பாம்பைத் தீண்டிய பாகவதன்
குலசேகர ஆழ்வார், இந்தப் பெயரைக்கேட்டாலே திருமாலின் அடியார்களுக்கு கற்கண்டை சுவைத்துச் சாப்பிடுவதைப் போன்ற உணர்வு சட்டென வந்து விடும். சேரநாட்டை ஆட்சி புரிந்த அரசன் ஆட்சி அதிகாரத்தின் மீது அதிக பற்றில்லாமல் எம்பெருமான் நாராயணன் மீது அதிக ஈடுபாடு கொண்டு அதன் பயனாக காலத்தால் அழிக்க முடியாத, மறக்க முடியாத 105 பெருமாள் திருமொழியாக அதி அற்புத பாசுரங்களை படைத்திருக்கிறார். தமிழ் மீது இவருக்கு இருந்த காதலை சொல்லி மாளாது! அவருடைய எடுத்துக்காட்டு, வர்ணனை, வார்த்தைகளை கையாலும் லாவகம் அடேயப்பா... எம்பெருமான் மீது ஏகப்பட்ட காதல். சாம்பிளுக்கு ஒரு சூப்பர் பாசுரம்.
‘இருள் இரியச் சுடர்மணிகள் இமைக்கும் நெற்றி
இனத் துத்தி அணி பணம் ஆயிரங்கள் ஆர்ந்த
அரவு அரசப் பெரும்சோதி அனந்தன் என்னும்
அணி விளங்கும் உயர் வெள்ளை அணையை மேவி
திருவரங்கப் பெருநகருள் தெள்நீர்ப் பொன்னி
திரைக் கையால் அடி வருடப் பள்ளி கொள்ளும்
கருமணியை, கோமளத்தைக் கண்டு கொண்டு என்
கண் இணைகள் என்றுகொலோ களிக்கும் நாளே.’
திருவரங்கத்தில் படுத்துக் கிடக்கிற பெருமானை காண விரும்பும் ஏக்கத்துடன் பாசுரத்தை தொடங்குகிறார். நமக்கெல்லாம் எதைஎதையோ நினைத்து ஏக்கம் வந்து அதனால் தூக்கம் தொலைந்து துக்கம்தான் மேலிடுகிறது. இதுதானே யதார்த்தமான உண்மை. அந்த துக்கத்திற்கும், தூக்கத்திற்கும் விடுதலை கிடைக்கும் வழியில் நன் மன மாசுகளை அகற்றும் விதத்தில் அரங்கனைக் காண நம்மை கைபிடித்து அழைத்துப் போகிறார் குலசேகர ஆழ்வார். எப்படி இருக்கிறானாம் அரங்கன்?
நெற்றியில் ஒளி பளிச்சிட, ஆயிரம் அணிகள் அணிந்த அரவரசன் ஆதிசேஷன் மேல் சயனித்திருக்க, திருவரங்கத்தில் பாயும் காவிரி நதியின் அன்றைய மேன்மையை சொல்லுகிறார்.
திரைக்கையால் அடிவருடப் பள்ளி கொள்ளும் என்கிறார். அரங்கனின் காலை வருடிக்கொடுக்கிற அளவிற்கு பொன்னிநதி இருந்திருக்கிறது. அவர் வாழ்ந்த காலத்தில் காவிரிக்கு நீர்வரத்து சிக்கல் இல்லை. கர்நாடக மாநிலத்தில் கையேந்த வேண்டிய நிலை இல்லை. மாதம் மும்மாரி மழை பொழிந்தது. தர்மங்களுக்கு எந்த பங்கமும் இல்லை. மணல் மாபியா கும்பல் இல்லை. கொள்ளிடத்திலும், காவிரியிலும், இருகரைகளிலும் நுரை பொங்க எங்கும் தண்ணீர். அது ஒரு காலம்.
ஆழ்வாரின் பாசுரத்திற்கு மீண்டும் வருவோம். அரங்கனை குலசேகராழ்வார் வர்ணிப்பதே தனி அழகு. கருமணி, கோமளம் எனக் கொண்டாடுகிறார், சேரநாட்டுத் தலைவர். ஆட்சி அதிகார போதையை விட்டுவிட்டு, அந்த சுகத்தை அனுபவிக்க முடியாமல் அரங்கனின் அழகில் ஒருவித மயக்கத்தையே வைத்து இருக்கிறார்.
என் இரண்டு கண்களால் அரங்கனை என்றைக்கு காணும் பாக்கியம் கிடைக்கும் என ஏங்குகிறார். எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த குலசேகர ஆழ்வார் பார்த்த அரங்கனின் அழகு நாளுக்குநாள் கூடிக் கொண்டுதான் இருக்கிறது. திருவரங்கம் என்ன சாதாரணமான ஒன்றா? பூலோக வைகுண்டம் நூற்றி எட்டு திவ்யதேசங்களின் தலைமைப் பீடம். மதுரகவி ஆழ்வாரைத் தவிர மற்ற ஆழ்வார்கள் அழுதும் தொழுதும் அரங்கனை ஏற்றிப் போற்றிய புண்ணியத் தலம். நம் தீவினைகளை வேறோடும், வேரடி மண்ணோடும் பிடுங்கி எறியும் நம்பெருமாள். இப்படிப்பட்ட அரங்கமா நகருளானை எப்படி பார்க்காமல் இருக்க முடியும்? வேதனையால் துடிக்கிறார் ஆழ்வார். மற்றொரு பாசுரத்தில் தன் எண்ண ஓட்டத்தை மன ஓட்டமாக விவரிக்கிறார் குலசேகர ஆழ்வார்.
‘தேட்டு அருந் திறல் தேனினைத் தென்
அரங்கனைத் திருமாது வாழ்
வாட்டம் இல் வனமாலை மார்வனை
வாழ்த்தி மால் கொள் சிந்தையராய்
ஆட்டம் மேவி அலந்து அழைத்து அயர்வு
எய்தும் மெய்யடியார்கள்தம்
ஈட்டம் கண்டிடக் கூடுமேல் அது
காணும் கண் பயன் ஆவதே.’
எம்பெருமான் அரங்கன் எத்தகையவன் என்பதற்கு, ஒரு பள்ளிக்கூடத்தில் பாலபாடம் நடத்துவதுபோல் நடத்துகிறார். அவனை முயற்சியாலும், அறிவின் துணைகொண்டும் தேட முடியாது. அரியவன். அவன் தேனைப்போல் இனிப்பானவன். திருமகள் நித்யவாசம் செய்யும் அதி அற்புதமானவன். அவள்மேல் அன்பு கொண்ட மனத்துடையவராய், ஆடிப்பாடி, வருந்தி, வாய் படைத்ததன் பயனாக, அவன் பெயரைச் சொல்லிச் சொல்லி மெய்மறந்திருக்கும் அடியார்கள் கூட்டத்தைக் காண்பதே இந்தக் கண்பெற்ற பயன் என்கிறார் மிகவும் உருக்கமாக. வைணவ உலகம் இதை கருத்தில் கொண்டுதான், அடியார்கள் வாழ அரங்கநகர் வாழ என்று நாள்தோறும் கொண்டாடி மகிழ்கிறது.
இந்தப் பாசுரம் ரொம்பவும் விசேஷமானது. அரங்கனே உகந்து கேட்ட திருமொழி இது. திருப்புன்னை மரத்தின் கீழ் தேட்டருந்திறல் என்னும் இந்த பெருமாள் திருமொழிப் பாசுரத்தை அரங்கநாதன் கேட்டருளியதாக முதல் குலோத்துங்க சோழன் ஆட்சிக் காலத்து கல்வெட்டு ஒன்று கூறுகிறது. குலசேகர ஆழ்வார் பாசுரங்களில் உள்ள பொதுத்தன்மை என்ன தெரியுமா? யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம். இந்த வரிகள்தான் அவர் மனதில் ஜீவ உற்றாக ஓடிக் கொண்டே இருக்கிறது. அதன் வெளிப்பாடு தான் எப்பொழுதும் இறை அடியார்கள், இறை சிந்தனை என்றே அவர் மனம் சுற்றி சுழன்று கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது. திருமால் அடியார்கள் எப்படி இருக்க வேண்டும். வைணவம் என்பது வெறும் வார்த்தைகளில் இல்லை. அது வாழும் நெறி என்கிறார் ஆழ்வார்.
‘மறம் திகழும் மனம் ஒழித்து வஞ்சம் மாற்றி வன் புலன்கள் அடக்கி இடர்ப் பாரத் துன்பம்
துறந்து இரு முப்பொழுது ஏத்தி எல்லை இல்லாத் தொல் நெறிக்கண் நிலைநின்ற தொண்டரான
அறம் திகழும் மனத்தவர்தம் கதியை பொன்னி அணி அரங்கத்து அரவணையிற் பள்ளிகொள்ளும்
நிறம் திகழும் மாயோனை கண்டு என் கண்கள் நீர் மல்க என்றுகொலோ நிற்கும் நாளே.’
‘‘பாவ எண்ணங்களை நீக்கி, வஞ்சனைகளைப் போக்கி ஐம்புலன்களையும் அடக்கி மிகவும் துக்கத்தை விளைவிப்பதான பழவினைகளாகிய பெருஞ் சுமையை தூக்கிஎறிந்து நாளும் பொழுதும் அவன் நினைவாகவே அதாவது, ஆண்டவனையே சரண் புகல வேண்டும்’’ என்கிறார். இந்தப் பாசுரத்தின் முடிவில் ஒரு வரி வரும். நிறம் திகழும் மாயோனை, கண்டு என் கண்கள் நீர்மல்க என்று கொலோ நிற்கும்நாளே? அரங்கனைப் பார்க்க மாட்டோமா என்ற நினைவு, துக்கம் தொண்டையை அடைத்துக் கொள்கிறது. கண்களில் நீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறதாம். பரமனே கதி என்ற ஒருவரால் மட்டுமே இந்த அனுபவத்தைப் பெற முடியும். அவருக்குத்தான் இந்த நிலை சாத்தியமாகும். அகமும் புறமும் அவனே சிந்தனையில், செயலில் எல்லாம் அரங்கனே என்று இருப்பவரால் மட்டுமே இப்படிப்பட்ட உருக்கமான பாசுரங்களைப் படைக்க முடியும்.
இந்த கலிகாலத்தில் இதெல்லாம் சாத்தியமா? 2017ல் அவரவர்கள் கொடுக்கிற உள்குத்துகளை தாங்கிக் தாங்கியே உடம்பு புண்ணாய் போய்விடுகிறது என பலரும் சிந்திக்கக் கூடும். குலசேகர ஆழ்வார் அளவிற்கு வேண்டாம், அதில் ஓரளவிற்காவது நம் மனதை அந்த மாலவனிடம், மாயவனிடம் திருப்ப வேண்டும் அல்லது திருப்புவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். மண்ணாசை, பொன் ஆசை, பெண் ஆசையால் எத்தனை நாள்தான் நாம் வெந்து சாம்பல் ஆவது? இதற்கெல்லாம் ஒரு விடிவு வேண்டாமா? பொருள் தேடலோடு, சிறிது அருளையும் தேட வேண்டாமா? சதா சர்வகாலமும் பெருமாள், ராமாயணம் கிருஷ்ணானுபவம் என்று குலசேகர ஆழ்வார் உடலாலும் உள்ளத்தாலும் அலைந்து திரிந்து கொண்டிருப்பதை பார்க்க அவருடைய அரண்மனையில் இருக்கும் சிலருக்குப் பிடிக்கவில்லை.
நல்ல விஷயம் செய்கிறவர்களுக்கு மத்தியில் அதை தடுக்கும் அரண்மனை விதூஷர்கள் குலசேகரர் காலத்திலும் நிறைய பேர் இருந்திருக்கிறார்கள். அரசசபையில் ரத்ன மாலை ஒன்று திருடு போனது. அதை உங்களைப் பார்க்க வருகிற இந்த பக்த கோஷ்டியினர்தான், அதில் இருக்கும் ஒருவர்தான் எடுத்திருக்கிறார் என பழி சுமத்த, குலசேகர ஆழ்வார் எந்த பதட்டமும் இல்லாமல், ‘ஒரு குடத்தில் பாம்பை போட்டு எடுத்து வா’ என கட்டளையிட்டார். பாம்புக் குடத்தில் கையை விட்டார், ஆழ்வார். பாம்பு அவரைத் தீண்டவில்லை.
அப்பொழுதுதான் பரமனின் அடியார்கள் ஒருபோதும் இப்படிப்பட்ட கீழ்த்தரமான வேலையில் ஈடுபட மாட்டார்கள் என்று போட்டுக் கொடுத்த அந்த புண்ணியவான்களுக்கு பாடம் எடுத்தாராம். இந்த நிகழ்ச்சியை நாதமுனிகளின் சீடரான வைணவ மாமுனி மணக்கால் நம்பி என்பவர் தனிப்பாடலாகவே எழுதியுள்ளார். பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள். ஆனால், குலசேகரின் நெஞ்சில் வஞ்சம் இல்லை. அதனால் பாம்பிடமும் விஷம் இல்லை. இதற்கெல்லாம் காரணம் சத்தியத்திற்கு சாட்சிகள் தேவையில்லை என்பார்கள். சத்தியத்திற்கு சாட்சி என்ன தெரியுமா? சத்தியம்தான்.
நன்றி - தினகரன்