நாம் அவன் இவன் உவன், அவள் இவள் உவள் எவள்*
தாம் அவர் இவர் உவர், அது இது உது எது*
வீம் அவை இவை உவை, அவை நலம், தீங்கு அவை*
ஆம் அவை, ஆயவை, ஆய் நின்ற அவரே.
நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழியின் முதல் பத்து, முதல் பதிகத்தில் வரும் இந்த நான்காம் பாசுரம், “எல்லாம் அவன்” (ஸர்வமும் எம்பெருமான்) என்ற உயரிய தத்துவத்தை மிக எளிமையாகவும் அதே சமயம் ஆழமாகவும் விளக்குகிறது. இப்பாசுரம் சற்றே கடினமானது இப்பாசுரத்தில் உள்ள ஒவ்வொரு வார்த்தையின் அர்த்தங்கள் சில பக்கங்கள் வரும். இயன்றவரை சுருக்கமாக, அடியேன் படித்து அறிந்த அளவில் இங்கு தருகிறேன். தவறிருந்தால் திருத்தவும்.
இவ்வுலகில் நாம் காணப்படும் பொருட்கள் அனைத்தும் இறைவனுக்குச் சொந்தமானவை; இன்னும் சொல்லப்போனால், அவை அவனால் படைக்கப்பட்டவை மட்டுமல்ல, அவனது சரீரமாக (உடலாக) உள்ளவை. ஒரு சிறிய எறும்பு முதல் பிரம்மாண்டமான அண்டவெளிகள் வரை அனைத்தும் அவனது கட்டுப்பாட்டிலும், அவனது ஆதார இருப்பிலும் அடங்கியவை.
ஆழ்வார் இந்தப் பாசுரத்தை “நாம்” என்று ஏன் தொடங்குகிறார்? இதற்கு வியாக்யானத்தில், உலகில் எந்தப் பொருளைப் பற்றிப் பேசினாலும், பேசுபவன் தன்னிடமிருந்தே தொடங்க வேண்டும். நம்மை மையமாக வைத்தே மற்றவை அருகிலா, தூரத்திலா அல்லது இடைப்பட்ட நிலையிலா உள்ளன என்று நாம் தீர்மானிக்கிறோம் என்று அருளியுள்ளனர் பெரியோர்.
ஆழ்வார் “நாம்” என்று தொடங்கி, தன்னையும் நம்மையும் உட்படுத்தி அனைத்து ஜீவராசிகளையும் குறிக்கிறார். பின்னர் “தாம்” என்று கூறி, உயர்ந்த நிலைகளில் கருதப்படும் அனைத்து தெய்வங்களையும் உள்ளடக்கி, இவ்வாறு எத்தனை வகையாகப் பிரித்துப் பார்த்தாலும், அவை அனைத்தும் ஒரே பரம்பொருளான நாராயணனுடைய வெளிப்பாடுகளே என்று இறுதியில் உறுதிப்படுத்துகிறார்.
அவன் / அவள் / அது — தொலைவில் இருப்பவை (தூரத்தில்)
இவன் / இவள் / இது — அருகில் இருப்பவை
உவன் / உவள் / உது — இடைப்பட்ட தூரத்தில் இருப்பவை
(இந்த ‘உ’ என்ற எழுத்து, இடைநிலையைச் சுட்டும் தமிழின் சிறப்பான சுட்டெழுத்தாகும். தற்போது வழக்கத்திலில்லை)
இவ்வாறு தூரம், திசை என எந்த வேறுபாடாக இருந்தாலும், அத்தனைப் பொருட்களும் எம்பெருமானது சொரூபமே என்கிறார் ஆழ்வார். இது எதற்காகவென்றால் எம்பெருமானை தூரத்தால் அளவிட முடியாததால், இவ்வாறு அனைத்தையும் உள்ளடக்கி ஆழ்வார் அருளியுள்ளார்.
இந்தப் பாசுரத்தில் உலகில் உள்ள அனைத்தையும் தொல்காப்பியர் கூறும் உயர்திணை, அஃறிணை பகுப்பைப் போல ஆழ்வார் பிரிக்கும் விதமும் வியப்புக்குரியது. ஆழ்வார் அதோடு ஒருமை பன்மைத் தன்மையையும் சேர்த்துக் கொண்டார்.
ஆண், பெண், அலி என எவ்வித பாலின வேறுபாடாக இருந்தாலும், அந்த உயிர்கள் அனைத்தும் அவன் படைப்புகள் மட்டுமல்ல — எம்பெருமானது சரீரமே.
மனிதர்கள் மட்டுமல்ல; விலங்குகள், பறவைகள், மற்றும் அனைத்து உயிரற்ற ஜடப் பொருட்களும் அவரே. கல்லும் மண்ணும் போன்ற ஜடப் பொருட்களும் அவரே.
இவை மட்டும்தானா, அனைத்து காலமும் அவர் தான். இதைப் பாசுரத்தில், “ஆம் அவை” — எதிர்காலம், “ஆயவை” — கடந்த காலம், “ஆய்நின்ற” — நிகழ்காலம் என ஆழ்வார் கடைசி வரிகளில் அருளியுள்ளார்.
இவ்வாறு முக்காலங்களிலும் உள்ள அனைத்தும் அவனே.
இங்கே “நலம்” மற்றும் “தீங்கு” பற்றிய குறிப்பும் மிகவும் முக்கியமானது. உலகில் நாம் நல்லது, கெட்டது என்று கருதும் அனைத்தும் அவனது ஆணைக்கு உட்பட்டவை. ஆனால், அவன் அவற்றின் காரணமாக அல்ல; அவற்றை நிகழச் செய்பவன் (நியந்தா). அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்பதே இங்கே வலியுறுத்தப்படுகிறது. இதனால் ஒரு சந்தேகம் எழலாம், “அனைத்தும் அவனே என்றால், உலகில் நடக்கும் அனைத்து தவறுகளுக்கும் காரணம் அவன்தானா?”
இதற்கு வியாக்யானத்தில் தரும் விளக்கம் அழகானது. எவ்வாறு ஒரு ஆன்மா (உயிர்) ஒரு உடலுக்குள் புகுந்து அதை இயக்குகிறதோ, அது அந்த ஆன்மாவிற்குரிய கர்மப் பலன்களை அனுபவிக்கிறதோ, அதேபோல் இந்தப் பிரபஞ்சமே இறைவனுக்கு ஒரு “சரீரம்” (உடல்), அவன் அதன் “சரீரி” (ஆதார ஆன்மா).
உடலில் ஏற்படும் பாதிப்பு அல்லது நோய், அதனை ஆதரித்து உள் நிற்கும் ஆன்மாவைத் தொடாதது போல, உலகில் நிகழும் மாற்றங்களும் அழிவுகளும் (‘வீம் அவை’) இந்த பிரபஞ்சத்திற்கே உரியவை; அதன் ஆதாரமாக இருக்கும் இறைவனுக்கு எந்தக் குறையும் ஏற்படாது. அவன் அதற்கான நேரடி காரணம் அல்ல; அனைத்தையும் நியமித்து நடத்துபவன் (நியந்தா).
“எல்லாமே அவன்” என்று உணரும் பார்வை வந்தவனுக்கு, வெறுப்பும் வேறுபாடும் நிலைக்காது. உருவங்கள் மாறினாலும், அவற்றில் நிறைந்திருக்கும் இறைமை ஒன்றே. அந்த ஒருமை உண்மையையே “ஆய்நின்ற அவரே” என்று நம்மாழ்வார் உறுதியாகப் பறைசாற்றுகிறார்.
ஒரு சிறப்பு விஷயம், இந்தப் பாசுரத்தில் வரும் ‘உவன்’, ‘உவள்’, ‘உது’ போன்ற சொற்கள் தமிழுக்கே உரிய அரிய சுட்டுச் சொற்கள். இவை இன்றைய வழக்கில் குறைந்தாலும், ஆழ்வார் பாசுரங்கள் அந்த ஈரத்தமிழின் செழுமையையும் மணத்தையும் இன்றும் உயிர்ப்புடன் காக்கின்றன.
நம்மாழ்வார் திருவடிகளே சரணம்.

கருத்துரையிடுக