கடல் போன்ற பெரும் வானர சேனையைக் கொண்டு ராமன் லங்கையை நான்கு பக்கங்களிலும் சூழ்ந்து முற்றுகையிட்டிருப்பதை ராவணனுக்கு அவனுடைய ஆட்கள் சொன்னார்கள். அவனுக்குக் கோபம் மேலிட்டு மாளிகை ஏறிப் பார்த்தான். அவர்கள் சொன்ன வண்ணம் நான்கு பக்கங்களிலும் மரங்களையும் கற்பாறைகளையும் எடுத்துக் கொண்டு சூழ்ந்து நின்ற வானரர்களைப் பார்த்தான். இவர்களை எப்படி அழிப்பது என்று ஆலோசித்தான்.
ராமனும் அச்சமயம் ராக்ஷஸப் படையால் காக்கப்பட்ட லங்கா நகரத்தைப் பார்த்தான். “இந்த மதிலுக்குள்ளே அல்லவா சீதை சிறைப்பட்டு வாடி வருகிறாள்” என்று எண்ணிக் கோபம் மேலிட்டு வானரர் படைக்கு உத்தரவிட்டான். “கோட்டையைத் தாக்குங்கள்! அரக்கர்களைக் கொல்லுங்கள்! தயங்க வேண்டாம்!” என்றான். அவர்களும் உற்சாகமாக யுத்தம் ஆரம்பித்தார்கள்.
“வானர ராஜனுக்கு ஜெய மங்களம்! ராம லக்ஷ்மணர்களுக்கு வெற்றி! வீழ்க அரக்கர்கள்!” என்று பெருங்கோஷம் செய்து சிலர் மலைகளை உடைத்துப் பெரும் பெரும் பாறைகளை எடுத்து வீசி மதிலைத் தாக்கினார்கள். சிலர் பெரிய மரங்களை வேரோடு பிடுங்கி எடுத்து, அரக்கர்களைத் தாக்கினார்கள். மதிலையும் மதில் வாயிலையும் தாக்கித் தகர்க்க ஆரம்பித்தார்கள்.
இதைக் கண்டு ராவணன் ஒரு பெரும் படையை ஏவினான். “உடனே வெளியில் சென்று இந்த வானரர்களை வதம் செய்யுங்கள்” என்று அவன் உத்தரவிட்டதும் பேரிகை, சங்கநாதங்களும் ராக்ஷச வீரர்களுடைய கோஷங்களும் சமுத்திரத்தைப் போல் கிளம்பின. அரக்கப் படையாளர் சகல ஆயுதங்களுடனும் நகரத்திலிருந்து வெளியே சென்று வானரர்களுடன் கோர யுத்தம் நடத்தினார்கள்.
வானரர்களும் தங்கள் ஆயுதங்களாகிய பாறாங்கற்களும் மரங்களும் நகங்களும் முஷ்டிகளும் உபயோகித்து ராக்ஷஸர்களை எதிர்த்தார்கள். இரு பக்கத்திலும் ஆயிரக்கணக்கான பிரேதங்கள் விழுந்தன. பூமி முழுவதும் ரத்தச் சேறும் வெட்டப்பட்ட அவயவங்களும் மாமிசத் துண்டங்களுமாகக் கோர யுத்தம் நடந்தது.
இதைத் தவிர வீரர்களோடு வீரர்கள் கை கலந்து த்வந்த யுத்தங்களும் நடைபெற்றன. அங்கதனும் இந்திரஜித்தும் ருத்திரனையும் யமனையும் போல் தனிச் சண்டையிட்டார்கள். ப்ரஜங்கன் என்ற ராக்ஷசனுக்கும் விபீஷணனுடைய மந்திரியான சம்பாதிக்கும் யுத்தம் நடந்தது. ஜம்புமாலியும் ஹனுமானும் ஒருவரையொருவர் எதிர்த்தார்கள். அப்படியே நீலனும் நிகும்பனும், லக்ஷ்மணனும் விரூபாக்ஷணனும் இன்னும் பலர் இம்மாதிரித் தனிச் சண்டை செய்தார்கள்.
இந்திரஜித்தினுடைய தேரும் குதிரைகளும் நாசமாயின. அங்கதனும் இந்திரஜித்தின் கதாயுதத்தால் அடிபட்டான். ஜம்புமாலி ஹனுமானைச் சக்தியால் அடித்தான். மாருதி ஜம்புமாலியின் ரதத்தைப் பொடியாக்கினான். அரக்கர்கள் அம்புகள் எய்து ராமனை எதிர்த்தார்கள். ராமனும் பல பல அரக்கர்களைத் தன் பாணங்களால் கொன்றான்.
வித்யுன்மாலி சுஷேணன் பேரில் பாணங்கள் விட்டான். சுஷேணன் ஒரு பெரிய பாறையை எடுத்து அரக்கனுடைய ரதத்தைத் தூளாக்கினான். வித்யுன்மாலி கதாயுதமெடுத்துக்கொண்டு பூமியில் குதித்து சுஷேணனைத் தாக்கினான். சுஷேணன் ஒரு பெரிய கல்லை எடுத்து அரக்கனையடித்து நசுக்கிக் கொன்றான். இப்படியே இன்னும் பல வீரர்கள் யுத்தம் செய்து. பலர் மாண்டார்கள். பகல் முழுதும் சண்டை நடந்தது. ராத்திரியாயினும் நிறுத்தாமல் அரக்கர்கள் போர் நடத்தினார்கள்.
ராத்திரி யுத்தம் வெகு கோரமாக நடந்தது. ரத்தம் ஆறாகப் பெருகிற்று. இரு பக்கத்திலும் பலர்
மாண்டார்கள்.
இந்திரஜித்தை அங்கதன் தாக்கினான். அரக்கனுடைய குதிரைகளையும் சாரதியையும் கொன்று தேரையும் பொடியாக்கினான். வானரர்கள் அங்கதனுடைய சாமர்த்தியத்தைக் கண்டு, உற்சாகமடைந்து ஜெய கோஷம் செய்தார்கள். வானர யுவராஜனுடைய தைரியத்தையும் பலத்தையும் சாமர்த்தியத்தையும் பார்த்துச் சேனையிலிருந்த வீரர்கள் அனைவரும் புகழ்ந்தார்கள். தேரையிழந்த இந்திரஜித்துக்குக் கோபாவேசமாகி, தன் மாய வித்தைகளை உபயோகிக்க ஆரம்பித்தான்.
மந்திரத்தினால் யாருக்கும் காணப்படாமல் மறைந்து நின்று யுத்தம் செய்தான். ராம லக்ஷ்மணர்கள் மேல் பலவித பாணங்களைப் பிரயோகித்து அவர்களை உபத்திரவப்படுத்தினான். பல வீரர்கள் அவன் இருக்குமிடத்தைத் தேடித் தேடிப் பார்த்தார்கள். மாயமந்திரத்தின் சக்தியால் மறைந்து நின்ற ராவண குமாரனை அவர்களால் காண முடியவில்லை. அவன் சரமாரி பெய்து கொண்டேயிருந்தான்.
பிறகு ராமலக்ஷ்மணர்களின் மேல் நாகபாணங்கள் எய்தான். அதனால் அவர்கள் கட்டுண்டு அசைய முடியாமல், யுத்த பூமியில் வீழ்ந்தார்கள். ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டே இன்னது செய்வது என்று தோன்றாமல் திகைத்தார்கள். ராமனுடைய நிலையைப்பார்த்து லக்ஷ்மணன் மிகவும் துக்கப்பட்டான். வானரர்கள் சூழ்ந்து கொண்டு பிரலாபிக்கலானார்கள். இந்திரஜித் ராக்ஷச சேனையைப் பாராட்டி விட்டு, லங்கா நகரம் சென்றான். வெற்றிக் கொண்டாட்டத்தோடு தகப்பனிடம் போய் “ராம லக்ஷ்மணர்களின் காரியம் முடிந்தது. யுத்த பூமியில் பிரக்ஞையற்றுக் கிடக்கிறார்கள், என்னால் வதம் செய்யப்பட்டார்கள்” என்று சொன்னான். ராவணன் மகிழ்ச்சிப் பரவசமானான். குமாரனைக் கட்டியணைத்துக் கொண்டு “வீரனே!” என்று புகழ்ந்தான்.
வானர வீரர்கள் உள்பட எல்லாரும் காயமடைந்து தைரியமிழந்து ராஜகுமாரர்கள் விழுந்து கிடப்பதைப் பார்த்துத் தோற்றோம் என்று நிச்சயம் செய்து கொண்டு, இன்னது செய்வது என்று தெரியாமல் சுக்ரீவன் திகைத்து நின்றதை விபீஷணன் பார்த்தான். “இது தகாது; ராம லக்ஷ்மணர்கள் முகங்களைப் பாருங்கள். பொலிவு குறையவில்லை. பயப்படாதீர்கள். சீக்கிரத்தில் இந்த மயக்கம் தீர்ந்து மறுபடியும் வெற்றியுடன் யுத்தம் செய்ய முனைவார்கள்” என்று சொல்லி வானர ராஜனைத் தைரியப்படுத்தினான். வானரர்கள் பயந்து போகாமலிருப்பதற்கு வேண்டிய காரியங்களைச் செய்யத் தொடங்கினார்கள். சிதறிப் போயிருந்த சேனையை மறுபடியும் ஒழுங்குபடுத்தி ஜாக்கிரதையாக அணிவகுத்துக் காத்து நின்றார்கள்.
இந்திரஜித்தால் ராம லக்ஷ்மணர்கள் வதம் செய்யப்பட்டார்கள் என்று ராவணன் லங்கா நகரத்தில் விளம்பரப் படுத்தினான். ராக்ஷஸிகளையழைத்து, “உடனே போய்ச் சீதைக்குச் சொல்லுங்கள். இராமன் இறந்தான், இரு ராஜகுமாரர்களும் யுத்த பூமியில் தரையில் மாண்டு கிடக்கிறார்கள், அவர்களுடைய வானர சேனை அழிக்கப்பட்டது என்று சொல்லுங்கள். மாய புஷ்பக விமானத்தில் அவளை ஏற்றிக்கொண்டு நீங்களும் போங்கள். போய் யுத்தத்தின் நிலையைச் சீதைக்குக் காட்டுங்கள். அந்தப் பிடிவாதக்காரிக்கு இப்போது விளங்கும். என்னைத் தவிர வேறு ஆதரவு இல்லையென்று தெரிந்துகொண்டு என்னைச் சேருவாள்” என்றான்.
அந்த ராக்ஷஸிகளும் அப்படியே செய்தார்கள். ஜானகி யுத்த பூமியை ஆகாயத்தில் விமானத்திலிருந்து பார்த்தாள். பார்த்துத் துக்கக் கடலில் மூழ்கினாள். ராம லக்ஷ்மணர்கள் தரையில் அசைவற்றுக் கிடப்பதையும் அவர்கள் அருகில் அவர்களுடைய ஆயுதங்கள் பிடிப்பாரின்றிச் சிதறிக் கிடப்பதையும் பார்த்தாள். இனித் தனக்கு ஒரு கதியுமில்லை என்று எண்ணிப் பிரலாபித்தாள். “வருங்கால விஷயமறிந்தவர்கள் என்னைப் பற்றிச் சொல்லியதெல்லாம் பொய்யாயிற்றே! புருஷன் மாண்டு போவான், நான் விதவையாவேன் என்று அவர்கள் சொல்லவில்லையே! மக்களைப் பெறுவேன்; பட்ட மகிஷியாயிருப்பேன் என்றெல்லாம் அவர்கள் சொன்னது முற்றிலும் பொய்யாயிற்றே! ஐயோ கௌசல்யே! குமாரன் வருவான் வருவான் என்று எதிர்பார்த்த வண்ணமிருக்கும் அவளுடைய துக்கத்தை யார் தீர்ப்பார்கள்? கடலைத் தாண்டி வந்து குளப்படியில் மூழ்கி உயிர் நீத்தது போல் ஆயிற்றே. உங்களுடைய திவ்ய அஸ்திரங்கள் எல்லாம் என்னவாயிற்று? எந்த எதிரியும் உங்களை வெல்ல முடியாது என்றார்களே! எல்லாம் பொய்யாயிற்றே!” என்று பிரலாபித்தாள். அப்போது சீதைக்குத் துணையும் காவலுமாக இருந்த ராக்ஷஸிகளில் ஒருத்தியான திரிஜடை சீதைக்குத் தைரியம் சொன்னாள். “பிரியமான சீதையே! நீ ஒன்றும் துக்கப்பட வேண்டாம். உன் புருஷனாவது லக்ஷ்மணனாவது இறக்கவில்லை. முக லக்ஷணங்களைப் பார். இறந்தவர்கள் முகம் வேறு விதமாக இருக்கும். அவர்கள் மாயாஸ்திரத்தால் கொஞ்ச நேரம் கட்டுண்டிருக்கிறார்கள். சேனை ஒழுங்கைப் பார். நீ தைரியமாக இருக்க வேண்டும். இந்தக் காட்சியைக் கண்டு பயப்பட வேண்டாம்” என்றாள். அமிருதம் போன்ற இந்த வார்த்தையைக் கேட்டுச் சீதை மறுபடியும் தைரியம் அடைந்தாள். பிறகு விமானம் லங்கைக்குத் திரும்பிச் சென்றது. சீதை மறுபடியும் அசோக வனத்தில் விடப்பட்டாள். அவளும் அங்கே ராக்ஷஸிகளின் மத்தியில் துயரத்தில் மூழ்கிக் கிடந்தாள்.
*
நாகபாசத்தின் சக்தி தளர்ந்தது. ராமன் கண்களைத் திறந்து எழுந்தான். பலமான காயங்கள் பட்டிருந்தாலும் தன் தேக பலத்தாலும் ஆன்ம சக்தியாலும் சுவாதீனமடைந்து எழுந்தான். எழுந்ததும் பக்கத்தில் வீழ்ந்து கிடந்த தம்பியைப் பார்த்து “ஐயோ” என்று அலறினான். “நான் இனி என்ன வெற்றியடைந்து என்ன பயன்? உன்னை ஏன் நான் கூடக் காட்டுக்கு அழைத்து வந்து கொன்றேன்? நீயின்றி ஊருக்குத் திரும்பி நான் எப்படிப் போக முடியும்? நான் துக்கப்படும்போது எல்லாம் சமாதானமும் தைரியமும் சொல்லுவாயே! இப்போது ஒன்றும் பேசாமல் மௌனமாக இருக்கிறாயே? நான் உன்னை இழந்து எப்படி உயிர் வைத்திருக்க முடியும்? உன்னைப் போன்ற ஒரு வீரன் உண்டா? யாரையும் சம்பாதிக்கலாம். உன்னைப் போன்ற ஒருவனை நான் எங்கே கண்டு பெற முடியும்? நூற்றுக்கணக்கில் கைகளைப் பெற்ற கார்த்தவீரியார்ஜுனனைப் போல் இரண்டு கைகளைக் கொண்டே நீ சரமாரி பெய்து அரக்கர்களைக் கொன்றாயே! எப்படித்தான் நீ மாண்டாய்? என் கூட அரண்ய வாசத்துக்கு வந்தாய், இப்போது உன் கூட நான் யமாலயம் செல்வேன். தோற்றேன். விபீஷணனுக்கு நான் கொடுத்த வாக்குறுதி பொய்யாயிற்று வானர ராஜனே! வானர வீரர்கள் அனைவரையும் கூட்டிக் கொண்டு கிஷ்கிந்தைக்குச் செல்லுங்கள். எனக்காக நீங்கள் உழைத்தீர்கள். மித்திர தருமத்தைக் குறைவின்றிக் காத்தீர்கள். உங்களுக்கு நான் நன்றி செலுத்துகிறேன். இனி நீங்கள் மாய்வதில் பிரயோஜனமில்லை. உங்கள் நகரத்துக்குத் திரும்பிப் போங்கள். நான் இங்கேயே உயிரை விடுவேன்!” என்று ராமன் துயரம் தாங்காமல், தைரியம் இழந்து பிரலாபித்தான்.
அச்சமயம் விபீஷணன் கதாபாணியாக வந்து சேர்ந்தான். கன்னங்கரேலென்று பிரகாசித்த விபீஷணனுடைய பெரும் வடிவத்தைக் கண்டு வானரர்கள் இந்திரஜித்தே வந்துவிட்டான் என்று பயந்து, சிதறிப்போக ஆரம்பித்தார்கள். பிறகு விபீஷணன் என்று கண்டுகொண்டு அமைதியடைந்தார்கள்.
திகிலடைந்த வானரர்கள் விபீஷணனைக் கண்டதும் இவன் இந்திரஜித்தே என்று எண்ணி விழுந்து ஓடியபோது, “இதென்ன வானரர்கள் இப்படிச் சிதறி ஓடுகிறார்கள்? காரணம் என்ன?” என்று சுக்ரீவன் கேட்டான்.
“ராமலக்ஷ்மணர்கள் காயப்பட்டு வீழ்ந்திருப்பது, நீ அறியாயா?” என்றான் அங்கதன்.
“அப்படியல்ல, இவர்கள் கலைந்து ஓடுவதைப்பார். வேறு காரணம் இருக்க வேண்டும்” என்றான் சுக்ரீவன். பிறகு விபீஷணனைக் கண்டு யார் என்று அறிந்து கொள்ளாமல் இந்திரஜித்தின் மாயையால் ஹிம்சிக்கப்பட்ட வானரர்கள் இப்படிப் பயந்து ஓடுகிறார்கள் என்பதை அறிந்தான்.
ஜாம்புவான் மூலம் வானரர்களுக்கு விஷயம் தெரியப்படுத்தி அவர்களை ஓடாமல் தடுத்து நிறுத்தி, அமைதியை ஏற்படுத்தினான்.
விபீஷணன் ராமலக்ஷ்மணர்களைப் பார்த்தான். அவர்கள் காயப்பட்டு உடல் நிறைய அம்புகள் பாய்ந்து அசையாமல் கிடப்பதைப் பார்த்து அழ ஆரம்பித்தான்.
“காரியம் எல்லாம் கெட்டுவிட்டதே! இனி என்ன செய்வது!” என்று விபீஷணன் பிரலாபிப்பதைப் பார்த்து சுக்ரீவன் அவனுக்குத் தைரியம் சொன்னான். தன் மாமன் சுஷேணனைப் பார்த்து, “நீர் ராம லக்ஷ்மணர்களை எடுத்துக்கொண்டு கிஷ்கிந்தைக்குப் போவீர். நான் இந்த ராவணனைத் தொலைத்துவிட்டு, சீதையை மீட்டுக்கொண்டு வருவேன்” என்றான்.
சுஷேணன், “இந்த ராஜகுமாரர்களின் காயங்களைச் சொஸ்தப்படுத்தும் மருந்துகள் உண்டு. அந்த மூலிகைகள் இருக்கும் இடம் நம்மில் சிலருக்குத் தெரியும். இதோ இருக்கிறாரே ஹனுமான். இவரை அனுப்பினால், அந்த மருந்துகளைக்கொண்டுவருவார்” என்றான். இப்படி இவர்கள் பேசிக் கொண்டிருந்த சமயம் காற்றும் கடலும் கலங்கிற்று. பார்க்கையில் மிகப் பெரிய பறவை - கருடன் - வருவதைக் கண்டார்கள்.
கருடன் வந்ததும் ராம லக்ஷ்மணர்கள் உடல்களில் பாய்ந்திருந்த பாணங்கள் அப்படியே மாயமாய் ஓடி மறைந்தன. அவை யாவும் விஷ நாகங்கள், இந்திரஜித்தின் மந்திர பலத்தால் அம்புகளாக வடிவம் கொண்டு அவன் மாயையால் ராம லக்ஷ்மணர்கள் உடலில் பாய்ந்திருந்தன. தங்களுடைய யமனாகிய கருடன் வந்ததும் ராம லக்ஷ்மணர்களின் தேகங்களை விட்டு ஓடி விட்டன.
பிறகு கருடன் ராம லக்ஷ்மணர்களைத் தடவிக் கொடுத்து அவர்களுக்குச் சகல சக்தியும் மறுபடியும் உண்டாக்கி விட்டான். காயங்கள் எல்லாம் உடனே போய் முன்னைவிட பலமும் தேஜஸும் பெற்று எழுந்தார்கள்.
“எங்களுக்கு இந்த உபகாரம் செய்த நீ யார்?'” என்று ராமன் கேட்டதற்கு கருடன், “நான் உனக்குப் பரம சிநேகிதன், தோழன், உனக்கு மங்களம். நான் போய் வருகிறேன். யுத்தத்தில் வெற்றி பெறுவாய், பிறகு நான் யார் என்பதைப் பேசிக்கொள்ளலாம்” என்று ஹரிவாகனன் சொல்லிச் சென்று விட்டான்.
ராம லக்ஷ்மணர்கள் மறுபடியும் பூரண பலத்துடன் ஆரோக்கியமடைந்து நின்றதும் வானரர்கள் மிகமகிழ்ச்சியும் உற்சாகமும் அடைந்து, ராவணனுடைய கோட்டையைத் தாக்கினார்கள்.
கருத்துரையிடுக