47. கரனும் ஒழிந்தான்! (சக்கரவர்த்தித் திருமகன் - ராஜாஜி)
ஜன ஸ்தானத்திலிருந்து கரனுடைய பதினான்கு சேனைத் தலைவர்களையும் அழைத்துக் கொண்டு சூர்ப்பனகை ராமனுடைய ஆசிரமத்துக்கு வந்தாள். பழி வாங்கி ராஜகுமாரர்களைக் கொன்று அவ்விடத்திலேயே அவர்கள் ரத்தத்தைக் குடிக்க வந்தாள்.
“அதோ அங்கே நிற்கிறார்களே அந்த இரு யுவர்களே என்னை அவமதித்து அங்கவீனம் செய்தது. அவர்களை உடனே கொல்லுங்கள்” என்றாள்.
ராமன் விஷயத்தையறிந்தான். உடனே லக்ஷ்மணனிடம், “லக்ஷ்மணா! கொஞ்ச நேரம் சீதையைப் பார்த்துக் கொள். நான் இவர்களைப் பார்த்துக் கொள்ளுகிறேன்” என்று சொல்லிவிட்டு வில்லையெடுத்து நின்றான்.
யுத்த வழக்கத்தையனுசரித்து எதிர்க்க வந்தவர்களைப் பார்த்துத் தான் இன்னான் என்று சொல்லிவிட்டு, “ஏன் எங்களைத் தொந்தரவு செய்ய வந்தீர்கள்? ரிஷிகளின் கட்டளைப்படி அரக்கர்களைத் தொலைக்கவே நாங்கள் இந்த வனத்தில் குடியிருக்கிறோம். உயிர் தப்பிப் போக விரும்பினால் சும்மா போங்கள்” என்றான்.
அரக்கர்களும் வீரமாகப் பேசினார்கள். யுத்தம் ஆரம்பமாயிற்று. ராமனுடைய பாணங்கள் அரக்கர்களைக் கொல்ல அதிக நேரம் பிடிக்கவில்லை. அனைவரும் மாண்டார்கள்.
சூர்ப்பனகை மறுபடியும் கோரமாகப் புலம்பிக் கொண்டு கரனிடம் போய் அவன் முன்னிலையில் விழுந்தாள். விழுந்து புரண்டு கொண்டிருந்த சகோதரியைச் சமாதானப் படுத்தப் பார்த்தான் கரன். அவனுக்கு நிலைமை விளங்கவில்லை.
“யமனைப் போன்ற வீரர்களை அனுப்பினேன். இதற்குள் காரியம் முடிந்திருக்கும். ஏன் அழுகிறாய்? நான் இருக்க நீ இப்படி அழலாகாது” என்றான்.
அவள் எழுந்து கண்களைத் துடைத்துக் கொண்டு சொன்னாள்:
“நீ பதினான்கு வீரர்களை அனுப்பினாய். உண்மையே. அவர்கள் பதினான்கு பெரும் பிணங்களாகக் கிடக்கிறார்கள். ராமனுடைய வீரமும் அவன் அற்புத யுத்தத்தையும் உனக்கு நான் எப்படிச் சொல்லுவேன்? உன்னுடைய சேனாபதிகள் மாண்டார்கள். உனக்கு மானமிருந்தால் உடனே புறப்படு. ராமனோடு யுத்தம் செய்து ராக்ஷஸ குலத்தைக் காப்பாற்று. இல்லாவிட்டால் அழிந்தோம் என்பது நிச்சயம். உனக்கு ரோஷம் இருக்குமேல் புறப்பட்டு வா. ராமனை எதிர்த்து யுத்தம் செய். பயமாக இருந்தால் சொல். நீ உன்னையே சூரன் என்று சொல்லிக் கொண்டிருப்பதில் பயனில்லை. சூரனாக இருந்தால் ராமனை எதிர்த்துப் போர் செய். உன்னுடைய ராஜ்யத்திற்குள் புகுந்திருக்கும் இந்த யுவர்கள் உன் குலத்தை அழித்துத் தீர்க்க நிச்சயித்திருக்கிறார்கள்” என்றாள்.
தன் சபையிலேயே இவ்விதம் சகோதரி தன்னை அவமானப் படுத்திப் பேசிய மொழிகள் கரன் உள்ளத்தில் சூலம் போல் பாய்ந்தன.
“இந்த அற்பனைக் கண்டு நீ இவ்வளவு பயந்து பேசுகிறாய். இன்னும் ஒரு கணம் காத்திரு அவன் ரத்தத்தை நீ குடிப்பாய்!” என்று கரன் எழுந்தான்.
“நீ ஒருவனாகப் போகாதே! சேனையைத் திரட்டிக் கொண்டு போ!” என்றாள்.
அப்படியே கரனும் உத்தரவிட்டான். சகலவித ஆயுதங்களும் கொண்ட பெரிய சேனை தூஷணன் தலைமையில் முன்னால் சென்றது. பின்னால் கரனும் மெதுவாகத் தேரில் சென்றான். போகும் போது அரக்கன் அபசகுனங்களைக் கண்டான். அவன் சிரித்து விட்டு “துர் நிமித்தங்களைக் கவனிக்காதீர்கள். நான் இதுவரை எந்த யுத்தத்திலும் தோற்றதில்லை. துஷ்டர்களாகிய இந்த அற்ப மானிடப் பூச்சிகளை நசுக்கி விட்டு வெகு சீக்கிரத்தில் திரும்புவோம்” என்று தன் சேனைக்குக் கர்ஜித்துச் சொன்னான். துர் நிமித்தங்களால் கொஞ்சம் பயமடைந்த அந்தச் சேனையும் மறுபடி உற்சாகமடைந்து சென்றது.
*
சேனை வரும் ஓசையைக் கேட்ட ராம லக்ஷ்மணர்களும் யுத்தத்துக்குத் தயாரானார்கள்.
லக்ஷ்மணா! நிமித்தங்களைப் பார்த்தாயா? யுத்தம் வரும் என்பது நிச்சயம். ஜன ஸ்தானத்து ராக்ஷஸர்கள் அழிந்து போவது நிச்சயம். நீ ஆயுதங்களும் கவசமும் தரித்து சீதையை அழைத்துப் போய்த் தகுந்த ஒரு மலைக் குகையில் ஜாக்கிரதையாக இருப்பாய். நான் இங்கே நின்று இந்த ராக்ஷஸ சேனையைப் பார்த்துக் கொள்ளுகிறேன். தாமதிக்க வேண்டாம். எனக்குத் துணை வேண்டியதில்லை” என்று தம்பிக்குச் சொல்லி விட்டு ராமன் கவசம் பூண்டு ஆயுத பாணியானான்.
லக்ஷ்மணன் ராமன் சொன்ன வண்ணம் சீதையை அழைத்துக் கொண்டு மலைக்குச் சென்று விட்டான்.
ஆகாயத்தில் தேவர்களும் கந்தர்வசித்த சாரண கணங்களும் யுத்தத்தைப் பார்க்க வந்து விட்டார்கள். ராமனுடைய விஜயத்தை விரும்பி அவர்களும் சுவஸ்தி சொன்னார்கள்.
ஒருவனாக நின்று எப்படி இந்தப் பெருஞ்சேனையைத் தாக்கி வெற்றியடையப் போகிறான் என்று ரிஷிகள் கவலை கொண்டார்கள். அச்சமயம் வில்லை வளைத்து நின்ற ராமசந்திரன் முகத்தில் ஜொலித்த தேஜஸானது பினாகி வில்லை வளைத்த ருத்திரனுடைய தேஜஸைப் போலவே ஜொலித்தது.
அரக்கன் சேனை வேகமாக வந்து விட்டது. சிம்ம நாதங்களும் வில்களின் டங்காரங்களும் பேரிகை நாதமும் கிளம்பி வனம் நிறைந்து விட்டது. காட்டு மிருகங்கள் எல்லாம் பயந்து இங்குமங்கும் சிதறியோடின. ராமன் வில்லைப் பிடித்து நாண் ஏற்றி நின்றான். ஆகாயத்தில் மேகக் கூட்டங்கள் சூழ்வன போல் ராக்ஷஸ சேனை ராமனைச் சூழ்ந்தது.
யுத்தம் ஆரம்பித்து மிகக் கோரமாக நடந்தது. ராமன் உடல் எல்லாம் அடிபட்டும் அசையாமல் நின்றான். இந்தப் பெருஞ்சேனையிடமிருந்து எப்படி ராமன் தப்புவான் என்று தேவர்களும் கவலைப் பட்டார்கள்.
ராமனுடைய பாணங்களுக்கு ஆயிரக்கணக்கான ராக்ஷஸ வீரர்கள் இரையானார்கள். தூஷணனே. நேரில் ராமனுக்கு எதிரில் நின்று யுத்தம் செய்தான். ராமன் தன் வில்லை வளைத்து மண்டலமாகத் தன்னைச் சுற்றி பாணங்களைச் செலுத்தி வந்தான். வில்லில் அம்பும் பாணமும் பூட்டுவதாவது, அவை நாணினின்று விடுபடுவதாவது கண்ணுக்குத் தெரியவில்லை. ராமசந்திரன் நின்ற இடத்திலிருந்து சூரியமண்டலத்திலிருந்து கிரணங்கள் வீசுவதுபோல் பாணங்கள் பூமியில் எட்டுத் திசைகளிலும் பரவிச் சென்று ஆயிரக்கணக்கான வீரர்கள், தேர்கள், யானைகள், குதிரை முதலிய வாகன விலங்குகள் அடிபட்டுப் பல பலவென்று பூமியில் வீழ்ந்து மாள்வது தான் காணப்பட்டது. ஆகாயத்தில் அவன் செலுத்திய பாணங்கள் அரக்கருடைய உடல்களைத் துளைத்து ரத்தத்துடன் வெளிப்பட்டுக் கொழுந்து விட்டு எரியும் நெருப்பைப் போல் காணப்பட்டன.
அரக்கருடைய சேனை நிர்மூலமாயிற்று. ராமன் காலாந்த ருத்திரனைப் போல் நின்றான்.
*
மறுபடியும் தூஷணன் ஒரு பெரும் படைப் பகுதியுடன் ராமன்மேல் பாய்ந்தான். கொஞ்ச நேரம் அவனுடைய அட்டகாசம் நடந்தது. பிறகு ராமனுடைய பாணங்களுக்கு அவன் தேர், தேர்க் குதிரைகள், சாரதிகள் எல்லாம் இரையாகி அவனே கீழே குதித்துத் தண்டாயுதத்துடன் ராமன் மேல் பாய எத்தனித்தான். ராமனுடைய பாணங்களால் அவன் இரு கைகளும் அறுபட்டுத் தரையில் பெரிய யானையைப் போல் விழுந்து மாண்டான்.
தூஷணன் மாண்டதைப் பார்த்து மற்ற ராக்ஷஸப் படை வீரர்கள் ஒன்று சேர்ந்து ராமசந்திரன் மேல் பாய்ந்தார்கள். அவர்களும் கோதண்டத்திலிருந்து வெளிப்பட்ட பாணங்களுக்குப் பலியானார்கள். இவ்வாறு கரனுடைய சேனை முற்றிலும் மாண்டது. சமுத்திரம் போல் ஓசை கிளப்பிய பெருஞ்சேனை அவ்வளவும் சப்தம் அடங்கிப் போய்ப் பிரேதங்களாகவும் வெட்டு துண்டாக்கப்பட்ட ஆயுதங்களும் தேர்களுமாகவும் கிடந்தது.
*
கரன், திரிசிரஸ், இருவருமே மிஞ்சினார்கள். அடங்கா ரோஷத்துடன் கரன் முன் சென்று ராமனோடு யுத்தத்தில் கலக்கப் போனான். திரிசிரஸானவன் கரனை நிறுத்தி, “நான் முன்னால் சென்று ராமனைக் கொல்வேன். வெற்றியுடன் ஜன ஸ்தானம் திரும்புவோம். அல்லது ராமனால் நான் மாண்டபின் நீ ராமனை எதிர்ப்பாய்” என்று சொல்லி அவனைத் தடுத்துவிட்டு அந்த மூன்று தலை அரக்கன் தேர் ஏறி ராமனைத் தாக்கினான்.
திரிசிரஸ் ராமன் பேரில் பாணங்கள் விட்டான். அவற்றைப் பொறுத்து ராமன் கால சர்ப்பங்களைச் செலுத்த ஆரம்பித்தான். முடிவில் திரிசிரஸ் ரத்தம் கக்கித் தரையில் விழுந்து மாண்டான். அவனுடன் வந்த அரக்கர்கள் மான்களைப் போல் ஓடினார்கள்.
இதைப் பார்த்த கரன் பயந்தோடிய அரக்கர்களை நிறுத்தி, தன் ரதத்தை ராமன் மேல் செலுத்தினான். அவனுடைய கர்வம் இதற்குள் அழிந்து விட்டிருந்த போதிலும் பலத்த யுத்தம் செய்தான். இருவருடைய பாணங்களும் ஆகாயத்தை மறைத்தன.
கரன் யமனைப் போல் தேரில் நின்று பாணங்கள் விடுத்தான். ராமசந்திரன் தன் வில்லின் மேல் கொஞ்ச நேரம் சாய்ந்து நின்றான். அச்சமயம் கரன் விடுத்த அம்புகளால் ராமனுடைய கவசம் அறுபட்டுக் கீழே விழுந்தது. உடல் வெளிப்பட்டுச் சூரியனைப் போல் சக்கரவர்த்தித் திருமகன் பிரகாசித்தான்.
ராமன் வைஷ்ணவ வில்லை எடுத்தான். கரனுடைய ரதம், வில் எல்லாவற்றையும் துவம்சமாக்கினான். ரதமும் வில்லும் இழந்த கரன் கதாயுதம் எடுத்து ராமனை எதிர்க்க நின்றான். யுத்தத்தைப் பார்த்துக் கொண்டிருந்த தேவ ரிஷி கணங்கள் அச்சமயம் கவலையுடன் கை கூப்பி நின்றார்கள்.
“ஏ, கரனே!” என்று ராமன் சொன்னான். “மக்களை இம்சித்து வந்தாய். உலகத்தாருக்குத் துக்கம் விளைத்து வருபவன் எவ்வளவு பலவானானாலும் மாள்வான். வனத்தில் தவம் செய்தும் விரதம் காத்தும் வந்த ரிஷிகளை ஏன் துன்புறுத்தியும் கொன்றும் வந்தாய்? அந்தப் பாவங்களின் பயனை இப்போது அடையப் போகிறாய். பாப காரியங்களைச் செய்து உலகத்தின் வெறுப்பைச் சம்பாதித்தவர்கள் அழிந்து போவது நிச்சயம். ரிஷிகளைக் கொன்று தின்றீர்களே அந்த ரிஷிகள் விமானத்தில் அமர்ந்து வானத்திலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். கொடிய அரக்கர்களை நிர்மூலமாக்கவே நான் தண்டகாரண்யத்துக்கு வந்திருக்கிறேன். என் பாணங்கள் உன் குலத்தார் உடல்களில் புகுந்து உயிரைக் குடிக்கும். செய் யுத்தம். உன் தலை பனங்காய் போல் கீழே உருளப் போகிறது!”
“அடே மனிதப் பூச்சியே!” என்றான் கரன். “தசரதன் மகனே! ஏன் அதிகமாகப் பேசுகிறாய்? பாமர அரக்கர்களைக் கொன்று விட்டாய் என்று கர்வம் கொண்டு விட்டாயா? வீரன் தன்னைத் தானே புகழ்ந்து பேசிக் கொள்ள மாட்டான். நீ பேசுவது அற்பர்கள் பேச்சு. குலத்திலிருந்து நீக்கப்பட்ட க்ஷத்திரியர்கள் தான் இப்படி வீரம் பேசுவார்கள். பொருளற்ற பேச்சுப் பேசாதே! யுத்தம் செய். மரணம் அடுத்து நிற்கும் போதுதான் இத்தகைய தற்புகழ்ச்சிப் பேச்சு கிளம்பும். உன்னுடைய அற்பகுணம் இதனின்று வெளியாயிற்று. காட்டுப் புல் பெரிதாக எரிவது போல் மிகப் பிரகாசமாகப் பேசுகிறாய். அது பயனற்ற நெருப்பாகும். இதோ கதையைப் பிடித்து நிற்கிறேன். உன் உயிரைக் கொண்டு போகும் யமனாக நிற்கிறேன். மாலை ஆகப் போகிறது. யுத்தம் நிறுத்த வேண்டியதாகும். ஆன படியால் உடனே உயிரை இழக்கத் தயாராக நில். நீ கொன்ற இவ்வளவு பேர்களின் பழியைத் தீர்க்க நான் வந்தேன்!” என்று சொல்லிக் கையில் பிடித்த கதாயுதத்தைச் சுழற்றி ராமனை நோக்கி எறிந்தான்.
ராமனுடைய பாணங்களால் கதாயுதம் அந்த நிமிஷத்தில் துண்டிக்கப்பட்டு வேகமற்றுத் தரையில் விழுந்தது.
“அரக்கனே! உன் வீரப் பேச்சு முடிந்ததா? இன்று நீ சாவாய். இந்த வனம் இனி சுகமாக இருக்கும். முனிவர்களை இம்சித்த உன் ரத்தத்தைப் பூமி குடிக்கப் போகிறது” என்றான் ராமன்.
இவ்வாறு ராமன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே கரன் அங்கிருந்த ஒரு பெரிய ஆச்சா மரத்தைப் பிடுங்கி உதட்டைக் கடித்துக் கொண்டு, “நீ செத்தாய்” என்று சொல்லி ராமன் மேல் எறிந்தான்.
இதையும் ராமன் தன் திவ்விய பாணங்களால் தடுத்து வெட்டித் தள்ளி, இனித் தாமதம் கூடாது, இவனைச் சீக்கிரம் முடித்துவிட வேண்டும் என்று பல பாணங்களை அவன் மேல் எய்து, அவன் உடல் ரத்தப் பிரவாகத்தில் மிதக்கச் செய்தான்.
பெருங்காயங்கள் அடைந்த வெறியுடன் கரன் ராமன் மேல் ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்தான். வில் வளைத்து பாணம் விட இடமில்லாமல் நெருங்கவே ராமன் பின்னுக்குக் குதித்து ஒரு இந்திர பாணத்தை விடுத்துப் அரக்கனுடைய மார்பைப் பிளந்தான். கரன் மாண்டான்.
ஆர்த்தெ ழுந்தனர். ஆடினர் பாடினர்
தூர்த்த மைந்தனர் வானவர் தூய்மலர்
தீர்த்த னும்பொலிந் தான்கதிரோன்திசை
போர்த்த மென்பனி போக்கிய தென்னவே.
தேவர்கள் புஷ்பமாரி பொழிந்தார்கள். "பாப கர்மங்கள் நிகழ்த்திய அரக்கனைக் கொன்று ஒழித்தான். தண்டகவனத்தில் இனிச் சுகமாக மக்கள் இருக்கலாம் மூன்று நாழிகைக்குள் கர தூஷணர்களையும் திரிசிரஸையும் அவர்களுடைய சேனையையும் ராமசந்திரன் நிர்மூலம் செய்து விட்டான். இவன் அல்லவோ வீரன்” என்று சொல்லிக் கொண்டு தேவர்கள் திரும்பினார்கள்.
சீதையும் லக்ஷ்மணனும் மலையினின்று திரும்பி வந்தார்கள். ரிக்ஷிகளுக்குக் கொடுத்த அபய உறுதியைச் சொல்லிய வண்ணம் காத்த தனி வீரன் ராமனைத் தம்பி தழுவிக் கொண்டு அடைந்த மகிழ்ச்சி சொல்லுக்கு அடங்காது.
அரக்கர் உடல்களினின்று சிதறி விழுந்த ரத்தமும் பாதங்களில் பட்டு நின்ற யுத்த களத்துத் தூசியும் தம்பியும் தேவியும் விட்ட கண்ணீர் கழுவி விட்டது என்கிறார் கம்ப நாட்டாழ்வார்.
விண்ணில் நீங்கிய வெய்யவர் மேனியின்
புண்ணின் நீரும் பொடிகளும் போயுக
அண்ணல் வீரனைத் தம்பியும் அன்னமும்
கண்ணின் நீரினில்ப் பாதம் கழுவினார்.
ஒருவன் தனியாக எவ்வாறு இவ்வளவு காரியங்களைச் செய்து தீர்த்தான்? ஒரு பசுமாடு தன் கன்றைக் காக்க மக்கள் கூட்டத்தின் மேல் பாய்ந்து அவர்கள் அத்தனை பேரும் விழுந்து ஓடிச் சிதறிப் போவதைப் பார்த்தால் உண்மை உணர்ச்சி பாய்ந்த ஓர் உயிருக்குள் எவ்வளவு வேகமும் செளரியமும் பலமும் வந்து சேரும் என்பதை ஒருவாறு காணலாம். தெய்வமே மனித உருவத்தில் வந்து அநாதைகளுக்கு அபயம் தந்து அந்தச் சத்தியத்தைக் காக்க முனைந்துவிட்டால் அந்த மனிதன் எவ்வளவு செய்வான் என்பதைச் சிந்தனைச் சிற்ப சக்தியைக் கொண்டு காணலாம். ராமனை அவதார புருஷனாகத்தான் கம்பரும் வால்மீகியும் எடுத்துக் கொண்டு வெவ்வேறு விதத்தில் நமக்கு நிகழ்ச்சிகளைச் சித்திரிக்கிறார்கள். சில இடங்களில் தெய்வப் பிரசாதம் பெற்ற வீரனாகவும் சில இடங்களில் தெய்வமாகவேயும் எடுத்துக் காட்டுகிறார்கள். ஆனால் ராமன் தன்னைத் தெய்வமாக எப்போதும் எண்ணவில்லை. மனிதனாகவே க்ஷத்திரிய வீரனாகவே சத்தியத்துக்குக் கட்டுப்பட்டு, தரும முயற்சிகளில் ஈடுபட்ட மானிடனாகவே வேதாந்த ஞானம் பெற்ற தீரனாகவே எல்லையற்ற சக்தியைப் பெறக் கூடிய ஆத்மாவாகவே தன்னை எண்ணி வந்தான்.
அரக்கருடைய பெருஞ்சேனை ராமனைத் தாக்க, திடீர் என்று வந்து நின்று “அதோ அவன் தான்” என்று சூர்ப்பனகை அவர்களுக்குக் காட்டிய சமயம் ராமன் என்ன செய்து கொண்டிருந்தான் என்பதைக் கம்பர் பாடுகிறார்.
துமிலப் போர்வல் அரக்கர்க்குச் சுட்டினாள்
அமலத் தொல்பெயர் ஆயிரத்(து) ஆழியான்
நிமலப் பாத நினைவின் இருந்த அக்
கமலக் கண்ணனைக் கையினில் காட்டினாள்.
நாராயணனோ தானே ராமன் என்று அறிவான். ஆனால் ராமன் தானே நாராயணன் என்றெண்ணவில்லை. நாராயணனைத் தியானித்து ஆன்ம பலமும் எல்லா பலமும் பெற்று வந்தான்.
கருத்துகள்
கருத்துரையிடுக