ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2020

ஶ்ரீமத் பாகவதம் - 171

 எட்டாவது ஸ்கந்தம் - மூன்றாவது அத்தியாயம்

கஜேந்த்ரம் பகவானைத் துதிசெய்தலும், பகவான் வந்து அதை விடுவித்தலும்.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- அந்தக் கஜேந்த்ரம் இவ்வாறு புத்தியால் நிச்சயித்து, மனத்தை வேறு விஷயங்களினின்றும் திருப்பி, ஹ்ருதயத்தில் நிறுத்தி, பூர்வஜன்மத்தில் தான் அப்யஸித்திருந்த மஹிமையுடையதான ஒரு ஸ்தோத்ரத்தை ஜபித்து “ஓம் சேதனாசேதன ரூபமான இந்த ப்ரபஞ்சத்தின் ஸ்ருஷ்டி (படைப்பு), ஸ்திதி (காத்தல்), ஸம்ஹாரங்களுக்கு (அழித்தல்) ஆதி (முதல்) காரணனும், மேன்மையுடைய ப்ரஹ்மாதிகளுக்கும் மேலாயிருப்பவனும், ஷாட்குண்யபூர்ணனுமாகிய (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவனுமாகிய), பரமபுருஷனுக்கு நமஸ்காரம். 

இந்த ப்ரபஞ்சமெல்லாம் எவனிடத்தில் மறைகின்றதோ, எவனிடத்தினின்று உண்டாகின்றதோ, எவன் இதைப் படைத்துப் பாதுகாக்கின்றானோ, எவன் இந்த ப்ரபஞ்சத்திற்குள் புகுந்து நியமித்துக்கொண்டு, எல்லாம் தானேயென்னும்படி அமைந்திருக்கிறானோ, எவன் சேதனாசேதனங்களுக்கு அந்தர்யாமியாயிருந்தும் ஸ்வரூபம் (பெயர், உருவமே) மாறப்பெறுகின்ற அசேதனத்தைக் (அறிவில்லாத ஜடப்பொருட்களைக்) காட்டிலும் ஸ்வபாவம் (தனது குணமான அறிவு) மாறப்பெறுகின்ற சேதனர்களைக் காட்டிலும் விலக்ஷணனாயிருக்கிறானோ (வேறானவனாய் இருக்கின்றானோ), எவன் தனக்கு மேற்பட்டவன் எவனுமின்றி ஸ்வதந்தரனாயிருக்கிறானோ (தன் விருப்பப்படி செயல்பட வல்லவனோ), அத்தகைய பரமபுருஷனை நான் சரணம் அடைகிறேன். 

அந்தப் பரமபுருஷன், தன் ஸங்கல்பத்தினால், தன்னிடத்தில் தானே தேவ மனுஷ்யாதி நாம ரூபங்களுக்கு இடமாயிருக்குமாறு தோற்றுவித்த இந்த ப்ரபஞ்சத்தை ஒருகால் நாம ரூபங்களுக்கிடமாகாதிருக்குமாறு தன்னிடத்திலேயே மறையச் செய்கிறான். என்றும் குறுகாமல் அளவிடக் கூடாத ஜ்ஞானத்தையுடைய அப்பரமபுருஷன், காரண தசையில் (இந்த ப்ரபஞ்சம் படைக்கப்படுவதற்கு முன்) ஸூக்ஷ்மமாயும் (பெயர், உருவம் அற்று இருப்பதும்), கார்யதசையில் (இந்த ப்ரபஞ்சம் படைக்கப்பட்ட பின்) ஸ்தூலமாயுமிருக்கிற (பெயர், உருவங்களுடன் கூடி இருப்பதும்), இந்த ப்ரபஞ்சத்தை இரண்டு தசைகளிலும் ஸாக்ஷாத்கரிக்கிறான். அவன், தனக்குத் தானே காரணன்; ப்ரக்ருதியைக் (அசேதனத்தைக்) காட்டிலும் விலக்ஷணனான (வேறான) ஜீவனைக் காட்டிலும் விலக்ஷணனாயிருப்பவன் (வேறானவனாய் இருப்பவன்). அவன் என்னைப் பாதுகாப்பானாக. இரண்டு பரார்த்தங்கள் அடங்கின கல்பத்தின் முடிவில், இந்த ஜகத்திற்கெல்லாம் காரணமான பூமி முதலிய ஸமஸ்த பூதங்களும், அவற்றின் கார்யமான ஸமஸ்த லோகங்களும், அவற்றைப் பாதுகாக்கின்ற ப்ரஹ்மாதிகளும் அழிந்து போகையில், மிகவும் ஸூக்ஷ்மமாகையால் அறிய முடியாததும் அளவிடமுடியாததுமான தமஸ்ஸு (மூலப்ப்ரக்ருதியின் மிக நுட்பமான நிலை) ஒன்று மாத்ரமே மிகுந்திருக்கின்றது. அப்பொழுது, ஸர்வேச்வரன் அந்தத் தமஸ்ஸுக்கு (மூலப்ப்ரக்ருதியின் மிக நுட்பமான நிலைக்கு) அந்தர்யாமியாய் நியமித்துக்கொண்டு, ஹேயங்கள் (கெட்ட குணங்கள்) எவையும் தீண்டப்பெறாமல் விளங்குகிறான். ஸத்வகுணம் தலையெடுக்கப் பெற்ற மஹாயோகிகளும், அந்தப் பரமபுருஷனுடைய ஸ்வரூபத்தை அறியமாட்டார்கள்.

இனி ஒன்றுமறியாத மூட ஜந்துக்களில், எவன் தான் அவன் ஸ்வரூபத்தை அறியவாவது, வாயால் சொல்லவாவது உரியனாவான்? ஸாதாரணமாய்ப் பற்பல வேஷங்களைப் பூண்டு, நாட்யமாடுகிறவனுடைய ஸ்வரூபத்தையே “இவன் இன்னவன்” என்று அறியமுடிகிறதில்லை. இப்படியிருக்க, கண்ணுக்குப் புலப்படாத ஸர்வேச்வரனுடைய உண்மையை அறிவற்ற ஸம்ஸாரிகள் எவ்வாறு அறிவார்கள்? அவனுடைய வ்யாபாரங்களை இப்படிப்பட்டவை என்று எவர்க்கும் அறிய முடியாது. அப்படிப்பட்ட ஸர்வேச்வரன் என்னைப் பாதுகாப்பானாக.

முனிவர்கள் நித்ய ஆனந்த ரூபமான பரமபுருஷனுடைய ஸ்வரூபத்தை ஸாக்ஷாத்கரிக்க விரும்பி, பிள்ளை, பெண்டிர் முதலிய விஷயங்களில் மனப்பற்றைத் துறந்து, ஸாதுக்களின் குணங்கள் பலவும் அமையப்பெற்று, பற்பல வகையான பூதங்களையெல்லாம் தம்மோடு ஒத்தவைகளாகப் பாவிக்கும் தன்மையமைந்து, நண்பர்களாகி, எவ்வித கொடுமையும் இல்லாததும் மற்ற ஜனங்களால் அனுஷ்டிக்க முடியாததுமான பகவத் உபாஸனமாகிற (த்யானமாகிற) வ்ரதத்தை அரண்யத்தில் (காட்டில்) சென்று அனுஷ்டிக்கிறார்கள். அப்படிப்பட்ட ஸர்வேச்வரன், என்னையும் பாதுகாப்பானாக.

அப்பரமபுருஷனுக்கு, கர்மத்தினால் விளையும் பிறவி, செயல், நாமம், ரூபம், குணம், தோஷம் இவற்றில் எதுவும் கிடையாது. ஆயினும், துஷ்டர்களை (கொடியவர்களை) அழிப்பதற்காகவும், சிஷ்டர்களைப் (நல்லவர்களைப்) பாதுகாப்பதற்காகவும், உரிய காலங்களில் அந்தப் பிறவி முதலியவைகளைத் தன் ஸங்கல்பத்தினால் ஏற்றுக்கொள்கிறான். அவன் என்னைப் பாதுகாப்பானாக.

அப்பரமபுருஷன் மேன்மையுடையவர்களான ப்ரஹ்மாதிகளுக்கும் ப்ரபு. ஸ்ருஷ்டி (படைப்பு), ஸ்திதி (காத்தல்), ஸம்ஹாரங்கள் (அழித்தல்) முதலிய அவனுடைய சக்திகள் அளவற்றவை. அவனுக்கு, கர்மத்தினால் விளையும் உருவம் கிடையாது. அவன், தன் ஸங்கல்பத்தினால் பல உருவங்களைக் கொள்ளும் தன்மையுடையவன். அவனுடைய செயல்கள் உலகத்தின் செயல்களைக்காட்டிலும் விலக்ஷணமாகையால் (வேறுபட்டவையாகையால்), அற்புதமாயிருக்கும். அத்தகைய பரமபுருஷனுக்கு நமஸ்காரம். அவன் ஸ்வயம்ப்ரகாசன் (தானே தோன்றுபவன்); எல்லாவற்றையும் ஒரே ஸமயத்தில் ஸாக்ஷாத்கரிக்கும் தன்மையுடையவன்; மூன்று லோகங்களிலும் உட்புகுந்து நியமித்துத் தரித்துக்கொண்டிருப்பவன்; வாக்குக்கும், மனத்திற்கும், ஸத்வம் (ஸத்வ குணம்) தலையெடுத்த சித்தத்திற்கும், எட்டாத மஹிமையுடையவன்; எவ்வகை ப்ரயோஜனங்களையும் விரும்பாமல், அனுஷ்டிக்கின்ற ஜ்ஞானிகளின் நிவ்ருத்தி கர்மத்தினால் (ஸம்ஸாரத்திலிருந்து விலகும் செயல்களால்) அடையத்தகுந்தவன்; மோக்ஷத்தைக் கொடுக்கும் ப்ரபு; துக்கமென்பது சிறிதும் தீண்டப்பெறாத ஜ்ஞானானந்த ஸ்வரூபன்; பசி, தாஹம் முதலிய ஊர்மிகள் (சோக (துன்பம்), மோஹ (மயக்கம், கலக்கம்), ஜரா (மூப்பு), மரண (இறப்பு), க்ஷுத் (பசி), பிபாஸா (தாஹம்) என்கிற ஆறு துன்ப அலைகள்) அற்றவன்; ஸாதுக்களுக்கு அனுகூலன்; துஷ்டர்களுக்குக் (கொடியவர்களுக்குக்) கொடியவன்; ஸம்ஸாரிகளுக்குத் தோற்றாமல் மறைந்திருப்பவன்; ஸத்வாதி குணங்களுக்கு ஆதாரன்; ஆயினும் அவற்றிற்கு உட்படமாட்டான்; ஹேய (கெட்ட) குணங்கள் எவையும் தீண்டப்பெறாதவன்; பக்ஷபாதம் (ஓரவஞ்சனை) அற்றவன்; ஞானக்கட்டியாய் (முழுவதும் அறிவு வடிவாய்) இருப்பவன். அத்தகைய ஸர்வேச்வரனுக்கு நமஸ்காரம்.

ஜகதீசா! நீ, ஜீவாத்மாக்களைச் சரீரமாகவுடையவன்; ஸர்வ ப்ராணிகளுக்கும் ப்ரபு; எல்லாவற்றையும் ஸாக்ஷாத்கரிக்கும் திறமையுடையவன்; ஸமஸ்த ப்ராணிகளிலும் உட்புகுந்து, அவர்களை நியமிப்பவன்; உனக்கு நீயே காரணனன்றி, உனக்கு மேற்பட்ட காரணவஸ்து ஒன்றும் கிடையாது. ஸமஸ்த லோகங்களுக்கும் நீயே உபாதான காரணன் (குடத்திற்கு மண் போல). அத்தகையனான உனக்கு நமஸ்காரம். நீ ஸமஸ்த இந்த்ரியங்களையும், அவற்றின் விஷயங்களான சப்தாதிகளையும், ஸர்வகாலத்திலும் ஸாக்ஷாத்கரிக்கின்றாய். ஸம்சயம் (ஸந்தேஹம்), விபரீத ஜ்ஞானம் (ஒரு வஸ்துவை நேர் எதிரிடையாக அறிவது; உதாரணம் – கயிற்றைப் பாம்பு என்று அறிவது), அன்யதா ஜ்ஞானம் (ஒரு வஸ்துவின் குணத்தை மாற்றி அறிவது; உதாரணம் – வெள்ளையான சங்கை மஞ்சளாகப் பார்ப்பது) முதலிய தர்மங்களுக்கு நீயே காரணன். ஒருவாறு நிலையுற்றிருக்கும் தன்மையற்றதும், நிழல் போல உன்னை விட்டுப் பிரியாதிருப்பதுமாகிய ப்ரக்ருதி, அசேதனமாகையால், அதற்கு இயற்கையில் ப்ரவ்ருத்திகள் சேராது. ஆகையால், அவை தமக்குக் காரணமான உன்னை அறிவிக்கின்றன. நீயே எல்லாவற்றையும் விளங்கச் செய்கின்றாய். நீ அப்ராக்ருதமான திவ்யமங்கள விக்ரஹமுடையவன். நீ ஸாதுக்களான யோகிகளுக்கே தோற்றும் தன்மையன். அத்தகைய உனக்கு நமஸ்காரம்.

நீயே ஸமஸ்த வஸ்துக்களுக்கும் காரணன். நீ உன்னைத்தவிர்த்த அனைத்து வஸ்துக்களையும் சரீரமாகவுடையவன். உனக்கு நீயே காரணனன்றி வேறொரு காரணம் கிடையாது. நீ ப்ரபஞ்சமாக விரியும் பொழுது உன் சரீரமாகிய சேதனா சேதனங்களே மாறுகின்றனவன்றி நீ என்றும் ஒருவாறாகவே இருக்கின்றாய். உருண்டையான மண், வாயும் வயிறுமுள்ள குடமாய் மாறுவது போல, நீ மாறுகிறதில்லை. குடத்திற்கு மண்போல, சேதனா சேதனங்களைச் சரீரமாகவுடைய நீயே, இந்த ப்ரபஞ்சத்திற்கு உபாதான காரணம். ஆகையால், உன்னுடைய காரணத்தன்மை அற்புதமாயிருக்கின்றது. ப்ரவாஹங்களெல்லாம் ஸமுத்ரத்தில் போய் விழுவது போல, பாஞ்சராத்ரம் முதலிய ஆகமங்களும், வேதங்களும் உன்னையே முக்யமாகக் கூறுகின்றன. மோக்ஷத்தைக் கொடுக்கும் ப்ரபு நீயே. மோக்ஷம் பெறுகின்றவர்களுக்கு அடையத் தகுந்த வஸ்துவும் நீயே. அத்தகைய உனக்கு நமஸ்காரம். ஸத்வாதி குண ஸ்வரூபமான ப்ரக்ருதியாகிற அரணிக்கட்டையில் மறைந்திருக்கின்ற ஜீவ ஸமஷ்டியாகிற (முழுமையான ஜீவ வர்க்கமாகிற) அக்னியை, நீ ஸம்ஹாரகாலத்தில் பானஞ் செய்கின்றாய். ஸ்ருஷ்டி காலத்தில், உன் ஸங்கல்பத்தினால், உன் சரீரமான சேதனா சேதனங்களைக்கொண்டு, ப்ரபஞ்சத்தைப் படைக்கின்றாய். நிவ்ருத்தி மார்க்கத்தை நடத்தி, மோக்ஷத்தைக் கொடுப்பவன் நீயே.  உன் ஸ்வரூபம், கேவலம் ஜ்ஞானானந்த மயமாயிருக்கும். அதை மனத்தினாலாவது, வாக்கினாலாவது அளவிட முடியாது.  மோக்ஷம் பெற்று, சாஸ்த்ர மர்யாதைகளைக் (வரையறைகளைக்) கடந்த முக்தர்களுக்கு நீ விளங்குகின்றாய். அத்தகைய உனக்கு நமஸ்காரம்.

உன்னையே சரணம் அடைந்த என்னைப் போன்ற ஸம்ஸாரிகளாகிற பசுக்களை (விலங்குகளை), கர்மபந்தமாகிற பாசத்தினின்றும் விடுவிக்கின்றாய்.  நீ ப்ரக்ருதிக்கு உட்பட்டவனல்லை.  நீ பேரருளாளன். உன்னிடத்தில் மனப்பற்றுடையவர், சப்தாதி விஷயங்களில் விளையும் விருப்பத்தை வெல்லுவார்கள். உன்னைப் பணிகின்றவர்கள், எவ்விதத்திலும் கெடுதியடையமாட்டார்கள். நீ, உனது அம்சமாகிய ஜீவாத்மாக்களுக்கு அந்தராத்மாவாய் இருக்கின்றனையாகையால், ஜீவாத்மாக்களாகத் தோற்றுகின்றாய். நீ ஷாட்குண்ய பூர்ணன் (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவன்). உன் ஸ்வரூப ஸ்வபாவங்கள் அளவிடக்கூடாதவை. அத்தகைய உனக்கு நமஸ்காரம்.

தேஹம், பிள்ளை, நண்பன், வீடு, பணம், பரிஜனங்கள் இவர்களிடத்தில் மனப்பற்றுடையவர், எவ்வளவு வருந்தியும் உன்னைப் பெறமாட்டார்கள்.  நீ சப்தாதி விஷயங்களில் பற்றற்றவன். ராகம் (விருப்பு, வெறுப்பு) முதலிய தோஷங்களால் தீண்டப்படாத மனமுடைய பெரியோர்கள், உன்னைத் தங்கள் ஹ்ருதயங்களில் த்யானிக்கிறார்கள். நீ ஜ்ஞானஸ்வரூபன். நீ எல்லாரையும் அடக்கி ஆள்கின்றாய். ஷாட்குண்ய பூர்ணன். உனக்கு நமஸ்காரம். தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் என்கிற புருஷார்த்தங்களை விரும்புகிறவர்கள், எவனைப் பணிந்து, தாங்கள் விரும்பின தர்மம் முதலிய பலன்களைப் பெறுகின்றார்களோ, எவன் அவர்களுக்கு மற்றும் பல விருப்பங்களையும் கொடுத்து, அழிவில்லாத தேஹத்தையும் கொடுக்கின்றானோ, பெருங்கருணையுடைய அந்தப் பரமபுருஷன் எனக்கு மோக்ஷத்தைக் கொடுப்பானாக. ஒரு ப்ரயோஜனத்தையும் விரும்பாமல் பகவானைச் சரணமடைந்தவர்கள், மிகவும் அற்புதமாயிருப்பதும் மிக்க மங்களமுமான அவனுடைய சரித்ரங்களைப் பாடிக் கொண்டு, அவன் குணங்களை அனுபவிக்கையால் உண்டான ஆனந்தமாகிற ஸமுத்ரத்தில் மூழ்கி, அவனிடத்தினின்றும் எந்தப் புருஷார்த்தத்தையும் விரும்பமாட்டார்கள். அவன் என்றும் அழியாதவன்; பரப்ரஹ்மமென்று ஒதப்படுகின்றவன்; மேன்மையுடையவர்களான ப்ரஹ்மாதிகளுக்கும் மேலாயிருப்பவன்; கண் முதலியவற்றிற்கு எட்டாதவன்; பக்தி யோகத்தினால் மாத்ரமே அடையத் தகுந்தவன்; வெகு தூரத்திலிருக்கும் ஸூக்ஷ்ம (நுட்பமான) வஸ்துபோல, இந்த்ரியங்களுக்கு விஷயமாகாதவன், ஸூக்ஷ்மமான (நுட்பமான) வஸ்துவைக் காட்டிலும் ஸூக்ஷ்மமாய் (நுட்பமாய்) இருப்பவன்; பக்தியைத் தவிர, மற்ற உபாயங்களுக்கு எட்டாதவனாகையால், வெகு தூரத்திலிருப்பவன்; தேச, கால, வஸ்து, பரிச்சேதங்கள் மூன்றுமற்றவன்; ஆதிமூலன்; எல்லாவற்றிலும் உள்ளும் புறமும் நிறைந்திருப்பவன்; அவாப்தஸமஸ்தகாமன் (விரும்பியது அனைத்தும் அடையப்பெற்றவன்). நான் அத்தகைய பரமபுருஷனைத் துதிக்கிறேன்.

ப்ரஹ்மதேவன் முதலிய தேவதைகளும், ஜங்கம (அசையும்) ஸ்தாவர (அசையாத) ரூபமான ஸமஸ்த லோகங்களும், வேதங்களும் ஆகிய இவையெல்லாவற்றையும் அப்பரமபுருஷன் தன்னுடைய ஸங்கல்ப சக்தியின் கோடியில் ஒருபாகத்தின் பதினாயிரத்தில் ஒரு அம்சத்தினால், நாம (பெயர்) ரூப (உருவம்) விகாரங்களுக்கு (மாறுபாடுகளுக்கு) இடமாயிருக்குமாறு நிர்மித்து, தரித்துக்கொண்டிருக்கிறான். அக்னியினிடத்தினின்று ஜ்வாலைகள் கிளம்பி, அதினிடத்திலேயே மறைவது போலவும், ஸூர்யனிடத்தினின்று கிரணங்கள் கிளம்பி, அவனிடத்திலேயே மறைவது போலவும், புத்தி, மனம், இந்திரியங்கள் தேவ மனுஷ்யாதி சரீரங்கள் இவை அடங்கியதும், ப்ரக்ருதியின் பரிணாமமுமாகிய (மாற்றமுமான) இந்த ப்ரபஞ்சமெல்லாம், அந்தப் பரமபுருஷனிடத்தினின்றும் வெளித்தோன்றி, அவனிடத்திலேயே மறைகின்றன. அத்தகையனான அந்தப்பரமபுருஷன், தேவனுமல்லன்; அஸுரனுமல்லன்; மனுஷ்யனுமல்லன்; திர்யக்குமல்லன்; ஆணுமல்லன்; பெண்ணுமல்லன்; மற்ற நபும்ஸகனுமல்லன் (அலியும் அல்லன்); எவ்வகை ப்ராணியுமல்லன்; குணமுமல்லன்; கர்மமுமல்லன்; ஆகையால், சேதன வர்க்கத்திலும் சேர்ந்தவனல்லன்; அசேதனவர்க்கத்திலும் சேர்ந்தவனல்லன். 

அவன் இவ்வாறு நிஷேதிக்கப்பட்ட வஸ்துக்களைக் காட்டிலும் விலக்ஷணனாகி (வேறுபட்டவனாகி), அவற்றில் நிறைந்து, அவையெல்லாம் தானேயாயிருப்பவன். கெட்ட குணங்கள் எவையும் தீண்டப்பெறாதவனென்று ச்ருதிகள் சொல்லுகையாலும், நற்குணங்களை நிஷேதிக்காமையாலும், ஸமஸ்த கல்யாண குணநிதியென்று அவற்றால் நிரூபிக்கப்பட்டவன். அத்தகைய ஸர்வேச்வரன், என்னுடைய பாபங்களைப் போக்கி, மேன்மையுடன் விளக்கமுற்றிருப்பானாக. நான் இந்த முதலையினின்று விடுபட்டு, பிழைக்க வேண்டுமென்று விரும்பவில்லை. உள்ளும் புறமும் மறைத்துக்கொண்டு, அஹங்கார (நான்) மமகாரங்களை (எனது) விளைக்கின்ற இந்த யானை ஜன்மத்தினால் என்ன புருஷார்த்தம் (பயன்)? ப்ரக்ருதி ஸம்பந்தத்தை விளைத்து, ஆத்ம ஸ்வரூபத்தை மறைத்துக்கொண்டிருக்கிற கர்மத்தினின்று விடுபடுகையாகிற மோக்ஷத்தையே, நான் விரும்புகிறேன். மோக்ஷத்தை அடைந்தவர்கள், எத்தனை காலம் கடந்தாலும், அதினின்று மீளாமல் மஹானந்தத்தை அனுபவிப்பார்களல்லவா? ஆகையால், அவன் எனக்கு அந்த மோக்ஷத்தைக் கொடுப்பானாக.

ஜகத்தையெல்லாம் படைக்கின்றவனும், ஜகத்தைச் சரீரமாகவுடையவனும், அந்த ஜகத்தைக்காட்டிலும் விலக்ஷணமாயிருப்பவனும் (வேறாய் இருப்பவனும்), எல்லாமறிந்தவனும், ஜகத்திற்குப் புருஷார்த்தமாயிருப்பவனும், ஜகத்திற்குள் நுழைந்து தரித்துக்கொண்டிருப்பவனும், கர்மத்தினால் விளையும் பிறவியற்றவனும், குணங்கள் நிறைந்தவனும், பரம ப்ராப்யனுமாகிய (அடையப்பட வேண்டிய மிக உயர்ந்த வஸ்துவாகிய) அப்பரமபுருஷனை, நான் மோக்ஷத்தை விரும்பி வணங்குகிறேன். அவனை அருள் புரிவித்துக்கொள்வதற்கு வணக்கத்தையொழிய வேறொரு உபாயமும் எனக்குத் தெரியவில்லை. யோகத்தினால், புண்ய, பாப கர்மங்களையெல்லாம் தஹித்த யோகிகள், யோகத்தினால் சுத்தி செய்யப்பட்ட தங்கள் ஹ்ருதயத்தில், அவனை ஸாக்ஷாத்கரிக்கிறார்கள். யோகீச்வரனான அப்பரமபுருஷனை, அத்தகைய சக்தியற்ற நான் வெறுமனே பணிகிறேன்.

ஜகதீசா! ஸ்ருஷ்டி (படைப்பு), ஸ்திதி (காத்தல்), ஸம்ஹாரங்கள் (அழித்தல்) என்கிற மூன்று வகையான உன் சக்திகளின் வேகத்தை எவராலும் தடுக்கமுடியாது. நீ  சேராதவற்றையும் சேர்க்கும் திறமையுடையவன். புத்தியின் குணங்களான ஸம்சயம் (ஸந்தேஹம்), விபர்யயம் (ஒரு வஸ்துவை நேர் எதிரிடையாக அறிவது; உதாரணம் – கயிற்றைப் பாம்பு என்று அறிவது), முதலியவையெல்லாம் உன்னிடத்தினின்றே உண்டாகின்றன. நீ உன்னைச் சரணம் அடைந்தவர்களை பாதுகாக்கும் தன்மையன். உன்னுடைய சக்திகள் எல்லையில்லாதவை. இந்த்ரியங்களை வெல்லாதவர்கள் உன்னுடைய உண்மையை அறியமாட்டார்கள். அத்தகையனான உனக்கு அடிக்கடி நமஸ்காரம். இந்த பரபஞ்சத்திலுள்ள ஜனங்கள் அனைவரும் எவனுடைய மாயையினால் தேஹத்தையே ஆத்மாவாக ப்ரமித்து, ஆத்மஸவரூபத்தைப் பாழ்செய்து, அவ்வாறு பாழடைவதையும் அறியாதிருக்கிறார்களோ, எவனுடைய மஹிமையை ஒருவராலும் கடக்க முடியாதோ, அப்படிப்பட்ட பகவானை வணங்குகிறேன்.

ஸ்ரீ சுகர் சொல்லுகிறார்:- அந்த கஜேந்த்ரம், ப்ரஹ்மாதிகளான தேவதைகளில் எவரையும் விசேஷித்துக் குறிக்காமல், ஹேய குணங்களற்ற பரமபுருஷனுடைய ஸ்வரூபத்தை வர்ணித்து, சரணமடைகையில், ப்ரஹ்மாதி தேவதைகள் ஹம்ஸ வாஹனம் முதலான தம்முடைய அடையாளங்களிலும், நான்முகனாயிருக்கை முதலிய வேறுபாட்டிலும் அபிமானமுடையவர்களாகையால், அது அவற்றைக் குறிக்காமையால், அத்தேவர்களில் ஒருவரும் அதனிடம் வரவில்லை. அப்பொழுது, ஸமஸ்த தேவ ஸ்வரூபியான ஹரியென்னும் பகவான், அந்த யானை வர்ணித்த குணங்களெல்லாம் அமைந்தவனாகையால், தானே தோன்றினான். கஜேந்த்ரன் முதலையினால் பிடியுண்டு வருந்துவதைக் கண்டு, அது செய்த ஸ்தோத்ரத்தைக் கேட்டு, ஸமஸ்த ஜகத்திற்கும் அந்தராத்மாவான பரமபுருஷன், வேதஸ்வரூபனான கருடன் மேல் ஏறி, சக்ராயுதத்தை ஏந்திக்கொண்டு, தன்னைத் துதி செய்கின்ற  தேவதைகளுடன், கஜேந்த்ரம் இருக்குமிடத்திற்கு விரைந்தோடி வந்தான். அங்குத் தடாகத்திற்குள் வலிவுடைய முதலையினால் பிடியுண்டு வருந்துகின்ற அந்தக் கஜேந்தரம், கருடன் மேல் ஏறி, சக்ராயுதத்தை ஏந்திக் கொண்டிருக்கின்ற பகவானை ஆகாயத்தில் கண்டு, தாமரைப் பூவுடன் கூடின துதிக்கையைத் தூக்கி, மிக்க வருத்தத்துடன் “நாராயணா! ஸமஸ்த லோகங்களுக்கும் குருவே! பகவானே! உனக்கு நமஸ்காரம்” என்னும் இவ்வார்த்தையை மொழிந்தது. அப்பால் ஸ்ரீஹரி வருந்துகின்ற கஜேந்தரத்தைப் பார்த்துக் கருணையுடன் சீக்ரமாகக் கீழேயிறங்கி முதலையோடு கூடின கஜேந்த்ரத்தை விரைவுடன் எடுத்துக் கரையேற்றி, உடனே தேவதைகள் பார்த்துக் கொண்டிருக்கையில், சக்ராயுதத்தினால் முதலையின் வாயைப் பிளந்து கஜேந்தரத்தை விடுவித்தான். 

மூன்றாவது அத்தியாயம் முற்றிற்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக