மதி நிறைந்த நன்னாள்
ஆண்டாள் நாச்சியார் அருளிய திருப்பாவையின் முதல் வரி "மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன் னாள்". இதில் அருமையான வாழ்வியல் செய்தியை ஆண்டாள் நாச்சியார் தெரிவிக்கிறாள். மதி நிறைந்த நன்னாள் என்பது அற்புதமான ஆன்மீக அர்த்தத்தையும் வாழ்வியல் கருத்தையும் இணைத்தே சிந்திக்க வைக்கும். இதிலுள்ள வாழ்க்கை நெறியை ஒரு உரையாடலாகச் சிந்திப்போம்.
மனிதவள மேம்பாட்டுப் பயிற்சி கருத்தரங்கம். நல்ல நேரம் எது என்கிற தலைப்பிலே பேச்சாளர் பேச வந்திருந்தார். நல்ல வைதிகத் தோற்றத்தோடு இருந்தார். மாணவர்கள் இவர் என்ன பேசப் போகிறார் என்று நினைத்தார்கள். மாணவர்களின் நினைவில் ஓடும் செய்திகளை அவரால் உணர முடிந்தது. அவர் சில கேள்விகளைக் கேட்டு, பதில் பெற்று, விளக்கம் தருவதாக தன் உரையை அமைத்துக் கொண்டார்.
மாணவர்களைப் பார்த்துக் கேட்டார்.
“மாணவர்களே! ஒரு காரியத்தைச் செய்வதற்கு முன் நாள் நட்சத்திரம் மாதம் இவற்றையெல்லாம் பார்ப்பதைப் பற்றி என்ன கருதுகிறீர்கள்?”
"அது சரியல்ல..." என்றார்கள் சில மாணவர்கள்.
“ஆனால் பார்க்கிறார்கள்" நல்ல நாள், கெட்ட நாள் என்று பிரிக்கிறார்களே? என்றார்.
"ஆமாம்... அப்படித்தான் பார்க்கிறார்கள்.” இது மாணவர்களின் பதில்.
"அப்படியானால் நல்ல நாள், கெட்ட நாள் என்று உண்மையில் இல்லையா?”
“இல்லை !” ஒரே குரலில் சொன்னார்கள் மாணவர்கள்.
பேச்சாளர் விட வில்லை. “இருக்கிறது!” என்று அழுத்தமாகச் சொன்னார்.
“எப்படிச் சொல்லுங்கள்!” மாணவர்கள் ஆர்வத்தோடு கேட்டார்கள்.
“சிலர் சனிக்கிழமை ஆகாது என்பார்கள். சிலர் கரிநாள் ஆகாது என்பார்கள். இன்னும் சிலர் புதன் மிகவும் நல்ல நாள். பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பார்கள். இது நாள்காட்டிகளில் போட்டிருக்கிறது? நீங்களும் பார்த்திருப்பீர்கள் இல்லையா”
“ஆமாம் பார்த்திருக்கிறோம். அப்படியானால் நல்ல நாள் கெட்ட நாள் என்பது சரிதான் என்பது உங்கள் கருத்து” என்று மாணவர்கள் மடக்கினார்கள்.
“அப்படியல்ல பெரியவர்கள் வானியல்படி பல காரணங்களுக்காக நாளும் கிழமையும் திதியும் வாரமும் கண்டுபிடித்திருக்கிறார்கள். வேதத்தின் கண்ணான இந்தச் சாத்திரங்களை ஜோதிட சாத்திரம் என்கிறோம். காலம் காலமாக கடைபிடித்தும் வருகிறோம். சாஸ்திர மரியாதைக்கு இது சரி. ஆனால் இதை வாழ்வியல் கோணத்திலும் பார்க்க வேண்டும் என்கிறேன் நான். இந்த கோணத்தில் நாம் நாளை ஆராயலாம். சரியா?”
மாணவர்கள் என்னதான் சொல்ல வருகிறார் இவர் என்று குழம்பிப் போனார்கள். பேச்சாளர் கவலைப்படவில்லை. ஆர்வமாக மாணவர்களிடம் கேட்டார்.
“சொல்லுங்கள்.... எப்படி நல்ல நாள் கெட்ட நாள் என்று பிரித்துப் பார்ப்பது?”
மாணவர்கள் திருப்பிக் கேட்டார்கள் “எப்படி - பிரிப்பார்கள்.?”
“ஒரு உதாரணம் மூலம் சொல்லுகின்றேன். பொதுவாக புதன் கிழமை நல்ல நாள்... இல்லையா?”
“ஆமாம்…”
“பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது - என்பார்கள் அல்லவா!”
“ஆமாம்…”
“ஆனால், ஒரு செய்தித்தாளை எடுத்துப் பாருங்கள். புதன்கிழமை அன்று சில விபத்து நடந்திருக்கும். சிலர் இறந்திருப்பார்கள். சிலருக்கு மிகப் பெரிய சிரமம் வந்திருக்கும். உண்டா இல்லையா.”
“உண்டு தான்…” மாணவர்கள் வியப்போடு பதிலளித்தார்கள்.
“எல்லோர்க்கும் நல்ல நாளான புதன்கிழமை அன்று சிலர் விபத்து தோல்வியைச் சந்தித்திருப்பார் களே... அவர்கள் புதனை நல்ல நாள் என்பார்களா?”
“மாட்டார்கள்…”
“அதாவது ஒருவருக்கு நல்ல நாளாக இருப்பது இன்னொருவருக்குக் கெட்ட நாளாக இருக்கிறது. எல்லோருக்கும் எல்லா நாட்களும் நல்ல நாட்களாகவோ கெட்ட நாட்களாகவோ இருப்பதில்லை. ஆனால் வாழ்வியலைச் சொல்லித் தரும் ஒரு மாமேதை நாளை, நல்ல நாள் கெட்ட நாள் என்று பிரித்துப் பார்க்க ஓர் வழி சொல்கிறார்.”
“என்ன வழி அது” மாணவர்கள் ஆர்வத்தோடு கேட்டார்கள்.
“அவசரப்படாதீர்கள். நாம் அடுத்த ஒரு இலக்கு அல்லது முன்னேற்றத்தைக் கருதி சிந்திப்போம். ஆலோசிப்போம். திட்டமிடுவோம்... அல்லவா!”
“ஆமாம்…”
"அப்படிச் சிந்திக்கும்போது பல்வேறு சிந்தனைகள் வரும். ஒவ்வொன்றையும் ஆரோய்வோம். சிலவற்றைத் தள்ளுவோம். சிலவற்றைக் கொள்ளுவோம்…”
“சரி…”
“டக்கென்று மனதில் ஒரு பொறிதட்டும். இப்படிச் செய்தால் என்ன என்று தோன்றும்... உடனடியாகச் செய்து முடிக்க ஒரு நாளைத் தேர்ந்தெடுப்போம் அல்லவா அது தான் நல்ல நாள்…”
“அதாவது…” - நல்ல நாளைப் பார்த்து ஓர் நல்ல காரியத்தைச் - செய்வதல்ல. ஓர் நல்ல காரியத்தை என்று செய்யத் தொடங்குகிறோமோ, அதற்கான அறிவு நமக்கு என்றைக்கு பளிச்சென்று உதித்ததோ அந்த பளிச் நாள் தான் நல்ல நாள்.”
“நாட்களால் காரியங்கள் பெருமையடைவதில்லை. மாறாக நல்ல காரியங்களால் நாட்கள் - பெருமையடைகின்றன.”
“சார் அருமையாகச் சொன்னீர்கள்”
“ரொம்ப நன்றி... ஆனால் ஒரு கேள்வி... இதைச் சொன்ன மாமேதை யார் தெரியுமா?”
“யார்? இங்கிலாந்தைச் சேர்ந்தவரா? ஜெர்மனியைச் சேர்ந்தவரா?”
“இல்லை. அவர் இந்தியாவைச் சேர்ந்தவர். தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்.’
“பெயர்? “ஆண்டாள்…” மாணவர்கள் சந்தோஷமாகக் கை தட்டினர்.
“எந்த நூலில் இந்தக் கருத்து வருகிறது” என்று சில மாணவர்கள் கேட்டனர்.
இப்போது பேச்சாளர் கம்பீரமாகச் சொன்னார். “திருப்பாவையில் வருகிறது. “மதி நிறைந்த நன்னாள்” என்று குறிப்பிடுகிறாள். ஒருவருக்கு அறிவு - பிரகாசமடையும் நாள் தான் அவரை பொருத்தவரை நல்ல நாள் என்கிறாள். இப்போது சொல்லுங்கள். உங்கள் நல்ல நாள் எது?”
வாழ்க்கை நெறிகள் வளரும்.....
நன்றி - சப்தகிரி ஆகஸ்ட் 2018
நன்றி - பேராசிரியர் எஸ்.கோகுலாச்சாரி, புவனகிரி +919443439963