திங்கள், 8 அக்டோபர், 2012

ஸ்ரீமத் பாகவதம் – வேளுக்குடி கிருஷ்ணன் - 11


முதல் ஸ்கந்தம் – முதல் அத்தியாயம்

நைமிசாரண்யம் என்னும் புண்ணிய க்ஷேத்திரத்தில் சௌனகர் முதலான ரிஷிகள் கூடி, ஸூத பௌராணிகரைப் பார்த்து, கேள்விகள் கேட்கிறார்கள். இதன் தொடக்கத்தில் கடவுள் வாழ்த்து ச்லோகம் உள்ளது. பாகவதம் முழுவதும், பரந்து விரிந்த ஆலமரத்தைப் போல் இருந்தாலும் ஆலம் விதை எவ்வளவு சிறியதாக இருக்குமோ, வீரியம் பொருந்தியதாக இருக்குமோ, அதைப் போல் கடவுள் வாழ்த்தாகிற இம்முதல் ச்லோகம் ஆழ்ந்த கருத்துக்களைத் தன்னுள் கொண்டது.

ஜன்மாத்யஸ்ய யதோன்வயாதி தரதச்ச
அர்த்தேஷு அபிஜ்ஞ: ஸ்வராட்
தேனே ப்ரஹ்ம ஹ்ருதா ய
ஆதிகவயே முஹ்யந்தி யத்ஸுரய:
தேஜோவாரிம்ருதாம் யதா விநிமயோ
யத்ர த்ரிஸர்கோ அம்ருஷா
தாம்நா ஸ்வேன ஸதா நிரஸ்த குஹகம்
ஸத்யம் பரம் தீமஹி

இதன் பொருள்:- ‘ப்ரபஞ்சம் யாரால் படைக்கப்படுகிறதோ, ஸ்ருஷ்டிக்கப்பட்டவை அனைத்தும் யாரால் காக்கப்படுகிறதோ, ப்ரளயத்தின்போது இவையனைத்தும் யாரிடம் லயிக்குமோ (இணையுமோ), அனைத்தையும் அறிந்தவர் யாரோ, முதலில் யார் தன் உந்தித் தாமரையில் நான்முகப் பிரமனைப் படைத்து அவருக்கு வேதங்களை உபதேசித்தாரோ, யார் ஸ்வதந்த்ரரோ, தானே ஒளிவிடுபவரோ, முக்குணத்தையும் தாண்டிய தூய்மையான ஸத்வ குணமானவர் யாரோ, ஜ்நானமயமாய், அழிவற்றவராய், எல்லையற்றவரான அந்தப் பரம்பொருளான ப்ரஹ்மத்தை வணங்குகிறேன்.

அப்படிப்பட்ட பகவான் ஞானமயனாய், நித்யராய், அழிவற்றவராய், எல்லையற்றவராய் விளங்குகிறார். அப்படிப்பட்ட எம்பெருமானை தியானித்து கதையைத் தொடங்குவோம். இந்த ச்லோகத்தில் உலகத்துக்கே காரணம் பகவான், அதாவது ப்ரஹ்மம் என்று கூறப்பட்டுள்ளது. நாம் அனைவரும் ஸம்ஸார சுழற்சியை முடித்துக் கொண்டு, மேலும் மேலும் பிறவாமல் முக்தியடைய வேண்டும் என்று விழைகிறோம். அதற்கு நாம் செய்ய வேண்டிய வழியை வேதங்கள் கூறும்போது :

காரணம் து த்யேய:

உலகனைத்திற்கும் காரணமானவனை த்யானம் செய்வாயாக! - என்று வழிகாட்டுகிறது.

முக்தியடைய விருப்பமுடையவனை, ‘அனைத்துக்கும் காரணம் யாரோ, அவரை த்யானம் செய் என்று வேதங்கள், வழிகாட்டுகின்றன. அனைத்துக்கும் காரணமாய், தனக்கு ஒரு காரணம் அற்றவராய் இருப்பவரே ப்ரஹ்மம் - நாம் ஒவ்வொருவரும் ஓரிரு குழந்தைகளுக்கும் காரணமாகலாம். த்ருதராஷ்ட்ரன் நூறு பேருக்குக் காரணம். ஸகர மன்னன் 60,000 குழந்தைகளுக்குக் காரணம். ஆனால், நான்முகன் உட்பட யாருமே அனைத்துக்கும் காரணமாக முடியாது. மேலும், நம் ஒவ்வொருவருக்கும் காரணமானவர்கள் (பெற்றோர்) உள்ளனர். மேற்கண்ட ச்லோகத்திலிருந்தும், அதன் தொடர்ச்சியிலிருந்தும் பரப்ரஹ்மமான திருமால் அனைத்துக்கும் காரணமாகவும், ஆனால் தனக்கு ஒரு காரணம் அற்றவராயும் உள்ளார் என்றறிகிறோம்.

பிரபஞ்சத்துக்குக் காரணம் யார் என்று நாம் தேடும்போது, மூன்று விதமான காரணங்களை வேதம் கூறுகிறது.

1. உபாதான காரணம் : அதாவது ஒரு மண் குடம் செய்வதற்கு மண்ணே உபாதான காரணம்.

2. நிமித்த காரணம் : ஒரு குடம் உருவாவதற்கு, அதைச் செய்யும் குயவனே நிமித்த காரணம். அவன்தான் குடம் செய்ய வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொள்கிறான்.

3. ஸஹகாரி காரணம் : குடத்தை, மண்ணை வைத்துச் சுழற்ற ஒரு சக்கரமும், அதைச் சுற்றிவிட நீண்ட கொம்பும் தேவை. இவைதான் உதவுகின்ற காரணங்கள்; அதாவது ஸஹகாரி காரணங்கள்.

இப்படி, ஒரு குடம் உருவாவதற்கு மூன்று வெவ்வேறு காரணங்கள் உள்ளன. அதேபோல, இந்த பிரபஞ்சத்திற்கும் அந்த மூன்று காரணங்கள் எதுவாக அல்லது யாராக இருக்கலாம்? ப்ரஹ்ம மேதான், உபாதான, நிமித்த, ஸஹகாரி காரணங்களாக இருக்கிறார். ப்ரஹ்மத்தின் சரீரமாக இருக்கும் அசேதனம், அதாவது மூலப் ப்ரக்ருதி இவ்வுலகமாக விரிவடைகிறது. ஆகையால், ப்ரஹ்மமேதான் உபாதான காரணம். இவ்வுலகத்தைப் படைக்க வேண்டும் என்று பகவான்தான் உறுதி கொள்கிறார். ஆக, அவரே நிமித்த காரணம். பெருமானுடைய சிறந்த பண்புகளைக் கொண்டுதான் (சக்திகளைக் கொண்டுதான்), இவ்வுலகை சிருஷ்டிக்க முடிகிறது. ஆக, பகவானேதான் ஸஹகாரி காரணம். உலகில் ஒரு குயவனால் மண் குடம் செய்ய வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொள்ள முடியுமே தவிர, அவரால் குடமாக மாற முடியாது. அதேபோல், மண், குடமாக மாற முடியுமே தவிர, நான் குடமாக மாறப் போகிறேன் என்று உறுதி எடுத்துக் கொள்ள முடியாது. ஆனால், ப்ரஹ்மமோ தானே இவ்வுலகமாக பரிணமிக்கிறது; அந்த ப்ரஹ்மமாகிற பகவானேதான் இவ்வுலகத்தைப் படைக்கப் போகிறேன் என்று ஸங்கல்பித்துக் கொள்ளவும் செய்கிறார். நம்மாழ்வார் ஒரு பாடலில்:

கடல் ஞாலம் செய்தேனும் யானே என்றும்
கடல் ஞாலம் ஆவேனும் யானே என்றும்...

– என்று கூறுகிறார். ஒரு குயவனைப் போல், இவ்வுலகத்தைப் படைப்பவனும் பகவானே! மண் எப்படி குடமாக மாறுமோ, அதைப் போல், இவ்வுலகமாகவே மாறியிருப்பவனும் பகவானே! ஆக, எவ்விதத்தில் பார்த்தாலும் பரப்ரஹ்மமான திருமாலே பிரபஞ்சத்துக்குக் காரணம். நம்மாழ்வார் ஒரு பாடலில், ‘வேர் முதலாய் வித்தாய் என்று பெருமானைக் கூறுகிறார். வேர், முதல், வித்து ஆகிய இம்மூன்று சொற்களும் ஒரே காரணத்தைக் குறிப்பவை. ஒரு பொருள் கூற பல சொற்களை வைத்தால், அது செய்யுளில் குற்றம் அல்லவா? என்று தோன்றும். ஆனால், உண்மையில் மூன்று வகையான காரணமும் இறைவனே என்று உணர்த்தவே ஆழ்வார் அப்படிப் பாடியுள்ளார்.

உலகில் ஓர் அறியாமை நிலவுகிறது. அணுக்கள் உலகுக்குக் காரணம் என்றும், அல்லது பிரக்ருதி காரணம் என்றும், சிலர் இயற்கையே காரணம் என்றும் கூறுகிறார்கள். இவையெல்லாம் காரணங்களாக முடியாது. இவற்றால் படைக்க முடியாது. அறிவுள்ள ஒருத்தர்தான் படைப்பாளியாக முடியும். ஆகவே, ப்ரஹ்மமே அனைத்துக்கும் காரணம். அவரை தியானித்தால், இவ்வுலக இன்பத்தையும், முக்தியையும் நாம் அடைகிறோம். இந்த ஆழ்ந்த கருத்துதான் முதல் ச்லோகத்தில் கூறப்பட்டுள்ளது.

சௌனகர் முதலான ரிஷிகள், ஸூதரிடத்தில், கீழ்கண்ட கேள்விகளை எழுப்பினார்கள். “வேத விற்பன்னரே! நீர் அறியாத சாஸ்திரங்கள் இல்லை. நாங்களோ கலியுகத்தில் குறைவான ஆயுள், மந்தமான புத்தி, பாக்கியமில்லாமை ஆகியவற்றால் துன்பப்படுகிறோம். தேவரீர்தான், பகவான் இந்த பூவுலகத்தில் அவதரித்துச் செய்த தெய்வீக லீலைகளை எல்லாம் எங்களுக்கு உரைக்க வேண்டும்.

வஸுதேவரின் திருக்குமாரராக கண்ணன் பிறந்து, பூமியின் பாரத்தை தீர்ப்பதற்காக, என்னவெல்லாம் விளையாட்டுக்கள் புரிந்தாரோ, அவை அனைத்தையும் கூற வேண்டும். ஸ்ரீகிருஷ்ணாவதாரம் தவிர, ஏனைய அனைத்து அவதாரங்களில் நடந்த கதைகளையும் தேவரீர் சொல்ல வேண்டும். தர்மத்தைக் காப்பதற்காக பெருமான் எடுத்துக் கொண்ட முயற்சிகள், நமக்கு அவர் செய்த உதவிகள் ஆகியவற்றை கேட்கக் கேட்க கலி விலகும்.

கலி புருஷன் வந்து விட்டான் என்பது தெரிந்தே நாங்கள் இவ்விடத்தில் உம் கதையை கேட்பதற்காகக் காத்திருக்கிறோம். கடலைக் கடக்க விரும்புபவன் கப்பலைத் தேடுவான். நீரே எமக்கு ஸம்ஸாரம் என்னும் கடலைத் தாண்டிக் கரையேறும்படி செய்ய வேண்டும். துவாபர யுகம் முடிந்து கண்ணன் வைகுண்டத்தை அடைந்தவுடன், தர்மம் யாரைச் சரணம் அடைந்தது என்றும் கூற வேண்டும் என்றனர். கேள்விகளைக் கேட்டு புன்னகைத்த ஸூதர் அடுத்த அத்தியாயமான இரண்டாவது அத்தியாயத்தில் பதில் கூறத் தொடங்குகிறார்.



முதல் ஸ்கந்தம் - இரண்டாம் அத்தியாயம்

எந்த யுகமாக இருந்தாலும் வாஸுதேவனாகிற கிருஷ்ணனிடத்திலே பக்தி செய்தால் அது அறிவையும், பற்றற்ற தன்மையையும் ஏற்படுத்திக் கொடுக்கும். அவனையே ப்ரஹ்மம் என்றும், பரமாத்மா என்றும், பகவான் என்றும் சான்றோர்கள் நமஸ்கரிக்கிறார்கள். இவ்விடத்தில் பௌராணிகர் பகவானை அடைவதற்கு ஓர் அழகான படிக்கட்டை நமக்காக ஏற்படுத்திக் கொடுக்கிறார். பகவான் எழுந்தருளியுள்ள இடங்களில் உள்ள புண்ணிய நதிகளையோ அல்லது புண்ணிய தீர்த்தங்களையோ அடைந்து நீராடி, அந்நீரைப் பருகினோமானால், நம் பாவங்கள் எல்லாம் விலகும். அப்போதே மகான்களோடும், சாதுக்களோடும் நமக்குத் தொடர்பு ஏற்படும்.

அடுத்து அவர்களுடைய தொடர்பால் நமக்கு தர்மத்தில் ஆசை ஏற்படும். தர்மத்தை செய்யச் செய்ய, பெருமானுடைய கதையைக் கேட்பதில் விருப்பமும், அன்பும் ஏற்படும். பெருமானிடத்தில் அன்பு கொண்டால், அவர் நம் உள்ளத்திலே அமர்ந்து, அதில் இருக்கும் அழுக்குகளாகிற காமம், கோபம், லோபம் ஆகியவற்றை ஒழிக்கிறார். இவை ஒழிந்தால் மனம் தூய்மை அடையும். தூய்மையான மனதில் மேலும் மேலும் பகவானைப் பற்றிய அறிவு மலர்ந்து உலகப் பற்று அறும். இறுதியில், நம் உள்ளத்தில் உள்ள சந்தேக முடிச்சுகள் எல்லாம் அவிழ்ந்து, கர்மங்கள் தொலைந்து நேரே பகவானையே காண்போம். பெருமானை நேரே தரிசித்தால் நம் பாவங்கள் முழுவதுமாக விலகி விடும்.

நம்மாழ்வார் ஒரு பாடலில்,

பாவி நீ என்று ஒன்று நீ சொல்லாய்
பாவியேன் காண வந்தே...

– என்று சாமர்த்தியமாகப் பாடுகிறார். ‘பெருமானே! நீ என் கண் முன்னால் வந்து நின்று தரிசனம் கொடு. வந்தபோது, நீ ‘பாவி என்று என்னை வசை பாடினாலும் கூட சரி! ஆனால், தரிசனம் கொடுத்துக் கொண்டே, ‘பாவி என்று கூறு. பெருமானுக்கோ வியப்பு! ‘பாவி என்று அழைக்கப்படவா நம்மை ஒருத்தர் கூப்பிடுகிறார் என்று!

பகவானும் முன்னே சென்றான். ஆழ்வாருக்குக் காட்சி கொடுத்தான். ‘பாவி என்று சொல்வதற்கு வாய் திறந்தான். ஆனால், சாத்திரம் கூறியபடி பகவானைக் கண்டவுடன்தான் பாவங்கள் விலகி விடுமே! இப்போது, நம்மாழ்வார் கண்ணனை தரிசித்தவுடன் அவர் பாவங்கள் அனைத்தும் விலக, பகவானால் பாவி என்று சொல்ல முடியாமலே போயிற்று. ஆக, எவ்வளவு சாமர்த்தியமாக, ‘பாவி என்று சொல்வதற்கு பெருமானைத் தன் முன்னே அழைத்து, அவனை தரிசித்துத் தன் பாவங்களை எல்லாம் ஆழ்வார் விலக்கிக் கொண்டார் பார்த்தீர்களா! இப்படிக்கொத்த தூய்மை உடையவன் எம்பெருமான். வேதங்களும், யாக யக்ஞங்களும், யோகங்களும், அனைத்து கர்மங்களும், ஞானமும், தவமும், தர்மமும் – இவை அனைத்துமே பகவான் வாஸுதேவனைத்தான் குறிக்கும்.

அவ்வெம்பெருமானை தியானித்தால் அதுவே ஒரு சிறந்த கத்தியாக இருந்து, நம்முடைய கர்ம முடிச்சுக்கள் அனைத்தையும் வெட்டி விடும். வாஸுதேவனே இவ்வுலகைக் காப்பவன்; ரக்ஷகன். அவனால் படைக்கப்பட்ட அனைத்தும் அவனாலேயே காக்கப்படும். யார் விதை விதைக்கிறானோ, அவன்தானே தண்ணீர் ஊற்றுவான்? படைத்த பகவான்தானே, படைக்கப்பட்ட நம் அனைவரையும் காக்க வேண்டும்?. ஸ்ரீவைகுண்டத்திலே இருந்து கொண்டு நம்மைக் காக்க இயலுமா? கிணற்றுக்குள் நமக்குப் பிரியமான ஒருவர் விழுந்தால், உடனே நாமும், அதே கிணற்றில் குதித்துத்தானே அவரைக் காப்பாற்ற முடியும்? அதே போல், ஸம்ஸாரம் என்னும் பெருங்கடலில் நாம் விழுந்திருக்க, வைகுண்டத்திலிருந்து கீழே குதித்து, பல அவ தாரங்களைச் செய்துதான் நம்மைக் காக்க வேண்டும் – என்று முடிவெடுத்து, எம்பெருமான், எத்தனையோ அவதாரங்களைச் செய்திருக்கிறான். அப்படி பகவான் எடுத்த 22 அவதாரங்கள் அடுத்த மூன்றாவது அத்தியாயத்தில் விளக்கப்பட்டுள்ளன. கேட்கத் தயாராவோம்!

(தொடரும்) 

நன்றி - துக்ளக்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக