ஞாயிறு, 23 செப்டம்பர், 2012

அருணகிரிநாதர் வழங்கிய அற்புத ராமாயணம்! - பி.என்.பரசுராமன்


ஆதிகாவியம் என்று போற்றப்படுவது ராமாயணம். ராமாயணம் என்றால், அது ஆதிகவியான வால்மீகி முனிவர் எழுதியதைக் குறிக்கும்.

நமக்குத் தெரிந்த கம்ப ராமாயணம் தவிர, இன்னும் பல ராமாயணங்கள் உண்டு. ராம சரிதமானஸ் எனும் துளஸி ராமாயணம், ஆனந்த ராமாயணம், அத்யாத்ம ராமாயணம், அத்புத ராமாயணம், அமல ராமாயணம், ரகு வம்சம் உட்பட 120 ராமாயணங்கள் உள்ளன.

இவை தவிர சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற காப்பியங்களிலும் ராமாயணம் பற்றிக் குறிப்பிடப் பட்டுள்ளது. இத்தகைய ராமாயணத்தை, சந்தக் கவியான அருணகிரிநாதரும் தமது திருப்புகழில் பல பாடல்களில் பாடியிருக்கிறார். அந்தப் பாடல்களில் மற்றவர்கள் சொல்லாத பல தகவல்களைக் குறிப்பிட்டுள்ளார். நமது வாசகர்களுக்காக அவை இங்கே:

பால காண்டம், அயோத்யா காண்டம், ஆரண்ய காண்டம், கிஷ்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் என்று வால்மீகி முனிவரின் வரிசைப்படியே, அருணகிரிநாதரின் பாடல்களைப் பார்க்கலாம்.

திருப்புகழின் முதல் பாடலிலேயே முத்தைத்தரு என ஆரம்பித்த அருணகிரிநாதர், ‘பத்துத் தலை தத்தக் கணை தொடு என்று தொடங்கி, ராமாயணத்தை விவரிக்கிறார்.

முதலில் ராமரின் திரு அவதாரம். ராவணனின் கொடுமை தாங்காத தேவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி, தசரதருக்கு மகனாக வந்து உதிக்கிறார் மஹாவிஷ்ணு. இதை அருணகிரிநாதர்,

மேலை வானொருரைத் தசரற்கொரு
பாலனாகி யுதித்து

- (ஆலகால படப்பை) திருப்புகழ்

என அழகுபடச் சொல்கிறார்.

கருத்து: தேவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி, மஹாவிஷ்ணு தசரதருக்கு மகனாக அவதரித்தார். இதில் ‘ஒரு பாலனாகி என்று அருணகிரிநாதர் சொல்வதற்கு ‘ஒப்பற்ற குழந்தையாக என்று பொருள்.


ராமரை, கோசலாதேவி மிகுந்த அன்புடன் வளர்த்து வருகிறாள். ராமர் தளர் நடையிட்டு, நடக்க ஆரம்பித்த காலத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சி.

கோசலை, ஒரு நாள் ராமரை பால் குடிக்க அழைத்தாள். அன்று என்னவாயிற்றோ... ராமர் பால் குடிக்க மறுத்தார். கோசலை கெஞ்சினாள். ராமர் சற்றுத் தள்ளிப் போய் நின்று, அங்கிருந்தபடி கோசலையைப் பார்த்தார். இந்தக் கட்டத்தை அருணகிரி நாதர் வர்ணிக்கும் அழகைப் பாருங்கள்!

எந்தை வருக ரகுநாயக வருக
மைந்த வருக மகனே இனி வருக
என்கண் வருக எனதாருயிர்வருக அபிராம
இங்கு வருக அரசேவருக முலை
உண்க வருக மலர் சூடிட வருக
என்று பரிவி னொடுகோசலை புகல வருமாயன்

-   (தொந்தி சரிய) திருப்புகழ்

பால் குடிக்க கோசலை, ராமரை அழைக்கும் இந்த வர்ணனையில் பலவிதக் கருத்துகள் அடங்கியுள்ளன. இதிலுள்ள ஆன்மிகமும் அருந்தமிழின் பெருமையும் அருணகிரிநாதரின் தமிழ் வன்மையும் ஒவ்வொருவரும் அனுபவிக்க வேண்டியவை.
இந்தப் பாடலில் ‘வருக எனும் வார்த்தை பத்து முறை வருகிறது. ‘பிள்ளைத் தமிழ் நூல்களில் உள்ள பத்துப் பருவங்களில் ‘வருகைப் பருவம் ஒன்று. ஒவ்வொரு பருவத்திலும் பத்துப் பாடல்கள் வீதம் உண்டு. அதில் ஒவ்வொரு பாடலும், ‘வருக வருகவே என முடியும். அதன்படி ‘வருக என்பதைப் பத்து முறை அமைத்த அருணகிரிநாதரின் இந்தப் பாடல், ஒரு வருகைப் பருவமாகவும் அமைந்திருக்கிறது. சில, பிள்ளைத் தமிழ் நூல்களில் பருவத்துக்கு ஒரு பாடலாக, பத்துப் பாடல்களுடன் முடித்திருப்பார்கள். அதன்படி பார்த்தால் இது ‘பிள்ளைத் தமிழ் பாடலாகவும் கருதப்படும்.

வருக என்பதைப் பத்து முறை அவர் பயன்படுத்தியதில், மற்றொரு கருத்தும் உண்டு. மஹாவிஷ்ணுவின் அவதாரங்களைச் சொல்லும்போது தச (பத்து) அவதாரங்கள் என்போம். நமக்காகப் பத்து முறை இறங்கி வந்த ஸ்வாமியை, அதனால்தான் அருணகிரிநாதரும் பத்து முறை ‘வருக என அழைக்கிறார். ராம அவதாரம், தசாவதாரத்தில் ஒன்று தானே!

இந்தப் பாடலின் முடிவில் ‘வருமாயன் என அவர் முடித்திருப்பதிலும் வேறொரு பொருள் உண்டு. ‘வருமாயன் என்பதை ‘வரும்+ஆயன் என்று பிரித்தால், ராமர் அடுத்த அவதாரத்தில் ஆயர் குல தீபமாக- கண்ணனாக வரப் போகிறார் என்ற விளக்கமும் கிடைக்கும்.

கோசலை இத்தனை முறை ராமரை அழைத்ததாகச் சொல்லும் அருணகிரிநாதர், ‘அவள் எப்படி அழைத்தாள்?என்பதையும் அழகாகச் சொல்கிறார்.

பரிவினொடு கோசலை புகல என்பது அருணகிரிநாதர் வாக்கு. பல முறை அழைத்தும் ராமர் வராததால், பொறுமை மிக்க கோசலை, பரிவோடு அவரைக் கூப்பிடுகிறாளாம்.

நமது காலத்தைப் போல, ‘‘ஏய்! மரியாதையா வந்துடு. வந்து தொலையேண்டா எருமை மாடு. நீ வரலேன்னு வெச்சுக்க... அவ்வளவுதான். நீ கத்தினாலும் கதறினாலும் சரி... திரும்பிக் கூடப் பார்க்க மாட்டேன். போய்க்கிட்டே இருப்பேன்!’’ என்று கோபத்தில் கத்தவில்லை. குழந்தைகளிடம் பரிவு காட்டுவதை நாம் மறந்து விட்டோம். ஆனால், கோசலை மூலமாக, நாம் குழந்தைகளிடம் எப்படிப் பரிவோடு இருக்க வேண்டும் என்பதை அருணகிரிநாதர் உபதேசிக்கிறார். ராமரின் குழந்தைப் பருவத்தை அவ்வளவு அழகாகச் சொல்கிறார்.

அருணகிரிநாதர், அபிராமனின் வருகையை வர்ணித்ததுடன் மற்றும் சிலருடைய வருகைகளையும் பதிவு செய்கிறார். அதைப் பார்ப்பதற்கு முன், கம்பரிடம் போய் விட்டு வரலாம்.

தருவுடைக் கடவுள் வேந்தன்
சாற்றுவான் எனது கூறு
மருவலர்க் கசனி யன்ன
வாலியும் மகனும் என்ன
இரவி மற்றெனது கூறங்கு
அவர்க்கிளையவன் என்றோத
அரியு மற்றெனது கூறு
நீலன் என்றறைந்திட்டானால்

- கம்ப ராமாயணம்

கருத்து : ‘என் அம்சமாக வாலியும் அங்கதனும் பிறப்பார்கள் என இந்திரனும்; ‘என் அம்சமாக சுக்ரீவன் பிறப்பான் என்று சூரியனும், ‘என் அம்சமாக நீலன்(வானர வீரன்) பிறப்பான் என்று அக்கினி பகவானும் கூறினர்.

கம்பர், இப்படிச் சொன்னதை, கந்தன் அடியவரான அருணகிரிநாதர் சொல்வதைக் காண்போம்:

இரவி இந்த்ரன் வெற்றிக் குரங்கின்
அரசரென்றும் ஒப்பற்ற உந்தி
இறைவன் எண்கிணக் கர்த்தரென்றும் நெடுநீலன்
எரியதென்றும் ருத்ரற் சிறந்த
அனுமனென்றும் ஒப்பற்ற அண்டர்
எவரும் இந்த வர்க்கத்தில் வந்து புனமேவ
அரியதன் படைக்கர்த்த ரென்று
அசுரர் தங்கிளைக் கட்டை வென்ற அரிமுகுந்தன்

- (கருவடைந்து) திருப்புகழ்

கருத்து: சூரியன்- சுக்ரீவனாகவும், இந்திரன்- வாலியாகவும் தோன்றி, வெற்றிக் குரங்கு அரசர்களாக இருந்தார்கள். ஈடு இணை இல்லாத மஹாவிஷ்ணுவின் நாபிக் கமலத்தில் அவதரித்த பிரம்ம தேவர் - கரடி முகம் கொண்ட ஜாம்பவானாக - சேனைகளுக்குத் தலைவனாகத் தொன்றினார். அக்கினி பகவான் - நீலனாகவும், ருத்திரன் - சிறப்பு வாய்ந்த அனுமனாகவும் அவதரித்தனர். ஒப்பில்லாத தேவர்கள் எல்லோரும் இப்படி பூமிக்கு வந்து சேர்ந்தனர். இவர்களுக்கெல்லாம் தலைவராக இருந்த ராமர், அசுரர்களை அழித்தார்.

இந்தப் பாடலை அருணகிரி நாதர் அமைத்திருக்கும் அமைப்பை, உணர்ந்து அனுபவிக்க வேண்டும்.

யார், யார் - எவர், எவராக வந்தார்கள் என்று தெளிவுபடுத்திய அருணகிரிநாதர், மறந்து போய்க் கூட சூரியன் (ரவி) - சுக்ரீவனாகவும் இந்திரன் - வாலியாகவும் வந்தனர் என்று வெளிப்படையாகக் கூறவில்லை.

சூரியன், இந்திரன் இருவரும் வெற்றிக் குரங்கு அரசர்களாக என்று கூறுகிறார். அதே நேரத்தில் இருவரையும் சேர்த்தே சொல்கிறார்.

இதற்குக் காரணம், வாலி, சுக்ரீவன் இருவரைப் பற்றியும் பின்னர் விரிவாகப் பல பாடல்களில் அவர் கூறுகிறார். அதனால்தான் இப்படி!

அடுத்த காரணம் - வாலிக்கு ராமரைப் பற்றித் தெரியும். ஆனால், அவன் ராமரை அனுசரிக்கவில்லை. சுக்ரீவனோ, ராமரின் அருமை பெருமைகளை ஆஞ்சநேயர், விரிவாகக் கூறிய பின்னும் ராமரை சந்தேகித்தவன். அருணகிரிநாதர் வாலி- சுக்ரீவனை வெளிப்படையாகச் சொல்லாததற்கு இதுவும் ஒரு காரணம்.
இந்தப் பாடலில் ருத்ரற் சிறந்த அனுமன் என அவர் கூறியிருப்பது கவனத்துக்கு உரியது. ‘சிவ அம்சமாக ஆஞ்சநேயர் வந்தார் என்பதை நாம் கேள்விப் பட்டிருக்கிறோம். ஆனால், இந்தத் தகவல் எந்த நூலில் இருக்கிறது என்ற நமது கேள்விக்கு, அருணகிரிநாதர் மேற்கண்ட பாடல் மூலம் பதில் அளிக்கிறார்.
தேவர்கள் யாவரும் வானரர்களாகப் பிறந்தது, ராமருக்கு உதவவே. இதை மனதில் கொண்டால், பிறகு வாலி வதம் குறித்துப் பார்க்கும்போது உதவும்.

ராமரின் இளமைப் பருவத்தில் ஒப்பற்ற தவசியான விஸ்வாமித்திர முனிவர் வந்தார். அவரது யாகத்தைக் காக்க, ராம - லட்சுமணர் அவருடன் காட்டுக்குக் கிளம்பினர்.
இதை இரண்டே வரிகளில் அருணகிரிநாதர் சொல்லும் அழகைப் பாருங்கள்:

மேலை வானொருரைத் தசரற்கொரு
பால னாகியுதித்தொர் முனிக்கொரு
வேள்விக்காவல் நடத்தி

- (ஆலகால படப்பை) திருப்புகழ்

ராமர், விஸ்வாமித்திரருடன் நடந்து வருவதற்குள் விஸ்வாமித்திரரின் ஆஸ்ரமத்தில் உள்ள முனிவர்களைப் பற்றி அருணகிரிநாதர் வர்ணிக்கும் பாடலைப் பார்ப்போம்.

அங்குள்ள முனிவர்கள் அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு, சூரிய நமஸ்காரமும் காயத்ரி ஜபமும் செய்வர். அவர்களுக்கும் யாக சாலைக்கும் தீங்கு செய்யும் தாடகையை வதம் செய்வதற்காக, கிருபைக் கடலான ராமர் வருகிறார். இந்தக் கருத்தைச் சொல்லும் திருப்புகழ்:

காலைக்கே முழுகிக் குணதிக்கினில்
ஆதித்யாய எனப் பகர்தர்ப்பண
காயத்ரீ செப மர்ச் சனையைச்செயு முனிவோர்கள்
கானத் தா சிர மத்தினி லுத்தம
வேள்விச் சாலைய ளித்தல்பொருட்டெதிர்
காதத் தாடகையைக் கொல் க்ருபைக் கடல்

- (வேலைப்போல்விழி) திருப்புகழ்

விஸ்வாமித்திரருடன் ராமர் காட்டுக்குள் நுழைந்ததும் நடந்த முக்கியமான நிகழ்ச்சி தாடகை வதம்.

கடும் கோபத்துடன் துடிக்கும் புருவங்கள். பிறைச் சந்திரன் போல வளைந்து நீண்ட பற்கள். குகை போன்ற வாய். அதர்மமே வடிவம் கொண்டு வந்ததோ எனும்படியான கறுத்த உருவம். வடவைத்தீ(கடலில் உண்டாகும் ஒருவிதமான தீ) போல விழிக்கும் கண்கள் ஆகியவற்றுடன் தாடகை வருகிறாள்.

இதை கம்பர் அப்படியே பதிவு செய்கிறார்.

இறைக் கடை துடித்த
புருவத்தள் எயிறென்னும்
பிறைக் கடை பிறக்கிட
மடித்த பிலவாயள்
மறக் கடல் அரக்கி
வடவைக் கனல் இரண்டாய்
நிறக்கடல் முளைத்தெழ
நெருப்பெழ விழித்தாள்

- கம்ப ராமாயணம்

இந்தப் பாடலை ஒரு முறை சொல்லிப் பாருங்கள். தாடகையின் வருகையை கம்பர் அற்புதமாகப் பதிவு செய்திருப்பது புரியும்.

இதோ அருணகிரிநாதர் பாடல்:

வெடுத்த தாடகை
சினத்தை யோர்கணை
விடுத்து யாகமும்
நடத்தி யேயரு
மிகுத்த வார்சிலை
முறித்த மாதவன்

- (தொடுத்தவாளென) திருப்புகழ்

இந்த வரிகளையும், சொல்லிப் பாருங்கள்! தாடகையின் கோபம், அவளைக் கொல்ல ராமர் எய்த அம்பின் வேகம், யாகத்தை ராமர் கட்டிக் காத்த வேகம்- ஆகியவற்றுடன் வில்லை வளைத்த ராமரின் வலிமையும் தெரியும். இப்படி தாடகை வதம் முதல், சீதா கல்யாணத்துக்காக வில் வளைத்தது வரையிலான நிகழ்ச்சிகளை மூன்றே வரிகளில் பதிவு செய்திருக்கும் அருணகிரிநாதரின் அருந்தமிழ் வல்லமை புரியும்.
இதற்கிடையில் ராமர் செய்த ஓர் அற்புதமான நிகழ்ச்சியை, அருணகிரிநாதர் விட்டுவிட்டாரே என எண்ண வேண்டாம். ராமர், அகலிகைக்கு அருள் செய்ததை பல பாடல்களில் சொல்லியிருக்கிறார்.

அகலிகை கல்லாகிக் கிடந்ததாக வால்மீகி சொல்லவில்லை. ஆனால், கம்பர் சொல்கிறார். அவரை அடியற்றி அருணகிரி நாதரும் அப்படியே செய்கிறார். ஆனால், அதிலும் தனது தனித் தன்மையை நிலை நாட்ட அவர் தவறவில்லை.

யாகத்துக்குக் காவலாக மட்டுமின்றி கணவரின் சாபத்தால் கல்லாகிக் கிடக்கும் அகலிகையின் துயரத்தைத் தீர்ப்பதற்காகவும் ராமர், விஸ்வாமித்திரருடன் காட்டுக்குச் சென்றார் - என முன்கூட்டியே தெளிவாகச் சொல்கிறார் அருணகிரிநாதர்.

கல்லிலே பொற்றாள் படவேயது
நல்லரூ பத்தே வரக் கானிடை
கௌவை தீரப் போகும் இராகவன்

- (கொள்ளையாசை) திருப்புகழ்

இதில், ‘கல்லாக இருந்த அகலிகை பெண்ணாக மாறினாள் என்பது தெளிவாக இல்லையே என நினைப்பவர்களுக்கு,

க(ல்)லின் வடிவமான
அகலிகை பெ(ண்)ணான
கமலபத மாயன்

- (குலைய) திருப்புகழ்

என்று விளக்கி, ராமரின் திருவடித் தாமரைகளைப் புகழ்கிறார் அருணகிரிநாதர்.
இதைப் போல, சீதா கல்யாணத்தின்போதும் ஓர் அற்புதமான நிகழ்ச்சியை அருணகிரிநாதர் சொல்கிறார்.

யாரும் எடுக்க முடியாத, மிதிலையில் இருந்த வில்லை, ஒரு நொடிப் பொழுதில் ராமர் எடுத்து முறித்து விட்டார். அவர் அதைத் தன் காலில் வைத்து வளைத்ததையோ, நாண் ஏற்றியதையோ யாருமே பார்க்கவில்லை. ராமர் வில்லை எடுத்ததைப் பார்த்தார்கள். வில் முறிந்த ஓசையைக் கேட்டார்கள். அவ்வளவுதான். வில் வளைக்கும் நிகழ்ச்சி அவ்வளவு சுலபத்தில் சீக்கிரமாக நடந்துவிட்டது.
இதை அப்படியே நேரில் பார்ப்பது போல காட்டுகிறார் கம்பர்.

தடுத்து இமையாமல்
இருந்தவர் தாளின்
மடுத்து நாண் நுதி
வைத்தது நோக்கார்
கடுப்பினில் யாரும்
அறிந்திலர் கையால்
எடுத்தது கண்டனர்
இற்றது கேட்டார்

- கம்ப ராமாயணம்

இதையே இன்னும் கொஞ்சம் நெருக்கமாக நமக்கருகில் கொண்டு வருகிறார் அருணகிரிநாதர்.

கம்பர், ‘எடுத்தது கண்டனர் இற்றது கேட்டார் என்றாரே தவிர, வில் உடையும் ஒலியை அவர் பதிவு செய்யவில்லை. அந்தக் குறையை அருணகிரிநாதர் நீக்குகிறார்:

சிலை ‘மொளுக் கெனமுறிபட
மிதிலையிற் சனகமனருள்
திருவினைப் புணரரி

- (திருவிடைக்கழி) திருப்புகழ்

ராமர் அந்த வில்லை முறித்த போது ‘மொளுக்கென்று சத்தம் கேட்டதாம். பல காலமாக யாராலும் அசைக்கக் கூட முடியாமல் இருந்த அந்த வில், மிகுந்த பலசாலியான ராமருக்கு ஈடு கொடுக்க முடியாமல் ‘மொளுக்கென உடைந்து விட்டது. அது மட்டுமல்ல; அந்த வில் ‘படீர் என உடைந்தது- என்றால், ராமர் கொஞ்சமாவது கஷ்டப்பட்டிருப்பார் என்று தோன்றும். ஆனால், அப்படியல்ல... ராமர் மிகவும் சுலபமாக வில்லை முறித்தார். இதை நம் மனதில் பதிய வைக்கவே அருணகிரிநாதர், ‘மொளுக் என்ற வார்த்தையைப் போட்டார்.

வில் வளைத்தல் என்பது சீதா கல்யாணத்துக்காகவே. ஆனால், அதன் பிறகு பல பாடல்களைத் தாண்டித்தான், சீதா கல்யாண நிகழ்ச்சியைக் கொண்டு வருகிறார் கம்பர். அவர் இயற்றிய ‘இராமாவதாரம் என்ற பெரும் காப்பியம் அதற்கு இடம் கொடுத்தது.
ஆனால், எட்டு வரிகள் கொண்ட திருவிடைக்கழி திருப்புகழில் அருணகிரிநாதர் அப்படிச் செய்ய முடியாது. ஆகவே அருணகிரி நாதர்,

சிலை ‘மொளுக்கென முறிபட
மிதிவையிற் சனக மனருள்
திருவினைப் புணரரி

என்று சுருக்கமாகச் சொல்கிறார்.இத்துடன் அருணகிரிநாதரின் ராமாயணத்தில், ‘பால காண்டம் நிறைவுற்று, ‘அயோத்யா காண்டம் தொடங்குகிறது.

சீதா கல்யாணத்துக்குப் பின் முக்கியமான நிகழ்ச்சி - ராமரின் பட்டாபிஷேகம் தடைப்பட்டது. அதற்குக் காரணமான கைகேயியின் சொல்லை ராமர் மீறாமல் இருந்தது. இதை அருணகிரி நாதர் சொல்லும் அழகைப் பாருங்கள்.

திண்சிலை முறியாவொண்
ஜானகி தனங்கலந்தபின்
ஊரில் மகுடங் கடந்தொரு
தாயர் வசனம் சிறந்தவன்

- (ஸ்ரீபுருஷமங்கை தல...) திருப்புகழ்

வலிமையான வில்லை முறித்து, அழகு, அறிவு, நற்குணம் ஆகியவற்றில் தலைசிறந்தவளான சீதையைத் திருமணம் புரிந்த ராமர், அயோத்திக்குத் திரும்பினார். 12 வருடங்களுக்குப் பிறகே ராமருக்கு மகுடம் சூட்ட ஏற்பாடு ஆனது. ஆனால், கைகேயி தடுத்து விட்டாள். ராமர், அவள் வாக்கை ஒப்புக் கொண்டு தலைசிறந்து விளங்கினார் என்பதே இந்த வரிகளின் கருத்து. அதனால்தான் அருணகிரிநாதர்:
...ஒண் ஜானகி தனங் கலந்தபின் என்று கூறினார்.

இந்தப் பாடலில் வரும், ‘ஒண்ஜானகி, ஜானகி தனம் என்ற வார்த்தைகள் அற்புதமானவை. ஒண் ஜானகி - இயற்கையான அழகு வாய்ந்தவள்.

அதெல்லாம் சரி. குணம் எப்படி? என்ற கேள்வி வருகிறதல்லவா? அதற்கும் அருணகிரிநாதர் பதில் சொல்கிறார். ‘ஜானகிதனம் கலந்தபின் என்ற வார்த்தைகள் அதை விளக்குகின்றன.

தனம் என்ற சொல்லுக்கு செல்வம் என்பது பொருள். அன்பு, இரக்கம், பொறுமை ஆகியவையே ஜானகி (சீதை) யிடம் இருந்த செல்வங்கள். அவளுடைய அன்பு - சுந்தர காண்டத்திலும், இரக்கம் - யுத்த காண்டத்திலும், பொறுமை - அயோத்தியா காண்டத்திலும் வெளிப்பட்டதை வால்மீகியும் கம்பரும் விவரித்துள்ளனர். இதையே ‘ஒண் ஜானகி தனம் கலந்தபின் என்ற வார்த்தைகளால் அருணகிரிநாதர் வெளிப்படுத்துகிறார்.

இதன் பிறகு கம்பரின் கைகேயி, ராமனிடம், ‘‘பரதன் ஆள வேண்டும். நீ காட்டுக்குப் போக வேண்டும். பதினான்கு ஆண்டுகள் ஆனதும் திரும்பி வர வேண்டும் - என அரசர் கூறினார் என்றாள்.

இயம்பினன் அரசன் என்றாள்

- கம்ப ராமாயணம்.

அதற்கு ராமர், ‘‘அம்மா! இதை அரசர் என்ற முறையில் அப்பா சொல்ல வேண்டுமா? தாங்கள் சொன்னாலே போதுமே! நான் மறுத்தா பேசப் போகிறேன்?’’ என்று பதில் சொன்னார்.

மன்னவன் பணியன்றாகில் நும்பணி மறுப்பனோ? - கம்பர்.

இந்த வார்த்தைளுக்கு, ‘கைகேயியின் உள்ளத்தை ராமர் புரிந்து கொண்டார்- என்று பொருள்.

அம்மா நீங்கள் சொன்னதெல்லாம், மன்னவன் சொன்னவை அல்ல. பிறகு? இதெல்லாம் உங்கள் வேலைதான் என்பது எனக்குத் தெரியும். இருந்தாலும் நான் மறுத்துப் பேச மாட்டேன். என்று ராமர் சொல்வது புரியும்.

இதை அருணகிரிநாதர் ‘பளிச்சென்று சொல்கிறார். ‘அரசர் சொன்னார் என்று அருணகிரி நாதரின் கைகேயி சொல்லவில்லை. ‘‘ராமா! நான்தான் சொல்கிறேன். நீ காட்டுக்குப் போ!’’ என்கிறாள்.

எனது மொழி வழுவாமல் நீயேகு கான்மீதில்
என விரகு குலையாத மாதாவு(ம்) நேரோத
இசையுமொழி தவறாமலே யேகி மாமாதும்
இளையோனும் இனிமையடு வரும்

- (குனகியரு) திருப்புகழ்

கருத்து : கைகேயி நேருக்கு நேராகச் சொல்லியும், மறுத்துப் பேசாமல் ராமர், அந்தச் சொல்லுக்கு இசைந்து காட்டுக்குக் கிளம்புகிறார். நிழல் போல லட்சுமணனும் சீதையும் அவருடன் கிளம்புகிறார்கள்.

அருணகிரிநாதரின் ராமாயணத்தில் ‘அயோத்யா காண்டம்முடிந்து ஆரண்ய காண்டம் தொடங்குகிறது. அங்கே, முக்கியமான கட்டத்துக்கு... தண்டகாரண்யம் என்னும் தண்டக வனத்துக்கு நம்மை அழைத்துப் போகிறார்.

திருவைக் கொண்டொரு
தண்டக வனமிசைவர

- (புருவச் செஞ்சிலை) திருப்புகழ்

தண்டகவனத்தில் சூர்ப்பணகை, சீதையைத் தீண்ட முயன்றாள். அப்போது அங்கு வந்த லட்சுமணன், சூர்ப்பணகையின் மூக்கையும், காதுகளையும் சிதைத்தான்.

சூர்ப்பணகைக்கு உதவியாகப் பெரும்படைகளுடன் வந்த கரன், திரிசிரன், தூஷணன் ஆகியோர், ராமரால் கொல்லப்பட்டனர். அதன்பின் சூர்ப்பணகை, ராவணனிடம் போய் சீதையின் அழகை வர்ணித்தாள். அதன் விளைவாக ராவணன், சீதையிடம் மையல் கொண்டான்.

இதை அருணகிரிநாதர் திருத்தணித் திருப்புகழில் சொல்லும் சந்தத் தமிழின் அழகைப் பார்ப்போம்.

மூக்கறை மட்டை மகாபல காரணி
சூர்ப்பநகைப் படுமூளி உதாசனி
மூர்க்ககுலத்தி விபீஷணர் சோதரி முழுமோடி
மூத்தவரக்கனி ராவணணோடியல் போற்றிவிட

- (தாக்கமருக்கொரு) திருப்புகழ்

லட்சுமணனால் மூக்கு அறுபட்டவள் சூர்ப்பணகை - மூக்கறை பயனற்றவள் சூர்ப்பணகை - மட்டை.

மகாபல காரணி என்பதன் விளக்கம் : கம்பர், சூர்ப்பணகையை அறிமுகப்படுத்தும்போதுநீல மாமணி நிருதர் வேந்தனை மூல நாசம் பெற முடிக்கும் மொய்ம்பினாள் என்கிறார். அதாவது - ராவணன் அடியோடு அழியக் காரணமானவள் சூர்ப்பணகை. கம்பரைப் பின்பற்றும் அருணகிரிநாதர் இந்தத் தகவலை அழகாக, சுருக்கமாக ‘மகாபல காரணி என்று சொல்லும் பாங்கு வியக்க வைக்கிறது.

சூர்ப்பணகை பற்றிய அருணகிரிநாதரின் வர்ணனை தொடர்கிறது. சூர்ப்பணகை - படுமூளி, கொடியவள், தீப்போன்றவள், முரட்டுத்தனமான அரக்கர் குலத்தைச் சேர்ந்தவள், விபீஷணனின் சகோதரி, வஞ்சனையில் முதலிடம் வகிப்பவள்.
அருணகிரிநாதரின் அற்புதமான இந்தப் பாடலில் நான்கு முக்கியமான விவரங்கள் உள்ளன.

1.ராவணன் அடியோடு அழியக் காரணமானவள் சூர்ப்பணகை.
2.விபீஷணனின் சகோதரி சூர்ப்பணகை.
3.வஞ்சனையில் முதலிடம் வகிப்பவள் சூர்ப்பணகை.
4.ராவணனிடம், சீதையின் அழகை விவரித்துப் போற்றியவள் சூர்ப்பணகை.

இதில் முதலாவதையும் நான்காவதையும் இணைத்துப் பாருங்கள். ராவணன் அடியோடு அழிவதற்காகவே, அவனிடம் சீதையின் அழகை வர்ணித்து காமத்தீயை மூட்டி விட்டாள் சூர்ப்பணகை என்பது விளங்கும்!

சூர்ப்பணகை ஏன் இப்படிச் செய்ய வேண்டும்? அவள் கணவன் பெயர் வித்யுஜ்ஜிஹ்வா. ஒரு சமயம் ராவணன் போர் வெறியில், வித்யுஜ்ஜிஹ்வாவைக் கொன்று விட்டான். இது அவளுக்கு மிகுந்த கோபத்தை உண்டு பண்ணியது. உதடுகளைக் கடித்துக் கொண்டாள். ‘‘என் கணவனைக் கொன்ற ராவணனை ஒழித்து விடுகிறேன்!’’ என்று சபதம் செய்தாள். ‘கொல்லாத மைத்துனனை என்ற கம்பரின் பாடல் இதை விரிவாகச் சொல்கிறது.

அருணகிரிநாதர் இதை, ‘போற்றிவிட என்கிறார். இதில் ‘விட என்று அவர் சொல்வதில் வேறொரு தகவலும் உள்ளது.

ராவணனிடம் சீதையைப் பற்றிக் கூறிய சூர்ப்பணகை, அங்கிருந்து போய் விடுகிறாள். அதன் பிறகு என்னவாயிற்று என்று அவள் திரும்பிப் பார்க்கவே இல்லை. காரணம்? அவளுக்கு அந்த அளவுக்குத் தனது திறமை மீது நம்பிக்கை!

வால்மீகி ராமாயணத்திலும் கம்ப ராமயணத்திலும் இதன் பிறகு சூர்ப்பணகையைப் பற்றிய தகவல் இல்லை. அதனால்தான் அருணகிரிநாதர் ‘போற்றியுற என்று சொல்லாமல் ‘போற்றிவிட என்று சொல்கிறார்.

அடுத்து, தன் கணவனைக் கொன்ற ராவணனை ஒழிக்க, சூர்ப்பணகை ஏன் ராம -லட்சுமணர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்? வேறு யாரையாவது தேர்ந்தெடுத்திருக்கலாமே? இதற்கும் ஓர் அற்புதமான பின்னணி உண்டு.

ராமர், சீதை, லட்சுமணன் - மூவரும் வனவாசத்தின்போது ஓர் இடத்தில் தங்கி இருந்தார்கள். அப்போது லட்சுமணன் தர்பைப்புல் அறுக்கப் போனான். ஓங்கி வளர்ந்த புற்களை ‘சரக்சரக் என அறுத்தான். சட்டென்று தர்பைக்கு நடுவில் அமர்ந்து தவம் செய்த சூர்ப்பணகையின் மகன் தலையையும் (தன்னையறியாமல்) அறுத்து விட்டான்.
மகனை இழந்த சூர்ப்பணகை கதறினாள். ‘‘ஏற்கெனவே கணவனை இழந்து வருந்தும் என்னை, மகனையும் கொன்று, துயரக்கடலில் தள்ளி விட்டானே லட்சுமணன்! இவனை விட்டுவைக்க மாட்டேன்!’’ என்று சபதம் செய்தாள். எனவே ராம, லட்சுமணர்களுக்கும் ராவணனுக்கும் மோதல் உண்டாக வழி வகுத்தாள். ‘இந்த இருவரில் யார் அழிந்தாலும் லாபம்தான்! என்பது அவள் வஞ்சக எண்ணம்.
இதற்கு அவளுக்கு அடிப்படை அமைத்துக் கொடுத்தது கரன், திரிசிரன், தூஷணன் ஆகியோரின் முடிவு. (பலசாலிகளான இவர்கள், ராமரால் அழிக்கப் பட்டதை ஏற்கெனவே பார்த்தோம்.)

இதனால் சூர்ப்பணகையை ‘வஞ்சனையில் முதலிடம் வகிப்பவள்என்றார் அருணகிரிநாதர். அவர் சொன்ன முக்கியமான விஷயங்களில் மூன்றைப் பார்த்தோம். இனி, ‘விபீஷணர் சகோதரி சூர்ப்பணகை என்று ஏன் சொன்னார் என்று பார்க்க வேண்டும்.

தீயவர்களின் உறவினர்களான தீயவர்களை அறிமுகப்படுத்தும் போது, உறவைச் சொல்லி அறிமுகப் படுத்துவது வழக்கம். உதாரணமாகத் திருடன் ஒருவனைப் பிடித்துக் காவல் நிலையத்துக்குக் கொண்டு வருவதாக வைத்துக்கொள்வோம். அங்கே ‘திருடர்கள் ஜாக்கிரதை எனும் தலைப்பில் உள்ள புகைப்படங்களில், இந்தத் திருடனின் அண்ணன் படமும் இருக்கிறது. அப்போது அங்கு இருப்பவர்கள் என்ன சொல்வார்கள்? ‘‘இதோ இந்த போட்டோல இருக்கானே, இவன் தம்பிதான்யா இந்தத் திருட்டுப்பய!’’ என்று தானே கூறுவார்கள்.

அந்த முறைப்படி, ராவணனின் தங்கை சூர்ப்பணகை என்றுதானே சொல்ல வேண்டும்? விபீஷண சகோதரி என்று அவர் சொல்வது ஏன்?

விபீஷணனைத் தீயவன் - என்று குறிக்கப் பார்க்கிறாரா? அல்லது சூர்ப்பணகை நல்லவள் என்று அருணகிரிநாதர் வாதாட வருகிறாரா?! அவரின் இந்த வாக்கில் ஒரு முற்பிறவிக் கதை இருக்கிறது.

சத்யவிரதன் என்னும் மன்னரின் மகன் சங்கசூடணன். அவன், ஆதிசேஷனை தவறாமல் தினமும் வழிபட்டு வந்தான். சங்கசூடணனின் குருநாதரின் மகள் சுமுகி. சுமுகி என்பதற்கு ‘அழகான முகம் உடையவள் என்று பொருள். அவளின் உள்ளம் அழகானதல்ல. அவள் இளவரசன் சங்கசூடணனை விரும்பினாள்.

ஆனால், சங்கசூடணன், ‘‘குருநாதரின் மகள் எனக்குச் சகோதரி. நான் உன்னை விரும்பினால், என் சகோதரியை விரும்பிய பாவம் வந்து சேரும். அது அதர்மம். அதனால், எனக்குக் கடுகளவு கூட உன் மேல் விருப்பமில்லை. அடுத்த பிறவியிலும் நீ எனக்குச் சகோதரிதான், போ!’’ என்று சொல்லி சுமுகியை விரட்டி விட்டான்.

சுமுகியால் ஏமாற்றத்தைத் தாங்க முடியவில்லை. இளவரசனைப் பழி வாங்கத் தீர்மானித்தாள். தன் தந்தை மூலமாக, இளவரசன் தன்னிடம் தவறாக நடக்க முயன்றான் என்று அரசனிடம் முறையிட்டாள்.

குருநாதர் மகளிடம் முறை கேடாக நடக்க முயன்றது, என் மகனாக இருந்தாலும் ராஜ தண்டனையில் இருந்து தப்ப முடியாது!’’ என்று கோபம் கொண்ட சத்திய சந்தனான அரசன், சங்கசூடணனுக்கு மாறுகால் - மாறுகை வாங்குமாறு தண்டனை விதித்தான்.

அந்தத் தண்டனை நிறைவேற்றப்பட்டது. அவன் மனம் வருந்தி, ‘‘ஆதிசேஷ பகவானே! மனதால் கூடப் பிறருக்குத் தீங்கு நினைக்காத எனக்கு இந்தத் தீங்கு வந்ததே!’’ என்று முறையிட்டான்.

ஆதிசேஷன் அவன் முன் தோன்றினார். ‘‘சங்கசூடணா! என்னதான் உயர்ந்த விதையாக இருந்தாலும், போட்ட உடனே முளைக்காது. நீ சொன்னபடி அந்த சுமுகி அடுத்த பிறவியில் உனக்குச் சகோதரியாகப் பிறப்பாள். அப்போது நானே அவளுக்குத் தண்டனை அளிக்கிறேன்!’’ என்று சொல்லி மறைந்தார்.

அதன்படி விபீஷணனாகப் பிறந்தான் சங்கசூடணன். சுமுகி - சூர்ப்பணகையாகப் பிறந்தாள். ஆதிசேஷன் லட்சுமணனாக அவதரித்து சுமுகி(சூர்ப்பணகை)க்குத் தண்டனை அளித்துத் தனது வாக்கை நிறைவேற்றினார்.

எனவே அருணகிரிநாதர், ‘விபீஷண சகோதரி சூர்ப்பணகை என்றார். அருணகிரிநாதரைத் தவிர வேறு யாரும் இந்தத் தகவலைச் சொல்லவில்லை.
அங்கம் பங்கப்பட்ட சூர்ப்பணகை தன் (ஒன்றுவிட்ட) சகோதரர்களான கரன், திரிசிரன், தூஷணன் ஆகியோரிடம் விஷயத்தைச் சொல்லி, ‘‘ராம - லட்சுமணர்களுடன் போரிட்டு அவர்களை அழியுங்கள். அவர்கள் இரண்டே பேர்தான். ம்.... கிளம்புங்கள்!’’ என்று அழைத்து வந்தாள். மூவரும் ராமருடன் போரிட்டு மடிந்தார்கள்.

இதை பல பாடல்களில் சொல்கிறார் அருணகிரி நாதர்.

வருகர தூஷணா வீரர்மாள

- (குனகியரு) திருப்புகழ்

கருத்து : கரன், தூஷணன் முதலியவர்கள் வீரர்களுடன் வந்து, ராமருடன் போரிட்டு மடிந்தார்கள்.

இங்கு இரண்டுபேரைத்தானே சொல்லியிருக்கிறார்; திரிசிரனை விட்டு விட்டாரே என நினைக்க வேண்டாம்.

கண்டக வெங்கரனொடு திரிசிரனோடு

- (புருவச் செஞ்சிலை) திருப்புகழ்

கருத்து : கொடுமை நிரம்பிய கரன், திரிசிரன் ஆகியோருடன் (போர் புரிந்து ராமர் வென்றார்).

கரனைப் பற்றி தனியாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

இகல் கரனும்... - (விடமும் வடிவேலும்) திருப்புகழ்

இங்கே கரனைச் சொல்லும் போது, ‘இகல் என்ற அடை மொழியை அருணகிரிநாதர் உபயோகிப்பதைக் கவனிக்க வேண்டும்.

இகல் என்ற வார்த்தைக்கு - பகை, வலிமை, போர், சிக்கலான செயல் என்று பலவித அர்த்தங்கள் உள்ளன. அவ்வளவுக்கும் பொருத்தமானவன் கரன்.
பகை கொண்ட, வலிமை கொண்ட, பேராற்றல் மிகுந்த, சிக்கலான செயலைச் செய்து முடிக்கும் கரன் - எனப் பொருள் கொள்ள வேண்டும். எனவே, இந்த ‘இகல் என்ற அடைமொழியைக் கரனுக்குத் தந்தார் அருணகிரிநாதர்.

அத்துடன், ‘ஏன் இப்படிச் செய்தார்? என்ற சிந்தனையையும் தூண்டுகிறது. விளைவு... கரன், திரிசிரன், தூஷணன் என்ற மூவரைப் பற்றியும் அருணகிரிநாதர் சொல்லியுள்ள மூன்று பாடல்களிலும் ஓர் ஒற்றுமையைக் கவனித்தீர்களா?

மூன்று பாடல்களிலும் இடம் பெற்றவன் கரன் மட்டுமே. அர(சிவ)னிடம் வரம் வாங்கியவன் கரன். திருவெண்காடு, வைக்கம் ஆகிய தலங்களில் உள்ள சிவலிங்கங்கள், இந்த கரன் பூஜை செய்தவையே.

இவன் தலைசிறந்த வீரன். சிவபெருமானிடம் இருந்து வரம் பெற்ற பின், நல்லவர்களுக்குத் தீங்கு செய்தான். அதனால் அழிந்தான். தெய்வத்திடம் இருந்து வரம் பெற்றாலும், அதை முறை தவறிச் செயல்படுத்துபவன் அழிவான் என்பதைக் குறிப்பிடவே அருணகிரிநாதர் கரனுக்கு அப்படிச் செய்தார்.

கரன் முதலானவர்கள் அழிந்தும், சூர்ப்பணகை விடவில்லை. அவள் ராவணனிடம் விரைந்து சென்று சீதையின் அழகை எடுத்துக் கூறி, மாபெரும் வீரனான அவன் அழிவுக்கு அடித் தளம் அமைத்தாள்.

நாம் எல்லோரும் திட்டுகிறோமே, அந்த ராவணன், சீதையை நேரில் பார்த்து அவள் அழகைக் கண்டு விரும்பவில்லை. பிறகு எப்படி? என்பதற்கு பதிலாகத்தான், சூர்ப்பணகை சீதையின் அழகை எடுத்துக் கூறும் யுக்தி வெளிப்படுகிறது.

சீதையைப் பற்றி சூர்ப்பணகை சொல்லிச் சென்றதும் ராவணன் ஒரு காரியம் செய்தான். அது அவனுக்கே காரியம் (இறந்த பிறகு செய்யப்படுவது) செய்யும்படியாக ஆகிவிட்டது.

சீதையிடம் கொண்ட காம மயக்கத்தால் ராவணன், மாரீசனை மாய மானாக வரச் சொன்னான். அவன் மாய மானாக மாறினான். ராமர் கையால் மாய (இறக்க) மானாக வந்தான். அவன் முடிவை அருணகிரிநாதர் பல வழிகளில் சொல்கிறார். அவற்றில் சிலவற்றைப் பார்க்கலாம்.

வடிவுடைய மான் (விடமும் வடிவேலும்) - திருப்புகழ் வடிவத்தில் மானாக இருக்கிறதே தவிர, அது உண்மையான மான் அல்ல; மாரீச மான் என்கிறார் அருணகிரிநாதர்.

வடிவு என்ற வார்த்தைக்கு, மிகுந்த அழகு - என்ற பொருளும் உண்டு. அதன்படி மாரீசன் அழகான மானாக வந்தான் என்று பொருள் வரும்படியும் அமைத்திருக்கிறார் அருணகிரிநாதர்.

மாரீசனின் அழகைச் சொன்ன அருணகிரிநாதர், அவன் முடிவையும் நயம்படச் சொல்கிறார்.

திருவைக் கொண்டொரு
தண்டக வனமிசை
வரவச் சங்கொடு
வந்திரு முழையுடல் சிதற

- (புருவச் செஞ்சிலை) திருப்புகழ்

இந்த வரிகளில் சீதை, ராமர், மாரீச மான் - மூவரைப் பற்றியும் சொல்லப்பட்டிருக்கிறது. இதில் வரும் ‘திரு என்பது திருமகளின் அவதாரமான சீதாதேவியைக் குறிக்கும். ‘அச் சங்கொடு என்பதற்கு, ‘அந்த சங்கோடு எனப் பொருள் கொள்ளக் கூடாது. ‘அச்சம் கொ(ண்)டு என்று பொருள் கொள்ள வேண்டும்.
ராமரும் சீதையும் இருக்கும் தண்டக வனத்துக்கு மாரீச மான் வருகிறது. சும்மா வரவில்லை; அச்சத்தைச் சுமந்து வருகிறது. ராவணன் செய்த நிர்ப்பந்தத்தால் வந்த மாரீசனுக்கு, அதுதான் தனது கடைசிப் பயணம் என்பது தெரியும். அதனால்தான் பயம்.

மாரீசனின் பயம் உண்மையாகியது. அவன், உடல் சிதறி உலகைத் துறந்தான் என்பதை, ‘வந்திடும் உழை உடல் சிதற என்பதன் மூலம் அருணகிரிநாதர் சொல்கிறார். ‘உழை என்பதற்கு ஆண் மான் என்பது பொருள். மாரீசன் மானாக வந்ததால், ‘உழை என்ற அருணகிரிநாதரின் தமிழாற்றல் அளவிடற்கரியது!

மாரீச மானின் உடல் மட்டும் தான் சிதறியது; ஆனால், உள்ளம் சிதறாமல் அவன் ராவணனுக்கு உதவப் போகிறான் என்பதால் ‘வஞ்சனை செய்வதில் நிகரில்லாத வன் மாரீசன் என்கிறார் அருணகிரிநாதர்.

நிகரில் வஞ்சக மாரீச

- (மகர குண்டல) திருப்புகழ்

மாரீசன் கீழே விழும்போது, ‘‘சீதா! லட்சுமணா!’’ என்று ராமர் குரலில் (மிமிக்ரி செய்து) கத்திக் கீழே விழுந்தான். அந்தக் குரல் கேட்டு, ராமருக்கு ஏதோ ஆபத்து என எண்ணிய சீதை, தன் அருகே காவலாக இருந்த லட்சுமணனை ராமரைப் பார்த்து வர அனுப்பி வைத்தாள்.

இங்கு, லட்சுமணன் கோடு போட்டதைச் சொல்ல மறந்து விட்டதாக நினைக்க வேண்டாம். லட்சுமணன் கோடு போட்டதாக வால்மீகியோ கம்பரோ சொல்லவில்லை. அதனால், அருணகிரிநாதரும் சொல்லவில்லை.

சீதையைத் தன்னந்தனியாக விட்டுவிட்டு லட்சுமணன் போய் விட்டான். ராவணன் அங்கு வருவதற்குள் நாம் ராவணனைப் பார்த்து விடலாம். அருணகிரிநாதர் தயாராக இருக்கிறார். ராவணனைப் பற்றிப் படிப்படியாகச் சொல்கிறார். ராவணன் என்றதும் அவனுடைய வீரம்தான் நினைவில் வரும். அதனால்,

வீரத்தால் வல இராவணனார்

- (ஆரத்தோடணி) திருப்புகழ்

ராவணனார் என்று எவ்வளவு மரியாதையாகச் சொல்லப்பட்டிருக்கிறது பாருங்கள்! காரணம்? ராவணன் அந்த அளவுக்கு அரும்பெரும் செயல்கள் செய்தவன்.
கங்கா நதி, விபூதிப் பச்சை (மூலிகை), பிறை நிலவு ஆகியவற்றை திருமுடியில் சூடியவர் சிவபெருமான். நடராஜரான அவர் இருந்த கயிலாய மலையைத் தன் உள்ளங்கையில் பிடுங்கியவன் அசுரனான ராவணன். இதைச் சொல்லும் திருப்புகழ் வரிகள்:

நதியுந் திருக்கரந்தை
மதியுஞ் சடைக்கணிந்த
நடநம் பருற்றிருந்த கயிலாய
நகமங் கையிற் பிடுங்கு மசுரன்

- (மதவெங்கரி) திருப்புகழ்


ராவணன் கயிலை மலையைச் சுலபமாக எடுக்கவில்லை. மிகுந்த வன்மையுடன் தன் தோளால் எடுத்தான். அப்போது பரமேஸ்வரன் தன் அழகிய திருவடியினால் அவனைக் கீழே விழச் செய்து மகிழ்ந்தார். இதோ திருப்புகழ்:

வலித்துத் தோள்மலை இராவணனானவன்
எடுத்தப் போதுடல் கீழ்விழவேசெய்து
மகிழ்ப் பொற்பாத சிவாயநமோ அர சம்பு

- (எலுப்புத்தோல்) திருப்புகழ்

இதில் ‘அர-சம்பு என்ற இரு வார்த்தைகளை அருணகிரிநாதர் உபயோகிக்கிறார். ‘அரன் என்ற வார்த்தைக்கு, ‘பாவங்களை அபகரிப்பவன் என்பது பொருள். ‘சம்பு என்ற சொல்லுக்கு, ‘சுகம் உற்பத்தியாகும் இடம் என்று பொருள். அகங்கார வசப்பட்டு ஆண்டவன் இருந்த மலையையே தூக்கிய ராவணனின் அந்தப் பாவத்தை நீக்கி, அவனுக்கு நல்லதை அருள்பவர் சிவபெருமான் என்பதை இவ்வாறு சொல்கிறார். அது மட்டுமல்ல; சிவபெருமான், ராவணனுக்கு (சந்திரஹாஸம் என்னும்) வாள் தந்தார் என்றும் சொல்கிறது திருப்புகழ்.

அரக்கன் தசமுகன் கைக்குக் கட்கமளிக்கும் பெரியோன்

- (கனக்ரவுஞ்சத்திற்) திருப்புகழ்

ராவணனைப் பற்றி இவ்வளவு சொன்ன அருணகிரிநாதர்,

அரிய மேனியிலங்கையிராவணன்

- (கரியமேக) திருப்புகழ்

அதாவது அற்புதமான உடம்பு கொண்டவன் என்றும் மனம் திறந்து பாராட்டுகிறார். என்ன சொல்லி என்ன பயன்? அதோ ராவணன் அட்டூழியம் செய்யக் கிளம்பி விட்டதை அருணகிரிநாதர் வாயிலாகப் பார்ப்போம்.

கமலாலய சீதையை
மோட்டன் வளைத் தொரு
தேர்மிசையே கொடு முகிலேபோய்

- (தாக்கமருக்கொரு) திருப்புகழ்

கருத்து : தன்னந்தனியாக ராவணனிடம் அகப்பட்ட சீதை, தப்புவதற்காக நாலா பக்கங்களிலும் ஓடினாள். ராவண மூர்க்கன் விடவில்லை. சீதையை வளைத்துக் கொண்டு, ஒரு தேரில் ஏற்றி, ஆகாய வழியாகப் போனான். ‘தாமரை மலரில் இருக்கும் லட்சுமிதேவியின் அவதாரமான சீதையை, ராவணன் இப்படிச் செய்து விட்டானே! என்று அருணகிரிநாதர் வருத்தப் படுகிறார்.


இருந்தாலும் அவரால் சொல்லாமல் இருக்க முடிய வில்லை. சீதையைக் கொண்டு போன ராவணன் அவளை எங்கே வைத்தான்? - என்பதைச் சொல்கிறார்.

சானகி கற்புத் தனைச் சுடத்த(ன்) அ
சோகவ னத்திற் சிறைப்படுத்திய
தானை அரக்கர் குலத்தரத்தனை வருமாள

- (மானைவிடத்தை) திருப்புகழ்

கருத்து : சீதையை அசோக வனத்தில் சிறை வைத்தான் ராவணன். ஜானகியின் கற்புத்தீயில் தானும் தன் குலத்தவரும் மாளவே அப்படிச் செய்தான்.

அருணகிரிநாதரின் ஆரண்ய காண்டத்தை இத்துடன் நிறைவு செய்து, ஆஞ்சநேயர், சுக்ரீவன், வாலி ஆகியோரைப் பற்றிக் கூறும் கிஷ்கிந்தா காண்டத்தைப் பார்க்கலாம்.
திரும்பி வந்த ராமரும் லட்சுமணரும் சீதையைக் காணாததால், தேடிக் கிளம்பினார்கள். இந்தப் பகுதியைச் சொல்லும் அருணகிரிநாதரின் வரிகள்:

இருங்கானகம் போய்
இளங்காளைபின் போக
எங்கே மடந்தையென ஏகி

- (பெருங்காரியம்) திருப்புகழ்

கருத்து : அடர்ந்த காட்டுக்குள் ராமர் (மாய மான் பின்னால்) போனார். சீதை சொற்படி அவர் பின்னால் லட்சுமணனும் போனான். பிறகு இருவருமாக ஆஸ்ரமத்துக்கு வர, அங்கே சீதையைக் காணாமல், ‘எங்கே சீதை? என்று தேடத் தொடங்கினர்.

இதை ஒருசில வார்த்தைகளில் சொல்லியிருக்கும் அருணகிரிநாதரின் சொற் சாதுரியம் வியக்க வைக்கிறது. இந்த வியப்புடன் நாம், ராம - ஆஞ்சநேய சந்திப்புக்குப் போகலாம்.

பரிதிமகன் வாசல் மந்திரி
அனுமனொடு

- (சுருளளகபார) திருப்புகழ்

எல்லா விதத்திலும் உயர்ந்தவரான ஆஞ்சநேயர், சுக்ரீவனின் மந்திரியாக இருந்தார் என்கிறார் அருணகிரிநாதர்.

இது என்ன புதுக்கதை? இதற்குரிய காரணத்தை உணர்ந்தால், அருணகிரிநாதரின் ஆழ்ந்த புலமை நம்மை வியப்பில் ஆழ்த்தும்.

சூரிய பகவானிடம் மாணவராக இருந்து, கல்வி கற்றவர் அனுமார். கல்விப் பயிற்சி முடிந்ததும், ‘‘குருதேவா! தங்களுக்குக் குருதட்சணை அளிக்க விரும்புகிறேன். அனுமதி தாருங்கள்!’’ என வேண்டினார். சூரிய பகவான் மறுத்தார். ஆனால், அனுமார் விடவில்லை. கடைசியில் சூரிய பகவான், ‘‘சரி! உனது வேண்டுகோளை ஏற்கிறேன். ஓர் உதவி செய். என் அம்சமான சுக்ரீவனுக்கு நீ மந்திரியாக இருந்து நல்வழி காட்டு. இதுவே குருதட்சணையாக இருக்கட்டும்!’’ என்றார். ஆஞ்சநேயர் ஒப்புக் கொண்டார். இப்படி அனுமார், சுக்ரீவனுக்கு மந்திரியானார்.

இதைத்தான் ‘பரிதி மகன் வாசல் மந்திரி அனுமன் என அருணகிரிநாதர் குறிப்பிடுகிறார். மேலும் அவர் அனுமாருக்கு ஒரு பட்டமும் தருகிறார். ‘கவச அனுமன் என ‘முருகுசெறி திருப்புகழில் குறிப்பிடுகிறார்.

இந்தப் பட்டத்தை வேறு யாரும் ஆஞ்சநேயருக்குத் தரவில்லை. சுக்ரீவனுக்கு ராமருடன் தோழமை உண்டாக்கி அவனைக் காத்தது, சீதையிடம் மோதிரம் தந்து அவள் உயிரைக் காத்தது, சுக்ரீவன் சீதையைத் தேடக் குறித்த கெடு தாண்டியதும் உயிரைவிடத் தீர்மானித்த வானர வீரர்களுக்கு ஆறுதல் சொல்லி அவர்களின் உயிரைக் காத்தது, யுத்த களத்துக்கு மருத்துவ மலையைக் கொணர்ந்து ராம -லட்சுமணர்கள் உயிரைக் காத்தது - எனப் பல வகைகளிலும் ‘கவசமாக இருந்து உயிர் காத்ததால், ஆஞ்சநேயரைக் ‘கவச அனுமான் என்கிறார் அருணகிரிநாதர்.

ஆஞ்சநேயர் மூலமாக சுக்ரீவனுக்கும் ராமருக்கும் நட்பு ஏற்பட்டது. வாலியின் பலம், ஆஞ்சநேயரால் ராமரிடம் கூறப்பட்டது. பல பாடல்களில் இதை விவரிக்கும் அருணகிரிநாதரின் வாக்கிலிருந்து...

அமிர்தம் வேண்டும் என்பதற்காகப் பாற்கடலைக் கடைந்தனர். (மந்தர)மலையே மத்தாக இருந்தது; வாசுகி (பாம்பு) கடையும் கயிறாக இருந்தது. ஒரு பக்கம் திருமால் பிடித்துக் கொண்டார். மறு பக்கத்தை வாலி பிடித்துக் கொண்டான். இருவருமாகப் பாற்கடலைக் கடைந்தனர். அலை வீசும் கடலிலிருந்து ‘திமிதிமித்தெம் என்று எழுந்த பேரொலி பூவுலகம் முழுவதையும் நிறைத்தது. கடல் கலங்கியது. அமிர்தம் வெளிப்பட்டது. அவ்வளவு பலம் பொருந்தியவன் வாலி.

மலையை மத்தென வாசுகியே கடை
கயிறெனத் திருமாலொரு பாதியு(ம்)
மருவு மற்றது வாலியு மேலிட அலையாழி
வலய முட்ட வொரோசையதா யலி
திமிதிமித்திமெனாவெழ வேயலை
மறுகிடக் கடையாவெழ மேலேழு மமுதோடே

- (வயலூர்) திருப்புகழ்

வாலியின் பராக்கிரமத்தை அருணகிரிநாதர், விரிவாக வர்ணிக்கிறார்.
இதன் பிறகு ராமர், ‘‘அப்படிப்பட்ட வாலியுடன் சுக்ரீவா! நீ போர் தொடு. நான் அவனை அழிக்கிறேன்!’’ என்றார். அதன்படி சுக்ரீவனுக்கும் வாலிக்கும் கடும் போர் மூண்டது. வாலியால் கடுமையாகத் தாக்கப்பட்ட சுக்ரீவன் நடுங்கினான். இதை அருணகிரிநாதர்,

நடுங்கச் சுக்ரிவனோடமராடிய குரங்கு

- (விடுங்கை) திருப்புகழ்

உயிர் பயம் ஏற்பட்டது சுக்ரீவனுக்கு. ராமரிடம் போய்ப் புலம்பினான். ஆறுதல் சொன்ன ராமர் அடையாளத்துக்காக சுக்ரீவன் கழுத்தில் ஒரு மாலை போட்டு, ‘‘போ! மறுபடியும் போரிடு!’’ என்று அனுப்பினார். இதை வெளிப்படுத்தும் வரிகள்:

காந்தள் மலர்த்தொடையிட்டெதிர் விட்டொரு
வேந்து குரக்கரணத்தொடு மட்டிடு... சற்குணன்

- (கூந்தலவிழ்ந்து) திருப்புகழ்

கருத்து : சுக்ரீவனுக்குக் காந்தள் மலர் மாலையை அணிவித்து, அவனை வாலியின் எதிரே போருக்கு அனுப்பி, ஒப்பற்ற அந்த வாலி என்னும் வானர வேந்தனை அவன் கவசத்தோடு அழித்தவர் நற்குணம் வாய்ந்த ராமர்.

வாலி வதம் மற்றொரு திருப்புகழிலும் வர்ணிக்கப் படுகிறது.

வாலி மார்பு தொளைத்திட விற்கொடு
வாளியேவிய மற்புயனச்சுதன்

- (ஆலகால)-திருப்புகழ்

வாலி வதம் முடிந்து விட்டது. சுக்ரீவன் அரசன் ஆனான். தலைமையோடு தாரமும் பெற்ற அவன், ‘‘கார் காலம் (ஆவணி, புரட்டாசி) முடிந்ததும் படைகளுடன் வந்து உதவுகிறேன்!’’ என்று ராமருக்கு வாக்குறுதி தந்து விட்டு அரண்மனை திரும்பினான். அந்தப்புர வாழ்வில் அவன் தன்னை மறந்தான். கள்ளுண்டு காமக்களியாட்டத்தில் மூழ்கினான். கார் காலம் கடந்தது. சுக்ரீவன் வராததால், ராமர் கோபம் கொண்டார். தம்பியை அழைத்து, சுக்ரீவனுக்குக் கோபத்தோடு எச்சரிக்கை அனுப்பினார்.

ராமரின் கோபம் தெறிக்கும் வார்த்தைகளைப் பதிவு செய்கிறார் அருணகிரிநாதர்:

மறந்த சுக்ரிப மாநீசன் வாசலி
லிருந்துலுத்த நியோராததேது சொல்
மனங்களித்திடலாமோ துரோகித முன்புவாலி
வதஞ்செய் விக்ரம சீராமனானில
மறிந்ததிச்சரமோகோ கெடாதினி
வரும்படிக்குரையாய் பார்பலாவக மென்றுபேசி
...போராடு நாரணன்

- (நிறைந்த துப்பிதழ்) திருப்புகழ்

கருத்து : ‘‘லட்சுமணா! போ. கார் காலம் முடிந்ததும் வருகிறேன் என்ற சொல்லை மறந்தான் சுக்ரீவன். இழிந்தவனான அவன் வாயிலில் போய், ‘சுக்ரீவா! உலோபியே! ராமனுடைய ஆற்றலையும் அவன் உனக்குச் செய்த நன்மையையும் எண்ணிப் பார்க்காமல் இருக்கிறாயே. அது ஏன்? சொல். கள் குடித்து மன மகிழ்ச்சியில் ஆழ்ந்திருக்கிறாயே... இது நியாயமா? பாதகனே! வாலியைக் கொன்ற ஆற்றல் படைத்த ஸ்ரீராமன் நான். எனது அம்பு பற்றி உலகமே அறியும். கெட்டுப் போகாதே. தாமதிக்காது சீக்கிரம் வா! என்று சுக்ரீவனிடம் போய்ச் சொல். போர்களின் விளைவைப் பார்!’’ என்று கூறி சுக்ரீவனிடம், லட்சுமணனை அனுப்பினார் ராமர்.

அப்படியே செய்தான் லட்சுமணன். சுக்ரீவன் தெளிவு பெற்றுப் படைகளுடன் கிளம்பி வந்து ராமரிடம் மன்னிப்புக் கேட்டான். சீதையைத் தேடி வானர வீரர்கள் எல்லா திசைகளுக்கும் அனுப்பப் பட்டனர்.

கிஷ்கிந்தா காண்டத்தை முடித்துக் கொண்டு சுந்தர காண்டத்துக்குப் போகலாம் வாருங்கள். அருணகிரிநாதர் சுந்தரகாண்டத்தை அற்புதமாக, ஒரே பாடலில் கூறியிருக்கிறார்.

சுக்ரீவன் தனது வானரப் படைகளிடம், ‘‘சில தூதர்கள் மேற்கில் தேடுங்கள். வடக்கே சிலர் தேடுங்கள். சிலர் கிழக்கே தேடுங்கள்!’’ என்று கூறி அனுப்பி வைத்தான்.

குடக்குச் (மேற்கே) சில தூதர் தேடுக
வடக்குச் சில தூதர் நாடுக
குணக்குச் (கிழக்கே) சில தூதர்
தேடுக வெனமேவி

- (உடுக்கத்துகில்) திருப்புகழ்

சீதையைத் தேடி மூன்று திசைகளுக்கும் படைகள் போயின. தெற்கு மட்டும் பாக்கி. அந்தத் திசைக்கு ஆஞ்சநேயர் அனுப்பப்பட்டார்.

கவச அனுமன், அறம் தழைத்த அனுமன் என்றெல்லாம் பல விதமாக அனுமாரை அழைத்த அருணகிரிநாதர், இந்தக் கட்டத்தில் ‘குறிப்பில் குறி காணு மாருதி என்று மற்றொரு திருநாமம் சூட்டுகிறார்.

குறிப்பிற் குறி காணு மாருதி
யினித் தெற்கொரு தூது போவது
குறிப்பிற் குறி போன போதிலும்
வரலாமோ

- (உடுக்கத்துகில்)-திருப்புகழ்

அற்புதமான வரிகள்! ஆஞ்சநேயருடன் ஏற்பட்ட முதல் சந்திப்பிலேயே அவரைப் பற்றி முழுமையாக உணர்ந்து கொண்டவர் ராமர்.

அதனால், சீதையைத் தேடிப் போன மற்றவர்களிடம் சீதையைப் பற்றிய அடையாளங்கள் மற்றும் தகவல்களைச் சொல்லாமல் அவற்றை ஆஞ்சநேயரிடம் மட்டும் சொன்ன ராமர், தனது மோதிரத்தையும் அவரிடம் கொடுத்து அனுப்பினார்.
ராமரின் அங்க லாவண்யத்தையும், சீதையைப் பிரிந்ததனால் அவருக்கு ஏற்பட்டுள்ள வருத்தத்தையும் குறிப்பால் உணர்ந்த மாருதி, ‘இப்படிப்பட்டவரின் மனைவி என்றால், அவர் எப்படி இருக்க வேண்டும்? என்றும் குறிப்பால் உணர்ந்து சீதையைத் தேடிக் கிளம்பினார்.

இனித் தெற்கொரு தூது போவது- இந்த வார்த்தைகளுக்கு வேறு விதமான பொருளும் உண்டு. ‘ஆஞ்சநேயன், வேறு வழியில்லாமல் தூது போகவில்லை. சந்தோஷத்துடன் எனக்காகத் தூது போனான் என ராமர் சொல்வதைப் போன்ற விளக்கமும் உண்டு.

இனித்து (மகிழ்வோடு) எற்காக (எனக்காக) ஒரு தூது போவது - மாருதி மன மகிழ்ச்சியுடன் தூது போனார். ஜாம்பவான், அங்கதன் ஆகியோரும் உடன் போனார்கள். பல இடங்களில் தேடியும் சீதை கிடைக்கவில்லை.

அனைவரும் வருத்தத்தில் ஆழ்ந்தபோது ஆஞ்சநேயர், ஆறுதல் கூறினார். அப்போது ஜடாயுவின் சகோதரனான சம்பாதி மூலம், சீதை இலங்கையில் இருப்பதாகத் தகவல் கிடைத்தது. இதைச் சொல்லும் அருணகிரிநாதரின் அற்புத வார்த்தைகள்:

குறிப்பில் குறிபோன போதிலும் வரலாமோ...

கருத்து : குறிப்பு விவரப்படி குறிப்பிட்ட சீதை கிடைக்கவில்லை. ஆனாலும் வீணாகத் திரும்பி வரலாமா?

மேலோட்டமாகப் பார்த்தால், இதுதான் அந்த வரியின் விளக்கம். ஆனால், இதற்கு வேறொரு பொருளும் உண்டு.

ராமர் சொன்னது - தந்தது என அனைத்தையும் தனக்குள் பதித்துக் கொண்ட மாருதி, இலங்கைக்குப் போனார். ராவணனின் அரண்மனையில், அவன் மனைவி மண்டோதரியைப் பார்த்ததும், ‘ஆஹா! சீதையைக் கண்டு விட்டேன்! என்று தவறாக நினைத்து விட்டார். அதாவது, குறிப்பு தவறி விட்டது. ஆனாலும் உடனே திரும்பி விடவில்லை. இதைத்தான், ‘குறிப்பில் குறி போன போதிலும் வரலாமோ என்று அருணகிரிநாதர் குறிப்பிடுகிறார்.

ஆஞ்சநேயரது செயல்களை மேலும் விவரிக்கிறார் அருணகிரி நாதர்:

அடிக்குத் திரகார ராகிய
அரக்கர்க் கிளையாத தீரனு(ம்)
மலைக்கப் புறமேவி மாதுறு வனமேசென்(று)
றருட்பொற் றிருவாழி மோதிர
மளித்துற் றவர்மேல் மனோகர
மளித்துக் கதிர்காம மேவிய பெருமாளே.

- (உடுக்கத்துகில்) திருப்புகழ்

கருத்து : அலை வீசும் கடல் கடந்து, முழு வஞ்சகர்களான அரக்கர்களை வெல்லும் வீரரான ஆஞ்சநேயர், சீதாதேவி இருந்த அசோக வனத்துக்குச் சென்றார். ராமர் தந்த தங்க மோதிரத்தை சீதாதேவியிடம் தந்தார். விவரங்களைச் சொன்னார். சீதாதேவி தந்த சூடாமணியைப் பெற்றுவந்து, ராமரிடம் அளித்து சீதையைப் பார்த்த தகவலைச் சொல்லி ராமருக்கு மகிழ்ச்சி ஊட்டினார். தானும் மகிழ்ந்தார்.

இந்த சுந்தர காண்டப் பாடலில் ஆஞ்சநேயர் இலங்கையைக் கொளுத்திய தகவலை அருணகிரிநாதர் சொல்லவில்லையே என்று தோன்றலாம். மற்றோர் இடத்தில் சொல்வதால் அவர், அதை இங்கு சொல்லவில்லை. இதோ அந்தத் தகவல்.

இலங்கையி லிலங்கிய
இலங்களு ளிலங்கரு
ளிலெங்கணுமிலங் கென
முறையோதி இடுங்கனல் குரங்கு

- (தலங்களில்) திருப்புகழ்

இலங்கையில், ஆஞ்சநேயர் நெருப்பு வைத்தபோது சில வீடுகள் தப்பித்தன. அது எப்படி என்பதை அழகாகவும் தெளிவாகவும் கூறும் பாடல் இது.

‘‘இலங்கையின் வீடுகளில் அருள் இல்லாதவற்றை நீ இருந்து பற்றிக் கொள்!’’ என்று சொல்லிச் சொல்லி, நெருப்பு வைத்தார் அனுமார்.

எனவேதான், அருள் உள்ளம் கொண்ட விபீஷணன் போன்றோரின் வீடுகள் தீக்கு இரையாகாமல் தப்பித்தன. சுந்தரகாண்டத்தை இத்துடன் நிறைவு செய்து, யுத்த காண்டத்தைப் பார்க்கலாம்.

சீதாதேவியை தரிசித்த ஆஞ்சநேயர், ராமரிடம் தகவல் சொன்ன பிறகு, நடந்த முக்கியமான நிகழ்ச்சி அணை கட்டியது. அதைச் சொல்லும் திருப்புகழ் வரிகள்:

கடிதுலாவு வாயு பெற்ற
மகனும் வாலி சேயுமிக்க
மலைகள் போட ஆழிகட்ட யிகலூர் போய்

- (துடிகனோய்) திருப்புகழ்

கருத்து : வேகமாக வீசும் வாயு பகவான் பெற்ற அனுமாரும், வாலி மகன் அங்கதனும் ஏராளமான மலைகளைக் கொண்டு வந்து போட, கடலில் அணை கட்டி, பகைவனான ராவணனுடைய ஊருக்குப் போனார்கள்.

அடுத்து விபீஷண சரணாகதி. அதைக் கூறும் திருப்புகழ்.

பருதிமகன் வாசல மந்த்ரி
அனுமனொடு நேர்பணிந்து
பரிதகழையாமுன்வந்து பரிவாலே
பரவிய விபீடணன் பொன்
மகுடமுடிசூட நின்ற... ரகுபதி இராமசந்த்ரன்

-(சுருளளகபார) திருப்புகழ்

கருத்து : சூரியனின் மகன் சுக்ரீவனுடைய அரண்மனையில் மந்திரியாக இருந்த அனுமார் உதவியால் அவருடன், ராமரை அடைந்து, ராமர் சந்நிதியில் வணங்கி, மிகுந்த அன்போடு துதி செய்தான் விபீஷணன். அவனுக்குப் பொன்னால் செய்யப்பட்ட மணிமகுடத்தைச் சூட்டினார் ராமர்.

இதன் பிறகு ராம - ராவண யுத்தம்தான். போர்க்களத்தில் ராமரது பாணங்களுக்கு ஈடு கொடுக்க முடியாமல் தவித்தான் ராவணன். அவன் உடலில் ராம பாணங்கள் தொளை (ஓட்டை) போட்டன. ராவணன் துடித்தான்.

திருப்புகழ் வரிகள் இதை விவரிக்கின்றன.

தலைமுடி பத்துத் தெறித்து ராவணன்
உடல் தொளைபட்டுத் துடிக்கவேயரு
தனுவை வளைத்துத் தொடுத்த வாளியன்

- (முலையை மறைத்து) திருப்புகழ்

அப்போதும் ராவணன் திருந்தவில்லை. ராமரை வணங்கி மன்னிப்புக் கேட்கவில்லை. தனது தவறை உணரவில்லை. அவன் தோள்களையும் பத்துத் தலைகளையும் அறுத்துத் தள்ளினார் ராமர்.

வணங்கச் சித்தமிலாத இராவணன்
சிரம்பத்துக் கெட வாளி கடாவியெ
மலங்கப் பொக்கரை யீடழி மாதவன்

-(இணங்கித்தட்பொடு) திருப்புகழ்

ராவணன் வாழ்வு முடிந்தது. விபீஷணன் அரசனானான். வெற்றித் திருமகளைப் பெற்ற ராமர், திருமகளின் அவதாரமான சீதையை அடைந்தார். இனி அருணகிரிநாதர் வாக்கு,

பாவியிராவணனார் தலைசிந்திச்
சீரிய வீடணர் வாழ்வுற மன்றற்
பாவையர்தோள் புணர் மாதுலர்

- (தோலோடு மூடிய) திருப்புகழ்

தன் உயிருக்கு நிகரான சீதாதேவியை வெற்றியுடன் மீட்டுக் கொண்டார் ராமர் என திருப்புகழின் மற்றொரு பாடலும் சொல்கிறது.

ஆவியேயான ஜானகியை
ஆடலுடன் அழைத்தேகொள் மாயோன்

- (தலைவலி) திருப்புகழ்

சீதையைச் சிறை மீட்ட ராமர், அயோத்தி வந்தார். பட்டாபிஷேகம் ஏற்று, ‘ராம ராஜ்யம் என்று எல்லோரும் புகழும்படி ஆட்சி புரிந்தார்.

...சீதை
சிறையிலாமலே கூடி
புவனி மீதிலே வீறு
திறமியான மா மாயன்

- (புலையனான) திருப்புகழ்

அருணகிரிநாதரின் வாக்கில் இருந்து வெளிப்பட்ட ராமாயணத்தைப் பார்த்தோம்.
சீதையுடன் சேர்ந்த ஸ்ரீராமர், நம் அனைவரின் குடும்பங்களிலும் முழுமையான அருளைப் பொழிய வேண்டுவோம்.

தொகுப்பு: பி.என்.பரசுராமன்

நன்றி - விகடன்3 கருத்துகள்: