ஞாயிறு, 6 ஜனவரி, 2013

ஸ்ரீமத் பாகவதம் – வேளுக்குடி கிருஷ்ணன் - 32

இரண்டாவது ஸ்கந்தம் - ஆறாம் அத்தியாயம் (தொடர்ச்சி)

எல்லையிலா அவன் மேன்மை!

பிரபஞ்சத்தின் சிருஷ்டியைப் பற்றி ப்ரஹ்மா நாரதருக்கு உபதேசித்துக் கொண்டு வருகிறார். அதில் எழுந்த சில மறுப்புகளுக்கு நாம் பதில் பார்த்தோம். மேலும் இறுதியாக ஒரே ஒரு பதில் மட்டும் கூற விழைகிறேன். ப்ரபஞ்சத்திற்கு ப்ரஹ்மம் உபாதான காரணமாய், நிமித்த காரணமாய், ஸஹகாரி காரணமாய் இருக்குமென்று கூறினேன். குடம் உருவாவதற்கு மண் உபாதான காரணம். குடம் உருவாவதற்கு குயவன் நிமித்த காரணம். குடம் உருவாக சக்கரமும், தடியும் ஸஹகாரி காரணங்கள். ஆக, ஒன்று உபாதான காரணமாக இருக்க வேண்டுமானால், அது மாறுதலுக்கு உட்பட்டே ஆக வேண்டும். மண் மாறினால்தான் குடமாக முடியும். அப்படியெனில் ப்ரஹ்மமே இந்த பிரபஞ்சத்துக்கு உபாதான காரணம், நிமித்த காரணம், ஸஹகாரி காரணம் ஆகிய மூன்று காரணமாகவும் இருக்கிறது என்று பார்த்தோம். 

ப்ரஹ்மம் உபாதான காரணமாக இருக்க வேண்டுமானால், அது மாறித்தானே ஆக வேண்டும். ப்ரஹ்மம் மாறி ஜகத்தாக பரிணமிக்கிறது. சரி, ஆனால் இதில் ஓர் ஐயம் எழும். ப்ரஹ்மம் மாறுகிறதென்றால், விகாரம் அடையும் என்று பொருள். ஆனால், வேதாந்தமோ, ப்ரஹ்மத்திற்கு விகாரம். அதாவது, மாறுதலே கிடையாது; ஒரே ஸ்வரூபத்தோடே இருப்பது – என்று கூறுகிறது. ஒரே ஸ்வரூபத்தோடே மாறுதல் இல்லாமல் இருக்க வேண்டுமானால், உபாதான காரணமாக முடியாது. உபாதான காரணமாக, அதாவது குடத்திற்கு மண் போன்று, இருக்க வேண்டுமானால், மாறித்தான் தீர வேண்டும். 

அப்போது ‘ப்ரஹ்மம் நிர்விகாரம்’ என்கிற பெருமை அழிந்து போகும். ஆக, இந்தப் பெருமை கூற வேண்டுமேயானால் அதை இழக்க வேண்டும். அந்தப் பெருமை கூற வேண்டுமானால் இதை இழக்க வேண்டும். ஆனால், வேதாந்தமோ ப்ரஹ்மத்தை உபாதான காரணமாகவும், அதே சமயத்தில் ப்ரஹ்மத்தை எந்த மாறுதலுக்கும் உட்படாத நிர்விகார தத்துவமாகவும் கூறுகிறது. பின் எப்படி இந்த இரண்டையும் சேர்த்துப் பார்க்கப் போகிறோம்? கேளுங்கள். 

ப்ரஹ்மம் உபாதான காரணமாக உள்ளது என்றேன். எப்படிப்பட்ட ப்ரஹ்மம்? சித்து, அசித்து ஆகியவற்றோடு கூடிய ப்ரஹ்மமே, உபாதான காரணம். ப்ரஹ்மமே மாறாது. ப்ரஹ்மத்திடத்திலிருந்து ஒட்டிக் கொண்டிருக்கும் அசித்து மட்டுமே மாறுதலுக்கு உட்படும். ஓர் உதாரணத்துக்குக் கூறுகிறேன், நாம் இந்த உடலை எடுத்துக் கொண்டிருக்கிறோம். நாம் ஆத்மா. இந்த உடலில் ஒரு சேறு ஒட்டி கொள்ளுமானால், ஒன்று துணியைத் துவைப்போம். அல்லது உடலைக் கழுவிக் கொள்வோம். அல்லது நீராடுவோம். ஆத்மாவைக் கழற்றியா சுத்தம் செய்கிறோம்? உடலிலே பட்ட அழுக்கு ஆத்மாவில் படாது. உடலானது சிறுவன், இளைஞன், வயோதிகன் என்று மாறுதலுக்கு உட்படுகிறது. அதற்கென்று சிறுவன், இளைஞன், வயோதிகன், என்றா ஆத்மா மாறும்? உடல் மாற்றம் ஆத்மாவைப் பாதிக்காது. அதேபோல ப்ரஹ்மத்தின் உடலாக இருக்கும் அசித்துக்கள், அதாவது, மூலப் ப்ரக்ருதி மட்டுமே மாறுதலுக்கு உட்படுகிறது. அது மாறி, ஜகத்தாக பரிணமிக்கிறது. அது பெருமானுக்கு உடலாக மட்டும் இருக்கிறபடியால், அது மாறுதலுக்கு உட்பட்டது; பெருமானை பாதிக்காது. ப்ரஹ்ம ஸ்வரூபத்திற்கு எந்த மாறுதலும் ஏற்படாது. 

அதே சமயத்தில் ப்ரஹ்மத்தின் உடலே, அதாவது மூலப் ப்ரக்ருதியே மாறுதலுக்கு உட்பட்டு உலகமாகப் பரிணமிக்கிறபடியால், ப்ரஹ்மத்தை உபாதான காரணமாகவும் சொல்லலாம். ஆக, சித்து, அசித்து ஆகியவைகளோடு கூடியிருக்கும் ப்ரஹ்மம் உபாதான காரணமாகிறது. அதே சமயத்தில், சரீரம் மட்டுமே – ப்ரஹ்மத்தின் உடல் மட்டுமே – மாறுதலுக்கு உட்படுகிறபடியால், ப்ரஹ்ம ஸ்வரூபத்திற்கு எந்த விகாரமும் - எந்த மாறுதலும் வராது. ஆகவே, ப்ரஹ்மம் ஒரு பக்கத்தில் பிரபஞ்சத்திற்கு உபாதான காரணமாக இருந்து கொண்டே, மற்றொரு பக்கத்தில் மாறுதல் இல்லாத சுத்தமான நிர்விகார தத்துவமாக வும் விளங்குகிறது. ஆகவே, நாம் பலப் பல ஆட்சேபங்களுக்கு பதில்களைப் பார்த்தோம். இறுதியில் முடிவு சொல்வோம். 

ப்ரஹ்மம் ஜகத்திற்குக் காரணமே. ப்ரஹ்மம் மட்டுமே உலகத்திற்குக் காரணம். இவ்விரண்டையும் தெரிந்து கொண்டபடியால், இனி அந்த ப்ரஹ்மத்தை நோக்கி தியானித்து – உலகக் காரணத்தை நோக்கி தியானித்து – நாம் முக்தி அடையலாம். இதிலிருந்து உலகத்திற்குக் காரணம் யார் என்று தெரிந்து கொள்வது எவ்வளவு இன்றியமையாதது என்று புரிந்திருக்கும். மேற்கொண்டு ப்ரஹ்மா தொடர்ந்து கூறுகிறார் :

பாகவதத்தில் இரண்டாவது ஸ்கந்தத்தில் ஆறாம் அத்தியாயத்தில் நாம் உள்ளோம். அண்ட கடாகத்தை உடைத்துக் கொண்டு விராட் புருஷன் வெளிவந்தார் என்று பார்த்தோம். மேலும், எவையெவை அவரிடத்திலிருந்து சிருஷ்டியாகின்றன என்று கூறுகிறார். மக்களுடைய வாக்கும், அதற்கு அதிஷ்டான தேவதையாகிற அக்னியும், அந்தப் புருஷனுடைய முகத்திலிருந்து உண்டாகின. மேலும் அவருடைய தோளிலிருந்து ஏழு தாதுக்களும், காயத்ரி முதலான சந்தஸ்களும் உண்டாயின. உலகில் பேசப்படும் ஆறு வகையான சுவைகளும், ஜனங்களுடைய நாக்கும், அதற்கு தேவதையான வருணனும், ப்ரஹ்மத்தினுடைய நாக்கிலிருந்து உண்டாகின. அனைத்துப் பிராணிகளுடைய பிராணன்கள் மற்ற வாயுக்கள் ஆகியவை அவருடைய மூக்கிலிருந்து உண்டாயின. பெருமானுடைய கண் புலனிலிருந்து ஏழு விதமான உருவங்களும் சந்திரன், அக்னி முதலான ஒளிபடைத்த பதார்த்தங்களும் உருவாயின. 

அவருடைய காதுகளிலிருந்து திக்குகள், தீர்த்தங்கள் ஆகியவை பிறந்தன. பகவானுடைய ரோமத்திலிருந்துதான் யாகம் செய்வதற்குத் தேவையான அரசு, அத்தி, கருங்காலி, பலாஸம் முதலான மரங்கள் உருவாயின. பகவானுடைய தலை மயிரிலிருந்துதான் மேகங்கள் பிறந்தன. அந்த விராட் புருஷனுடைய மீசை, தாடி இவைகள் மின்னல், நகம், கற்கள் ஆகியவற்றுக்கும் இரும்புக்கும் இருப்பிடமாய் உள்ளன. பகவானுடைய கைகளிலிருந்துதான் உலகத்தைக் காக்கும் திக் பாலகர்கள் பிறந்தார்கள். பகவானுடைய திருவடித் தாமரைகள் உலகத்திற்கு அனைத்து இஷ்டங்களையும் கொடுக்கக் கூடியதாக உள்ளது. இப்படியாய் பிரபஞ்சம் முழுவதுமே அந்த மஹா புருஷனுடைய ஸ்வரூபம்! அவரே அனைத்திலும் வியாபித்திருக்கிறார். இப்படிப்பட்ட ப்ரஹ்மத்தை அடையத்தான் ஜீவாத்மா முயற்சிக்கிறான். நாரதரே! நான் பிறந்தபோது நடந்ததைக் கூறுகிறேன்: இந்த ஜகத் முழுவதும் ப்ரஹ்மமாகவே இருக்கிறபடியால் அவருடைய தொப்புள் – நாபியில் – தாமரையில் தோன்றிய நான் அந்த பரமாத்மாவை ஆராதித்தேன். எங்கெங்கு தேடிப் பார்த்தாலும் அவரைத் தவிர, நெய்யோ, மலர்களோ, ஆகுதி கொடுப்பதற்கு வேறு எதுவுமே கிடையாது. ஹோம திரவியங்களோ, ரிக், யஜுர், ஸாமம் முதலான வேதங்களோ, யாகங்களோ அனைத்தும் அவனாகவே விளங்கின. ஆகவே, அவனை, அவனைக் கொண்டே தொழுதேன். அவரிடத்திலிருந்து உருவான பொருட்களைக் கொண்டே அந்தப் பெருமானை பூஜித்தேன். என்னைப் போலவே காசியபர் முதலான ஒன்பது பிரஜாபதிகளும், மற்ற தேவதைகளும் பகவானைத் தொழுதார்கள். மேலும் கூறுகிறேன்: 

ஸர்வம் புருஷ ஏவேதம் பூதம் பவ்யம் பவச்ச யத்|
தேநேதமாவ்ருதம் விச்வம் விதஸ்திமதி திஷ்டதி||
(ஸ்ரீ பாகவதம் 2-6-15) 

இந்த உலகம் முழுவதுமே பெருமானேதான். இவை அனைத்துமே அவனையே காரணமாகக் கொண்டவை. அவனே அனைத்து இடத்திலும் வியாபித்து இருக்கிறான். அவனுடைய மகிமை, வாக்குக்கும் மனத்திற்கும் எட்டாதது. அனைத்தும் அவனிடத்தில் இருக்கிறபடியால், உலகம் ப்ரஹ்மாத்மகம் என்று கூறப்படுகிறது. மகனே, நாரதா! என்னுடைய பேச்சோ, மனதோ தீயவற்றில் ஈடுபடாது. அவனே என்னிடத்தில் நிறைந்திருக்கிறபடியால், என் வாக்கும் மனமும் அவனிடத்திலேயே நிலைத்துள்ளன. ஒவ்வொரு மனிதனும் தன் பேச்சையும், மனத்தையும் பெருமானிடத்தில் ஈடுபடுத்துவானானால் அவை கண்டபடிக்குத் திரியாது நிலைபெறும். நன்கு வளரும். 

உலகத்தவர்கள் என்னை ப்ரஜாபதியாகக் கொண்டாடுகிறார்கள். என்ன விந்தை! பெருமான் எனக்குள் இல்லாவிடில், நான் எங்கே உலகத்தைப் படைக்கப் போகிறேன்? பகவானோ, தேவர்களாலும் அறிய முடியாதவர். என்னாலும், மற்ற தேவதைகளாலும் யாராலுமே அவரை அறிய முடியாது. ஏன்? அவருக்கே அவருடைய மகாத்மியத்தின் எல்லை என்ன என்பது தெரியாது– அதற்கு எல்லை என்பதே இல்லாததால்! இந்தப் புருஷன்தான் ஆதிகாலத்திலிருந்து விளங்குகிறார். அவர்தான் என் உருவத்தாலே ஜகத்தைப் படைக்கிறார். என் மகனான ருத்திரனுடைய உருவத்தாலே உலகத்தை அழிக்கிறார். தானே விஷ்ணுவாக இருந்து கொண்டு உலகத்தைக் காக்கிறார். ஆகவே, அவரைத் தவிர உலகத்தில் ஏதும் இல்லை. இந்தப் பெருமான்தான் காலமாகவும், ஸ்பாவமாகவும் அனைத்துப் பொருட்களாகவும் விளங்குகிறார். இப்படி அனைத்துமாக இருக்கும் பெருமான், உலகத்தைக் காப்பதற்காக எத்தனையோ அவதாரங்களைச் செய்கிறார். நாரதா! அவருடைய லீலை, அவருடைய அவதாரங்களைப் பற்றி விளக்கமாகக் கூறுகிறேன். 

நம் காதுக்கு ஏற்பட்டிருக்கும் அழுக்கும், குற்றங்களும் அவருடைய லீலைகளைப் பற்றிக் கேட்டால்தான், தொலைந்தே போகும். பெருமானுடைய அவதாரங்கள் எண்ணிறந்தவை. ஒன்றல்ல, இரண்டல்ல. நம் புத்தியால் எளிதில் பற்றுவதற்காக பத்து அவதாரங்கள் என்று கூறுகிறோமேயொழிய, பெருமானுடைய அவதாரங்களோ கணக்கிலடங்கா. அதை உனக்கு விளக்கமாகக் கூறுகிறேன். கேட்டுக் கொள் – என்று ப்ரஹ்மா கூறினார். இனி, நாம் அடுத்த அத்தியாயத்தில் பெருமானுடைய எண்ணற்ற அவதாரங்களில் ஒரு சிலவற்றைப் பார்க்கப் போகிறோம். 

பாகவதத்தில் சுகாசாரியார் 25 அவதாரங்களைப் பட்டியலிட்டுக் காட்டியுள்ளார். இந்த அவதாரங்களுக்குள் நாம் அறிந்திருக்கும் பத்து அவதாரங்களும் உண்டு. நமக்கு ஓரளவு தெரிந்திருந்தாலும், ஆனால் புரியாத ஏனைய பல அவதாரங்களும் உண்டு. அவதாரங்களை இரண்டாகப் பிரிப்பார்கள். முக்கிய அவதாரம், கௌண அவதாரம் – இது முதல் பிரிவு. இதில் கௌண அவதாரத்தில் ஸ்வரூபவ ஆவேசம், சக்தி ஆவேசம் என்று மறுபடியும் பிரிவு. முக்கிய அவதாரம் என்றால் பெருமானே நேரே வந்து பிறப்பார். அமுக்கிய (கௌண) அவதாரம் என்றால், ஒரு ஜீவனைத் தேர்ந்தெடுத்து பகவான் அவனிடத்தில் தன் சக்தியை வைப்பார். இதை ஏற்கெனவே உங்களிடத்தில் சுருக்கமாகக் கூறியுள்ளேன். ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்.

உதாரணத்துக்கு, ராமன் முக்கிய அவதாரம். ஆனால் பரசுராமர் ஆவேச அவதாரம். கண்ணன், முக்கிய அவதாரம், ஆனால் பலராமன் ஆவேச அவதாரம். ஆகையால்தான் பரசுராமனும், ராமனும் சந்தித்துக் கொண்டார்கள். பலராமனும் கண்ணனும் சந்தித்துக் கொள்கிறார்கள். உங்களுக்கு ஐயம் ஏற்படும். இரண்டு அவதாரங்கள் ஒரே சமயத்தில் எப்படி சந்தித்துக் கொள்வார்கள்? யோசித்துப் பாருங்கள். வராஹ அவதாரமும், நரசிம்ம அவதாரமும் சந்தித்துக் கொள்ள மாட்டார்கள். கண்ணனும் ராமனும் சந்தித்துக் கொள்ள மாட்டார்கள். அவர்கள் அனைவருமே ப்ரதான அவதாரங்கள். ஆனால், பரசுராமன் ஒரு ஜீவன். அவனிடத்தில் பெருமான் தன்னுடைய சக்தியை வைத்துள்ளார். ஆனால் ராமன் நேரே பெருமானுடைய அவதாரம். ஆகவே ராமனும் பரசுராமனும் சந்தித்துக் கொள்கிறார்கள். அதே போல பலராமன். அவர் ஒரு ஜீவன். அவனிடத்தில் பெருமான் தன் சக்தியை வைக்கிறார். ஆகையால்தான் முக்கிய அவதாரமான கண்ணனைச் சந்திக்க முடிகிறது. இப்போது விடை கிடைத்திருக்குமே! 

ஆகவே பகவானுடைய அவதாரங்களில் முக்கிய அவதாரங்களை நாம் உபாசிக்க வேண்டும். அது தவிர, எந்த ஜீவாத்மாக்களைத் தேர்ந்தெடுத்து தன் சக்தியை வைக்கிறாரோ, அவர்களைப் போற்ற வேண்டும். இப்படிப் பல அவதாரங்களைப் பற்றியும் ப்ரஹ்மாவே நாரதருக்குக் கூறப்போகிறார். கேட்போம். 

(தொடரும்)

நன்றி - துக்ளக்

ஸ்ரீமத் பாகவதம் – வேளுக்குடி கிருஷ்ணன் - 31


இரண்டாவது ஸ்கந்தம் - ஆறாம் அத்தியாயம் (தொடர்ச்சி) 

‘ஆதிபகவன் முதற்றே உலகு!’

ன்மிகமும், விஞ்ஞானமும் ஒத்துத்தான் போகும் என்பதை இதோ நீங்களே படித்துப் புரிந்து கொள்ளலாம். விஞ்ஞானிகள் கூற்றுப்படி துகள்கள் சேர்ந்தன. அணுக்கள் உருவாயின. வெவ்வேறு அணுக்கள் இணைந்து மூலக்கூறுகளாக ஆயின. இரண்டு ஹைட்ரஜன் அணுக்கள், ஒரு ஆக்ஸிஜன் அணு ஆகியவை சேர்ந்தால் தண்ணீர் உருவாகும். இதுதானே நாம் புரிந்து கொண்டிருப்பது? இது அப்படியே ஏற்றுக் கொள்ளத் தக்கதுதான். இது ப்ரத்யக்ஷம் (நேரடி அறிவு). இதை ஒருநாளும் சாத்திரம் இல்லை என்று சொல்லாது. ஆனால், இதில் ஒரு கேள்வி உற்று நோக்கத்தக்கது. அணுக்கள் தாங்களே கூடுமா? அணுக்களுக்கு அறிவு உண்டா? அறிவிருந்தால்தானே முடிவு எடுக்க முடியும்? ‘இன்ன நாளில், இன்ன தேதியில், இன்ன நேரத்தில், இத்தனை வேகத்தில் நாம் வெடிக்க வேண்டும். இதுகாறும் குளிர்ச்சியாக இருந்தோம். இப்போது வெப்பம் வளர்ந்து விட்டது. இதோ! இப்போது வெடிக்கப் போகிறோம்’ – என்ற இந்த முடிவுகளை உணர்வற்ற அவை, தாமே எடுக்குமா? அறிவுள்ளவன்தானே முடிவு எடுக்க முடியும். அணுவுக்கு அறிவில்லை. அவற்றின் சேர்க்கையால் உருவான மூலக்கூறுகளுக்கும் அறிவில்லை. பின்னே யார் முடிவெடுப்பார்கள்?

அடுத்த கேள்வி. இந்த அணுக்கள் எங்கிருந்து வந்தன? ஒன்றுமில்லாத நிலையிலிருந்து – சூன்யத்திலிருந்து – தம்மைத்தாமே உருவாக்கிக் கொண்டனவா? அப்படியே அணுக்கள் ஒன்று கூடி திடீரென்று ஒருநாளில் உருவாகி விட்டனவென்றால், அவை ஏன் அதற்கும் முந்தைய காலத்திலேயே உருவாகவில்லை? இந்த சிருஷ்டிக்கு முன்னால், எதுவுமே இல்லையா? அல்லது ஏதேனும் இருந்ததா? – என்பதே அந்தக் கேள்வி! விஞ்ஞானிகளும் ஏற்றுக் கொள்வது: ‘சிருஷ்டிக்கு முன்னால் மற்றொரு சிருஷ்டி இருந்திருக்கலாம்; நாம் அறியோம்; அதை நிரூபிக்க வழியில்லை. இப்போது உலகம் படைக்கப்பட்டுள்ளது. மெது மெதுவே இதுவும் அழியும். கடைசியாக எல்லாமே விண்ணில் உள்ள ஈர்ப்பு விசை மிகுந்த ஒரு கருப்புக் குழிக்குள் (black hole) இழுக்கப்படும். மறுபடியும் பெரும் குளிர் சூழ்ந்து விடும். ஆக இப்படி வெப்பம் அதிகரித்து வெடிப்பும், வெப்பம் குறைந்து குறைந்து குளிரும் மாறி மாறி ஏற்படலாம். இப்படித்தான் ஏற்படும் என்று எங்களால் நிரூபிக்க முடியாது. அதே சமயம் ஏற்பட வாய்ப்பில்லை என்று நாங்கள் ஒதுக்கவும் முடியாது’ என்பதுதான் விஞ்ஞானிகளின் வாதம். மெய்ஞானம் என்ன கூறுகிறது? பகவான் சிருஷ்டிக்கிறார், அழிக்கிறார். மீண்டும் சிருஷ்டிக்கிறார், அழிக்கிறார். ஆக, மாறி மாறி வெப்பமும், குளிர்ச்சியும் வருகிறது என்பதை வேதாந்தமும் எடுத்துரைக்கிறது. அதை விஞ்ஞானமும் ஏற்றுக் கொள்கிறது. பின் வேறுபாடு எங்கே? மேலே நோக்குங்கள். 

அணுக்கள் அறிவற்றபடியால் தாங்களாகவே தம்மை உருவாக்கிக் கொள்ள முடியாது. அப்படியே உருவாகி விட்டாலும், எந்த அணு ‘சரி! இனி உலகம் அழியட்டும்’ என்று முடிவு எடுக்கும்? அணுக்கள் தாமாகவே முடிவெடுக்க வேண்டுமென்றால், அவற்றுக்கோ அறிவு கிடையாது. ஆகவே படைக்கப்பட்டவை படைப்பு நிலையிலேயே இருக்கத்தான் முடியுமே அன்றி, அவை அழிவுக்குப் போகவே முடியாது. யார் முடிவெடுப்பது? அனைத்தையும் தற்செயலான வாய்ப்பு (Probability) என்று தள்ளி விடுவதற்கும் முடியாது. 

ஏனெனில் எதற்கும் ஒரு காரணம் இருந்தாக வேண்டும். எதற்கும் ஒரு கர்த்தா இருந்தாக வேண்டும். ஆகவே, ‘அணுக்களே கூடி உருவாகும். ப்ரக்ருதி (இயற்கை) தன்னைத்தானே உருவாக்கிக் கொள்ளும் என்பதை, அறிவுபூர்வமாக ஏற்றுக் கொள்ள இயலாது. பின் என்ன பதில்? அப்போதுதான் வேதாந்தம் பதில் கூறுகிறது. அணுக்கள் கூடுவது உண்மை. அவை மூலக்கூறுகளாக மாறுவதும் உண்மை. அதிலிருந்து தண்ணீரும், நெருப்பும், நிலமும் தோன்றுவது உண்மை. ஆனால் இவை அனைத்தையும் தோற்றுவித்து, இவை அத்தனையையும் மாறுதல்களுக்கு உட்படுத்தி, அவ்வவற்றுக்குரிய சக்தியையும் கொடுத்து, அத்தனையும் செய்வதற்கு ஸங்கல்பிக்கும் (உறுதி பூணும்) ஒருவன் உள்ளான்! அவன்தான் பரப் ரஹ்மம் – பரமாத்மா – ஸர்வேச்வரனான பகவான்! இந்த அணுக்களும், மூலப் பொருட்களும், ப்ரக்ருதியும், ஜீவனும் இவை அனைத்தும் அந்த பரப்ரஹ்மத்தின் சரீரம். அந்த சரீரம் மாறுதலுக்கு உட்படுகிறது. அதிலிருந்துதான் இவ்வளவு பெரிய பிரபஞ்சம் தோன்றுகிறது. ஆக, பேரறிவின் வடிவான ப்ரஹ்மம் முடிவெடுக்கிறது! ‘நான் என் உடலாக இருக்கும் இந்த சூட்சும ப்ரக்ருதியையும், சூட்சுமமான ஜீவர்களையும், மாறுதல்களுக்கு உட்படுத்தப் போகிறேன். இப்போது அனைத்தும் உலகமாகப் பரிணமிக்கட்டும்’ – என்று ஸங்கல்பித்துக் கொள்கிறது. 

இந்த பரிணாமத்தைத்தான் ‘ப்ரபஞ்ச சிருஷ்டி’ என்று சொல்கிறோம். மறுபடியும் அனைத்தும் ப்ரஹ்மத்தின் உடலில் போய் ஒன்றுகிறது. அதைத்தான் ப்ரளயம் என்று கூறுகிறோம். ஆக, இரண்டு பகுதிகளாகப் பார்க்கலாமா? கண்ணால் கண்டு, நிரூபிக்கப்பட்டு, சோதனைச் சாலையில் நாம் எவற்றை நிலை நிறுத்தி விட்டோமோ, அவை அனைத்தும் உண்மைதான். ஆனால் அந்த உண்மையின் முடிவில் சில கேள்விகளுக்கு விடை கிடைக்கவில்லை. அந்த விடையைத் தேடினோம் மெய்ஞானத்தில், அதாவது வேதாந்தத்தில் – அதற்கு பதில் கிட்டிற்று. 

இந்த அணுக்களும், மூலக்கூறுகளும், மூலப் பொருள்களும் அனைத்தும் ப்ரஹ்மத்தின் சரீரம். அவர் முடிவெடுப்பார். ‘இப்போது சிருஷ்டி; இப்போது பிரளயம்’ என்று தீர்மானிப்பவர் அவரே! அறிவே வடிவானவர் அல்லவா பகவான். ஆகவே, அவர் முடிவெடுத்து இவை அனைத்தையும் படைக்கிறார், காக்கிறார், அழிக்கிறார். இதுதான் உண்மை. ஆக ஒரு குறிப்பிட்ட நிலை வரை விஞ்ஞானம் நம்மைக் கொண்டு போய் விட்டது. அதுவரை வந்துள்ள நிலையை மெய்ஞானம் மறுத்துப் பேசவில்லை.

அது விட்ட நிலையில் இருந்து மேலே தொடர்ந்து கூறிற்று. இதில் என்ன குறை? இப்படித்தான் ப்ரத்யக்ஷத்தையும், (நேரடிப் புலனறிவையும்), வேதாந்தத்தையும் ஒன்றாக நாம் நோக்க வேண்டும். வேதத்தின் கடமை, நம் புலன்களின் அனுபவத்திற்கு அப்பாற்பட்ட உண்மைகளைக் கூறுவதுதான். நம் நேரடி அறிவுக்குப் புலனாகாதவற்றை எடுத்துக் கூறி வழி நடத்தும். நமக்குப் புரியாததை விளக்கும். ‘ப்ரஹ்மத்தின் உடல்தான் இவ்வுலகும், உயிர்களும் ; அவர்தான் படைத்து, காத்து, மீட்டுக் கொள்கிறார்’ என்ற உண்மையை – நமது நேரடி அனுபவத்தில் புரிந்து கொள்ள முடியாத உண்மையை – அது உணர்த்தும். எது நமக்கு ஏற்கெனவே அனுபவ ரீதியாகத் தெரியுமோ, அதையே வேதாந்தம் கூறாது. அதற்கு அவசியமும் இல்லை. எப்போது ப்ரத் யக்ஷத்தில் உலகம் எப்படி உருவாகிறது என்பதை அறிவியல் அடிப்படையில் ஓரளவு தெரிந்து கொண்டோமோ, இதையே திரும்பத் திரும்ப வேதாந்தம் சொல்ல வேண்டியதில்லையே! 

ஆனால் நாம் நேரடியாக அறிய முடியாத உண்மை – ப்ரஹ்மம் ஜகத் காரணம் என்பது. இப்போது இரண்டு விதத்தில் பார்த்துள்ளோம். ‘ப்ரஹ்மம் ஜகத் காரணமே’ என்றும் பார்த்தோம். ‘ப்ரஹ்மமே ஜகத் காரணம்; மற்றொன்று அல்ல’ என்பதையும் நோக்கினோம். இந்த இரண்டைத் தான் ப்ரஹ்ம ஸூத்ரத்தில் வேத வியாஸர் மிகவும் நேர்த்தியாகத் தெளிவு படுத்தியுள்ளார். மற்றொரு ஐயத்தை நோக்குவோம். 

ப்ரஹ்மம்தான் படைக்கிறார். ப்ரஹ்மம்தான் காக்கிறார். ப்ரஹ்மம்தான் அழிக்கிறார் என்று கூறுகிறோம். படைத்தல், காத்தல், அழித்தல் ஆகியன அவரது முத்தொழில்கள். உடனே ஒரு ஐயம் எழும். ‘இவை மூன்றும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவைகளாயிற்றே. முரண்பட்டதை எப்படி பெருமானால் செய்ய முடியும்? ஓர் உதாரணம். ஒரு மாட்டைக் காண்கிறேன். அது முழுக் கொம்போடே, அரைக் கொம்போடே, மொட்டைக் கொம்போடே நிற்கிறது என்று மாட்டுக்கு அடையாளம் கூறினால், எல்லோரும் சிரிப்பார்கள் அல்லவா! அது எப்படி? மாடு முழுக் கொம்போடு இருந்தால், அரைக்கொம் போடு இருக்குமா? அரைக்கொம்போடு இருந்தால், மொட்டைக் கொம்போடு இருக்குமா? இருக்கவே முடியாது. மாட்டின் அடையாளமே தவறு என்று கூறுவார்கள் அல்லவா? வேதாந்தம் ப்ரஹ்மத்தை அடையாளம் காட்டும்போது, படைக்கிறான், காக்கிறான், அழிக்கிறான் என்று கூறுகிறது. உடனே நாம் எள்ளி நகையாடுவோம். 

அது எப்படி? படைப்பவனே அழிப்பானா? படைப்பும், அழிப்பும் முரண்பட்ட தொழில்கள் ஆயிற்றே! காத்தலும், அழித்தலும் முரண்பாடுகள் அல்லவா? எப்படி இதை ஒன்றாக நோக்க முடியும்? ஆக ப்ரஹ்மத்துக்குச் சொல்லப்பட்ட அடையாளங்களே தவறு. ஆகவே, அடையாளம் கொண்டு ப்ரஹ்மத்தைத் தெரிந்து கொள்ள முடியாது. வேதாந்தத்தினால் பிரஹ்மத்தை அடையாளம் காட்ட முடியாது’ என்று ஆட்சேபம். இது தவறான கண்ணோட்டம். என் கண்ணில் குற்றத்தை வைத்துக் கொண்டு, அதோடு எதைப் பார்த்தாலும் குற்றம் பொருளில் இருப்பது போல்தான் தோன்றும். இதற்கு எங்கு வைத்தியம் இருக்கிறது? நம் கண்ணில் இருக்கும் குற்றத்தைத்தான் போக்கிக் கொள்ள வேண்டியுள்ளதே தவிர, பொருளில் குற்றம் இல்லை. நாம் வேதாந்தத்தைச் சரியான கண்ணோட்டத்திலே பார்க்க வேண்டும். 

இப்போது பார்ப்போம்: அதே மாட்டைப் பற்றிப் பேசுவோம். அந்த மாடு நிகுநிகுவென்று உயர்ந்த, சீவப்பட்ட கொம்போடே இருந்தது. எங்கோ சென்றது. முட்டிக் கொண்டது. பாதிக் கொம்பும் உடைந்தது. இப்போது அரைக் கொம்போடே இருக்கிறது. மாட்டுக்கு உடையவர் பார்த்தார். அரைக் கொம்போடு என் மாடு அழகாக இல்லை. முழுவதுமாகச் சீவி விடுவோம். மறுபடியும் புதிதாகக் கொம்பு முளைக்கட்டும். அப்போது மாடு அழகாக இருக்கும் என்று அரைக் கொம்பையும் சீவி எடுத்து விட்டார். இப்போது மொட்டைக் கொம்போடே இருந்தது. ஆக, ஒரே மாடு முழுக் கொம்போடும், அரைக் கொம்போடும், மொட்டைக் கொம்போடும் இருக்கலாம். குற்றமில்லை. ஆனால், வெவ்வேறு சமயத்தில் இருக்கும். ஒரே நேரத்தில் முழுக் கொம்போடே, மொட்டைக் கொம்போடே, அரைக் கொம்போடே இருக்க இயலாது. ஆனால், வெவ்வேறு காலத்தில் இருக்கலாம். இதில் ஒரு குற்றமும் இல்லை. இதை ஞாபகத்தில் வைத்துக் கொண்டு ப்ரஹ்மத்துக்கு வாருங்கள். 

முதலில் எழுந்த ஆட்சேபம் என்ன? ப்ரஹ்மம் படைக்கிறது, காக்கிறது, அழிக்கிறது என்றால் எப்படிச் செய்ய முடியும்? மூன்றும் முரண்பட்டவைகளாயிற்றே! ஆகவே, படைக்கும் ப்ரஹ்மம் வேறு. காக்கும் ப்ரஹ்மம் வேறு. அழிக்கும் ப்ரஹ்மம் வேறு – என்று மூன்று ப்ரஹ்மங்களை ஒத்துக் கொள்வீர்களா? என்ற கேள்வி எழலாம். இது அறியாமை. மூன்று ப்ரஹ்மங்கள் ஒரு நாளும் கிடையாது. ப்ரஹ்மம் படைக்கும் போதேவா அழிக்கிறது? படைப்புக்குக் காலமே வேறு. காக்கும் காலமே வேறு. அழித்துத் தன்னுள் சேர்த்துக் கொள்ளும் காலமே வேறு. ஆக வெவ்வேறு காலங்களில் ப்ரஹ்மம் படைத்து, காத்து, அழிக்கிறபடியால், ஒரே ப்ரஹ்மம் முத்தொழில்களையும் செய்வதில் ஒரு குறையும் இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். 

ஆக, ப்ரஹ்மம், ஜகத் காரணமே; ப்ரஹ்மமே ஜகத் காரணம் என்று வெவ்வேறு கோணத்தில் இருந்து நாம் கண்டோம். நான் உங்களைச் சில கடினமான விஷங்களைக் கூறி கஷ்டப்படுத்திக் கொண்டிருக்கிறேன் என்று நினைக்கிறேன். இருந்தாலும் சொல்லியாக வேண்டிய தேவை உள்ளது. நாம் அனைவரும் மூல தத்துவத்தை நன்கு உணர்ந்து கொண்டால்தானே, ஜகத் காரணமான அந்த ப்ரஹ்மத்தைத் தியானித்து முக்தி பெற முடியும்? நாம் சேர்ந்து முயற்சி செய்து ப்ரஹ்மத்தைப் பற்றி மேலும் அறிவோம். 

(தொடரும்)

நன்றி - துக்ளக்

ஸ்ரீமத் பாகவதம் – வேளுக்குடி கிருஷ்ணன் - 30


இரண்டாவது ஸ்கந்தம் - ஆறாம் அத்தியாயம் 

‘ஆதிபகவன் முதற்றே உலகு!’

‘உலகுக்குக் காரணமான பரப்ரஹ்மத்தை தியானித்து, முக்தி அடைவீர்” என்று வேதங்கள் ஓதுகின்றன. நாம் கடந்த வாரம் சந்தித்தபோது ப்ரஹ்மமே உலகுக்குக் காரணம் என்று பார்த்தோம். இதை வேதங்கள்தான் நமக்கு உணர்த்துகின்றன. மேலும், வேதக் கருத்துக்களை வெளிப்படுத்தும் வண்ணம் பராசரருடைய திருக்குமாரரான வேத வியாஸர், ‘ப்ரஹ்ம ஸூத்ரம்’ எனும் சிறந்த நூலை நமக்கு அருளியுள்ளார்.

அதில் பல ஸூத்ரங்களாலே “ப்ரஹ்மமே ஜகத்துக்குக் காரணம்” என்று அறுதியிடுகிறார். இந்த வாரம் “ப்ரஹ்மம் ஜகத்துக்குக் காரணம்” என்று சொல்லும்போது, அதில் ஏற்படக்கூடிய சில ஐயங்கள், ஆட்சேபங்கள், அதற்குரிய விடைகள் ஆகியவற்றைப் பார்ப்போம். 

வேதாந்திகள் பேசும்போது ஒரு பொருளை இரண்டு விதத்தில் நிரூபிப்பார்கள். உதாரணத்திற்கு, ‘ராமன் வில்லாளி’ என்று நான் கூறுகிறேன். ‘இதை நான் மறுக்கிறேன், ராமன் வில்லாளி அல்ல’ என்று ஒருவர் ஆட்சேபிக்கிறார். பதிலுக்கு பல வாதங்களாலே அப்படியன்று, ‘ராமன் வில்லாளியே’ என்று நான் நிரூபிக்கிறேன். இதற்கு, 

‘அயோக வ்யவச்சேதம்’ 

(தமிழ் இலக்கணத்தின்படி – தேற்றேகாரம்) என்று பெயர். அதாவது ‘ராமனிடம் வில்லாளும் தன்மை உளதா’, என்கிற ஐயம் எழ, ‘உளது, ராமன் வில்லாளியே’ என்று நிரூபிக்கப்பட்டது. அடுத்த வகை ‘ராமன் வில்லாளியாக இருக்கலாம். ஆனால், அவனைத் தவிர, அர்ஜுனனும் தான் வில்லாளி. கர்ணனும் கூட வில்லாளிதான். இன்னும் இவர்களைப் போல் பலர் சிறந்த வில்லாளிகளாக இருந்தார்களே’ என்று மறுபடியும் அவர் கூறுகிறார். இந்தச் சந்தேகத்தைப் போக்குவற்காக, ‘இல்லை... இல்லை நீங்கள் கூறுவது தவறு. ராமனே வில்லாளி, ராமன் ஒருவனே வில்லாளி’ என்று பல வாதங்களாலே நிரூபிப்பதாக வைத்துக் கொள்வோம். இதற்கு அந்யயோக வ்யவச்சேதம் (தமிழ் இலக்கணப்படி பிரிநிலை ஏகாரம்) என்று பெயர். இப்போது தெளிவாகப் புரிந்திருக்குமே. ‘ராமன் வில்லாளியே’ என்று கூறுவது ஒரு வகை. ராமனே (ராமன் மட்டுமே) வில்லாளி என்று நிரூபிப்பது மற்றொரு வகை. இப்போது விஷயத்திற்கு வருவோம். 

ப்ரஹ்மம், அதாவது பரம்பொருள் ஜகத்துக்குக் காரணம் என்று கூறினோம். அதில் ஓர் ஐயம் எழும். ‘ப்ரஹ்மத்திடம் ஜகத்துக்குக் காரணமான தன்மை உண்டா? ப்ரஹ்மம் ஜகத் காரணம்தானா? இல்லையே. ப்ரஹ்மம் ஜகத் காரணம் இல்லை போல் இருக்கிறதே!’ என்றஐயத்துடன் கூடிய ஆட்சேபம் எழுந்தால் அதற்கு பதில் கூற, ‘அப்படிக் கூறாதீர்கள், ப்ரஹ்மம் ஜகத் காரணமே, ப்ரஹ்மம் ஜகத்துக்குக் காரணமாகவே உள்ளது’ என்று நிரூபிக்கிறோம். அடுத்த கேள்வி பிறக்கும். ‘ப்ரஹ்மம் ஜகத்துக்குக் காரணமாக இருக்கட்டும். மேலும், அணுக்களும் கூட காரணமாகலாமே! ப்ரக்ருதியும் காரணமாகலாமே! ஏன், ஜீவாத்மாவும் கூடக் காரணமாகலாமே! யார் வேண்டுமானாலும் கூடச் சேர்ந்து காரணமாக இருக்கலாமன்றோ!’ என்ற ஐயம் எழும். அதற்கு, ‘இல்லை, இல்லை... ப்ரஹ்மம் மட்டுமே ஜகத்துக்குக் காரணம்’ என்று பதில் கூற வேண்டும்.

ஆக, இந்த இரண்டு வாதங்களாலும் என்ன தேறுகிறது? ‘ப்ரஹ்மம் ஜகத் காரணம்தான்’ என்றும், இன்னும் குறிப்பாக ‘ப்ரஹ்மம் மட்டுமே ஜகத் காரணம்’ என்றும் தேறுகிறது. இவை இரண்டையும்தான் ப்ரஹ்ம ஸூத்திரத்தில் வேத வியாஸர் அறுதியிட்டுக் காட்டுகிறார். இவ்விரண்டு கருத்துகளும் நமக்குப் புரிந்து போகுமானால், ப்ரஹ்மத்தைத் தவிர வேறு யாரையாவது அடைய விரும்புவோமா? ப்ரஹ்மத்தைத் தவிர மற்றொன்றை, அவனை அடையவதற்கு வழியாகப் பற்றுவோமா? இந்த உண்மை புரிந்ததால்தான் ரிஷிகளும், ஆழ்வார்களும், ஆசார்யர்களும், முழு முதற்காரணமான ப்ரஹ்மத்தின் திருவடிகளையே பற்றிக் கிடந்தார்கள். அனைத்துமே அவனாக இருக்கும்போது அவனையன்றி எதை நாம் தியானிக்க முடியும்? பொதுவாக நமக்கு எழும் மேலும் சில ஐயங்களையும் பார்ப்போம். 

‘உலகத்தில் அறிவியல் பரவிக் கிடக்கிறது. அறிவியலாளர்கள், தர்க்க ரீதியாகக் கண்ணுக்குப் புலப்படும் வகையில் அனைத்தையும் நிரூபித்து வருகிறார்கள். ஆனால், மெய்ஞானிகள் எதையும் நிரூபிப்பதில்லையே! அறிவியல் விஞ்ஞானிகளோ அனைத்தையும் சோதனைச்சாலையில் நிரூபித்து விடுகிறார்களே!’ என்று ஒரு சிலர் நினைக்கலாம். இதற்கும் மேல், ‘மெய்ஞானிகளோ, புஸ்தகத்தோடே நின்று விடுகிறார்கள். உலகில் ஒன்றை நிலை நிறுத்த கதை, உபன்யாசம், காலட்சேபம் ஆகிய இவை மட்டுமே போதுமா? மேற்கொண்டு சோதனைச் சாலையில் நிரூபிக்க வேண்டாமா?’ என்று கூடக் கேட்கலாம். சரிதான். ஆனால், ஆழ்ந்து சிந்தித்து உள்ளதை உள்ளபடி அறியும் விஞ்ஞானிகள் இப்படிக் கேட்பதில்லை. எந்த ஒரு விஷயத்தையும் மேலெழுந்த வாரியாக மட்டுமே பார்க்கும் யாரோ சிலர் கேட்கிறார்கள். இது பற்றி சற்றே ஆராய்ந்து விடை காண்போம். 

மனிதன் எப்படித் தோன்றினான்? உலகம் எப்படி உருவாயிற்று? என்பது பற்றிப் பல கருத்துகள் நிலவுகின்றன. குரங்கிலிருந்து தோன்றினான் மனிதன் என்ற ஒரு கருத்து உலவி வருகிறது. ப்ரபஞ்சத்தின் தோற்றத்திற்கு ‘பெரு வெடிப்புக் கோட்பாடு’ (Big Bang Theory) என்ற கொள்கை முன் வைக்கப்படுகிறது. சமீபத்தில் கூட அதைப் பற்றி நிறைய அறிவியல் முடிவுகள் வெளியிடப்பட்டன. அதன்படி, நிரம்பக் குளிர்ச்சியுடன் கூடிய அணு திரள் உயர்ந்த அழுத்தத்தில் இருந்தது; ஒருநாள் அது பெரிதாக வெடித்தது; வெடித்தவுடன், பல பல நுண் சிதறல்கள் வெளிப்பட்டன. அந்தத் துகள்களிலிருந்து அணுக்கள் வெளிப்பட்டன. அந்த அணுக்கள் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து மூலக்கூறுகளாக (molecules ஆக) உருவாகி, அவை ஒன்றோடு ஒன்று கூடி நாம் கண்ணால் பார்க்கும் இவை அத்தனையும் உருவாகியுள்ளன – என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இப்படி பல நம்பிக்கைகள், பல கருத்துகள் உள்ளன. 

ஹிக்ஸ் போஸான் துகள் (Higgs - Boson Particle) என்பதைப் பற்றி சமீபத்தில் நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஹிக்ஸ் என்ற ஒரு வெளிநாட்டு விஞ்ஞானி, போஸ் என்ற மற்றொரு இந்திய விஞ்ஞானியின் ஆய்வு முடிவுகளின் மீது மேலும் விளக்கம் தந்து, ‘இவ்வுலகம் படைக்கப்பட்டபோது நிகழ்ந்த பெரு வெடிப்பில் (Big bang) என்னென்ன துகள்கள் புறப்பட்டன? அதில் அனைத்துத் துகள்களையும் கண்டுபிடித்து விட முடியுமா? அவற்றைப் பற்றி விளக்க முடியுமா?’ என்ற கேள்விகளுக்கு விடையாக பல ஆண்டுகளுக்கு முன்னால் ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளியிட்டார். உடனே, உலகத்து விஞ்ஞானிகளில் பலர் சேர்ந்து, கொள்கை அளவில் நிரூபிக்கப்பட்ட அந்தத் துகள் எது என்று கண்டுபிடிக்க வேண்டும் என்று முயற்சி செய்தார்கள். சமீபத்தில் அந்தக் கண்டுபிடிப்பை வெளியிட்டுள்ளார்கள். இது அத்தனையும் ‘ப்ரத்யக்ஷம்’ எனப்படும் நேரடிப் புலன் அறிவுக்கு இலக்காகும் வண்ணம் விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. 

இங்கு ஒரு முக்கியமான செய்தி: வேதங்களின் வழிவந்த ஆன்மிகம், ஒருநாளும் ப்ரத்யக்ஷமாக நாம் காண்பதையோ, நிரூபிப்பதையோ, தவறு என்று கொள்ளாது. விஞ்ஞானத்தை ஏற்றுக் கொள்ளும். நம் கண்ணால் பார்ப்பதை – நேரடி அனுபவ அறிவை – ஏற்றுக் கொள்பவைதான் சாத்திரங்கள். நாம் ஒரு தவறான கருத்தைக் கொண்டிருக்கிறோம். ‘சாத்திரங்கள், விஞ்ஞானத்தை ஒத்துக் கொள்ளாது; உலகம் விஞ்ஞானத்தின் அடிப்படையில் இயங்கிக் கொண்டிருக்கும்; அதற்கு நேர்மாறாக எதுவும் புரிபடாத வகையில், வேதாந்தம் சிலவற்றைச் சொல்லும். வேதாந்திகளுக்கும், விஞ்ஞானத்திற்கும் தொடர்பில்லை. விஞ்ஞானம் வேறு, மெய்ஞானம் வேறு’ என்றெல்லாம் பலர் கருத்துக் கொண்டிருக்கலாம். ஆனால், இந்தக் கருத்து விஞ்ஞானிகளுக்கே கிடையாது. அறிவு முதிர்ந்த விஞ்ஞானிகள் ஆழமான உண்மையின் வேர் வரை சென்று, மெய்ஞானத்தை ஏற்றுக் கொள்கிறார்கள். 

ஹிக்ஸ் – போஸான் நுண்துகளைப் பற்றிய செய்தியைப் பார்க்கும்போது, ‘கடவுள் துகள்’ என்ற சொல்லைப் பார்த்தோம். இதை ஏன் கடவுள் துகள் என்கிறார்கள். கடவுள்தான் இந்தத் துகளா? அல்லது இந்தத் துகளே கடவுளா? ஆகக் கடவுளைக் கண்டுபிடித்து விட்டோமா? அல்லது ‘துகள்தான் உண்மை. கடவுள் கிடையாது’ என்று நிரூபணம் ஆகிவிட்டதா? – என்று பலர் உள்ளங்களில் சந்தேகம் இருக்கலாம். இதை எதையும் இப்போது விஞ்ஞானிகள் பேசவில்லை. அவர்கள் பேசுவது – ‘அணுவினுள் உள்ள பல துகள்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதில் இதுவரை கண்டுபிடிக்கப்படாதிருந்த ஒரு துகளையும் இப்போது கண்டுபிடித்து விட்டோம்’ என்று கூறுகிறார்கள். இதுநாள் வரை பிடிபடாத ஒரு பெரும் புதிராக இருந்த அதற்கு ‘கடவுள் துகள்’ என்ற மரியாதைப் பெயரிட்டிருந்தார்கள். சரி. அந்தத் துகள்தான் உலகுக்கெல்லாம் காரணமா? அந்தத் துகளிலிருந்துதான் உலகம் தோன்றிற்றா? என்றால், அப்படிக் கூறுவதில் தவறில்லை. எனினும் விஞ்ஞானிகள் மறுக்காத சில உண்மைகளும் உள்ளன. அதைத்தான் தற்போது கூற விழைகிறேன். 

(தொடரும்)

நன்றி - துக்ளக்

ஸ்ரீமத் பாகவதம் – வேளுக்குடி கிருஷ்ணன் - 29

இரண்டாவது ஸ்கந்தம் - ஐந்தாம் அத்தியாயம் (தொடர்ச்சி) 
உலக சிருஷ்டி

‘மூல ப்ரக்ருதி முதலில் மாறுதல்களுக்கு உட்பட்டு, மஹான் என்னும் தத்வமாகும். அடுத்து மஹான் மாறுதல்களுக்கு உட்பட்டு, அஹங்காரம் என்னும் தத்வமாகும். அஹங்காரம் மூன்றாகப் பிரியும். ஸாத்விக அஹங்காரம், ராஜஸ அஹங்காரம், தாமஸ அஹங்காரம் என்று பிரியும். இதிலே, ஸாத்விக அஹங்காரத்துக்கு ‘வைகாரிகம்’ என்று பெயர். தாமஸ அஹங்காரத்துக்கு ‘பூதாதி’என்று பெயர். இனி மேலே படைப்புத் தொடர்கிறது. ஸாத்விக அஹங்காரத்திலிருந்து, அறிவுப் புலன்கள் ஐந்து, செயற்புலன்கள் ஐந்து, மனம் ஒன்று - ஆகிய பதினோரு புலன்களும் உண்டாகும். அதாவது ஐந்து கர்மேந்திரியங்களாவன: வாக்கு, பாணி, பாத, பாயு, உபஸ்தங்கள். ஐந்து ஞானேந்திரியங்களாவன: கண், காது, மூக்கு, நாக்கு, தோல் ஆகியவை. இறுதியாய் இவற்றை அடக்கி ஆளக் கூடியதானது மனம் என்னும் உட்புலன். ஆக மொத்தம் பதினொன்று. 

‘தாமஸ அகங்காரமாகிற பூதாதியிலிருந்து ஐந்து பூதங்களும் (இயற்கை பொருள்களும்), ஐந்து தன் மாத்திரங்களும் (உணர்வுக் கூறுகளும்) உருவாகும். தன்மாத்திரங்கள் என்றால் சப்தம், ஸ்பரிசம், ரூபம், ரஸம், கந்தம் (அதாவது, ஒலி, தொடு உணர்ச்சி, ஒளி, சுவை, மணம்) ஆகிய இந்த ஐந்தும்தான் பஞ்ச தன்மாத்திரங்கள். அடுத்து ஐம்பூதங்கள் : ப்ருத்வி (நிலம்), அப்பு (நீர்), தேஜஸ் (தீ), வாயு (காற்று), ஆகாசம் – என இந்த பத்தும் தாமஸ அகங்காரத்திலிருந்து உருவாகும். ஆக மொத்தம் 24 தத்வங்கள் உருவாகும். மறுபடியும் கூறுகிறேன். ப்ரக்ருதி, மஹான், அஹங்காரம், ஐந்து புலன்கள், ஐந்து அறிவுப் புலன்கள், ஐந்து செயற் புலன்கள் (பொறிகள்), மனம் ஒன்று, பஞ்ச பூதங்கள், பஞ்ச தன்மாத்திரங்கள் ஆகிய 24 தத்வங்கள் உருவாகும். இதன் பின் பெருமான் பஞ்சீகரணம் என்ற ஒரு செயல் புரிகிறார். 

‘அதாவது இப்போது மண், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தும் படைக்கப்பட்டிருந்தாலும், இவற்றை அப்படியே மூலப் பொருட்களாகக் கொண்டு, பிரம்மாண்டத்தைச் சிருஷ்டிக்க முடியாது. இவற்றைக் கலக்க வேண்டும். ஆகையால், பெருமான் இந்த ஒவ்வொன்றையும் இரண்டாகப் பிரிக்கிறார். அதாவது, ஆகாயத்தை இரண்டாகத் துண்டு போடுகிறார். ஒரு பாதியை ஆகாயமாகவே விட்டு விட்டு, மற்றொரு பாதியை நான்கு துண்டுகளாகப் பிரிப்பார். அந்த நான்கையும், மற்ற நான்கு பூதங்களோடே சேர்த்து கலந்து விடுவார். அடுத்து, காற்று. காற்றை இரண்டாகப் பிரிப்பார். ஒரு பாதியை காற்று எனும் தத்துவத்திலேயே விட்டு விட்டு, மறு பாதியை நான்காகப் பிரிப்பார். அந்த நான்கையும் மற்ற நான்கு பூதங்களோடே கலந்து விடுவார். இப்படியாய் ஐம்பூதங்களும், ஒன்றோடொன்று கலக்கப்படுகின்றன. இவை அத்தனையும் முடிந்த பிறகு, இந்தத் தத்துவத்தைக் கொண்டு, பெரும் பிரம்மாண்டத்தை உருவாக்குகிறார். அதாவது ஈரேழு பதினான்கு லோகங்கள் கொண்டது ஒரு பிரம்மாண்டம். அதை உருவாக்குகிறார். 

‘இதுவரைக்கும், பெருமான் செய்வது ஸமஷ்டி சிருஷ்டி. யாருடைய உதவியும் இல்லாமல், பகவான் தானே இவை அனைத்தையும் படைக்கிறார். ஆகவே, இதற்கு அத்வாரக சிருஷ்டி என்ற பெயரும் உண்டு. அத்வாரகம் என்றால், யாரையும் இடை இடாமல், யார் மூலமாகவும் செய்யாமல், தானே நேரே படைத்தல் என்று பொருள். இதற்குப் பின் பெருமானுடைய உடலோடே ஒன்றிக் கிடந்த மற்றொரு கூட்டமான ஜீவாத்மாக்களின் திரளில் உள்ள ஒவ்வொரு ஆத்மாவையும் நன்கு பரிசீலனம் பண்ணுகிறான் எம்பெருமான். ப்ரஹ்மாவின், பதவியை வகிப்பதற்கு, தகுதியான புண்ணியம் எந்த ஜீவனிடத்தில் உண்டோ, அந்த சிறந்த ஜீவனைத் தேர்ந்தெடுத்து, ப்ரம்மாண்டத்திற்குள்ளே ப்ரஹ்மனாக சிருஷ்டிக்கிறான். அந்த ப்ரஹ்மாவை தன்னுடைய நாபிக் கமலத்திலிருந்து படைக்கிறான் ஸர்வேச்வரனான ஸ்ரீமன் நாராயணன். அவ்வாறு படைக்கப்பட்ட ப்ரஹ்மா அண்டசராசரத்திற்குத் தலைவராகிறார். பின்னால் பகவானின் ஆணைப்படி அவன் தந்த சக்தி கொண்டு அவரே படைப்பைத் தொடங்குகிறார்.

‘இனி அவரிடத்திலிருந்து நான்கு வர்ணத்தவர் (நான்கு வகைத் தொழில் திறனாளர்), நான்கு ஆச்ரமத்தவர்கள் (நான்கு வகை வாழ்வு நிலையினர்), தேவர்கள், அசுரர்கள், ராக்ஷஸர்கள், கந்தர்வர்கள், மனிதர்கள், நாகர்கள், ஸ்தாவரம், (அசையாதன), ஜங்கமம் (அசைவன), எட்டு திசைகள் ஆகிய அனைத்தும் படைக்கப்படுகின்றன. ப்ரஹ்மா தானாகவே படைத்து விட இயலாது. ஸ்ரீமன் நாராயணன், ப்ரஹ்மனுக்கு அந்தராத்மாவாக இருந்து கொண்டு, அவருக்கு முனைப்பை ஏற்படுத்தி, படைக்கும் சக்தியை ஊட்டி, படைக்க வைக்கிறார். ஆகவே இந்த சிருஷ்டி, வ்யஷ்டி சிருஷ்டி. அதாவது, ஒன்றிலிருந்து மற்றொன்றைப் பிரித்துப் பிரித்து, பல பற்பல கோடி வகைகளாகப் படைக்கப்படுவதால் அப்பெயர். 

‘ஏற்கெனவே பார்த்தது, ஸமஷ்டி சிருஷ்டி. அதாவது, மூலப் ப்ரக்ருதியிலிருந்து தொடங்கி, பஞ்சீகரணம் ஆகும் வரை, ஸமஷ்டி சிருஷ்டி. ப்ரஹ்மா படைக்கப்பட்டதிலிருந்து, நாம் அனைவரும் படைக்கப்பட்டது வரை வ்யஷ்டி சிருஷ்டி. இந்த சிருஷ்டிக்கு, அதாவது நான்முகன் படைக்கும் இதற்கு மற்றொரு பெயர் ஸத்வாரஹ சிருஷ்டி. அதாவது நாராயணனே நான்முகன் வாயிலாக – அவரை இடையிட்டுக் கொண்டு – படைக்கிறான். அதாவது ப்ரஹ்மாவுக்கு அந்தராத்மாவாக இருந்து கொண்டு படைக்கிறார்.

‘ஆக, இதுவரை நாம் பார்த்தது, பர ப்ரஹ்மமான ஸ்ரீமன் நாராயணன் படைப்பதற்கான ஸங்கல்பம் எடுத்துக் கொண்டு, தன் திருமேனியோடே ஒன்றிக் கிடந்த மூல ப்ரக்ருதியில் மாறுதலை அடைவித்து, பஞ்ச பூதங்களைப் படைத்து, அவற்றை ஒன்றுடன் ஒன்று கலந்து ப்ரம்மாண்டத்தைப் படைத்து, தன் நாபிக் கமலத்திலிருந்து ப்ரஹ்மனைப் படைத்து (அதாவது ஒரு உயர்ந்த ஜீவனை ப்ரஹ்மாவாகப் பதவி ஏற்றம் செய்து), அவன் மூலமாக மற்ற அனைத்துப் பொருட்களையும் படைக்கிறார். இதுதான் பிரபஞ்சப் படைப்பின் வழி வகை. 

‘ப்ரஹ்மாவால் நாம் அனைவரும் படைக்கப் பட்டிருக்கிறோம். இப்படி நம்மைப் படைத்தது ப்ரஹ்மாவா? அல்லது பரம் பொருளான ஸ்ரீமன் நாராயணனா? என்று கேட்டால், நம் போன்றவர்களைப் படைப்பது ப்ரஹ்மா. ஆனால், அவரும் தானாகப் படைப்பது இல்லை. ஏனெனில் அவரே ஸ்வதந்திரமானவர் இல்லை. பெருமானை, தனக்கு அந்தராத்மாவாகக் கொண்டு, அவர் கொடுத்த சக்தியால்தான் படைக்கிறார். ஆனால், ப்ரஹ்மாவின் பிறப்புக்கு முன்னால் பகவானால் செய்யப்பட்ட பிரம்மாண்டத்தின் படைப்புக்கும், ப்ரஹ்மாவுக்கும் தொடர்பு கிடையாது. ப்ரஹ்மாவும் ஒரு ஜீவாத்மாதான். அனைத்து தேவர்களும் ஜீவர்கள்தான். பகவான் ஒருவன்தான் பரமாத்மா. இவை அனைத்தும் புரியாமல் நாம் அனைவரும் நான்முகனான ப்ரஹ்மனே படைக்கிறான் என்று நினைக்கிறோம்! என்ன விந்தை! 

‘நம்மை மயங்க வைக்கும் இந்த விந்தைக்கும் காரணம், அந்த மாயக் கண்ணன்தானே! இதைத்தான் ப்ரஹ்மா வெகு தெளிவாக நாரதருக்கு எடுத்துரைத்தார். 

வர்ஷ பூத ஸகஸ்ராந்தே, ததண்டமுதகே சயம்|
காலகர்ம ஸ்வபாவஸ்தோ ஜீவோ(அ) 
ஜீவம் அஜீவயத்||
(ஸ்ரீ பாகவதம் 2-5-34) 

‘ஆயிரம் ஆண்டுகள் கழித்து,அண்டசராசரத்திலிருந்து ப்ரஹ்மா வெளியே வந்தார். பிற்பாடு, அவர் நாராயணனைக் குறித்து, தவம் புரிந்து நீண்ட காலம் அவரிடத்திலிருந்து, வேதங்களை எல்லாம் உபதேசங்களாகப் பெற்றார். பிற்பாடு, அவரே பகவான் அருளினால் படைப்பதற்குத் தொடங்கினார். படைப்பைப் பற்றி மற்றொரு அரிதான செய்தி. ப்ரஹ்மமேதான் படைப்புக்கு முன்னும் இருக்கும். ப்ரஹ்மம்தான், படைப்புக் காலம் தொடங்கி, இப்போது சிருஷ்டிக்கப்பட்ட காலத்தில் இருக்கிறோமே, இப்போதும் இருக்கும். இறுதி ப்ரளயத்திற்குப் பின்னும் இருக்கும். அதாவது, அப்பிரளயத்தின்போதும் பரமாத்மாவே இருக்கிறார். சிருஷ்டியின்போதும் பரமாத்மாவே ப்ரஹ்மமே இருந்தார். இதைத்தான் உபநிஷத்துக்கள் – 

‘ஸதேவ ஸோம்ய இதம் அக்ர ஆஸீத்
ஏகமேவ அத்வதீயம்’ 

(உண்மையின் வடிவான அவன் ஒருவனே படைப்புக்கு முன்னும் இருந்தான். அவன் ஒருவனையன்றி இரண்டாவது ஒன்றுமில்லை) என்கின்றன. இப்போது காரிய ரூபத்தில் ஜகத் உள்ளது. ப்ரளயத்தின்போது காரண உருவத்தில் இருந்தது. மண் காரணம். குடம் காரியம். மண் உருமாறித்தான் குடமாக ஆகும். அதேபோல சித்து, அசித்து அனைத்தும் காரண வடிவில் (அதாவது நுண்ணிய தசையில்) ப்ரளயத்தின்போது ப்ரஹ்மத்தோடே ஒட்டிக் கொண்டிருக்கும். தற்போது காரிய தசையில் ஸ்தூல ரூபமாக விரிவடைந்த நிலையிலும் ப்ரஹ்மத்தோடு தொடர்பு கொண்டிருக்கும். வேறு ஒரு விதத்தில் கூறுகிறேன். காரணமும் ப்ரஹ்மமே; காரியமும் ப்ரஹ்மமே! ‘நுண்ணிய வடிவில் இருக்கும் சித்துக்களோடும், அசித்துக்களோடும் கூடியிருக்கும் ப்ரஹ்மம், காரண ப்ரஹ்மம். விரிவடைந்திருக்கின்ற நிலையில் இருக்கும் சித்துக்களோடும், அசித்துக்களோடும் கூடியிருக்கும் ப்ரஹ்மம், காரிய ப்ரஹ்மம் – அதாவது சூட்சமமான சித்தோடும், அசித்தோடும் விசிஷ்டமாய் கூடியிருக்கும் ப்ரஹ்மமே, காரண ப்ரஹ்மம். ஸ்தூலமான சித்தோடும், அசித்தோடும் கூடியிருக்கும் விசிஷ்டமாய் கூடியிருக்கும் ப்ரஹ்மமே, காரிய ப்ரஹ்மம். இங்கு சூட்சும சித்து, அசித்து என்றால் என்ன? ஸ்தூல சித்து, அசித்து என்றால் என்ன? பொருள் பார்ப்போம்.

‘சூட்சுமம் என்பது நுண்ணிய தசையைக் குறிக்கும். அதாவது பெயர், உருவ வேறுபாடு அற்ற நிலை. 

நாம ரூப விபாக அனர்ஹம் 

– என்று பெரியோர் கூறுவர். ஆக, பிரளயத்தின்போது, பெயர் வேறுபாடோ, உருவ வேறுபாடோ இல்லாத நிலையில் சித்தும், அசித்தும் ப்ரஹ்மத்தோடே எப்போதும் கூடிக் கிடக்கும். சிருஷ்டி தொடங்குகிறது. விரிவடைகின்றது. இனி அனைத்துப் பொருட்களுக்கும் – அதாவது சித்துக்கும் (உயிருள்ள வைக்கும்), அசித்துக்கும் (ஜடப் பொருளுக்கும்) பெயர் வேறுபாடும், உருவ வேறுபாடும் வந்து சேர்கிறது. இதுதான் ஸ்தூல தசை. ஆக, பெயர் உருவ வேறுபாடு இல்லா விட்டால் சூட்சும நிலை. பெயர், உருவ வேறுபாடு இருந்தால் ஸ்தூல நிலை. பெயர் உருவ வேறுபாடு இல்லாமல்தான் சேதன – அசேதனங்கள் ப்ரஹ்மத்தோடே கூடியிருக்கும் நிலை காரண தசை. பெயர், உருவ வேறுபாட்டோடே ஸ்தூல மான நிலையில் சேதன – அசேதனங்கள் ப்ரஹ்மத்தோடே கூடியிருக்கும்போது, அதுவே காரிய தசை. ஆக, ப்ரஹ்மமே காரணமாக ப்ரளய தசையிலும், அதுவே சிருஷ்டி தசையில் காரியமாகவும் இருக்கிறது. இப்போது ப்ரஹ்மமே தன்னை உருமாற்றிக் கொண்டு, ப்ரபஞ்சமாக இருக்கிறது. இங்கு ‘தன்னை’ என்றால் ‘தன் சரீரத்தை’ உருமாற்றிக் கொண்டு சித்திற்கும், அசித்திற்கும் நாம ரூபங்களைக் கொடுத்து இவ்வளவு பெரிய பிரபஞ்சமாகப் படைத்திருக்கிறது.’ 

ஆக, காரணம் ப்ரஹ்மம்தான். காரியமும் ப்ரஹ்மம்தான். ஆனால், காரண ப்ரஹ்மத்தோடும், சித் – அசித்துக்கள் கூடியே இருக்கும். உண்மையாகவே இருக்கும். காரிய ப்ரஹ்மத்தோடும், சித் – அசித்துகள் கூடியே இருக்கும். உண்மையாகவே இருக்கும். இதைத்தான் வேதாந்தம் வெகு நேர்த்தியாக விளக்குகிறது. இதைத்தான் ப்ரஹ்மாவும் நாரதருக்குச் சொல்லிக் கொடுத்தார். மேலும் இதில் சில விஷயங்கள் சொல்ல வேண்டியுள்ளது. இன்னும் கொஞ்சம் இதைக் கூர்ந்து நோக்கினால் சிருஷ்டியின் சூட்சமத்தை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம். இதை முதலில் படியுங்கள். மனதில் தேக்கிக் கொள்ளுங்கள். அட்டவணையிட்டு எழுதிப் பாருங்கள். மீண்டும் மீண்டும் சிந்தித்துப் பாருங்கள். நன்கு புரியும். மேலும் விளக்கிக் கூறுகிறேன். 

(தொடரும்)

நன்றி - துக்ளக்

செவ்வாய், 1 ஜனவரி, 2013

ஸ்ரீமத் பாகவதம் – வேளுக்குடி கிருஷ்ணன் - 28

இரண்டாவது ஸ்கந்தம் - நான்காம் அத்தியாயம்

உலக சிருஷ்டியைப் பற்றிய பரீக்ஷித்தின் கேள்வி

ண்ணனே பரமாத்மா என்ற உண்மையில் உறுதி கொண்டிருந்தான் பரீக்ஷித். மேலும் மேலும் அவனைப் பற்றிக் கேட்டால்தானே பக்தி வளரும். அப்போதுதானே, உபாஸனம் (இடையறாத சிந்தனை) செய்யலாம்! உபாஸனம் செய்தால்தானே, நம்முடைய அனாதி காலமான பாபங்கள் விலகும்! பாபங்கள் விலகினால் முக்தி பெறுதல் எளிதாகும். எனவே, கண்ணனுடைய கதைகளைக் கேட்பதிலும், அவன் குணங்களை அனுபவிப்பதிலுமே உயர்ந்தோர்கள் ஈடுபடுகிறார்கள். பரீக்ஷித் முதலில் ஒரு கேள்வி கேட்டான். ‘பெருமான் அனைத்துலகுக்கும் ஒரே கடவுள். அவனே பரமாத்மா என்று கூறுகிறீரே! உலகம் அனைத்தையும் அவன்தான் படைத்தான்; ஜகத்துக்கே காரணம்; ஆகையால் அவன் ஒருவன்தான் அனைவரிலும் உயர்ந்தவன்; பரமாத்மா என்றெல்லாம் கூறுகிறீரே! பகவான் எப்படிப் படைக்கிறார்? படைத்த உலகத்தை எப்படிக் காக்கிறார்? கடைசியாக எப்படித் தன்னுள் லயிக்கச் செய்கிறார்? ச்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம் – படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களையும் பகவான் எப்படிச் செய்கிறார்? இதையும் தாங்களே கூற வேண்டும். 

பூய ஏவ விவித்ஸாமி பகவான் ஆத்ம மாயயா
யதேதம் ஸ்ருஜதே விச்வம் துர்விபாவ்ய மதீச்வரை:
(ஸ்ரீபாக : 2-4-6) 

‘பகவானே அவதரித்து எத்தனையோ சாஸ்திரங்களை உபதேசிக்கிறார். நம்மோடு விளையாடுகிறார். மேலும் அனைத்து தேவதைகளுக்கும் அந்தர்யாமியாக இருந்து, அவரவர்களைச் செயல்புரிய வைக்கிறார். இவை அனைத்தையும் பெருமான் எப்படிச் செய்கிறார்? எதைக் கருவியாகக் கொண்டு சிருஷ்டிக்கிறார்? சிருஷ்டிக்கும்போது எது மூலப் பொருள்? பகவான் எந்த இடத்தில் இருந்து கொண்டு சிருஷ்டிப்பார்? அவருடைய படைப்பின்பயன் யாது? இவை அனைத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். இந்தப் ப்ரகிருதியில் ஸத்வம், தமஸ், ரஜஸ் - என்ற முக்குணங்கள் இணைபிரியாமல் உள்ளனவே! இவற்றைப் படைக்கும் பெருமானுக்கும், அவை உண்டோ? ப்ரகிருதியின் குணங்களாகிய இந்த மூன்று குணங்களை பெருமானும் தன்னிடத்தில் கொண்டிருக்கிறாரா? இதைத் தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன்’ என்று கேட்டான். 

சூத பௌராணிகர் கூறுகிறார் : ‘இப்படி, பரீக்ஷித் கேட்க ஆனந்தப்பட்ட சுகாசாரியர், ரிஷிகேசனான பெருமானின் கதையைக் கூற முற்பட்டார். சுகர் கூறுகிறார்: 

ஸங்கரஷ்ணன், ப்ரத்யும்னன், அனிருத்தன்

– என்ற மூன்று நிலைகளை எடுத்துக் கொண்டு பெருமான் முறையே அழிக்கிறான், காக்கிறான், படைக்கிறான். அவனை முதற்கண் வணங்குகிறேன். பகவானுடைய கதையைக் கூறும்போது, அவன் அருள் இல்லாமல் என்னால் பேசுவதற்கு இயலாது. பரமஹம்ஸர்களான முற்றும் துறந்த முனிவர்களாலே தேடப்படுபவன் எம்பெருமான். அவனை வணங்கி வேண்டுகிறேன். ‘அகலில் அகலும், அணுகில் அணுகும்’ – பக்தர்கள் அணுகி வந்தால், பெருமான் மெய்யே அருள் புரிகிறான். மன உறுதியில் விலகிப் போனால், அப்படிப்பட்டவர்களிடத்திலிருந்து விலகி விடுகிறான்.இப்படிப்பட்ட எம்பெருமானை வணங்குகிறேன். வாக்கினால், மனத்தினால், செயலினால், தெரிந்தும், எழுதியும், வாசித்தும், பூஜித்தும், நோற்றும், நாம் யாரைத் தொழ வேண்டுமோ அப்படிப்பட்டவனான பெருமானை நமஸ்கரிக்கிறேன்.

இந்த எம்பெருமான் நமது அனாதிகால பாவங்களைத் தொலைத்து, இந்த ஸம்ஸாரத்தையே விலக்கி, நமக்கு முக்தி கொடுக்கும் சிறப்புடையவன். மோக்ஷம் நல்கும் அந்த முகுந்தனை வணங்கிக் கொள்கிறேன். இவ்வுலகத்தில் எந்த தர்மம் செய்யப்பட்டாலும், பெருமானிடத்தில் ஸமர்ப்பிக்கப்பட வேண்டும். இல்லையேல், அது பயனற்றதாகிப் போகும். இப்படி அனைத்து தர்மங்களையும், நற்செயல்களையும், ஸ்தோத்திரங்களையும் தன் அருட்பார்வையில் வைத்துக் கொண்டிருக்கும் முழு முதற் கடவுளான எம்பெருமானை வணங்குகிறேன். அவனே ‘ஸ்ரீ’ என்று அழைக்கப்படும் திருமாமகளின் மணாளன். ஸ்ரீயப்பதியாய், யக்ஞங்களுக்கு எல்லாம் தலைவனாய், பிரஜைகளுக்கெல்லாம் பதியாய் இருக்கும் எம்பெருமானே, அடியேன் நன்கு பேசும்படி அருளட்டும். பெருமானுடைய அருள் இருந்தால்தானே, நினைக்கவே முடியும். அருள் இருந்தால்தானே நினைத்ததைப் பேச முடியும். அருளாலேதானே பேசுவது, மற்றவர்களுக்குப் புரியும். ஆதியில் பகவான் ப்ரஹ்மாவை சிருஷ்டிக்க எண்ணினான். தன் உள்ளத்தாலே ஸங்கல்பித்து, நான்முகனாகிய பிரமனைப் படைத்தான். பின் அவன் மூலமாக உலகனைத்திலும், வேதங்கள் பரவ வேண்டும் என்பதற்காக அவனுடைய மனைவியாக, ஸரஸ்வதி தேவியையும் படைத்தான். அவர்களுடைய அருளும் அடியேனுக்கு இருந்து இந்த உயர்ந்த கதையைப் பேசக்கடவேன். 

நமஸ்தஸ்மை பகவதே 
வாஸுதேவாய வேதஸே|
பபுர்ஜ்ஞானமயம் ஸௌம்யாயன் 
முகாம்புருஹாஸவம்:|| 
(ஸ்ரீ பாக : 2-4-24) 

அந்த பகவானான வாஸுதேவனை வணங்குகிறேன். எவன் வேத உருவினனாய் அனைவருக்கும் ஞானத்தை ஊட்டுகிறானோ, தாமரை மலரைப் போன்ற தன் திருவாயால், உபதேசிக்கின்றானோ அவ்வெம்பெருமானது உபதேசங்கள் என் உள்ளத்தில் நிற்கட்டும். அதையே உமக்குக் கூறக் கடவேன். நம் முன்னோர்கள் கூறிய முறைப்படிக்கு, உனக்குச் சொல்கிறேன். 

ஸ்ரீ மஹாவிஷ்ணு முதலில் ப்ரஹ்மாவுக்கு உபதேசிக்க, ப்ரஹ்மா நாரதருக்கு உபதேசிக்க, நாரதர் வியாஸருக்கு உபதேசித்தார். அந்த மரபு மாறாமல் அனைத்துக் கதைகளையும் உமக்குக் கூறுகிறேன். இதை இடையூறின்றி பகவானே நடத்திக் கொடுக்கவேண்டும். நாக்கில் அமர்வதும், உள்ளத்தைத் தூண்டி விடுவதும், உடலில் சக்தியைக் கொடுப்பதும் இறைவனே. நாம் எந்த ஒரு செயலைச் செய்யும்போதும், பெருமான் இச்செயலை நன்கு குறைவின்றி முடித்துக் கொடுக்கட்டும் என்று அவரை வேண்டிக் கொண்டு செய்ய வேண்டும். முயற்சி நம்முடையதாக இருக்க வேண்டும். ஆனால் அருளோ அவனுடையது. நம் முயற்சியால் மட்டும் செயல்கள் வெற்றி பெறாது. நாம் முயற்சி செய்யாமல் அவன் அருளைக் கோருவதும் நியாயமாகாது. ஆகவே, நம் முயற்சியும் இருக்கட்டும். இந்த முயற்சியே அவனது அருளுக்கு ஏங்குவதாக அமையட்டும். இப்படிப்பட்ட அடியவர்களுக்கு நிச்சயமாக கண்ணன் அருள்கிறான். சுகாசாரியரையா விட்டுக் கொடுப்பான்? மேலும் கேட்போம். 

(தொடரும்)

நன்றி - துக்ளக்

ஸ்ரீமத் பாகவதம் – வேளுக்குடி கிருஷ்ணன் - 27

இரண்டாவது ஸ்கந்தம் - மூன்றாம் அத்தியாயம்

‘நாராயணா’ என்னாத நாவென்ன நாவே!

ஆரோக்யம் பாஸ்கராத் இச்சேத்
ச்ரியம் இச்சேத் ஹுதாசனாத்
சங்கராத் ஜ்ஞானம் இச்சேத்
மோக்ஷம் இச்சேத் ஜனார்த்தனாத் 

– என்ற ச்லோகம் சாஸ்திரப் பிரஸித்தம். 

இந்த ச்லோகத்திலிருந்து இவ்வுலக வாழ்வில் எதை எதை நாம் எந்தெந்தத் தேவைக்காக, எந்தெந்த தேவதையை ஆராதிக்க வேண்டும் என்பது தெரிய வருகிறது. ஆரோக்கியத்துக்கு ஸூர்ய பகவானையும், செல்வச் செழிப்புக்கு அக்னி தேவனையும், ஞானம் பெருக ருத்ரனையும், முக்தி கிட்டுவதற்கு ஜனார்த்தனனையும் பிரார்த்திக்க வேண்டும். வாழ்ந்து கொண்டிருக்கும்போது, அந்தந்தப் பயனுக்காக, அவ்வவற்றுக்குரிய தேவதைகளை வேண்டுகிறோம். ஆனால், இந்த வாழ்க்கை முடியும் தருவாயில் எதைக் கேட்க வேண்டும்? எதை விரும்ப வேண்டும்? எதைக் கடைப்பிடிக்க வேண்டும்? – இதுவே பரீக்ஷித்தின் உள்ளத்தில் எழுந்த கேள்வி. 

சுகாசாரியர் பதில் கூறுகிறார் : “பரீக்ஷித் மஹாராஜனே! மரிக்கும் தருவாயில் உள்ளவன் எதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று கேட்டாய். நல்ல கேள்வி. இன்னின்ன விஷயத்தை வேண்டுபவன், இன்னின்னதை இன்னின்ன தேவதையிடத்தில் பிரார்த்திக்க வேண்டும். ப்ரஹ்ம தேஜஸை அடைய விரும்புபவன், நான்முகக் கடவுளையும்; குலங்கள் வலிமையாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுபவன் இந்திரனையும்; உணவும், கேளிக்கையும் நன்றாக இருக்க வேண்டுபவன் அதிதி தேவியையும்; செழிப்பாக இருக்க நினைப்பவன் அக்னி பகவானையும்; நீண்ட ஆயுளை வேண்டுபவன், அஸ்வினி தேவர்களையும்; அழகை ஆசைப்படுபவன் கந்தர்வர்களையும்; அனைவருக்கும் தலைவனாக இருக்க நினைப்பவன், ஸ்ரீ மஹாவிஷ்ணு ஸ்வரூபனான பகவானையும்; இறுதியாக வைராக்கியத்தை விரும்புபவன் பரம புருஷனான ஸர்வேச்வரன் ஸ்ரீமன் நாராயணனையும் பூஜிக்க வேண்டும். 

“இவை ஒவ்வொன்றும் அவரவர் சிரத்தையைப் பொறுத்து ஒவ்வொரு பலனைக் கொடுக்கலாம். ஆனால், இவற்றை விட ஸாது ஸமாகமம் – அதாவது பக்தர்களுடைய குழுமத்தில் இருத்தல், மிக மிக உயர்ந்தது. அப்படி இருந்தால், அதுவே நம்முடைய உள்ளத்தில் மெதுமெதுவே பக்தியை வளர்க்கும். பக்தியின் மஹாத்மியத்தாலே, விருப்பையும், வெறுப்பையும் வெற்றி கொள்கிறோம். விருப்பு, வெறுப்புகள் அற்ற உள்ளம் தூய்மை அடையும். 

“சித்த சுத்தி ஏற்படுமானால், அந்தத் தூய உள்ளத்தில்தான் பெருமான் எப்போதும் உகப்புடன் வீற்றிருக்கிறார். ஆகவே, ஸாதுக்களோடே கூடியிருத்தல் – அனைத்தையும் விட முக்கியமாகிறது. அவர்களோடு உண்டான தொடர்பு ஒரு ரஸ குளிகையால் எந்த உலோகத்தைத் தொட்டாலும், அது எவ்வாறு பொன்னாக மாறுமோ, அதே போல, அவர்களோடு உண்டான தொடர்பு நம்மையும் புனிதப்படுத்த வல்லது.

“பரீக்ஷித்தே! தாங்கள் இப்போது பல ஸாதுக்களோடே அமர்ந்திருக்கிறீர். உமக்கு பகவத் கதையைச் சொல்ல ஆசைப்பட்டோம். சொல்கிறோம்” என்றார் ஸ்ரீ சுகர். இவ்விடத்தில் சௌனகர் முதலான ரிஷிகள், சுகாசாரியாருடைய பெருமையைக் கூறுகிறார்கள். கூடவே, இவ்வுலகத்தில் நாம் பெரியது, உயர்ந்தது என்று நினைத்துக் கொண்டிருக்கும் அனைத்தும் எவ்வளவு தாழ்ந்தவை, எது உண்மையில் உயர்ந்தது என்பதையும் கூறினர். 

பரீக்ஷித் சிறு பிராயம் முதலே பகவானுடைய திருநாமங்களைச் சொல்லி வளர்ந்தவன்.வேறு பொம்மைகளை வைத்துக் கொண்டு விளையாடாமல், பெருமாளுடைய விக்ரஹங்களையே வைத்துக் கொண்டு விளையாடியவன். எப்படி இலக்குவனுக்கு அவன் பிறந்த நாள் முதலாகவே ராம பக்தியோ, நம்மாழ்வாருக்குப் பிறந்த நாள் தொடங்கியே கிருஷ்ண பக்தியோ, ஆண்டாள் அவதரித்த போதிலிருந்தே, சிறு குழந்தையாக இருந்த காலத்திலேயே, எப்படி பெருமானை அடையத் துடித்தாளோ, அதே போல பிறக்கும்போதே, பக்தியோடு பிறந்தான் பரீக்ஷித். இப்போது அவனுடன் அவனுடைய பக்தியும் வளர்ந்து விட்டது.

ஆனால், இந்த ஸம்ஸாரத்தில் கர்மங்களுக்கு வசப்பட்டு இருந்தபடியால், முனிவரிடத்தில் அபசாரப்பட்டான். அதே காரணத்துக்காக முனி குமாரனிடத்தில் சாபம் பெற்றான். ஆனால், உடனே தான் இழைத்த குற்றத்தை உணர்ந்து வருந்தினான். அதுதான் பக்தி நமக்குக் கொடுக்கும் பண்பாடு. இவ்வுலகத்தில் இருக்கும் வரை நாம் அறியாமல் சில குற்றங்களைப் புரியலாம். ஒரு பக்தன் அதை உணர்ந்து கொண்டு, தன்னைத் திருத்திக் கொள்கிறான்.திருந்தி தன் செயலுக்கு வருந்துபவனை பெருமான் உடனே மன்னிக்கிறான். ஆனால் பக்தியில்லாமல் போகுமானால், நம் குற்றத்தை ஒப்புக் கொள்ளும் மனப்பாங்கு எளிதில் வாராது. 

மேலும் சௌனகர் கூறுகிறார் : 

“ஒவ்வொரு மனிதனுக்கும் ஆயுள் நூறு ஆண்டுகள். அதையும் முழுமையாக நாம் வாழ இயலவில்லை. இருக்கும் நேரத்துக்குள் நாம் பகவானது திவ்யமான கதைகளைக் கேட்க வேண்டும். பகவான் நமக்குத் தன்னைப் பற்றிய கதைகளைப் பேசவும், கேட்கவும் நாக்கையும், காதுகளையும், அவனைப் போற்றித் துதிப்பதற்கு நாவினையும், அவனுக்கும் அவனது அடியார்களுக்கும் தொண்டு புரிவதற்கு கைகளையும், கால்களையும், அருளியுள்ளார். ஒருவேளை காதுகள் பெருமானுடைய வைபவங்களைக் கேட்காமலே போகுமானால், அவை பாம்புப் புற்றுக்குச் சமமானவை. நம்முடைய நாக்கு, பகவானைப் பற்றிப் பேசாமல் இருக்குமானால், அது தவளை நாக்குக்குச் சமமானது. நம் தலை பெருமானை வணங்காமல், ஆனால் பல்வகை பட்டுத் தலைபாகைகளையும், தங்கக் கிரீடத்தையும் சூடிக் கொள்ளுமானால் அவை தலைக்குப் பாரமாக இருக்குமே தவிர, உண்மையான அலங்காரமாக இருக்காது. நம் கைகள் பெருமானை நோக்கிக் குவியவில்லையானால், பிணத்தின் கைகளே அவை. நம் கண்கள், கண்ணனுடைய வடிவழகை சேவிக்கவில்லையானால், மயிற் பீலியில் இருக்கும் கண்கள் போல் பயனற்றவை. நம் கால்கள் பெருமான் ஸன்னிதானத்தை நோக்கி நடக்கவில்லையானால், அவை நகரவியலா மரத்தின் வேர்களே. நம்முடைய மூக்கு பகவான் திருவடியில் அர்ச்சிக்கப் பெற்ற துளஸியின் நறுமணத்தை முகராமல் போனால், அது இருந்தே பயனில்லை. அது சுவாசம் இழந்த பிணத்தின் மூக்கிற்குச் சமமானது. 

பெருமானுடைய கதைகளைக் கேட்டு, “ஆடி ஆடி, அகங்கரைந்து, இசை பாடிப் பாடி, கண்ணீர் மல்கி, நாடி நாடி ‘நரசிங்கா’ என்று வாடி வாடும்இவ்வாள் நுதலே” – என்று நம்மாழ்வார் பாடியபடியே, கண்களிலிருந்து நீர் பெருக, கால்கள் தள்ளாட, உள்ளம் உருக, பகவானிடத்தில் ஈடுபட வேண்டும். நம் கை கால் முதலானவை பெருமானையே நாடி அவனது பேரன்பில் ஈடுபட்டால், அவன் கதைகளைக் கேட்கும்போதே, உள்ளம் உருகி நிற்போம். 

திருமங்கையாழ்வார், 
நீள்வான் குறளுருவாய் நின்றிரந்து மாவலிகண்
தாளால் அளவிட்ட தக்கணைக்கு மிக்கானை
தோளாத மாமணியைத் தொண்டர்க் கினியானை
கேளாச் செவிகள் செவியல்ல கேட்டாமே 
– என்று பெரிய திருமொழியில் (11-7-2) அருள்கிறார். உலகைத் தாவி அளந்த திருவிக்கிரப் பெருமானுடைய கதைகளைக் கேட்கும் செவிகளே செவிகள். அன்றேல் அவை வெறும் துளைகள்தான் என்று வெறுத்தோதுகிறார். அதனால்தான் குலசேகரப் பெருமாளும் தன்னுடைய ‘முகுந்த மாலை’யில் –

“ஏ நாக்கே! கேசவனைப் பாடு. மனமே! முராரியைப் போற்று. இரு கரங்களே! அச்சுதனை நன்கு அர்ச்சிப்பாயாக! செவிகளிரண்டே! அச்சுதனின் அழகிய கதைகளைக் கேட்பாயாக! இரு கண்களே! கண்ணனையே எங்கும் காண்பாயாக! கால்களிரண்டே! பெருமான் ஸன்னிதானத்தை நோக்கி நடப்பாயாக! மூக்கே! ஹரியின் ஆலயத்தை அலங்கரிக்கும் துளஸியை முகர்வாயாக. தலையே! புலன் உணர்வுகளுக்கு அப்பாற்பட்டவனான பகவான் அதோக்ஷஜனை வணங்குவாயாக!” என்னும் பொருள் தரும் ச்லோகமாக – 

ஜிஹ்வே! கீர்த்தய கேசவம் முரரிபும் 
சேதோ பஜ ஸ்ரீதரம்
பாணித்வந்த்வ! ஸமர்ச்சய அச்யுதகதா
ச்ரோத்ர த்வய த்வம் ச்ருணு

க்ருஷ்ணம் லோகய லோசனத்வய!
ஹரேர் கச்சாங்க்ரி யுக்மாலயம் 
ஜிக்ர க்ராண! முகுந்தபாத துளஸீம் மூர்த்தன்!
நம அதோக்ஷஜம் 

– என்று பாடியருளினார். ஆக, பெரியோர்கள் அனைவரும் நமக்குச் சொன்னது பகவத் கதையைக் கேட்க, கண்ணனைக் காண, அவன் துளஸியை நுகரவே நமக்குப் புலன்கள் கொடுக்கப்பட்டுள்ளன என்பதே! இந்தத் தத்துவத்தை உள்ளபடி உணர்ந்து கொண்ட பரீக்ஷித், தன் புலன்கள் அனைத்தையும் பெருமானிடத்தில் செலுத்த வேண்டும் என்கிற விருப்பத்தாலே, சுகரிடத்தில் வினவுகிறான். ‘நீர், உம்முடைய முன்னோர்களிடத்தில் கேட்ட அந்தக் கதைகளை அப்படியே சொல்வீராக! அவற்றைக் கேட்க ஆவலாக உள்ளேன்’ என்றான். சுகாசாரியாருக்கோ, பேரானந்தம். இப்படி ஆர்வமே உருவான ஒரு சீடன் கிடைத்தானே! இனி அவர் விடுவாரா? பக்தி வெள்ளமிடும் பகவத் கதை அவர் மனக்கண் முன் விரிகிறது. 

(தொடரும்)

நன்றி - துக்ளக்

ஸ்ரீமத் பாகவதம் – வேளுக்குடி கிருஷ்ணன் - 26

இரண்டாவது ஸ்கந்தம் – இரண்டாம் அத்தியாயம் 

பற்றற்ற மனத்துடன் பகவானிடம் அன்பு வைத்தல் 

“நான்முகக் கடவுளான பிரஹ்மா மேலே சொன்னபடி பகவானை தியானித்தே, ‘உலகத்தைப் படைக்கக் கூடிய சிருஷ்டி சக்தியைப் பெற்றார்” என்றார் ஸ்ரீ சுகர். 

ஒரு மனிதன் எப்போது தியானத்துக்கு வருவான்? ஓடி ஆடி பணம் சம்பாதிக்க வேண்டிய தேவை, வயிற்றுப் பசிக்குப் பாடுபட வேண்டிய தேவை – இவை இருந்தால், யாரும் பகவானைப் பற்றி சிந்திக்கவோ, தியானத்துக்கோ வர மாட்டார்கள். அவர்களது வயிற்றுப்பாட்டை கவனித்துக் கொண்டோமானால் பலரும் வரலாம். அதற்காகத்தான் ஆங்காங்கு அன்னதானக் கூடங்களும், கோவில்களில் அன்னதானங்களும் முற்காலங்களில் ஏற்படுத்தப்பட்டன. மேன்மேலும் எவ்வளவுதான் தனம் சம்பாதிப்போம்? ப்ரஹ்ம ஞானத்தைச் சம்பாதித்தால் மகிழ்ச்சி வளரும். பணத்தை மட்டுமே சம்பாதிப்பதில் குறியாய் இருந்தால், துன்பமும், பொறாமையும்தான் வளரும். 

சுகர் கூறுகிறார் : “விசாலமான பூமி இருக்கும்போது, ஏன் கட்டிலைத் தேடிப் போக வேண்டும்? குவிந்திருக்கும் இரண்டு கைகள் உண்ண உதவும்போது, எதற்குப் பாத்திரத்தைத் தேட வேண்டும்? எங்கும் நதி – குளம் – கிணறு போன்ற நீர் நிலைகள் இருக்கும்போது, வேறு தண்ணீர் எதற்கு? பிறர்க்கென்றே வாழும் மரங்கள், தமது இனிய கனிகளைக் கொடுக்கும்போது, செயற்கை உணவு எதற்கு? பஞ்சிழைகளும், மரப்பட்டைகளும் ஆடைகளாக இருக்கும்போது, பட்டாடை எதற்கு? ஆங்காங்கு தங்குமிடமாக குகைகள் இருக்கும்போது, மாடி வீடு எதற்கு? இயற்கையோடு ஒன்றி வாழ்ந்தோமானால் நம் தேஹமும், மனமும் இறையுணர்வில் ஒன்றி, ஆரோக்கியத்தோடே இருக்கும்.” இப்படியாய் தியானத்தைப் பற்றியும், அதற்குத் தேவையான பற்றற்ற தன்மையைப் பற்றியும் சுகர் கூறினார். 

பரீக்ஷித்தும் விராட் சொரூபத்தை தியானிக்கப் பார்த்தான். ஆனால், அது அவ்வளவு எளிதல்ல. தியானம் இரு வகைப்படும். பிரபஞ்சத்தையே தன் திருமேனியாகக் கொண்ட பெருமானை தியானித்தல் ஒரு வகை. அது மனமும், புலன்களும் முழுவதும் அடங்கியவர்களாலேயே முடியும். மற்றொரு வகையில் – சங்கு சக்கரங்களைத் தரித்துக் கொண்டு, அழகிய கிரீடத்துடனும் தாமரைக் கண்களோடும் ஆபரணங்கள் அனைத்தையும் பூண்ட, பெருமானுடைய இனிய திருமேனியை தியானித்தல். இது நம் போன்றோர்களுக்கு இயலும். திருமங்கையாழ்வார் கூறுகிறார்:

இளைப்பினை இயக்கம் நீக்கி இருந்துமுன் 
இமையைக் கூட்டி
அளப்பில் ஐம்புலனடக்கி அன்பு அவர்
கண்ணே வைத்து
துளக்கமில் சிந்தை செய்து தோன்றலும் 
சுடர்விட்டு ஆங்கே
விளக்கினை விதியின் காண்பார்
மெய்மையைக் காண்கிற்பாரே!
(திருக்குறுந்தாண்டகம் – 18) 

இங்கு, தியானம் செய்ய வேண்டிய முறையை ஆழ்வார் விளக்குகிறார். மூச்சை அடக்கி, உரிய ஆசனத்தில் அமர்ந்து, புருவங்களுக்கு நடுவிலே கண்ணை நிறுத்தி, ஐம்புலன்களையும் அடக்கி பெருமானிடத்தில் அன்பு செலுத்தத் தொடங்க வேண்டும். விளக்குப் போன்று சுடரொளி வீசும் பகவானை மனக் கண்ணால் காண வேண்டும். ஆனால், அது எளிது அல்ல. அதைவிட, அழகிய திருமேனியோடே, நாம் அறிந்த நான்கு திருக்கைகளோடே நம் உள்ளத்துக்குள்ளும், எத்தனையோ கோயில்களிலும் பெருமான் காட்சி கொடுக்கிறார் அல்லவா! அவரை தியானிப்பது மிக எளிது. ஆகவே, சுகாசாரியர், பரீக்ஷித்துக்கு இரண்டாவது முறையான தியானத்தைப் பற்றியும் எடுத்துரைத்தார்.

பெருமானுடைய ஓரோர் அங்கமாக தியானிக்க வேண்டும். நம் உள்ளத்தில் பக்தி ஏற்பட்டு கனியும் வரை, நிதானமாக அந்தந்த அவயவத்தை தியானிக்க வேண்டும். திருப்பாணாழ்வார், திருவரங்கம் பெரிய பெருமாள் திருமேனியை ஒவ்வொரு பாட்டினாலும் கண்டு மனம் ஒன்றினார். 

காட்டவே கண்ட பாதகமலம் நல்லாடை உந்தி 
தேட்டரும் உதரபந்தம் திருமார்பு கண்டம் செவ்வாய்
வாட்டமில் கண்கள் மேனி முனியேறித் தனிபுகுந்து 
பாட்டினால் கண்டு வாழும் பாணர்தாள் பரவினோமே! 

– என்பது அவரைப் போற்றும் பாடல். ஒவ்வோர் அவயவமாகப் பாடிக் கொண்டே வந்தவர்! ‘என் அமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே’ என்று கூறி அவன் திருவடியில் கலந்தார். பெருமானுடைய திருமேனியின் தியானம், தாழ்ந்த உள்ளத்தில் கூட பக்தியை உண்டாக்கியே தீரும். சரீரத்தை விட வேண்டும் என்ற உறுதியுடன் இருப்பவன் பிரணாயாமம் செய்து மனதையும், மற்ற புலன்களையும் பெருமானிடத்திலேயே செலுத்த வேண்டும். இவ்வுலகிலிருந்து உடலை விடுத்துப் புறப்படுபவன், இரண்டு வழிகளில் பயணித்து இரண்டு வெவ்வேறு இடங்களை அடைகிறான். 

ஒரு மார்க்கத்துக்கு ‘தூமாதி மார்க்கம்’ என்று பெயர். அதன் மூலம் தன் கர்ம வினைக்கேற்ற உலகங்களை அடைகிறான். ஆனால், புண்ணிய பாபங்கள் தீர்ந்த பிற்பாடு மீண்டும் பூலோகத்தில் வந்து பிறப்பான். மற்றொரு மார்க்கத்துக்கு ‘அர்ச்சிராதி மார்க்கம்’ என்று பெயர். இடைவிடாமல் பகவானை உபாஸனம் செய்து, பாவ புண்ணியங்கள் அனைத்தையும் துறந்து அர்ச்சிராதி வழியாலே ஸ்ரீவைகுண்டத்தை அடைகிறான். அவன் பிறவிச் சுழலுக்குள் திரும்ப வருவதே இல்லை. 

ஏதாம் கதிம் பாகவதீம் கதோ ய:
ஸவை புநர் நேஹ விஷஜ்ஜதே (அ)ங்க
(ஸ்ரீ பாகவதம் : 2-2-31) 

– என்று உறுதிபடக் கூறுகிறார் ஸ்ரீ சுகர். சாந்தோக்ய உபநிஷத், 

‘ந ச புநராவர்த்ததே, 
ந ச புநராவர்த்ததே’

– (மீண்டும் பிறவி அடைவதில்லை, மீண்டும் பிறவி அடைவதில்லை) என்று ஒன்றுக்கு இருமுறை சபதமிட்டுச் சொல்லியபடி, வைகுண்டத்தை அடைந்தவன் திரும்ப வருவதே இல்லை. உபாஸனம், பக்தி, தியானம் – ஆகிய இச்சொற்கள் அனைத்தும் ஒரே பொருளைத்தான் குறிக்கும். இது ஒன்றுதான், பெருமானை அடைவதற்கு ஒரே வழி. சாஸ்திரங்கள், 

ந அன்ய பந்தா: அயனாய வித்யதே 

பெருமானை அடைவதற்கு பக்தியைத் தவிர, வேறு வழி கிடையாது என்று தெளிவுபடுத்துகின்றன. ஆகவே, அவனைப் பற்றி நிறையக் கேட்டு, அவன் புகழையே கீர்த்தனம் செய்து, அவனது திவ்ய திருமேனியையே இடைவிடாமல் நினைத்தால் மனிதன் மேம்படுகிறான். எவ்வளவு உண்மை! 

நாம் எதை எதைப் பற்றியோ நினைத்துக் கொண்டு, மனதை அழுக்காக்கிக் கொள்வதை விட, புனிதமான பெருமானுடைய திருமேனியை நினைத்து, மனதை மாசற்றதாக ஆக்கிக் கொள்ளலாமே! மாசற்ற மனதுதான் எவ்வளவு ஆனந்தப்படுகிறது! அதை அனுபவித்துப் பார்த்தால்தான் தெரியும். தங்கள் காதுகளாகிற பாத்திரத்தால் வாஸுதேவனுடைய கதையாகிற அமுதத்தை யாரெல்லாம் பருகுகிறார்களோ, அவர்களால் உலகமே வாழ்ந்து போகிறது. இறுதியில், அவர்களும் பெருமானுடைய திருவடிகளை அடைகிறார்கள். இப்படியாய், தியானத்துடைய இரண்டு முறைகளை சுகாசாரியர் பரீக்ஷித்துக்கு விளக்கினார். இதில் எளிதான இரண்டாவது முறையை நாம் ஒவ்வொருவரும் பின் பற்றிப் பார்க்கலாம் அல்லவா! 

(தொடரும்)

நன்றி - துக்ளக்

ஸ்ரீமத் பாகவதம் – வேளுக்குடி கிருஷ்ணன் - 25

இரண்டாவது ஸ்கந்தம் – முதல் அத்தியாயம்
பகவானை தியானம் செய்யும் முறை

ஸ்ரீ சுகாசாரியர் கூறுகிறார்: “பரீக்ஷித் மன்னா! நல்ல கேள்வி கேட்டாய். மரிக்கும் தருவாயில் இருப்பவன் எதைத் தெரிந்து கொண்டு, எதைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று நீ கேட்டதால், உனக்குக் கிடைக்கும் ஞானம் பல பேருக்கு நன்மை பயக்கப் போகிறது. மனிதர்கள் தங்கள் பிறவியின் பயனைத் தெரிந்து கொள்ளாமலேயே, நாட்களைப் பழுதே போக்குகிறார்கள். தூக்கத்தில் இரவுப் பொழுதையும், பதட்டத்தோடே பணம் சம்பாதிப்பதில் பகல் பொழுதையும், குடும்பத்தின் பாரத்தைச் சுமப்பதில் அனைத்துப் பொழுதையும் மக்கள் கழிக்கிறார்கள்” என்றார் ஸ்ரீசுகர். 

வாள்களாகி நாள்கள் செல்ல 
நோய்மை குன்றி மூப்பெய்தி 
மாளுநாளதாதலால் வணங்கி 
வாழ்த்து என் நெஞ்சமே! 
(திருச்சந்த விருத்தம் - 112) 

– என்று திருமழிசையாழ்வார் நாள்கள் நாமறியாமலேயே அறுபட்டுப் போவதை ஓர் எடுத்துக்காட்டுடன் அறிவுறுத்துகிறார். நாம் காட்டுப் பக்கம் சென்றால், பெரிய மரங்கள் அறுக்கப்படும். பெரிய ரம்பத்தோடே ஓர் ஆள் இப்புறத்திலும், மற்றோர் ஆள் அப்புறத்திலும் நின்று அறுத்துக் கொண்டிருப்பர். இடதுபுறமும், வலதுபுறமும் வாள் போய் வருவதை நாம் வேடிக்கை பார்க்க நன்றாக இருக்கும். ஆனால், சிறிது நேரத்தில் மரம் அறுபட்டுப் போவதை யார் கண்டு கொள்ளப் போகிறார்கள்? அதே போல், காலையில் சூரியன் உதிக்கிறான். மாலையில் அஸ்தமிக்கிறான். சூரியன் உதிக்கும்போது, வேலைக்குப் போய் பணம் சம்பாதிக்கப் போகிறோம் என்று மக்கள் விரைந்தோடுகிறார்கள். சூரியன் அஸ்தமித்தவுடன் சம்பாதித்ததைக் கொண்டு குடும்பத்தோடு மகிழ்ச்சியாக இருக்கப் போகிறோம் என்று மனக்கோட்டை கட்டுகிறார்கள். ஆனால், இதற்கிடையில் ‘ப்ரஹ்ம ஞானத்தைப் பெறாமல் ஒருநாள் வீணாகக் கழிந்து விட்டதே!’ என்று எவரும் துன்பப்படுவது இல்லை. காலம் பொன் போன்றது. எதைத் தொலைத்தாலும் மீட்கலாம். காலத்தைத் தொலைத்தால் மீட்க இயலுமா? ஸீதை கர்ப்பம் தரித்திருந்தபோது, ராமர் அவள் அருகில் நின்று கொண்டு ஆசையோடு பேசிக் கொண்டிருந்தார். அப்போது, 

‘ஸீதே! நான் தொலைத்த அனைத்தையும் மீட்டு விட்டேன். இழந்த அரசையும், உன்னையும் திரும்பப் பெற்றேன். ஆனால் எனக்கு ஒரு வருத்தம். உன்னோடு கூடி இராமல் பத்து மாதங்கள் பிரிந்திருந்தேனே! அந்தப் பிரிவின்போது, வீணான ஒரு நிமிடத்தைக் கூட என்னால் மீட்பதற்கு இயலாதே!’ என வருந்தினார். என்ன ஆச்சரியம்! பரம் பொருளான ராமரே கழிந்த காலத்தை மீட்க இயலாது என்று கூறினால், நம்மால் இயலுமா? காலத்தை எவ்வளவு பயனுள்ளதாக ஆக்கிக் கொள்ள வேண்டும்!

பழுதே பலபகலும் போயின
என்று அஞ்சி அழுதேன். 
(முதல் திருவந்தாதி - 16) 

– என பொய்கையாழ்வார் நமக்காகவே புலம்புகிறார். கால தத்துவம் எப்படிப் பறக்கிறது என்று வெளித் தெரியாமலேயே செலவழிந்து போகும். இப்படி, ஒரு நாளா, இரண்டு நாளா கழித்திருக்கிறோம்? இவற்றிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது, ஒரு நிமிடம் கூட வீணாக்காமல் ப்ரஹ்ம ஞானத்தைப் பெறுவதில் முயற்சியோடு இருக்க வேண்டும் – என்பதே! சுகாசாரியர் பரீக்ஷித்துக்கு மேலும் உபதேசிக்கத் தொடங்குகிறார்:

“கட்வாங்கன் என்னும் ஓர் அரசன் இருந்தான். பரீக்ஷித்தே! உனக்காவது ஏழு நாட்கள் வாழ்க்கை உள்ளது. ஆனால், அந்த அரசனின் நிலையைப் பார்! அந்த அரசன் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் நடந்த போரில் தேவர்களுக்கு உதவினான். வெற்றி பெற்றுக் கொடுத்தான். பதிலுக்கு தேவர்கள் ‘என்ன வரம் வேண்டுமோ கேள்’ என்றனர். கட்வாங்கன், ‘என்னுடைய ஆயுட்காலம் எவ்வளவு?’ என்று கேட்டான். அதிர்ச்சி தரும் பதிலைப் பெற்றான். ‘இன்னும் ஒரு முகூர்த்தம்தான் நீ வாழப் போகிறாய்?’ என்றனர் தேவர்கள். 

இதைக் கேட்ட அவன், மனம் தளராமல், உடனடியாக பூலோகத்துக்கு வந்து, செய்ய வேண்டிய அனைத்தையும் செவ்வனே செய்து, பரம்பொருளை தியானித்துக் கொண்டே உயர்ந்த கதியை அடைந்தான். ஆக, முயற்சியும் மனமும் இருக்குமானால், ஒரு மணிநேரத்தில் கூட நாம் செய்ய வேண்டியவைகள் அனைத்தையும் செய்து விடலாம். அது இல்லாவிடில், எத்தனை ஆண்டு காலமானாலும் வீணாகவே கழிப்போம். ஒருவன் முக்தி அடைய வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், அவன் புலன்களை அடக்கி, மனத்தை பரம்பொருள் மீது வைத்து ஒருமுகப்படுத்தி, ‘ஓம்’ என்னும் பிரணவத்தை முறைப்படி ஸ்வரத்துடன் தியானிக்க வேண்டும். மூன்று எழுத்துக்களைக் கொண்டது பிரணவம். ‘அ’ என்னும் எழுத்து திருமாலையும், ‘ம’ என்னும் எழுத்து ஜீவனையும் குறிக்கும். திருமாலுக்கு, ஜீவாத்மா ஆட்பட்டவன். ‘அவனுக்கு இவன் அடிமை’ என்றே பிரணவத்துக்குப் பொருள். மூன்று மாத்திரைகளுடன் கூடிய இப்பிரணவத்தை உச்சரித்துக் கொண்டு தனிமையான, சுத்தமான இடத்தில் அமர்ந்து கொண்டு, மனதை திருமாலுடைய இனிமையான திருமேனியில் செலுத்த வேண்டும். அவனுடைய திருமேனியின் ஒவ்வொரு அவயவமாக மெதுவே உள்வாங்கி நினைக்க வேண்டும். அவனுடைய திருமேனியை நினைக்க நினைக்க நம் ரஜோ குணமும், தமோ குணமும் அகன்று விடும். ஸத்வ குணம் வளரும். அதோடு தியானமும் வளரும்” என்றார் ஸ்ரீ சுகர். 

அப்போது பரீக்ஷித் கேட்டான்: “நாம் தியானம் செய்ய வேண்டியது எப்படி? அதன் வழிமுறைகளைக் கூற வேண்டும்” என்று வேண்டினான் பரீக்ஷித். சுகாசாரியர் பதில் கூறுகிறார்: “உலகத்தையே தன் திருமேனியாகக் கொண்ட பெருமானை தியானிக்க வேண்டும். இதற்கு ‘விராட் சொரூப தியானம்’ என்று பெயர். அண்ட கடாகம் முழுவதையும் தனக்குத் திருமேனியாகக் கொண்ட எம்பெருமான் ‘வைராஜன்’ என்று வழங்கப்படுகிறான். 

ஜிதாஸநோ: ஜிதச்வாஸோ ஜிதஸங்கோ ஜிதேந்த்ரிய:
ஸ்தூலே பகவதோ ரூபே மன: ஸந்தாரயேத் தியா
(ஸ்ரீபாகவதம் : 2-1-23) 

சரியான ஆசனத்தில் அமர்ந்து கொண்டு, மூச்சை அடக்கி, பற்றுதல்களை ஒழித்து, புலன்களை அடக்கி, நம் மனத்தை பெருமானுடைய திருவுருவத்தில் செலுத்த வேண்டும். நாம் கண்ணால் காணும் இத்தனை பொருட்களுமே, அவனுடைய திருவுருவமாகவே உள்ளன. ஈரேழு பதினான்கு லோகங்கள் கொண்டது ஒரு அண்டம். அதில் கீழ் லோகத்திலிருந்து தொடங்கி, இறுதியான மேல் லோகமான பிரஹ்மாவின் ஸத்ய லோகம் வரை பெருமானுடைய திருமேனியின் ஓரோர் அவயவமாகத் தியானிக்க வேண்டும். வேதனம், தியானம், மனனம், நிதித்யாஸனம் – என்று தியானத்தின் பல நிலைகள். முதலில் அவனைப் பற்றி அறிய வேண்டும். பின்னர் சிந்திக்க வேண்டும். அடுத்து, இடைவிடாது அதில் ஒன்ற வேண்டும். இறுதியாய், இந்தச் சிந்தனையில் அன்பும், பாசமும் நிறைந்திருக்க வேண்டும். இதுவே, உபாஸனம் என்றும், தியானம் என்றும் சொல்லப்படுகிறது. 

“பெருமானுடைய திருமேனியை இப்படி நாம் தியானிக்க வேண்டும். அதாவது, பாதாளத்தைத் திருவடியாகவும், ரஸாதல லோகத்தை அவன் புறங்கால்களாகவும், மஹாதலத்தை பாதங்களின் இரு பக்கங்களாகவும், தலா தலத்தை கணைக் கால்களாகவும், ஸுதலத்தை இரு முழங்கால்களாகவும், விதலம், அதலம் ஆகிய இவற்றை இரண்டு தொடைகளாகவும், பூதலத்தை இடையாகவும், ஆகாயத்தை நாபியாகவும், சொர்க்கத்தை மார்பாகவும், மஹர் லோகத்தைக் கழுத்தாகவும், ஜன லோகத்தை முகமாகவும், தபோ லோகத்தை நெற்றியாகவும், ஸத்ய லோகத்தைத் தலையாகவும் தியானிக்க வேண்டும். 

இந்திரன் முதலான தேவர்களே எம்பெருமானுக்குக் கைகள். திக்குகளே அவனுடைய காதுகள். அச்வினி தேவர்கள் அவனுடைய இரு நாசித் துவாரங்கள். சூரியனே கண் என்னும் புலன். இரவும் பகலும் இரண்டு இமைகள். வேதங்களே அவனுக்கு சிரஸாக இருக்கின்றன. யமனே கோரைப் பற்கள். பற்றுடமையே பற்கள். மக்களை மயங்கச் செய்யும் மாயையே அவருடைய புன்சிரிப்பு. காலைப் பொழுதும் மாலைப் பொழுதும் பகவான் உடுத்தும் ஆடைகளாக இருக்கின்றன. சந்திரனே அவருக்கு மனது. இப்படி நாம் அறிந்திருக்கும் அனைத்தையுமே பெருமானுடைய திருமேனியாக தியானித்தால், நாம் யோகியாகி மோட்சம் அடைவது திண்ணம். ஸத்வ குணம் வளர்ந்து முக்தி பெற விரும்புபவன் எவன்தான் பெருமானின் திருமேனியை தியானிக்க மாட்டான்?” என்றுரைத்தவர் மேலும் தொடர்கிறார்: 

(தொடரும்)

நன்றி - துக்ளக்

ஸ்ரீமத் பாகவதம் – வேளுக்குடி கிருஷ்ணன் - 24

முதல் ஸ்கந்தம் – பத்தொன்பதாவது அத்தியாயம் (தொடர்ச்சி)

பரீக்ஷித் முன் எழுந்தருளிய சுகர்

‘இன்று புனிதமான நன்னாள். என் வாழ்க்கையில் இதற்கு முன் கிட்டாத பாக்கியத்தை இன்று அடைந்தேன். நீங்கள் அனைவரும் எந்த ஒரு பயனுக்காகவும், எந்த இடத்திற்கும் செல்பவர்கள் அல்லர். அப்படிப்பட்ட உங்கள் அனைவரையும் ஒருசேர இங்கு சேவிக்கும் பாக்கியத்தை இன்று பெற்றேன். இது சுலபத்தில் கிட்டுமா? இப்போது உங்களது திருவடி பட்டபடியால் இந்த இடமே புனிதமாயிற்று. என் பாபங்களும் நீங்கின’ என்றான் பரீக்ஷித். 

மஹான்களுடைய திருவடி பட்டால், எந்தக் குறைதான் நீங்காது? இங்கு ஒரு கருத்து உற்று நோக்கத்தக்கது. நம் வீட்டிலும் பகவான் உள்ளான். உள்ளத்திலும் உள்ளான். அங்கேயே இறைவனைத் தொழுது கொள்ளலாம். ஆனால், எதற்காக கோவில்களுக்குப் போகிறோம்? அதுவும், புராதனக் கோவில்கள், பாடல் பெற்ற கோவில்கள் – என்று இவற்றை எதற்கு தேடித் தேடிப் போகிறோம்? இதன் பின்னணியில் முக்கியமான கருத்து ஒன்று உண்டு. பல ஆயிரம் வருடங்களாக இருந்து வரும் கோவிலுக்கு எத்தனை மஹான்கள் எழுந்தருளி இருப்பார்கள்! அவர்களுடைய திருவடிகள் எல்லாம் பதிந்திருக்கும் இடமன்றோ அது! அவர்களாலே இந்தப் பெருமான் எத்தனை பொங்கும் பரிவோடு வணங்கப்பட்டிருப்பார்! அவர்கள் பக்தியோடு தங்கள் தாமரைக் கண்களால் பகவானைப் பார்த்திருப்பார்கள் அல்லவா? மேலும் எத்தனை ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் இந்தக் கோவிலுக்கு வந்திருப்பார்கள்! இவர்கள் அனைவருடைய பெருமை, பாததூளி, அருள் ஆகிய அனைத்தும் புராதனக் கோவில்களில் இருக்குமே! நாம் அந்தப் பெருமானை தரிசிக்கச் செல்லும்போது, அவர்களது மன உருக்கத்தை நாமும் பெறலாமே! இது தனிமையில் இருக்கும் நம் வீட்டில் கிட்டுமா? அதற்காகத்தான் கோவில்களைத் தேடித் தேடிப் போகிறோம். இப்போது பரீக்ஷித்தும் தன்னை மஹான்கள் கண் குளிர நோக்கும் பாக்கியத்தைப் பெற்றான். 

மேலும், பரீக்ஷித் நினைக்கிறான்: ‘அரசாள்வதிலும், ஸம்ஸாரத்தில் சுகபோகங்களை அனுபவிப்பதிலும் இத்தனை நாட்களைக் கழித்து விட்டேன். கண்ணன்தான் என் பேரில் எத்தனை அருள் கொண்டவன்! இந்த இல்லற சுகத்தில் விரக்தி ஏற்பட வேண்டும் என்பதற்காகவே, முனி குமாரனை வைத்துச் சாபம் இட்டார் போலும்! இனியாவது, நான் புரிந்து கொண்டு, உடலைத் துறந்து, அவன் திருவடிகளை அடைய வேண்டும்’. 

இந்த முடிவோடு கைகளை கூப்பிக் கொண்டு மன்னன், பகவான் ஸ்ரீ கிருஷ்ணனை தியானிக்க ஆரம்பித்தான். அப்போது ஆகாயத்தில் உள்ள தேவர்கள் எல்லாம் பூமாரி பொழிந்தார்கள். இவன் உயர்ந்த கதியை அடைவதைப் பார்க்க வேண்டும் என்று ரிஷிகள் ஆசை கொண்டார்கள். அந்த சமயத்தில் மன்னனுக்கோ, பகவானுடைய கதைகளைக் கேட்க வேண்டும் – என்ற ஆசை ஏற்பட்டது. 

அதனால், ரிஷிகளைப் பார்த்து வேண்டுகிறான். “ப்ரஹ்மாவினுடைய ஸத்ய லோகத்தில் வேதங்கள் எல்லாம் உருவத்தோடே எழுந்தருளியிருப்பதுண்டு என்பர். அதே போல, வேத வித்துக்களான நீங்கள் அந்த வேதங்களே இவ்வுலகில் உருவெடுத்தாற் போல் அடியேன் முன்னே இருக்கிறீர்கள். மரிக்கும் தருவாயில் இருக்கும் ஒருத்தன் என்ன செய்ய வேண்டும்? என்ன கேட்க வேண்டும்? – என்பதைத் தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன். அவற்றை நீங்கள் என்பால் அன்பு கொண்டு கூற வேண்டும்!” என வேண்டினான். மன்னனின் வேண்டுதலைக் கேட்டு ரிஷிகள் பேசத் தொடங்கும்போதே, அங்கே மின்னல் வெட்டினாற் போல சுகாசாரியர் தோன்றினார். 

பதினாறு வயது நிரம்பியவர் அவர்! எங்கும் சுற்றித் திரிந்து பகவத் கதையை மட்டுமே பேசுபவர். மற்ற எதிலும் விருப்பம் இல்லாதவர். கிடைத்ததைக் கொண்டு திருப்தி அடைபவர். அவதூதக் கோலத்துடனும், அழகிய திருக்கண்கள், பரந்து விரிந்திருக்கும் தோள்கள், சுருண்டு இருக்கிற முடி, நீண்டு விளங்கும் திருக்கைகள், அழகான திருமுக மண்டலம், நீண்ட கழுத்து – இவை அனைத்தோடும் கூட சுகாசாரியர் அங்கு எழுந்தருளினார். அவரைக் கண்ட மாத்திரத்தில் அனைவரும் வணங்கினார்கள். சுகர் நடுவிலே வீற்றிருக்க, அவரைச் சுற்றி ரிஷிகள் எல்லாம் அமர்ந்திருந்தது, ஆகாயத்தில் நடுவில் சந்திரன், அதனைச் சுற்றி சுக்கிரன் முதலான கிரகங்கள், பலப் பல நக்ஷத்திரங்கள் விளங்குவது போல இருந்ததாம் அக்காட்சி! எப்போதும் இறைவனை சிந்தித்துக் கொண்டேயிருப்பதால் ஒளி படைத்த முகத்தோடும், தழுதழுத்த நாக்கோடும், கண்ணீர் மிளிரும் கண்களோடும், அருட்பார்வையோடும் சுகாசாரியர் விளங்குகிறார்.

பரீக்ஷித் அவரை வணங்கி, கைகளைக் கூப்பிக் கொண்டு கூறலுற்றான்: “சுகாசாரியரே! இன்று அடியேன் புனிதத் தன்மையை அடைந்தேன். எளியேன் செய்த பாவங்கள் அனைத்தும் விலகுவதை உணர்கிறேன். பாகவதர்களாகிய உங்களுடைய தொடர்பாலே எல்லா நன்மைகளும் ஏற்படும். தீமைகள் எல்லாம் விலகும். பகவான் ஸ்ரீ கிருஷ்ணனுடைய அருள் இருக்கிறபடியால்தான் இன்று அடியேன் உம்மை தரிசிக்கப் பெற்றேன். உம்முடைய பாதம் இங்கு பட்டதே அவனது திருவுள்ளத்தால்தான்! பகவானைக் கண்டால் அசுரர்கள் எப்படி பயந்து ஓடுவார்களோ, அதே போல், உம்மைக் கண்டவுடன் என் பாவங்களும் விலகி ஓடின. என்னுடைய பாட்டனார்கள் மஹாபாரதப் பெரும் போரில் ஜெயித்ததும், இன்று நீங்கள் என் இல்லத்தை நோக்கி வந்ததும் அனைத்தும் கண்ணனுடைய கருணையால்தான்!” என்றான். 

பகவான்தானே நமக்கு ஆச்சார்யனை பெற்றுக் கொடுக்கிறார்! ஆச்சார்யனைக் கொடுப்பவன் பகவான். பகவானைக் காட்டிக் கொடுப்பவன் ஆச்சார்யன். இருவரில் யார் உயர்ந்தவர்கள்? பகவான் வெள்ளியைப் போலே. ஆச்சாரியன் தங்கத்தைப் போலே. வெள்ளியைக் காட்டிலும் தங்கத்துக்குத்தானே மதிப்பு அதிகம்! மற்றொரு கோணத்தில் இருந்து நோக்கினால், வெள்ளியை ஒருத்தன் நமக்கு தானமாகக் கொடுக்கிறான். தங்கத்தை மற்றொருவன் தானமாகக் கொடுக்கிறான். இந்த இருவரில் யார் உயர்ந்தவர்கள்? தங்கத்தை தானமாகக் கொடுத்தவன்தானே உயர்ந்தவன்? வெள்ளி, பகவான். தங்கம், ஆச்சார்யன். வெள்ளியான பகவானை, ஆச்சார்யன் நமக்குக் கொடுக்கிறார். தங்கமான ஆச்சார்யனை பெருமான் நமக்குக் கொடுக்கிறார். இப்படிப் பார்த்தால் யாருக்கு மதிப்பு அதிகம்? ஆச்சார்யனையே பெற்றுக் கொடுத்த பகவானுக்குத்தானே! 

ஆக, ஒரு கோணத்தில் நம் குருவுக்கு ஏற்றம். மற்றொரு கோணத்தில் பகவானுக்கு ஏற்றம். இப்படியாக ஒருத்தருக்கு ஒருத்தர் போட்டி போட்டுக் கொண்டு நம்மைக் காக்கிறார்கள். ஆழ்வார் இவ்விடத்தில் ஒரு கருத்தைக் கூறுகிறார். ‘ஒரு தாமரை மலர வேண்டுமானால், அது எப்போதும் ஆகாயத்தில் வெகு தூரத்தில் இருக்கும் சூரியனைத்தான் எதிர்பார்க்கும். நாம் ஒரு சட்டியில் அக்னியைக் கொண்டு போய் அருகில் வைத்தால், அதன் ஒளியாலோ, வெப்பத்தாலோ தாமரை மலராது, நேர்மாறாக உலர்ந்துதான் போகும். 

செந்தழலே வந்து அழலைச் செய்திடினும் செங்கமலம்
அந்தரம்சேர் வெங்கதிரோற்கல்லால் அலராவால்!’
(பெருமாள் திருமொழி : 5-6) 

– என்கிறார் குலசேகர ஆழ்வார்! அதே சமயம் இந்தத் தாமரை மலரை குளத்து நீரிலிருந்து பிரித்து, நிலத்தில் இட்டு, சூரியனின் கதிர்கள் படும்படி வைத்தாலும், அந்த சூரியன், தாமரையை மலர்த்த மாட்டார், உலர்த்தி விடுவார். ஆக, இங்கே இரண்டு விதிகள் புலப்படுகின்றன. ஒன்று – எங்கோ இருக்கும் சூரியன்தான் தாமரையை மலர்த்த வேண்டும். மற்றொன்று - அந்தத் தாமரைக்குத் தண்ணீர் தொடர்பு இருந்தால்தான் சூரியன் மலர்த்துவார். இந்த இரண்டு விதிகளில் எது இல்லையானாலும் தாமரை மலராது. சருகாகக் கருகிப் போகும். 

இந்தக் கருத்து என்ன தெரிவிக்கிறது? தாமரை மலருவது என்பது, ஒரு ஜீவாத்மாவின் ஞானம் மலருவது போன்றது. ஒரு ஜீவனின் ஞானம் மலர, எங்கோ இருக்கும் பெருமானின் அருள்தான் உதவுகிறது. ஆனால், ஜீவாத்மா ஆச்சார்ய சம்பந்தம். அதாவது, குருவுடன் தொடர்பு என்கிற தண்ணீரில் இருக்க வேண்டும். தண்ணீரின் தொடர்பு இருந்தால்தானே தாமரையை சூரியன் மலர்த்துவார்! ஒரு ஜீவனுக்கு ஆச்சார்யனுடைய உபதேசத் தொடர்பு, அவருக்கு இவனுடைய தொண்டு – ஆகியன இருந்தால்தான் பெருமான், இவன் அறிவை மலர்த்துவார். எவ்வளவு அழகான கருத்து இது! 

“ஆகவே, சுகாசாரியரே! தாங்கள் இன்று எனக்கு அருளப் போவது கண்ணபிரானுடைய திவ்ய ஸங்கல்பத்தாலே! எனக்கோர் ஆசை உண்டு. நானோ ஏழு நாட்களில் மரிக்கப் போகிறேன். மரணமடைய வேண்டியவன் எதைக் கேட்க வேண்டும்? எதை ஜபிக்க வேண்டும்? எதைச் செய்ய வேண்டும்? எதைத் தியானிக்க வேண்டும்? எப்படி உபாஸனம் செய்ய வேண்டும்? எதை எதைக் கைவிட வேண்டும்? – என்பதைத் தெரிந்து கொள்வதில் ஆவலோடு உள்ளேன்.

யச்ச்ரோதவ்யமதோ ஜப்யம் 
யத்கர்தவ்யம் ந்ருபி: பிரபோ
ஸ்மர்தவ்யம் பஜநீயம் வா 
ப்ரூஹி யத் வா விபர்யயம்‘
(ஸ்ரீ பாக.1-19-38) 

– என்றான் பரீக்ஷித்.

இப்படி கேட்கப்பட்ட சுகாசாரியர் புன்சிரிப்பு மாறாமல் இருந்தார். பரீக்ஷித் வேண்டினான். “தேவரீர் எதையும் எதிர்பாராதவர். ஒரு வீட்டில் பிட்சை எடுக்க நின்றாலும் கூட, ஒரு மாட்டின் மடியில் ஒரு காம்பிலிருந்து ஒருமுறை பால் கறக்க எவ்வளவு வினாடிகள் எடுக்குமோ, அவ்வளவு நேரம்தான் வீட்டு வாசலில் காத்திருப்பீர்! அதற்குள் பிட்சை இடுபவர்கள் இட வேண்டும். ஒருவேளை அவர்கள் நேரம் தாழ்த்தினால், இன்று உணவே வேண்டாம் என்று பட்டினி கிடந்து விடுவீர்! இப்படி எதையும் எதிர்பார்க்காத தாங்கள், இங்கு நிலையாகத் தங்கியிருந்து, அடியேனது உய்வுக்கான அனைத்தையும் உபதேசிக்க வேண்டும்” என்று கேட்க, மேகம் இடித்தாற்போலே உயர்ந்த குரலிலே சுகாசாரியர் பேசத் தொடங்குகிறார். இங்கிருந்து நாம் இப்போது, இரண்டாவது ஸ்கந்தத்தை அடைகிறோம். 

(தொடரும்)

நன்றி - துக்ளக்