ஶ்ரீமதே இராமாநுஜாய நம:
முனியே! நான்முகனே! முக்கண் அப்பா!* என் பொல்லாக்
கனிவாய்த் தாமரைக்கண் கருமாணிக்கமே! என் கள்வா!*
தனியேன் ஆர் உயிரே! என் தலைமிசையாய் வந்திட்டு*
இனி நான் போகல் ஒட்டேன், ஒன்றும் மாயம் செய்யேல் என்னையே.
திருவாய்மொழியின் பத்தாம் பத்து பத்தாம் திருப்பதிகத்தின் முதல் பாடலான "முனியே! நான்முகனே! முக்கண் அப்பா!" என்ற திருப்பாசுரம், திராவிட வேதத்தின் யாராலும் தொட முடியாத சிகரமாகவும் ஆத்ம சமர்ப்பணத்தின் உன்னத எல்லையாகவும் போற்றப்படுகிறது.
பிறவி பெருங்கடலில் அநாதிகாலமாக மூழ்கிக் கிடந்த நம்மாழ்வாரை, எம்பெருமான் எவ்விதக் காரணமுமின்றித் தன் நிர்ஹேதுகக் கருணையினால் தேர்ந்தெடுத்து, அவருக்கு மயர்வற மதிநலம் அருளி, தன் மீதான இடைவிடாத பக்தியை வளர்த்தெடுத்தான். இந்த எல்லையற்ற பக்தியின் இறுதி நிலையே பரம பக்தி எனப்படுகிறது.
இதற்கு முந்தைய பதிகமான "சூழ் விசும்பணி முகில்" என்பதில், ஆழ்வார் தான் வைகுந்தம் புகுந்து நித்திய சூரிகளின் நடுவே பேரின்பப் பெருவாழ்வு வாழ்வது போன்றதொரு காட்சியைத் தன் ஞானக் கண்ணில் கண்டு மகிழ்ந்தார். ஆனால், அந்த தியான நிலை கலைந்து கண் திறந்து பார்த்த போது, தான் இன்னும் துன்பங்கள் நிறைந்த இந்த பூமியிலேயே இருப்பதைக் கண்டு சொல்லொணாத் துயரத்திற்கு ஆளானார்.
மேரு மலையின் உச்சியில் பேரின்பத்தை அணு அணுவாக அனுபவித்த ஒருவன், திடீரெனப் பாதாள லோகத்தில் தள்ளப்பட்டால் எத்தகைய துன்பத்தை அடைவானோ, அத்தகைய ஆற்றாமையை ஆழ்வார் அடைந்தார். இத்தகைய தவிப்பின் பின்னணியில், எம்பெருமானை நேருக்கு நேர் நோக்கித் தன் அவாவைத் தீர்க்குமாறு கதறி எழுந்த பாசுரமே "முனியே! நான்முகனே!" என்பதாகும்.
இனி பாசுரத்தைப் பார்ப்போம்,
முனியே! - பிரளய காலத்தில் நாமரூபங்கள் அற்றுக் கிடந்த ஜீவன்களைக் காக்கத் தியானிக்கும் எம்பெருமான்.
நான்முகனே! - நான்கு முகங்களையுடைய பிரமனுக்குள் அந்தர்யாமியாய் நின்று படைக்கும் தொழிலை நடத்துபவன்.
முக்கண் அப்பா! - அழிக்கும் தொழிலை செய்யும் (சைவ சித்தாந்தத்தில் இதனை ‘ஒடுக்கம்’ என்பர்) முக்கண்களையுடைய சிவனே!
என் பொல்லா கனிவாய் - எனக்குப் பற்றுதலை உண்டாக்கத் தக்க, ‘பொல்லா’ என்றால் இங்கு துளைக்கப்படாத பழுத்த கனி போன்ற சிவந்த அதரங்களை உடையவனே! அந்த திருவாயே கீதையை உபதேசித்தது; அதுவே வேதங்களின் சாரத்தை உலகிற்கு அருளியது; அதுவே அடியார்களை அழைத்து அருள் புரியும் திருவாய். அந்த திருவாயின் அழகில் மயங்கியே ஆழ்வார் 'என் பொல்லாக் கனிவாய்' என்று உருகுகிறார். இந்த பொல்லா கனிவாயை குலசேகரர் “பவளவாய்” என்கிறார்.
தாமரைக்கண் கருமாணிக்கமே! - தாமரை போன்ற திருக்கண்களையும், நீலமணி போன்ற திருமேனியையும் உடையவனே!
என் கள்வா! - என் நெஞ்சைத் திருடிய கள்வனே! அநாதிகாலமாக என்னுடைய ஆத்மாவை என்னுடையது என்று நான் நினைத்திருந்த போது, தன் அழகால் அதைத் திருடிக் கொண்டவன். ஆத்மா உண்மையில் அவனுடைய சொத்து. ஆனால் சம்சாரத்தில் மூழ்கிய ஜீவன் அதைத் தன்னுடையது என்று நினைக்கிறான். அந்தத் தவறான உரிமையை நீக்கி, தன்னுடைய பொருளைத் தானே மீட்டுக் கொண்டதால் அல்லது திருடிக் கொண்டதால் கள்வன் என்கிறார்.
தனியேன் ஆர் உயிரே! - அவனன்றி உயிர் வாழ முடியாத நிலையை அடைந்த ஆழ்வாருக்கு அவனே முழு மூச்சானவன்.
என் தலைமிசையாய் வந்திட்டு - என் தலையின் மேல் உன் திருவடிகளைச் சூட்டி வந்து, இங்கு ஆழ்வார் எம்பெருமானின் திருவடிகளைத் தன் தலையில் சூட்டிக் கொள்ள விரும்புகிறார் என்பதல்ல; எம்பெருமானே தானாக வந்து தன் திருவடிகளை ஆழ்வாரின் தலைமீது வைத்து அருள் புரிந்தான் என்று அர்த்தம்.
இனி நான் போகல் ஒட்டேன் - இனிமேல் உன்னை விட்டுப் போக அனுமதிக்க மாட்டேன். ஒருமுறை கிட்டிய பின், மீண்டும் சம்சாரத்தில் தள்ள எம்பெருமானை விட மாட்டேன் என்ற திடமான உறுதி.
ஒன்றும் மாயம் செய்யேல் என்னையே - என்னிடம் இனி எந்த ஒரு மாயத்தையும் செய்யாதே!. முன்பு உன் அழகைக் காட்டி என்னை மயக்கினாய்; பின்னர் மறைந்து என்னை வருத்தினாய். இனி அந்தப் பழைய தந்திரங்கள் வேண்டாம். என்னை விட்டுப் பிரியாமல் இருக்க வேண்டும்.
"முனியே! நான்முகனே! முக்கண் அப்பா!" என்று ஆழ்வார் பாடும்போது, சாதாரண மக்கள் மும்மூர்த்திகளும் ஒருவரே என்றோ அல்லது மூவரும் சமமானவர்கள் என்றோ தவறாகப் புரிந்து கொள்ள நேரிடுகிறது. உண்மையில் ஆழ்வார் இப்பாசுரத்தில் பிரமன், சிவன் ஆகியோரைக் குறிப்பிடுவதன் நோக்கம் அவர்களைத் தனித்தனியாகப் போற்றுவதற்காக அல்ல. படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய அனைத்துத் தொழில்களுக்கும் ஆதாரமாக நின்று, அவர்களுக்குள்ளும் அந்தர்யாமியாய் இருந்து செயல்படுத்தும் பரமபுருஷனின் மகிமையையே வெளிப்படுத்துவதாகும். ஆகவே 'நான்முகனே', 'முக்கண் அப்பா' என்ற விளிப்புகளும் இறுதியில் நாராயணனிடமே சென்று சேர்கின்றன.
இதனைப் பெரியவாச்சான் பிள்ளை மற்றும் பிற வைணவ ஆச்சாரியர்களின் வியாக்யானங்கள் பல பிரமாணங்களின் துணையுடன் விளக்கி, நாராயணனே பரம்பொருள் என்பதை நிலைநாட்டுகின்றன. உபநிடதங்களின் அந்தர்யாமி பிராமணத்தில் "ஏஷ ஸர்வபூதாந்தராத்மா" (இவனே அனைத்து ஜீவன்களின் அந்தராத்மா) என்று கூறப்பட்டுள்ளது போல, அனைத்துச் சேதன அசேதனப் பொருள்களும் எம்பெருமானுக்குச் சரீரமாகவும், எம்பெருமான் அவற்றுள் உறையும் சரீரியாகவும் விளங்குகிறான்.
ஆழ்வார், திருவாய்மொழியின் ஆறாம் பத்தில் "நீராய் நிலனாய் தீயாய் காலாய் நெடுவானாய் சீரார் சுடர்க்களிரண்டாய்ச் சிவனாய் அயனானாய்" என்று பாடுவதன் மூலமும், ஐம்பூதங்களும், சிவனும், பிரமனும் எம்பெருமானின் சரீரமே என்பதைச் சரீர-சரீரி பாவத்தின் மூலம் தெளிவுபடுத்துகிறார். பிரளய காலத்தில் நாமரூபங்கள் அற்ற நிலையில் சிருஷ்டிக்கான சிந்தனையில் ஆழ்ந்திருக்கும் எம்பெருமானை "முனி" என்றும், அவனது சரீரமாக நின்று வியஷ்டி சிருஷ்டியைச் செய்யும் பிரமனை "நான்முகன்" என்றும், அழிக்கும் தொழில் புரியும் சிவனை "முக்கண் அப்பா" என்றும் ஆழ்வார் அழைக்கிறார். இங்கு "முனி" என்ற சொல் எம்பெருமானையே குறிக்கிறது என்பதைத் திருமங்கையாழ்வாரின் பெரிய திருமொழி ஏழாம் பத்தில் “வையம் தொழப்படும் முனியை" என்ற திருநறையூர்ப் பாசுரத்தின் மூலமும் அறியலாம்.
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழியில் வறுமையால் வாடி ஒரு பிடி சோற்றுக்காக இறந்து கதறும் ஏழையின் நிலையை விளக்கும்போது ("இடும்பையால் அடர்ப்புண்டு இடுமினோ துற்றென்று இரந்தவர்க்கு..."), நம்மாழ்வார் பகவத் அனுபவத்திற்காக "முனியே!" என்று அலறித் துடித்த அதே ஏக்கத்தையே இங்கும் ஒப்பிட்டுக் காட்டுகிறார் வியாக்யானத்தில்.
ஆழ்வார் இங்கு தத்துவ ஆராய்ச்சியில் ஈடுபடவில்லை; பகவத் பிரிவால் வாடும் பரம பக்தனாக உருகுகிறார். அதனால் எம்பெருமானின் பரத்துவத்தையும், சௌலப்யத்தையும், அந்தர்யாமித்துவத்தையும் ஒரே மூச்சில் நினைத்து "முனியே!" என்று அழைக்கிறார்.
ஆழ்வாரின் ஆன்மத் தவிப்பை எம்பெருமான் போக்கிய விதத்தை விளக்கும் தத்துவ உவமையே "தீர இரும்பு உண்ட நீர்" என்பதாகும். நன்கு காய்ச்சிய செம்பழுத்த இரும்புத் தகட்டின் மீது நீரை ஊற்றினால், அந்த நீர் எவ்வாறு நொடிப்பொழுதில் உறிஞ்சப்பட்டுத் தடயமே இல்லாமல் மறைந்து விடுமோ, அவ்வாறே எம்பெருமான் ஆழ்வாரின் ஆருயிரைத் தன் எல்லையற்ற காதலால் முழுமையாகப் பருகித் தன்னுள் அடக்கிக் கொண்டான். இதனால் எம்பெருமான் ஆழ்வாருக்குத் தீராத அமுதமாக மாறுகிறான்.
இவ்வாறு ஆன்மக் கலப்பு ஏற்பட்ட பின்னர், ஆழ்வார் எம்பெருமானைப் பார்த்து "என் தலைமிசையாய் வந்திட்டு, இனி நான் போகல் ஒட்டேன்" என்று உரக்கக் கூறுகிறார். "முன்பெல்லாம் உன்னுடைய பேரழகைக் காட்டி என்னை மயக்கி, சம்சாரத்தில் தவிக்க விட்டு ஓடிவிட்டாய்; ஆனால் இப்போது என் தலையில் உன் திருவடிகளைச் சூட்டி நீயே வந்து புகுந்துவிட்டாய். இனி உன்னை ஒருபோதும் நான் போகவிட மாட்டேன்; என்னிடம் உனது மாயாஜாலங்கள் ஏதும் இனி செல்லாது" என்று ஆழ்வார் எம்பெருமானிடம் உரிமைச் சண்டை போடுகிறார்.
இந்த பாசுரத்திற்கு ஏற்றம் தந்து ஆழ்வாரின் "என் தலைமிசையாய் வந்திட்டு, இனி நான் போகல் ஒட்டேன்” என்கிற இந்த வரிகளுக்காக இன்றும் கூட ஒரு விழா நடக்கிறது.
திருவரங்கத்தில் இராப்பத்து உற்சவத்தின் இறுதி நாளில் அரங்கேறும் 'நம்மாழ்வார் திருவடி தொழல்' என்னும் வைபவம், இப்பாசுரத்தின் ஆன்மிகத் தத்துவங்களை சில நிகழ்வுகளின் வழியே நம் கண்முன்னே நிறுத்தும் உன்னத நிகழ்வாகும். இவ்விழாவின்போது அரங்கனும் ஆழ்வாரும் அர்ச்சா வடிவில் இருந்தாலும், அங்கு கூடும் அடியவர்கள் மத்தியில் ஒரு சிலிர்ப்பும் பேரமைதியும் நிலவும்.
அந்நாளில், எம்பெருமான் சந்திர புஷ்கரணியில் தீர்த்தவாரி கண்டருளி, பின்னர் திருமாமணி மண்டபத்தை அடைந்து திருமஞ்சனம் காண்கிறார். அங்கு அவருக்குப் பன்னீராயிரம் திருப்பணியாரங்கள் அமுது செய்விக்கப்படுகின்றன. அதே சமயம், நம்மாழ்வார் சம்சார பந்தங்கள் நீங்கிய ஒரு முக்தனின் கோலத்தில் எழுந்தருளுகிறார். அவர் கிரீடம் நகை முதலான எவ்வித ஆபரணங்களும், பட்டுப் பீதாம்பரமும் அணியாமல், எளிய வெள்ளை ஆடை உடுத்தி, பன்னிரு திருமண் சார்த்தி துளசி மாலையும் தரித்துச் சேவை சாதிக்கிறார்.
இரண்டு அர்ச்சகர்கள் தங்கள் திருமேனியைப் போர்வையால் போர்த்திக் கொண்டு, ஆழ்வாரைத் தங்கள் திருக்கரங்களில் ஏந்திக் கொள்ள, சத்ர சாமர மரியாதைகளுடன் அர்ச்சிராதி மார்க்கத்தை விவரிக்கும் "சூழ் விசும்பு" பதிகம் சேவிக்கப்படுகிறது. ஆழ்வார் மெதுவாக அரங்கனின் திருவடி நோக்கி அழைத்து வரப்பட்டு, அவரது திருமுகம் அரங்கனின் திருவடிகளில் பதியும்படிச் சமர்ப்பிக்கப்படுகிறார்.
இந்த உன்னத தருணத்தில், அரையர்கள் தங்களின் நெஞ்சம் உருகும் குரலில் "முனியே! நான்முகனே!" என்ற இந்த இறுதித் திருவாய்மொழிப் பதிகத்தை அதீத ஆத்ம தவிப்புடன் பாடத் தொடங்குகின்றனர். ஆழ்வார் தங்களைப் பிரிந்து பரமபதம் ஏகுகிறாரே என்ற தவிப்பில் அரையர்கள் கதறிப் பாடும்போது, அர்ச்சகர்கள் ஆழ்வாரின் திருமுடி மீது துளசி இலைகளைக் குவியலாகச் சமர்ப்பித்துக் கொண்டே இருக்கின்றனர். பதிகத்தின் முடிவில் ஆழ்வாரின் திருமேனி துளசியால் முழுமையாக மூடப்பட்டு மறைக்கப்படுகிறது. அப்போது அரங்கனிடம் பெரும் வாட்டமும், ஆழ்வாரிடம் ஒரு தெய்வீகப் பொலிவும் தென்படுவதைக் கண்டு பக்தர்கள் நெகிழ்ந்து கண்ணீர் விடுகின்றனர்.
ஆழ்வார் மோட்சம் பெற்று மறைந்தவுடன், உலக மக்கள் உய்யும் பொருட்டு அவரை மீண்டும் தங்களுக்கே தந்துவிடுமாறு அடியவர்கள் சார்பில் பட்டர் பெருமான் எம்பெருமானிடம் மன்றாடிப் பிரார்த்திக்கிறார். அடியவர்களின் பிரார்த்தனையை ஏற்று, எம்பெருமானும் "உங்களை உய்யக் கொள்ள ஆழ்வாரைத் திருப்பித் தந்தோம்! தந்தோம்! தந்தோம்!" என்று மூன்று முறை திருவாய் மலர்ந்தருளுகிறார். துளசி இலைகள் விலக்கப்பட்டு, ஆழ்வார் மீண்டும் தன் ஆஸ்தானத்தில் எழுந்தருளுகிறார்; உடனே மதுரகவியாரின் "கண்ணிநுண் சிறுத்தாம்பு" பதிகம் சேவிக்கப்பட்டு ஆராதனைகள் நடைபெறுகின்றன.
விழாவின் இறுதியில், எம்பெருமான் பனிக்காகப் போர்வை சாற்றிக் கொண்டு, விலாமிச்சை வேர் சப்பரத்தில் எழுந்தருளி, மல்லாரி ராகத்தின் கம்பீரமான இசைக்கு ஏற்ப ஒய்யார நடைபோட்டுத் தன் சந்நிதிக்குத் திரும்புகிறார். நாழி கேட்டான் வாசல் வழியே வீணையின் மெல்லிய நாதத்தைக் கேட்டவாறே அவர் கருவறைக்குள் எழுந்தருளுவதோடு இந்த மோட்ச வைபவம் நிறைவு பெறுகிறது.
"முனியே! நான்முகனே!" என்ற இப்பாசுரம் எம்பெருமானின் அந்தர்யாமித்வப் பெருமையையும், அவனது எல்லையற்ற சௌந்தர்யத்தையும் ஒரே நேர்கோட்டில் இணைத்துக் காட்டுகிறது. சம்சாரத் துயரத்தின் எல்லையில் நின்று தவித்த ஒரு ஜீவன், எம்பெருமானின் பேரன்பில் கரைந்து அவனோடு இரண்டறக் கலக்கும் உன்னத நிலையை இப்பாசுரமும், அதன் பின்னுள்ள கதையும் நமக்குத் தெளிவுபடுத்துகின்றன. பெரியவாச்சான் பிள்ளை போன்ற பெருமக்களின் வியாக்யானங்கள் வழியாக இப்பாடலின் தத்துவச் செறிவை உணரும் அதே வேளையில், திருவரங்கத்து ‘நம்மாழ்வார் திருவடி தொழல்’ வைபவத்தின் மூலம் அதன் பக்திச் சுவையையும் எளிதாகப் பருக முடிகிறது. ஆன்மா தன்னை எம்பெருமானிடம் முழுமையாக ஒப்புவிக்கும்போது, அவன் தன் மாயங்களை விடுத்துத் தானே ஓடிவந்து காப்பான் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையை இப்பாசுரம் உலகிற்கு உபதேசிக்கிறது.
திருவாய்மொழியின் இறுதிப் பதிகத்தின் முதல் பாசுரமாக அமைந்துள்ள 'முனியே! நான்முகனே!' என்பது, ஜீவனின் இறுதி இலக்கு எம்பெருமானின் திருவடிகளில் நிலையான கைங்கர்யமே என்பதை முழங்கும் பரம பக்தியின் கீதமாக விளங்குகிறது.
அதனால் தான் திருவாய்மொழி முடிவை நெருங்கும் வேளையில், ஆழ்வாரின் நாவிலிருந்து முதலில் வெளிப்படுவது தத்துவச் சொற்கள் அல்ல; 'என் கள்வா! என் ஆருயிரே!' என்ற காதல் நிறைந்த அழைப்புகளே.
நம்மாழ்வார் திருவடிகளே சரணம்.
🙏🙏🙇♂️🙇♂️
அடியேன்,
கோமான் ஶ்ரீ பாலாஜி

கருத்துரையிடுக