சனி, 16 நவம்பர், 2019

மயக்கும் தமிழ் - 7 - ஆழ்வார்க்கடியான் மை.பா.நாராயணன்

தேன்தமிழ் பூமாலை சூடிய பூதத்தாழ்வார்

முதலாழ்வார்களில் இரண்டாவது ஆழ்வாரான பூதத்தாழ்வார் நூறு பாசுரங்களை அமுதத் தமிழில் வெண்பாக்களாக நமக்கு யாத்துத் தந்திருக்கிறார். அவருக்கு அமுதகவி என்ற சிறப்புப் பட்டப் பெயரும் உண்டு. சரி அது என்ன அமுதத் தமிழ்? ஆழ்வாரின் அற்புதப் பாசுரமே இதற்கு பதில் தரும் விதத்தில் அமைந்திருக்கிறது.

‘அமுது என்றும் தேன் என்றும் ஆழியான் என்றும்
அமுது அன்று கொண்டு உகந்தான்என்றும்
அமுது அன்ன சொல் மாலை ஏத்தித் தொழுதேன் 
சொலப்பட்ட நல் மாலை ஏத்தி நவின்று’

அமுதம் போன்றவன் என்றும், தேன் போன்றவன் என்றும், ஆழிப்படையை உடையவன் என்றும், முற்காலத்தில் தேவர்களுக்காகக் கடலை கடைந்து அமுதம் எடுத்து அளித்து மகிழ்ந்தவன் என்றும் சாஸ்திரங்கள் அவனைத் துதித்து மகிழ்கின்றன. இவ்வாறு சிறப்பித்துச் சொல்லப்படுகின்ற எம்பெருமானை அமுதம் போன்ற பாசுரங்களால் அடியேனும் பலமுறை புகழ்ந்து சொல்லி வணங்கினேன்.’ என்று பூரிப்படைகிறார், பூதத்தாழ்வார். ஆழியான் என்பதும் கடலை கடைந்து அமுதம் கொண்டான் என்பதும் இறைவனுக்கு எப்படித் திருநாமங்களோ அப்படியே ‘அமுது’ என்பதும் ‘தேன்’ என்பதும் அவன் திருநாமங்களே ஆகும்.

தேனை அமுதை நன்பாலை கனியை கரும்பு தன்னை என்கிற பாசுர வரிகளில் தேனே, அமுதே, பாலே, கனியே, கரும்பேயாகி நின்றொழிந்தான் என்றும் பலவாறாக ஆழ்வார் பெருமக்கள் இறைவனை ஆடிப்பாடி அக மகிழ்ந்திருக்கிறார்கள். எது உயர்ந்ததோ அதை அமுதம் என்று கொண்டாடி மகிழ்கிறோம். அப்படிப் பார்த்தால் நம்மையெல்லாம் காத்து ரட்சிக்கின்ற ஜகத்ரட்சகன் எல்லோருக்கும் மேலே உயர்ந்தவன் இல்லையா? அப்படிப்பட்டவனை அமுதம் போன்ற இனிய தமிழால் அமுதம் கலந்து பாடுகிறேன் என்று பரவசப்படுகிறார் பூதத்தாழ்வார். அதனால்தான் தான் இறைவனுக்கு படைத்த பாசுரங்களை அதென்ன சொல் மாலை என்று இறைவன் மேல் பொங்கும் பரிவால் படைத்தேன். உனக்கு விருந்து வைத்தேன் என்று உள்ளம் பூரிக்கிறார் ஆழ்வார்.

ஒவ்வொரு ஆழ்வாருக்கும் தாம் படைத்த படைப்புகளின் மீது மாளாக் காதல் இருப்பதை மிகப் பெரிய ஒன்றாக நினைத்துப் பார்க்க முடிகிறது. பக்தி என்பதே இறைவன்பால் தமக்குள் இருக்கும் ஈர்ப்பை தெரியப்படுத்துவதுதான். இறைவனின் திருவடியை மனம் பற்ற முயற்சி மேற்கொள்கிறதே அந்த விதமான முயற்சிகளைத்தான் பக்தி என்று அறிஞர் பெருமக்கள் கருதுகின்றனர். மனிதர்களுக்கு மனிதர்கள் செய்யும் உதவி மனிதநேயத்தின்பார்பட்டது. சக உயிரினங்கள் எல்லாவற்றையும் நேசிப்பது என்பது ஆன்மநேயம். இதைத்தான் வள்ளல் பெருமானும் மற்ற ரிஷிகளும் முனிவர்களும் ஆழ்வார்களும் நாயன்மார்களும் செய்திருக்கின்றனர். பூதத்தாழ்வார் இறைவனுக்குப் படைக்கும் தான் படைத்த பாசுரங்களை அமுதன்ன சொல் மாலை என்று ஆச்சரியப்பட்டு பேசுகிறார்.

காலம் தமிழுக்கு கொடுத்த கொடையாக கருதப்படும் ஆண்டாள் நாச்சியார் தன்னுடைய திருப்பாவை பாடல்களை சங்கத்தமிழ் மாலை என்று புகழ்ந்து பேசுகிறார்.

ஆழ்வார்களில் கலியன், பரகாலன் என்று போற்றப்படும் திருமங்கை மன்னனோ தன்னுடைய படைப்புகளை செஞ்சொலால் எடுத்த தெய்வ நல்மாலை என்று ஏற்றிப் போற்றுகிறார். இப்படிச் சொன்ன திருமங்கை மன்னன் கிருஷ்ணமங்கள க்ஷேத்ரம் என்று போற்றப்படுகிற திருக்கண்ணமங்கையில் அருள்பாலிக்கும் பக்தவத்சல பெருமாளைக் குறித்து தேனினும் இனிய பத்து பாசுரங்களை நமக்கு கற்கண்டு பாகாக தந்திருக்கிறார். அதில் கடைசி பாசுரத்தில் கடைசி இரண்டு வரிகள் இப்படி அமைந்திருக்கிறது.

‘கண்ண நின் தனக்கும் குறிப்பு ஆகில்
கற்கலாம் கவியின் பொருள் தானேஎல்லாம் தெரிந்த பரம்பொருளே’

நீயேகூட இப்பாசுரங்களின் அரும்பெரும் பொருட்களை கற்கலாம். ரசித்துச் சுவைக்கலாம். இன்பமாக ஆனந்தமாக கேட்டு களிபேறு உவகை அடையலாம் என்று தனக்கும் இறைவனுக்கும் உள்ள நெருக்கத்தை அன்பின் மிகுதியை தன் சிந்தை முழுவதும் நாராயண நாமம்தான் குடிகொண்டிருக்கிறது என்பதை எடுத்துக் காட்டுகிறார். அந்த அடிப்படையில்தான் பூதத்தாழ்வார் அமுதன்ன சொல் மாலை என்று தன்னுடைய சொற்களுக்கு, பாசுர வரிகளுக்கு ஒரு தனி
அடையாளத்தை ஏற்படுத்துகிறார். பூதத்தாழ்வாரின் சிந்தனையை உள்வாங்கும்போது அற்புதமான ஒரு வார்த்தையை பிரயோகப்படுத்துகிறார். அது என்ன வார்த்தை தெரியுமா? பெருந்தமிழன் என்பதுதான் அந்த வார்த்தை. இந்த வார்த்தை இடம் பெற்ற அந்த அதி அற்புதமான பாசுரத்தை பார்ப்போம்.

யானே தவம் செய்தேன் ஏழ்பிறப்பும் எப்பொழுதும்,
யானே தவமுடையேன் எம்பெருமான், 
யானே இருந்ததமிழ்நன் மாலை இணையடிக்கே 
சொன்னேன், பெருந்தமிழன் நல்லேன் பெரிது.

‘‘எம்பெருமானே! எல்லாப் பிறப்புகளிலும் எல்லா நிலைகளிலும் தவம் புரிந்தவன் நானே. அந்த தவத்திற்குப் பயனாக பலனாக இன்று கைங்கர்யத்தை பெற்றிருப்பவனும் நானே. இலக்கண இலக்கியங்களில் குறைவற்று நிறைவாக இருக்கும் பெருமையுடைய தமிழ்மொழியினால் ஆகிய நல்ல சொல் மாலைகளை உன்னுடைய இரண்டு திருவடிகளுக்கு சூட்டி மகிழ்ந்தேன். எல்லோரும் எதைஎதையோ தேடி ஓடும் இந்தக் காலத்தில் பூதத்தாழ்வார் உன்னைப்பாடி பரவசம் காணும் பாக்கியத்தை யானே பெற்றேன் என்று குதுகளிக்கிறார். இது ஒருவிதமான எக்களிப்பு கூட ஆகும். பூதத்தாழ்வாரின் நானே பெருந்தமிழன் என்பது அடங்காப் பெருமகிழ்ச்சியாக பார்க்கப்பட வேண்டும் என்று பக்தி உலகத்தின் ஆற்றல் மிக்க அறிஞர்கள் சொல்லி மகிழ்கிறார்கள்.

அளவற்ற ஈடுபாடும் ஆழ்ந்த அன்பும் எல்லையற்ற சரணாகதி தத்துவமும் ஆட்கொண்ட ஒருவருக்குத்தான் இதெல்லாம் சாத்தியமாகும். இன்று நாம் யார்யாருக்கோ எந்தெந்த பட்டமோ சூட்டி மகிழ்கிறோம். அதில் முக்கால் பங்கு சுயநலம்தான் குடிகொண்டிருக்கிறது. தங்கள் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவும், பிழைப்புக்காக உழைப்பையும் தந்து மிகுதியான புகழ்ச்சியினால் ஒருவரை ஏற்றிவிடும் கலாச்சாரம் தொடர்ந்து நடைபெற்று வரும் காலகட்டத்தில் இந்த ஜீவாத்மா அந்த பரமாத்வுடன் ஐக்கியமாகி விட வேண்டும் என்பதற்காகவும் இறைவனை அவனின் கல்யாண குணங்களை நன்கு அனுபித்து நம்மையும் அதில் ஆழ்த்தும் ஆழ்வார்களின் செயல்கள் சாதாரணமான ஒன்றா என்ன?

அதுவும் இந்த கலிகாலத்தில் தகுதி, திறமை அதெல்லாம் சீர் தூக்கிப் பார்த்தா எடை போடுகிறார்கள்? பணம் பத்தும் செய்யும் என்கிறார்கள். புகழ் என்பது இருக்க வேண்டுமென்றும், எப்படி இருக்கக் கூடாது என்பதையும் ஆழ்வார்களின் தலைமகனான நம்மாழ்வார் சொல்கிறார். சொன்னால் விரோதம் இது, ஆகிலும் சொல்லுவன் கேண்மினோ! 

என்நாவில் இன்கவி யான்ஒருவர்க்கும் கொடுக்கிலேன்
தென்னா தெனாஎன்று வண்டு முரல்திருவேங்கடத்து
என்ஆனை என்அப்பன், எம்பெருமான் உளனாகவே.

இந்த அதி அற்புதமான திருவாய்மொழி பாசுரம் சொல்லும் விளக்கம் இதுதான்.‘பயனையே எதிர்பார்த்து வாழும் உங்களுக்கு நான் இந்த நலத்தைச் சொன்னால் விரோதமாகவே இருக்கும். ஆயினும் நான் அதைப் பற்றி பெரிதாக கவலைப்படவில்லை. என் மனதிற்கு பட்டதை சொல்லியே தீருவேன். பின்பு, நான் யாரைப் பாடி பரவசப்படுவேன் தெரியுமா? கேளுங்கள் சொல்கிறேன் என்கிறார். தேனைக் குடித்த மகிழ்ச்சியினால் வண்டுகள் ‘தென்னா தெனா’ என்று ஒலிக்கின்ற திருமலையிலே இருப்பவர். தந்தையைப்போல இதம் செய்பவன். இத்தகைய எம்பெருமான் என் பாட்டிற்குப் பொருளாக இருக்கையில் என் நாவிலிருந்து வருகின்ற இனிய கவிகளை நான் ஒருவருக்கும் பாடிக் கொடுக்க மாட்டேன். அப்படி கொடுக்கும் எண்ணம் என்னிடம் இல்லை.

திருமலையில் நித்யவாசம் செய்பவனை விட்டுவிட்டு அஞ்சிற்கும் பத்திற்கும் ஆளாய் பறக்கும் இழிசெயலை நான் எப்படிச் செய்வேன் என்ற தொனியில் இருக்கிறது ஆழ்வார் வாக்கு. இந்த விஷயத்தை எளிமையாக நமக்குத் தந்தார் அர்த்தமுள்ள இந்துமதத்தை படைத்து அகிலத்தையே திரும்பிப் பார்க்க வைத்த கவியரசர் கண்ணதாசன்தான்!

‘‘கையிலே பணமிருந்தால் கழுதை கூட அரசனடா!
கை தட்ட ஆள் இருந்தால் காக்கைகூட அழகனடா!
பொய்யிலே நீந்தி வந்த புலுகன் எல்லாம் தலைவனடா!’’

இதை விட எளிமையாக யதார்த்த நிலைமையை யாரால் படம் பிடித்துக் காட்ட முடியும். நாம் ஆழ்வாரின் வாக்கைப் பின்பற்றி ஆண்டவனின் அருளுக்குப் பாத்திரம் ஆவோம். ஆழ்வார்களின் அமுதத்தமிழ் பாசுரங்கள் என்னும் தேவாமிர்தம் கையில் இருக்கையில், ஈ மொய்க்கும் இனிப்புப் பண்டம் தேவையா என்ன?

நன்றி - தினகரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக