ஆழ்வார்கள் வழி செல்வோம்!
ஒருவனுக்கு நிம்மதி எங்கு கிடைக்கிறது? அது எங்கிருந்து வருகிறது? இந்தத் தேடல் முயற்சியில் நாம் ஈடுபட்டோமானால் கடைசியாக நமக்குப் பதிலாக கிடைப்பது எது தெரியுமா? நம் மனம்தான். அதனால்தான் பெரியவர்கள் நம் மனதை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்கிறார்கள். நாயன்மார்களில் மிகவும் போற்றுதலுக்குரியவராக கருதப்படுகிற அப்பர் பெருமான் ‘‘நினைப்பவர் மனம் கோயிலாகக் கொண்டவன்’’ என்கிறார் ஒரு தேவாரப் பாடலில்!
திவ்யப் பிரபந்தம் முழுவதும் நாம் பார்க்கிறபோது நேரிடையாகவும், மறைபொருளாகவும் இதையே நடுநிலையில் நின்று உரக்க குரல் கொடுக்கிறது. உதாரணத்திற்கு திருவாய்மொழியில் இருந்து அறிவுப்பூர்வமான ஒரு பாசுரத்தைப் பார்ப்போம்.
‘‘வள்ளலே! மதுசூதனா!
என் மரகதமலையே!
உனை நினைந்து, என்கல் தந்த எந்தாய்
உனை எங்ஙனம் விடுகேன்?
வெள்ளமே புரை நின் புகழ் குடைந்து ஆடிப்
பாடிக் களித்து உகந்து உகந்து,
உள்ள நோய்கள் எல்லாம் துறந்து
உய்ந்து போந்திருந்தே!’’
இந்தப் பாசுரத்தின் கருத்தாழத்தைப் பார்ப்போம். அடியவர்களுக்கு அருள்புரியும் வள்ளலே! மது என்னும் கொடிய அரக்கனை அழித்தவனே! உன்னை நினைந்து நினைந்து ஏங்குமாறு என்னைச் செய்துவிட்டாய்! உன் நினைப்பு இல்லாமல் என் மனம் வேறு எதிலும் லயிப்பதில்லை. மலரில் இருக்கும் தேனைக் குடிப்பதற்கு வண்டு சுற்றிச் சுழன்று வருவதைப்போல என் மனமும் மாலவனான உன்னையே வட்டமடித்து வருகிறது. இந்த அனுபவம் ஆழ்வாருக்கு ஏற்பட்ட காரணத்தினால் தான் பெருமானை நினைத்து பாசுரத்தைப் படைக்கும்போது உன்னை நினைந்து நினைந்து என்று பக்திப் பரவசம் அடைகிறார். வெள்ளமே புரை நின் புகழ் குடைந்து ஆடிப்பாடிக் களித்து உகந்து உகந்து என்று ஆனந்த தாண்டவம் ஆடுவதைப்போல ஆழ்வாரின் மனசு அந்தப் பரப் பிரம்மத்தில் லயித்துப் போய்விட்டது! கடல் போன்ற உன் புகழைப் பாடும் திருப்பாசுரங்களில் நான் மூழ்கித் திளைத்து ஆடிப்பாடி மகிழ்ந்து எப்போதும் பேரின்பத்தில் இருக்கிறேன்.
இத்தகைய பேரின்பம் எனக்கு கிடைத்துள்ளதால் எனக்கு பிறவித் துன்பத்தைப்பற்றி எந்தக் கவலையும் இல்லை. இதனால் நான் பெற்றது உய்வுதானே. அதாவது ஏற்றம்தானே என்று அந்தப் பரந்தாமனை நினைந்து இன்புறுகிறார் ஆழ்வார். உள்ள நோய்கள் எல்லாம் துறந்து என்று மிகப்பெரிய ஆழ்ந்த அர்த்தத்தை உள்ளடக்கிய பெரிய மெசேஜை நமக்கு கோடிட்டுக் காட்டுகிறார். அந்தச் செய்திதான் என்ன? உள்ள நோய்கள் என்றால் என்ன? நம் மனம் காற்றில் அகப்பட்ட தென்னங் கீற்றுபோல் அல்லாடிக் கொண்டிருக்கிறது. இந்த மனதை ஒருநிலைப்படுத்துவதற்கு என்ன வழி உபாயம் என்ன? வழி தெரியவில்லை. தேடித்தேடி போராடிப் போராடி அலைந்து அலைந்து கடைசியில் ஒரு வழியாக கண்டுபிடித்து விட்டேன். அந்த மாமருந்து என்ன தெரியுமா? உன் திருவடிகளில் நான் என்னை முழுமையாக ஒப்படைத்துக் கொண்டேன். உன்னைப் பற்றிய பிறகு என் மனம் வேறு எதிலும் லயிக்கவில்லை. நங்கூரம் பாய்ச்சிய கப்பல்போல் மனம் ஸ்டெடியாக இருக்கிறது.
நம்மாழ்வாரின் இந்த திருவாய்மொழிப் பாசுரம் நேற்று இன்று நாளை என்று முக்காலத்திற்கு ஏற்றதாகவும் இருக்கிறது. தற்காலத்தில் நம்நாட்டில் என்னென்ன கூத்துக்கள் எல்லாம் நடைபெற்று வருகின்றன. மனிதர்களுடைய நற்பண்புகளும் நாணயமும் மதிப்பும் அடுத்தவர் நலனும் சமூக அக்கறையும் கேள்விக்குறியாகி வருகின்றன. தனிமனிதப் பண்புகள் எல்லாம் தரைதட்டி நிற்கின்றன. ஆச்சரியக்குறிகளாக பார்த்தவர்களை எல்லாம் கேள்விக்குறியாக பார்க்கிற சூழல். தன் ஞான திருஷ்டியில் ஆழ்வார் எப்போதோ படம் பிடித்துக் காட்டி விட்டார். எல்லாப் பிரச்னைகளும் எங்கிருந்து தொடங்குகின்றன. இதன் வேர் எங்கே இருந்து கிளம்புகிறது என்று பார்த்தால் கூடா நட்பு கேடு தரும் எல்லாம் சகவாச தோஷம்தான். நம்மையெல்லாம் வாழ வைத்துக்கொண்டிருக்கிற வாழும் அருள் வள்ளலாக இருந்து அருட்பாலிக்கும் காஞ்சி மகாபெரியவர் சந்திரசேகரேந்திர ஸ்வாமிகள் தன்னுடைய தெய்வத்தின் குரல் மூன்றாம் பாகத்தில்...
‘‘மனுஷனைப் பாவத்தில் ஆழ்த்துகிற இரண்டு பெரும் சக்திகள் காமமும், குரோதமும் என்றார் கிருஷ்ண பரமாத்மா’’ என்ற உயர்ந்த கருத்தை சொல்லியிருக்கிறார். எவ்வளவு உண்மை பாருங்கள்... நாம் சிற்றின்பத்திற்காக பேரின்பத்தை இழந்து கதியற்று நிற்கிறோம்! தன்னுடைய பகவத்கீதை முன்னுரையிலே அமரகவி மகாபாரதியார் பின்வருமாறு சில அரிய பெரிய கருத்துக்களை முன்வைக்கிறார்...பாவமாவது என்ன? புண்ணியமாவது என்ன?தனக்கேனும் பிறர்க்கேனும் துன்பம் விளைவிக்கத்தக்க செய்கை பாவம், தனக்கேனும் பிறர்க்கேனும் இன்பம் விளைவிக்கத்தக்க செயல் புண்ணியச் செயல் என்று இரண்டு மிகப் பெரிய விஷயங்களுக்கு மிகவும் எளிமையாக அர்த்தம் சொல்லியிருக்கிறார். அடுத்து குடும்ப வாழ்க்கையை எவ்வாறு சந்தோஷமாக அமைத்துக் கொள்வது பற்றியும் பாரதி மனம் திறந்து பேசியிருக்கிறார்.
கற்புடையை மனைவியுடன் காதலுற்று அறம் பிழையாமல் வாழ்தலே இவ்வுலகத்தில் சொர்க்க வாழ்க்கையைத் தரும் சொர்க்கத்தை வெளியிலே தேட வேண்டாம். அது வீட்டிலேயே இருக்கிறது. ஒருவனுக்கு தன் வீடே சிறந்த வாசஸ்தலம்தான் என்கிறார் மிகுந்த நம்பிக்கையோடு. எல்லாவற்றுக்கும் அதாவது நல்வினைக்கும் தீவினைக்கும் மூலகாரணம் நம் மனம்தான் என்று அனைத்து ஆழ்வார்களும் ஒரே நேர்கோட்டில் மையப் புள்ளியில் நின்று உரத்த குரலில் சொல்லியிருக்கிறார்கள். முதல் திருவந்தாதியில் பொய்கையாழ்வார்.. ‘‘தெளிது ஆக உள்ளத்தைச் செந்நிற்கு ஞானத்து எளிது ஆக நன்கு உணர்வார் சிந்தை எளிது ஆகத்தாய்நாடு கன்றே போல், தன் துழாயான் அடிக்கே பொய்நாடிக் கொள்ளும் புரிந்து.’’மனத்தை அடக்கினால் மாயோனை மனம் நாடும் என்கிறார், ஆழ்வார். தேவையில்லாத தீய குணங்களை நீக்கிவிட்டாலே தேவையான குணங்களால் மனம் தெளிவடையும் என்கிறார்.
ஒரு அழகிய சிற்பத்தை செய்வதற்கு முதலில் தேவையில்லாதவற்றை ஒதுக்கினாலே தேவையான சிற்பம் நம் கண்ணுக்கு விருந்தாக அமையும். ஐம்புலன்களின் ஆட்டத்தை அடக்கி ஆள்பவனே மனிதன். அப்படி புலன்வழி இன்ப நுகர்ச்சியில் மனம் ஈடுபடுவதை தவிர்ப்பதற்குத்தான், நல்ல நண்பர்கள், கோயில், எம்பெருமானைப் பற்றிய நினைவுகளில் நம் மனதை ஈடுபட வைப்பது, ஏழை எளியவர்களுக்கு உதவி செய்தல் என்று நாம் நல்ல சூழ்நிலையை அமைத்துக் கொண்டால் தீவினைகள் நம்மை நெருங்காது. தீவினை நம்மை நெருங்காமல் இருப்பதற்குத்தான் இந்த ஆழ்வார்களின் அற்புதத் தேன்தமிழ் பாசுரங்கள் உதவுகின்றன. இந்தப் பாசுரங்கள் எல்லாம் பெருமாள் கோயிலின் கருவறையில் நின்று ஓதப்படுவதற்கு மட்டுமன்று கூடவே நம் வாழ்க்கைப் பயணத்தின் வழிகாட்டி இந்த அதி அற்புத பாசுரங்கள். தாய்நாடு கன்றேபோல் துன் துழாயாள் அடிக்கே என்கிறார் பொய்கை ஆழ்வார்.
ஒரு பசுக்கன்றானது எப்படி பல்லாயிரம் பசுக்களின் திரளில் அந்தக் கூட்டத்தில் தன் தாயைக் கண்டறிவதுபோல நாம் பரமாத்மாவைக் காண ஏக்கம் கொண்டு பக்தி செய்ய வேண்டும். அந்த ஞானம் நமக்கு கிடைக்க அவன் பேரருளைத் தேடி மனம் விழைய வேண்டும். மனமது செம்மையானால் மந்திரங்கள் ஜபிக்க வேண்டாம் என்கிறார் திருமூலர். நம்மில் எத்தனை பேருக்கு மனம் செம்மையாக அதாவது தெளிந்த நீரோடையாக இருக்கிறது என்று நமக்கு நாமே கேட்டுக் கொள்வோம். ஆகவே நம் மனம் செம்மை பெற தெளிவடைய காலத்தால் அழியாத எந்தக் காலத்திற்கும் பொருந்துகிற ஆழ்வார்களின் பாசுரங்களை படிப்போம். அதன் வழி நின்று சிந்திப்போம். சிந்தனையை செயல்படுத்துவோம்.
நன்றி - தினகரன்