அரண்மனைக்குள்ளிருந்த ராவணன் வானரர்களுடைய கோஷங்களையும் ஆரவாரத்தையும் கேட்டு ஆச்சரியப்பட்டான். பக்கத்திலிருந்த அரக்கர்களுக்குச் சொன்னான்: “இதுவென்ன வியப்பாக இருக்கிறது! என்ன காரணம் இந்த வானரர்கள் இப்படிச் சந்தோஷப்படுவதற்கு? ராம லக்ஷ்மணர்கள் காயப்பட்டு, பிரக்ஞையற்றுக் கிடக்க இவர்கள் கவலைப்பட்டுக் கலவரப்பட வேண்டிய சமயத்தில் இப்படி உற்சாகமாகக் கூச்சலிடுவதின் காரணம் என்ன? ஏதோ விசேஷம் நடந்திருக்கிறது என்பது நிச்சயம். பார்த்து, வாருங்கள்!” என்றான்.
சில ராக்ஷசர்கள் மதிலின் மேல் ஏறிப் பார்த்து ராவணனிடம் திரும்பி வந்து, பயந்து பயந்து சொன்னார்கள்: “அரசனே! சுக்ரீவன் தலைமையில் வானர சேனை மிக உற்சாகமாகக் கோட்டையைத் தாக்குகிறார்கள் ராம லக்ஷ்மணர்கள் உயிருடன் இருக்கிறார்கள். கட்டப்பட்ட யானைகள் கயிற்றை அறுத்துக்கொண்டு வெளியேறிய மாதிரி ராம லக்ஷ்மணர்கள் தங்களைக் கட்டிய நாகபாசங்களையெல்லாம் அறுத்து விட்டுச் சேனையுடன் வந்திருக்கிறார்கள். இளஞ்சிங்கங்களைப் போல் திரிகிறார்கள். இந்திரஜித்து அவர்களைக் கட்டிய பாசங்கள் வீணாயின” என்றார்கள்.
ராவணனுடைய முகம் வாடிற்று. கவலை கொண்டான். “இதுவரையில் எவனும் இந்தப் பாணங்களினின்று தப்பினது கிடையாது. நீங்கள் சொல்லுவது வியப்பாக இருக்கிறது. இந்தப் பாணங்களே வீணாயின என்றால் ஆபத்துத்தான்” என்றான்.
பிறகு ரோஷம் மேலிட்டு, “ஏய் தூம்ராக்ஷனே! நீ இருக்க நான் ஏன் கவலைப்பட வேண்டும்? வேண்டிய ஆட்களைக் கூட்டிக் கொண்டு உடனே போய் இவர்களை வதம் செய்துவிட்டுத் திரும்புவாய்” என்றான்.
தூம்ராக்ஷன் மகிழ்ச்சியடைந்தான். தனக்கு இந்தக் கவுரவம் அரசன் தந்தானே என்று பெருமைப் பட்டுச் சேனையைக் கூட்டிக் கொண்டு புறப்பட்டான். கோட்டைக்கு வெளியே சென்று வானரர்களுடன் யுத்தம் செய்தான்.
ஹனுமான் தலைமையில் மேற்கு வாயிலைத் தாக்கிக் கொண்டிருந்த வானரர்களை எதிர்த்தான். அவ்விடம் நடந்த பெரும் யுத்தத்தில் இரு பக்கத்திலும் ஏராளமான உயிர்ச்சேதம் நேர்ந்தது. முடிவில் தூம்ராக்ஷன் மாருதியால் கொல்லப்பட்டான். அரக்கர்களில் சிதறியோடிக் கோட்டைக்குள் புகுந்து தப்பினர்கள் தவிரப் பெருந்தொகையினர் மாண்டார்கள்.
இந்தத் தோல்வியை அறிந்து இராவணனுக்கு அடங்காக் கோபம் மேலிட்டது. வாய் பதற வஜ்ரதம்ஷ்ட்ரனை நோக்கி, “வீர சிகாமணியே, உடனே போய், இனி தாமதம் செய்வதற்கில்லை, இந்த துஷ்டர்களை நிர்மூலம் செய்து விட்டு மறுவேலை பார்ப்பாய்!” என்று உத்தரவிட்டான்.
வஜ்ரதம்ஷ்ட்ரனும் அரசனைப் பிரதக்ஷிணம் செய்து நமஸ்கரித்து, பெருஞ்சேனையைக் கூட்டிக்கொண்டு தெற்குக் கோட்டை வாசல் வழியாகப் புறப்பட்டான். அங்கே அங்கதனை எதிர்த்தான்.
வஜ்ரதம்ஷ்ட்ரனுடைய தலைமையில் ராக்ஷசர்கள் கோரமான யுத்தம் செய்தார்கள். எண்ணற்ற வானரர்கள் மாண்டனர். ஆயினும் வானர சேனை பின் வாங்கவில்லை. பாறைகளையும் மரங்களையும் பிடுங்கியெடுத்து வீசி எண்ணற்ற அரக்கர்களைக் கொன்றார்கள். இரு தரப்பிலும் தீவிர முறையில் யுத்தம் நடந்தது. முடிவில் அங்கதனுக்கும் அரக்கத் தலைவனுக்கும் கோர யுத்தம் நெடு நேரம் நடந்தது. வஜ்ரதம்ஷ்ட்ரன் கொல்லப்பட்டான். அரக்கர் சேனை சிதறி ஓடிற்று. அங்கதனைச் சூழ்ந்து கொண்டு வானரர்கள் வீர கர்ஜனை செய்தார்கள்.
*
“யுத்தத்தில் நிபுணனாகிய அகம்பனன் பயங்கர ராக்ஷசர்களைப் பொறுக்கி அழைத்துச் சென்று, இந்த வானரப் படையையும் ராமனையும் சுக்ரீவனையும் வதம் செய்து வரச் சொல்வாய். அகம்பனனுடைய வீரமும் சாமர்த்தியமும் வீண் போகாது” என்றான் ராவணன்.
பிரஹஸ்தன் ராவணனுடைய உத்தரவுப்படி அகம்பனன் தலைமையில் சேனையை அனுப்பினான். அகம்பனன் தன் பெயருக்குத் தகுந்தபடியே அசைக்க முடியாத யுத்த சாமர்த்தியம் பெற்றவன். ஆயுதங்கள் எடுத்துப் பெரும் படையுடன் சென்றான். கெட்ட நிமித்தங்கள் தோன்றின. அதை அவனாவது அவன் படையாவது கொஞ்சம் கூட லட்சியம் செய்யவில்லை. அரக்கர்கள் செய்த சிம்மநாதம் கடலைக் கலக்கிற்று.
பெரும் போர் நடந்தது. ரத்த வெள்ளம் ஓடிற்று. ஆகாயம் அளாவச் செந்தூள் கிளம்பிற்று. இருள் மூடிக்கொண்டது. இரு கட்சியிலும் கணக்கற்றவர்கள் மாண்டார்கள். வானர வீரர்களாகிய குமுதன், நளன், மயிந்தன், துவிவிதன் இவர்கள் அகம்பனனை எதிர்த்தார்கள். அகம்பனனும் மகாவீரத்துடன் அவர்களை எதிர்த்தான்.
வானர வீரர்கள் பலமாகத் தாக்கப்பட்டு ஓட ஆரம்பித்தார்கள். அப்போது ஹனுமான் வந்து சேர்ந்தான். அகம்பனன் சரமாரி பொழிந்தான். ஹனுமான் அதை லட்சியம் செய்யாமல் ஒரு பெரும் பாறையை எடுத்துக் கரகரவென்று சுழற்றி, அகம்பனன் மேல் விட்டெறிந்தான். அரக்கன் தன் பாணங்களால் அதைத் தடுத்துப் பொடி செய்து விட்டான். ஹனுமான் தன் தேகத்தை வளர்த்துக் கொண்டு சூரியனைப்போல் கண் கூசும்படியாகப் பிரகாசித்தான். ஒரு பெரிய மரத்தைப் பிடுங்கி, வீசி எறிந்து அரக்கனைக் கொன்று விட்டான். ராக்ஷச சேனை பூகம்பத்தில் மரங்கள் அசைவதுபோல் நடுங்கி ஓடினார்கள். ஓடும்போது பின்னால் பார்த்துக் கொண்டே ஓடினார்கள். அரக்கர்களில் மாண்டவர்கள் போக எஞ்சியவர்கள் கோட்டைக்குள் புகுந்து கொண்டு தப்பினார்கள். ஹனுமானை வானரர்கள் எல்லாரும் கொண்டாடி. ஆரவாரித்தார்கள்.
*
அகம்பனன் மாண்டதையறிந்து ராவணன் முகம் சற்று வாடிற்று. கோபாவேசமாக யோசனை பண்ணினான். மறுபடியும் நகரத்தின் காப்பு நிலையைச் சுற்றிப் பார்த்து விட்டுத் திருப்தியடைந்து திரும்பினான். சேனாதிபதி பிரஹஸ்தனோடு கலந்து பேசினான்: “இந்த வானர முற்றுகையை ஒழித்துக் கட்ட வேண்டும். சேனையுடன் வெளிச் சென்று பலமான யுத்தம் செய்து இவர்களுடைய தலைவர்களை வதம் செய்தால்தான் இது முடியும். நான், கும்பகர்ணன், நீ, இந்திரஜித்து, நிகும்பன் இந்த ஐவர்களுள் ஒருவர் இந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டு சேனையுடன் கோட்டையை விட்டுப் புறம் சென்று யுத்தம் செய்ய வேண்டும். இந்த வானரர்களைக் கண்டு நாம் இவ்வளவு பயப்படுவதா? நம்முடைய ராக்ஷசர்களின் கர்ஜனையைக் கேட்டாலே இந்தப் பிராணிகள் சிதறியோடும். யுத்த முறையின் அறிவும் பயிற்சியுமில்லாத இவர்களை ஓட்டுவது ஒரு கஷ்டமல்ல.”
பிரஹஸ்தன் இதைக் கேட்டு வினயமாகப் பேசலானான்:
“நாம் முன்பு எதிர்பார்த்தபடியே எல்லாம் நேர்ந்திருக்கின்றது. சீதையைத் திருப்பித் தந்து விடுவதே சரியான முறை, க்ஷேமத்துக்கு வழி, என்று நாம் முந்தியே சொன்னோம். நான் உமக்குக் கடன் பட்டிருக்கிறேன். என் பிராணன், பொருள், குடும்பம் அனைத்தையும் யுத்தத்தில் ஆஹுதியாகப் பெய்து எரித்து விடுவதற்குச் சம்மதம், நான் சேனையுடன் செல்கிறேன்” என்றான்.
பெருஞ் சேனைக்கு உத்தர விட்டான். எல்லாம் தயாராக இருந்தது. நகரத்தில் ஹோமம், சாந்தி பிராம்மண பூஜை எல்லாம் நடத்தப்பட்டன. காற்றெல்லாம் பரிமளம் நிரம்பிற்று. பிறகு பேரிகை கோஷத்துடன் பிரஹஸ்தன் புறப்பட்டான்.
அவலக்ஷண சகுனங்கள் காணப்பட்டன. அவற்றைக் கவனியாமல் சென்றான். பிரஹஸ்தன் தலைமையில் பெருஞ்சேனை கோட்டையை விட்டுக் கிழக்கு வாயிலின் வழி வெளி வந்ததைக் கண்டதும் வானரர்கள் கர்ஜித்து யுத்தத்துக்குச் சன்னத்தமானார்கள்.
நெருப்பில் பூச்சிகள் ஆவேசமாக விழுவது போல் பிரஹஸ்தன் தலைமையில் ராக்ஷசர்கள் வானர சேனையின் மேல் பாய்ந்தார்கள்.
*
“அங்கே வருகிறானே பெருங் கூட்டத்துடன் அந்த ராக்ஷசன் யார்?” என்றான் ராமன்.
“அவன்தான் பிரஹஸ்தன். ராவணனுடைய சேனாபதி. லங்கா சேனைகளில் மூன்றில் ஒரு பாகம் இவன் ஆதிக்கம்” என்றான் விபீஷணன்.
பிறகு மலையும் மரமும் ஆயுதமாகக் கொண்ட வானரர்களுக்கும், கத்தி, சூலம்,. ஈட்டி, கோடரி, தடிகள் முதலிய ஆயுதங்களை எடுத்து வந்த ராக்ஷசப் பெருஞ்சேனைக்கும் கோர யுத்தம் நடந்தது. கல்மாரியும் சரமாரியும் பொழிந்தும் கை கலந்தும் யுத்தம் செய்தார்கள். எண்ணற்ற வானரர்களும் அரக்கர்களும் மாண்டார்கள்.
பிரஹஸ்தனுடைய வீரர்களான நராந்தகன், மகா நாதன், கும்பஸனு முதலியவர்களை துவிவிதன், துர் முகன், ஜாம்புவான் ஆகிய வீரர்கள் எதிர்த்துக் கொன்றார்கள். அதன் மேல் பிரஹஸ்தனுக்கும் நீலனுக்கும் கடும் போர் வெகு நேரம் நடந்தது.
முடிவில் பிரஹஸ்தன் ஒரு இரும்பு உலக்கையை எடுத்துக் கொண்டு நீலன் மேல் பாய்ந்தான். உடனே நீலன் ஒரு பெரிய பாறையைப் பெயர்த்தெடுத்துப் பிரஹஸ்தன் தலையை நொறுக்கி விட்டான். ராக்ஷச வீரர்கள் மூலைக்கு மூலை ஓடினார்கள். இவ்வாறு பெரும் வெற்றியடைந்த நீலன் ராம லக்ஷ்மணர்கள் இருந்த இடம் சென்று நமஸ்கரித்து நடந்த போரைப் பற்றிச்
சொன்னான். ராம லக்ஷ்மணர்களும் நீலனுடைய சௌர்யத்தை மிகவும் பாராட்டி உபசரித்தார்கள்.
மகாபாரதம், ராமாயணம் இரண்டிலுமே யுத்த காண்டக் கதை கவர்ச்சியின்றி நீடித்து ஒரே வித சித்திரம் திரும்பத் திரும்ப வரும். அதை நான் சுருக்கமாகவே சொல்லி முடிக்கிறேன். ஆயினும் சொல்லில் சுருக்கமாக இருப்பதனால் யுத்தம் சுருக்கமாக முடிந்து விட்டதாக எண்ணக் கூடாது. ஆயுதங்களும் காயங்களும் ரத்தப் பிரவாகமும் உயிர்ச் சேதமும் ரகளையும் பிரம்மாண்டமாகத்தான் இருந்தன.
*
அக்கினி புத்திரனான நீலன் பிரஹஸ்தனைக் கொன்று விட்டான் என்கிற செய்தியை யுத்தகளத்திலிருந்து சிதறி ஓடினவர்கள் அரக்க அரசனுக்குத் தெரிவித்தார்கள். அவனுடைய கோபம் பொங்கிக் கிளம்பிற்று. “இந்திரனையும் அவன் தேவப் படையையும் ஜெயிக்கவல்ல என் சேனாபதி பிரஹஸ்தன் இந்த வானரர்களால் கொல்லப்பட்டான். இனி அலட்சியம் செய்வதற்கில்லை. இந்த ராம லக்ஷ்மணர்களையும் அவர்களுடைய குரங்குப் படையையும் நிர்மூலம் செய்து விடவேண்டும்” என்று, தானே தேர் ஏறிப் பூதகணங்களால் சூழப்பட்ட ருத்திரனைப் போல் சென்றான். தகதக வென்று ஜொலித்த தேரில் நகரத்தை விட்டு வெளியேறினதும் அலைகடலைப் போல் சப்தித்துக் கொண்டு நின்ற வானரச் சேனையைக் கண்டான்.
ராவணன் தலைமையில் அரக்கர் படை வந்ததைக் கண்டதும் வானரர்கள் கையில் மரங்களும் கற்பாறைகளுமாக ஆயத்தமாக நின்றார்கள். வந்த அரக்க வீரர்களைப் பற்றி விபீஷணன் ராமனுக்கு எடுத்துச் சொன்னான், ‘அதோ அந்தத் தேரின்மேல் பால சூரியனைப் போல் பிரகாசிக்கிறானே அவனே இந்திரஜித்து’ என்று. இவ்வாறு பலரைச் சொல்லி, ‘அதோ அந்தப் பெருந்தேரில் சூரிய தேஜஸுடன் நிற்கும் தசமுகன் அவனே ராவணன்’ என்றான். ராமனும் ராவணனுடைய வடிவத்தையும் பிரகாசத்தையும் கண்டு வியந்தான். “மகா வீரன் மகா பலவான் என்பதில் சந்தேகமில்லை. பாபியான இவனை ஒழிப்பேன்” என்றான்.
ராவணன் பல வானரர்களைத் தாக்கி, அவர்களை வீழ்த்தினான். நீலன் ராவணனைப் பலவாறு எதிர்த்து இம்சை செய்தான். ராவணனும் முடிவில் அவனை அக்கினி அஸ்திரம் செலுத்தி நினைவு இழந்து விழச் செய்தான். ஹனுமான் ராவணனைப் பலமாக எதிர்த்தான். பெரிய முஷ்டி யுத்தம் நடந்தது. ராவணன் அசையவில்லை. எதிர்த்த வானர வீரர்கள் ராவணனுடைய பாணங்களால் அடிபட்டுப் பிரக்ஞை இழந்து விழுந்தார்கள்.
பிறகு லக்ஷ்மணனுக்கும் ராவணனுக்கும் போர் நடந்தது. லக்ஷ்மணனும் நினைவு அற்று விழுந்தான். இதைக் கண்ட ஹனுமான் இடையில் புகுந்து லக்ஷ்மணனை எடுத்து ராமனிடம் கொண்டு போய்ச் சேர்த்து விட்டான். பிறகு ராமனே ஹனுமானுடைய தோளின் மேல் ஏறி ராவணனுடன் யுத்தம் செய்தான். ராக்ஷசேந்திரன் பலமாகத் தாக்கப்பட்டான். கிரீடம் உடைந்து, தேரிழந்து, ஆயுதம் இழந்து, ஒன்றும் செய்யமுடியாத நிலையில் நின்றான்.
“இன்று தப்பிப் போ. நன்றாகவே யுத்தம் செய்தாய். திரும்பிப் போய் இளைப்பாறி, நாளை ஆயுதம் எடுத்துக் கொண்டு மறுபடியும், வா” என்று ராமசந்திரன் சொன்னான். ராவணனும் அவமானப்பட்டு நகரத்துக்குள் திரும்பிச் சென்றான்.
கருத்துரையிடுக