ஸ்ரீமத் பரமஹம்ஸேத்யாதி பறவாக்கோட்டை ஸ்ரீமத் ஆண்டவன்
ஸ்ரீ கோபாலதேசிக மஹாதேசிகன் அருளிய அருள் சொல் அமுது.
ஸ்ரீநிவாஸம் பரம் ப்ரஹ்ம தந்நாம்நச்ச குரூத்தமாந் |
நாராயணம் ரங்கநாதம் ப்ரணம்யேதம் விலிக்யதே ||
நல்லோர், நல்லதையே எண்ணுவர். தன் எண்ணம் நேரியது, தனக்கும் பிறர்க்கும் நன்மையையே விளைவிப்பது என உறுதிப்பட்டால் அதைப் பிறரிடம், தோழனிடம் சொல்வர்.
தான் எண்ணிச் சொல்லியதில் சிறிதும் தவறு இல்லை என்ற துணிவு ஏற்பட்டால் அதைச் செயல்படுத்துவர். அந்தச் செயல் தனக்கும் பிறர்க்கும் நன்மையையே விளைவிக்கும். முதலில் எண்ணுவது, பிறகு சொல்வது, இப்படி எண்ணிச் சொன்னதைச் செய்து காட்டுவது என்பது நல்லோரின் வழக்கம் ஆக இருந்து வந்துள்ளது.
ஆனால், தீயோரின் நிலை அத்தகையது அன்று. அவர்கள் பிறர் நலத்தைப் பேணாமல், சுயநலத்தையே நாடி, அதற்கு ஏற்ப மனதில் எண்ணுவர். தன் தீய எண்ணத்தைப் பிறர் அறிந்துகொள்ள முடியாதபடி வெளியில் தேன் ஒழுகப் பேசுவர். பேச்சில் தன் நோக்கத்தை மறைத்திடுவர். பிறகு தான் எண்ணியதற்கும் பேசியதற்கும் எந்த விதத் தொடர்பும் இலாதபடிச் செயல் ஆற்றுவர்.
இதை;
மனஸ் ஏகம் வசஸ் ஏகம் கர்மண் ஏகம் மஹாத்மனாம் |
மனஸ் அன்யத் வசஸ் அன்யத் கர்மண் அன்யத் துர் ஆத்மனாம் ||
எனும் மூதுரை விளக்கும். நம் பழைய நூல்களில் எலாம், “மனோ வாக் காயங்கள்” என த்ரிகரணங்களைப் பேசி, அந்த வரிசையின்படியே அவை செயல்படுவது ஆகப் பெரும்பாலும் சொலப்பட்டு வருகிறது.
கீதையிலும் அர்ஜுனன் பேசுகையில்,
“சஞ்சலம்ஹிமன: க்ருஷ்ணப்ரமாதி பலவத் த்ருடம்” என, மனதை ஒருமுகப்படுத்திச் செயல்படுதல் மிகவும் கடினம் எனக் கூற, கண்ணனும் “அஸம்சயம் மஹாபாஹோ! மன: துர்நிக்ரஹம் சலம்" (மனதை அடக்குவது மிகவும் கடினம் தான்; அது சலித்துக்கொண்டே / ஒன்றையே உறுதியாய்ப் பற்றி நிற்காமல் இருக்கும் தன்மையது) என அர்ஜுனனின் கூற்றை ஏற்று, மேலே அதை அடக்க வழி சொல்கிறார். ஆக, க்ருத த்ரேதா யுகங்களில் மனதை அடக்கி ஒருமுகப்படுத்த முடிந்தது.
அப்பொழுது பக்தி யோகத்தை அனுஷ்டிக்கும் மஹர்ஷிகள் பலர் இருந்தனர். த்வாபரத்தின் கடைசியிலும் கலியுகத்திலும் மனதை அடக்கி ஒருமுகப்படுத்தி பக்தி யோகத்தை அனுஷ்டிப்பது அரிது ஆகிவிட்டது. ஆயினும் மனதைத் திரும்பத் திரும்பப் பரமனை நினைக்கச் செய்து பழக்கப்படுத்தியும் மனம் பட்டி மேயும் பிற விஷயங்களில் வைராக்யத்தை / ஆசை அற்று இருப்பதை வளர்த்துக்கொண்டால் மனதை அடக்க முடியும் என்பதை, “அப்யாஸேநது கௌந்தேய வைராக்யேண சக்ருஹ்யதே” எனக் கூறி, கடைசியில் “மன்மனாபவமத்பக்த: மத்யாஜீ மாம்நமஸ்குரு” கீதை 18 - 65.
என்னை உறுதி ஆகத் தொடர்ந்து நினைத்துக்கொண்டே, வாயினால் மந்திரங்களைச் சொல்லிக்கொண்டே, பகவத் ஆராதனத்தை யாகாதி கர்மாக்களைப் பண்ணி எனை நமஸ்கரிப்பாயே ஆகில், எனையே நிச்சயம் ஆக அடைவாய் எனச் சொல்லும் இடத்திலும், மனஸ் வாக் காயங்கள் வரிசை ஆக செயல்படுத்த வேண்டும் என்பதை அறிகிறோம்.
ஆக, பூர்வர்கள் இதுகாறும் கடைபிடித்து வந்த முறையை ஆண்டாள் நேர் எதிர் ஆக மாற்றி, “காய வாக் மனஸ்ஸுக்கள் என்ற வரிசையில் செயல்பட்டால் தான் கலியில் மனதைப் பரமனிடம் ஒருமுகப்படுத்த முடியும்” என்கிறாள். “மாயனை” எனத் தொடங்கும் பாட்டில்,
“தாமோதரனை தூயோமாய் வந்து நாம்
தூமலர் தூவித்தொழுது வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசு ஆகும்” என்று.
புண்ய நதிகளில் நீராடித் தூய்மையுடன் பரமனிடம் செல்வதும், அர்ச்சனைக்குத் தேவை ஆன துழாய் மலர் மற்றும் மணம் உள்ள நல் மலர்களைக் கொணர்வதும், அவற்றைத் தொடுத்து எம்பெருமானின் திருமேனியில் சாற்றுவதும், உதிரி துழாய்களைக் கொண்டும் மலர்களைக் கொண்டும் திருவடிகளில் அர்ச்சிப்பதும், அஷ்டாங்க நமஸ்காரங்களைச் செய்வதும் ஆகிய செயல்கள் தற்காலிகம் ஆனவை.
இவை செய்யும்போது, “பரமனுக்காக” எனும் எண்ணம் நம் மனதில் ஊடுருவி நிற்கும்.
பிறகு, “கலௌ ஸங்கீர்த்ய கேசவம்” என்றபடி பல பாசுரங்களையும் ச்லோகங்களையும் ஸஹஸ்ரநாமத்தையும் சொல்வதும் பாடுவதும் அவனை நினைப்பதற்கு உதவுகிறது.
இவ்வாறு நம் மனம் ஓர் அளவு பண்பட்ட பின் அவனை மனதால் நினைப்பது நமக்கு எளிது ஆகிறது. இவ்வாறு பல தடவைகள் செய்வதால் அதிக நேரம் பரமனை நினைக்க முடிகிறது. ஆக, நாம் பண்பட்டு த்யாநம் பண்ணுவதற்கு ஏற்ற ஸௌகர்யம் ஆன நிலை ஏற்படும். இதை மனதில் கொண்டே த்யாநத்துக்கு வேண்டிய வழிகாட்டி முறைகளை மாற்றி அமைத்துக் கொடுத்தாள் கோதை.
ஆக, பழமை ஆன வழிகளை மாற்றி அமைத்து, எளிதாய் த்யாநத்தில் நம் மனதை ஈடுபடுத்தும் முறையில் புதுமையைப் புகுத்துவது துணிவு ஆன, புரட்சி ஆன செயல் தானே.
எனவே தான் இதை, “கோதையின் புரட்சி” எனத் தலைப்புக் கொடுத்துச் சொல்லல் ஆயிற்று.
நாராயண நாராயண
ஆண்டாள் திருவடிகளே சரணம்
ஆசார்யன் திருவடிகளே சரணம்.