ஞாயிறு, 19 ஏப்ரல், 2020

ஶ்ரீமத் பாகவதம் - 114

ஐந்தாவது ஸ்கந்தம் – ஆறாவது அத்தியாயம்

(ருஷபதேவன் சரீரத்தைத் துறந்த வரலாறு)

பரீக்ஷித்து மன்னவன் சொல்லுகிறான்:- மஹானுபாவரே! ஆத்ம ஸ்வரூபத்தை அறிந்து அதனால் மனக்களிப்புற்றவர்களும் யோகத்தினால் கிளர்ந்த (தோன்றிய) ஜ்ஞானமாகிற அக்னியில் கர்மபீஜங்களை (கர்ம வினைகளுக்குக் காரணமான அஜ்ஞானம் போன்றவற்றை) அழித்தவர்களுமான, யோகிகளுக்கு யோக மஹிமையால் தானே ஏற்பட்ட வைஹாயஸம் (ஆகாயத்தில் ஸஞ்சரிக்கை) முதலிய ஐச்வர்யங்கள் ஜன்ம (பிறப்பு) ஜரா (கிழத்தனம்) மரணாதி (இறப்பு முதலிய) வருத்தங்களுக்கிடமான ஸம்ஸாரத்தை மீளவும் விளைக்க வல்லவையாக மாட்டாவல்லவா? அப்படியிருக்க அம்மன்னவன் யோகம் கைகூடினவனாயிருந்தும் அவற்றை ஏன் பாராட்டாமல் பயந்தான்?

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- மன்னவனே! நீ சொன்னது வாஸ்தவம் (உண்மை). ஆயினும், இவ்வுலகத்தில் சிலர் மனத்தை வென்றிருப்பினும் நின்றபடி நில்லாதிருக்கும் தன்மையுடைய அம்மனத்தை நம்புகிறதில்லை. துர்ப்புத்தியுள்ள (கெட்ட புத்தியுள்ள) வேடன் மிருகங்களை நம்பச்செய்து இனியன் போலிருந்து அவை நம்பின பின்பு அவற்றை வதிப்பது போல், மனமும் படிந்தாற் போலிருந்து நம்ப வைத்துத் திடீரென்று ஏமாற்றி ஸம்ஸாரத்தில் கொண்டு போய் மூட்டிவிடும். ஆகையால் அதை எப்பொழுதும் நம்பாமல் ஊக்கத்துடன் அடக்கிக்கொண்டு வரவேண்டும். இங்கனமே பெரியோர்கள் சொல்லுகிறார்கள்: “மனம் நிலையற்றிருக்கையில் ஒருகாலும் ஒரு விஷயத்திலும் பற்று செய்யலாகாது. நாம் மனத்தை வென்று விட்டோமென்று நம்பி அதைப் போன வழியே விடுவானாயின் நெடுநாள் ஸம்பாதித்த பகவத் உபாஸன ரூபமான ஜ்ஞானமெல்லாம் அழிந்துபோய்விடும். யோக மஹிமையால் விளையும் ஐச்வர்யங்கள் காமத்திற்கு இடம் கொடுப்பவை. அத்தகைய யோக ஐச்வர்யங்களை மனம் நமக்கு ஸ்வாதீனமென்று (கட்டுப்பட்டதென்று) விரும்புவானாயின், காமத்திற்கு (ஆசைக்கு) இடங்கொடுத்தாற் போலாகும். பிறகு காமத்தை (ஆசையைத்) தொடர்ந்து வருமவைகளான க்ரோதம் (கோபம்) லோபம் (பேராசை) முதலிய சத்ருக்களும் (எதிரிகளும்) வந்து புகுவார்கள். வேறு புருஷனை விரும்பும் ஒரு பெண், நம்பின கணவனை வஞ்சித்துக் கள்ளபுருஷனைக் கைப்பற்றிக் கணவனை முடிப்பது போல், மனத்தை நம்புவானாயின் அது அவனை வஞ்சித்துக் காமம் (ஆசை) க்ரோதம் (கோபம்) முதலிய சத்ருக்களுக்கு இடங்கொடுத்து அவர்கள் மூலமாய் அவனை அழித்துவிடும். ஆகையால் மனத்தை நம்பலாகாது. யோகைச்வர்யங்களை அனுபவிக்க விரும்புவானாயின், காமம் (ஆசை) க்ரோதம் (கோபம்) லோபம் (பேராசை) மதம் (கர்வம்) மோஹம் (மயக்கம், அறியாமை) பயம் (அச்சம்) முதலியவைகளும் கர்மபந்தமும் (கர்ம வினையால் விளையும் ஸம்ஸாரமும்) மேல் வந்து விழும். இங்கனம் பல அனர்த்தங்களுக்கிடமான அந்த யோகைச்வர்யத்தை மதியுடையவன் (புத்தி உடையவன்) எவன் விரும்புவான்?”. 
அப்பால் அம்மன்னவன் ஸமஸ்த லோகபாலர்களுக்கும் சிரோபூஷணம் போன்றவனாயினும் (தலை ஆபரணம் போல் சிறந்தவனாயினும்) அவமதிக்கும்படியான பலவகை வேஷம் பாஷை நடத்தை இவைகளால் மூடன்போல் தோன்றி யோகிகள் தேஹத்தை விட வேண்டிய வகை இத்தகையதென்பதை அறிவிக்க முயன்று தன் தேஹத்தை விடவிரும்பி அஜ்ஞானமாகிற திரை இல்லாமையால் ஆத்மாவைப் பரமாத்மாவிடத்தில் அபேதமாக (ஜீவன் பரமாத்மாவின் சரீரம் என்று) ஸாக்ஷாத்கரித்துத் தேஹத்தில் என்னுடையதென்னும் நினைவு மாறப்பெற்று அத்தேஹத்தினின்றும் நீங்கினான். இங்கனம் அம்மன்னவன் தேஹாபிமானத்தைத் துறந்தவனாயினும் ப்ரக்ருதி வாஸனையின் தொடர்ச்சியால் அபிமானமுடையவன்போல் (உடலில் பற்று உடையவன் போல்) பூமி முழுவதும் திரிந்துகொண்டு வரும்பொழுது ஒருகால் தெய்வாதீனமாய்க் கொங்கண வங்க வடகுடகங்களென்கிற தக்ஷிண கர்ணாடதேசங்களைச் சேர்ந்து குடகாசலத்தின் (குடகு மலையின்) உபவனத்தில் வாயில் கற்களைக் கபளம் (உணவு உருண்டை) போல் போட்டுத் தலைமயிர்களை விரித்து அரையில் ஆடையின்றிப் பித்தம் பிடித்தவன்போல் உலாவினான். பிறகு காற்று வேகத்தினால் ஒன்றோடொன்று உறைகின்ற மூங்கிற் புதரிலுண்டான காட்டுத்தீ அவ்வனம் முழுவதும் பரந்து எரியத்தொடங்கி அந்த ருஷபனுடைய தேஹத்துடன் அவ்வனத்தைத் தஹித்துவிட்டது (எரித்து விட்டது). 

கொங்கண வங்க வடகுட கங்களென்னும் தேசங்களுக்கு அரசனாகிய அர்ஹனென்பவன் அந்த ருஷபனுடைய நடத்தையைக் கேட்டுத் தெய்வச் செயலால் கலியுகத்தில் அதர்மம் தலையெடுக்கையில் மதிகெட்டு எவ்விதத்திலும் பயமின்றி தன் தர்மத்தைத் துறந்து ருஷபனுடைய வ்ரதத்தை ஆசரிக்க முயன்று அதன் உட்கருத்தை அறியாமல் கெட்ட நடத்தையுடைய, வேத விருத்தமான, தெளிவற்ற வாழ்க்கை நடைமுறையை ஜனங்களெல்லோரும் அனுஷ்டிக்கும்படி நடத்தப்போகிறான். முன்னமே பகவானுடைய மாயையால் மதிமயங்கிப் பாக்யமற்ற மனிதர்கள் இந்த அர்ஹனுடைய உபதேசத்தினால் நிரம்பவும் மயங்கித் தமது வர்ணாச்ரம விதியின்படி ஏற்பட்ட நியமங்களான ஸ்தானாதி ஆசாரங்களையும் ஸந்த்யாவந்தனாதி கர்மங்களையும் துறந்து தேவதைகளின் அவமதிப்புக்கிடமான ஸ்நானம் செய்யாமை ஆசமனம் செய்யாமை தலை மொட்டையடிக்கை முதலிய ஆபாஸ வ்ரதங்களை மனம் போனபடி அங்கீகரித்து அதர்மம் நிறைந்த கலிகாலத்தினால் விவேகமற்றுப் பெரும்பாலும் ப்ராஹ்மணர்களையும் யஜ்ஞ புருஷனான பகவானையும் அவனுடைய பக்தர்களையும் நிந்தித்துக் கொண்டிருக்கப் போகிறார்கள். அவர்கள் வேதத்தில் சொல்லப்படாததும், ஒரு குருடன் மற்றொரு குருடனை வழிநடத்தும் பாப மார்க்கத்தில் இழிந்து. மனம்போனபடி தேஹ யாத்ரையை நடத்தி அவ்வர்ஹனுடைய உபதேசத்தையே நம்பித் தாமே தமக்குச் சத்ருக்களாய் அந்ததாமிஸ்ரமென்னும் நரகத்தில் விழப் போகிறார்கள். இந்த ருஷபனுடைய அவதாரம் ரஜோகுணத்தினால் வருந்தும் ஜனங்களுக்கு மோக்ஷமார்க்கத்தை அறிவிப்பதற்காக ஏற்பட்டது. 

அவனுடைய புகழை இங்ஙனம் பாடுகிறார்கள்:- “இந்தப் பூமியில் ஏழு ஸமுத்ரங்களும் ஏழு த்வீபங்களும் ஏற்பட்டிருக்கின்றன. அந்த த்வீபங்களில் ஜம்பூத்வீபம் சிறப்புடையது. அதில் ஒன்பது கண்டங்கள் உண்டு. அவையே வர்ஷங்களென்று கூறப்படுகின்றன. அவற்றில் பாரதவர்ஷம் மிகவும் புண்யமானது. ஆ! என்ன ஆச்சர்யம்? இந்தப் பாரதவர்ஷத்திலுள்ள ஜனங்கள் ருஷபாதி ரூபமாய் அவதரித்த பகவானுடைய மங்கள சரித்ரங்களைப் பாடுகிறார்களல்லவா? ப்ரியவ்ரதனுடைய வம்சம் பரிசுத்தமான பெரும்புகழுடையது. இந்த வம்சத்திலல்லவோ புராண புருஷன் ருஷபனாய் அவதரித்து மோக்ஷ ஹேதுவான தர்மத்தை அனுஷ்டித்துக் காட்டினான். இந்த ருஷபனுடைய நிஷ்டையை மற்ற எந்த யோகிதான் மனோரதத்தினாலாவது அனுஸரிக்க வல்லனாவான்? இந்த ருஷபன் மனோஜவம் முதலிய யோக சக்திகள் மேல்விழுந்து வந்தபோதும் இவை த்யாஜ்யங்களென்று (விடத்தக்கவை என்று) அவற்றை ஆதரிக்காதிருந்தான். மற்ற யோகிகள் அவற்றைப் பெறவிரும்புகிறார்கள்.” ஸமஸ்த லோகங்களுக்கும், வேதங்களுக்கும், தேவதைகளுக்கும், ப்ராஹ்மணர்களுக்கும், பசுக்களுக்கும் குருவாகிய ருஷபதேவனுடைய சரித்ரம் இத்தகையது. 

இதைச் சொன்னால் ஸமஸ்த பாபங்களும் போகும். இது ஸமஸ்த மங்களங்களுக்கும் இருப்பிடம். நாள்தோறும் ச்ரத்தை வளரப்பெற்று இதைக் கேட்கிறவனுக்கும் கேட்பிக்கிறவனுக்கும் ஷாட்குண்ய பூர்ணனான வாஸுதேவனிடத்தில் மாறாத பக்தியோகம் தொடர்ந்து வரும். விவேகிகள் பலவகைப் பாபங்களுக்கிடமான ஸம்ஸாரத்தில் விளைகின்ற துக்கங்களால் பரிதபிக்கின்ற ஆத்மாவை இந்தப் பகவத் பக்தியாகிற அம்ருதஸாகரத்தில் ஸ்நானம் செய்வித்து அந்தப் பகவத் அனுபவத்தினால் மஹாநந்தத்தைப் பெற்றுத் தானே சேர்ந்திருக்கிற பரமபுருஷார்த்த ரூபமான மோக்ஷத்தையும் கூட இம்மியும் ஆதரிக்கிறதில்லை. அவர்கள் எல்லாம் பகவானுடையதென்னும் நினைவினால் ஸமஸ்த புருஷார்த்தங்களும் கைகூடப் பெற்றவர்கள். ராஜனே! பாண்டவர்களான உங்களுக்கும் யாதவர்களுக்கும் பகவான் தானே நேராக ரக்ஷகனும் குருவும் தெய்வமும் நண்பனும் குலபதியுமாயிருப்பவன். பல படச் சொல்லியென்? ஒருகால் தூதுபோவது முதலிய கார்யங்களில் உங்களுக்குக் கிங்கரனுமாயிருக்கின்றான். இதெல்லாம் இருக்கட்டும். மன்னனே! மற்றவர் ஓயாது பணியினும் மோக்ஷம் கொடுப்பானன்றிப் பக்தியோகத்தைக் கொடுக்கிறதில்லை. பரப்ரஹ்ம ஸ்வரூபமான ஆத்ம ஸ்வரூபத்தை நித்யம் அனுபவிக்கையாகிற லாபத்தினால் மற்ற புருஷார்த்தங்களில் விருப்பற்று நெடுநாளாய்ப் பாபகர்மங்களைச் செய்து வந்தமையால் நன்மையில் நுழையாமல் உறங்கும் புத்தியுடைய உலகத்தின் மேல் கருணைகூர்ந்து எவ்விதத்திலும் பயத்திற்கிடமில்லாத ஆத்ம ஸ்வரூபத்தை மொழிந்த ருஷபரூபியான பரமபுருஷனுக்கு நமஸ்காரம்.

ஆறாவது அத்தியாயம் முற்றிற்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக