சனி, 16 நவம்பர், 2019

ஶ்ரீமத் பாகவதம் - 71

மூன்றாவது ஸ்கந்தம் – இருபத்து ஆறாவது அத்தியாயம்


(ப்ரக்ருதி புருஷ தத்வ ஸ்வரூபத்தை விவரித்துக் கூறுதல்)

ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:- தாயே! மேல் ப்ரக்ருதி புருஷ காலாதி தத்வங்களின் ஸ்வரூபத்தை உனக்குத் தனித்தனியே விவரித்துச் சொல்லுகிறேன். இந்தத் தத்வங்களின் ஸ்வரூபத்தை அறிவானாயின், முமுக்ஷுவான புருஷன் ப்ராக்ருத குணங்களான ஸத்வ ரஜஸ் தமஸ்ஸுக்களினின்று விடுபடுவான். பரமபுருஷனுடைய ஸாக்ஷாத்காரத்திற்கு ஸாதனமான எந்த ஜ்ஞானம் மோக்ஷத்தை விளைவிக்குமென்று வேதாந்தங்களும், வேதாந்தங்களை அறிந்த பெரியோர்களும் சொல்லுகிறார்களோ, எந்த ஜ்ஞானம் அஜ்ஞானத்தைப் போக்குமோ, அப்படிப்பட்ட ஜ்ஞானத்தை உனக்கு நான் விவரித்துச் சொல்லுகிறேன். முதலில் ஆத்ம ஸ்வரூபத்தைச் சொல்லுகிறேன். கேட்பாயாக. 

ஜீவன் ஸ்வயம்ப்ரகாசன் (தனக்குத் தானே தோற்றும்படியான ஸ்வரூபமுடையவன், ஜ்ஞான ஸ்வரூபனும் ஜ்ஞானத்தையே குணமாக உடையவனுமாய் இருப்பவன்) ப்ரக்ருதியின் பரிணாமமாகிய சரீரம் இந்திரியங்கள் மனது ப்ராணன் இவற்றைக் காட்டிலும் வேறுபட்டிருப்பவன். இயற்கையில் ப்ராக்ருதமான ஸத்வாதி குணங்களற்றவன்; சரீரத்திற்குள் புருந்து அதைத் தரித்துக் கொண்டிருப்பவன். இந்த ஆத்ம ஸ்வரூபத்தினால் ப்ரஹ்மா முதல் பூச்சிப் புழுவரையிலும் ஸ்தூலமாயும் ஸூக்ஷ்மமாயுமுள்ள ஐகத்தெல்லாம் வ்யாப்தமாயிருக்கின்றது. (இத்தகைய ஆத்மாக்களால் ஜகத்தெல்லாம் நிறைந்திருக்கின்றது. தேஹாதிகளுடைய தர்மங்களான உத்பத்தி விகாசங்களால் ஜீவன் பிறத்தல் சாதல் இவைகளுடையவனல்லன். ஆனால் நான் தேவன், நான் மனுஷ்யனென்றும், அவன் தேவன், அவன் மனுஷ்யனென்றும், நான் பருத்திருக்கிறேன், அவன் பருத்திருக்கிறானென்றும் தனக்கும் பிறர்க்கும் தேஹமும் ஆத்மாவும் ஒன்றாகத் தோற்றுகையால், தேஹாதிகளோடு ஆத்மாவுக்கு ஜன்ம மரணாதிகளில்லை என்பது எப்படி பொருந்தும்? என்னில், புண்ய பாப ரூப காரணங்களால் “நான் தேவன், நான் பருத்திருக்கிறேன்” என்று தேஹ தர்மமான தேவத்வம் முதலியவைகளையும் பருமன் இளைப்பு முதலியவைகளையும் ஜீவன் தன்னிடத்தில் ஏறிட்டுக் கொள்ளுகிறான். ஆகையால் ஜீவனுக்கு தேஹாதிகளோடு ஜனன மரணாதிகள் இயற்கையில் ஏற்பட்டவையன்று, ஸ்வப்னம் காண்கிறவன் ஸ்வப்னத்தில் கண்ட வஸ்துக்கள் நசிக்கிலும் எப்படி நாசம் அடைகிறதில்லையோ, அங்ஙனமே ஜீவன் தேஹாதிகள் நாசம் அடையிலும் தான் நாசம் அடைகிறதில்லை. இத்தகையனான அந்த ஜீவன் மிகவும் ஸூக்ஷ்மனாகையால் ஸமஸ்த வஸ்துக்களிலும் உள் புகுந்து வ்யாபித்திருக்கும் ஸாமர்த்யமுடையவன். இவன் ஜகத் ஸ்ருஷ்டிக்கு முன்பு பேரும் உருவமுமாகிற பிரிவுகளின்றி மிகவும் ஸூக்ஷ்ம தசையை அடைத்திருப்பதும் பரமபுருஷனுடைய விளையாட்டிற்குக் கருவியாயிருப்பதும் பகவானுக்கு லீலாரஸம் நிறைவேறுவதின் பொருட்டு ஆகஸ்மிகமாக நேரிட்டிருப்பதும் ஸத்வாதி குணங்கள் நிறைந்ததுமாகிய மாயையின் ஸம்பந்தத்தைப் பெறுகின்றான். அந்த ப்ரக்ருதி பகவானால் தூண்டப்பெற்று தேவ மனுஷ்யாதி ரூபத்தினால் பலவகைப்பட்டவைகளும் எல்லாம் ப்ரக்ருதியின் பரிணாமமாகையால் ஒரு படிப்பட்டவைகளுமாகிய ப்ரஜைகளைக் கார்ய தசையில் ஸத்வாதி குணங்களால் படைக்கும் தன்மையது. மற்றும், அந்த ப்ரக்ருதி ஜ்ஞானத்தை மறைக்கும் தன்மையுள்ளது ஜீவன் ப்ரக்ருதியைக் கண்டு அதன் ஸம்பந்தத்தினால் அந்த க்ஷணத்தில் மதிமயங்கி அந்த ப்ரக்ருதியைத் தானாகவே நினைத்துக் கொள்கின்றான். இங்ஙனம் பரமபுருஷ ஸங்கல்பத்தினால் ப்ரக்ருதி ஸம்பந்தம் உண்டாகப்பெற்று அதனால் மறைக்கப்பட்ட தன் ஸ்வரூபத்தை மறந்து ஜீவன் ப்ரக்ருதியின் குணங்களான ஸத்வாதிகளால் கர்மங்களைச் செய்பவனாக அவற்றைத் தானே செய்வதாகத் தன்னிடத்தில் ஏறிட்டுக் கொள்கின்றான். ஸாம்ஸாரிக ப்ரவ்ருத்திகளில் ஜீவனுக்குள்ள முயற்சி ஸத்வ ரஜஸ் தமோகுணம் ஸர்க்கத்தினால் வந்ததன்றி இயற்கையில் ஏற்பட்டதன்று. அங்ஙனம் ப்ரக்ருதி ஸம்பந்தத்தினால் ஜீவன்தானே கர்மங்களைச் செய்வதாகத் தன்னிடத்தில் கர்த்ருத்வத்தை ஏறிட்டுக் கொள்வதனால் இவனுக்கு ஸம்ஸார பந்தம் உண்டாகின்றது; அதனாலேயே கர்மவஸ்யத்வமும் (கர்மத்திற்கு உட்பட்டிருக்கையும்) உண்டாகின்றது. ஜீவனுக்குப் போதல் வருதல் முதலிய ஸாம்ஸாரிக ப்ரவ்ருத்திகள் இயற்கைகள் கிடையாது. ஏனென்னில், அந்த ப்ரவ்ருத்திகளெல்லாம் புண்ய பாப ரூப கர்மத்தினால் விளைபவை. ஜீவன் இயற்கையில் கர்மத்திற்கு உட்பட்டவனல்லன். மற்றும், அவன் ஜ்ஞானத்தையே குணமாக உடையவனும் ஜ்ஞானமே ஸ்வரூபமாகப் பெற்றவனுமாய் இருப்பான். ஜீவாத்மாக்கள் இயற்கையில் அளவின்றி நிர்மலமான ஜ்ஞானமுடையவர். அவர்கள் கர்மமென்கிற அவித்யையால் தீண்டப்பெற்றவராகி அந்தந்தக் கர்மங்களுக்குத் தகுந்தபடி ஜ்ஞான ஸங்கோசம் உண்டாகப்பெற்று ப்ரஹ்மா முதல் பூச்சிப் புழு வரையிலுமுள்ள பலவகைப்பட்ட விசித்ரமான தேஹங்களில் ப்ரவேசித்து அந்தந்த தேஹங்களுக்குரிய ஜ்ஞான விகாஸமுடையவராகி அந்தந்த தேஹங்களையே ஆத்மாவாக ப்ரமித்து அதற்குத் தகுந்த கர்மங்களைச் செய்து அவற்றிற்குரிய ஸுக துக்கங்களை அனுபவிக்கையாகிற ஸம்ஸாரத்தை அடைகின்றார்கள். பெரியோர்கள் சரீர சேஷ்டைகளிலும் இந்த்ரிய வ்யாபாரங்களிலும் சரீரமாகப் பரிணமித்திருக்கிற ப்ரக்ருதியைக் காரணமாகச் சொல்கிறார்கள். போக ஸாதனமான செயல்களெல்லாம் சரீராகாரமாகப் பரிணமித்திருப்பதும் ஜீவனால் அதிஷ்டானஞ் செய்யப்பெற்றதுமாகிய ப்ரக்ருதியைப் பற்றினவை. அந்த ப்ரக்ருதியின் பரிணாமமாகிய சரீசேஷ்டைகளாலும் இந்த்ரிய வ்யாபாரங்களாலும் விளைகிற ஸுகதுக்கங்களை அனுபவிப்பதில் ப்ரக்ருதியைக் காட்டிலும் வேறுபட்டவனும் அதற்கு அதிஷ்டாதாவுமாகிய ஜீவாத்மாவைக் காரணமாகச் சொல்லுகிறார்கள். ஜீவன் சரீரத்தைத் தரிக்கும் ப்ரயத்னம் செய்கின்றான் ஆகையால் அந்த ப்ரக்ருதி ஸம்பந்தத்தினால் விளைகிற ஸுகதுக்கங்களை அனுபவிப்பதற்குக் காரணமாகின்றான்.

தேவஹூதி சொல்லுகிறாள்:- வாராய் புருஷோத்தமனே! கார்யதசைக்கு முன்பு நாமரூப விபாகமின்றி ஸூக்ஷ்ம தசையை அடைந்து பகவானுக்குச் சரீரமாயிருப்பவைகளும் ஜகத்திற்கெல்லாம் காரணங்களுமாகிய ப்ரக்ருதி புருஷர்களின் ஸ்வரூபத்தை எனக்குச் சொல்வாயாக. உலகத்தில் தந்தை முதலிய காரண வஸ்துக்களும் புத்ரன் முதலிய கார்ய வஸ்துக்களும் இந்த ப்ரக்ருதி புருஷ ஸ்வரூபங்களேயல்லவா? தந்தையென்றும் புதல்வனென்றும் இவை முதலாக உலகத்தில் வழங்கும் வ்யவஹாரங்களெல்லாம் கேவலம் ப்ரக்ருதியைப் பற்றினவைகளுமல்ல; கேவலம் புருஷனைப் பற்றினவைகளுமல்லவே. ஜகத்தெல்லாம் இந்த ப்ரக்ருதி புருஷ ஸ்வரூபமே அல்லவா. அப்படிப்பட்ட ப்ரக்ருதி புருஷர்களின் ஸ்வரூபத்தை விசதமாகச் சொல்வாயாக.

ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:- தாயே! ப்ரதானத்தையே ப்ரக்ருதியென்று சொல்லுகிறார்கள். அந்த ப்ரதானமாவது யாதென்னில், அது காரணதசையில் பூமி முதலிய விசேஷாகாரங்கள் அற்றிருக்கும். ஆனதுபற்றியே நாமரூபங்களுக்கு இடமல்லாமல் அவ்யக்தமென்று கூறப்படும்; ஸத்வம் ரஜஸ்ஸு தமஸ்ஸு என்கிற மூன்று குணங்களை உடையது. மஹத்து முதலிய தத்வங்களைப்போல் அழியாமல் நித்யமாயிருக்கும். கார்ய தசையில் பூமி முதலிய விசேஷாகாரங்களை உடையது; மஹத்து முதல் ப்ருதிவி வரையிலுமுள்ள காரண ரூபத்தினாலும் ப்ரஹ்மா முதல் பூச்சிப் புழு வரையிலுமுள்ள கார்ய ரூபத்தினாலும் காரணமாயும் கார்யமாயுமிருக்கும். தாயே! ஐந்து பூதங்களும் ஐந்து தன்மாத்ரைகளும் மனதும் அஹங்காரம் மஹத்து அவ்யக்தம் இவை நான்கும் ஜ்ஞானேந்திரியங்கள் கர்மேந்த்ரியங்கள் இவை பத்தும் ஆக இருபத்துநான்கு தத்வங்கள் அடங்கின இக்கூட்டத்தை ப்ரக்ருதியின் கார்யமென்று பெரியோர்கள் கூறுகிறார்கள்.

மஹாபூதங்கள் பூமி ஜலம் அக்னி காற்று ஆகாயம் என்னும் இவை ஐந்தே. தன்மாத்ரங்கள் கந்தம் ரஸம் ரூபம் ஸ்பர்சம் சப்தம் என்னும் இவை ஐந்தே. இவையே எனக்குத் தெரிந்தவை. இந்த க்ரமமே எனக்கு ஸம்மதமானது. காது த்வக்கு (தோல்) கண் நாக்கு மூக்கு இவை ஐந்தும் ஜ்ஞானேந்திரியங்கள். வாக்கு கை கால் ஜலத்வாரம் மலத்வாரம் இவை ஐந்தும் கர்மேந்திரியங்கள். ஆக இந்திரியங்கள் பத்து. அந்தக் கரணமொன்றே தனக்கு அடையாளமாகிய ஸங்கல்பம் அத்யவஸாயம் அபிமானம் சிந்தை என்கிற நான்கு வ்யாபாரங்களால் மனது புத்தி அஹங்காரம் சித்தம் என்று நான்குவிதமாகத் தோன்றும். ஸத்வ ரஜஸ் தமோ குணங்களையுடைய ப்ரக்ருதியின் அவஸ்தா விசேஷம் இத்தனையே. தத்வங்களை உணர்ந்த பெரியோர்கள் இங்கனம் இருபத்து நான்கு தத்வங்கள் என்றே கணக்கிடுகிறார்கள். காலம் இருபத்தைந்தாவது தத்வம். காலத்துடன் சேர்ந்து தத்வங்கள் இருபத்தைந்து. சிலர் பரமபுருஷனுடைய ஸாமர்த்யத்தையே காலமென்கிறார்கள். இந்தக் காலமென்கிற பரமபுருஷனுடைய ஸாமர்த்யத்தினால் ஜகத்திற்கு ஸ்ருஷ்டி ஸம்ஹாராதி ரூபமான ஸம்ஸாரபயம் உண்டாகின்றதென்றும் சொல்லுகிறார்கள். ஆத்மாவல்லாத தேஹத்தில் ஆத்மாபிமானத்திற்கு இடமான அஹங்காரத்தினால் மதி மயங்கித் தன் ஸ்வரூபம் மறையப்பெற்றவனும் தமஸ்ஸென்று சொல்லப்படுகிற ஸூக்ஷ்ம தசையை அடைந்த ப்ரக்ருதியில் ஸம்பந்திருப்பவனுமாகிய ஜீவனுக்கும் ஸத்வ ரஜஸ் தமோ குணங்கள் ஸமமாய் இருக்கப்பெற்றதும் நாம ரூபாதி விசேஷங்கள் அற்றதுமாகிய ப்ரக்ருதிக்கும் சேதனா சேதன ஸ்வரூபமான ஜகத்தாகப் பரிணமிக்கும் வ்யாபாரம் எதனால் உண்டாகின்றதோ, அதுவே காலமென்று கூறப்படும். அது பகவானுக்குச் சரீரமாயிருக்கும். வாராய் மனு சக்ரவர்த்தியின் புதல்வியே! காலத்தின் ஸ்வரூபம் இதுவே உண்மையானதென்று என் அபிப்ராயம். இங்ஙனம் ப்ரக்ருதி புருஷன் காலம் ஆகிய இம்மூன்றையும் உனக்கு விவரித்துச் சொன்னேன். அம்மூன்றும் பகவத் ஸ்வரூபங்களே. அவற்றில் ப்ரக்ருதி ப்ருதிவி முதலிய ஸ்தூல ரூபங்களாகப் பரிணமித்திருக்கையால் அதன் ஸ்வரூபம் ஸ்பஷ்டமாகத் தெரியக்கூடியதே. புருஷன் காலம் இவர்களுக்கு அங்ஙனம் ஸ்தூல ரூபமில்லாமையால் அவர்களை யுக்தியால் கண்டறிய வேண்டும். அவற்றின் ஸ்வரூபம் சாஸ்த்ரத்தினால் ஏற்படக்கூடியதேயன்றி மற்றவிதத்தினால் ஏற்படக்கூடியதன்று. பூமி முதலிய ஐந்து பூதங்களால் ஏற்பட்ட தேஹங்களுக்குள்ளே இருந்து ஒன்றை ஆசைப்படுவதும் ஒன்றை த்வேஷிப்பதும் ஸுகிப்பதும் துக்கிப்பதுமாக எவன் தோற்றுகிறனோ அவனே புருஷனென்றும் ஜீவனென்றும் க்ஷேத்ரஜ்ஞனென்றும் ஆத்மாவென்றும் ஜீவாத்மாவென்றும் ப்ரத்யகாத்மாவென்றும் கூறப்படுகின்றான். இச்சை த்வேஷம் ஸுகம் துக்கம் இவை ஜ்ஞான ஸ்வரூபங்களாகையால் இவை அசேதனமான ப்ரக்ருதியின் தர்மங்களாக மாட்டா. இவற்றால் ஜீவன் சரீரத்திற்குள்ளே இருக்கின்றானென்று அறியவேண்டும். தேஹங்களைப்பற்றி இருக்கிறதென்றும் இருந்ததென்றும் வரப்போகிறதென்றும் வழங்கிவரும் வ்யவஹாரங்கள் காலத்தைச் சேர்ந்தவைகளே. இந்த வ்யவஹாரங்களால் காலமென்பது உண்டென்று தெரியவருகின்றது. இந்த ஜீவனும் காலமும் பகவத் ஸ்வரூபர்களே. ப்ருத்வி முதலிய தத்வங்களின் ஸமுதாயத்தினால் ஏற்பட்டவைகளான சரீரங்களுக்குள் இச்சை த்வேஷம் ஸுகம் துக்கம் ஆகிய இவை முதலியவற்றிற்கிடமான ஜீவாத்ம ஸ்வரூபத்தினாலும், அந்த சரீரங்களுக்கு வெளியில் கால ஸ்வரூபத்தினாலும் எவன் தன் ஸங்கல்பத்தினால் தோற்றுகிறானோ, அவனே பரமபுருஷன். ஆனால் ஜீவாத்மாக்களும் காலமும் பகவானைக் காட்டிலும் வேறுபட்டவர்களன்றொவென்னில், வேறுபட்டவர்களே. ஆயினும் அவனுக்கு உட்பட்டவர்களானது பற்றி அவனே இவரென்னும்படி தோற்றுகின்றனர். பரமபுருஷன் தன் ஸங்கல்பத்தினால் சரீரங்களுக்குள்ளே இருக்கின்ற ஜீவாத்மாக்களுக்கும் வெளியில் காலத்திற்கும் நியாமகனாய் இருக்கின்றான். ஆகையால் ப்ரக்ருதி புருஷன் காலம் இம்மூவரும் பரமபுருஷனுக்குச் சரீரமாயிருப்பவர். பரமபுருஷன் தனக்குச் சரீரமாயிருப்பதும் தன் ஸங்கல்பத்தினால் ஸத்வாதிகுணங்கள் ஸமமாயிருக்கை தவிர்த்து ஏற்றக்குறைவாகக் கலங்கப் பெற்றிருப்பதுமாகிய ப்ரக்ருதியில் மஹத்து முதலிய ப்ரபஞ்சத்தைப் படைக்கும் ஸாமர்த்யத்தை ஏறிட்டான். ப்ரபஞ்சமாகிற முளையை விளைவிக்குந் திறமையுடையவனும் (ஜகத்காரணனும்) நீர்விகாரனுமாகிய பகவான் தன் சரீரமாகிய ப்ரக்ருதியில் மறைந்திருக்கிற ஜகத்தை வெளியிட விரும்பித் தன் ஸங்கல்ப ரூப ஜ்ஞானத்தினால் ஜீவாத்மாக்களுக்கு ஜ்ஞான ஸங்கோசத்தை விளைவிப்பதாகிய தமோ குணத்தைப் பானஞ்செய்தான், (ப்ரளயத்தில் ஸத்வ ரஜஸ் தமஸ்ஸுக்கள் என்கிற ப்ரக்ருதியின் குணங்கள் மூன்றும் ஸமமாயிருக்கும். பரமபுருஷன் அந்த ப்ரக்ருதியைக் கொண்டு ஜகத்தைப் படைக்கவிரும்பி அதன் குணங்கள் மூன்றில் தமோகுணத்தைத் தன் ஸங்கல்பத்தினால் தலைசாய்த்து ஸத்வகுணம் தலையெடுக்கச் செய்தான்).

ஸத்வகுணம் தலையெடுக்கப் பெற்றதும் தமோகுணம் தலை சாய்ந்திருப்பதும் நிர்மலமாகி ப்ரகாசத்தை விளைவிப்பதும் ஆனதுபற்றியே பகவானுடைய ஸாக்ஷாத்காரத்திற்கு இடமாயிருப்பதும் வாஸுதேவன் என்கிற பகவானுடைய வ்யூஹாவதாரத்தினால் அதிஷ்டானம் செய்யப்பெற்றதும் அந்தக்கரணத்தின் பிரிவாகிய சித்தத்திற்கு அனுக்ராஹகமும் (உதவி செய்வதும்) மூலப்ரக்ருதி எனப்படுவதுமாகிய அவ்யக்தமானது மஹத்தத்வமாகப் பரிணமித்தது. அந்த மஹத்தத்வத்திற்கும் வாஸுதேவனே அதிஷ்டாதாவானான். அவ்யக்தமென்கிற ப்ரக்ருதியினால் உதவி செய்யப்பெற்ற அந்தக்கரணம் சித்தமென்று பேர் பெறுகின்றது. அந்தக்கரணத்திற்கு அவ்யக்தம் செய்யும் உதவி எங்ஙனம் தெரியுமென்னில், சொல்லுகிறேன் கேள். 

பகவானுடைய திவ்யமங்கள விக்ரஹத்தைக் கண்டபடியே தரிக்கும் திறமையாகிற (தெளிவும்) ஸ்வச்சத்வமும் கவலையற்றிருக்கையும் ரஜஸ் தமோ குணங்களால் தீண்டப் பெறாமையும் ஆகிய இவ் அடையாளங்களால் அந்தக்கரணத்திற்கு அவ்யக்தம் செய்யும் உதவியைக் கண்டறியலாம். அலை நுரை முதலிய விகாரங்கள் எவையுமின்றி ஜலம் இயற்கையில் நிர்மலமாயிருப்பது போல், அந்தக்கரணம் எப்பொழுது வேறு விகாரங்களின்றிக் கீழ்ச்சொன்ன ஸ்வச்சத்வம் முதலிய குணங்கள் உண்டாகப் பெற்றிருக்குமோ, அப்பொழுது அவ்யக்தத்தினால் உதவிசெய்யப் பெற்றதென்று அறியலாம். இங்ஙனம் அவ்யக்தத்தினால் உதவி செய்யப்பெற்ற அந்தக்கரணமே சித்தமென்று கூறப்படும். அத்தகைய அவ்யக்தத்தினின்று மிகுந்த ஒளியுடைய மஹத்தத்வம் உண்டாயிற்று. அந்த மஹத்தத்வம் பகவானுடைய ஸங்கல்பத்தினால் தூண்டப்பெற்று ஸ்ருஷ்டிக்க முயன்றது. அத்தகையதான அந்த மஹத்தத்வத்தினின்று அஹங்கார தத்வம் உண்டாயிற்று. இவ்வஹங்காரம் வைகாரிகமென்றும் தைஜஸமென்றும் தாமஸமென்றும் மூன்றுவகைப்பட்டிருக்கும்; செயல்களில் முயற்சியை விளைவிப்பதாகிய ரஜோகுணம் தலையெடுக்கப் பெற்ற இந்த அஹங்கார தத்வத்தினின்றே மனது ஜ்ஞானேந்திரியங்கள் கர்மேந்திரியங்கள் ஆகாயம் முதலிய பஞ்ச மஹா பூதங்கள் சப்தாதி விஷயங்கள் தன்மாத்ரங்கள் ஆகிய இவையெல்லாம் உண்டாயின. ஆயிரம் தலைகளை உடையவனும் அனந்தனென்று கூறப்படுமவனும் ஸாக்ஷாத் பாமபுருஷனுடைய வ்யூஹாவதாரமுமாகிய ஸங்கர்ஷண பகவான் இந்த அஹங்கார தத்வத்திற்கு அதிஷ்டாதாவென்று சொல்லுகிறார்கள். ஆத்மாவினிடத்தில் கர்த்ருத்வாபிமானம் (போதல் வருதல் முதலிய செயல்களுக்கு இடமென்கிற அபிமானம்) இந்த்ரியாபிமானம் தேஹாபிமானம் ஆகிய இவை எப்பொழுது உண்டாகின்றனவோ, அப்பொழுது அந்தக்கரணம் அஹங்கார தத்வத்தினால் உதவிசெய்யப் பெற்றதென்றறியலாம். இந்த அஹங்கார தத்வத்தினால் உதவி செய்யப்பெற்ற அந்தக்கரணம் அஹங்காரமென்னும் பேர் பெறும். ப்ரகாசம் உண்டாயிருக்கை கவலையுற்றிருக்கை மயங்கியிருக்கை இவையும் அஹங்காரத்திற்கு அடையாளங்களாம். ப்ரகாசம் உண்டாயிருக்கை ஸாத்விகாஹங்காரத்திற்குலக்ஷணம். கவலையுற்றிருக்கை ராஜஸாஹங்காரத்திற்கு லக்ஷணம். மயங்கியிருக்கை தாமஸாஹங்காரத்திற்கு லக்ஷணம். ப்ரகாசமுண்டாயிருக்கை முதலிய குணங்கள் எப்பொழுது மனத்திற்கு உண்டாகின்றனவோ, அப்பொழுது மனம் அஹங்கார தத்வத்தினால் உதவி செய்யப்பெற்றதென்று அந்தக்காரணத்திற்கு அஹங்காரம் செய்யும் உதவியை இக்குணங்களாலும் அறியக்கூடும். மூன்று வகைப்பட்ட அவ்வஹங்காரத்தில் வைகாரிகமென்கிற அஹங்காரம் பகவானுடைய ஸங்கல்பத்தினால் தூண்டப்பெற்று ஸ்ருஷ்டியில் முயற்சிகொண்டது. அத்தகைய அவ்வைகாரிக அஹங்காரத்தினின்று மனஸ்தத்வம் உண்டாயிற்று. அந்தக் கரணம் தைஜஸ அஹங்காரத்தினால் உதவிசெய்யப்பெற்று ஸங்கல்ப விகல்பங்களைப் பெறுகின்றது, அத்தகைய அந்தக்கரணமே மனதென்று அறியவேண்டும். ஸங்கல்பமாவது தேஹாதிகளையும் ஆத்மாவையும் ஒன்றென்று நினைக்கை. விகல்பமாவது பல விஷயங்களைச் சிந்திக்கை. இவை தைஜஸ அஹங்காரத்தினால் உதவி செய்யப்பெற்ற அந்தக்கரணத்திற்கு அடையாளங்களாம். இந்த மனஸ் தத்வத்திற்குக் காரணமான வைகாரிக அஹங்காரத்திற்கு ப்ரத்யும்ன பகவான் அதிஷ்டாதா. தைஜஸ அஹங்காரத்திற்கு அநிருத்த பகவான் அதிஷ்டாதா. தைஜஸ அஹங்காரத்தின் கார்யமான இந்திரியங்களுக்கும் அவனே அதிபதி. அவன் சரத்காலத்தில் மலர்ந்த கருநெய்தல் போல் கறுத்த நிறமுடையவன்; ரிஷிகளால் மெல்லமெல்ல யோகமார்க்கத்தில் புகுந்து நன்கு ஆராதிக்கத் தகுந்தவன். இத்தகையனான அநிருத்தனென்கிற வ்யூஹதவமதரத்தினால் தைஜஸாஹங்காரம் அதிஷ்டானஞ் செய்யபெற்றதென்று பெரியோர்கள் சொல்லுகிறார்கள். 

வாராய் பதிவ்ரதையே! அந்தத் தைஜஸாஹங்காரம் பகவானுடைய ஸங்கல்பத்தினால் தூண்டப்பெற்று ஸ்ருஷ்டிக்க முயன்றது. அதினின்று புத்திதத்வம் உண்டாயிற்று, இந்த புத்தி தத்வம் இந்திரியங்களுக்கு உதவிசெய்யும் தன்மையது. ஸாமான்யமாய் வஸ்துக்களின் விசேஷம் தோற்றாமல் வஸ்துமாத்ரம் தோற்றுகையும் ஸம்சயமும் அந்யதா ஜ்ஞான விபரீத ஜ்ஞானங்களும் நிச்சயமும் ஸ்மரணமும் (முன்பு ஒருக்கால் அனுபவித்த வஸ்துவைப் பற்றின அறிவும்) நித்ரையும் ஆகிய இவை தனித்தனியே புத்தியின் வ்யாபாரங்கள். இந்த இந்திரியங்கள் புத்தி தத்வத்தினால் உதவிசெய்யப்பெற்று இந்த அறிவுகளை விளைக்கின்றன. இவையே புத்தி தத்வத்தின் உதவிக்கு அடையாளங்கள். கர்மேந்திரியங்கள் என்றும் ஜ்ஞானேந்த்ரியங்கள் என்றும் இருவகைப்பட்ட இந்திரியங்களும் தைஜஸ அஹங்காரத்கினால் உதவி செய்யப்பெற்ற வைகாரிக அஹங்காரத்கினின்று உண்டானவை. இவ்விருவகை இந்த்ரியங்களும் கேவலமானவை காரிகத்தினின்று உண்டாயிருக்குமாயின், கர்மேந்திரியங்களுக்குள்ள க்ரியாசக்தியும் ஜ்ஞானேந்திரியங்களுக்குள்ள ஜ்ஞானசக்தியும் பொருந்தாது. ஆகையால் தைஜஸ அஹங்காரத்தினால் உதவி செய்யப்பெற்ற வைகாரிக அஹங்காரத்தினின்றே இருவகை இந்த்ரியங்களும் உண்டாகின்றன. ஆனால் இரண்டுக்கும் இரண்டு சக்திகளும் உண்டாக வேண்டாவோவென்னில், சொல்லுகிறேன் கேட்பாயாக. 

வைகாரிகத்தினின்று ஜ்ஞானேந்திரியங்கள் உண்டாகும்பொழுது, அவ்வைகாரிகத்தில் ஸத்வகுணம் தலையெடுத்து ரஜோகுணம் மறைந்திருக்கின்றது. கர்மேந்திரியங்கள் உண்டாகும் ஸமயத்தில் ரஜோகுணம் தலையெடுத்து ஸத்வகுணம் மறைந்திருக்கின்றது. ஆகையால் ரஜோகுணம் தலையெடுக்கப்பெற்ற வைகாரிகத்தினின்று உண்டான கர்மேந்த்ரியங்களில் க்ரியாசக்தியும், ஸத்வகுணம் தலையெடுத்த வைகாரிகத்தினின்று உண்டான ஜ்ஞானேந்திரியங்களில் ஜ்ஞானசக்தியும் நியதமாயிருக்கின்றன. தாமஸாஹங்காரம் பகவானுடைய ஸங்கல்பத்தினால் தூண்டப்பெற்று ஸ்ருஷ்டிக்கமுயன்றது. அதினின்று சப்த தன்மாத்ரம் உண்டாயிற்று. அதினின்று ஆகாசமென்கிற மஹாபூதம் உண்டாயிற்று. அந்த சப்தத்தை அறிவிப்பது ச்ரோத்ரேந்த்ரியம். அந்த சப்தம் அர்த்தத்தை மொழியும் தன்மையது; ஸர்வஜ்ஞனான பகவானை அறிவதற்கு ப்ரமாணமாயிருக்கும். பகவான் சாஸ்த்ரங்களால் அல்லது மற்ற எந்த ப்ரமாணங்களாலும் அறியக்கூடியவனல்லன். சாஸ்த்ரங்களெல்லாம் சப்தமயங்களே. அன்றியும் வஸ்துக்களைப் பார்க்கும் புருஷனுக்கு அவற்றின் நாமங்களான சப்தங்கள் தோற்றும். சப்தத்தைக் கேட்டபொழுதே அதன் பொருள் தோற்றும். அந்த சப்தம் ஆகாயத்தின் ஸூக்ஷ்ம ஸ்வரூபமாயிருக்கும். அன்றியும், அது ஆகாயத்திற்கு அஸாதாரணமான குணம். இவையே சப்த தன்மாத்ரத்தின் ஸ்வரூபமென்று பெரியோர்கள் நினைக்கின்றார்கள். ப்ரஹ்மதேவன் முதல் பூச்சிப் புழுவரையிலுமுள்ள ஸமஸ்த பூதங்களுக்கும் உள்ளும் புறமும் அவகாசம் கொடுக்கையும் இந்திரியங்களுக்கும் ஆத்மாவுக்கும் ஸ்தானமாயிருக்கையும் ஆகாயத்தின் ஸ்வரூபம். சப்த தன்மாத்ரத்தை அஸாதாரண தர்மமாகவுடையதும் காலத்தைச் சரீரமாகவுடைய பகவானுடைய ஸங்கல்பத்தினால் ஸ்ருஷ்டிக்க முயன்றிருப்பதுமாகிய ஆகாயத்தினின்று ஸ்பர்ச தன்மாத்ரம் உண்டாயிற்று. அதினின்று வாயுவென்னும் மஹாபூதம் உண்டாயிற்று, இந்த ஸ்பர்ச தன்மாமரத்தை அறிவிப்பது த்வகிந்த்ரியம், மெதுவாயிருத்தல் கடினமாயிருத்தல் குளிர்ச்சி வெப்பம் ஆகிய இவையும், வாயுவுக்கு அஸாரண குணமாயிருத்தலும் ஸ்பர்சத்திற்கு லக்ஷணம். வ்ருக்ஷத்தின் கிளை முதலியவற்றை அசக்குதலும் சேர்ந்திருப்பவைகளைப் பிரித்தலும் அசையுமவைகளை ஒன்றோடொன்று சேர்த்தலும் கந்தமுள்ள வஸ்துவை க்ராணேந்தரியத்தில் சேர்ப்பிக்கையும் தூரத்திலுள்ள சப்தத்தை ஸ்ரோத்ரேந்தரியத்தில் சேர்ப்பிக்கையும் ஸமஸ்த இந்திரியங்களுக்கும் தாரகமாயிருக்கையும் வாயுவின் கார்யங்கள். இவை வாயுவுக்கு லக்ஷணம். ஸ்பர்ச தன்மாத்ரத்தை அஸாதாரண தர்மமாகவுடையதும் பகவானுடைய ஸங்கல்பத்தினால் தூண்டப்பட்டதுமாகிய வாயுவினின்று ரூப தன்மாத்ரம் உண்டாயிற்று. அதினின்று தேஜஸ்ஸென்னும் மஹாபூதம் உண்டாயிற்று. 

வாராய் கல்லியற்கையுடையவளே! அந்த ரூபத்தை அறிவிப்பது சக்ஷுரிந்த்ரியம். தன்னைக் குணமாகவுடைய தேஜஸ்ஸு முதலிய பூதங்களை ஆகாசாதி பூதங்களைக் காட்டிலும் வேறுபட்டதாக்கித் தெரிவிக்கையும் என்றும் த்ரவ்யங்களை விட்டுப் பிரியாதிருக்கையும் ஒரு வஸ்துவை மற்றொரு வஸ்துவைக் காட்டிலும் வேறுபட்டதாக்கித் தோற்றுவிக்கையும் தேஜஸ்ஸுக்கு அஸாதாரண குணமாயிருக்கையும் ரூப தன்மாத்ரத்தின் லக்ஷணங்களாம். வெளிச்சம் கொடுக்கையும் அரிசி முதலியவற்றைப் பக்வஞ் செய்கையும் பசி தாஹங்களை விளக்கையும் தண்ணீர் குடிக்கச் செய்கையும் புசிக்கச் செய்கையும் குளிரைப் போக்குகையும் ஈரமானவற்றை உலர்த்துகையும் ஆகிய இவை தேஜஸ்ஸின் கார்யங்கள். பரமபுருஷனால் தூண்டப்பெற்றதும் ஸ்ருஷ்டிக்க முயன்றதுமாகிய அந்தத் தேஜஸ்ஸினின்று ரஸதன்மாத்ரம் உண்டாயிற்று. அதினின்று அப்பென்னும் மஹாபூதம் உண்டாயிற்று. அந்த ரஸத்தை அறிவிப்பது ரஸனேந்த்ரியம் (ரஸனேந்திரியமாவது நாக்கின் நுனியிலிருக்கும் ஓர் சக்தி விசேஷம்). ரஸம் ஒருவகைப்பட்டதாயினும் உடன் சேரும் வஸ்துக்களின் விகாரத்தினால் துவர்ப்பு தித்திப்பு கசப்பு புளிப்பு உவர்ப்பு என்று பலவாறு பிரிந்திருக்கும். நனைத்தலும் உருண்டையாகச் செய்தலும் திருப்தியை விளைவித்தலும் ஜீவிக்கச் செய்தலும் பசி தாஹங்களால் விளையும் சோர்வைப் போக்குதலும் தாபத்தைப் போக்குதலும் மேன்மையை உண்டாக்குதலும் கிணறு முதலிய இடங்களில் எவ்வளவு இறைப்பினும் மேல் மேல் சுரந்து வளர்தலும் மற்ற பூதங்களைக் காட்டிலும் மிகுந்திருத்தலும் ஆகிய இவை ஜலத்தின் கார்யங்கள். பரமபுருஷனால் தூண்டப்பட்டதும் ஸ்ருஷ்டிக்க முயன்றதுமாகிய அந்த ஜலதத்வத்தினின்று கந்ததன்மாத்ரம் உண்டாயிற்று. 
அதினின்று ப்ருதிவி (பூமி) யென்னும் மஹாபூதம் உண்டாயிற்று. கந்தத்தை அறிவிப்பது க்ராணேந்தரியம், (க்ராணேந்த்ரியமாவது மூக்கின் நுனியிலுள்ள ஓர் சக்தி விசேஷம்.) கந்தம் ஒரு வகைப்பட்டதாயினும் உடன் சேரும் வஸ்துக்களின் வைஷம்யத்தினால் கரம்பகந்தமென்றும் துர்க்கந்தமென்றும் நற்கந்தமென்றும் சாந்த கந்தமென்றும் உக்ரகந்தமென்றும் அம்லகந்தமென்றும் பலவகைப்படும். கரம்பகந்தமாவது -- வ்யஞ்ஜனம் முதலியவற்றிற்குப் பெருங்காயம் முதலியவற்றை விட்டுச்செய்யும் ஸம்ஸ்காரத்தினால் விளையும் கந்தம். இதை மிஸ்ரகந்தமென்றும் சொல்லுவார்கள். மிஸ்ரகந்தமாவது பல வஸ்துக்களின் கலப்பினால் உண்டாகும் மணம். துர்க்கந்தம் அமேத்யாதிகளில் உள்ளது. கற்பூராதிகளின் கந்தம் கற்கந்தமாம். இதையே ஸுகந்தமென்றும் ஸுரபிகந்தமென்றும் நன்மணமென்றும் நல்லவாஸனையென்றும் சொல்லுவார்கள். தாமரை மலர் முதலியவற்றின் கந்தம் சாந்த கந்தமாம். (நெடியில்லாத மணம்.) பூண்டு வெங்காயம் முதலியவற்றின் கந்தம் உக்ரகந்தமாம். (நெடியுள்ள மணம்). அம்லகந்தமாவது-புளிச்ச நாற்றம். இது பழைய அன்னம் முதலியவற்றிலுள்ளது. குடம் முதலிய வஸ்துக்களை உண்டாக்குகையும் ப்ரதிமாதி ரூபத்தினால் பரப்ரஹ்மத்தின் ஆகாரத்தைக் காட்டுகையும் மற்ற பூதங்களை எதிர்பாராமல் தானே நிலை நின்றிருக்கையும் ஜங்கமஸ்தாவரங்களுக்கு ஆதாரமாயிருக்கையும் செடி மரம் நெல் முதலிய வஸ்துக்களுக்கு தேசபேதத்தினால் விசேஷத்தை விளைவிக்கையும் ஸமஸ்த ப்ராணிகளுடைய ஆகார பேதத்தை வெளியிடுகையும் மற்ற பூதங்களிலுள்ள சப்தாதி குணங்களெல்லாம் அமைந்திருக்கையும் ஆகிய இவை ப்ருதிவியின் கார்யங்கள், ஆகாசத்தின் குண விசேஷமாகிய சப்தம் எதனால் அறியப்படுகின்றதோ, அதை ச்ரோத்ரேந்த்ரியமென்று சொல்லுவார்கள். (ஆகாசத்தின் அஸாதாரண குணமான சப்தத்தை க்ரஹிக்கையே ஸ்ரோத்ரேந்தரியத்திற்கு லக்ஷணம்). வாயுவின் அஸாதாரண குணமான ஸ்பர்சத்தை எது க்ரஹிக்கிறதோ, அது வாகிந்த்ரியமென்று கூறப்படும். தேஜஸ்ஸின் அஸாதாரண குணமான ரூபத்தை எது க்ரஹிக்கின்றதோ, அது சக்ஷுரிந்தரியமென்று சொல்லப்படும். ஜலத்தின் அஸாரணகுணமான ரஸத்தை எது க்ரஹிக்கிறதோ, அதை ரஸனேந்த்ரியமென்று சொல்லுவார்கள். பூமியின் அஸாதாரண குணமான கந்தத்தை எது க்ரஹிக்கின்றதோ (அறிகிறதோ) அதை க்ராணேந்த்ரியமென்று சொல்லுவார்கள். காரணமான ஆகாசாதி பூதத்தின் குணமான சப்தாதிகள் அதன் கார்யமான வாயு முதலியவற்றில் தொடர்ந்து வருகின்றனவென்று தெரிகின்றது. ஆகையால் ஆகாசம் முதலிய நான்கு பூதங்களின் குணங்களும் பூமியில்தான் புலப்படுகின்றன. மஹத்தத்வம் முதலிய (மஹத்து அஹங்காரம் ஆகாசம் வாயு தேஜஸ்ஸு ஜலம் பூமி ஆகிய) (தன்மாத்ரங்கள் பூதங்களிலும் இந்திரியங்கள் அஹங்காரத்திலும் அடங்கினதாகக் கருதி ஏழென்று கூறப்பட்டது.) இவ்வேழு தத்வங்களும் ஒன்றோடொன்று சேராதிருக்கையில், (ஒன்றோடொன்று சேராமல் அண்டத்தை ஸ்ருஷ்டிக்க முடியாதிருக்கையில்) அதுகண்டு ஜகதீஸ்வரன் காலம் கர்மம் ஸத்வாதி குணங்கள் ஆகிய இவற்றோடு கூடி அந்த மஹதாதி தத்வங்களில் ப்ரவேசித்தான். பின்பு அந்த பகவானுடைய அனுப்ரவேசத்தினால் அம்மஹதாதி தத்வங்களேழும் ஒன்றோடொன்று கலந்து பேதம் தெரியாதபடியும் பிரிக்க முடியாதபடியும் சேர்ந்தன. அவற்றினின்று அசேதனமான அண்டம் உண்டாயிற்று. எந்த அண்டத்தினின்று ப்ரஹ்மதேவன் உண்டானான். அத்தகையதும் உள்ளே சேதன ப்ரவேசமில்லாமையால் அசேதனமுமாகிய அண்டத்தை அம்மஹதாதி தத்வங்கள் உண்டாக்கின. இவ்வண்டம் விசேஷமென்னும் பேருடையது. இது வெளியில் ப்ரக்ருதியால் சூழப்பட்டனைகளும் ஒன்றுக்கொன்று பத்துமடங்கு அதிகமாயிருப்பவைகளுமாகிய ஜலம் முதலிய தத்வங்களால் சுற்றிலும் மூடப்பெற்றிருக்கும். இவ்வண்டத்தில் பகவானுக்குச் சரீரமாகிய தேவ மனுஷ்யாதி லோகங்களின் விஸ்தாரமெல்லாம் அடங்கியது. அத்தகையதான இவ்வண்டமும் அந்த பகவானுக்குச் சரீரமாயிருப்பதே. இங்ஙனம் மஹத்தத்வம் முதல் நான்முகன் வரையிலுமுள்ள வஸ்துக்களின் ஸ்ருஷ்டியைச் சொன்னேன். இனி தேவாதி ஸ்ருஷ்டியைச் சொல்லுகின்றேன். கேட்பாயாக. 

ஜலத்தில் மிதந்து கொண்டிருப்பதும் ஸ்வர்ணம்போல் பளபளவென்று மிகவும் ப்ரகாசிப்பதுமாகிய அந்த அண்டத்திற்குள் சயனித்துக் கொண்டிருந்த அநிருத்த ரூபியான பகவான் அவ்வண்டத்தினின்று எழுந்து (ஸ்ருஷ்டி வ்யாபாரத்தில் முயன்று) ப்ரஹ்மாவினிடத்தில் ஆவேசித்து தேவர்களில் சிறந்த அம்மஹானுபாவன் ஸமஷ்டி புருஷனாகிய ப்ரஹ்மாவின் சரீரத்திலுள்ள இந்த்ரிய ஸமூஹத்தைப் பலவாறாகப் பிரித்தான். இந்த ப்ரஹ்மதேவனிடத்தினின்று முதலில் முகம் உண்டாயிற்று. (ஸமஷ்டி புருஷனாகிய ப்ரஹ்மாவின் சரீரத்தினுடைய முகத்தினின்று தேவாதிகளின் வாகிந்த்ரியத்திற்கு அதிஷ்டானமான முகம் உண்டாயிற்று.) அப்பால் வாகிந்த்ரியத்தினின்று அதற்கு அதிஷ்டான தேவதையான அக்னி உண்டானான். பிறகு இந்த ப்ரஹ்மாவிடத்தினின்று மாணேந்த்ரியத்திற்கு அதிஷ்டானமாகிய நாஸிகைகள் (மூக்குரந்த்ரங்கள் ) உண்டாயின. நாஸிகைகளினின்று க்ராணேந்த்ரியம் உண்டாயிற்று. இந்த க்ராணேந்த்ரியம் ப்ராணனுக்கு அதீனமாயிருப்பது. க்ராணேந்திரியமொன்று மாத்ரமேயல்லாமல் இந்திரியங்கள் அனைத்துமே ப்ராணனுக்கு அதீனமாயிருப்பவை. பிறகு அந்த க்ராணேக்த்ரியத்தினின்று அதற்கு அதிஷ்டான தேவதையான வாயு உண்டானான். பிறகு சக்ஷுரிந்தரியத்திற்கு அதிஷ்டானங்களாகிய கண்கள் உண்டாயின. அதினின்று சக்ஷுரிந்த்ரியம் உண்டாயிற்று. அந்தச் சக்ஷுரிந்தரியத்தினின்று அதற்கு அதிஷ்டான தேவதையான ஸுர்யன் உண்டானான். பிறகு ஸ்ரோத்ரேந்தரியத்திற்கு அதிஷ்டானங்களாகிய காதுகள் உண்டாயின. அந்தக் காதுகளினின்று ச்ரோத்ரேந்த்ரியமும், அந்த ச்ரோத்ரேந்தரியத்தினின்று அதற்கு அதிஷ்டான தேவதையான திக்குகளும் உண்டாயின. ப்ரஹ்மாவினிடத்தினின்று த்வகிந்த்ரியத்திற்கு அதிஷ்டானமாகிய ரோமங்களும் மீசை முதலியவைகளும் உண்டாயின. பிறகு த்வகிந்த்ரியமும், அதற்கு அதிஷ்டான தேவதையாகிய ஓளஷதிகளும் உண்டாயின. பிறகு உபஸ்தேந்த்ரியத்திற்கு அதிஷ்டானமான ஆண்குறி பெண்குறிகளும், அவற்றினின்று உபஸ்தேந்த்ரியமும், அதினின்று அதற்கு அதிஷ்டான தேவதையான அப்புக்களும் (ஜலமும்) உண்டாயின. பிறகு பாயு என்கிற இந்த்ரியத்திற்கு அதிஷ்டானமும் குதமென்று கூறப்படுவதுமாகிய மலத்வாரம் உண்டாயிற்று. அதினின்று அபானமென்று சொல்லப்படுவதாகி பாயு வென்கிற இந்த்ரியமும் அந்தப் பாயுவினின்று அதற்கு அதிஷ்டான தேவதையும் லோக ஸம்ஹாரகனாகையால் உலகங்களுக்கெல்லாம் பயங்கரனுமாகிய ம்ருத்யுவும் உண்டானார்கள். பிறகு பாணியென்கிற இந்திரியத்திற்கு அதிஷ்டானமாகிய ஹஸ்தங்களும், அந்த ஹஸ்தங்களினின்று பலமென்று கூறப்படுவதாகிய பாணியென்கிற இந்த்ரியமும், அந்தப் பாணியினின்று அதற்கு அதிஷ்டான தேவதையான இந்த்ரனும் உண்டானார்கள். இந்த ப்ரஹ்மாவினிடத்தினின்று ரக்தத்திற்கு அதிஷ்டானமாகிய சாடிகளும் (நரம்புகளும்) அவற்றினின்று பரிபூர்ணமான ரக்தமும், அதினின்று அதற்கு அதிஷ்டான தேவதையான நதிகளும் உண்டாயின. பசி தாஹங்களுக்கு அதிஷ்டானமாகிய உதரமும் (வயிறும்) அதினின்று பசி தாஹங்களும், அவற்றினின்று அவற்றிற்கு அதிஷ்டான தேவதையான ஸமுத்ரமும் உண்டாயின. பிறகு புண்டரீகம் (செந்தாமரை மலர்) போன்ற உருவமுடையதும் அந்தக் கரணமென்கிற இந்த்ரியத்திற்கு அதிஷ்டானமுமாகிய ஹ்ருதயம் உண்டாயிற்று. அந்த ஹ்ருதயத்தினின்று மனதென்று சொல்லப்படுகிற அந்தக்கரணம் உண்டாயிற்று. அந்த மனத்தினின்று அதற்கு அதிஷ்டான தேவதையான சந்த்ரன் உண்டானான். மீளவும் கமலாகாரமான அந்த ஹ்ருதயத்தினின்றே புத்தியென்கிற இந்த்ரியம் உண்டாயிற்று. இது வ்யவஸாயமென்னும் வ்யாபாரத்தையுடையது. அதற்கு ப்ரஹ்மதேவனே அதிஷ்டான தேவதையானான். மீளவும் அந்த ஹ்ருதயத்தினின்று அஹங்காரமென்கிற இந்த்ரியம் உண்டாயிற்று. இது அபிமானமென்னும் வ்யாபாரத்தையுடையது. அதற்கு அதிஷ்டானதேவதை ருத்ரன். மீளவும் ஹ்ருதயத்தினின்று சித்தமென்கிற இந்த்ரியம் உண்டாயிற்று, அது சித்தமென்னும் வ்யாபாரத்தையுடையது. அதற்கு அதிஷ்டானதேவதையான சைத்யனென்னும் க்ஷேத்ரஜ்ஞன் உண்டானான். இந்த இந்த்ரியங்களும் அவற்றிற்கு அபிமானி தேவதைகளான அக்னி முதலிய தேவதைகளும் ஸமஷ்டி புருஷனாகிய நான்முகனுடைய சரீரத்தினின்று உண்டானார்கள். இவர்கள் உண்டானபின்பும், தேவ மனுஷ்யாதி சரீரங்களை எழுப்பி ஸஞ்சரிக்கை முதலிய கார்யங்களில் உபயோகப்படும்படி செய்ய வல்லராகவில்லை. அந்தந்த தேவதைகளால் அதிஷ்டானம் செய்யப்பெற்ற இந்த்ரியங்கள் மீளவும் அந்த தேவ மனுஷ்யாதி சரீரங்களை எழுப்பிச் செயல்களில் மூட்டுவதற்கு முயன்று அவற்றில் ப்ரவேசித்தன. 

வாகிந்த்ரியத்திற்கு அதிஷ்டான தேவதையான அக்னி வாகிந்த்ரியத்துடன் தேவ மனுஷ்யாதி சரீரங்களின் முகத்தில் ப்ரவேசித்தான். அப்பொழுது இந்த தேவ மனுஷ்யாதி சரீரங்கள் எழுந்து போதல் வருதல் முதலிய செயல்களில் முயற்சி கொள்ளவில்லை. க்ராணேந்த்ரியத்திற்கு அதிஷ்டான தேவதையாகிய வாயு க்ராணேந்த்ரியத்துடன் மூக்கில் ப்ரவேசித்தான். அதனாலும் அந்த தேவ மனுஷ்யாதி சரீரங்கள் எழுந்து செயல்களில் முயற்சிகொள்ளும் வல்லமை உண்டாகப்பெறவில்லை, சக்ஷுரிந்த்ரியத்திற்கு அதிஷ்டான தேவதையான ஆதித்யன் (ஸுர்யன்) சக்ஷுரிந்த்ரியத்துடன் கண்களில் ப்ரவேசித்தான். அப்பொழுதும் அந்த தேவ மனுஷ்யாதி சரீரங்கள் எழுந்து செயல்களில் முயற்சிகொள்ளும் வல்லமை உண்டாகப் பெறவில்லை. 

ச்ரோத்ரேந்த்ரியத்திற்கு அதிஷ்டான தேவதையாகிய திக்குகள் ஸ்ரோத்ரேந்த்ரியத்துடன் காதுகளில் ப்ரவேசித்தன. அப்பொமுதும் அந்தச் சரீரங்கள் செயல்களில் முயற்சிகொள்ளும் வல்லமை உண்டாகப்பெறவில்லை. சோமங்களுக்கு அதிஷ்டானதேவதையான ஔஷதிகள் அந்த ரோமங்களுடன் த்வக்கில் (தோலில் ப்ரவேசித்தன. அப்பொழுதும் அந்தச் சரீரங்கள் செயல்களில் முயற்சிகொள்ளும் வல்லமை உண்டாகப்பெறவில்லை. உபஸ்தேந்த்ரியத்திற்கு அதிஷ்டான தேவதையாகிய அப்புக்கள் (ஜலம் - உபஸ்தேந்த்ரியத்துடன் ஆண்குறி பெண்குறி இவைகளில் ப்ரவேசித்தன. அதனாலும் அந்தச் சரீரங்கள் செயல்களில் முயற்சிகொள்ளும் வல்லமை உண்டாகப்பெறவில்லை. பாயுவென்கிற இந்த்ரியத்திற்கு ஆதிஷ்டான தேவதையாகிய ம்ருத்யு அந்தப் பாயுவென்கிற இந்த்ரியத்துடன் குதத்தில் (மலத்வாறத்தில்) ப்ரவேசித்தான். அதனாலும் அந்தச்சரீரங்கள் செயல்களில் முயற்சிகொள்ளும் வல்லமை உண்டாகப் பெறவில்லை. பாதமென்கிற இந்த்ரியத்திற்கு அதிஷ்டான தேவதையான ஸ்ரீவிஷ்ணுதேவன் அந்தப் பாதமென்கிற இந்த்ரியத்துடன் பாதங்களில் ப்ரவேசித்தான். அதனாலும் அந்தச்சரீரங்கள் செயல்களில் முயற்சிகொள்ளும் வல்லமை உண்டாகப்பெறவில்லை. பலமென்று சொல்லப்படுகிற பாணீந்த்ரியத்திற்கு அதிஷ்டான தேவதையான இந்த்ரன் அந்தப் பாணீந்த்ரியத்துடன் ஹஸ்தங்களில் ப்ரவேசித்தான். அதனாலும் அந்தச் சரீரங்கள் செயல்களில் முயற்சிகொள்ளும் வல்லமை உண்டாகப்பெறவில்லை. பசி தாஹங்களுக்கு அதிஷ்டான தேவதையான ஸமுத்ரன் அந்தப் பசி தாஹங்களோடு உதரத்தில் ப்ரவேசித்தான். அதனாலும் அந்தச் சரீரங்கள் செயல்களில் முயற்சிகொள்ளும் வல்லமை உண்டாகப் பெறவில்லை. மனஸ்ஸென்கிற அந்தக்கரணத்திற்கு அதிஷ்டான தேவதையாகிய சந்த்ரன் அந்த மனஸ்ஸுடன் ஹ்ருதயத்தில் ப்ரவேசித்தான். 

அதனாலும் அந்தச் சரீரங்கள் செயல்களில் முயற்சிகொள்ளும் வல்லமை உண்டாகப் பெறவில்லை. புத்தியென்கிற அந்தக்கரணத்திற்கு அதிஷ்டான தேவதையாகிய ப்ரஹ்மதேவன் அந்த புத்தியுடன் ஹ்ருதயத்தில் ப்ரவேசித்தான். அதனாலும் அந்தச் சரீரங்கள் செயல்களில் முயற்சிகொள்ளும் வல்லமை உண்டாகப் பெறவில்லை. அஹங்காரத்திற்கு அபிமானிதேவதையாகிய ருத்ரன் அந்த அஹங்காரத்துடன் ஹ்ருதயத்தில் ப்ரவேசித்தான். அதனாலும் அந்தச் சரீரங்கள் செயல்களில் முயற்சிகொள்ளும் வல்லமை உண்டாகப் பெறவில்லை. சித்தமென்கிற இந்த்ரியத்திற்கு அபிமானியாகிய சைத்யனென்கிற க்ஷேத்ரஜ்ஞன் ஹ்ருதயத்தில் எப்பொழுது ப்ரவேசித்தானோ, அப்பொழுதுதான் தேவமனுஷ்யாதி சரீரங்கள் ஜலத்தில் (ஜலத்தில் ஸ்ருஷ்டிக்கப்பட்டதாகிய அண்டத்திற்குள்) புகுந்து செயல்களில் முயற்சி கொள்ளும் வல்லமை உண்டாகப் பெற்றன. தூங்கிக் கொண்டிருக்கும் புருஷனுடைய சரீரத்தை அந்தச் சரீரத்திற்கு அபிமானியாகிய புருஷனுடைய இச்சையில்லாமல் ப்ராணன்கள் இந்திரியங்கள் மனது புத்தி ஆகிய இவைகளெல்லாம் எப்படி தமது பலத்தினால் செயல்களில் முயற்சிகொள்ளும்படி செய்யவல்லவையல்லவோ, அங்ஙனமே அக்னி முதலிய அதிஷ்டான தேவதைகள் தமக்கு அதிஷ்டேயங்களான இந்திரியங்களுடன் தேவமனுஷ்யாதி சரீரங்களில் புகுந்தும் க்ஷேத்ரஜ்ஞனுடைய அனுப்ரவேசமில்லாமல் அந்தச் சரீரங்களைச் செயல்களில் தூண்டவல்லராகவில்லை. ஆகையால் க்ஷேத்ரஜ்ஞனென்றும் சைத்யனென்றும் சொல்லப்படுகின்ற ஜீவனே தேவ மனுஷ்யாதி சரீரங்களில் முக்யன்; மற்ற இந்திரியம் முதலியவைகளும் அவற்றின் அதிஷ்டான தேவதைகளும் அவனுக்கு உதவி செய்பவரேயன்றி முக்யரல்லர். அந்த தேவமனுஷ்யாதி சரீரங்கள் மூலமாய், ஸுகதுக்கங்களை அனுபவிப்பவனாகையால் போக்தாவென்று சொல்லப்படுகிற ஜீவனே முக்யன். பரிசுத்த ஸ்வரூபனாகிய அந்த ப்ரத்யகாத்மாவை (ஜீவனை), யோகத்தில் புத்தியைச் செலுத்தி அந்த புத்தியால் சரீரம் இந்திரியங்கள் புத்தி ப்ராணன் இவை முதலியவற்றைக் காட்டிலும் வேறுபட்டவனென்று விவேகித்தறிந்து பகவத்பக்தியாலும் வைராக்யத்தினாலும் இவன் “ப்ரஹ்மஸ்வரூபன்” என்கிற தத்வஜ்ஞானத்தினாலும் மனத்தில் சிந்திக்கவேண்டும். ஜீவாத்மாவை தேஹாதிகளைக் காட்டிலும் வேறுபட்டவனென்று யோக பரிசுத்தமான புத்தியால் கண்டறிந்து அந்த ஜீவனுக்கும் அந்தராத்மாவான பரமாத்மாவைக் கர்மயோகத்தினாலும் ஜ்ஞான யோகத்தினாலும் பக்தி யோகத்தினாலும் உபாஸிக்கவேண்டும். 

இருபத்தாறாவது அத்யாயம் முற்றிற்று.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக