ஞாயிறு, 10 நவம்பர், 2019

ஶ்ரீமத் பாகவதம் - 68

மூன்றாவது ஸ்கந்தம் – இருபத்து மூன்றாவது அத்தியாயம்

(கர்த்தமப்ரஜாபதி தேவஹூதியுடன் காமஸுகங்களை அனுபவித்தல்)

ஸ்ரீமைத்ரேயர் சொல்லுகிறார்:- தாய் தந்தைகளாகிய மனுவும் சதரூபையும் புறப்பட்டுப் போனபின்பு, பதிவ்ரதையும் மனக்கருத்தை அறிவதில் வல்லவளுமாகிய தேவஹூதி, ப்ரபுவாகிய ருத்ரனைப் பார்வதி ஆராதித்தாற்போல், கர்த்தமரைப் ப்ரீதியுடன் ஆராதித்துக் கொண்டு வந்தாள். வாராய் வல்லமையுள்ள விதுரனே! அந்த மனுவின் புதல்வியாகிய தேவஹூதி மனவூக்கம் அற்றிருக்கையில்லாமல் அவருடைய கட்டளைப்படி நடப்பதில் முயன்றவளாகி காமம், கபடம், த்வேஷம், லோபம், நிஷித்த கார்யங்களைச் செய்கை, கர்வம் இவை முதலான தோஷங்களையெல்லாம் துறந்து, விச்வாஸம் மனத்தூய்மை கௌரவம் ஐம்புலன்களை அடக்கி ஆள்கையாகிற தமம் சச்ரூஷை ஸ்னேஹம் இனிய உரை இவைகளால் தேஜிஷ்டராகிய அம்முனிவரை மனமகிழச் செய்தாள், தேவர் ச்ரேஷ்டராகிய அந்தக் கர்த்தமர் அங்ஙனம் தன்னைத் தொடர்ந்து பணிவிடை செய்கின்றவளும் பர்த்தாவையே மேலான தெய்வமாக நினைத்து அவனிடத்தினின்று புதல்வர்களைப் பெறுகையாகிற நன்மையை விரும்புகின்றவளும் வ்ரதங்களை அனுஷ்டிப்பதனால் வருந்தி நெடுநாளாய் வ்ரதானுஷ்டானத்தில் ஆழ்ந்திருக்கின்றவள் ஆகையால் இளைத்திருப்பவளுமாகிய அந்த மனுவின் புதல்வியை (தேவஹூதியைப்) பார்த்து ப்ரேமத்தினால் கண்டம் தழதழத்துச் சொல்ல நினைத்த வார்த்தை வெளிவராமல் வருத்தமுற்றவராகிக் கருணை கூர்ந்து இங்ஙனம்மொழிந்தார்.

கர்த்தமர் சொல்லுகிறார்:- வாராய் பெருந்தன்மையுடையவளே! மேலான சுச்ரூஷையாலும் சிறந்த பக்தியாலும் நீ என்னை நன்கு வெகுமதித்தனை. உன்னுடைய சுச்ரூஷையாலும் பக்தியாலும் இப்பொழுது நான் ஸந்தோஷம் அடைந்தேன். ப்ராணிகளுக்கு தேஹம் மிகவும் அன்பிற்கிடமாயிருப்பது; அது யுக்தமே. அப்படிப்பட்ட தேஹத்தை நீ எனக்காகப் பொருள் செய்யாமல் வருத்தி உபேக்ஷித்தனை. தேஹம் மிகவும் ப்ரியமானதென்றும் இதை நான் எப்படி வருத்துவேனென்றும் அதைச் சிறிதும் பாராட்டாமல் என்னுடைய சுச்ரூஷையில் ஆழ்ந்து உபேக்ஷித்தனை, பெண்மணீ! நான் எனது வர்ணாச்ரமத்திற்குரிய தர்மங்களில் நிலைநின்று கர்மயோகம் ஸமாதி (மன ஏக்கத்துடன் த்யானித்தல்) பகவத் உபாஸனம் ப்ரக்ருதியைக் காட்டிலும் வேறுபட்ட ஆத்மஸ்வரூபத்தின் உண்மையை அறிகையாகிற ஆத்மயோகம் இவைகளால் பகவானுடைய அனுக்ரஹம் பெற்றவன். அந்த பகவானுடைய அனுக்ரஹத்தினால் போக்ய வஸ்துக்களும் போகத்திற்கு வேண்டிய கருவிகளும் போகஸ்தானங்களும் நான் நினைத்தபடி விளையுமாறு எனக்கு ஸ்வாதீனமாயிருக்கின்றன. இத்தனை காலமாய் எனக்கு சுச்ரூஷை செய்தமையால் உனக்கும் அவை ஸ்வாதீனமாயின. அவற்றில் எவ்வகை பயமும் உண்டாகாது. ஆகையால் அவை சோகத்திற்கிடமல்லாதவை. உனக்கு திவ்ய த்ருஷ்டியைக் கொடுக்கின்றேன். நீ அவற்றைக் காண்பாயாக.உலகத்தில் எல்லோரும் அனுபவிக்கிற போக்ய வஸ்துக்களைக் காட்டிலும் என் தவமஹிமையால் ஏற்பட்ட போக்ய வஸ்துக்கள் விலக்ஷணமாயிருப்பவை, உலகத்திலுள்ள வஸ்துக்களெல்லாம் அற்பங்களாயிருப்பவை. நீ நெடுநாள் என்னை ஆராதித்தமையால் ஸித்தி பெற்றனை. என் தவ மஹிமையால் ஏற்பட்ட அந்த போக விஸ்தாரங்களை நீ அனுபவிப்பாயாக. அவை மஹாராஜாக்களும் ஆசைப்படக்கூடிய ஸம்ருத்தியுடையவை. உலகத்திலுள்ள வஸ்துக்களெல்லாம் “இவற்றைக்கொண்டு நாம் சில ப்ரயோஜனங்களைப் பெறுவோம்” என்று நினைக்கும்பொழுது பகவானுடைய புருவ நெரிப்பு நேர்ந்து உடனே பாழாகக் கூடியவை. ஆகையால் அவை உபயோகமற்றவை. என் தவமஹிமையால் ஏற்படுமவையெல்லாம் பகவானுடைய கடாக்ஷத்திற்கு இணங்கினவை ஆகையால் எவ்வகையிலும் அழியாதவை.

ஸ்ரீமைத்ரேயர் சொல்லுகிறார்:- அந்தக் கர்த்தம முனிவர் ஆச்சர்ய சக்திகளெல்லாம் அமைந்தவர்; பேரறிவுடையவர். அம்முனிவர் இங்ஙனம் மொழியக்கேட்டு தேவஹூதி அவருடைய விசித்ரமான ஜ்ஞான சக்திகளை அறிந்து இவரால் நம் விருப்பம் ஈடேறுமென்று நினைத்து மனவருத்தமெல்லாம் தீரப்பெற்றாள். அப்பால் அப்பெண்மணி வணக்கத்தினாலும் ப்ரேமத்தினாலும் மொழி தழதழக்கப் பெற்றுச் சிறிது வெட்கம் நடையாடுகின்ற கண்ணோக்கத்தினால் விளங்கும் புன்னகை அமைந்த முகமுடையவளாகி அம்மஹானுபாவரைப் பார்த்து இங்ஙனம் மொழிந்தாள்.

தேவஹூதி சொல்லுகிறாள்:- வாரீர் அந்தணர் தலைவரே! வீணாகாத ஆச்சர்ய சக்திகளும் விசித்ரமான ஜ்ஞானங்களும் அமைந்த உம்மிடத்தில் நீர் சொல்லுவதெல்லாம் ஸித்தமே. இது எனக்குத் தெரியும். ஆ! இது என் பாக்யமே. வாரீர் பர்த்தாவே! நீர் முன்பு “சில காலம் இவளுடன் கலந்திருப்பேன்” என்று மொழிந்தீரே. அக்காலம் எனக்கு இப்பொழுது நேருமாக. சிறப்புற்ற கணவனிடத்தில் புதல்வர்களைப் பெறுகையே பதிவ்ரதைகளான ஸ்த்ரீகளுக்கு மேலான லாபம். ஆகையால் நான் அந்த ஸமயத்தை எதிர்பார்க்கின்றேன். “பிள்ளை பிறக்கும்வரையில் சிலகாலம் நான் இவளுடன் கலந்து காம ஸுகங்களை அனுபவித்துப் பிள்ளைகள் பிறந்தபின்பு துறவறம் பெறுவேன்” என்று மொழிந்தீர். அந்தப்படி என்னுடன் நீர் கலந்திருக்கும் காலத்தை நான் எதிர்பார்க்கின்றேன். வாரீர் வல்லவரே! நீர் அங்ஙனம் காம ஸுகங்களை அனுபவிப்பதற்கு வேண்டிய ஸம்பாரங்களைக் காம தந்த்ரங்களில் சொல்லிய ஏற்பாட்டின்படி ஸித்தப்படுத்துவீராக. நான் இதுவரையில் உம்முடைய அருளை எதிர்பார்த்துக்கொண்டு உமக்குச் சுச்ரூஷை செய்பவளாகி என் சரீரத்தைப் பாராட்டாமலே இருந்தேன். அதனால் என் சரீரம் மிகவும் இளைத்திருக்கின்றது. இப்பொழுது நீர் என் மனோரதத்தை மேற்கிளப்பினீர். அதனால் நான் காமவிகாரம் உண்டாகப்பெற்று அவ்விகாரத்தின் மிகுதியால் வருந்துகின்றேன். நான் உம்முடன் காம ஸுகங்களைஅனுபவிக்க வேண்டுமென்னும் விருப்பம் மேலெழப்பெற்று அது நேராமையால் சரீரம் இளைத்து வருந்துகின்றேன். அப்படிப்பட்ட என் சரீரம் எதனால் அவ்வருத்தங்களெல்லாம் தீர்ந்து ஸுகப்படுமோ, அப்படிப்பட்ட ஏற்பாடுகளை நடத்துவீராக. நாம் காம ஸுகங்களை அனுபவிப்பதற்குரிய க்ருஹத்தை நீர்மிப்பீராக. அங்ஙனமே போக்ய வஸ்துக்களையும் போகத்திற்கு வேண்டிய கருவிகளையும் படைப்பீராக.

ஸ்ரீமைத்ரேயர் சொல்லுகிறார்:- வாராய் விதுரனே! இங்ஙனம் தேவஹூதியால் வேண்டப்பெற்ற கர்த்தமர் அன்பிற்கிடமான அப்பெண்மணியின் ப்ரியத்தை நிறைவேற்ற விரும்பி அந்த க்ஷணமே நினைத்தபடி செல்லும்படியான ஓர் விமானத்தை உண்டாக்கினார். அவ்விமானம் விரும்பினவற்றையெல்லாம் கறக்கும் திறமை அமையப் பெற்றது. மனுஷ்யர்களுக்குக் கிடைக்க அரியது. அதில் ஸமஸ்த ரத்னங்களும் இழைத்திருந்தன. ஸமஸ்த ஸம்பத்துக்களும் எக்காலத்திலும் மாறாமல் ஸம்ருத்தமாயிருக்கும். அது ரத்ன ஸ்தம்பங்களால் அலங்கரிக்கப்பட்டது. அதில் திவ்யமான வஸ்துக்கள் நிறைந்திருக்கும். ஸர்வ காலங்களிலும் ஸுகத்தையே விளைவிக்கும். அது பட்டு வஸ்த்ரங்களால் இயற்றின சிறிய கொடிகளாலும் விசித்ரமான பெருப்பெரிய கொடிகளாலும் அலங்காரம் செய்யப் பெற்று அழகாயிருக்கும். விசித்ரமான புஷ்பங்களால் கோர்க்கப்பட்டவைகளும் மதுரமாய்க் கூவுகின்ற வண்டினங்கள் நிறைந்தவைகளுமான பூமாலைகளாலும் வெண் பட்டுக்களாலும் பூச்சிப் பட்டுக்களாலும் மற்றும் பலவகை வஸ்த்ரங்களாலும் அலங்காரமுற்று விளங்கும். அதில் ஒன்றின்மேல் ஒன்றாக அறைகள் ஏற்பட்டிருக்கும். அவ்விடங்களிலெல்லாம் தனித்தனியே படுக்கைகள் ஸித்தஞ் செய்யப்பெற்று அழகாயிருக்கும். அங்ஙனமே மஞ்சங்களும் விசிறிகளும் ஆஸனங்களும் ஆங்காங்குத் தனித்தனியே அமைக்கப்பெற்று ரமணீயமாயிருக்கும். மற்றும் அந்தந்த இடங்களில் சுவறுகளில் எழுதின பலவகையான சித்ரங்களால் அவ்விமானம் சோபிக்கும். மற்றும் இந்த்ரநீல ரத்னங்களால் பூமிகளைப் படுத்து அவற்றில் பவழங்களால் திண்ணைகள் ஏற்பட்டிருக்கும். த்வாரங்களின் இடைக்கட்டுகள் பவழங்களால் இயற்றினவைகளாக அழகாயிருக்கும். வாசற் கதவுகளில் வஜ்ரமணிகள் இழைத்திருக்கும். அவ்விமானத்தின் சிகரங்கள் இந்த்ரநீல ரத்னங்களால் இயற்றப் பெற்றவை. அந்தச் சிகரங்களின் நுனிகளில் ஸ்வர்ணமயமான கலசங்கள் ஸ்தாபிக்கப்பட்டிருக்கும். வஜ்ரமணிகளால் இயற்றின சுவறுகளில் கண்விழித்துக் கொண்டிருப்பவைபோல் பளபளவென்று ஜ்வலிக்கின்ற பத்மராக ரத்னங்கள் இழைக்கப்பட்டிருக்கும். விலையில்லாத விசித்ரமான மேற்கட்டுகளும், விலையில்லாத ஸ்வர்ணமயமான தோரணங்களும் அமைக்கப்பட்டிருக்கும். அவ்விமானத்தில் ஆங்காங்கு ஹம்ஸங்கள் போலும், புறாக்கள் போலும் இயற்றிவைக்கப் பட்டிருக்கிற பொம்மைகளைத் தந்தமினமாக ப்ரமித்து உண்மையான ஹம்ஸங்களும் புறாக்களும் கூட்டம் கூட்டமாய் ஏறுவதும் இறங்குவதுமாய்க் கூவிக் கொண்டிருக்கும். அவ்விமானத்தில் விளையாடும் இடங்களும் ஸம்போகத்திற்குரிய இடங்களும் முற்றங்களும் வெளிவாசற்களும் ஸுகமாயிருக்கும்படி ஏற்படுத்தப்பட்டிருந்தன. அவ்வவ்விடங்கள் எல்லாம் மிகவும் அழகாய் இருக்கின்றமையால் அதை இயற்றின ஆச்சர்ய சக்தியுடைய அம்முனிவர்க்கும் ஆச்சர்யத்தை விளைவிப்பனவாய் இருந்தன. இங்ஙனம் மிகவும் ஆச்சர்யமான விமானத்தை அம்முனிவர் நிர்மித்துக்காட்ட, அதை அந்த தேவஹூதி அவ்வளவு ஸந்தோஷமில்லாத மனத்துடன் காண்பதை அறிந்து ஸமஸ்த ப்ராணிகளுடைய மனக்கருத்தையும் எளிதில் அறியும் திறமையுடைய கர்த்தமர் அவளைப் பார்த்து, தானே இங்ஙனம் மொழிந்தார்.

கர்த்தமர் சொல்லுகிறார்:- வாராய் பயப்படும் தன்மையுடையவளே! இந்த ஸரஸ்ஸு பரிசுத்த ஸ்வபாவனாகிய பகவானால் நிர்மிக்கப்பட்டது. இது புண்ய தீர்த்தங்களில் சிறப்புற்றது. மானிடவர் ஆசைப்படும் விருப்பங்களையெல்லாம் கைகூடுவிக்கும் திறமையுடையது. இது பகவானுடைய ஆனந்த நீர்களால் உண்டாயிற்று. ஆகையால் இது பிந்துஸரஸ் என்னும் பேர்பெற்றது. இந்த பிந்து ஸரஸ்ஸில் ஸ்னானம் செய்வாயாக. ஸ்னானம் செய்து இந்த விமானத்தில் ஏறிக்கொள்வாயாக என்றார்.

ஸ்ரீமைத்ரேயர் சொல்லுகிறார்:- கருசெய்தல் போன்ற கண்களையுடைய அந்த தேவஹூதி பர்த்தாவான கர்த்தமருடைய வசனத்தை அங்ஙனமே அங்கீகரித்து அழுக்கடைந்த வஸ்த்ரத்தையும் ஒரே பின்னலாகப் பிணைத்த தலைமயிர்களையும் அழுக்கடைந்து நிறம்மாறின கொங்கைகள் அமைந்த அங்கத்தையும் தரித்தவளாகவே தெளிந்த ஜலமுடையதும் ஸரஸ்வதியால் சூழப்பட்டதுமாகிய அந்த பிந்து ஸரஸ்ஸில் ஸ்னானம் செய்யும் பொருட்டு ப்ரவேசித்தாள். அங்ஙனம் ஜலத்தில் இறங்கி மூழ்கின அம்மடந்தையர்மணி அங்கு க்ருஹங்களில் திகழ்கின்ற ஆயிரம் கன்னிகைகளைக் கண்டாள். அந்தக் கன்னிகைகள் அனைவரும் இளம்பருவம் உடையவர்கள். எல்லோரும் கருநெய்தல் புஷ்பத்தின் கந்தம் போன்ற தேஹத்தின் கந்தமுடையவர். அவ்வாயிரம் பெண்களும் அந்த தேவஹூதியைக் கண்டவுடனே ஜலத்திலுள்ள க்ருஹத்தினின்று வெளிப்பட்டுவந்து கைகளைக் குவித்துக் கொண்டு நாங்கள் உனது வேலைக்காரிகள். எங்களை இஷ்டப்படி நியமிப்பாயாக. “நாங்கள் உனக்கு என்ன ஊழியஞ் செய்ய வேண்டும்?” என்றார்கள். இங்ஙனம் மொழிந்து உடனே ஸ்னானஞ் செய்வதற்குரிய நன்மணமுடைய எண்ணெய் முதலியவற்றால் அவளுக்கு ஸ்னானம் செய்வித்து கம்பீரமனமுடைய அந்த தேவஹூதிக்கு நிர்மலமான வெண்பட்டு வஸ்த்ரங்களைக் கொடுத்தார்கள். அங்ஙனமே விலையுயர்ந்து மிகுந்த ஒளியும் அமைந்து அவள் மனத்திற்கு மிகவும் இனியவைகளுமான ஆபரணங்களையும் அறுசுவையமைத்த மேலான அன்னத்தையும் அம்ருதம்போல் மதுரமான மத்யத்தையும் இவளுக்குக் கொடுத்தார்கள். இந்த தேவஹூதி பூமாலையைச் சூடி நிர்மலமான வஸ்த்ரத்தை உடுத்து நிர்மலமாகி மங்களங்கள் நிரம்பியதும் கன்னிகைகளால் “மிகவும் அழகாயிருக்கிறது” என்று வெகுமதிக்கப் பெற்றதுமான தன் தேஹத்தைக் கண்ணாடியில் பார்த்துக் கொண்டாள். அவளுடைய தேஹம் எண்ணெய் தேய்த்து அழுக்கெல்லாம் போகும்படி அரைப்பிட்டு அலம்பி சிரஸ்னானம் செய்து ஸமஸ்த ஆபரணங்களையும் அணிந்து ரமணீயமாயிருந்தது. மற்றும் கழுத்தில் பதகங்களும் கால்களில் அழகாய் ஒலிக்கின்ற ஸ்வர்ணமயமான சிலம்புத்தண்டைகளும் தரித்து நிதம்பங்களில் பொன்னால் இயற்றினதும் பலவகை ரத்தனங்கள் இழைக்கப்பெற்றதுமான அரை நூல்மாலையும் இட்டுக் குங்குமம் முதலிய மங்கள த்ரவ்யங்களைப் பூசிவிலையுயர்ந்த ஹாரங்களால் விளக்கமுற்றிருந்தது; அழகான புருவங்களும் அழகான பற்களும் மனத்திற்கு இனிதாகி நிகுநிகுப்புற்ற கடைக்கண்கள் அமைந்து தாமரை மலரோடு சண்டை செய்பவைபோன்ற கண்களும் கறுத்த முன்னெற்றி மயிர்களும் ஆகிய இவைகளால் விளங்குகின்ற முகமுடையதுமாயிருந்தது. அத்தகைய தன் தேஹத்தை அவள் கண்ணாடிப்புறத்தில் கண்டுகளித்தாள். இங்ஙனம் அழகியதான தேஹத்தைக் கண்டவுடன் ரிஷிச்ரேஷ்டரும் தனக்கு அன்பருமான பர்த்தாவை நினைத்தாள். நினைத்தவுடனே தன் பர்த்தாவான கர்த்தம ப்ரஜாபதி எவ்விடத்தில் இருந்தாரோ அதே இடத்தில் தானும் ஸ்த்ரீகளோடுகூட உட்கார்ந்திருக்கக் கண்டாள். அவள்தான் நினைத்தமாத்ரத்தில் அங்ஙனம் அனேகமாயிரம் ஸ்த்ரீகளோடு தன் பர்த்தாவின் எதிரில் இருக்கக்கண்டு அவருடைய யோக ப்ரபாவத்தைப்பற்றி “இப்படியும் ஒருயோக ப்ரபாவம் உண்டோ” என்று வியப்புற்றாள். தீரனாகிய விதுரனே! (காம க்ரோத லோப மத மோஹ மாத்ஸர்யங்களென்கிற சத்ருக்கள் அறுவரையும் வென்ற மஹாதீரனே!) அந்தக் கர்த்தமர், சரீரத்தின் அழுக்கெல்லாம் போகும்படி மங்கள ஸ்னானம் செய்து முன்பிருந்த உருவத்தைவிடப் புதியதுபோல் மிகவும் அழகான உருவத்துடன் திகழ்கின்றவளும் அழகான வஸ்த்ரங்களை உடுத்துப் பருத்துருண்டு ஒன்றோடொன்று உறைந்து கொண்டு ரமணீயமாய்த் திகழ்கின்ற கொங்கைகளை வஸ்த்ரத்தின் நுனியால் அடிக்கடி மறைத்துக்கொண்டு அனேகமாயிரம் வித்யாதரப் பெண்களால் பணியப்பெற்று நிற்கின்ற அந்த தேவஹூதியைப் பார்த்து மனவிருப்பமுற்றவராகி அவளை விமானத்தில் ஏற்றிக்கொண்டார். சிறிதும் மாறாத யோக ப்ரபாவமுடைய அம்முனிவர் அன்பிற்கிடமான பார்யையுடன் கூடி வித்யாதர ஸ்த்ரீகளால் தன் சரீரத்திற்கு வேண்டிய சுச்ரூஷைகள் செய்யப்பெற்று அவ்விமானத்தில் “ஏறிக்கொண்டு, கண்ணுக்கினிய காட்சியுடையவனும் நக்ஷத்ரங்களால் சூழப்பட்டவனுமாகிய சந்த்ரன் ஆம்பல் புஷ்பங்களை மலரச் செய்துகொண்டு விளங்குவதுபோல் ப்ரகாசித்தார். நிரைநிரையாய்ப் பெண்கள் சூழப்பெற்ற அம்முனிவர் பார்யையுடன் அவ்விமானத்தில் ஏறிக்கொண்டு லோகபாலர்கள் எண்மரும் விளையாடும் இடமாகிய மேருபர்வதத்தில் திகழ்கின்றவைகளும் காமவிகாரத்தை விளைப்பதும் குளிர்ந்து நன்மணம் அமைந்து மெதுவாக வீசுவதுமாகிய காற்றினால் அழகாயிருப்பவைகளும் ஆகாசகங்கை விழுவதால் மங்களமான இசையுடையவைகளுமான குஹைகளில் குபேரன்போல் விளையாடிக் கொண்டிருந்தார். அன்றியும், அம்முனிவர் மனத்திற்கினியளாகிய பார்யையுடன் கூடி வைஸ்ரம்பகம் ஸ்வரஸனம் கந்தகம் புஷ்ப பத்ரகம் சைத்ர ரதம் முதலிய தேவோத்யானங்களிலும் மானஸ ஸரஸ்ஸிலும் மனவிருப்பமுற்றவராகி விளையாடினார். மிக்க ஒளியுடன் ப்ரகாசிப்பதும் மேன்மையுற்றதும் நினைத்தபடி செல்லும் திறமையுடையதுமாகிய அவ்விமானத்தில் ஏறிக்கொண்டு அம்முனிவர் காற்று போல் ஸமஸ்த லோகங்களிலும் தடையின்றி ஸஞ்சரித்துக்கொண்டு விமானத்தில் ஏறித்திரிகின்ற தேவதைகளை அதிக்ரமித்து விளங்கினார். வாராய் விதுரனே! இம்முனிவருடைய மஹிமையைப் பற்றி ஆச்சர்யப்பட வேண்டியதில்லை. ஏனெனில் சொல்லுகிறேன் கேள். பகவான் கங்காதி புண்ய தீர்த்தங்களுக்கு இடமான பாதார விந்தங்களை உடையவன். அவனுடைய பாதங்கள் ஸம்ஸார தாபங்களையெல்லாம் போக்கும் திறமையுடையவை. யோகத்தினால் பரிசுத்தமான மனமுடையவராகி எவர் அத்தகையனான பகவானுடைய பாதார விந்தங்களைப் பற்றுகிறார்களோ, அப்படிப்பட்ட மஹானுபாவரான புருஷ ச்ரேஷ்டர்களுக்கு எது தான் பெறக்கூடாதது? அவர்கள் விரும்பமாட்டார்களேயன்றி, விரும்புவராயின் அவர்க்குப் பெறக்கூடாதது எதுவுமே இல்லை. ஆச்சர்யமான யோக ப்ரபாவமுடைய அம்முனிவர், ஜம்பூத்வீபம் முதலிய தீவுகளும் பாரதவர்ஷம் முதலிய வர்ஷங்களும் அமைந்த தன்னிலைமையுடன் கூடி மிகவும் ஆச்சர்யப்படத் தகுந்த பூகோளம் எவ்வளவு உண்டோ, அவ்வளவையும் தன் பத்னிக்குக் காண்பித்து மீளவும் தனது இருப்பிடத்திற்குத் திரும்பி வந்தார். அம்முனிவர் அந்த மனுவின் புதல்வியாகிய தேவஹூதியிடத்தில் ஒன்பது பிள்ளைகளைப் பிறப்பிக்க வேண்டுமென்று ஸங்கல்பித்துத் தன் வீர்யத்தை ஒன்பது பாகமாகப் பிரித்து ஸம்போகத்தில் மிகுந்த உத்ஸாஹமுடைய அம்மடந்தையர் மணியான தேவஹூதியை மனங்களிக்கச் செய்பவராகி, அநேகமாயிரவர்ஷ ஸமூஹம் வரையிலும் ஒரு முஹூர்த்த காலம்போல் அவளுடன் க்ரீடித்தார். அவ்விமானத்தில் மிகவும் ஸுகமான ஸ்பர்சமுடையதும் ஸம்போக விருப்பத்தை வளரச் செய்வதுமாகிய படுக்கையில் படுத்து அழகியனான பர்த்தாவுடன் சேர்ந்து ஸம்போக ஸுகத்தை அனுபவித்துக் கொண்டிருக்கையில், அநேக வர்ஷங்கள் அடங்கின அத்தனை காலம் சென்றும், இத்தனை காலம் கடந்ததென்று அவள் காமஸுகங்களில் ஆழ்ந்திருந்தமையால் அறியப்பெற்றிலள். இங்ஙனம் யோக ப்ரபாவத்தினால் காமஸுகங்களில் கால் தாழ்ந்த கர்த்தமரும் தேவஹூதியுமாகிய அந்த தம்பதிகள் இருவரும் ஸம்போக ஸுகத்தை அனுபவித்துக் கொண்டிருக்கையில், நூறு ஸம்வத்ஸரங்கள் ஸ்வல்பகாலம்போல் கடந்துசென்றன. ஜீவாத்ம பரமாத்மாக்களின் உண்மையை அறிந்தவரும் ஸமர்த்தருமாகிய அக்கர்த்தம முனிவர் அன்பிற்கிடமான அம்மடந்தையர் மணியைத் தன் தேஹத்தின் பாதியாக மனத்தால் பாவித்துப் பிறருடைய மனக்கருத்தை எல்லாம் அறிந்தலராகையால் அவளுக்குப் பல பிள்ளைகள் வேண்டுமென்கிற அபிப்ராயம் உண்டென்பதை அறிந்து தன் வீர்யத்தை ஒன்பது பாகங்களாகப் பிரித்து அந்த வீர்யத்தை அவளிடத்தில் வைத்தார். அனந்தரம் அந்த தேவஹூதி சீக்ரத்தில் ஒன்பது ஸ்த்ரீ ப்ரஜைகளைப் பெற்றாள். அவையெல்லாம் அழகான ஸமஸ்த அங்கங்களும் உடையவைகளாய் இருந்தன. அவையெல்லாம் செங்கழுநீர்ப் பூவின் மணமுடையவைகளாய் இருந்தன. அங்ஙனம் ப்ரஜைகள் பிறந்தபின்பு துறவறம் கொள்ள முயன்ற பர்த்தாவைக் கண்டு அழகியளான அந்த தேவஹூதி வெளியில் புன்னகை செய்துக்கொண்டு உள்ளே வ்யாகுலப்பட்டுப் பரிதவிக்கின்ற மனமும் வணங்கின முகமும் உடையவளாகி ரத்னங்கள் போல் திகழ்கின்ற நகங்கள் அமைந்து மிகுந்த சோபையுடன் திகழ்கின்ற பாதத்தினால் பூமியைக் கீறிக்கொண்டு கண்ணீர்த் துளிகளை மெல்ல மெல்ல அடக்கி ம்ருதுவாயிருப்பதும் அழகியதுமான வார்த்தையை இங்ஙனம் மொழிந்தாள்

தேவஹூதி சொல்லுகிறாள்:- வாரீர் மஹானுபாவரே! எனக்கு நீர் ப்ரதிஜ்ஞை செய்தபடி நிறைவேற்றினீர். ஆயினும் உம்மைச் சரணம் அடைந்த எனக்கு அபயம் கொடுக்கவேண்டும். அபயம் கொடுப்பீராயின், என் மனக்கருத்தை விண்ணப்பம் செய்கின்றேன். வாரீர் அந்தணர் தலைவரே! வயது ஸ்வபாவம் குணம் முதலியவற்றால் உமது பெண்களுக்குத் தகுந்த பர்த்தாக்களை நீர் தேடிக் கொடுக்கவேண்டும். நீர் இல்லறத்தைத் துறந்து வனத்திற்குப் போகையில், நான் சோகமற்றிருப்பதற்கு ஏதேனும் ஓர் வழி உண்டோ? (நீர் துறவறம் பெற்று வனம் சென்றபின்பு, எனக்கு ப்ரஹ்ம ஜ்ஞானத்தை உபதேசித்து என் சோகத்தைப் போக்குவதற்கு ஓர் புதல்வன் உண்டாவனா? வாரீர் எல்லாவற்றிலும் ஸமர்த்தரே! ஸப்தாதி விஷயங்களில் மிகுதியும் மனம் செல்லப்பெற்றுப் பரமாத்மாவை உபாஸிக்காத எனக்கு நூறு வர்ஷங்கள் அடங்கின இத்தனை காலமும் கடந்து சென்றது. கடந்த காலம் போதும். இனிமேலாவது பரமபுருஷனுடைய பாதாரவிந்தங்களில் எனக்கு மனவிருப்பம் விளையுமாக. சப்தாதி விஷயங்களில் மிகவும் மனப்பற்றுடையவளாகிய நான் “நீர் ப்ரஹ்ம வித்து” என்பதை அறியாமலே உம்மிடத்தில் மனவிருப்பம் செய்தேன். நான் உம்முடைய உண்மையை அறியாமல் செய்த அம்மனவிருப்பம் எனக்கு அபயத்தையே விளைவிப்பதாகும்படி அருள்புரிவீராக. அஜ்ஞானத்தினால் அஸத் புருஷர்களிடத்தில் செய்த மனப்பற்றானது ஸம்ஸாரத்தின் பொருட்டாகும். ஸாதுக்களாகிய உம்மைப் போன்றவரிடத்தில் அங்ஙனம் அஜ்ஞானத்தினால் செய்த மனப்பற்றும் கடைசியில் வைராக்யத்தையே விளைப்பதாகும். இவ்வுலகத்தில் ஒருவன் செய்யும் செயல் கர்மயோக ரூபமான தர்மத்தையும், அந்த தர்மம் ஜ்ஞானயோகத்தையும், அந்த தர்மமும் ஜ்ஞானயோகமும் புண்ய தீர்த்தங்களுக்கு இடமான பரிசுத்த பாதங்களை உடையவனாகிய பகவானுடைய ஸேவையையும் விளைக்காதாயின், அவன் ஜீவித்துக் கொண்டிருப்பினும் செத்தாற்போலவே. ஒருவன் தன் ஸவபாவத்தினால் தூண்டப்பட்டவனாகி நடத்துகிற ஆஹாரம் விஹாரம் (விளையாடல்) சேஷ்டை நித்ரை முதலிய செயல்களெல்லாம் தேசகாலங்களுக்கு இணங்கி அவ்வவற்றிற்கு ஏற்பட்ட அளவுக்கு விஞ்சாமல் சாஸ்த்ரங்களுக்கும் அமைந்திருக்குமாயின், பாபத்திற்கு இடமாகாதவையாகி பகவத் ஆராதன ரூபமான கர்மயோகமென்கிற தர்மத்தை நிறைவேற்றுமவைகளேயாம். அதனால் ஜ்ஞானயோகம் உண்டாகும். அதனால் பகவானுடைய பாதார விந்தங்களில் பணிவிடை செய்யப்பெறுவான். அப்படியின்றி ஒருவன் செய்யும் செயல்களெல்லாம் தேசகாலங்களுக்கு இணங்காமல் அவ்வவற்றின் அளவுக்கு விஞ்சி சாஸ்த்ரங்களுக்கும் இணங்காதிருக்குமாயின், அவை பாபங்களுக்கிடமாம். அவனுக்குக் கர்மயோக ரூபமான தர்மத்திற்கு ப்ரஸக்தி இல்லை. ஆதலால் ஜ்ஞானயோகத்திற்கும் அவகாசமில்லை. ஆனது பற்றியே அவன் பகவானுடைய பாதாரவிந்தங்களில் பணிவிடை செய்யும் விருப்பம் உண்டாகப்பெறான். ஆகையால் அவன் ஜீவித்துக் கொண்டிருப்பினும் மரணம் அடைந்தாற் போலவே. உண்மை இதுவாகையால், சப்தாதி விஷயங்களில் மனஞ்சென்ற நான் பகவானுடைய மாயையால் நன்கு வஞ்சிக்கப்பட்டேன். ஏனெனில், மோக்ஷத்தை விளைக்கும்படியான ஜ்ஞானத்தை உபதேசிக்கும் திறமையுடைய உம்மைப்பற்றியும் ஸம்ஸாரத்தினின்று விடுபடவேண்டுமென்கிற விருப்பம் உண்டாகப்பெற்றிலேன். 

இருபத்து மூன்றாவது அத்யாயம் முற்றிற்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக