மயக்கும் தமிழ் - 28 - ஆழ்வார்க்கடியான் மை.பா.நாராயணன்

ஆண்டளக்கும் ஐயனே! ஆதனூர நாயகனே!

என்னை மனம் கவர்ந்த ஈசனை வானவர் தம்
முன்னவனை முழிக்களத்து விளக்கினை
அன்னவனை ஆதனூர் ஆண்டளக்கும் ஐயனை

- திருமங்கையாழ்வாரின் பெரிய திருமடல்

தலையின்கீழ் மரக்காலை வைத்துக் கொண்டு கையிலே ஓலை எழுத்தாணி சகிதம் படுத்துக் கொண்டிருக்கும் பெருமாளை நீங்கள் பார்க்க வேண்டுமா? உடனே, ஆதனூர் செல்லத் தயாராகுங்கள் அது என்ன ஆதனூர்? மகாவிஷ்ணுவின் பாதகமலங்களில் காமதேனு தவம் இருந்த ஊர் இது. ஆ என்றால் பசு என்று அர்த்தம். ஆவாகிய பசு தவமிருந்தால் ஆ+தன்+ஊர் என்பது ஆதனூர் ஆயிற்று. நூற்றி எட்டு திவ்ய தேசமும் மங்களகரமானவைதான். அதிலும்,  இந்த ஆதனூர் இருக்கிறதே இங்கே சயனித்திருக்கும் எம்பெருமான் ஆண்டளக்கும் ஐயன் என்ன அழகு கொள்ளை அழகு என்பார்களே அப்பப்பா... காணக் கண்கோடி வேண்டும். இரண்டு கண்களால் மட்டும் காணக்கூடிய பார்க்கக்கூடிய பெருமாளா இவர். இவரைப் பார்த்த மாத்திரத்தில் நம் இதயத்தாமரைகள் விரியுமே?

எம்பெருமானின் முகத்தில் என்ன வசீகரம் என்ன தேஜஸ் அடடா... தயவுசெய்து இந்தப் பெருமாளை தரிசிக்கச் சென்று வாருங்கள். கும்பகோணம் - சுவாமிமலையில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது இந்த அழகிய சிற்றூர்! மூலவர் ஆண்டளக்கும் ஐயன் கிழக்கும் நோக்கி புஜங்க சயனம். தாயார் ரங்கநாயகி. ஆதனூரை ஆதிரங்கேஸ்வரம் என்று பிரமாண்ட புராணம் சொல்கிறது. பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படுகிற திருவரங்கத்திற்கும் இந்த ஆதனூருக்கும் நெருங்கிய ஒற்றுமை இருக்கிறது. ஸ்ரீரங்கத்திற்கு இருபுறமும் காவிரியும் கொள்ளிடமும் ஓடுவதுபோல் இத்தலத்திற்கு அருகாமையிலும் காவிரியும் கொள்ளிடமும் பாய்கிறது.


திருவரங்கத்திற்கும் ஆதனூருக்கும் இன்னொரு பெரிய ஒற்றுமை என்ன தெரியுமா? இரண்டு தூண்கள்! அது என்ன இரண்டு தூண்கள். பரமபதத்தில் எம்பெருமான் வீற்றிருந்த திருக்கோலத்தில் உள்ளார். அங்கு விரஜா நதி உள்ளது. அங்கே எம்பெருமானுக்கு முன்பாக இரண்டு தூண்கள் இருக்கின்றன. அந்தத் தூணருகே நமது ஆத்மா சென்றால் அதன் பலம் பன்மடங்கு  பெருகி விடுகிறது. அதேபோல் ஸ்ரீரங்கத்திலும் இந்தத் திருஆதனூரிலும் ஸ்வாமி சந்நதி முன் இரண்டு தூண்கள் இருக்கின்றன. நூற்றியெட்டு திவ்ய தேசங்களில் இந்த இரண்டு திவ்ய தேசத்தில்தான் இரண்டு தூண்கள் உள்ளன. இந்த இரண்டு தூண்களையும் மணத்தூண் என்று சொல்வார்கள். இந்த மானிட சரீரத்துடன் நாம் தழுவிக்கொள்வோமாயின் நாம் எமனுலகம் செல்வதிலிருந்து தப்பிக்க முடியும். இது சத்தியம். ஏனென்றால் காலம் காலமாக இருந்து வருகிற கோடிக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கை.

சரபோஜி மன்னருக்கும் திரு ஆதனூருக்கும் அநேக தொடர்புகள் இருந்ததை கல்வெட்டுக்களும் ஓலைச்சுவடிகளும் பறைசாற்றுகின்றன!

இந்த ஆண்டளக்கும் ஐயனை சாதாரணமாக நினைத்து விடாதீர்கள். காஷ்மீரத்து ராஜாவின் புதல்விக்கு பேய் அதாவது பிரம்ம ராட்சஸு பிடித்துவிட்டது. எவ்வளவோ வைத்தியம், மருத்துவம் பார்த்தும் குணமாகவில்லை. மன்னன் செய்வதறியாது பரிதவித்த நிலையில் மன்னனுக்கு கனவில் இப்பெருமான் தோன்றினார். மன்னன் இத்திருக்கோயிலை செப்பனிடவும் தன் புதல்வியின் நோய் தீர்ந்ததாகவும் ஐதீகம்!

திருமங்கையாழ்வார் மட்டும் இப்பெருமாளை மங்களாசாசனம் செய்திருக்கிறார். அதுவும் எப்படி? திருமுழிக்களத்து எம்பெருமானை சொல்லிவிட்டு இப்பெருமாளை ஒரே வரியில் நினைவு கூர்ந்திருக்கிறார். ஒரு வரியில் மங்களாசாசனம் செய்தாலும் இந்தப் பெருமான் பேரழகு வாய்ந்தவராக இருக்கிறார். நம் தேவைக்கேற்ப ஆண்டளக்கும் ஐயனாக வாரி வழங்கும் வள்ளலாகத் திகழ்கிறார். ஆதனூர் ஆண்டளக்கும் ஐயன் திருமங்கையாழ்வாரின் மனம் கவர்ந்த ஈசனாகத் திகழ்கிறார் என்றால் எம்பெருமான் ஆழ்வாரையே ஆட்கொண்டார் என்றால் சாதாரண மானிடப் பிரஜையாக விளங்குகிற நமக்கு அருள்மழை பொழிய மாட்டாரா என்ன?

காமதேனுவுக்கும் ப்ருகு முனிவருக்கும் அக்னி பகவானுக்கும் திருமங்கையாழ்வாருக்கும் காட்சி கொடுத்தவர் நமக்கு மட்டும் தரமாட்டாரா என்ன? இறைவனை ஆழ்மனதில் இருந்து தரிசிக்க வேண்டும் என்கிறார் பொய்கை ஆழ்வார். அவர் படைத்த முதல் திருவந்தாதியில் இருந்து ஓர் அருமையான பாசுரத்தைப் பார்க்கலாம்.

தொழுது மலர்கொண்டு, தூபம் கை ஏந்தி
எழுதும் எழு வாரி நெஞ்சே பழுது இன்றி
மந்திரங்கள் கற்பனவும் மால் அடியே 
கைதொழுவான்;
அந்தரம் ஒன்று இல்லை, அடை.

பகவான் மேல் பற்று கொள்ளுமாறு தன் நெஞ்சுக்குச் சொல்லும் அறிவுரையாக அற்புதமாக அமைந்திருக்கிறது இந்தப் பாசுரம்.

‘‘நான் சொன்னபடி கேட்டு என்னோடு வருகின்ற நெஞ்சே, நீ வாழ்க! உனக்கு நன்மை உண்டாகட்டும் என்கிறார்! ஏன் அப்படிச் சொல்கிறார் தெரியுமா? நம்மில் பலருக்கும் உடல் வேறாகவும் உள்ளம் மாறுபட்டதாகவும் இருக்கிறது. எத்தனைபேர் மனம் ஒருமுகப்பட நினைக்கிறோம். மனம் எங்கோ அலை பாய்ந்த வண்ணம் இருக்கும். நாம் கடலூரில் இருப்போம். மனம் கலிபோர்னியாவில் இருக்கும். அப்படி இல்லாமல் அது கடவுளிடம் சரணடைய வேண்டும் என்கிறார் பொய்கை ஆழ்வார்.

பாசுரத்தில் இடையே அற்புதமாக ஒரு வரி வருகிறது.

‘‘மால் அடியே கைதொழுவான்’’

நமக்கு இறுதி எஜமானர் சாட்சாத் பரந்தாமன்தானே! அதனால்தான் ஆழ்வார் என்ன சொல்கிறார் தெரியுமா? பூவை கையில் கொண்டு தூபத்தையும் ஏந்திப் பெருமானைத் தொழுவோம். அதாவது தரிசிப்போம். அதனால் நாம் உய்ந்து போவோம். அவன் எப்படிப்பட்டவன் தெரியுமா? நம் வினைகளையும் துன்பத்தையும் வேரோடும் வேரடி மண்ணோடும் பிடுங்கி எறியக்கூடியவன். அதற்கு நாம் என்ன வேண்டும் தெரியுமா? தேவாரப் பதிகத்தில் நாயன்மார்கள் சொன்னதுபோல்...

ஒன்றியிருந்து நினைமின்கள்! மனம் ஒன்றியிருக்க வேண்டும். அப்படிப் பணிந்து வழிபட்டால் என்ன பலன் கிடைக்கும். அதற்கும் சுந்தரமூர்த்தி சுவாமிகள் அற்புதமாக வழி வகை சொல்கிறார். 

‘‘பணிவார் வினைகெடுக்கும் வேதனை
வேத வேள்வியர் வணங்கும் விமலனை’’

எவன் ஒருவன் தன்னை மறந்து அந்த தயாபரனிடம் மனத்தால் சரணடைகிறானோ அவனே மேலோன் என்கிறார்.  ஆழ்வார்களும் நாயன்மார்களும் இன்னும் உள்ள மிகப்பெரிய மகானுபாவர்களும் இறைவனிடம் உடலால் உள்ளத்தால் நெக்குருகிப் போயிருக்கிறார்கள். அதற்கு தங்களை தகுதி படைத்தவர்களாக ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள்! அப்படிப்பட்ட தகுதியைப் பெற நாமும் முயல்வோம். ஆழ்வார்கள் வழியில் ஆண்டவனை தரிசிக்க பயணப்படுவோம்.

நன்றி - தினகரன்
கருத்துரையிடுக (0)
புதியது பழையவை