குலசேகர ஆழ்வாரின் திருமலை அனுபவம்
சேர நாட்டுத் திருத்தலங்களை மலைநாட்டு திருப்பதிகள் என்று வைணவ மரபில் அழைக்கின்றோம். சேர நாட்டின் அரசராக இருந்து ஆழ்வாரானவர் குலசேகரர். மாசித் திங்கள், சுக்லபட்ச துவாதசி திதியில், புனர் பூச நட்சத்திரம் கூடிய வெள்ளிக்கிழமையில் ஸ்ரீமந் நாராயணனின் திருமார்பில் அசைந்து ஒளி வீசும் கௌஸ்துபம் என்ற ரத்தினத்தின் அம்சமாக அவதரித்தவர்.
போர்க்கலைகளிலும் அரசியலிலும் நிபுணத்துவம் பெற்று விளங்கிய குலசேகரர் சேரநாட்டின் எல்லையை விரிவுபடுத்தும் முயற்சியில் இறங்கினார். மிகவும் எளிதாக பாண்டிய நாட்டினையும், சோழ நாட்டின் பகுதிகளையும் இணைத்துக் கொண்டார். கூடல் நாயகன் என்று மதுரையை வென்றதாலும், கோழியர் கோன் என்று சோழனை வென்றதாலும் அழைக்கப்பட்டார்.
திருவரங்கநாதன் மீது கொண்ட மாறாத அன்பினால் பிற்காலத்தில் தனது தலைநகரத்தையே வஞ்சிக் களத்திலிருந்து சோழ நாட்டின் தலைநகராக விளங்கிய உறையூருக்கு மாற்றினார்.
இயற்கையிலேயே கவிதை நயமும், புலமை வளமும் பெற்றிருந்த குலசேகரர், தனது மனநிலையை "இருளிரியச் சுடர் மணிகள் இமைக்கும் நெற்றி" என்று தொடங்கும் பெருமாள் திருமொழியாகப் பாடத் தொடங்கினார். பக்தி எனும் வெள்ளத்தில் பலபடியாக ஆழ்ந்து போன குலசேகரரை பாகவத உத்தமர்கள் குலசேகர ஆழ்வார் என்றே அழைக்கத் தொடங்கினர். இவருடைய 105 பாசுரங்கள் அடங்கிய தமிழ் மாலையே பெருமாள் திருமொழி என்று வழங்கப்படுகிறது. பெருமாளை அறிய வேண்டுமானால் பெருமாளை (அதாவது பெருமாள் திருமொழியை) அறிய வேண்டும்.
திருவரங்கத்து எம்பெருமான் மீது அளவற்ற மோகம் கொண்டு, அவனை என்று காண்பேனோ என்று தவித்த ஆழ்வாருக்கு, அந்தத் திருவரங்கத்து எம்பெருமானே இவர் பக்தி தாகத்தைத் தீர்ப்பதற்கும், சம்சார கட்டில் இருந்து விடுவித்துப் பேறு தருவதற்கும், பேற்றின் உறுப்பாகவும் அடியாகவும் ஆழ்வாரிடமிருந்து தூயதோர் தொண்டினைக் கொள்வதற்கும், திருமலையிலே வந்து நிற்கிறான் என்ற உணர்வு ஆழ்வாருக்குப் பிறக்கிறது.
கிடந்ததோர் கிடக்கையிலிருந்து நின்றதோர் தோற்றமாய் - நெடுமாலாய் - விண்ணோரும் மண்ணோரும் வழிபடவே நிற்கும் மலையப்பனிடம் அலை அலையாய்ச் சிந்தனை செல்கிறது.
“மந்திபாய் வடவேங்கட மாமலை வானவர் சந்தி செய்ய நின்றான் அரங்கத்து அரவின் அணையான்” என்ற எண்ணம் பிறக்க, திருமலையப்பனின் திருவடிவாரத்திலே விழுந்து, “நிலையற்ற வாழ்வில் வெறுப்பும், நிலையுள்ள வாழ்வில் விருப்பும்” பிறந்தபடியைச் சொல்லும் அற்புதப் பாசுரங்கள் தான் குலசேகர ஆழ்வாரின் திருமலை அனுபவம்.
இனி குலசேகர ஆழ்வார் திருமலையப்பனிடம் கொண்ட ஈடுபாட்டைச் சற்று அனுபவிப்போம்.
குலசேகர ஆழ்வாருக்கு திருமலை அப்பனிடம் உள்ள ஈடுபாட்டை போலவே திருமலையப்பனுக்கும் குலசேகர ஆழ்வாரிடம் ஈர்ப்பு.
ஆழ்வார் தீந்தமிழைக் கேட்க செவியைத் தீட்டிக் கொண்டு காத்திருந்தான். திருமலையின் அழகான இயற்கைச் சூழலில் ஈடுபட்ட ஆழ்வாரின் அருந்தமிழில் அவர் முதல் பாசுரம் பிறக்கிறது.
"ஊனேறு செல்வத்து உடல் பிறவி யான் வேண்டேன்
ஆன் ஏறு ஏழ் வென்றான் அடிமைத் திறம் அல்லால்
கூனேறு சங்கம் இடத்தான் தன் வேங்கடத்து
கோனேரி வாழும் குருகாய்ப் பிறப்பேனே"
அற்புதமான மனிதப்பிறவி. அதிலும் அரசனாக… யோசித்துப் பார்க்கிறார். இப்பிறவி வேண்டுமா... வேண்டாம், உடல் பருத்தால்.... உண்டி, உடை, பதவி, பட்டம் என அற்ப சுகம் தேடிப் பரிதவிக்கும்.
அலைந்து அலைந்து மதிப்பிலாது செய்யும் மனிதப்பிறவி வேண்டாம். அகங்காரத்தை உண்டாக்கி ஆத்மாவை நாசம் செய்யும் அரசப் பதவியும் அனுபவித்தாகி விட்டது. எனவே அதுவும் வேண்டாம்.
அப்படியானால்.....?
திருமலையில் பகவானுக்கு ஏதேனும் ஓர் வகையிலே தொண்டு செய்து வாழும் ஒரு பிறவியே வேண்டும். அது தான் வாழ்வின் பயன்.
அப்படியென்ன பிறவி?
பரமபதத்து எல்லையிலே ஓடும் ஆறு விரஜா நதி. அதுபோல் புனிதமானது திருமலையிலே இருக்கும் கோனேரி தீர்த்தம். அதில் ஒரு நாரையாகவாவது பிறக்க வேண்டும்.
எல்லா நாரையும் உயர்ந்ததல்ல. கோனேரி தீர்த்தத் தொடர்புடைய நாரையே உயர்ந்தது.
காரணம் பகவானோடு தொடர்புடையது திருமலை. திருமலையோடு தொடர்புடையது கோனேரி தீர்த்தம். அந்தக் கோனேரியில் வாழும் பெருமை பெற்றது நாரை.
யோசிக்கிறார். நாரை பிறவி போதுமா....? நாரை, தீர்த்தம் வற்றினால் ஓடி விடுமே. பிறகு தொடர்பு வராதே. அப்படியானால் திருமலை தீர்த்தத்திலே ஒரு மீனாய்ப் பிறக்க, அருள் கிடைக்க வேண்டும். அடுத்த பாட்டு பிறக்கிறது. முதல் இரண்டு வரிகளிலே வேண்டாம் என்கிறார். அடுத்த இரண்டு வரிகளிலே வேண்டும் என்கிறார்.
வாழ்நாள்... வேண்டாம், காரணம் பிரமனுக்கே பிரம்ம கல்பம் என்று நாள் குறித்திருக்கிறதே. முக்கோடி வாழ்நாள் இருப்பினும் ஒரு நிலையில் முடிவுக்கு வந்து தானே ஆக வேண்டும்.
அடுத்து... செல்வம்... வேண்டாம், காரணம் அது பெரு நெருப்பல்லவா. நம்மைக் காப்பாற்றும் செல்வத்தை நாம் அல்லவா காப்பாற்ற வேண்டியிருக்கிறது. அதுவும் வேண்டாம்.
மண் அரசு? மண் இருக்கும். அரசு இருக்குமா? எத்தனையோ பேர் ஆண்ட பூமி ஆயிற்றே இது....
அடுத்து மண், பகவான் சொத்தாயிற்றே... வாமனன் மண் அல்லவா இது.... எனவே இவையெல்லாம் வேண்டாம்.
“ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற்சூழ
வானாளும் செல்வமும் மண் அரசும் யான் வேண்டேன்
தேனார் பூம் சோலைத் திருவேங்கடச் சுனையில்
மீனாய்ப் பிறக்கும் விதி வுடையேன் ஆவேனே” அது என்ன குறிப்பாக மீன் பிறவி?
நீர் இருக்கும் வரை மீன் இருக்கும். பகவான் முதல் அவதாரமே மச்சம் தானே... அதனால் மச்சமாய் மாற வேண்டுமென்கிறார். நீரும் மீனும் போலே தானும் இராமனும் என்கிறான் இலக்குவன். அப்படிப்பட்ட சம்பந்தம் தான்.
ஆனால் நீர் வற்றினால் மீன் இருக்குமா... அப்படியானால் மனிதப் பிறவியே பரவாயில்லை எனத் தோன்றுகிறது. பகவானுக்கு அடியாராய் இருப்பதால் மனிதப் பிறவி அமைந்தாலும் குறை இல்லை என நினைக்கிறார்.
ஆனால் இவர் கேட்பது உண்டு கொழுக்கும் மனிதப் பிறவியல்ல. உண்டியே உடையே என உகந்து உடலைப் பேணும் மனிதப் பிறவியல்ல.
தொண்டு செய்யும் படியான தூய மனிதப்பிறவி வேண்டும். ஒன்று வேண்டாம் என்று சொல்வதற்குக் காரணம் இருப்பது போலவே வேண்டும் என்று சொல்வதற்கும் காரணம் உண்டு.
“பின் இட்ட சடையானும் பிரமனும் இந்திரனும்
துன்னிட்டுப் புகல் அரிய வைகுண்த நீள் வாசல்
மின் வட்டச்சுடர் ஆழி வேங்கடக்கோன் தான் உமிழும்
பொன் வட்டில் பிடித்து உடனே புகப் பெறுவேன் ஆவேனே”
சோற்றுக்கும் துணிக்குமான தேடுதலுக்கே கழியும் வாழ்க்கை வேண்டாம். ஆனால் இந்திராதி தேவர்களும் எளிதில் புக முடியாத நீண்ட வாசலில், நுழைந்து, கருவறையில், பகவானின் அருகில், அவன் திருமஞ்சனம் கண்டருளும் போது, அவன் வாய் உமிழும் (ஆசமனம்) நீரை ஏந்திக் கொள்ள ஒரு பொன் வட்டிலைப் பிடித்துக் கொண்டு, மற்ற அர்ச்சகப் பரிசாரகர்களோடு - இவரும் ஒருவராக நிற்கும் பேற்றை வேண்டுகிறார்.
ஆனால் இதிலும் ஒரு சிக்கல் வருகிறது. தன் ஆட்சியிலேயே கோயில் கைங்கர்யபரர்கள் மீது மற்றவர்கள் அபாண்டமான பழி சுமத்திய நிகழ்ச்சியும், அதனால் தான் பாம்பின் குடத்தில் கைவிட்டு அவர்களை நிரூபித்ததும் நினைவுக்கு வருகிறது. அது மட்டுமில்லை. பொன் வட்டில் திருடினார் என்று தொண்டரடிப் பொடியாழ்வாரைச் சிறையில் வைத்த கதையை நினைத்தால் அதுவும் வேண்டாம் என்று தோன்றுகிறது.
திருமலை புஷ்ப மண்டபம் என்று புகழப்படும் திருத்தலம். “சிந்து பூ திருவேங்கடம்” என்று நம்மாழ்வார் போற்றிய திவ்ய தேசமாயிற்றே. பகவான் பூஜைக்கு புஷ்பங்களைத் தரும் செண்பக மரமாய் நிற்கும் நிலையாக இருப்பின் பரவாயில்லை எனத் தோன்றுகிறது.
“ஒண் பவள வேலை யுலவு தண் பாற்கடலுள்
கண் துயிலும் மாயோன் கழல் இணைகள்
காண்பதற்கு பண் பகரும் வண்டினங்கள்
பண் பாடும் வேங்கடத்து செண்பகமாய் நிற்கும் திரு உடையன் ஆவேனே” இதிலும் யோசனை வருகிறது.
அழகான செண்பக மரம் ஆழ்வாருக்கு விருப்பமானது தான். ஆனால் திருமலைக்கு வரும் சில பக்தர் கள்... அட செண்பக மரம் நன்றாக இருக்கிறதே... என்று பிடுங்கிக் கொண்டு போய்விட்டால்.... என்ன செய்வது?
அப்படியானால் அடுத்த வாய்ப்பு....
இந்தத் திருமலையில் ஒரு தம்பகமாய் அதாவது காய் கனி போன்ற மக்கள் விரும்பும் எதுவுமில்லாத சாதாரணப் புதராய் இருந்தால் போதாதா என்று நினைக்கிறார். (மனிதப்) பதராகத்தான் இருக்கக்கூடாது. புதராக இருக்கலாமே.
“கம்ப மதயானைக் கழுத்தகத்தின் மேல் இருந்து இன்பமரும்
செல்வமும் இவ் வரசும் யான் வேண்டேன்
எம்பெருமான் ஈசன் எழில் வேங்கட மலை மேல்
தம்பகமாய் நிற்கும் தவம் உடையன் ஆவேனே.”
ஆனால் திருமலை வளர்ந்து கொண்டே அல்லவா இருக்கிறது. ஆழ்வார் காலத்துத் திருமலைக்கும் இன்று உள்ள திருமலைக்கும் எவ்வளவு வேறுபாடு. அவ்வப்போது இட வசதிக்காக இருக்கும் புதரை எளிதில் அழித்து விடுவார்களே... ஒரு நேரம் இருந்து, ஒரு நேரம் இல்லாததாய் இருக்கும் புதராக வேண்டாம். என்றும் நிரந்தரமாக இருக்கும் உன் திருமலைச் சிகரத்திலே, ஒரு சிகரமாக இருக்கும் தவமுடையவனாக வேண்டும் என மனது அடுத்த விஷயத்திற்குத் தாவுகிறது.
“மின் அனைய நுண் இடையார் உருப்பசியும் மேனகையும்
அன்னவர் தம் பாடலொடும் ஆடல் அவை ஆதரியேன்
தென்னவென வண்டு இனங்கள் பண் பாடும் வேங்கடத்துள்
அன்னனைய பொற் குவடாம் அரும் தவத்தன் ஆவேனே”
மாற்றம் ஒன்றே மாறாதது. ஆழ்வாரின் சிந்தனை தாவத்தாவ தங்கு தடையற்ற தமிழ் பாக்கள் வந்து விழுகின்றன. திருமலையப்பனுக்கு அதில் தானே ருசி. மலைச் சிகரமாய் மாற நினைத்த ஆழ்வாரின் மனது அதினின்றும் மாறுகிறது.
மலைச் சிகரத்தில் என்ன பிரச்சனை? சிகரமே பிரச்சினை....
ஏறும் வலுவில்லாதவர்களுக்கு மலைச் சிகரங்கள் பயன்படாதே என்று நினைக்கிறார். ஆழ்வாருக்கு பகவானைத் தேடும் பக்தர்கள் அனுபவிக்கத்தக்கதாக இருக்க வேண்டும் என்பது தானே பேரவா... அதனால் வேறு சிந்தனை வருகிறது.
திருமலையில் நுங்கும் நுரையுமாக வெண்ணிறத்தோடு ஓடும் ஒரு காட்டாறாக மாறலாமா என்று யோசிக்கிறார். நுங்கும் நுரையுமாக தங்கு தடையற்ற தமிழ்ப் பாசுரம் வந்து விழுகிறது.
“வான் ஆளும் மாமதி போல் வெண் குடைக்கீழ்
மன்னவர் தம் கோனாகி வீற்று இருந்து கொண்டாடும் செல்வறியேன்
தேனார் பூம் சோலைத் திருவேங்கடமலை மேல்
கானாறாய்ப் பாயும் கருத்துடையேன் ஆவேனே.”
காட்டாறிலும் ஒரு குறை காண்கிறார். என்ன குறை?
மழை பெய்தால் தானே காட்டாறு பெருகும். மழை வற்றினால் “காட்டாறு கண்ணில் காட்டாத ஆறாகி விடுமே...” எனவே திருமலைக்கு வரும் பக்தர்கள் வரும் பாதையிலே அவர்கள் பாதம் படும்படியான பொருளாக இருக்கலாமா என்று எண்ணுகிறார்.
“பிறையேறு சடையானும் பிரமனும் இந்திரனும்
முறையாய பெரு வேள்விக்குறை முடிப்பான்
மறையானான் வெறியார் தண் சோலைத் திருவேங்கடமலை மேல்
நெறியாய்க் கிடக்கும் நிலையுடையேன் ஆவேனே”
குலசேகர ஆழ்வாரின் அவஸ்தையைக் கண்டு திருமலையப்பனே இப்போது வாயைத் திறக்கிறார்.
குலசேகரா... இதிலுள்ள குறையை நான் சொல்லட்டுமா? பக்தர்கள் வரும் பாதை மாற்றினால்... வேறு பாதையில் திருமலைப் பயணத்தை மேற்கொண்டால்... பக்தர்களின் பாதம் படும் வாய்ப்பும் போய் விடுமே... ஆழ்வார் குதூகலிக்கிறார்.
பகவானே நான் யோசிப்பதற்கு முன் நீ யோசித்து நல்ல வழி காட்டினாய்... எனக்கு உன் அடியார்களின் பாதமும் வேண்டும். அதே நேரம் சதா சர்வ காலமும் உன் திருமுகத்தையும் முகத்தில் பொலியும் பவள வாயையும் காண வேண்டும் படியாய் இருக்க வேண்டும்.
அடியார் இட்ட வழக்காக இருக்க வேண்டும். அசேதனப் பொருளாகவும் இருக்க வேண்டும். அதே சமயத்திலே எம்பெருமான் அடியார்களின் தொடர்பு பெற்ற பொருளாகவும் இருக்க வேண்டும். எம்பெருமானை தினம் தோறும் காணும் பேறும் கிடைக்க வேண்டும்.
"செடியாய வல் வினைகள் தீர்க்கும் திருமாலே!
நெடியானே! வேங்கடவா! நின் கோயிலின் வாசல்
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்து இயங்கும்
படியாய் கிடந்து உன் பவள வாய் காண்பேனே”
படியாய் கிடப்பதால் இத்தனை மனோரதமும் ஆழ்வாருக்கு நிறைவேறிற்று. இதிலே அடியார், வானவர் என இரண்டு பதங்கள்.
அடியார் என்பவர் வேறு பயன் கருதாது அவனே பயன் அவனே வழி என்று பற்றி நிற்பவர்கள். (அனன்ய பிரயோஜனர்கள்) இந்திராதி தேவர்கள் வானவர்கள். தங்கள் குறை களைய வேண்டி - ஒரு பலனுக்காக - பகவானைத் தரிசிப்பார்கள். வேண்டுவார்கள். (பிரயோஜனர்கள், காம்யார்த்திகள்) ஆக திருமலைக்கு ஒரு பயன் கருதி வருபவர்கள் உண்டு. அவனே பயன் என்று அனன்ய பிரயோஜனர்களாக (வேறு பயன் கருதாதவர்களாகப்) போவோரும் உண்டு. எப்படியோ பெருமாள் ஆழ்வாருக்கு இந்த விருப்பத்தை நிறைவேற்றி விட்டார்.
எல்லாப் பெருமாள் கோயிலிலும், கர்பகிரகத்தின் முதல் படியே “குலசேகரன் படி”யாக இன்றும் திகழ்கிறார். படியாய்க் கிடந்து பகவான் பவளவாய் காண்கிறார். அந்த இடங்கள் வரும் போது அவரை நினைத்து பெருமாளை சேவிக்க வேண்டும். இவ்வளவும் கேட்டபிறகு ஒரு நிறைவான நிலைக்கு ஆழ்வார் வந்து விட்டார். இப்பொழுது ஆழ்வாருக்கு ஞானக் கூர்மை கூடுகிறது. ஏன் இவ்வளவு கஷ்டப்பட்டு நாம் கேட்டு அதன் நன்மை தீமைகளை ஆராய வேண்டும். திருமலையில் எதுவாக இருந்தால் என்ன... நமக்கு திருமலை வாசம் தான் முக்கியம். அவன் திருவுள்ளப்படி எதுவாக வேண்டுமானாலும் ஆவோம் என நினைக்கிறார்.
“உம்பர் உலகாண்டு ஒரு குடைக் கீழ் உருப்பசி தன்
அம் பொற் கலை அல்குல் பெற்றாலும் ஆதரியேன்
செம் பவள வாயான் திரு வேங்கடம் என்னும்
எம்பெருமான் பொன் மலை மேல் ஏதேனும் ஆவேனே”
இதற்கு விரிவுரை இயற்றிய வைணவப் பேராசிரியர்கள் அற்புத விளக்கங்களை வாரி வழங்கினர்.
இந்திராதி உள்ளிட்ட அத்தனை உலகங்களையும் ஒரு முத்தின் குடைக் கீழே செலுத்தி அங்கே நடனமிட்டு மகிழ்விக்கும் அழகின் சிகரங்களான உருப்பசி போன்ற தேவப்பெண்களைப் பெற்றாலும் ஆதரியேன். காரணம் அதை விட மேலான பரம்பொருளின் அழியா அழகை அல்லவா என் உள்ளில் நான் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். அப்படிப்பட்ட அனுபவம் நிரந்தமாக கிடைக்க திருமலை வாசம் தானே தேவை. அதனால் வினை தீர்க்கும் வேங்கடம் என்னும் எம்பெருமான் பொன் மலை மேல் ஏதேனும் ஆவேனே என்கிறார்.
ஸ்வாமி அனந்தாழ்வான் இவ்விடத்துக்கு திருவேங்கடமுடையான் தானாகவே அமையும் என்னும் விளக்கமளித்தார். அதுக்கு அடிப்படை என் என்னில் சேஷ பூதர் திரளுக்கு புறம்பான சேஷியாகிலும் அமையும் என்கை.
இதற்கு பராசர பட்டர் வேறு நயத்தை அருளிச் செய்தார். நாம் அறிய வேண்டா. திருவேங்கடமுடையானும் அறிய வேண்டா. கண்டாரும் அறிந்து ஸ்லாகிக்கவும் வேண்டா. திருமலை மேலே உள்ளதொரு பதார்த்தமாக அமையும் என்றார். மண்ணவரும் விண்ணவரும் சந்தி செய்ய வந்தவன். கலி காலம் முழுக்க மலைச்சாரல் வேங்கடத்து மலை உச்சி மீது நின்றவன். உபய விபூதிகளையும் காத்தருள்பவன். அவன் வசிக்கும் மலை மீது ஏதேனும் ஆவேனே என்று ஆசைப்பட்ட குலசேகர ஆழ்வாரை போலவே நாமும் ஆசைப்பட வேண்டும்.
அந்த ஆசையை தருவது தண்சாரல் வேங்கடம்.! அதைத் தூண்டுவது குலசேகர ஆழ்வாரின் திருமலை அனுபவங்கள். வாழ்வின் இனிமையையும் நோக்கங்களையும் உளவியல் வழி நின்று கூறும் உன்னதத் தமிழ் அல்லவா இது.... குலசேகர ஆழ்வார் திருவடிகளே சரணம்.
வாழ்க்கை நெறிகள் வளரும்.....
நன்றி - சப்தகிரி பிப்ரவரி 2019
நன்றி - பேராசிரியர் எஸ்.கோகுலாச்சாரி, புவனகிரி +919443439963