'உணர்வு' என்ற சொல் உள்ளத்தை அடிப்படையாகக் கொண்டது. தத்துவ அறிஞர்கள் வேதகாலம் முதல் இக்காலம் வரை உள்ளத்தைப் பற்றிச் சிந்தித்து உள்ளார்கள்.
'உள்ளம் என்பது ஒன்றன்பின் ஒன்றாக நீரோட்டம் போல் வரும் நிகழ்ச்சிகளை இணைத்து இருப்பதாகும். பால் இயல்பூக்கம், வாழ வேண்டும் என்ற எண்ணம், அதிகாரம் வகிக்க வேண்டும் என்ற எண்ணம் ஆகிய இவைகள் மனிதனின் அடிநிலை உந்து சக்திகள்' (தா.ஏ.சண்முகம்.1960 - ப.10) என்று பௌத்த மதம் உள்ளத்தைப் பற்றிக் குறிப்பிடுகின்றது. எனவே உள்ளம் என்பது உணர்வுகளால் நிரம்பியதாகும். ஆண்டாள் பாடல்களில் இடம்பெறும் மன உணர்வு வெளிப்பாட்டினை 'உணர்தல், நோற்றல், வரைதல்' என்ற மூன்று நிலைகளில் காணலாம்.
உணர்தல்
நம் அடிமனத்தில் நீக்கமற ஆழப்பதிந்திருக்கும் விருப்பம், விருப்பத்திற்குரிய மனிதர் அல்லது பொருள் குறிப்பிடத்தக்க சூழலில் மட்டுமே நம்மால் உணர முடியும். அத்தகைய நிலையே 'உணர்தல்' என்னும் உளவியல் நிலையாகும்.
ஆழ்வார்கள் பன்னிருவரில் விஷ்ணுசித்தர் எனப் போற்றப்படுபவர் பட்டர்பிரான் என்ற இயற்பெயர் கொண்ட பெரியாழ்வார் ஆவார். குழந்தை இல்லாதவர். திருமாலுக்கு மாலைகட்டித் தம் பணியைச் செய்து வரும் பெரியாழ்வாருக்கு குழந்தை இல்லாத ஏக்கம் வாட்டியது. இறையருளால் நந்தவனத்தில் துளசிச்செடியின் அடியில் பெண் குழந்தை ஒன்று கிடைக்க அதனை எடுத்து வளர்க்கிறார். பூக்களோடு பூவாக குழந்தை நந்தவனத்தில் கிடந்தமையாலும், கோடி சூர்ய பிரகாசத்துடன் விளங்கியமையாலும் அக்குழந்தைக்குக் 'கோதை' என்று பெயர் சூட்டி மகிழ்கின்றார். குழந்தை தளர்நடை போடத் தொடங்கிய நாளிலிருந்தே பெரியாழ்வார் குழந்தையை அழைத்துக் கொண்டு நந்தவனம் செல்கின்றார். மலர் பறிக்கிறார். பெருமானின் அழகினை அவர்தம் பெருமைகளைக் கோதைக்குக் கதைகளாகக் கூறுகின்றார். குழந்தை கோதையும் பெருமானின் கதைகளைக் கேட்டவாறு தந்தையுடன் மலர் பறிக்கின்றாள். தந்தை மகளை மடியில் வைத்துக் கொண்டு மாலை கட்டுகிறார். கோதையை அழைத்துக் கொண்டு கோயிலுக்குச் செல்கின்றார். பெருமாளுக்குப் பூமாலை சூட்டிப் பாமாலை பாடுகின்றார். பெருமாள் அலங்காரப் பிரியன்; அவனுக்கு மாலை அழகாய் இருக்கிறது என்றுகூறி பரவசப்படுகிறார். இவை அனைத்தும் கோதையின் இளம் பிள்ளைப் பருவத்தில் (Early Child hood -3-6) நடக்கின்றன. இப்பருவத்தில் குழந்தைகளுக்கு புதிய ஆர்வங்கள் (interest) காணப்படும். ஏதாவது பொருள்களை வைத்து தாம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற ஆசை ஏற்படும் என்ற உளவியலார் கூற்றுப்படி இப்பருவத்தில் கோதை தாமும் மாலை கட்டக் கற்றுக் கொள்கிறாள். தந்தை கூறும் பெருமாள் பாசுரங்களையும் பெருமைகளையும் ஆர்வமாகக் கேட்கின்றாள். ஆனாலும் குழந்தைப் பருவத்திற்கே உரிய பொருட்கள் மீதுள்ள ஆசை கோதையிடமும் விஞ்சி காணப்படுகின்றது. கோதை பெண்குழந்தை ஆதலால் அவள் விரும்பும் அலங்காரம் தந்தை கட்டிய மாலையைத் தான் அணிந்து பார்க்க வேண்டும் என்பதே ஆகும். இளங்குழந்தைப் பருவத்தில் அதற்கான மனத்துணிச்சல் இல்லை. ஆனால் தந்தை கட்டிய மாலை தனக்கும் இத்தகு அழகு தருமோ என்ற எண்ணம் மட்டும் வலுப்பட்டுக் கொண்டே வருகின்றது. கோதை பிள்ளைப் பருவம் அடைகின்றாள். (Later child hood6-12) இப்பருவம் ஒருவகையில் பள்ளிப்பருவம்; விளையாட்டுப் பருவம் கூட்டாளிப் பருவம்; (play age and gang age) எனலாம். இப்பருவப் பிள்ளைகள் எது நல்லது? எது கெட்டது? என்று தெரிந்து கொண்டே வீடு, பள்ளி ஆகியவற்றை ஒட்டிய சூழல்களில் பெரியோர் விதித்துள்ள அதிகாரம், கட்டுப்பாடு போன்றவற்றிலிருந்து சுதந்திரம் பெறும் நோக்குடன் எதிர்மறை நடத்தைகளில் (negativism) ஈடுபடுகின்றனர் என்பர் உளவியலார் (முனைவர் கோகிலா தங்கசாமி, 1997, ப.14). கோதைக்கு உலகம், பள்ளிக்கூடம், வீடு எல்லாமே பெருமாள் தான். பெருமாள் கோயில்தான் கூட்டாளி. அதனால் அவருக்குக் கட்டிய மாலையை அணிந்து பார்க்கும் விருப்பம்தான் அவள் மேற்கொண்ட இளம்பிள்ளை விளையாட்டு. அவளது குழந்தைப் பருவத்தில் இறைவனுக்குச் சாத்தப்படும் மலர்மாலை குற்றமற்றதாக தூய்மையாக இருக்க வேண்டும் என்று தந்தை உணர்த்தியது நினைவு இருந்தாலும் பூமாலை மீது கொண்ட விருப்பால் சின்னஞ்சிறு பெண்ணான கோதை இறைவனுக்குக் கட்டிய மாலையைத் தான் அணிந்து கண்ணாடியில் தன்னை அழகு பார்க்கிறாள். அம்மாலை தனக்கும் பெருமாளைப்போல அழகு தருவது கண்டு பெருமகிழ்ச்சி அடைகின்றாள். அதனால் தந்தை மாலையைக் கட்டி வைத்துவிட்டுச் சென்றதும் தான் அணிந்து பார்ப்பதும் பிறகு கழற்றிப் பூக்குடலையுள் வைப்பதும் அவளுக்கு வாடிக்கையாகி விடுகின்றது. கோதையின் செயலைப் பெரியாழ்வார் அறிந்தபோது பெரிதும் கடிந்து கொள்கிறார். ஆனால் இச்செயல் தொடர்ந்து நடைபெறுகிறது. அவளால் அவள் மனத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இதனைப் பெரியாழ்வார் கோதை 'சூடிக்கொடுத்த தூமலர்த் தாமமன்றிப் பிரிதெதுவும் தமக்குப் பிரியமற்றதாம்' என்று பெருமானே வேண்டிக் கொண்டதாகக் குறிப்பிடுகின்றார். அன்று முதல் கோதை 'சூடிக்கொடுத்த சுடர்க்கொடி' ஆகின்றாள். ஆண்டவராகிய பெருமாளுக்கே ஆட்பட்டு அவனுக்கே அடிமையாகி அவன் நினைவுகளிலே ஆழ்ந்து அவனையே ஆளப் பிறந்தமையால் கோதை ஆண்டாள் ஆனாள். பருவம் அடைந்த தனது மகளுக்கு மணமுடிக்க விரும்பினார் தந்தை பெரியாழ்வார். ஆண்டாளுக்கு எத்தகு மணாளன் வேண்டும் என்று அறிய விரும்புகிறார். தனது மகளிடம் கேட்டபோது ஆண்டாள் தயக்கமின்றி
‘மாலிருஞ்சோலை எம்மாயனுக்கு அல்லால்
மற்றொருவருக்குப் பேசல் ஒட்டேன்'
என்று கூறுகின்றாள். ஆண்டாள் கண்ணனிடத்து குழந்தைப் பருவம் முதல் கொண்ட பற்றும், விருப்பும், ஈடுபாடும் காதலாகியதை அப்போது தான் அவளே உணர்கின்றாள். அதனால் தந்தையிடம்,
'அவரைப் பிராயம் தொடங்கி என்றும்
ஆதரித்து எழுந்த என் தடமுலைகள்
துவரைப் பிரானுக்கே சங்கற்பித்துத்
தொழுது வைத்தேன்'
(நாச்சியார் திருமொழி பா-1)
என்று தெளிவுபட தன்னிலையை விளக்குகின்றாள்.
பெரியாழ்வார் திகைக்கிறார். 'உன் தோழி யாரும்மா' என்று கேட்ட வினாவிற்குப் பதில் கூறுவதுபோல் மகள் உறுதியாகவும், தெளிவாகவும் உணர்ந்து உணர்த்தியக் கருத்து திடுக்கிட வைக்கிறது. அன்று கண்ணனுக்கு கட்டிய மாலையை அணிந்து அழகு பார்த்த ஆண்டாளின் செயல் விளையாட்டானதல்ல என்பதனைத் தெளிவாக உணர்ந்தார் தந்தை பெரியாழ்வார். மகளிடம் பெருமாள் 108 திவ்ய தேசங்களில் வீற்றிருக்கின்றார். இதில் யாரை மணவாளனாகத் தேர்ந்தெடுப்பது என்று வினவுகின்றார். 108 திருப்பதிகளின் பெருமைகளையும் கூறும்படி மகள் தந்தையிடம் வேண்டுகின்றாள். பெரியாழ்வாரும் பெருமானின் திருப்பதிகளின் சிறப்பினைக் கூறுவது தனக்குக் கிடைத்த பேறாகக் கருதி விளக்குகின்றார். தென்பகுதியில் திருவேங்கடம் - பூ மண்டபம்; காஞ்சிபுரம் - தியாக மண்டபம் என்று குறிப்பிடுகின்றார். அதன்பின் திருவரங்கம் - போக மண்டபமாகும் என்று உரைக்கின்றார். திருவரங்கத்தில் எழுந்தருளியிருப்பவர் பெரிய பெருமாள்; பெரிய பிராட்டி; பெரிய கருடன்; பெரிய மதில்; பெரிய மங்களாசாசனம் என்ற பெருமையைக் கொண்டவன் திருவரங்கன் என்று கூறிய அளவில் ஆண்டாள் மூர்ச்சித்து விழுந்தாள். தனது தந்தைக்குத் தன்னவனைக் காட்டித் தானும் உணர்ந்தாள் இதுவரை ‘பக்தி’ என்று நினைத்த உணர்வு காதலாக வெளிப்பட்டது.
அதாவது தந்தையால் கண்டிக்கப்பட்ட 'சூடிக் கொடுத்த செயல்' ஆண்டாளின் நனவிலி மனத்தில் ஆழப்பதிந்து விட்டது. 'சூடிக் கொடுத்தல்' என்பது ஒரு பெண்ணுக்குத் திருமண நிகழ்ச்சியில் கணவனிடத்து மட்டுமே நிகழக்கூடிய உரிமையுடைய செயலாகும் என்பதனை அவள் மனம் உணர்கிறது. மானிடப் பெண்ணான தான் பெருமாளின் மாலையை அணிந்தது தவறு மட்டுமின்றி அதனையே அவனுக்குச் சுட்டிய செயலின் தவறும் வெளிமனத்தால் உணரப்பட்டு அச்சத்தையும், வருத்தத்தையும் தருகிறது. இதனை வெளிமனம் ஆழ்மனத்தில் தள்ளி விடுகிறது. அதுவே காதலாகியது. மணம் பேசும் சூழலில்தான் அவள் காதல் வெளிப்படுகின்றது. இதனை உளவியலாரின்,
'மனிதனின் இயல்பான ஆசைகள் வெட்கம் அறியாதவை. பாலுணர்வு கொண்டவை. ஆனால் சமூக ஏற்புகள், சமூக மதிப்புகள் அவன் சார்ந்த பண்பாடு, அறநெறி ஒழுக்கங்கள் ஆயன அவனுடைய ஆசைகளை வெளிப்படுத்துவதில் சில கட்டுப்பாடுகளை ஏற்படுத்துகின்றன. எனவே அவன் சமூக ஏற்பிற்கு உரியதல்லாத தன் எண்ணங்களை, ஆசைகளை மனத்தகத்தே அடக்கிக் கொள்கிறான். இவை அவனுடைய நனவிலி மனத்தில் சென்று மறைந்து விடுகின்றன. நனவு மனமானது தொன்றுதொட்டு வரும் பண்பாட்டு மரபுகள் வெளி உலகச் சட்டங்கள், ஒழுக்கநெறிகள் ஆகியவைகளுக்கு ஏற்பவும் மனிதனின் விருப்பங்களை சமூக தராதரத்திற்கு ஏற்பவும் வெளிப்படுத்துகிறது.’ (இரா. காஞ்சனா, 2000ப. 27) என்ற உளவியலாரின் கூற்று ஆண்டாளின் காதலுக்கு அரணாகின்றது. பெரியாழ்வார் குழந்தைப் பருவத்தில் கோதையை 'பின்னைகொல் நிலமாமகள் கொல் திருமகள்கொல் பிறந்திட்டாள்' என்று கொஞ்சுகிறார். இவர்கள் மூவருமே பெருமாளின் தேவியர். குழந்தைப் பருவத்திலே பெருமாளின் தேவிகளாக ஆண்டாள் தந்தையால் குறிக்கப்படுவதனால் அவள் காதலும் பெருமாளிடத்தே ஏற்படுகின்றது. அவ்வகையில் ஆண்டாளின் சூடிக் கொடுத்த செயலுக்கான காரணம் அவள் அரங்கனிடத்துக் கொண்ட காதலே ஆகும். மனிதர்களிடத்துக் கொண்ட காதலாயிருப்பின் அவளது காதல் அப்போதே வெளியே புலப்பட்டிருக்கும். இறைவனிடத்து கொண்ட காதலால் ஆழ்மனத்தில் புதைந்து தமக்கு மணம் பேசும் சூழலில் பண்பாட்டு உணர்வுடன் வெளிப்படுகிறது எனலாம்.
நோற்றல்
'நோற்றல்' என்ற சொல் நோன்பு என்பதனோடு தொடர்புடையது. 'நோன்பு' என்பதற்கு அகராதி தரும் பொருள் 'சாப்பிடும் உணவு வேளைகளைக் குறைத்தோ சில எளிய உணவை மட்டும் உண்டோ இறைவனை நினைந்து செய்யும் பிரார்த்தனை' (காவ்யா, தமிழ், தமிழ் ஆங்கில அகராதி ப.800) என்பதாகும். ஆண்டாள் திருவரங்கப் பெருமானை அடைய இரு நோன்புகளை நோற்கிறாள். ஒன்று மார்கழி நோன்பு, மற்றொன்று தை நோன்பு ஆகும். மார்கழி நோன்பு பண்டைக் காலம் முதலே பாரதநாட்டில் வழிவழியாக பெண்களால் மேற்கொள்ளப் பட்டு வரும் மிகச்சிறந்த நோன்பாகும். இது ஒருவகை வரம் கேட்கும் நோன்பாகும். பெண்கள் இந்த மார்கழி நோன்பினை நீர்த்தேங்கி நிற்கும் குளங்களிலும் தடாகங்களிலும் நீராடி மேற்கொண்டிருக்கிறார்கள். இதற்கென்று வேத விதிகள் எதுவும் இல்லை. இத்தகு நோன்பு நோற்கும் முறையை ஆண்டாள் பாடல்களும் வலியுறுத்துகின்றன.
'வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ! பாற்கடலுள்
பையத் துயின்ற பரமன் அடிபாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்'
(திருப்பாவை-2)
என்று தமக்குத் தாமே சில கட்டுப்பாட்டு விதிகளை ஆண்டாள் விதித்துக் கொண்டு நோன்பினை மேற்கொள்கிறாள். 'நாராயணன் நமக்குப் பறை/வரம் தருவான்' என்று நம்புகிறாள். ஆண்டாள் மார்கழி நோன்பினைக் கூட்டு வழிபாடாகச் செய்கின்றாள். ஆயர்குலப் பெண்கள் அனைவருக்கும் குலதெய்வம் கண்ணன். அதனால் அத்தனை பேரையும் அழைத்துக் கொண்டு செல்கிறாள். பெருமாளே! எங்கள் குலதெய்வமே! இங்கு நான் மட்டும் வரவில்லை, ஆயர்குலப் பெண்கள் அனைவரும் வந்துள்ளோம் என்று முப்பது நாளும் குறிப்பிடுகின்றாள். முப்பது நாட்கள் முடிந்தும் அவள் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. கண்ணன் காட்சி தரவில்லை. ஆனாலும் மனம் தளரவில்லை ஆண்டாள். 'என்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உனக்கே நாம் ஆட்சிசெய்வோம் உன்னை அவ்வளவு எளிதில் விட்டு விடமாட்டேன்' என்று உறுதி கூறுகிறாள். இனி யார் காலைப் பிடித்தால் அரங்கனை அடையலாம் என்று சிந்திக்கின்றாள். அடுத்து வரும் தை, மாசி, பங்குனி ஆகிய மூன்று மாதங்களும் மன்மதனுக்கு உரிய மாதங்கள் ஆகும். மன்மதன் காமன் என்றும் அழைக்கப்படுகிறான். காமன் அழகிய இளைய கடவுள்; காதல் தெய்வம்; ஆன்மாவின் முதல் பிறப்பு என்று காமனை ரிக் வேதம் குறிப்பிடுகிறது. காமன் திருமாலின் மனத்தில் தோன்றியவன் இவன் இந்து சமயத்தில் மட்டுமின்றி சமண பௌத்த மதங்களிலும் குறிக்கப்படுகின்றான். இந்து சமயத்தில் காமன் யோகமூர்த்தியாக விளங்கிய சிவனைப் போக மூர்த்தியாக மாற்ற முயன்று சாம்பலாகியவன். உடலற்று அனங்கன் ஆனபோதிலும் பெண்கள் தாம் விரும்பும் கணவரை அடையவும்; பிரிந்த கணவரைத் தங்களுடன் சேர்த்து வைக்கவும் காமனால் முடியும் என்று நம்பினர். எனவே தைமாதம் முதல் பங்குனி வரை காமன் நோன்பினை மேற்கொண்டனர். ஆண்டாளும் அரங்கனை அடைய அனங்கதேவா! தையொரு திங்களும் தரைவிளக்கித் தண் மண்டலமிட்டு, மாசி முன்னாள் வெள்ளை நுண் மணற்கொண்டு தெருவை அழகுசெய்து, விடியும் முன் நீராடி, முள்ளுமில்லா சுள்ளி எரிமடுத்து, முருக்கமலர் கொண்டு எப்போதும் உன்னடி வணங்கி முயன்றுன்னை நோற்கின்றேன்! காமதேவா வித்தகன் வேங்கடவாணன் என்னும் விளக்கினில் என்னைச் சேர்ப்பாய்! என்று விண்ணப்பிக்கின்றாள்! நெல் கட்டியரிசி, அவல், கரும்பு மறையவர் மந்திரம் ஆகிய இவற்றால் உன்னை வழிபடுகின்றேன். என்மீது இரக்கம் கொள் என்று கெஞ்சுகிறாள். நான் ஏதோ பித்தியைப்போல் பிதற்றுகின்றேன் என்றோ மானிடப் பெண் என்றோ என்னை எளிமையாக எடைபோட்டு விடாதே! எனது பெண்மை, இந்த மானிட வடிவு எல்லாம் ஆழி சங்கு உத்தமர்க்கு என்று உன்னித்து எழுந்தவை அதனால்,
‘மானிடவர்க்கென்று பேச்சுப்படில்
வாழகில்லேன் கண்டாய் மன்மதனே!’
என்று அறுதியிட்டு உறுதி கூறுகிறாள். ஆண்டாள் தந்தையிடம் கூட மாயனுக்கெல்லாம் மற்றொருவர்க்கு என்றுதான் குறிப்பிடுகிறாளே அன்றி மானிடர்க்கு என்று தெளிவுபடுத்தி உரைப்பது மன்மதனிடம் மட்டும் தான். அதற்குக் காரணம் தந்தை தனது மனம் அறிவார். ஆனால் காமனுக்கோ நாம் சொன்னால்தானே தெரியும் என்பதனால் தெளிவுபட தன் மன உணர்வைப் புலப்படுத்துகின்றாள். அதேபோல் தனது நோன்பின் திறத்தையும் காமன் விளையாட்டாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதனால்,
‘மாசுடை உடம்பொடு தலையுலறி வாய்ப்புறம் வெளுத்து ஒருபோது உண்டு
தேசுடைத் திறனுடைக் காமதேவா, நான் நோற்கின்ற நோன்பினைக் குறிக்கொள் கண்டாய்!’
(நாச்சியார் திருமொழி-8)
என்று தெளிவுறுத்துகிறாள். ஆண்டாள் தனியொருவளாக தன் விருப்பம் நிறைவேறச் செய்யும் நோன்பு காமன் நோன்பு, அதனைப் பெருமாளுக்கு செய்யும் கைங்கர்யம்போல் சிரத்தையோடு செய்கிறாள்.
'காமதேவனே! புராண! சுவரில் நின் பேரெழுதிச்
சுறவநற்கொடிகளும் துரங்கங்களும்
கவரிப் பிணாக்களும் கரும்புவில்லும்
காட்டித் தந்தேன் கண்டாய்'
(நாச்சியார் திருமொழி - 3)
என்று ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துச் செய்கிறாள்; எடுத்தும் உரைக்கிறாள்! இந்த நோன்புதான் அரங்கனிடத்துத் தன்னைச் சேர்க்கும் என்ற மன உறுதியோடும் முறையாகவும் செய்கின்றாள். காமனுக்கு நம்மீது இரக்கம் ஏற்பட்டிருக்கும். அதனை எப்படியாவது அறிந்துகொள்ள வேண்டும் என்று ஆவலுறுகின்றாள். 'கூடல் இழைத்துப் பார்த்தால் என்ன' என்று நினைக்கிறாள். கூடல் இழைத்தல் என்றால் கண்ணை மூடிக்கொண்டு வட்டம் போட வேண்டும். அது இணைந்து விட்டால் நினைத்த காரியம் நடைபெறும். இல்லாவிடில் நடைபெறாது என்பது தொன்றுதொட்டு வரும் நம்பிக்கை. இதில் மற்றொரு வகை உண்டு. ஒரு பெரிய வட்டம் அதனுள் சிறு சிறு வட்டங்கள் போட வேண்டும். எண்ணிக்கையில் இரட்டையாக வந்தால் நினைத்த செயல் நடைபெறும்; ஒற்றையாக வந்தால் நடைபெறாது என்பதாகும். இவ்விரு வகைகளைப் பற்றியும் சமய இலக்கியங்களும் சங்க இலக்கியங்களும் பேசுகின்றன. இது நம்பிக்கையால் ஏற்பட்ட பழக்கமன்று உளவியல் அடிப்படையால் ஆன செயலாகும் 'யுங்' என்னும் உளவியல் அறிஞர் குறிப்பிடும் 'இயற்படிவ கொள்கை'யே (Concept of Self) கூடலிழைத்தல் ஆகும். யுங் 'எதிர்எதிரான சக்திகள் அல்லது முரண்பாட்டு எண்ணங்களின் ஒருமைப்பாட்டு நிலையை அறிய மிக நுணுக்கமான கூறுகளைக் கொண்ட மண்டலங்கள் என்று கூறப்படும். வட்ட வடிவங்களை வரைந்து அம்மண்டலக் கூறுகள் வழி மனதில் மையம் கொண்டுள்ள எண்ணங்களின் முடிவை உணரலாம்' என்றுரைத்தார். (வை. சச்சிதானந்தன் 1985 ப. 207) மண்டலம் என்பது வட்ட வடிவம்; நுணுக்கக் கூறு என்பது உள்வட்டங்கள் ஆகும். இவ்வகையில் இறை நம்பிக்கை உடைய ஆண்டாளின் கூடல் இழைத்தல் செயலும் உளவியல் வெளிப்பாடாகும்.
'காட்டில் வேங்கடம், கண்ண புர நகர்
வாட்டமின்றி மகிழ்ந்துறை வாமனன்
ஒட்டரா வந்தென் கைப்பற்றி தன்னொடும்
கூட்டுமாகில் நீ கூடிடு கூடலே'
(நாச்சியார் திருமொழி-31)
என்று சொல்லியவாறு கூடல் இழைக்கிறாள். ‘பலனில்லை’ இனி என்ன செய்வது மன்மதனின் குயில் நினைவுக்கு வருகின்றது.
'பொங்கிய பாற்கடல் பள்ளி கொள்வானைப்
புணர்வதோர் ஆசையினால் என்புருகி
இனவேல் நெடுங்கண்கள் இமை
பொருந்தாது பலநாளும் துன்பக்கடல்
புக்கு வைகுந்தன் என்பதோர் தோணி
பெறாது உழல்கின்றேன் உலகளந்தானை
கூவி என்னிடம் அழைத்து வா'
(நாச்சியார் திருமொழி - 47)
என்றால் அதுவும் அழைத்து வரவில்லை.
ஆண்டாள் மனம் கலக்கம் அடைகிறது. அரங்கனை அடைவோமோ, மாட்டோமோ என்று அல்லலுற்று குழம்புகிறாள். குழப்பத்தோடு கண்ணயர்கின்றாள்.
வரைதல்
'வரைதல்' என்பது திருமணம் செய்தல் என்பதாகும். ஆண்டாளின் திருமணம் கனவாக வெளிப்படுகின்றது.
'வாரணம் ஆயிரம் சூழ வலம்வந்து
நாரணன் நம்பி நடக்கின்றான் என்று என்எதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்
தோரணம் நாட்டக் கனாக் கண்டேன் தோழி'
(நாச்சியார் திருமொழி - 52) என்றும்
‘மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத
முத்தடைத் தாமம் நிரை தாழ்ந்த பந்தற்கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதனன் வந்து என்னைக்
கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழி'
(நாச்சியார் திருமொழி - 53)
என்றும் தோழியிடம் கூறுகின்றாள்.
ஆண்டாளின் கனவு என்பது அவளது மன உணர்வு வெளிப்பாடாகும். தன்னுடைய திருமணம் மானிட திருமணம் அல்ல. மனித உயிர்களைப் பாதுகாக்கும் கடவுளுடன் கூடிய திருமணம் என்பதனால்தான் ஆயிரம் பொற்குடத்துடன் மிக உயர்வாக வெளிப்படுத்துகின்றாள். தனக்குத் திருமணம் நடந்து விட்டதையும் 'கைத்தலம் பற்றியதாகக்' குறிப்பிடுகின்றாள். இப்பத்துப் பாடல்களிலும் வெளிப்படும் ஆண்டாளின் கனவு மன உணர்வுகள் உளவியல் அறிஞர் தம் கருத்துக்களை அரண் செய்கின்றன. முதலில் 'கனவு என்பது மனக்குழப்பத்திலிருக்கும் போதும், மன அழுத்தம் வெளியேற விரும்பும் நிலையிலும் (Ventilation) தோன்றுகிறது.' (வை. சச்சிதானந்தன் 1985 ப. 205) என்பது கனவின் அடிப்படைக் கருத்தாகும். ஆண்டாள் கனவும் அப்படித்தான் ஏற்படுகின்றது. மார்கழி நோன்பு, காமன் நோன்பு ஆகிய இரண்டினையும் மேற்கொள்ளும்போது ஆண்டாளுக்கு இருந்த நம்பிக்கை கூடலிழைத்தலில் ஏற்பட்ட எதிர்மறை முடிவால் குழப்பமடைகின்றது. அதன் காரணமே இக்கனவு ஆண்டாளுக்கு ஏற்படுகின்றது.
ஆண்டாளின் கனவு மன உணர்வு வெளிப்பாட்டிற்குப் பல்வேறு உளவியல் அறிஞர் தம் கருத்துக்களும் பொருந்தி வருகின்றன. உளவியலின் தந்தை ப்ராய்டு தனது 'கனவு விளக்கம்' என்னும் நூலில்,
'கனவு என்பது ஒருவரின் விருப்பங்களை நிறைவேற்றும் ஒரு வழியாகும்' (மேலது. ப. 206) என்றும், ஆட்லர் என்னும் அறிஞர், 'கனவு அடைபட்டிருக்கும் கடந்தகாலத்து இச்சைகளைக் குறிப்பது அல்ல; கனவு மனிதனது ஒருவகை நடத்தை; அதுவும் அவனது வாழ்க்கை அமைப்பைக் குறிப்பது; கனவு ஒருவனது வருங்கால வாழ்க்கைக் குறிக்கோள் பற்றியும், அதனை அடைய அவனுடைய வாழ்க்கைச் சிக்கல்கள், கலக்கங்கள் பற்றியும் குறிப்பது' என்றும், உட்வொர்த் என்னும் உளவியல் அறிஞர்,
'கனவு மனிதனின் நிறைவேற்றப்படாத எண்ணங்களே ஆகும்' (மேலது ப.206) என்றும் உரைப்பது கனவு உளவியலோடு தொடர்புடையது என்றும், உள்ளத்தில் எழும் கலக்கங்களால் தோன்றுவது என்றும் புலப்படுத்துகிறது.
இவ்வாறு ஆண்டாள் பாடல்களில் அவளது மன உணர்வுகள் வெளிப்படுகின்றன.
முடிவு
குழந்தைப் பருவத்தில் வித்திட்ட உணர்வுகள் அழிக்க முடியாதவை. பாசம், நட்பு, பக்தி ஆகிய எத்தகைய உணர்வாக இருப்பினும் பெரியவர்களாகும்போது அதன் வெளிப்பாடு ஆணித்தரமாக இருக்குமே அன்றி குறையாது, மாறுபடாது. அவ்வகையில் தந்தை பெரியாழ்வாரால் ஆண்டாளின் குழந்தைப் பருவத்தில் வளர்க்கப்பட்ட பக்தி அவளது பிராயத்தில் பெருமாளிடத்துக் காதலாக மாறியது. காதலனை மணாளனாக அடையத் துடிக்கும் பெண்ணின் மன உணர்வுகளே திருப்பாவையும் நாச்சியார் திருமொழியும் ஆகும். ஆண்டாள் பாடல்களில் இலக்கை அடையத் துடிக்கும் அகத்தவம் பாவை நோன்பு, புறத்தவம் காமன் நோன்பு ஆகும்.
குழப்பமுற்ற மனத்தின் வெளிப்பாடே கனவு என்பது ஆண்டாள் பாடல்களில் புலனாகிறது.
ஆண்டாள் திருவடிகளே சரணம்.
(ஆண்டாள் அருந்தமிழ் என்ற நூலிலிருந்து)