வியாழன், 13 ஆகஸ்ட், 2020

ஶ்ரீமத் பாகவதம் - 170

 எட்டாவது ஸ்கந்தம் – இரண்டாவது அத்தியாயம்

(கஜேந்த்ர மோக்ஷ வ்ருத்தாந்தம்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- மன்னவனே! திரிகூடமென்று பேர்பெற்ற ஒரு பர்வதம் (மலை) இருக்கிறது. அது பால் ஸமுத்ரத்தினால் சூழப்பட்டிருக்கும்; மிகுந்த அழகுடையது. அது பதினாயிரம் யோஜனைகள் உயர்ந்திருக்கும்; நாற்புறத்திலும் அவ்வளவு விஸ்தாரமுடையது. அதற்கு வெள்ளியும், இரும்பும், பொன்னுமாகிய மூன்று சிகரங்கள் உண்டு. அப்பர்வதம் அம்மூன்று சிகரங்களால் ஸமுத்ரத்தையும், திசைகளையும் விளங்கச் செய்கின்றது. ரத்னங்களாலும் தாதுக்களாலும் (தங்கம், வெள்ளி, இரும்பு முதலிய கனிமங்களாலும்) விசித்ரங்களான மற்றும் பல சிகரங்களாலும் திசைகளைத் திகழச் செய்கின்றது. பலவகையான வ்ருக்ஷங்களும் (மரங்களும்), கொடி, செடிகளும், புதர்களும் அருவிகளின் கோஷங்களும் (ஓசைகளும்) அதில் அமைந்திருக்கும். பால் ஸமுத்ரத்தின் அலைகள் அப்பர்வதத்தின் தாழ்வரைகள்மேல் நாற்புறத்திலும் மோதி அலம்புகின்றன. பச்சை நிறமுடைய மரகத ரத்னங்களால் அப்பர்வதம் முழுவதும் பச்சை நிறமாயிருக்கும். அம்மலையின் சரிவுகளில் ஸித்தர்களும், சாரணர்களும், கந்தர்வர்களும், வித்யாதரர்களும், உரகர்களும், கின்னரர்களும், அப்ஸர ஸ்த்ரீகளும் விளையாடிக் கொண்டிருப்பார்கள். மற்றும், தம் வீர்யத்தைப் புகழும் தன்மையுடைய ஸிம்ஹங்கள் குஹைகளில் இருந்து நடத்துகிற கின்னராதிகளின் ஸங்கீத கோஷத்தைக் கேட்டு வேறு ஸிம்ஹங்கள் வந்து கர்ஜனை செய்கின்றனவென்று நினைத்து அதைப் பொறுக்க முடியாமல் எதிர்த்துக் கர்ஜனை செய்கின்றன. 

அப்பர்வதம் சரிவுகளிலுள்ள பலவகை அரண்யங்களில் (காடுகளில்) உலாவுகின்ற யானை, குதிரை, கடா முதலிய நாற்கால் ஜந்துக்களால் அழகாயிருக்கும். மற்றும், அதில் தேவதைகள் இறங்கி விளையாடுவதற்கு உரிய பலவகை உத்யானங்கள் (தோட்டங்கள்) விளங்குகின்றன. அவற்றில் ஆச்சர்யமான வ்ருக்ஷங்கள் (மரங்கள்) திகழ்கின்றன. அவற்றில் பற்பல பறவைகள் இனிய குரலுடன் குலாவிக் கொண்டிருக்கும். நிர்மலமான ஜலமுடைய நதிகளும், தடங்களும் அங்கு நிறைந்திருக்கும். அவற்றில் ரத்னங்களே மணலாகப் பெற்ற மணற்குன்றுகள் பற்பலவும் திகழ்வுற்றிருக்கும். அவ்விடத்திலுள்ள ஜலமும் காற்றும் தெய்வ மடந்தையர் ஸ்னானம் செய்யும்பொழுது உடம்பில் பூசுகிற வாஸனை வஸ்துக்களால் பரிமளித்துக் கொண்டிருக்கும். இத்தகையதான அந்த திரிகூடபர்வதத்தின் சாரலில் மஹானுபாவனாகிய வருணனுடைய உத்யானம் (தோட்டம்) திகழ்கின்றது. அது ருதுமத்தென்னும் பேருடையது. அதில் தெய்வ மடந்தையர்கள் ஸர்வகாலமும் விளையாடிக் கொண்டிருப்பார்கள்.

புஷ்பங்களும், பழங்களும் என்றும் மாறாதிருக்கப் பெற்ற பலவகை ஆச்சர்யமான வ்ருக்ஷங்களால் (மரங்களால்) அவ்வுத்யானம் (தோட்டம்) நாற்புறங்களிலும் அலங்கரிக்கப்பட்டிருக்கும். மந்தார வ்ருக்ஷங்களும் பாரிஜாத வ்ருக்ஷங்களும், பாதிரி மரங்களும், அசோக வ்ருக்ஷங்களும், சம்பக மரங்களும், மாமரங்களும், ராஜாதன வ்ருக்ஷங்களும், பலா மரங்களும், தேன்மாமரங்களும், காட்டு மாமரங்களும், பாக்கு மரங்களும், தென்னை மரங்களும், பேரீச்சை மரங்களும், மாதுளை மரங்களும், இலுப்பை மரங்களும், பனை மரங்களும், மராமரங்களும், பச்சிலை மரங்களும், வேங்கை மரங்களும், மலைமல்லி மரங்களும், அரிஷ்ட வ்ருக்ஷங்களும், அத்தி மரங்களும், கல்லால மரங்களும், ஆலமரங்களும் பலாசு மரங்களும், சந்தன மரங்களும், வேப்ப மரங்களும், கோவிதார வ்ருக்ஷங்களும், ஸரள வ்ருக்ஷங்களும், தேவதாரு வ்ருக்ஷங்களும், த்ராக்ஷைக் கொடிகளும், கரும்புகளும், வாழைமரங்களும், நாவல் மரங்களும், இலந்தை மரங்களும், தானி மரங்களும், கடுக்காய் மரங்களும், நெல்லி மரங்களும், பில்வ மரங்களும், விளா மரங்களும், எலுமிச்ச மரங்களும், சேரா மரங்களும் அந்த உத்யானத்தில் (தோட்டத்தில்) நிறைந்திருக்கும். 

அவ்வுத்யானத்தில் (தோட்டத்தில்) மிகவும் பெரிய ஒரு தடாகம் (நீர் நிலை, குளம்) இருக்கின்றது. அதில் ஸ்வர்ணமயமான தாமரை மலர்களும், ஸாதாரணமான தாமரைகளும், ஆம்பல்களும், நெய்தல்களும், செங்கழுநீர்களும் மலர்ந்து மிகவும் அழகாயிருக்கும். அந்தத் தடாகத்தில் வண்டுகள் மதித்து முரன்று கொண்டிருக்கும். மற்றும் பல பறவைகளும் இனிய குரலுடன் குலாவிக் கொண்டிருக்கும். ஹம்ஸங்களும், நீர்க்காகங்களும், சக்ரவாகங்களும், ஸாரஸப் பறவைகளும் அங்கு மிகுந்திருக்கும்.  நீர்க்கோழிகளும், கோயஷ்டிப் பறவைகளும், கள்ளிக் காக்கைகளும் இனிதாகக் கூவிக்கொண்டிருக்கும். இங்குமங்கும் உலாவுகின்ற மீன்களாலும், ஆமைகளாலும் அசைக்கப்பட்ட தாமரை மலர்களினின்று உதிர்கின்ற தூட்களால் அத்தடாகத்தின் ஜலம் பரிமளித்துக் கொண்டிருக்கும். அங்கு நிலக்கடப்ப மரங்களும், நீர்வஞ்சிக் கொடிகளும், நளச்செடிகளும், நீர்க்கடப்ப மரங்களும், மகிழமரங்களும், குருந்தச்செடிகளும், மருதோன்றிச் செடிகளும், அசோக மரங்களும், காட்டுவாகை மரங்களும், மலைமல்லி மரங்களும், இங்குண மரங்களும், குப்ஜகங்களும், ஸ்வர்ண யூதிகளும், நாக வ்ருக்ஷங்களும், புன்னைமரங்களும், ஜாதிமல்லிகளும், மல்லிகளும், தாமரைகளும், குருக்கத்திகளும் மற்றும் பலவகை மரங்களும் செடி, கொடிகளும் புஷ்பித்து மிகவும் அழகாயிருக்கும். அந்தத் தடத்தின் கரையில் மற்றும் பலவகை வ்ருக்ஷங்கள் தளிர், பூ, காய், பழம் முதலியன என்றும் மாறாதிருக்கப் பெற்று மிகவும் மனோஹரமாயிருக்கும்.

ஒருகாலத்தில் அப்பர்வதத்தின் காடுகளில் ஸஞ்சரித்துக் கொண்டிருப்பதும் யானைக் கூட்டங்களில் தலைமையுள்ளதுமாகிய ஒரு யானை பெண் யானைகளுடன் முட்களும், மூங்கில்களும், பரம்புகளும் நிறைந்த புதர்களையும், மரங்களையும் முரித்துக்கொண்டு தண்ணீர் குடிக்க விரும்பி அத்தடாகத்தின் அருகே வந்தது. அந்தக் கஜேந்த்ரத்திரனுடைய மதஜலத்தின் (யானையின் முகத்திலிருந்து வழியும் நீர்) பரிமளத்தை முகந்த மாத்ரத்தில் ஸிம்ஹங்களும், மேன்மையுடைய மற்ற யானைகளும், புலி முதலிய துஷ்ட மிருகங்களும், கட்க மிருகங்களும் மஹா ஸர்ப்பங்களும், வெள்ளைச்சரப மிருகங்களும், கறுப்புச்சரப மிருகங்களும் பயந்தோடுகின்றன. சமர ம்ருகங்களும், செந்நாய்களும், பன்றிகளும், கிடாய்களும், கரடிகளும், முள்ளம்பன்றிகளும், கருங்குரங்குகளும், ஸாலாவ்ருக மிருகங்களும், குரங்குகளும், மான்களும், முயல்களும் மற்றுமுள்ள அற்ப மிருகங்களும் “நம்மை ஒன்றுஞ் செய்யாது” என்று அதன் அனுமதியினால் நிர்ப்பயமாய் (பயமின்றி) உலாவிக் கொண்டிருக்கும். 

மதஜலம் (யானையின் முகத்திலிருந்து வழியும் நீர்) பெருகப்பெற்ற அந்தக் கஜேந்தரத்தை வண்டினங்கள் மதஜலம் (யானையின் முகத்திலிருந்து வழியும் நீர்) பருகுவதற்காக ஓயாமல் சுற்றிச் சூழ்ந்து கொண்டிருக்கும், அது நடக்கும்பொழுது மிகவும் பருத்திருக்கின்ற அதன் சரீரத்தினுடைய பாரத்தைப் பொறுக்கமுடியாமல் அப்பர்வதம் நடுங்கும். பெண் யானைகளோடும் யானைக் குட்டிகளோடுங்கூடி நெடுந்தூரம் உலாவி வருகின்ற அக்கஜேந்தரம் வெயிலில் அடிபட்டு மதத்தினால் கண்கள் சுழலப்பெற்றுத் தன்னுடன் வருகின்ற யானைக் கூட்டமும், தானும் தண்ணீர் குடிக்க விரும்பித் தாமரை மலர்களின் தூட்களை அடித்துக்கொண்டு அத்தடாகத்தினின்று வீசுகிற காற்றின் வாஸனையை வெகுதூரத்தில் மோந்து அவ்விடம் வந்து அத்தடத்தில் இழிந்து ஸ்வர்ணமயமான தாமரை மலர்களின் தூட்களால் பரிமளித்துக் கொண்டிருப்பதும் அம்ருதம் போன்ற ருசியுடையதுமாகிய ஜலத்தைத் துதிக்கையால் எடுத்து உடம்பெல்லாம் கொட்டி நனைத்து வருத்தமெல்லாம் தீரப்பெற்று வேண்டினவளவு பானம் செய்தது. 

இல்லற வாழ்க்கையில் மனப்பற்றுடையவன் பெண்டிர்களோடு விளையாடுவதுபோல, அந்த யானை தன் துதிக்கையில் ஜலத்தையெடுத்துக் கொடிய மதமுடைய யானைகுட்டிகளையும் பெண் யானைகளையும் அபிஷேகம் செய்வதும் குடிக்கச்செய்வதும் கர்ஜிப்பதுமாகிப் பகவானுடைய மாயையால் தனக்கு நேர்ந்த துக்கத்தைச் சிறிதும் ஆலோசிக்காமலே விளையாடிக் கொண்டிருந்தது. 

மன்னவனே! அக்குளத்தில் வாஸம் செய்வதாகிய வலிவுள்ள (பலம் உள்ள) ஒரு முதலை தெய்வத்தினால் தூண்டப்பட்டு அந்தக் கஜேந்த்ரத்தைக் கோபத்துடன் பாதத்தில் பிடித்துக்கொண்டது. மிகுந்த பலமுடைய அந்தக் கஜேந்த்ரம் தெய்வாதீனமாய் வ்யஸனத்தில் (துக்கத்தில்) அலைப்புண்டு (வருத்தமுற்று) பலமுள்ளவரையில் அதினின்று தன்னை விடுவித்துக்கொள்ள ப்ரயத்னம் (முயற்சி) செய்தது. மஹாபலமுடையதான முதலையால் பலமுள்ளவளவும் இழுக்கப்பட்டு வருந்துகின்ற கஜேந்த்ரத்தைக் கண்டு பெண்யானைகள் மன இரக்கத்துடன் பிளிறின. உதவியாயிருந்த மற்ற யானைகளும் அதை அந்த வருத்தத்தினின்றும் விடுவிக்கவல்லவையாய் இருக்கவில்லை. யானை கரைக்கும் முதலை ஜலத்திற்குமாக ஒன்றையொன்று வலிவுடன் இழுத்து “மஹாபலமுடைய அவ்விரண்டும் சண்டையிட்டுக் கொண்டிருக்கையில் ஆயிரமாண்டுகள் சென்றன”. தேவதைகள்  அதைக்கண்டு வியப்புற்றார்கள். பிறகு, நெடுங்காலமாய் ஜலத்தில் முதலையால் இழுக்கப்பட்டு வருந்துகின்ற கஜேந்தரத்திற்கு மனோபலம் (மனதின் சக்தி), தேஹபலம் (உடலின் சக்தி), இந்தரியபலம் (இந்த்ரியங்களின் சக்தி) இவையெல்லாம் நெடுந்தூரம் அழிந்துபோயின. ஜலத்தில் வாஸஞ்செய்யுந் தன்மையுடைய முதலைக்கு அவையெல்லாம் வளர்ந்தன. 

அக்கஜேந்தரம் இவ்வாறு ப்ராண ஸம்சயம் (உயிர் பிரியுமோ என்று ஸந்தேஹம்) நேரப்பெற்று ஸ்வாதீனமற்று எவ்வளவு ப்ரயத்னம் (முயற்சி) செய்தும் தன்னை விடுவித்துக்கொள்ள முடியாமல் நெடுநேரம் ஆலோசித்துக் கொண்டிருந்தது. அப்பால் அதற்கு இவ்வாறு புத்தி உண்டாயிற்று. “இவ்வாறு வருந்துகின்ற என்னை என் பந்துக்களான இந்த யானைகள் விடுவிக்க வல்லமையற்றிருக்கின்றன. நான் இத்தனைகாலம் ப்ரயத்னம் (முயற்சி) செய்தும் வல்லனாகவில்லை. இனி இப்பெண்யானைகள் எவ்வாறு என்னை விடுவிக்கப் போகின்றன? ஆகையால் தெய்வத்தின் பாசம் போன்ற முதலையால் பிடியுண்டிருக்கிற நான் ஸர்வஸ்மாத்பரனான (எல்லாவற்றைக்காட்டிலும் மேலானவனான) அந்தப் பரமபுருஷனையே சரணம் அடைகிறேன். 

எவனுடைய ஸங்கல்பத்தினால் நான் இந்த முதலையினிடம் அகப்பட்டு வருந்துகிறேனோ அந்த ஸர்வேச்வரனையே சரணம் அடைகிறேன். எவன் மஹாபலிஷ்டனான ம்ருத்யுவாகிற ஸர்ப்பத்தினின்று பயந்து தன்னைச் சரணம் அடைந்தவர்களைப் பாதுகாக்கின்றானோ, எவனிடத்தில் ம்ருத்யுவும் பயந்தோடுகின்றானோ, அப்படிப்பட்ட ஸர்வேச்வரனையே நான் சரணம் அடைவேனாக”. 

இரண்டாவது அத்தியாயம் முற்றிற்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக