ஸ்லோகம் 4 - பகுதி - 2
பற்பமெனத் திகழ் பைங்கழலும் தன் பல்லவமே விரலும்
பாவனமாகிய பைந்துவராடை பதிந்த மருங்கழகும்
முப்புரிநூலொடு முன் கையில் ஏந்திய முக்கோல் தன்னழகும்
முன்னவர் தந்திடு மொழிகள் நிறைந்திடு முறுவல் நிலா அழகும்
கற்பகமே விழி கருணை பொழிந்திடு கமலக் கண்ணழகும்
காரிசுதன் கழல் சூடிய முடியும் கனநற்சிகை முடியும்
எப்பொழுதும் எதிராசன் வடிவழகு என் இதயத்துளதால்
இல்லை எனக்கு எதிர் இல்லை எனக்கு எதிர்.. இல்லை எனக்கு எதிரே.
திருமேனியை நினைக்க நினைக்க ஒரு தெம்பு வந்துவிடுகிறது. என் மனமானது உன் திருமேனியை எப்போதும் நினைப்பதாக ஆகட்டும். அதற்குத்தானோ என்னவோ முதலியாண்டானுடைய திருக்குமாரர் கந்தாடையாண்டான் ரொம்ப ஆச்சர்யமான திருமேனியை ஸ்ரீபெரும்புதூரில் ஏளப்பண்ணினார். சேவித்துக் கொண்டே இருக்கலாம். உபய விபூதியும் அந்த திருமேனிக்குள் அடக்கம் என்பதைத் தெளிவாகக் காட்டக்கூடிய திருமேனி. திருவரங்கத்திலும் அந்த ஸ்வாமிதான் ஏளப்பண்ணினார். மேலக்கோட்டையில் சேவித்தால் இளைஞர் ராமானுஜர். மேலக்கோட்டையில் இளைஞர். ஸ்ரீபெரும்பூதூரில் முதியவர். ஸ்ரீரங்கத்தில் மிகவும் முதியவர் ராமானுஜர். இந்தத் திருமேனி எப்போதும் மனதில் நிலைக்கட்டும் என்று பிரார்த்தித்துக் கொள்கிறார்.
அஸௌ மே வாக் – தேவரீரைத் துதியாமல் வெகுதூரத்தில் இருக்கிற அடியேனுடைய வாக்கானது, (இதுவரை நல்லதே பேசாத இந்த வாக்கு)
“போதெல்லாம் போது கொண்டு உன் பொன்னடி புனையமாட்டேன்
தீதிலா மொழிகள் கொண்டு உன் திருக்குணம் செப்பமாட்டேன்”
ஒரு நல்ல வார்த்தை பேசினதில்லை. என்னமோ சுடுசொல் தான் வந்தது. இந்த வாக்குக்கு உன் திருநாமமே விஷயமாகட்டும். தாழ்ந்த விஷயங்களையே பேசிப் பேசி பழகிய என் வாக்கானது,
தவ குணகீர்த்தநே ஸக்தா பவது – தேவரீருடைய, நீர்மை எளிமை கருணை அழகு மென்மை முதலிய கல்யாண குணங்களை ஆசையோடு துதிப்பதில், (ஸ்ரீ ராமானுஜருடைய சரித்திரத்தைப் பேசுவதிலும், அவரது குணங்களைக் கீர்த்தனம் பண்ணுவதிலும்), இந்த வாக்கானது ஈடுபடவேண்டும். பற்றுடையதாக இருந்திடுக ஆஸக்தி உடையவராய் இருக்கவேண்டும் வாக்குப் படைத்த பயன் ஸ்வாமி திருநாமங்களைச் சொல்லுவது தப்பாயிருந்தாலும் பரவாயில்லை, குழந்தை உளரலைத் தாயார் உளரல் என்று சொல்லமாட்டாள். நாம் கீர்த்தனம் பண்ணி ஒரு பெருமையும் அவருக்குப் புதிதாக வந்துவிடப் போவதில்லையே. எதற்காக பாடவேண்டும்? நம் வாக்கு ஸுத்தி அடைவதற்காகவே பாடவேணும்.
மே கரத்வயஸ்ய தவ தாஸ்ய கரணம் து க்ருத்யம் அஸ்து – அடியேனுடைய இரண்டு கைகளுக்கும், (இதுவரை இந்த இரண்டு கைகளும் என்னென்னவோ தவறுகளுக்கு உடந்தையாய் இருந்திருக்கும். அடித்திருக்கும், திருடியிருக்கும், இனிமேலாவது) தேவரீருக்கு, அடிமை செய்வதொன்றே, (தொண்டு செய்தல்), கடமையாக இருந்திடுக. உன் திருவடிகளுக்குக் கைங்கர்யம் செய்வதிலேயே ஈடுபட்டிருக்கட்டும்.
மே கரணத்ரயம் வ்ருத்தி அந்தரே – அடியேனுடைய, மனம் வாக்கு காயம் ஆகிய மூன்று கருவிகளும் (தேவரீரையே நினைப்பதிலும் துதிப்பதிலும் அடிமைசெய்வதிலும் பற்றுடையதாக இருக்கவேணுமென்று ப்ரார்த்திக்கப்பட்ட), இதைத் தவிர மற்றவற்றை நினைப்பதில்லை. இராமானுஜர் திருமேனியை நினைப்பதைத் தவிர, அவர் குணங்களைக் கீர்த்தனம் பண்ணுவதைத் தவிர, அவர் திருவடிகளில் தொண்டு செய்வதைத் தவிர (வேறொருவரை நினைப்பதும் துதிப்பதும் அடிமை செய்வதுமாகிய வேறு காரியங்களில்),
விமுகம் ச அஸ்து – பராமுகங்களாகவும் இருந்திடுக. ஈடுபடவேண்டியது எது என்றும் எதில் ஈடுபடக்கூடாது என்றும் சொல்லிவிட்டார். ஸ்வாமி நீங்க வாருங்கள், வராது இருந்திராதீர்கள் என்று சொல்வோம். இரண்டும் தேவையா வாருங்கள் என்று சொன்னால் போதாதா? என்றால் கட்டாயம் வரவேண்டும் என்பதைத் தெரிவிக்கவே இரண்டு முறையிலும் சொல்லப்படுகிறது.
இங்கிருக்கிறாரா? ஸ்ரீமன் நாராயணன். இரண்யகசிபு பிரஹலாதனைப் பார்த்து நாராயணன் இங்கிருக்கிறாரா? என்று கத்துகிறான். இங்கிருக்கிறான் என்று சொன்னால் போதாதோ. எங்குமிருக்கிறான், இங்கு மட்டுமில்லை எல்லா இடத்திலும் இருக்கிறார், அவர் இல்லாத இடமே இல்லை, என்பது பிரஹலாதனின் பதில். அன்வயம், வ்யதிரேகம் என்று சொல்வர். அன்வயத்திலும் வியதிரேகத்திலும் பிரஹலாதன் பதில் அமைந்துள்ளது.
இதுபோலத்தான் இங்கு பகவானிடத்தில் ஈடுபடு. மற்றவற்றில் ஈடுபடாதே. மற்ற இடத்தில் ஈடுபடாதே என்று சொன்னவுடன், மற்ற இடங்களில் இருந்து விலகிவந்து வெறும் மண்ணாங்கட்டிபோல உட்கார்ந்துவிடுவோம். விலகிய பிறகு எதிலாவது ஈடுபட வேண்டும் அல்லவா? ஆகவே பகவானிடம் ஈடுபடு என்கிறோம். பகவனிடத்தில் ஈடுபடவில்லை என்றால் ரொம்ப சீக்கிரத்தில் மீண்டும் தப்பான வழிக்கு போய் விடுவோம். புத்தியை மட்டும் வெறுமனே விடக்கூடாது. கண், காது முதலியன எல்லாம் மூடிக்கொண்டு இருங்கோ என்றால் முடியுமா? மற்ற இடத்திலிருந்து விலகி பகவானிடம் ஈடுபடுத்த வேண்டும். இங்கு இந்த ஸ்லோகத்தின்படி ஆசார்யனிடம் மனம், புத்தி, வாக்கு, காயம் அனைத்தையும் ஈடுபடுத்தவேண்டும்.
விமுகம் ச அஸ்து – பராமுகங்களாகவும் இருந்திடுக. இங்கு ஒரு சந்தேகம் வரும். நாம் குடும்பஸ்தர்களாயிற்றே. நம் வியாபாரம் நடக்கவேண்டாமா? குடும்பத்தை பார்த்தாக வேண்டுமே நேரமாயிடுத்தே அலுவலகம் செல்லவேணுமே, நாட்கிழமையாச்சே என்றெல்லாம் தோணும். வாஸ்தவம். கொஞ்சம் கொஞ்சமாக இராமானுஜரிடம் ஈடுபட ஈடுபட மற்றதெல்லாம் குறைய ஆரம்பித்துவிடும். ஆசார்ய ஈடுபாடு வளர வளர மற்ற ஈடுபாடுகள் தன்னடையே குறைய ஆரம்பித்துவிடும். மற்ற ஈடுபாட்டை விட்டுவிட்டு இங்கு வா என்றால் கொஞ்சம் கஷ்டம்தான். விட்டுவிட்டு பற்றவேண்டுமா? பற்றினால் தானே விடுமா? நீங்கள்தான் பதில் சொல்லவேண்டும். உலக இன்பங்கள் எல்லாவாற்றையும் விட்டுவிட்டு அப்புறம் பகவான் திருவடியை, ஆசார்யன் திருவடியைப் பற்றவேண்டுமா? இல்லை. இதைப் பற்ற பற்ற லௌகீக சுகங்களில் இருக்கும் பற்று விலகிவிடும்.
முதலியாண்டானுக்கும், கூரத்தாழ்வானுக்கும் ஒரு பேச்சுவார்த்தை நடந்தது. கூரத்தாழ்வான் ஸாதித்தார், “எல்லாவற்றையும் விட்டுவிட்டுத்தான் பகவானைப் பற்றவேண்டும்”. முதலியாண்டான் இதைக் கேட்டுவிட்டு பதில் சொல்கிறார், “வாஸ்தவம் நீர் சொல்கிறது. இதற்குப் பிரமாணம் கூட நீர் சொல்லிவிடுவீர். அப்படியானால் உலகத்தில் நீர் ஒருவர்தான் பற்றுவீர். நாங்க யாரும் முடியாது. விட்டுட்டுத்தான் பற்றணும் என்றால் ஆழ்வானே அது உம்மால் மட்டுமே முடியும். எங்களால் முடியாது.” என்றார். நாம் பற்றப் பற்ற மற்றது விட்டுப்போகவேண்டுமல்லவா?
“பரமாத்மநி யோரக்த: விரக்த: அபரமாத்மநி
ஸர்வேஷணா விநிர்முக்த: ஸ: பைக்ஷம் போக்தும் அர்ஹதி”
(எவன் ஒருவன் பரம் பொருளிடத்தில் மிகுந்த பக்தி யுடையவனாய், பரம் பொருளுக்கு வேறான விஷயங்களில் அன்பில்லாதவனா யிருக்கிறானோ அவன் எல்லா ஆசைகளில் இருந்து விடுபட்டவனாய்ப் பிச்சை எடுத்து உண்பதற்குத் தகுந்தவனாகிறான்”) என்பது பார்ஹஸ்பத்ய ஸ்மிருதி.
அவனுடைய அழகு புறம் போக ஒட்டாது என்பதற்குப் ப்ரமாணம்.
மாற்பால் மனஞ்சுழிப்ப மங்கையர்தோள் கைவிட்டு
நூற்பால் மனம்வைக்க நொய்விதாம் -நாற்பால
வேதத்தான் வேங்கடத்தான் விண்ணோர் முடிதோயும்
பாதத்தான் பாதம் பணிந்து.
மூன்றாம் திருவந்தாதி 14.
பகவானிடத்தில் மனம் சுழித்துக் கொண்டு ஈடுபட ஈடுபட தானே மற்றதிலிருந்து புத்தி விலகிவிடும் அல்லவா! பகவான் உயர்ந்தவர். மற்றதெல்லாம் தாழ்ந்தது என்று சொல்லி பகவானிடம் கூட்டிக் கொண்டு வந்துவிடலாம். பகவானிடம் இருந்து தாண்டி ஆசார்யனிடம் மனமும் மொழியும் மெய்யும் ஈடுபடவேண்டும் என்றால் என்ன குற்றம் பெருமாளுக்குச் சொல்லி ஆசார்யரிடம் கூட்டிவருவது. உலக இன்பங்களில் குற்றம் கூறிவிடலாம். பெருமாளிடம், திருவேங்கடமுடையானிடம் போகாதே, மேலக்கோட்டை போகாதே. வரதராஜனிடம் போகாதே என்று சொல்லி வடுகநம்பியிடம் வா, கிடாம்பியாச்சானிடம் வா, ராமானுஜரிடம் வா என்று எப்படிச் சொல்லி விளங்க வைப்பது. உலக விஷயங்களில் குற்றம் உண்டு. பகவத் விஷயத்தில் குற்றம் கிடையாது. ஒரு குறை இருக்கவே செய்கிறது. ஒரு சந்தேகம் இருந்துகொண்டே இருக்கும். பகவானைப் பற்றியிருக்கிறோமே. இவர் நம்மை ராவணனாகப் பார்ப்பாரா விபீஷணனாக பார்ப்பரா என்று? இரண்யகசிபுவாகவா பிரஹலாதனாகவா பார்ப்பார்?
ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகளின் காலக்ஷேபத்திலிருந்து தொகுத்து தட்டச்சு செய்தவர்,
திருமலை ராமானுஜதாஸன், +919443795772
நன்றிகள் ஸ்வாமி.