திங்கள், 8 அக்டோபர், 2012

ஸ்ரீமத் பாகவதம் – வேளுக்குடி கிருஷ்ணன் - 10


அறிமுகம் (10) – கலியுகத்தில் முக்திக்கு வழி!

ப்ரஹ்மனின் புத்திரர்களாகிய ஸனகர் முதலானோர் ஸ்ரீமத் பாகவத புராணத்தின் பெருமையைக் கூறி வரும்போது, ஏழு நாட்களில் படிக்க வேண்டிய முறையையும், பாராயணம் செய்ய வேண்டிய முறையையும் எடுத்துரைக்கிறார்கள். பாகவத புராணப் பாராயணம் ஆவணி மாதத்தில் தொடங்கி, மார்கழி மாதம் வரை செய்யப்படலாம். ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி ஆகிய மாதங்களில் பாகவத பாராயணம் செய்தால், இவ்வுலக இன்பத்துக்கும், மறுமையில் மோட்சத்துக்கும் உறுதி பெறுகிறோம்.



ஆவணி மாதத்துக்கும், மார்கழி மாதத்துக்கும் கண்ணனுடன் நெருங்கிய தொடர்பு உண்டு. கண்ணன் பிறந்ததே ஆவணி மாதத்து அஷ்டமி திதியில், ரோஹிணி நக்ஷத்திரத்தில். அதே போல், கோகுலத்தில் இருந்த ஆயர் பெண்டிர்களெல்லாம் ஹேமந்துருதுவின் (முன்பனிக் காலத்தின்) முதல் மாதமாகிய மார்கழி மாதத்தில்தான், கண்ணனையே தங்கள் கணவனாக, தெய்வமாக அடைய வேண்டும் என்பதற்காக நோன்பு நோற்றார்கள். கண்ணனுக்கு என்றே வாழ அவதரித்த ஆண்டாள், திருப்பாவை பாடியதே மார்கழி மாதத்தில்தான். ‘மாதங்களுக்குள் நான் மார்கழி மாதமாக இருக்கிறேன் என்று கண்ணனே கீதையில் கூறுகின்றார். ஆகையால், ஆவணியிலிருந்து, மார்கழிக்குள் எப்போது வேண்டுமானாலும் ஏழு நாட்களில் பாகவத பாராயணம் செய்யலாம்.

இந்தப் புராணத்துக்கு வேதத்தோடு ஒரு நெருங்கிய தொடர்பு உண்டு. உபநயனம் செய்யப்பட்ட ஒரு பிள்ளை வேதத்தை அத்தியயனம் செய்யத் தொடங்கும் காலமும் ஆவணி மாதமே! அம்மாதத்துப் பௌர்ணமியன்று வேத அத்தியயனத்தைத் தொடக்கம் மட்டும் செய்துவிட்டு, அதைத் தொடர்ந்து வரும் தேய்பிறைக் காலத்தைத் தவிர்த்து விட்டு, அடுத்து வரும் வளர்பிறை இரண்டாம் நாளிலிருந்து தொடங்கி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி ஆகிய மாதங்கள் முடிந்து, தை மாதம் பௌர்ணமி திதி வரை வேத அத்தியயனத்தைச் செய்ய வேண்டும். அதாவது, சுமார் நாலரை மாதங்கள் வேத அத்தியயனம் செய்யலாம். அதே போலத்தான் பாகவத புராணம், இதே காலகட்டத்திலேயே படிக்கப்படுகிறது.

இப்புராணத்தைப் பாராயணம் செய்யத் தொடங்கும்போது, நாம் பெற்ற இன்பம் அனைவரும் பெற வேண்டும் என்ற நல்லெண்ணத்துடனும், ‘இனியது தனி அருந்தேல் என்கிற மரபின் படியும் எல்லா பக்தர்களுக்கும் பத்திரிகை அனுப்பி, அழைப்பு விடுக்க வேண்டும். ஊர் ஊராக, தேசம் தேசமாக இருப்பவர்களை பாராயணம் நடக்கும் இடத்துக்கு வரவழைத்து, அவர்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும். ‘மெய்யடியார்கள் தம் ஈட்டங் கண்டிடக் கூடுமேல் அது காணும் கண் பயன் ஆவதே என்பது ஆழ்வாருடைய திருவாக்கு. உண்மையான இறை அன்பு கொண்ட அடியார்களுடைய கோஷ்டியில் நாம் இருந்தோமானால், அதுவே நாம் பிறவி எடுத்ததன் பயனாகும்.

வருபவர்கள் ஆனந்தமாக அமர்வதற்காக, சிறந்த பந்தல் போட வேண்டும். தரையைப் பெருக்கி, மெழுகி, கோலமிட்டு சுத்தம் செய்ய வேண்டும். பாகவத பாராயணம் புண்ணிய தீர்த்தத்தின் கரையிலேயோ அல்லது காட்டிலேயோ அல்லது நம் வீட்டிலேயோ செய்யப்படலாம். சொல்பவர் வடக்கு நோக்கி அமர்ந்து கொண்டு பாராயணமோ, உபன்யாசமோ செய்தால், கேட்பவர்கள் கிழக்கு நோக்கி அமர வேண்டும். அல்லது சொல்பவர் கிழக்கு நோக்கி அமர்ந்தால், கேட்பவர்கள் வடக்கு நோக்கி அமர வேண்டும். சொல்பவருக்குச் சில ஆத்ம குணங்கள் தேவை. அவர் உலகியல் பற்றற்றவராக, பணத்துக்காகப் பாராயணம் செய்யாதவராக இருக்க வேண்டும். இச்சைகளுக்கு இடம் கொடாதவராக இருத்தல் வேண்டும். சாத்திரங்களை சந்தேகத்துக்கு இடமில்லாமல் கற்றவராக இருக்க வேண்டும். அனைவருக்கும் புரியும்படி எடுத்துக் கூறுவதற்காகச் சிறந்த உதாரணங்களை அவர் எடுத்துச் சொல்ல வேண்டும்.

பாராயணம் தொடங்கும் அன்றைய தினம் காலை க்ஷவரம் செய்து கொண்டு, தூய நீரில் நீராடி, புத்தகத்தை வணங்கி, பெருமானைக் குறித்து கீழ்க்கண்டவாறு பிரார்த்திக்க வேண்டும்.

ஸம்ஸார ஸாகரே மக்நம்
தீனம் மாம் கருணாநிதே
கர்ம மோஹக்ருஹீதாங்கம்
மாம் உத்தர பவார்ணவாத்

இந்த ஸம்ஸாரம் என்னும் பெருங்கடலில் அடியேன் மூழ்கி இருக்கிறேன். வேறு புகலற்றவனான அடியேனை கருணைக்கடலான தேவரீர் ஸம்ஸாரத்திலிருந்து தூக்கி எடுத்து விட வேண்டும். பாகவத பாராயணத்தைச் செய்கிறேன். அடியேனுக்கு இதைச் செய்யத் தகுதி இல்லாவிடினும், நீரே அதற்கு முழுமை ஏற்படுத்தி ஏற்றுக் கொள்ள வேண்டும் – இந்தப் பிரார்த்தனையுடன் நாம் பாகவத பாராயணத்தைத் தொடங்க வேண்டும். இந்தப் பாராயணம் நமக்கு எத்தனையோ நன்மைகளைச் செய்தாலும், நாம் ஆன்ம அறிவையும், பெருமான் விஷயமான பக்தியையுமே இந்தப் பாராயணத்திலிருந்து எதிர்பார்க்க வேண்டும்.

சரி! ஒரு நாளில் எப்போது பாராயணம் செய்யலாம்? சூரியோதயம் தொடங்கியதிலிருந்து மூன்று அல்லது மூன்றரை ஜாமங்கள் வரை பாராயணம் செய்யலாம். உணவுக்காகவும், இயற்கை உபாதைகளுக்காகவும் மதியப் பொழுதில் இரண்டு நாழிகை ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும். ஏழு நாட்களுமே பட்டினி கிடந்து பாராயணம் செய்ய முடிந்தால் நல்லது. ஆனால், பட்டினியால் உடல் சோர்ந்து போய் பாராயணம் நின்று விடக்கூடாது. அப்போது ஏதாவது ஒரு வேளை உணவு அருந்துவதுதான் சரியான முறை. நெய்யோ, பாலோ, பழங்களோ – இப்படி மிதமான உணவை உட்கொள்ளலாம். அதைவிட முக்கியம், ப்ரஹ்மச்சரியத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். படுக்கையில் படுத்து உறங்குவது கூடாது.

நிறைய வெளி அடையாளங்களைப் பார்த்தோம். நல்ல பண்புகள் வேண்டுமல்லவா? ஆகையால் ஆசையைத் தொலைத்து,கோபப்படாமல், பொறாமைப்படாமல், செருக்கோடு பேசாமல், கடுமையான வார்த்தை பேசாமல், பகைமை பாராட்டாமல் - இந்த ஏழு நாட்களும் வாழ வேண்டும். தீய செயல்கள் கூடாது என்று பார்த்தோம். அதேபோல், நல்ல பண்புகள் வேண்டும். உண்மை பேசுதல், மனத்தாலும், மொழியாலும், மெய்யாலும் தூய்மையோடு இருத்தல், தயை காட்டுதல், மௌனம் காத்தல், கொடைத்தன்மையோடு நிறைய தான தர்மங்களைச் செய்தல், நேர்மை, அடியார்களிடத்தில் பரிவு – போன்ற நற்பண்புகளோடு ஏழு நாட்களையும் கழிக்க வேண்டும்.

இதைக் கூறும்போது, ‘ஏழு நாட்களுக்குப் பிறகு பழையபடி வாழலாமா? என்று கேட்கத் தோன்றும். இந்த ஏழு நாட்கள் நல்ல பண்புகளைப் பழக்கப்படுத்திக் கொள்வதே அதற்குப் பிறகும் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்காகத்தான். மௌனமாக இருந்தால், எத்தனையோ நன்மைகள். ஆனால், பாராயணம் செய்வதில் மௌனம் கூடாது.

எவ்வளவு நேரம் பாராயணம் செய்யலாம்? காலை சூரியோதயத்திலிருந்து சுமார் ஆறு அல்லது ஏழு மணி நேரம் பாராயணம் செய்யலாம். நாம் பாராயணம் செய்யும்போது, எத்தனையோ தோஷங்கள், குற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. அந்த தோஷங்களைப் போக்கி கொள்வதற்காக, கூடவே ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தையும், பகவத் கீதையையும் பாராயணம் செய்து கொள்ளலாம். கேட்க வருபவர்களுடன் சேர்ந்து மாலைப் பொழுதில் பகவானின் கதைகளைப் பற்றிய உபன்யாஸமும், அவனுடைய நாமஸங்கீர்த்தனமும் செய்யப்பட வேண்டும். அனைவருக்கும் துளஸி மாலை கொடுத்து, பகவானுடைய நாமங்களை ஜபிக்கச் சொல்ல வேண்டும். பெருமானுடைய பிரஸாதத்தைத்தான் நாம் உண்ண வேண்டும். ‘ஜய! ஜய! ஜய! என்கிற கோஷத்தோடு எப்போதும் அவன் நாமங்களைப் பாடிக் கொண்டிருக்க வேண்டும்.

இப்படி பாகவத ஸப்தாஹத்தின் பெருமையை ப்ரஹ்மாவின் நான்கு குமாரர்களும் சொல்லி விட்டு, ‘இன்னும் என்ன வேண்டும்? என்று நாரதரிடத்தில் கேட்க, அவர் ஆசைப்பட்ட படிக்கு மானஸ குமாரர்களே ஏழு நாட்களில் பக்தி ததும்பும் குரலோடு பாகவதத்தை பாராயணம் செய்தார்கள். அச்சமயம் அதைக் கேட்பதற்காக சுகாசாரியார் அங்கு வந்து சேர்ந்தார். அப்போது சுகாசாரியார் கூறுகிறார்:

நிகம கல்பதரோர் கலிதம் பலம்
சுகமுகாத் அம்ருதத்ரவ ஸம்யுதம்
பிபத பாகவதம் ரஸமாலயம் முஹுரஹோ
ரஸிகா புவி பாவுகா:

வேதங்களே மரமாகவும், அதில் பழுத்த பழத்தின் ரஸமாக, அதுவும் சுகாசாரியார் எனும் கிளி கொத்திய பழத்தின் ரஸமாக, பாகவத புராணம் கிட்டியுள்ளது. பெருமானிடத்திலும் அவன் கதையைக் கேட்பதிலும் விருப்பமுள்ள அடியார்கள் அனைவரும் இதைப் பருகலாம்; களிக்கலாம். இதைக் கேட்பவரோ, படிப்பவரோ இவ்வுலக இன்பத்தையும், மறுமையில் ஸ்வர்க்க லோகத்தையும், ஏன், ஸத்ய லோகத்தையும், ஏன், அனைத்தைக் காட்டிலும் உயர்ந்த வைகுண்ட லோகத்தையும் கூட அடைகிறார்.

பாராயணம் நடந்து கொண்டிருந்தபோது, ப்ரஹ்லாதர், பலி, உத்தவர், அர்ஜுனன் - ஆகியோர் அங்கு எழுந்தருளினார்கள். அவர்களுக்கு இதிலிருந்த விருப்பத்தால் ப்ரஹ்லாதர் தாளம் தட்டத் தொடங்கினார். அர்ஜுனன் பண் இசைத்துப் பாட ஆரம்பித்தான். இந்திரன் மிருதங்கம் வாசித்தான். தேவ ரிஷியான நாரதர் வீணையை மீட்டினார். இப்படியாக ஒரு சிறந்த கச்சேரியைப் பார்த்தோம்.

இதன் கதாநாயகனான கண்ணன் அவதரித்தது எப்போது? சுகாசாரியார் உபதேசித்ததும், கோகர்ணன் பேசியதும், ப்ரஹ்மாவின் புத்திரர்கள் உபதேசித்ததும் எப்போது? சற்றே கால ஆராய்ச்சி செய்வோம்.

மனிதர்களின் காலம்: இரண்டரை நாழிகை என்பது ஒரு மணி நேரம். 60 நாழிகை ஒரு நாள். 15 நாட்கள் ஒரு பக்ஷம். 2 பக்ஷங்கள் (வளர்பிறை, தேய்பிறை) 1 மாதம். 6 மாதங்கள் ஒரு அயநம். 2 அயநங்கள் (உத்தராயணம், தக்ஷிணாயனம்) 1 ஆண்டு. 43,20,000 ஆண்டுகள் ஒரு சதுர்யுகம்.

தேவர்களின் காலம்: மனிதர்களின் ஓர் ஆண்டு தேவர்களுக்கு ஒரு நாள். ஆகவே தேவர்களின் காலக்கணக்கில் ஒரு சதுர்யுகம் என்பது சுமார் 12,000 ஆண்டுகள். 71 சதுர்யுகங்களுக்கு 1 மந்வந்தரம் என்று பெயர்.

பிரமனின் காலம்: ஆயிரம் சதுர்யுகங்கள் பிரமனுக்கு ஒரு பகல் (இப்பகல் பொழுதுக்கு கல்பம் என்று பெயர்.) அதே அளவு இரவு. பிரமனின் ஒரு பகல் பொழுதில் 14 மநுக்கள் (மந்வந்தரம்) உலகை ஆள்வார்கள். பிரமனுக்கும் ஆயுள் நூறு ஆண்டுகளே. அதில் ஐம்பது ஆண்டுகளுக்கு ஒரு பரார்தம் என்று பெயர்.

சதுர்யுகக் கணக்கு: க்ருத, த்ரேதா, த்வாபர, கலி எனும் நான்கு யுகங்கள் முறையே 4:3:2:1 என்ற விகிதத்தில் இருக்கும். அதாவது தேவர்களின் ஆண்டுக்கணக்கில் 4800 : 3600 : 2400 : 1200 என்ற எண்ணிக்கையில் இருக்கும். இதில் ஒரு யுகமும் மற்றொரு யுகமும் கூடும் காலத்துக்கு ‘ஸந்தி என்று பெயர். ஒவ்வொரு யுகத்துக்கும் முன் மற்றும் பின் ஸந்திக்கு பூர்வ மற்றும் உத்தர ஸந்தி என்று பெயர். க்ருத யுகம் 4000 ஆண்டுகள். இதற்கு முன் ஸந்தி 400 ஆண்டுகள். பின் ஸந்தி 400 ஆண்டுகள். ஆக மொத்தம் 4800 ஆண்டுகள். இக்கணக்கு கீழ்க்கண்ட அட்டவணையின்படி இருக்கும்.


நாம் ஸங்கல்பம் செய்து கொள்ளும்போது
..அத்ய ப்ரஹ்மண: த்விதீய பரார்தே ச்வேத வராஹ கல்பே வைவஸ்வத மந்வந்தரே அஷ்டாவிம்சதிதமே கலியுகே...
என்று கூறுகிறோம். இதன் பொருள் – ‘ப்ரஹ்மனின் இரண்டாவது ஐம்பது ஆண்டுகளில், ச்வேதவராஹம் எனும் கல்பத்தில், வைவஸ்வத மந்வந்தரத்தில், இருபத்தி யெட்டாவது சதுர்யுகத்தில், கலியுகத்தில்... என்பதாகும்.

நாம் தற்போது வாழும் இந்தக் கலி யுகத்துக்கு முன் முடிந்த த்வாபர யுகத்தின் இறுதியிலேயே ஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்தார். கண்ணன் இப்பூவுலகத்தில் சுமார் 125 ஆண்டுகள் எழுந்தருளியிருந்தார். அவர் மறைந்தவுடன் கலி யுகம் பிறந்தது. கலி பிறந்து 130 ஆண்டுகள் கழித்து சுகாசாரியார், பரீக்ஷித்துக்கு புரட்டாசி மாதம் நவமி திதியில் தொடங்கி பாகவதத்தை உபதேசித்தார். அதன் பின் 200 ஆண்டுகள் கழித்து கோகர்ணன் உபதேசித்தார். அதன்பின் 300 ஆண்டுகள் கழித்து ஸனகர் முதலானோர் உபதேசித்தனர். ஆக, கலி யுகத்தில் ஸ்ரீமத் பாகவத பாராயணமே முக்தி அளிக்கும் சிறந்த அமுதம் என்று தெளிவாகிறது. இனியும் காத்திருக்காமல் முதல் ஸ்கந்தத்துக்குள் நுழைவோம்.

(இத்துடன் அறிமுகம் நிறைவு பெறுகிறது. அடுத்து - முதல் அத்தியாயம்)

நன்றி - துக்ளக்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக