திருப்பாவை திவ்ய பிரவாகம் - 4 - கண்ணன் ரங்காச்சாரி

வையத்து வாழ்வீர்காள், நாமும் நம் பாவைக்கு 
செய்யும் கிரிசைகள் கேளீரோ, பாற்கடலுள் 
பையத் துயின்ற பரமனடி பாடி, 
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி 
மையிட்டு எழுதோம், மலரிட்டு நாமுடியோம் 
செய்யாதன செய்யோம், தீக்குறளைச் சென்றோதோம் 
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி 
உய்யுமாறெண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.


மேற்படி பதிகம் 'கிருத்யா கிருத்ய' விவேகம் என்னும் சித்தாந்தத்தை விளக்குகிறது. உலகாயுத பொருட்களையும் உறவுகளையும் பற்றுவதோ, பற்றறுப்பதோ கடினம்.


அதுவே பரம கல்யாண குணங்கள் உள்ள பரந்தாமனை, மனது லயிப்பதன் மூலம் பற்றுவது எளிது. அவன் ஒன்றே நிஜம் என்றான பின், உலக சம்பந்தமான எதையுமே பற்றறுப்பதும் எளிதாகிறது.


'வையத்து வாழ்வீர்காள்' - ஆய்ப்பாடியிலே கண்ணனோடு சம்பந்தம் கொண்டு, தினம் கழிக்கும் கோபர்கள் மிகப் பாக்கியசாலிகள் என்பதால், 'அடேய் பங்களா வாசி' என்று நாம் யாரையும் கண்டு வியப்பதைப்போல, 'வையத்து வாழ்வீர்காள்', என்று சற்றே அசூயையுடன் கூட, பிராட்டி கோபியர்களை எண்ணி வியக்கிறாள்.


பரமபதத்தை விட உலக வாழ்க்கை, பாகவதர்களுக்கு அற்புதமானது. பரமபதத்தில் எல்லோரும் பற்றற்ற சீலர்கள், துளியும் எந்தப் பசியும் அற்றவர்கள். பூரணத்துவத்தை ஏற்கனவே அடைந்தவர்கள். இனி அடைவதற்கென்ற எந்த எதிர்பார்ப்பும், அவர்களிடம் இல்லை.


ஆனால் உலக வாழ்க்கையில், நாம் எந்த விதத்திலும் பூரணமற்றவர்கள். பற்றுக்களும், சம்சாரமும் அறுப்பது மிகக் கடினம். நம்முடைய உடல், உணர்வு, அறிவுப் பசிக்கள் அடங்கிப்போனாலும், ஞானப் பசி அடங்குவதற்கு பரமனருள் வேண்டும்.


ஆழ்வாராதிகள் 'அச்சுவை பெறினும் வேண்டேன்' என்று விளிப்பது பூலோகத்தில் கண்ணனுடைய கண்ணருள் கிடைக்கும் மாத்திரத்தில், பரமபதம் உன்னதம் இல்லை என்பதாம்.


'நாமும்' - நமக்கே பறை தருவான் என்ற தகுதியுள்ள கண்ணனின் சம காலத்தில், ஒத்த வயதினராய், அவன் பிறந்த அதே ஊரில் பிறந்தவர்கள் என்பதாம்.


'நம் பாவைக்கு' - நாம் செய்யும் பாவை நோன்பிற்கு


'செய்யும் கிரிசைகள்' - இந்திரஜித் போன்ற அரக்கர்கள் தாம் லாபம் பெறவும், மற்றவர் அழிவுக்கும் செய்யும் ஹோமங்கள் போலில்லாமல், மாலனும் அவனடியார்களும் நன்றாக வாழும் படிக்காக செய்யும் நோன்பிற்க்கான, வேத விதிகளுக்கு மீறிடாத க்ரியைகள்.


'கேளீரோ' - கேளுங்கள் என்று ஒரு கோபிகை இன்னொருத்தியை நோக்கி விளிப்பது, எந்த ஆளுகையோடும் கூறப்பட்டது இல்லை. சொன்னவள், கேட்டவள் என்ற இருவரும் சமமான பக்தி லயத்தாலே அனுக்ரஹிக்கப் பெற்று, பொழுதை கிருஷ்ண சம்பந்தமாகப் பேசிக் களிப்பவர்கள். கீதாச்சார்யன் சொன்னது போல 'போதயந்த: பரஸ்பரம்', என்ற பரஸ்பர சம்பாஷணைகளில் ஈடுபட்டுள்ளவர்கள்.


மகா பாரதத்தில், வைசம்பாவன பகவான் லக்ஷக் க்ரந்தங்களில், தர்ம, கர்ம, அர்த்த, காம, மோக்ஷங்களை, சொல்லிய சமயத்த்தில், தன்னுடைய சிஷ்யர் ஜனமேஜயனிடம் கேட்டார். புருஷார்த்தம் என்றால் என்ன? என்று. "தாங்கள் பகவத் குணங்களைச் சொல்ல அடியேன் கேட்டுக் கிடப்பதே புருஷார்த்தம்" என்று பதில் சொன்னாராம். 'ஸ்ரவணம்' - கேட்டல் என்பது பக்தியின் ஒரு உன்னத வழி முறை.


'பாற்கடலுள் பையத் துயின்ற பரமனடி பாடி' - வெள்ளை வெள்ளத்தின் மேல் ஒரு பாம்பை மெத்தையாக விரித்து அதன் மேல் கள்ள நித்திரை கொள்கின்ற என்ற வகையில், ஆழமாய் இல்லாமல் மேம்போக்காய், ஆயாசத்தாலோ தமோ குணத்தாலோ ஏற்பட்டதல்லாத தூக்கத்தில் உறங்குகின்ற மாலவன். பிராட்டிமார் அருகிலிருந்தும், போகத்தில் ஈடு படாது , 'யாராலே யாருக்கு என்ன தீங்கு வருமோ' என்று யோசித்துக் கிடப்பவனாம், திருமால்.


கிருஷ்ணனை அனுபவிக்க வேண்டிச் செய்யும் பூசையில் 'க்ஷீராப்தி நாதனை' *பாற்கடலில் பள்ளிக் கொண்டானை' ஏன் பேச வேணும். எங்கே க்ருஷ்ணனைப் பற்றிப் பேசினால், யாரேனும் சதி செய்து அவனைத் தங்களிடமிருந்து, பிரித்துக் கொண்டு போய் விடுவார்களோ என்ற பயந்த கோபியர், ஆதி நாராயணனைப் பாடுகிறார்கள். 'பள்ளி கொள்ளும் இடத்து அடி கொட்டிட', என்று எல்லா இடத்திலும் வ்யாபித்துக் கிடக்கும் அவனுடைய திருவடி காணப் பெறுவது துர்லபம். துயின்றவனாய்க் கிடப்பதால், திருவடி தரிசனம் எளிதாகியதால், அவனடியைப் போற்றிப் பாடுகிறார்கள். பிராட்டியாரோடு போகத்தில் இல்லாததனால், கோபியர்கள் அணுகிட எளியவனானான் என்றும் பொருள்.


'நெய்யுண்ணோம், பாலுண்ணோம், மையிட்டு எழுதோம், மலரிட்டு நாம் முடியோம்' - செல்வச் சிறுமியரான ஆய்ச்சிப் பெண்கள், கண்ணனின் சம வயதினர். கண்ணன் திருடிய வெண்ணையைக் கூட இருந்து உண்டுக் களித்தவர்கள்.


நெய்யும், பாலும், தயிரும் வெண்ணையும் தாமே மூல உணவுகள் ஆய்ச்சிப் பெண்களுக்கு. அவையும் கூட கண்ணனுக்காக தியாகம் செய்து நோன்பு கொள்கிறார்கள். நெய்யும் பாலும் விலக்குதல், உடல் பசி சம்பந்தமானது. பக்தி / ஞானப் பசி வந்தால் உடல் பசி மறைந்து போவது இயற்கை. வள்ளுவப் பெருந்தகை சொன்னதைப் போலே ‘செவிக்கு உணவு இல்லாத போதில் தான் வயிற்றுக்கு சிறிது உணவு அவசியமாகிறது’.


மையும், மலரும் இளம் பெண்களுடைய குறைந்த பக்ஷ வெளித்தோற்ற அலங்காரப் பொருட்கள். நோன்பிற்காக அவற்றைக் கூட விலக்கத் தயாராகி விட்டார்கள். அவன் வந்து தங்கள் தலையை முடிந்து பூ சூட்டட்டும் என்பதும் ஒரு காரணமாம்.


'செய்யாதன செய்யோம், தீக்குறளைச் சென்றோதோம்' - குணம் சம்பந்தப்பட்ட செய்யக் கூடாத, அனுஷ்டானங்கள் விதிக்காததைச் செய்ய மாட்டோம். சில இளம் பெண்களின் இயற்கைக் குணமான, புறம் பேசுதல் (கோள் சொல்வது, அலர் தூற்றுவது, தீக்குறள் சென்று ஓதுவது) போன்ற செயல்களை செய்ய மாட்டோம்.


'நாட்காலே நீராடி' - வெய்யில் வரும் வேளை வரையில் பனியில் உறைந்து கிடக்கும், யமுனை நதிக்கரைக்கு யவ்வன கோபர்கள் கூடப் பகல் அல்லாத நேரத்தில் செல்லத் தயங்குவார்கள். ஆனால் இந்த இளம் ஆய்ச்சியர் சிறுமிகள், கண்ணனை அடைய வேண்டிச் செய்யும் நோன்பினை பிரதானமாகக் கொண்டு பின்னிரவில் (நாட்காலை 3.00 மணி அளவில்) நதிக்கரைக்குச் சென்று நீராடத் தயங்கவில்லை. மேல் சொன்ன செய்கைகள் விலக்குதலையும், நீராடுதல் - ஏற்பதையும் குறிக்கின்றன.


நீராடி என்பதற்கு மூன்று தாத்பரியங்கள் 


1. அவன் போகார்த்தம் - யமுனையில் அவனோடு களித்து நீராடியதை நினைவு கொண்டு மகிழ்ச்சி கொள்ளல் 
2. அவன் பேர் சொல்லி குளித்தல் அவனை அடையும் சாதனமாதல். 
3. அவனால் ஏற்பட்ட விரகத்தின் வெம்மை தணிக்கப் பெறுதல்.


நோன்பிற்க்காக விலக்குதலும், ஏற்றலும் பத்துப் பன்னிரண்டு வயது சிறுமிகளுக்குச் சாத்தியமாதல் சிறப்பு. ஆழ்வாராதிகள் அருளிச் செயல்: 'உண்ணா நாள் பசி ஆவது ஒன்றில்லை, நமோ நாராயணா வென்று எண்ணா நாள் - அவைப் பட்டினி நாளே'.


'ஐயமும், பிச்சையும், ஆந்தனையும் கை காட்டி' - 'ஐயம்' - யோகத்தின் முதிர்ச்சி நிலையில் அவனோடு ஐக்கியப்பட்டு அவன் குணாதி விஷயங்களில் ஞானமுறுதல், 'பிச்சையும்' - அவனருளால் ஆத்ம ஸ்வரூப ஞானம் அருளப் பெறுதல். 'ஆந்தனையும்' - எல்லாம் அவன் கொடுத்த போதிலும், பூரண நிறைவில்லாதிருக்கை. கண்ணன் தன்னையே கோபியருக்குப் பரிமாறிய போதிலும், இன்னும் அவன் சம்பந்தம் போறாதென்று, நோன்பிருக்கும் கோபியர்கள்.

'உய்யுமாறு எண்ணி உகந்தேலோர் எம்பாவாய்' - மேற்சொன்ன கிரிசைகளைச் செய்து வாழ்வைக் கடத்தி ஆனந்தம் அடைய வா பெண்ணே!, என்று விளிப்பதாய் பொருள்.

ஆண்டாள் திருவடிகளே சரணம்
கருத்துரையிடுக (0)
புதியது பழையவை