அறிமுகம் (9) – முக்தி கிட்டியது
பக்தியின் புதல்வர்களான ஞானமும், வைராக்கியமும் எழுந்திருப்பதற்காக
நாரதர் ஸ்ரீமத் பாகவத புராணத்தை ஏழு நாட்கள் பாராயணம் செய்தார். அதை அவர் கங்கைக் கரையிலுள்ள
ஆனந்தவனம் என்னும் இடத்திலேயே பாராயணம் செய்தார். அவ்விடத்தில் அனைத்து ரிஷிகளும் கூடியிருந்தார்கள்.
தேவர்கள், சித்தர்கள் ஆகியோர் புடைசூழ, மனதை மயக்கவல்ல இயற்கை அழகு சொட்டும் அந்த தேசத்தில்
பாகவதம் பாடப்பட்டது.
ஒருவர் பாகவதத்தை பாராயணம் செய்தால், அதைக் கேட்பதற்காகப் பெரியோர்கள்
எல்லாரும் எழுந்தருள்வார்கள். ஆனந்தவனத்துக்கு உயர்நிலை ரிஷிகளான பிருகு, வசிஷ்டர்,
ச்யவனர், கௌதமர், மேதா, அதிதி, தேவலர், தேவராதர், வியாஸர், பராசரர் – போன்ற பல முனிவர்களும்
தங்கள் புதல்வர்களோடும், சிஷ்யர்களோடும் வந்து சேர்ந்தார்கள்.
அவர்கள் மட்டுமல்லாமல் வேதங்கள், உபநிஷத்துக்கள், மந்த்ரம், தந்த்ரம்
ஆகியவையும், ஒவ்வொரு உருவத்தை எடுத்துக் கொண்டு பாகவதத்தைக் கேட்பதற்காக வந்து சேர்ந்தன.
பாகவதம் தவிர்த்த பதினேழு புராணங்களும் அவ்விடத்தை அடைந்தன. அவ்விடம் முழுவதுமே பக்தர்களால்
நிரம்பி, ‘போற்றி! போற்றி!’ என்னும்
பேரோசையோடும், ‘வணக்கம்! வணக்கம்!’
என்னும் ஒலியோடும், சங்கம், பேரி ஆகியவை முழங்க கோலாகலமாக இருந்தது. அச்சமயத்தில் நான்முகனின்
புதல்வர்களான ஸனகர் முதலானோர் மறுபடியும் பாகவத புராணத்தின் பெருமையைக் கூறினார்கள்.
கதா பாகவதஸ்யாபி நித்யம் பவதி யத் க்ருஹே
தத்க்ருஹம் தீர்தரூபம் ஹி வஸதாம் பாபநாசநம்
அச்வமேத ஸஹஸ்ராணி வாஜபேய சதாநி ச
சுக சாஸ்த்ர கதாயாச்ச கலாம் நார்ஹந்தி ஷோடசீம்
அதாவது, ‘யாருடைய இல்லத்தில் பாகவத புத்தகம் உள்ளதோ, அது பாராயணம் செய்யப்படுகிறதோ,
அந்த இல்லமே புனிதமடைகிறது. பாவங்கள் அனைத்தும் தொலைந்து விடுகிறது. ஆயிரம் அச்வமேத
யாகங்கள் செய்தாலும், நூறு வாஜபேய யாகங்கள் செய்தாலும், அவற்றின் புண்ணியம் சுகாசாரியார்
உபதேசித்த பாகவதத்தின் பதினாறில் ஒரு பங்குக்கு ஸமமாகாது.
கங்கை, கயா, காசி, புஷ்கரம், பிரயாகம் போன்ற எவ்விடத்துக்குச் சென்றாலும்,
என்ன புண்ணியம் கிட்டுமோ, அது நம் இல்லத்திலிருந்தே பாகவதத்தைப் பாராயணம் பண்ணுவதால்
கிட்டும். பாகவதத்தை முழுவதுமாகப் பாராயணம் செய்தால் எவ்வளவோ பலம்! இயலாதவர்கள், ஒரு
ஸ்கந்தத்தையோ, ஒரு அத்தியாயத்தையோ, ஏன்! ஒரு ஸ்லோகத்தையோ, அரை ஸ்லோகத்தையோ அல்லது கால்
ஸ்லோகத்தையோ சொன்னால் கூட புண்ணியம் கிட்டும். பகவான் ஹரியை தியானிப்பது, துளசியை மாலை
தொடுத்து ஸமர்ப்பிப்பது, பசு மாடுகளை ரக்ஷிப்பது... இவற்றுக்கெல்லாம் இருக்கும் பலன்
பாகவத புராணத்தைப் பாராயணம் செய்வதாலேயே கிடைத்து விடும்! இப்படிச் சொல்லொணாத பெருமைகள்
பாகவதத்திற்கு வரக் காரணம் என்ன? நாம் முன்னமேயே பார்த்தபடி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணனே
பாகவத புராணத்தில் வாழ்கிறார். அதன் சொற்கள் எல்லாம் ஸ்ரீ கிருஷ்ணனே! இப்படிப்பட்ட
பெருமை படைத்த பாகவதத்தைப் பற்றி ஸனகர், நாரதருக்குச் சொல்லச் சொல்ல, கொஞ்சம் கொஞ்சமாக
பக்தியின் புதல்வர்களான ஞானமும், வைராக்கியமும் பலத்தோடும், அழகான திருமேனியோடும் விழித்து
எழுந்தார்கள். பாகவதத்தின் பெருமையைக் கேட்டதற்கே அவர்களுடைய இளமை திரும்பி வருமானால்,
பாகவத புராணத்தையே ஏழு நாட்கள் கேட்டால், எந்தப் பெருமைதான் கிடைக்காது?
நாரதர் பாகவதத்தைப் பாடுவதற்காக ஆயத்தமானார். அந்தச் சமயத்தில் பகவான்
ஸ்ரீ கிருஷ்ணரே அங்கு வந்து சேர்ந்தார். வைஜயந்தி வனமாலை தரித்துக் கொண்டு, நீலமேக
ச்யாமளனாக, மஞ்சள் பட்டாடை அணிந்து, மனதை மயக்கவல்ல கோடி மன்மதர்களுக்கு நிகரான பேரழகுடன்
பகவான் அங்கு தோன்றினார். அவரோடு கூட எண்ணிறந்த பக்தர்களும் வந்து சேர்ந்தார்கள். பக்தர்கள்
இருக்கும் இடத்தில், பக்தி தவழும் இடத்தில், பகவான் எப்போதுமே கூட இருப்பார். திருக்கோவலூர்
என்னும் திருத்தலத்தில் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகிய மூவரும் ம்ருகண்டு
மஹரிஷி ஆச்ரமத்தின் இடைகழியில் (வாசலுக்கும், நடுக்கூடத்திற்கும் இடைப்பட்ட குறுகிய
பகுதி) ஒன்று கூடினார்கள். வெளியிலோ மழை; உள்ளேயோ இருட்டு. தம்மைத் தவிர வேறு யாரும்
இல்லை என்று அவர்கள் நினைத்துக் கொண்டிருந்தாலும், அந்தச் சிறு இடத்துக்குள்ளே மேலும்
ஒருவர் புகுந்தாற் போலத் தோன்றியது. யார் நம்மை வந்து நெருக்குகிறார்கள் என்று அறிந்து
கொள்ள ஆசைப்பட்ட முதலாழ்வார்கள் மூவரும் விளக்கேற்றினார்கள். சாதாரண விளக்கல்ல, மொழி
விளக்கு!
பொய்கையாழ்வார், ‘வையம் தகளியாய்’ என்று தொடங்கி, தீந்தமிழ்ப் பாக்களால் விளக்கேற்றினார். பூதத்தாழ்வார்
‘அன்பே தகளியாய்’ என்று
தொடங்கி பைந்தமிழ்ப் பாக்களால் விளக்கேற்றினார். பேயாழ்வார் ‘திருக்கண்டேன் பொன்மேனி
கண்டேன்’ என்று தொடங்கி, தெள்ளிய தமிழ்ப்
பாசுரங்களால் விளக்கேற்ற, அப்போது தங்கள் நடுவே திருமால் எழுந்தருளி இருந்ததை அம்மூவரும்
கண்டனர். பக்தர்களான ஆழ்வார்கள் இருந்த இடத்தில் பெருமானுக்கும், அவர்களோடு இருக்க
வேண்டும் என்கிற ஆசை ஏற்பட்டு விட்டது. நாம் பகவானோடு இருக்க ஆசைப்படுவதை விட, அவர்
நம்மோடு இருப்பதற்கு விருப்பம் கொள்கிறார். அதே போல்தான், ஆனந்தவனத்துக்கு பகவான் வந்து
சேர்ந்தார். அச்சமயத்தில், பாகவத புராணத்தின் பெருமையைக் கூறுவதற்காக ஸனகர் ஒரு கதையைக்
கூறுகிறார்.
“துங்கபத்ரா
நதிக் கரையில் ஒரு பட்டணம் இருந்தது. அதில் ஆத்மதேவர் என்பவர் வாழ்ந்து வந்தார். வேதங்கள்
முழுவதையும் கற்றவராக, கல்வி கேள்விகளில் வல்லவராக, சிறந்த பண்பாளராக அவர் திகழ்ந்தார்.
ஆனால், அவருக்கு வாய்த்த மனைவி துந்துலி, நேர் எதிராக இருந்தாள். பணத்தாசையும், உலக
இன்பத்தில் விருப்பமும் அவளைப் பீடித்திருந்தது. இந்தத் தம்பதியருக்கு வெகுநாட்களாகப்
புத்திரப் பேறு இல்லை. “ஒருமுறை ஆத்மதேவர் காட்டுக்குச் சென்றிருந்தபோது, ஒரு முனிவரைக்
கண்டார். அவரை வணங்கி, ‘எனக்கு எப்படியாவது புத்திர பாக்கியத்தை அருள வேண்டும். கருணை
புரிவீராக!’ என்று வேண்டினார்.
“ரிஷி, அவருக்கு நன்மையை எடுத்துக் கூறினார்: ‘பிள்ளை பெறாதபடியால் நீர் துன்பத்தில்
துவள்வதாக நினைக்க வேண்டாம். பிறந்தவர்கள் எல்லாம் இன்பத்திலா கூத்தாடுகிறார்கள்? இல்லையே!
நீர் புத்திர பாக்கியம் இல்லா விட்டாலும் பரமாத்மாவை சிந்தித்து முக்தி அடைவீராக! இதுவே
உமக்கு நன்மை தரும்’ என்று
கூறினார். ஆனால், ஆத்மதேவர் பிடிவாதமாக புத்திர பாக்கியத்தை வேண்டினார். விதி யாரை
விட்டது?
“ஆத்மதேவர்
சொல்கிறார் : ‘நான் வளர்த்த பசு, கன்று ஈனவில்லை. நான் வளர்த்த மரம், பட்டுப் போய்விட்டது.
இதுதான் என் நிலை. தாங்கள்தான் அவசியம் எனக்கு ஒரு வழி காட்ட வேண்டும்’ என்று வேண்டினார். ரிஷியும்
மனம் கனிந்து தன் தவ வலிமையால் ஆத்மதேவருக்கு திவ்யமான ஒரு பழத்தைக் கொடுத்து ‘இந்தப்
பழத்தை உன் மனைவியை சாப்பிடச் சொல். அப்போது அவளுக்கு நல்ல மகன் பிறப்பான். உண்மை பேசுதல்,
தூய்மையாக இருத்தல், கருணை, தானம் கொடுக்கும் தன்மை ஆகிய அனைத்தும் அப்பிள்ளையிடம்
நிலைத்து இருக்கும்’ என்று
கூறினார். “ஆத்மதேவர் மகிழ்ச்சியோடு அப்பழத்தைப் பெற்றுக் கொண்டு, தன் இல்லத்தை அடைந்து,
அதைத் தனது மனைவியிடம் கொடுத்தார். ஆனால் மகிழ வேண்டிய மனைவியோ சிந்திக்கலுற்றாள்:
“‘இந்தப்
பழத்தை நான் சாப்பிட்டால், கர்ப்பம் தரிப்பேன். அப்போது வேலை செய்ய முடியாது. கர்ப்ப
காலத்தில் வீட்டிற்குப் பலர் வரத் தொடங்குவார்கள். என்னுடைய நாத்தனார் என் சொத்தை எடுத்துக்
கொண்டு போனாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. வீட்டில் இருக்கும் வேலைக்காரர்கள் எல்லாம்
நம்மை ஏமாற்ற ஆரம்பிப்பார்கள். ஆகையால், விதவையான பெண்ணோ, புத்திரப் பேறே இல்லாத பெண்ணோ
தான் சிறந்தவள். நானும் அது போலவே இருப்பதுதான் நல்லது. ஆகவே, இந்தப் பழத்தை சாப்பிடப்
போவதில்லை’ என்று
முடிவெடுத்தாள். “ஆனால், கணவர் கேட்டால் என்ன சொல்வது? நல்லவேளை! இவள் சகோதரி அப்போது
கர்ப்பிணியாக இருந்தாள்; இவர்களுடைய வீட்டிற்கும் வந்திருந்தாள். இருவரும் ஒரு உடன்படிக்கைக்கு
வந்தார்கள். ‘நான் உனக்கு ஏராளமாகப் பணம் கொடுக்கிறேன். நீ உன் குழந்தையை எனக்குக்
கொடுத்து விடு. எனக்கே குழந்தை பிறந்ததாக கணவரிடம் சொல்லி விடுகிறேன்’ என்றாள் துந்துலி. அதேபோல்
சகோதரிக்குப் பணம், துந்துலிக்கு குழந்தை என்று பண்டமாற்றம் போல் செய்து கொள்ள முடிவெடுத்தார்கள்.
“கூடப்
பிறந்தவள் சில மாதங்கள் கழித்து ஒரு பிள்ளை பெற்றெடுத்தாள். அக்குழந்தையை துந்துலியிடம்
ஒப்படைத்தாள். துந்துகாரி என்று அவன் பெயர் பெற்றான். தீய நடத்தை உடையவனாக விளங்கினான்.
“எல்லாருக்கும் ஒரு சந்தேகம் எழும். துந்துலி பழத்தை என்ன செய்தாள்? நியாயமான சந்தேகம்.
பழத்தை அவர்கள் வீட்டு பசு மாட்டுக்குப் போட்டுவிட, அதை உண்ட பசுவும் கர்ப்பம் தரித்து,
ஓர் ஆண் மகவைப் பெற்றது. அக்குழந்தையுடைய காதுகள் பசுவின் காதுகள் போல நீண்டிருந்தன.
ஆகையால், அவன் ‘கோகர்ணன்’
என்று பெயர் பெற்றான். ரிஷி கூறியது போலவே சிறந்த பண்டிதனாகவும், ஞானியாகவும் வளர்ந்தான்.
“தன்னுடைய மனைவியின் தீய நடத்தையைக் கண்ட ஆத்மதேவர் மனம் நொந்து போய், காட்டுக்குச்
சென்று உயிரையே துறந்தார். துந்துகாரியும் தன் தாயைப் போல பணத்தாசை பிடித்து, தீய நடவடிக்கைகளில்
ஈடுபட்டு, தன் தாயாரையே பலமுறை பணத்துக்காக சித்ரவதை செய்ய, துந்துலியும் உயிர் துறந்தாள்.
துந்துகாரியும் தீய நடவடிக்கைகளில் ஈடுபட்டு இறந்து போனான். நல்ல மரணமாக இல்லாதபடியால்,
அவன் பிசாசாக அலைந்து கொண்டிருந்தான். “அவன் இறந்த செய்தி கேட்ட கோகர்ணன், ஈமச் சடங்குகளைச்
செய்து முடித்து, கயைக்குச் சென்று சிராத்தமும் செய்தான். யாத்திரை சென்று திரும்பிய
அன்று கோகர்ணன் தன் கிராமத்து வீட்டில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தான். அப்போது,
பெருத்த சத்தம் கேட்டு, அவன் தூக்கம் கலைந்தது. ஒரு பெரும் பிசாசு உருவம் அவன் அருகே
நின்று கொண்டிருந்தது. “கோகர்ணன் ‘நீ யார்?’
என்று கேட்டான். அப்போது அந்த பிசாசு பதில் கூறிற்று: ‘நான்தான் உன் சகோதரன் துந்துகாரி.
நான் இறந்த பிறகு, விமோசனம் அடையவில்லை. நீதான் ஏதாவது செய்து என் சாபத்திலிருந்தும்,
பாவத்திலிருந்தும் எனக்கு விடுதலை பெற்றுக் கொடுக்க வேண்டும்’ என்று கேட்டது. “கோகர்ணனோ,
‘நான் உனக்காக கயா சிராத்தமே செய்து விட்டேனே! உனக்கு இன்னும் முக்தி கிடைக்கவில்லையா?’ என்று வியப்போடு கேட்டான்.
“துந்துகாரி
கூறினான்: ‘நான் என்ன கயா சிராத்தத்தினால் விடுதலை அடையும் பாவமா செய்திருக்கிறேன்?
நான் செய்த பாவத்துக்கு இதனால் எல்லாம் முக்தி கிடைக்காது. வேறு ஏதாவது உயர்ந்ததாகச்
செய்து, முக்தி பெற்றுக் கொடு’
என்றான். உடனே, கோகர்ணன், அங்கிருந்த கிராமவாசிகளிடத்தில் ‘என்ன செய்யலாம்?’ என்று கேட்டு ஆலோசித்தான். இதற்கு
சூரிய பகவான்தான் தக்க வழியை உபதேசம் செய்ய முடியும் என்றனர் அவர்கள். “காலையில் சூரிய
தேவன் ஆகாயத்தில் புறப்பட்டார். தன் தீவிரமான பிரார்த்தனையால் கோகர்ணன் சூரியனை வழியில்
நிறுத்தி, ‘நான் என்ன செய்ய வேண்டும்?’
என்று வினவினான். அப்போது சூரிய பகவான், ‘உனக்கு ஒரே வழிதான் உள்ளது. பாகவத புராணத்தை
ஏழு நாள் விதியின்படி பாராயணம் செய். அதைக் கேட்ட இந்தப் பிசாசு முக்தி பெறும்’ என்றார். “சூரியன் சொல்லியபடி
கோகர்ணன் பாராயணம் செய்யத் தொடங்கினான். பிசாசு முக்தி பெற்றுவிட்டது என்பதற்கு அடையாளம்
வேண்டுமே! அருகிலிருந்த நீண்ட மூங்கிலில் ஏழு கணுக்கள் இருந்தன. பிசாசு, காற்று உருவத்துடன்
அம்மூங்கிலுள் புகுந்து கொண்டது.
“முதல் நாள் பாராயணம் முடிந்தவுடன், மூங்கிலின் முதல் கணு வெடித்தது.
இரண்டாவது நாள் பாராயணம் முடிந்தவுடன், இரண்டாம் கணு வெடித்தது. இப்படி ஏழு நாட்களும்
பாராயணம் முடிந்து, ஒவ்வொரு கணுவாக வெடிக்க, துந்துகாரி முக்தி பெற்றான். முக்தி பெற்ற
துந்துகாரியை அழைத்துப் போக, திவ்யமான விமானம் ஆகாயத்திலிருந்து இறங்கிற்று. அவ்விமானத்தில்
விஷ்ணு தூதர்கள் வந்திருந்தார்கள். “அவர்களிடம் கோகர்ணன் கேட்டான் : ‘பகவானின் தூதர்களே!
நான் பாகவதத்தைப் பாராயணம் செய்தபோது, பலரும் அமர்ந்து கேட்டார்கள். ஆனால், துந்துகாரிக்கு
மட்டும் முக்தி கிட்டிற்று! மற்றவர்களுக்குக் கிடைக்கவில்லையே! ஏன்?’ என்றான்.
“அவர்கள்
பதில் கூறினார்கள் : ‘எல்லோருக்கும் ச்ரவணம் (கேட்பது) பொது. ஆனால், மனனம் (முனைப்புடன்
கூடிய நினைவு) பொதுவாக இல்லையே! அனைவரும் காதால் கேட்டதைப் போலவே, கேட்டதில் நம்பிக்கை,
புலனடக்கம், குருவினிடத்தில் விசுவாசம், அசைக்க மாட்டாத பக்தி – ஆகியவை கொண்டிருந்தால்தான்
பாகவத புராணம் பலன் கொடுக்கும். நீர் மீண்டும் ஒருமுறை பாகவதத்தைப் பாராயணம் செய்யும்போது,
அனைவரும் முக்தி பெறுவார்கள்’
என்றனர்.”
இவ்வாறு ஸனகர் கூறி முடித்தார்.
எவ்வளவு உண்மை! வெறுமனே காது கொடுத்தால் போதுமா? அதில் மனம் ஈடுபட வேண்டாமா?
ஈடுபாட்டோடு பாராயணம் செய்த கோகர்ணனை, பகவான் ஸ்ரீ ஹரியே அங்கு வந்து அணைத்துக் கொண்டு,
தனக்கு ஸமமாக பாவித்து, அருள் புரிந்தார். பாகவத புராணத்தை எப்படிப் படிக்க வேண்டும்?
யார் படிக்க வேண்டும்? என்று வழிமுறைகள் உள்ளன. அவற்றைப் பார்ப்போம்.
நன்றி - துக்ளக்