ஸ்ரீ ஆண்டாளின் அழகிய காதல் - அரவிந்தா பார்த்தஸாரதி

ஸ்ரீ ஆண்டாளின் அழகிய காதல் - அரவிந்தா பார்த்தஸாரதி

பக்தி என்பது ஓர் அரிய அனுபவம், பக்தியுடன் காதலும் சேர்ந்தால் அந்த அனுபவத்தின் எல்லையைக் காணுவது அரிது. பகவானைப் பக்தியுடன் பூஜித்தால் நம் மனம் உடல் எல்லாம் இன்பத்தை அடைகிறது. பக்தி, காதல் என்ற இரு அனுபவமும் ஒருங்கே அடைந்தவள் பெரியாழ்வார் பெற்ற பெண் ஸ்ரீ ஆண்டாள். சிறு குழவிப் பருவத்திலிருந்தே கண்ணனின் ஆனந்த லீலைகளைத் தன் தந்தை மூலம் அறிந்த அவள் கண்ணனிடம் பக்தி பூண்டாள். வயது சென்றதும் அப்பக்தியே காதலாக பரிணமித்தது. கண்ணன் என்னும் கருந்தெய்வத்தையே காதலித்தாள், “மானிடவர்க்கு என்று பேச்சுப் படில் வாழகில்லேன் கண்டாய் மன்மதனே” என்று காமதேவனை வழிபட்டு முறையிடுகிறாள். கண்ணனுடன் தன்னைச் சேர்க்கும்படி காமதேவனை நோக்கி நோன்பு நூற்கிறாள். 


சிற்றங்சிறுகாலைப்பொழுதில் எழுந்து நீராடி தரைவிளக்கி கோலம் இட்டு நறு மலர்களால் காமதேவனை பூஜிக்கிறாள். அவனுக்கு கரும்பு, நெல், வெல்லம், அரிசி, அவல் எல்லாம் சமர்ப்பிக்கிறாள். ஒரு பொழுது மட்டும் உணவு கொண்டு தன் வயதொத்த பெண்களுடன் நோன்பு நோற்கிறாள். இந்த நோன்பினை ஏற்றுத் தன்னை "வித்தகன் வேங்கடவானனுடன் சேர்" என்று மன்மதனை வேண்டுகிறாள். தன் அங்கங்களும் பகவானையே சேர்ந்தவை என்பதை,



“அவரைப் பிராயம் தொடங்கி என்றும் 
ஆதரித்தெழுந்த வென் தடமுலைகள், 
துவரைப் பிரானுக்கே சங்கற்பித்து
தொழுது வைத்தே னொல்லை விதிக்கிற்றியே” 


என்றும்,


“ஊனிடையாழி சங்குத் தமர்க் கென்று
உன்னித் தெழுந்த வென் தடமுலைகள்” 


என்றும் கூறுகிறாள். தேவர்களுக்கு என்று அந்தணர்கள் செய்த யாகத்தின் அவியை நாய் வந்து மோர்வதுபோல் பகவானுக்காக வளர்ந்த தன் அங்கங்களை மானிடவர்க்கு என்று பேசுவது தகாது என்று முறையிடுகிறாள். நோன்பு நோற்கும் தன்னை பார்க்கடல் வண்ணனிடம் சேர்க்காவிடில் தான் ‘அழுது அழுது அம்மா’ என்று கத்த காமதேவனுக்கு அந்த கதறல் தகாது என்கிறாள். முப்பொழுதும் மலர் கொண்டு வணங்கும் தனக்கு கேசவநம்பியை கரம் பிடிக்கும் பேற்றை அருளுமாறு மன்மதனை வேண்டுகிறாள்.


மன்மதனை வணங்குவது மட்டுமன்றி பகவானைப் பல விதங்களில் காதல் வயப்பட்டு அனுபவிக்கிறாள். அதற்காகத் தன்னை ஓர் இடைப் பெண்ணாக மாற்றிக் கொள்கிறாள். இடைப் பெண்கள் கண்ணனை எவ்வாறு அனுபவித்தனரோ அவ்வாறு அனுபவிக்கிறாள். இடைப் பெண்கள் வண்டல் மணல்களால் சிற்றில் இழைப்பர், அதைப் பார்த்து விட்டு கண்ணன் வேண்டுமென்றே கலைத்து விடுவான். அதைப் போலத்தானும் பாடுகிறாள் ஆண்டாள். நாங்கள் முதுகு நோவ இழைத்த சிற்றிலை நீ நன்றாகப் பார்த்து அனுபவித்தால் எங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும், அதைச் செய்யாமல் கலைக்கிறாயே என்று முறையிடுகிறாள்.


சிற்றிலைக் கலைத்த கண்ணனிடம் கோபமும் வரவில்லை அவர்களுக்கு. மாறாகக் காதல் பெருகுகிறது.


“சிற்றிலோடு எங்கள் சிந்தையும் சிதைக்கக்
கடவையோ கோவிந்தா” 


என்று கூறுகிறாள். நீராடச் சென்ற இடைப் பெண்களின் துகிலைக் கவர்ந்த கண்ணனிடம் முறையிடும் இடைப் பெண்ணாக மாறுகிறாள். மரத்தின்மேல் இருக்கும் கண்ணன் நீ சென்ற அவதாரத்தில் குரங்கரசாக இருந்தது எங்களுக்குத் தெரியும். அதனால் உனக்கு மரம் ஏறும் கலை வந்துவிட்டது. எங்கள் காலை மீன்கள் கடிக்கின்றன. தாமரைக் கொடிகள் காலைச் சுற்றுகின்றன. நீ எவ்வாறு விரும்புவாயோ அவ்வாறு செய்கிறோம். பேய்ச்சி பால் உண்ட நீ எங்கள் கூறை தாராய் என்று பணிகிறாள்.


காதல் வயப்பட்ட ஆண்டாளின் உடல் மெலிந்து கைகளில் அணியும் சங்கு வளையல் எல்லாம் கைநழுவிக் கீழே விழுகின்றன. நிறமும் வெளுத்துவிட்டது. அதற்காக காதலியுடன் வாழும் குயிலைப் பார்த்துத் தன் காதலன் வரும்படி கூவ வேண்டுகிறாள். தயையையே நிறமாகக் கொண்ட கருமாணிக்கம் வரக்கூவாய் என்கிறாள். தன் உள்ளம் புகுந்த காதலன் தன்னுருவைக் காட்டாது அவள் உள்ளம் புகுந்து நைவிக்கின்றான் என்றும், தன் கண்கள் கண்ணனின் பிரிவால் உறக்கம் கொள்ளவில்லை, தன் உடல் இளைத்துவிட்டது என்று தன் நிலையைக் குயிலிடம் கூறுகிறாள். கண்ணன் வரக் கூவினால் அதற்குப் பரிசாகத் தான் வளர்க்கும் கிளியைக் குயிலுடன் தோழமைக் கொள்ளச் செய்வேன் என்றும் கூவாவிடில் குயிலைத் தன் தோட்டத்திலிருந்து துரத்துவேன் என்றும் அச்சுறுத்துகிறாள்.


கார்காலம் வந்தது. மேகங்களைப் பார்க்கிறாள் ஆண்டாள் காமத்தீயுள் வருந்தி கண்ணீர் சொறியும் தன் நோயை வேங்கட மலையில் வாழும் வேங்கடக்கோனிடம் கூறுமாறு மேகங்களைத் தூது விடுகிறாள். ‘விண்ணீல மேலாப்பு விரித்தாற்போல் மேகங்கள்’ என்றும் ‘மாமுத்த நிதி சொறியும் மேகங்கள்’ என்றும் மேகங்களைப் புகழுகிறாள். வேங்கடத்திற்குச் சென்று அங்கு மழைபொழிந்து தன் காதல் நோயைத் தெரிவித்து, பெண் கொடியை வதை செய்தான் என்று உலகத்தவர் மதிக்காத சொல்லை செய்யாமல் இருக்க வேங்கடவனிடம் எடுத்துக்கூறவேண்டுகிறாள். ஒருநாளாவது தன் அங்கங்கள் மகிழத் தன்னுடன் தங்க வேண்டுமென்று விண்ணப்பம் செய்கிறாள். பிறகு பூக்களையும், குயில்களையும், மயிலையும், மழையையும், கடலையும் நோக்கித் தன் காதலை தெரிவிக்கிறாள். கூவும் குயிலைப் பார்த்து வேங்கடநாடர் தனக்கு வாழ்வு தந்தால் கூவுங்கள் என்கிறாள். மயிலின் ஆட்டம் காண தன் முதலான பகவான் இல்லையே என்று வருந்துகிறாள். பகவானையே சதா எண்ணியிருந்த அவளுக்கு பகவான் கையில் இருக்கும் பாஞ்சசன்னியத்தின் நினைவு வருகிறது. பகவானின் அதரங்கள் கற்பூரம் போல் வாசனையாக இருக்குமோ அல்லது கமலப்பூவின் வாசனையாக இருக்குமோ என்றும், அதரங்களின் சுவை இனிப்பாக இருக்குமோ என்றும் வினவுகிறாள். கடலில் பிறந்த பல சங்கங்கள் இருக்க பாஞ்சசன்னியம் அடைந்த பேற்றை எண்ணி வியக்கிறாள். பதினாறாயிரவர் தேவிமார் பார்க்கும்போதே மாதவன் தன் வாய்ச் சுவையை அடையும் பாஞ்சசன்னியத்தின் பேறு மிகவும் சிறந்தது என்று அதைப்போற்றுகிறாள்.


“உண்பது சொல்லில் உலகளந்தான் வாயமுதம் 
கண்படை கொள்ளில் கடல் வண்ணன் கைத்தலத்தே 
பெண்படையார் உன்மேல் பெரும் பூசல் சாற்றுகின்றார்
பண்பல செய்கின்றாய் பாஞ்சசன்னியமே”


என்று சாற்றுகிறாள்.


இவ்வாறு காதல் வயப்பட்ட ஆண்டாளுக்கு ஓர் கனவு வருகிறது. வாரணமாயிரம் சூழ வலம் செய்து மதுசூதன் வந்து தன் கைப் பற்றுமாறு கனாக்கண்டதாகக் கூறுகிறாள். கண்ணன் தன் கைப்பற்றி தீவலம் வருவதாகவும், செம்மை உடைய தன் திருக்கையால் தாள் பற்றி அம்மி மிதிப்பதாகவும், தன் கை மேல் கை வைத்து பொரிமுகம் தட்டுவதாகவும், தன்னுடன் மங்கல வீதி வருவதாகவும் தான் கண்ட கனாவினை கூறுகிறாள், கண்ணனின் சுந்தரத்தோளை நினைத்ததும் திருமாலிருஞ்சோலை எம்பெருமானின் நினைவு வருகிறது. தன்னைப்பார்த்து மலர்கள் சிரிப்பதாகத் தன் தோழியிடம் முறையிடுகிறாள். திருமாலிருஞ்சோலை அழகரின் நிறங்கொண்ட வண்டுகளையும், சுனைகளையும், தாமரைகளையும், தன் சரணைச் சாற்றும்படி வேண்டுகிறாள். திருமாலிருஞ்சோலை நம்பிக்கு என்று ‘நூறுதடா வெண்ணை, அக்காரவடிசில்’ எல்லாம் செய்து வைத்தாள். அதை அவன் வந்து ஏற்றால் “ஒன்று நூறாயிரமாகச் செய்வேன்” என்றும் பகவானிடம் கூறுகிறாள்.


காதலின் வேகம் அதிகரிக்கிறது. வீட்டில் இருக்கப்பிடிக்கவில்லை, அதனால் தன்னை கண்ணன் என்னும் கருந்தெய்வம் உறையும் மதுரை, ஆய்ப்பாடி, யமுனக்கரை, அவன் நடம் செய்த பொய்கைக்கரை, பத்தவிலோசனம், பாண்டிவடம், கோவர்த்தனம், துவராபதி போன்ற இடங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டுகிறாள். தன்னைப் பழித்துப் பேசும் உலகத்தாரை புண்ணில் புளி பெய்தாற் போல் பேசாது தன் காதல் நோய் தீர பெருமான் அரையில் உடுக்கும் பீதகவண்ண ஆடை கொண்டு விசிறச் சொல்கிறாள். தன் குழல் மேல் அவன் அணியும் துளசியை சூட்ட சொல்கிறாள். கண்ணன் வஞ்சிக்காமல் தன் வனமாலையைத் தந்தால் தன் மார்பில் புரட்டுமாறு வேண்டுகிறாள். ஆராவதமமுனையான் தன் அமுதவாயில் ஊறிய நீரைக் கொணர்ந்து தன் இளைப்பைத் தணிக்க வேண்டுகிறாள். அவன் ஊதும் குழலின் துளை வாயில் உள்ள நீரைத் தன் முகத்தில் தடவச் சொல்கிறாள். அவன் மிதித்த திருவடி மண்ணைத் தன் மேல் தடவச் சொல்கிறாள், அப்படியும் தணியாததும் சிறு மானிடவரைக் கண்டு நானும் தன் கொங்கையைக் குமரனின் பணைத்தோளோடு சேர்த்துக் கட்டச் சொல்கிறாள். இம்மை பிறவியிலேயே அவன் திருமார்பில் தன் முலைகள் இடர் சேரச் சேர்ந்தால் மிகவும் சந்தோஷம் என்று வேட்கையுறுகிறாள். இவ்வாறு ஸ்ரீ ஆண்டாள் பகவான் மேல் காதல் கொண்டு 143 பாடல்கள் பாடியிருக்கிறாள், நாச்சியார் திருமொழி என்று வழங்கும் அந்தப் பாடல்கள் ஆண்டாளின் காதல் மாலையாக பகவானிடம் அப்பணம் செய்யப்பட்டு இருக்கிறது.

ஆண்டாள் திருவடிகளே சரணம்


நன்றி - ஶ்ரீரங்கநாத பாதுகா தை 1978

கருத்துரையிடுக (0)
புதியது பழையவை