிர்த்தெழச் செய்தார். 

பின்னர் மாவலி, தன் குருவான சுக்ராசாரியார் ஆசியுடன் `விஸ்வஜித்' எனும் யாகம் செய்து, இழந்த அரசைத் திரும்பப் பெற்றான். யாகத்தின் பயனாகத் தனக்குக் கிடைத்த திவ்விய ஆயுதங்களைக் கொண்டு தேவர்களுடன் போருக்குச் சென்றான். தேவர்களைத் தோற்கடித்து, மூன்று உலகங்களையும் தன் வசப்படுத்திக் கொண்டான். நூறு அசுவமேத யாகம் செய்த ஒருவர்தான் இந்திர பதவியில் அமர முடியும் என்பது நியதி. எனவே, தன் வலிமையின் காரணமாக இந்திர லோகத்தைக் கைப்பற்றிய மாவலி, நேரடியாக இந்திர பதவியில் அமர்ந்துவிட விரும்பவில்லை. சுக்ராசார்யரிடம் ஆலோசனை கேட்டான். `நேரடியாகவே இந்திர பதவியில் அமர்ந்துவிடலாமே' என்று அவர் கூறியும், அதைக் கேட்காமல் அசுவமேத யாகத்துக்கான ஏற்பாடுகளைத் தொடங்கினான். அப்போதே சுக்ராசார்யருக்கு அவனிடம் அதிருப்தி ஏற்பட்டுவிட்டது.

வசிஷ்டர் முதலான ரிஷிகளைக் கொண்டு நூறு அசுவ மேத யாகங்களைத் தொடங்கினான். அவனது நேர்மைக் கும் வாக்குத் தவறாத வள்ளல்தன்மைக்கும் மகத்தான பெருமை கிடைக்கப்போகும் நேரமும் வாய்த்தது.

மாவலியிடம் அனைத்தையும் இழந்து கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த தேவர்கள், மாவலி நூறு அசுவமேத யாகங்களைப் பூர்த்தி செய்துவிட்டால், துன்பம் தங்களிடம் நிலையாகத் தங்கிவிடுமே என்று அஞ்சினர். இந்திரன் தலைமையில் தேவகுரு பிரகஸ்பதியிடம் சென்று தங்களின் கதியை விவரித்துப் புலம்பினார்கள். 

தேவ குருவோ ‘`மாவலி, ஆசார்ய அனுகிரகம் பரிபூரண மாகப் பெற்றவன். அதன் காரணமாகவே அவன் மாபெரும் வலிமை பெற்றவனாகத் திகழ்கிறான். அவனை வெற்றிகொள்ள மகாவிஷ்ணுவினால் மட்டுமே முடியும்’’ என்று கூறிவிட்டார். குருபகவான் கூறியபடி திருமாலிடம் சென்ற தேவர்கள், தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் வேதனை களைக் கூறி முறையிட்டனர். 

அவர்கள் கூறியதைக் கேட்ட மகாவிஷ்ணு, ‘` மாவலி, அவன் ஆசார்யரின் அருளைப் பரிபூரணமாகப் பெற்றவன். அவன் எப்போது ஆசார்யரின் சாபத்துக்கு ஆளாகிறானோ, அப்போதுதான் அவனை என்னால் வெற்றிகொள்ள முடியும். எனவே, காலம் வரும்வரை பொறுத்திருங்கள்’’ என்று கூறி அனுப்பிவிட்டார்.

வேறுவழியின்றி தேவர்கள் மறைந்து வாழ்ந்தனர்.

மாவலியின் அசுவமேத யாகம் நூறை நெருங்கிக் கொண்டிருந்தது. தேவர்களின் அன்னையான அதிதி, தன் மக்கள் மறைந்து வாழ்ந்து துன்பப்படுவதைக் கண்டு வருந்தினாள். தன் கணவரான காசியபரிடம் தக்கதோர் உபாயம் கேட்டாள். அவரும், முன்பு தமக்கு பிரம்மதேவர் உபதேசித்த பயோ விரதத்தைப் பற்றிக் கூறி, அந்த விரதத்தை அனுஷ்டிக்கும்படிக் கூறினார். அதிதியும் பொன்னால் திருமாலின் திருமேனியை வடித்து, தினமும் பால் நைவேத்தியம் செய்து, அந்தப் பாலை மட்டுமே அருந்தி விரதம் அனுஷ்டித்தாள். 

விரதத்தின் பயனாக ஆவணி மாதம் சுக்லபட்சத்து திருவோணம் நட்சத்திரத்தில், துவாதசி திதியில் உச்சிப் பொழுதில் மகாவிஷ்ணு அதிதியின் குழந்தையாகத் தோன்றினார். பிறந்தவுடன் காசியபருக்கும் அதிதிக்கும் திருமாலாகக் காட்சியளித்தார். சில நிமிடங்களில் குழந்தையாக மாறினார். சற்று நேரத்துக்கெல்லாம் ஐந்து வயது பாலகனாகத் தோற்றம் கொண்டார்.

பாலகனுக்கு உபநயனம் செய்விக்க வேண்டும் அல்லவா? சாட்சாத் மகாவிஷ்ணுவே வாமனராக  அவதரித்திருந்தபடியால், கதிரவன் காயத்ரி மந்திரம் உபதேசிக்க; பிரம்மதேவர் முப்புரிநூல் எனப்படும் பூணூலும் கமண்டலமும்  கொடுக்க; கலைமகள் ருத்ராட்ச மாலை வழங்க; சந்திரன் தண்டமும், பூமிதேவி மான் தோலும் கொடுத்தனர். 

தாய் அதிதி வாமனனின் திருமேனியை மறைக்க மங்கலகரமான மஞ்சள் நிற வஸ்திரமும், சப்தரிஷிகள் தர்ப்பையும், வானதேவன் ஓலைக் குடையும் வழங்கினர். பிரம்மச்சாரி என்றால் பிக்ஷை ஏற்றுத்தான் உண்ணவேண்டும் என்பது நியதி. எனவே, செல்வத்துக்கு அதிபதியான குபேரன் பிக்ஷைப் பாத்திரம் வழங்கினான். பிக்ஷைப் பாத்திரம் கிடைத்ததும் பிக்ஷை ஏற்க வேண்டுமே. பகவானுக்குப் பிக்ஷை இடுவதற்கும் ஒரு தகுதி வேண்டுமே! மாதா அன்னபூரணியே வாமனரின் பிக்ஷைப் பாத்திரத்தில் பிட்சை இட்டாள். அந்தத் திவ்யக் காட்சியைக் கண்டு அதிதி பரவசத்தில் பூரித்து நின்றாள்.

இனி அவதார நோக்கம் நிறைவேற வேண்டும் அல்லவா?

தேவர்களின் பொருட்டு யாசகனாய்க் கோலம் கொண்ட பகவான் வாமனர், மாவலியின் யாக சாலையைச் சென்றடைந்தார். அவரின் பேரழகில் மனதைப் பறிகொடுத்த மாவலி, ‘`வேதம் உணர்ந்த ஐயனே! யாகத்தில் தானம் தரும் நேரத்தில் தாங்கள் வந்திருக்கிறீர்கள். தாங்கள் வேண்டுவது எதுவாக இருந்தாலும் தயங்காமல் கேளுங்கள்’’ என்றான்.

வாமனனாக வந்துதித்த பகவான் தம்முடைய திருவடிகளால் மூன்றடி நிலம் வேண்டும் எனக் கேட்டார். மாவலியோ, ‘`ஐயனே! தாங்கள் கேட்ப தைத் தருவது என் கடமை. ஆனால், தங்களுக்கு வெறும் மூன்றடி நிலம்தான் கொடுத்தேன் என்ற இழுக்கு எனக்கு ஏற்பட்டுவிடக் கூடாது. எனவே, வேறு ஏதேனும் பெரிதாகக் கேளுங்கள்’’ என்று கேட்டுக்கொண்டான்.

ஆனால், வாமனர், ‘`நானோ தினமும் யாசிக்கும் ஒரு பிரம்மச்சாரி. எனக்கெதற்கு பொன்னும் பொருளும்? மூன்றடி நிலமே போதும்’’ என்றார். 

இந்த நிலையில், வந்திருப்பது பகவான் மகா விஷ்ணுதான் என்பதைத் தம் ஞானதிருஷ்டி யால் அறிந்துகொண்டார், சுக்ராச்சார்யர். அதுபற்றி மாவலியிடம் கூறி அவனை எச்சரிக்கவும் செய்தார். 

ஆனால் மாவலியோ, ‘`குருவே, என்னை மன்னியுங்கள். இவர் கேட்பதைத் தருவதாக வாக்களித்துவிட்டேன். அதை மீறமுடியாது.தாங்கள் கூறுவதுபோல் வந்திருப்பது மகாவிஷ்ணு வாகவே இருந்தாலும், இறைவனுக்கே தானம் அளித்தவன் என்ற பெருமை என்னைச் சேரும். தயைகூர்ந்து என்னைத் தடை செய்யாதீர்கள்’’ என்று கூறிவிட்டு, வாமனருக்கு அவர் கேட்டபடி மூன்றடி நிலம் தானம் வழங்க முற்பட்டான்.  இரண்டாவது முறையாக ஆசார்யரின் அதிருப் திக்கும் அவரது கோபத்துக்கும் ஆளான மாவலி, தான் வாக்களித்தபடியே வாமனருக்கான தானத் தைத் தாரை வார்த்துக் கொடுத்துவிட்டான்.

அவ்வளவுதான். வாமனராக வந்த விஷ்ணு மூர்த்தி விஸ்வரூபம் எடுத்து, தமது ஓரடியால் விண்ணையும் விண்ணுக்கு மேலும் அளந்து முடித்து, அடுத்த அடியால் மண்ணையும் மண்ணுக்குக் கீழும் அளந்து முடித்துவிட்டு, ‘`மூன்றாவது அடியை எங்கே வைப்பது?’’ என்று மாவலியிடம் கேட்டார்.

‘`ஐயனே, தங்களுக்கே நான் தானம் தருவதாகச் செருக்குற் றேனே. என்னுடைய ‘நான்’ எனும் அகந்தை அழிய என்னையே தங்களிடம் ஒப்படைத்துவிட்டேன். மூன்றாவது அடியை என் தலையில் வைத்து என்னை ஆட்கொள்ளுங்கள்’’ என்று பிரார்த்தித்தான். பகவானும் தமது திருவடியை மாவலியின் தலை மீது வைத்து, அவனைப் பாதாளத்துக்குள் அழுத்தினார்.

மாவலி பாதாளத்துக்குள் அழுத்தப்பட்டுவிட்டதால், விண் ணும் மண்ணும் அளந்து, பின் தன்னையும் திருவடி தீட்சையால் ஆட்கொண்ட பகவானின் விஸ்வரூப கோலத்தை மாவலியால் தரிசிக்க முடியவில்லை. பகவானின் விஸ்வரூப தரிசனம் காண வேண்டும் என்ற தன் தாபம் தீர, பாதாளத்துக்குள் இருந்தபடி தவமியற்றினான். 

அவன் தவத்துக்கு இரங்கி, பகவான் அவனுக்குத் தம் விஸ்வ ரூப தரிசனம் காட்டியருளிய திருத்தலம் எது தெரியுமா?

இதோ, நாம் இப்போது தரிசித்துக் கொண்டிருக்கிறோமே இந்த உலகளந்த பெருமாள் கோயிலில்தான் மாவலிக்கு பகவான் தம்முடைய விஸ்வரூப தரிசனத்தைக் காட்டியருளினார்.

திருவருள் புரிவார் திரிவிக்கிரமன்

‘முக்தி தரும் நகரேழில் முக்கியமாம் காஞ்சி’ என்ற சிறப்பி னைப் பெற்ற காஞ்சி நகரத்தில் அன்னை காமாட்சியம்மன் கோயிலுக்கு அருகில் அமைந்திருக்கிறது அருள்மிகு உலகளந்த பெருமாள் திருக்கோயில். மூன்று நிலைகளுடன் மேற்குப் பார்த்து அமைந்திருக்கும் ராஜகோபுரத்தின் வழியாகக் கோயிலுக்குள் செல்கிறோம். துவஜஸ்தம்பத்தை அடுத்து கிழக்கு நோக்கி அமைந்திருக்கிறது, கருடாழ்வார் சந்நிதி. அவரை வணங்கிவிட்டு கருவறைக்குள் செல்கிறோம்.

கருவறையில் மிகப் பிரமாண்டமான திருமேனியுடன், எழிலார்ந்த திருக்கோலத்தில் காட்சி அருள்கிறார் பெருமாள். 

தன் இடது திருவடியை விண்ணிலும் வலது திருவடியை மாவலியின் தலையிலும் வைத்தபடி காட்சி அருளும் பெருமாளைத் தரிசிக்கக் கண்கள் இரண்டு போதாது என்பதுதான் உண்மை! இத்தகைய அழகான  திருக்கோலத்தை தரிசிப்பதன் மூலம் நாம் பேறு பெற்றவர்களாகிறோம். மூலவர் திருவிக்கிரமர் என்ற திருப் பெயரிலும் உற்சவர் பேரகத்தான் என்ற திருப்பெயரிலும் அருள்பாலிக் கிறார்கள். 

பிள்ளை வரம் வாய்க்கும்...

திருவிக்கிரமர் சந்நிதியிலேயே `ஊரகம்' என்ற பெயரில் ஒரு சந்நிதி அமைந்திருக்கிறது. பெருமாளின் மிகப் பெரிய திருவுருவத்தை நிமிர்ந்து தரிசிக்க முடியாத மாவலிக்காக பகவானே ஆதிசேஷ னாக அருள்வதாகச் சொல்லப்படுகிறது. 

இந்தச் சந்நிதி ஒரு பிரார்த்தனைத் தலமாகவும் திகழ்கிறது. பிள்ளைப்பேறு இல்லாதவர்கள், இவரின் சந்நிதிக்கு வந்து வேண்டிக்கொண்டு, திருமஞ்சனம் செய்வித்தும் திருக்கண்ணமுது நைவேத்தியம் செய்தால், குழந்தை பாக்கியம் கிடைப்பதாக பக்தர்கள் நம்பிக்கையுடன் சொல்கிறார்கள். இந்தச் சந்நிதியில் பெருமாளின் திருநாமம் ஊரகத்தான் என்பதாகும்.

இந்த இரண்டு சந்நிதிகளும் சேர்ந்து ஒரே திவ்யதேசமாகத் திகழ்கிறது. இது தவிர மேலும் மூன்று திவ்யதேசங்கள் இந்தக் கோயிலி லேயே அமைந்திருக்கின்றன.

ஆம்! இந்தக் கோயிலில் நான்கு திவ்யதேசங்களையும் தரிசித்து விடலாம் என்பது இந்த ஆலயத்துக்கே உள்ள தனிச் சிறப்பு. முற்காலத் தில் ஊரகம் தவிர மற்ற மூன்று திவ்யதேசங்கள் வேறு வேறு இடங்களில் இருந்ததாகவும், பிற்காலத்தில் அவை இந்தக் கோயிலில் அமையப் பெற்றதாகவும் சொல்லப்படுகிறது.

நீரகம், காரகம், கார்வானம் ஆகிய இந்த மூன்று திவ்யதேசங்களும் திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பெற்றன. பிரதானமான பேரகத்தானை பேயாழ்வார், திருமழிசையாழ்வார், நம்மாழ்வார் ஆகியோர் மங்களாசாசனம் செய்திருக்கின்றனர்.

ஒரே கோயிலில் நான்கு திவ்யதேசங்களைத் தரிசித்த மனநிறைவில், ‘ஐயனே, ஊரகத்தில் பேரகனாய் நீ நின்ற திருக்காட்சியை மாவலிக்கு அருளிய வேளையில் நான் பிறக்கவில்லை. என்றாலும், நான் பிறந்த பின், அன்று நீ மாவலிக்கு அருளிய அருள்கோலத்தை நானும் தரிசிக்க வேண்டி, இந்தக் கலியுகத்தில் அர்ச்சாமூர்த்தியாக எழுந்தருளியிருக்கும் உன் கருணைத்திறம்தான் எத்தனை போற்றுதலுக்கு உரியது!’ என்று நினைத்தபடி, வணங்கித் தொழுதோம்; பேரழகுப் பேரகத்தானின் திருக்கோல அழகே நம் நெஞ்சமெல்லாம் நிலைத்திருக்க, ஆலயத்தை விட்டுப் புறப்பட மனமில்லாமல் புறப்பட்டோம்.

நீங்களும் ஒருமுறை காஞ்சியம்பதிக்குச் சென்று, பெரிதினும் பெரிதான பேரகத்தானை வணங்கி வழிபட்டு வாருங்கள். அவரின் திருவருளால் உங்கள் வாழ்விலும் பெரிய மாற்றங்கள் உண்டாகும்;  இல்லம் இனிக்க உங்களின் எதிர்காலம் சிறக்கும்.

- எஸ்.கண்ணன் கோபாலன் 
படங்கள்: கேசவபாஷ்யம், சி.ரவிகுமார்

நன்றி - சக்தி விகடன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக