தசம (பத்தாவது) ஸ்கந்தம் – பூர்வபாகம் – நாற்பத்தாறாவது அத்தியாயம்
(ஸ்ரீக்ருஷ்ணன் உத்தவனைக் கோகுலத்திற்கு அனுப்பி நந்தகோப, யசோதைகளையும், கோபிகைகளையும் ஸமாதானப்படுத்துதல்)
ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- மதுரையில் உத்தவனென்பவன் ஒருவன் உளன். அவன் வ்ருஷ்ணிகளில் (ஸ்ரீக்ருஷ்ணன் அவதரித்த குலம்) சிறந்தவன்; ஸ்ரீக்ருஷ்ணனுக்கு ப்ரியமுள்ள நண்பனும், மந்திரியுமாயிருப்பவன்; ப்ருஹஸ்பதிக்கு நேரே சிஷ்யன்; இயற்கையாகவே புத்தியுடையவர்களில் சிறந்தவன்; மிகவும் புகழத்தகுந்தவன்; ஸ்ரீக்ருஷ்ணனிடத்தில் மாறாத பக்தியுடையவன். தன்னை சரணம் அடைந்தவர்களின் மன வருத்தங்களைப் போக்கும் தன்மையுள்ள ஸ்ரீக்ருஷ்ணன், அவனை ஒருகால் ரஹஸ்யத்தில் அழைத்து, தன் கையினால் அவன் கையைப் பிடித்துக் கொண்டு இவ்வாறு மொழிந்தான்.
ஸ்ரீக்ருஷ்ணன் சொல்லுகிறான்:- நல்லியற்கையுடையவனே! உத்தவா! நீ கோகுலத்திற்குப் போய் எங்கள் தாய் தந்தைகளாகிய நந்தகோப, யசோதைகளுக்கும், கோபிகைகளுக்கும் ப்ரீதியை விளைப்பாயாக. என்னைப் பிரிந்தமையால் உண்டான அவர்களுடைய மன வருத்தத்தை என் வார்த்தைகளால் போக்குவாயாக. கோபிகைகள் என்னிடத்திலேயே நிலைநின்ற மனமுடையவர்கள்; என்னையே ப்ராணனாக (உயிராக) உடையவர்கள்; எனக்காகத் தேஹ (உடலைப்) போஷணத்தைத் (பராமரிப்பதைத்) துறந்தவர்கள்; மன இரக்கமுடையவனும், மிகுந்த அன்பனும், அந்தராத்மாவுமாகிய என்னையே எப்பொழுதும் மனத்தினால் சரணம் அடைந்திருப்பவர்கள். “எவர்கள் எனக்காக லோக தர்மங்களையெல்லாம் துறந்திருப்பவர்களோ, அவர்களை நான் போஷிப்பது வழக்கமாகையால், நீ கோகுலத்திற்குச் சென்று, என்னுடைய வார்த்தைகளால் கோபிகைகளின் மன வருத்தத்தைப் போக்குவாயாக.”
உத்தவனே! அந்தக் கோபிகைகள், ப்ரீதிக்கிடமானவைகள் எல்லாவற்றிலும் மிகவும் ப்ரீதிக்கிடமாகிய நான் தூரத்தில் இருப்பினும், என்னையே நினைத்துக் கொண்டு, என்னைப் பிரிந்திருக்கையால் என்னைக் கண்டு அனுபவிக்க வேணுமென்னும் பேராவலுற்று, அதனால் தழதழத்து, மெய்மறந்து, மோஹித்திருப்பார்கள். நான் கோகுலத்தினின்று புறப்பட்டு வரும்பொழுது, “சீக்கிரத்தில் திரும்பி வருகிறேன்” என்று சொல்லியனுப்பின வார்த்தைகளை நம்பி, என்னுடையவர்களான கோபிகைகள், என்னிடத்தில் மனத்தை நிலை நிறுத்தி, விரஹ தாபத்தினால் தஹிக்கப்பட்டவர்களாகவே மிகவும் வருத்தத்துடன் பெரும்பாலும் ப்ராணன்களைத் (உயிரைத்) தரித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆகையால், அவர்களை அவச்யம் ஸமாதானப்படுத்த வேண்டும்.