பஞ்சவடி யுத்தத்திலே அரக்கர் கூட்டத்தில் பிழைத்து ஓடியவர்களில் ஒருவனான அகம்பனன் இலங்கைக்குச் சென்று ராவணன் சந்நிதியில் நின்று, “ஜன ஸ்தானத்தில் இருந்த நம்முடைய ஜனங்கள் அநேகமாக எல்லாரும் மாய்ந்து போனார்கள். ஜன ஸ்தானம் அழிந்தது. நான் எப்படியோ தப்பி வந்தேன்” என்றான்.
இதைக் கேட்டதும் ராவணனுக்குப் பெருங்கோபம் பற்றி எரிந்தது. “யாரடா என் அழகிய ஜன ஸ்தானத்தை அழித்தது? யமனா? அக்கினியா? விஷ்ணுவா? யமனையும் கொல்லுவேன், அக்னியையும் சூரியனையும் சேர்ந்தாற்போல் எரித்து விடுவேன், வாயுவையும் அசையாது மடக்கி நிறுத்துவேன். நான் இருக்க யார் ஜனஸ்தானத்தை அழித்து என் ஆட்களைக் கொன்றது? சொல், உடனே” என்று அடங்காத கோபம் மேலிட்டு ராவணன் எழுந்தான்.
ராக்ஷசேந்திரனுடைய கோபத்தைப் பார்த்து பயந்த அகம்பனன், “அபயம் தந்தால் சொல்கிறேன், கேட்பாய்” என்றான்.
பிறகு அகம்பனன் நடந்த நிகழ்ச்சிகளைச் சொன்னான். “தசரத மகாராஜாவின் குமாரன் ராமன் என்கிற வீரன், சிம்மத்தையொத்த யுவன், பெரும் புகழ் பெற்ற ராஜகுமாரன், மானிடர்களுக்குள் அவனுக்குச் சமானமான பல பராக்கிரமம் பெற்றவர் யாருமில்லை, அவன் பஞ்சவடியில் கரனையும் தூஷணனையும் யுத்தம் செய்து வதம் செய்து விட்டான்” என்றான்.
ராக்ஷசாதிபதி விஷப் பாம்பைப் போல் சீறி, “என்ன நீ சொல்லுவது? இந்திரனும் தேவ கணங்களும் நீ சொன்ன இந்த ராமனுக்குச் சகாயமாக வந்து யுத்தம் செய்தார்களா?” என்றான்.
“மகாராஜாவே! அப்படியொன்றுமில்லை. ராமன் ஒருவனே நம்முடைய முழுச் சேனையையும் சேனைத் தலைவர்களையும் கரனையும் தூஷணனையும் கொன்றான். அவன் செலுத்திய பாணங்கள் ஐந்து தலைப் பாம்புகள் போல் அரக்கர்கள் ஓட ஓடத் துரத்திக்கொண்டு போய் எங்கிருந்தாலும் தொடர்ந்து போய் அவர்களைக் கொன்றன.” இவ்வாறு சொல்லி ராமனுடைய பாணங்களின் வேகத்தையும் அவனுடைய அபார சக்தியையும் விவரித்துச் சொன்னான்.
தசரதன் மகன் ராமன், தம்பி லக்ஷ்மணனுடன் பஞ்சவடியில் இருந்து கொண்டு வேறு உதவியின்றி இந்தக் காரியத்தைச் செய்தான். அவர்களுக்குச் சகாயமாக எந்த தேவர்களும் வரவில்லையென்று அகம்பனன் சொன்னவுடனே, “சரி, இப்போதே நான் புறப்படுகிறேன். இந்த இரண்டு மனிதப் பூச்சிகளை நசுக்கிவிட்டுத் திரும்புகிறேன்!” என்று ராவணன் எழுந்தான்.
“வேண்டாம், நில்!” என்று அகம்பனன் ராவணனை நிறுத்தி ராமனுடைய பல பராக்கிரமத்தை நன்றாக விளக்கினான். விளக்கிவிட்டு, “நான் சொல்லுவதைக் கேள். இந்த ராமனை யுத்தம் செய்து வெற்றியடைய முடியாது. யாராலும் முடியாது. உன்னாலும் முடியாது. அபயம் தந்தபடியால் இப்படி உண்மையைத் தைரியமாக அரசன் முன்னிலையில் சொல்லத் துணிந்தேன். அவனைக் கொல்லுவதற்கு வழி ஒன்றே. அவனுடைய மனைவி அவனுடன் இருக்கிறாள். உலகத்தில் அவளுக்குச் சமானமான அழகி வேறு இல்லை. அவளை எப்படியாவது நீ தூக்கி வந்து விட்டாயானால் அவளை விட்டுப் பிரிந்து ராமன் உயிர் வைத்திருக்க மாட்டான். இறந்து போவான். அவள் மேல் அவனுக்கு அபாரமான காதல். அவளைக் காணாமல் பிரிந்தானானால் உயிரை நீப்பான் என்பது நிச்சயம். இதைச் செய்ய வழி தேடுவாய். யுத்தம் வேண்டாம்” என்றான்.
சீதையின் அழகைப் பற்றிக் கேட்டதும் அரக்கனுக்கு ஆசை வளர்ந்து விட்டது. அகம்பனன் சொன்னதை மிகவும் ருசித்தான். “நாளைக் காலையில் ரதம் ஏறிப் புறப்பட்டுப் போகிறேன். நீ சொல்லும் யோசனை மிகச் சரியானது” என்றான்.
*
அவ்வாறே ராவணன் கோவேறு கழுதைகள் பூட்டிய தன் ரதத்தில் ஏறி ஆகாய மார்க்கமாகச் சென்றான். மேகங்களுக்கிடையில் அந்தத் தங்க மயமான தேரானது சந்திரனைப் போல் பிரகாசித்தது. நேராக மாரீசன் ஆசிரமத்துக்குச் சென்றான்.
மாரீசன் ராக்ஷஸ அரசனுக்கு எல்லா உபசாரமும் முறைப்படி செய்துவிட்டு, “என்ன விசேஷம், இவ்வளவு அவசரமாக வந்தது?” என்று விசாரித்தான்.
“பிரிய மாரீசனே, என்னை நீதான் காப்பாற்ற வேண்டும். ஜனஸ்தானம் அழிந்துவிட்டது. நம்முடைய சேனை நிர்மூலமாய் விட்டது. இதுவெல்லாம் தசரதன் மகன் ராமன் என்பவனுடைய காரியம். அற்புதமாகத்தான் இருக்கிறது! பழி வாங்க அவனுடைய மனைவியை நான் தூக்கிப் போக நிச்சயித்திருக்கிறேன். அதற்கு உன் யோசனையும் உதவியும் வேண்டும்” என்றான் ராவணன்.
“என்ன வேலையில் இறங்கினாய், ராவணா? எவனோ உன் பகைவன் உனக்குச் சர்வ நாசம் உண்டாக்கச் சிநேகிதனைப் போல் பாசாங்கு செய்து இந்த யோசனையை உனக்குச் சொல்லியிருக்கிறான். ஏமாந்து அழிந்து போகாதே! சீதையை அபகரிக்கும் யோசனை உனக்கு யார் சொன்னது? அரக்க சமூகத்தின் நாசத்தை விரும்பி யார் உனக்கு இந்தத் துராலோசனையைச் சொன்னது? சும்மா இருக்கும் பாம்பின் வாயில் கையிட்டு விஷப் பல்லைப் பிடுங்கப் போய்ச் சாகும் யோசனை. திரும்பிப் போய் உன் மனைவிகளுடன் சுகமாக இரு. பைத்தியக்காரன் மாதிரி ராமன் மனைவியை விரும்பாதே! அழிந்து போவாய். ராமனுடைய கோபத்தைத் தூண்டிக் குல நாசம் சம்பாதித்துக் கொள்ளாதே” என்றான், அறிவாளியும் அனுபவப் பட்டவனுமான மாரீசன்.
மாரீசன் சொன்னதைக் கேட்டு தசக்ரீவன் இலங்கைக்குத் திரும்பிப் போனான். மாரீசன் சொன்ன புத்திமதி ராவணன் மூளையில் சரியாகவே புகுந்தது. அந்தச் சமயம் ராவணனுக்குத் தான் பெற்ற வரத்தில் தவறிப்போன விஷயம் தோன்றியிருக்கும். மானிட ஜாதியைப் பற்றித் தான் வரம் பெறவில்லை என்பதையும் ராமனுடைய பாணங்களினால் ஜனஸ்தானத்துச் சேனையும் கரன், திரிசிரன், தூஷணன் முதலிய மிகப் பெரிய வீரர்கள் அனைவரும் தோல்வியடைந்து மாண்டதையும் நினைத்து, ராவணன் மாரீசன் சொன்னதைச் எண்ண சரியென்று ஒப்புக் கொண்டதாக நாம் எண்ணலாம்.
விதி இந்த முடிவோடு நிற்கவில்லை. ராவணன் தன்னுடைய சிம்மாசனத்தில் உட்கார்ந்திருந்தான். நெய் விட்டு வளர்த்த அக்கினியைப் போல் அவன் தேஜஸ் ஜொலித்துக் கொண்டிருந்தது. யாராலும் ஜெயிக்க முடியாத வீரன். தேவாசுரர்களோடும் மற்றவர்களோடும் செய்த யுத்தங்களில் சக்ராயுதத்தாலும் யானைகளின் தந்தங்களினாலும் உண்டான காயங்களின் வடுக்கள் அவன் கம்பீரத் தோற்றத்தை இன்னும் அதிக கம்பீரமாகப் பிரகாசிக்கச் செய்தன. ராவணனுடைய பல பராக்கிரமத்துக்கு எல்லையில்லை, அதருமத்துக்கும் எல்லையில்லை. தேவர்களைத் துன்பப் படுத்துவதிலும் யாகங்களைக் கெடுப்பதிலும் பரஸ்திரீகளை பலவந்தம் செய்வதிலும் கோபாவேசமாக இன்னும் பலவித அக்கிரமங்கள் செய்வதிலும் அவனுக்குச் சமானமான துஷ்டன் யாருமே இல்லை. அவனைக் கண்டு தேவாசுர கணங்கள் அளவற்ற பயம் கொண்டிருந்தார்கள். எல்லாப் பிராணிகளையும் வாட்டிக் கதறச் செய்யும் சுபாவம் கொண்டவன். சகலவிதமான செல்வமும் போக்கியமும் அடைந்து அசகாயசூரனாக விளங்கி இலங்கையை மரண பயமின்றி ஆண்டு வந்தான். பத்துத் தலைகளும் விசாலமான கண்களும் இவற்றுக்கு ஈடாக மற்ற அவயவங்களும் கொண்ட பயங்கர சொரூபத்துடன் எல்லா ராஜ லக்ஷணங்களும் அவனிடம் விளங்கின. திவ்விய ஆடையாபரணங்கள் அணிந்து மந்திரிகள் சூழ சிம்மாசனத்தில் உட்கார்ந்திருக்கும்போது திடீரென்று சபையில் அதிர்ச்சியுண் டாக்கிக் கொண்டு அவனுடைய உடன் பிறந்தவளான சூர்ப்பனகை மூக்கரிந்த அவலக்ஷண சொரூபத்துடன் சபைக்குள் பிரவேசித்தாள்.
“மூடனே! செல்வச் செருக்கிலும் கிராமிய போகத்திலும் மூழ்கிப் போயிருக்கிறாய். வரப்போகும் கஷ்டத்தை முன்பே தெரிந்து கொள்ள வேண்டிய ஸ்தானத்திலிருந்து கொண்டு கெடுதி வந்த பிறகும். தெரிந்து கொள்ளாமலிருக்கிறாய். அற்ப சுகங்களில் மனத்தைப் பறிகொடுத்த அரசனைக் குடிகள் மதிக்க மாட்டார்கள். மரண பயமில்லாமலிருந்தால் மட்டும் போதுமா? செய்ய வேண்டிய காரியங்களைக் காலத்தில் கவனிக்காத அரசனுடைய ராஜ்யம் பாழாகப் போகும். சாரர்களைச் சரியாக உபயோகித்து ராஜ்யத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளை அறிந்து கொள்ளாத அரசன் அழிந்து போவான். உன்னுடைய ராஜ்யத்தில் என்ன நடந்தது, ஜனஸ்தானத்தில் உன்னுடைய பந்துக்களுக்கு என்ன ஆயிற்று, உன்னுடைய சேனைக்கு என்ன நேரிட்டது என்பதை நீ அறியாமல் சிம்மாசனத்தில் அழகாய் உட்கார்ந்து கொண்டிருக்கிறாய். உன்னுடைய பகைவர்கள் உன்னை அழிப்பதற்குச் சமயம் எப்போது வரும் என்று காத்துக் கொண்டிருக்கிறார்கள். இது உனக்குத் தெரியும். ஆனபோதிலும் நீ உன் சாரர்களைக் கேட்டு என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ளாமல் கிடக்கிறாய். உன் மந்திரிகள் அறிவற்ற பாமரர்களாக இருக்கிறார்கள். ஜனஸ்தானத்தில் உன்னைச் சேர்ந்தவர்கள் - நம்முடைய எதிரிகள் நடுங்கும்படியாக உன் ஆக்ஞையின்படி இவ்வளவு காலம் அரசு புரிந்து வந்தவர்கள் - இப்போது மாண்டு கிடக்கிறார்கள். இதை உணர்ந்தாயா? ஜனஸ்தானத்துச் சேனை நிர்மூலமாயிற்று; ராமன் என்ற ஒரு மனிதப் பூச்சி தரை மேல் நின்று தேரும் யானையுமில்லாமல் அவ்வளவு பேரையும் கொன்று விட்டான்.”
“உனக்கு இது அவமானமாகப் படவில்லையே! உன் தங்கைக்கு என்ன ஆயிற்று என்று பார்த்தாயா? விசாரித்தாயா? இதுவரையில் உனக்கும் உன் ஆட்களுக்கும் பயந்து நடுங்கி வாழ்ந்த ரிஷிகளுக்கு இந்த ராமன் அபயம் கொடுத்து விட்டான். உன்னுடைய ஜனஸ்தானம் பாழாயிற்று. தண்ட காரண்யத்தில் உன்னைப் பற்றியிருந்த பயம் முற்றிலும் தீர்ந்து போயிற்று. தன்னைத்தானே பாராட்டிக் கொண்டிருப்பதோடு திருப்திப்பட்டுக் கிடக்கும் உனக்கு ஆபத்து நெருங்கி விட்டது. உன்னை உன் குடிமக்கள் இனி மதிக்க மாட்டார்கள். ராஜ்யத்திலிருந்து துரத்தப்படுவாய் என்பது நிச்சயம். கட்டிக் கிழிந்து போன துணியைப் போலத்தான் இனி உன்னை மக்கள் மதிப்பார்கள்.”
“சாரர்கள் வழியாக ராஜ்யத்தில் நடப்பதை அறிந்து கொண்டு வேண்டியதைச் செய்பவனே அரசன். உன் ராஜ்யத்தில் உன் ஜனங்களுக்கு உண்டான கஷ்டத்தையாவது அவமானத்தையாவது நீ அறியவில்லை. நீ எப்படி அரசனாக மதிக்கப்படுவாய்? உனக்குக் கோபமில்லை. கோபமில்லாத அரசன் என்னத்துக்கு உதவுவான்?”
“கரனையும் திரிசிரனையும் தூஷணனையும் கரனுடைய முழு சேனா பலத்தையும் கொன்று நிர்மூலமாக்கி விட்ட ராமனுக்கு சீதை என்ற ஒரு மனைவி இருக்கிறாள். காட்டில் அவனோடு தனியாக இருக்கிறாள். அவள் அழகை என்னென்று சொல்லுவேன்! தேவ கந்தர்வ யக்ஷ கின்னர மனுஷ்ய ஜாதிகளில் இந்த அழகை இதுவரையில் நான் கண்டதில்லை. உனக்கேற்ற பார்யை. அவளைக் கண்டதும் அவள் உன்னுடைய பொருள் என்று நான் நிச்சயித்தேன். ராக்ஷச குலத்தைச்சேர்ந்த நான் ஒரு எண்ணம் கொண்டதும் அதை உடனே நிறைவேற்றுவது தானே என் சுபாவம். உனக்காக நான் அவளைத் தூக்கி எடுத்துவர முயற்சி செய்தேன். பக்கத்திலிருந்த அந்த ராமனுடைய தம்பி லக்ஷ்மணன் தடுத்து என்மேல் பாய்ந்து இப்படி என் அங்கங்களை அறுத்து அவமானப்படுத்தி விட்டான். உனக்காக நான் இந்நிலைமையையடைந்தேன். இப் பழியைத் தீர்த்து உன் குலத்தின் மானத்தைக் காப்பாற்ற உனக்கு ஆசையிருந்தால் உடனே புறப்படு.”
“என் பழி எப்படியாயினும், உனக்குத் தகுந்த அழகியைச் சம்பாதித்துக்கொள். சீதையைப் போன்ற அழகியை நீயன்றி வேறொருவன் அனுபவிக்கலாமா? அவளை நீ அடைந்து ராமனை அவமானப் படுத்தினாயானால் அநியாயமாய் மாண்ட உன் வீரர்கள் திருப்தியடைவார்கள். அவர்கள் எனக்குச் செய்த அவமானத்துக்குப் பழி தீரும். உன் சக்தி உனக்குத் தெரியாமல் கிடக்கிறது. சீதையை எளிதில் அடைந்து அனுபவிப்பாய். உன் குலத்திற்கு ஏற்பட்ட அவமானத்தைக் கவனிக்காமல் நீ இருக்கலாமா? ராமனை எதிர்த்த கரனும் தூஷணனும் ஜனஸ்தானத்தில் மடிந்தார்கள். அதையும் நினைவில் வைத்து யோசித்துச் செய்ய வேண்டியதைச் செய். உன் சகோதரி அடைந்த அவமானம் உன்னுடைய அவமானமாகும். நம்முடைய குலத்தில் உனக்குள்ள கவுரவத்தைக் காப்பாற்றிக் கொள்” என்றாள் சூர்ப்பனகை.
*
உடன் பிறந்தவள் இவ்வாறு திடீர் என்று பிரவேசித்துத் தன்முன் நின்று இடித்துச் சொன்ன பேச்சுக்களையும் சீதையைப்பற்றி ஆசை பொங்கும் பேச்சையும் கேட்டு, மந்திரிகளிடம் சபை முடிந்தது என்று சொல்லிவிட்டு, தனியாக யோசிக்கப் போனான். மாரீசன் சொன்னது நினைவிலிருந்தபடியால் யோசிக்கலானான். நன்மை தீமைகளை நன்றாக மனத்தில் சோதித்து ஒரு முடிவுக்கு வந்துவிட்டான். விமான சாலைக்குச் சென்று தேரோட்டிக்குச் சொன்னான். “உடனே ரதம் தயாராகலாம். யாருக்கும் தெரிய வேண்டியதில்லை” என்றான்.
பிசாசு முகங்கள் கொண்ட பருத்த கோவேறு கழுதைகள் பூட்டிய அவனுடைய சுவர்ண ரதம் தயாராக நின்றது. அதில் ஏறி ஆகாய மார்க்கமாகக் கடலும் நாடும் நகரங்களும் வனங்களும் எல்லாவற்றையும் வெகு வேகமாகத் தாண்டிச் சென்றான். இஷ்டப்பட்ட இடம் செல்லும் மாய ரதம் போகும் போது கீழே அவன் பார்த்த வசந்தகாலக் காட்சிகளெல்லாம் அவனுடைய காமத்தை அதிகரித்தன.
மாரீசனுடைய ஆசிரமத்தை அடைந்தான். ஜடையும் மரவுரியும் தரித்து ஆசார நியமத்துடன் விரத வாழ்க்கை நடத்தி வந்த மாரீசனைக் கண்டான். ராக்ஷசேந்திரனும் தனக்கு பந்துவுமான ராவணனைக் கண்டதும் முறைப்படி உபசாரம் செய்துவிட்டு, “மறுபடி சொல்லாமல் இவ்வளவு தூரம் வந்த விசேஷமென்ன?” என்று கேட்டான்.
பேச்சில் வல்லமை பெற்ற ராவணன் சொல்ல ஆரம்பித்தான்:
“நான் பெருந்துன்பத்தில் சிக்கித் துயரப்பட்டுக் கொண்டிருக்கிறேன். என் துயரத்தை நீதான் நீக்க முடியும். உன்னைச் சரண் புகுந்தேன். என் ஆக்ஞையின்படி என் உடன் பிறந்தவர்கள் ஜன ஸ்தானத்திலிருந்து கொண்டு என் காரியத்தை நடத்தி வந்தது உனக்குத் தெரிந்த விஷயம். அவர்களும் அவர்களுக்குச் சகாயமாக இருந்த வீரர்களும் இவ்வளவு காலம் ஜெயப்பிரதமாக அங்கே அரசு புரிந்து வந்தார்கள். இப்போது ராமன் என்பவன் அத்தனை வீரர்களையும் முழு சேனையையும் அனாயாசமாகக் கொன்று தொலைத்துவிட்டான். தேராவது வேறு வாகனமாவது இல்லாமல் தரைமேல் நின்று அந்த மனிதன் நம்மவர்கள் அனைவரையும் பாணங்களைச் செலுத்திக் கொன்று விட்டான். தண்டகாரண்யத்தில் இப்போது ராக்ஷசர்களைப் பற்றி பயமேயில்லாமல் ரிஷிகளுடைய கொண்டாட்டமாக இருக்கிறது. இந்த ராமனானவன் தகப்பனால் காட்டுக்குத் துரத்தப்பட்ட வகையில்லாத நீசன். மனைவியையும் கூட்டிக்கொண்டு காட்டில் நாடோடி வாழ்க்கை நடத்துகிறான். இந்தத் துஷ்டன் தவ வேஷம் போட்டுக்கொண்டு இந்திரியானுபவத்தில் ஈடுபட்டிருப்பவன், தரும மார்க்கத்தை விட்டவன், அற்பன், கொடுஞ் சுபாவம் கொண்டவன், எந்தக் காரணமுமின்றி மிருக பலத்தின் அகங்காரத்தால் என் உடன் பிறந்தவளுடைய மூக்கையும் காதையும் அறுத்து நம் குலத்துக்குப் பெருத்த அவமானம் இழைத்திருக்கிறான். கோரமான முறையில் துன்பமும் அவமானமுமடைந்த என் உடன் பிறந்தவள் இதைப் பற்றி முறையிடுகிறாள். நான் இதையெல்லாம் பார்த்துக்கொண்டு சும்மா இருந்தேனானால் நான் அரசன் ஆவேனா? இந்தப் பழியைத் தீர்க்க இந்த ராமனுடைய மனைவியை தண்டகாரண்யத்திலிருந்து தூக்கிப் போவதாக நிச்சயித்து விட்டேன். இந்த ராமனைத் தண்டித்து அவமானப் படுத்துவது என்குலக் கடமை. இதற்கு உன் சகாயம் வேண்டும். நீயும் என் சகோதரர்களும் இருக்க எனக்கு என்ன பயம்? உன் உதவியைக் கோருகிறேன். சௌர்யம், பலம், யுக்தி, மாயைகள், இவற்றில் உன்னைப்போல் உலகத்தில் வேறு யார்? உன்னிடம் நான் இதற்காகத்தான் வந்திருக்கிறேன், நீ மறுக்கக் கூடாது. நான் சொல்லுவதைக் கேள். நீ ஒரு பொன்மானாக வேண்டும். சுவர்ணமும் வெள்ளிப் புள்ளிகளும் கண்ணைக் கவரும் விசித்திர வடிவமும் பொருந்திய மானாக உருவம் கொண்டு ராமனுடைய ஆசிரமத்தண்டை வனத்தில் சீதைக்கெதிரில் நீ சஞ்சாரம் செய்ய வேண்டும். ஸ்திரீ சுபாவத்தின்படி அவள் நிச்சயமாக ராமனையும் லக்ஷ்மணனையும் ‘இந்த மானைப் பிடித்துத் தரவேண்டும்' என்று வற்புறுத்துவாள். அவளை விட்டு அவர்கள் விலகி அவள் தனியாக இருக்கும் சமயத்தில் நான் சுலபமாக அவளைப் பிடித்துத் தூக்கிப் போய் விடுவேன்.”
“சீதை மகா சௌந்தரியம் கொண்ட அழகி. மனைவியையிழந்த ராமன் மனம் உடைந்து பலவீனமடைவான். அந்த நிலையில் அவனைத் தாக்கி, பழி வாங்கித் திருப்தியடைவேன்.”
இதைக் கேட்ட மாரீசன் முகம் சுண்டி வாய் உலர்ந்தது. ராவணனைக் கண் கொட்டாமல் பார்த்த வண்ணமாக நின்றான். ராமனுடைய பராக்கிரமத்தை அறிந்த மாரீசன் ராவணனுடைய தீர்மானத்தைக் கேட்டு பயந்து போனான். அனுபவம் பெற்ற அறிவாளியும் தவமிருந்து ஓரளவு ஞானமும் ஈசுவர பக்தியும் அடைந்த மாரீசன் பார்த்தான். ராவணனுடைய உள்ளத்தை அறிந்து கொண்டான். 'விதி இவனைக் கயிறு போட்டு இழுத்துப் போகிறது. இதை இனித் தடுக்க முடியாது' என்று கண்டு கொண்டான். ராவணன் குலத்தின் கவுரவம், அரசியல் நீதி, சூர்ப்பனகையின் அவமானம் இவற்றையெல்லாம் காரணம் காட்டிப் பேசினானேயொழிய சீதையை அபகரிக்கும் துன்மார்க்க எண்ணத்திலே தான் அவன் புத்தியை இழந்து விட்டான். மாரீசன் அதை நன்றாகத் தெரிந்து கொண்டான்.
*
சூர்ப்பனகையின் கருத்தையும் நாம் கொஞ்சம் ஆராய வேண்டும். காம வெறியினால் அவளுக்கு அனர்த்தம் ஏற்பட்டது. மூக்கு அறுத்ததும் துன்பப் படுத்தியதும் லக்ஷ்மணன் ஆயினும், ஸ்திரீ சுபாவம், அவன்மேல் அவ்வளவு கோபம் இல்லை. தன் எண்ணம் நிறைவேறாமல் போனதற்குக் காரணம் நடுவிலிருந்த சீதைதான், அவளுடைய அழகும் குணமுமே தன்னைக் கெடுத்தன என்று அவள் பேரில் சூர்ப்பனகைக்கு அதிக ரோஷம் உண்டாகி விட்டது. அவளை அவமானப் படுத்திப் பழி தீர்த்துக் கொள்ள வேண்டும் என்பதே சூர்ப்பனகையின் உள்ளத்தைப் பற்றிக் கொண்ட ஆசை. ராவணனை அந்தக் காரியத்தில் உபயோகிக்கவே அவள் சீதையின் உருவத்தை காமாதுரனான ராவணன் முன் நிறுத்தி அவன் எண்ணத்தை அந்த வழியில் செலுத்தினாள். மற்ற விஷயங்களைப் பற்றிப் பேசியதெல்லாம் சந்து அடைக்கவே. குலத்தின் கவுரவம், பந்துக்கள் உயிர் இழந்தது முதலிய காரணங்களைச் சேஷ பூரணமாகச் சேர்த்துச் சொல்லி ராவணணுக்கு வழி காட்டினாள். முக்கிய நோக்கம் காமத்தைத் தூண்டி ராவணனைச் சீதையண்டை போகச் செய்வது. அவனும் இந்தச் சூழ்ச்சிக்குள் அகப்பட்டுப் போனான்.
கருத்துரையிடுக