ஶ்ரீமத் பாகவதம் - 169

 அஷ்டம (எட்டாவது) ஸ்கந்தம் – முதலாவது அத்தியாயம்

(ஸ்வாயம்புவன், ஸ்வரோசிஷன், உத்தமன், தாமஸன் என்னும் நான்கு மனுக்களைக் கூறுதல்)

பரீக்ஷித்து மன்னவன் சொல்லுகிறான்:- அஜ்ஞான அந்தகாரத்தைப் (அறிவின்மை என்னும் இருட்டைப்) போக்கும் குருவான ஸ்ரீசுகமஹர்ஷியே! இதுவரையில் ஸ்வாயம்புவ மனுவின் வம்சத்தை நீர் விவரித்துச் சொல்லக் கேட்டேன். அவ்வம்சத்தில் சேர்ந்த ப்ராஹ்மண, க்ஷத்ரிய, வைச்ய, சூத்ரர்களென்கிற நான்கு வர்ணத்தவர்கள் அனுஷ்டிக்க வேண்டிய பற்பல வகையான அழகிய தர்மங்களையும், ப்ரஜாபதிகளான மரீசி முதலியவர்களின் ஸ்ருஷ்டி (படைப்பு) க்ரமத்தையும் (முறையையும்), நீர் சொல்லக் கேட்டேன். இனி, மற்ற மனுக்களின் சரித்ரங்களையும், அவர்கள் வம்சங்களையும் சொல்வீராக.

இணையெதிரில்லாத மஹானுபாவனும், தன்னைப் பற்றினாருடைய பாபங்களைப் போக்கும் தன்மையனுமாகிய பகவானுடைய அவதாரங்களையும், சரித்ரங்களையும், எந்தெந்த மன்வந்தரங்களில் பண்டிதர்கள் பாடுகிறார்களோ, அந்தந்த மன்வந்தர சரித்ரங்களையெல்லாம் கேட்க விரும்புகிற எனக்கு அவற்றைச் சொல்வீராக. ஜகத்ரக்ஷகனான பகவான், நடந்த மன்வந்தரத்தில் செய்தவைகளையும், நடக்கிற மன்வந்தரத்தில் செய்கின்றவைகளையும், நடக்கப்போகிற மன்வந்தரத்தில் செய்யப்போகிறவைகளையும், எனக்குச் சொல்வீராக.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- இப்பொழுது நடக்கும் கல்பத்தில் ஸ்வாயம்புவன் முதலிய ஆறு மனுக்கள் கடந்தார்கள். அவர்களில் முதல்வனான ஸ்வாயம்புவ மனுவின் வம்சத்தில் தேவாதிகளான ஸமஸ்த ப்ராணிகளும் பிறந்தார்கள். அவனுடைய வம்சத்தையும், சரித்ரத்தையும், உனக்கு விஸ்தாரமாகச் (விரிவாகச்) சொன்னேன். அந்த மனுவின் பெண்களான ஆஹூதி, தேவஹூதி என்னும் இருவரிடத்திலும் ஷாட்குண்ய பூர்ணனான (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப் பெற்றவனுமான) ஸர்வேச்வரன் கபிலனென்றும், யஜ்ஞனென்றும் இரண்டு உருவங்களால் பிள்ளையாகப் பிறந்தான். அவர்களில், மஹானுபாவரான கபிலருடைய வ்ருத்தாந்தத்தை நான் சொல்லக் கேட்டாயல்லவா? இப்பொழுது யஜ்ஞனென்னும் பகவானுடைய சரித்ரத்தைச் சொல்லுகிறேன், கேட்பாயாக. 

சதரூபையின் பர்த்தாவும், ப்ரபுவுமாகிய, ஸ்வாயம்புவமனு சப்தாதி விஷயபோகங்களில் மனவிருப்பமற்று, ராஜ்யத்தைத் துறந்து, தவம் செய்யமுயன்று, பார்யையுடன் (மனைவியுடன்) வனத்திற்குச் சென்றான். அவன், ஸுநந்தையென்னும் நதியின் கரையில் ஒற்றைக்காலால் பூமியை ஸ்பர்சித்து நின்று, நூறு வர்ஷங்கள் வரையில் கடுமையான தவம் செய்துகொண்டு இவ்வாறு மொழிந்தான்.

ஸ்வாயம்புவமனு சொல்லுகிறான்:- இவ்வுலகமெல்லாம் பரமாத்மாவால் கார்யங்களில் முயற்சி கொள்கின்றன. அவனை, இவ்வுலகம் கார்யங்களில் முயற்சிகொள்ளும்படி செய்யவல்லதன்று. அவன் தானாகவே கார்யங்களில் முயற்சி கொள்கிறான். இவ்வுலகமெல்லாம் ஆத்ம, பரமாத்மாக்களின் உண்மையை அறியாமல், ப்ரக்ருதி ஸம்பந்தத்தினால் மதிமயங்கி, தேஹாத்ம ப்ரமாதிகளால் (இந்த உடலே ஆத்மா என்கிற தவறான எண்ணம், நாம் நம் விருப்பப்படி செயல்பட வல்லவர்கள்; பகவான் உட்பட யாருக்கும் அடங்கியவர்கள் அன்று என்கிற மற்றொரு தவறான எண்ணம் முதலிய மனக்கலக்கங்காளால்) படுத்துறங்கினாற் போலிருக்கையில், அப்பரமாத்மா ஸர்வகாலமும் ப்ரக்ருதிக்கு (பகவானின் ஆச்சர்ய சக்தியான, ஸத்வ, ரஜஸ், தமஸ் என்கிற மூன்று குணங்களுடன் கூடிய, மூலப்பக்ருதி என்கிற அசேதன வஸ்துவிற்கு) உட்படாமல் விழித்துக் கொண்டிருக்கிறான். ஆகையால், அவனே இவ்வுலகத்தை அறிகின்றான். இவ்வுலகத்திலுள்ள சேதன (ஜீவாத்மக்கள்) அசேதன ரூபமான (அறிவற்ற ஜடப்பொருட்கள்) ஸமஸ்த வஸ்துக்களையும் அவன் உட்புகுந்து நியமித்துத் தரித்துக் கொண்டிருக்கிறான். அவனுக்கு உட்படாமல் ஸ்வதந்த்ரமாயிருக்கும் வஸ்து எதுவுமே இல்லை. அத்தகைய வஸ்து உண்டென்று நினைக்க வேண்டாம். தேஹமும் அதைத்தொடர்ந்த, பிள்ளை, பெண்டிர் முதலியவர்களும், வீடு, வாசல், பணம், நீர், நிலம் முதலிய மற்றவைகளும் அவனுக்குச் சேஷப்பட்டவைகளே (உடைமைகளே; அந்த பகவானுடைய ப்ரயோஜனத்திற்காகவே ஏற்பட்டவை). அவற்றில் எதையும் என்னுடையதென்னும் அபிமானத்துடன் விரும்பவேண்டாம். ஜீவனுடைய ஜ்ஞானம்போல் பரமபுருஷனுடைய ஜ்ஞானம் கர்மத்தினால் ஸங்கோசத்தை (குறைவை) அடைகிறதில்லை. அவன் எல்லாவற்றையும் ஒரே தடவையில் ஸாக்ஷாத்கரிக்கும் (அறியும்) திறமை உடையவன். ஜீவாத்மாக்கள், கர்மத்தினால் ஜ்ஞான ஸங்கோசம் (குறைவு) உடையவராகையால், அவனை ஸாக்ஷாத்கரிக்க (அறிய) வல்லரல்லர். ஸமஸ்த பூதங்களுக்கும் ஆதாரனும், தன்னுடைய தேஜஸ்ஸினால் ப்ரகாசித்துக் கொண்டிருப்பவனும், சரீரமாகிற வ்ருக்ஷத்தில் (மரத்தில்) இருக்கும் பக்ஷி (பறவை) போன்ற ஜீவனுடன், தானும் ஒரு பக்ஷி (பறவை) போல் அமைந்திருப்பவனுமாகிய அந்தப் பரமபுருஷனைப் பணிந்து வாழ்வீர்களாக. 

அவனுக்கு ஆதி (முதல்), அந்தம் (முடிவு), இடை (நடுவு) இவை கிடையாது. அவனுக்குத் தன்னுடையவனென்றும், பிறனென்றும் பக்ஷபாதம் (ஓரவஞ்சனை) கிடையாது. எங்கும் நிறைந்தவனாகையால், அவனுக்கு உள்புறமென்பது கிடையாது. இந்த ப்ரபஞ்சத்திற்கு, ஆதி (முதல்), நடு (இடை) அந்தம் (முடிவு) என்னும் இவை அவனிடத்தினின்றே உண்டாகின்றன. இந்த ப்ரபஞ்சமெல்லாம் அவனே. ஆயினும், அவன் ஸ்வரூபத்தினாலும், ஸ்வபாவத்தினாலும், விகாரமற்றவன் (மாறுபாடு அற்றவன்). அளவிடக்கூடாத ஜ்ஞானம், சக்தி முதலிய குணங்களின் பெருமையுடையவன். இந்த ப்ரபஞ்சமெல்லாம் அவனுக்குச் சரீரம். தேவ, மனுஷ்யாதி நாமங்களெல்லாம் அவனையே சொல்லுகின்றன. அவன், தனக்குச் சரீரமான சேதன, அசேதனங்களின் தோஷங்கள் தீண்டப்பெறாதவன். ஸமஸ்த சேதன அசேதனங்களுக்கும் உள்புகுந்து, நியமித்துக் கொண்டிருப்பவன். ஸ்வயம்ப்ரகாசன் (தானே தோன்றுபவன்); ஜீவனைப்போல் கர்மத்தினால் பிறப்பவனல்லன்; ஐகத்காரணன். அவன் தன் சக்தியாகிய ப்ரக்ருதியால், இந்த ப்ரபஞ்சத்தின் ஸ்ருஷ்டி (படைப்பு), ஸ்திதி (காத்தல்), ஸம்ஹாரங்களை (அழித்தல்) நடத்துகிறான். அவன், அந்த ப்ரக்ருதியை தன் ஜ்ஞானத்தினால் பரிஹரித்து (தன் வசமாக்கி) சப்தாதி விஷயங்களில் விருப்பமின்றி, அதற்காகச் செய்யவேண்டிய ப்ரயத்னங்களும் (முயற்சிகளும்) இன்றி உதாசீனனாயிருக்கிறான் (பொருட்படுத்தாது இருக்கின்றான்). ஜீவாத்மாக்கள் முதலில் ஸுகங்களுக்காகக் கர்மங்களைச் செய்கின்றார்கள். செய்தும், தாம் விரும்பின சுகத்திற்கு நேரே விபரீதமாகப் பெரும்பாலும் துக்கமே நேருவதைக்கண்டு, அக்கர்மங்களில் விருப்பத்தைத்துறந்து, வைராக்யத்தைப் பெறுகிறார்கள். ஷாட்குண்யபூர்ணனும் (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவனும்), ஸர்வேச்வரனுமாகிய பரமாத்மா, ஜீவாத்மாக்களை அவரவர் கர்மங்களுக்குத் தகுந்தபடி தூண்டுகிறான். ஆயினும், அவர்கள் செயலால் விளையும் பலத்தில் அவனுக்குப் பற்று கிடையாது. அவன், நித்ய ஆநந்த ஸ்வரூபனாகிய தன்னைத்தான் அனுபவிக்கையால், ப்ரயோஜனங்களெல்லாம் கைகூடப் பெற்றிருப்பது மாத்ரமேயன்றி, அவனைத் தொடர்ந்திருக்கும் ப்ராணிகளும் கர்மபலன்களில் மனப்பற்றுச் செய்து வருந்தமாட்டார்கள். 

அப்பரமபுருஷன், ஜீவர்களின் கர்மங்களுக்குத் தகுந்தபடி அவர்களைத் தூண்டுகிறான். அஹங்காரமற்றவன் (நான் என்ற கர்வம் அற்றவன்); எல்லாம் அறிந்தவன்; ஆத்மானுபவத்தினால் (தன்னை அனுபவிப்பதால்) நிறைவாளன் (எல்லா விருப்பமும் அடையப் பெற்றவன்). அவனைத் தூண்டுகிறவர்கள் ஒருவரும் கிடையாது. அவன் தன்னைத் தொடரும் பக்தர்களுக்குத் தன்னோடொத்திருக்கும்படி அருள்செய்பவன்: தன் ஸ்வபாவத்தினின்று என்றும் மாறாதவன்; ஸர்வ சக்திகளும் அமைந்தவன். ஸ்மஸ்த தர்மங்களையும் பாதுகாப்பவன். அத்தகைய அப்பரமபுருஷனைச் சரணம் அடைகின்றேன்.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- இவ்வாறு மனவூக்கத்துடன் மந்த்ரரூபமான உபநிஷத்தை ஜபித்துக் கொண்டிருக்கிற ஸ்வாயம்புவ மனுவைக்கண்டு, அஸுரர்களும், ராக்ஷஸர்களும், பசியினால் அவனைப் பக்ஷிக்க (உண்ண) எதிர்த்தோடினார்கள். உலகங்களைப் பாதுகாக்கும் பொருட்டு யஜ்ஞனென்னும் பேர்பூண்டு, அவதரித்திருக்கிற ஸர்வாந்தராத்மாவான பகவான், யாமர்களென்னும் பேருடைய தன் புதல்வர்களுடன்கூடி அஸுரர்களும், ராக்ஷஸர்களும், அவ்வாறு மனுவைப் பக்ஷிப்பதாக (உண்பதற்காக) உத்தேசித்திருப்பதுகண்டு, அவர்களை வதித்து, ஸ்வர்க்கத்தைப் பாதுகாத்து வந்தான். அக்னியின் புதல்வனான ஸ்வாரோசிஷனென்பவன் இரண்டாவது மனுவாயிருந்தான். த்யுமான், ஸுஷேணன், ரோசிஷ்மான் முதலியவர்கள் அவனுடைய பிள்ளைகள். அந்த மன்வந்தரத்தில் யஜ்ஞபகவானுடைய பிள்ளையாகிய ரோசனன் இந்த்ரனாயிருந்தான். துஷிதர்களென்பவரும், மற்றும் பலரும் தேவர்களாயிருந்தார்கள். ஒளர்ஜர், ஸ்தம்பர் முதலிய ஏழு ப்ராஹ்மண ச்ரேஷ்டர்கள் ஸப்த ரிஷிகளாயிருந்தார்கள். 

வேதசிரஸ்ஸென்னும் ரிஷிக்குத் துஷிதையென்னும் பார்யை (மனைவி) இருந்தாள். பகவான் தேவதைகளால் ப்ரார்த்திக்கப்பட்டு, அந்தத் துஷிதையிடத்தில், விபுவென்னும் பெயர்பூண்டு பிறந்தான். வ்ரதங்களைத் தவறாமல் அனுஷ்டிக்கும் தன்மையுடைய எண்பத்தெண்ணாயிரம் முனிவர்கள், கெளமார அவஸ்தையில் (இளம் பிள்ளைப் பருவத்தில்) ப்ரஹ்மசாரியாயிருந்த அந்த விபுவின், ஆசாரத்தை அப்யஸித்தார்கள் (பின்பற்றினார்கள்). ப்ரியவரதனுடைய பிள்ளையாகிய உத்தமனென்பவன் மூன்றாவது மனுவாயிருந்தான். ஸவனன், ஸ்ருஞ்சயன், யஜ்ஞன், ஹோத்ரன் முதலியவர்கள் அவ்வுத்தமனுடைய பிள்ளைகள். வஸிஷ்டருடைய பிள்ளைகளான ப்ரமதன் முதலியவர்கள் ஸப்தரிஷிகளாய் இருந்தார்கள். ஸத்யர்களும், தேவச்ருதர்களும், பத்ரர்களும், தேவகணங்களாய் இருந்தார்கள். ஸத்யஜித் என்பவன் இந்த்ரனாயிருந்தான். 

தர்மனுடைய பார்யையாகிய (மனைவியாகிய) ஸுனருதையிடத்தில் பகவான், ஸத்யஸேனனென்னும் பெயர்பூண்டு பிறந்தான். அவன், ஸத்யவ்ரதர் முதலிய தேவர்களுடன் இந்த்ரனாகிய ஸத்யஜித்துக்கு நண்பனாகி, பொய்பேசும் தன்மையரும் துர்நடத்தை (கெட்ட ஒழுக்கம்,செயல்) உடையவரும், துஷ்டர்களும் (கொடியவர்களும்), ப்ராணிகளுக்கு த்ரோஹம் (துன்பம்) செய்பவருமான யக்ஷர்களையும், ராக்ஷஸர்களையும், பூதகணங்களையும் வதித்தான். உத்தமனுடைய உடன் தோன்றலாகிய தாமஸனென்பவன் நான்காவது மனுவாயிருந்தான். வ்ருஷன், க்யாதி, நரன், கேது, இவர் முதலிய பதின்மர் அவனுடைய பிள்ளைகள். ஸத்யகர்களும், ஹரிகளும், வீரர்களும், தேவகணங்களாய் இருந்தார்கள். த்ரிசிகனென்பவன் இந்த்ரனாயிருந்தான். அந்தத் தாமஸ மனுவின் அந்தரத்தில் ஜ்யோதிர், வ்யோமர் முதலிய அந்தணர்கள் ஸப்தரிஷிகளாய் இருந்தார்கள்.

மன்னவனே! அந்த மன்வந்தரத்தில் வித்ருதியின் பிள்ளைகள் வைத்ருதர்களென்று பேர்பூண்டு, தேவதைகளாயிருந்தார்கள். அவர்கள் காலக்ரமத்தில் அத்யயனம் செய்பவர்கள் இல்லாமையால், அழிந்துபோன வேதங்களைத் தங்கள் புத்தி பலத்தினால் உத்தரித்தார்கள் (மீட்டார்கள்). அந்த மன்வந்தரத்திலும் ஹரிமேதருடைய பார்யையாகிய (மனைவியாகிய) ஹரிணி என்பவளிடத்தில் பகவான் ஹரியென்னும் பெயர்பூண்டு அவதரித்தான். அவனே கஜேந்தராழ்வானை முதலையிடத்தினின்றும் விடுவித்தான்.

பரீக்ஷித்துசொல்லுகிறான்:- ஸ்ரீசுக முனிவரே! ஸ்ரீஹரியென்னும் பகவான் முதலையால் பிடியுண்ட யானையை விடுவித்த விதத்தை நாங்கள் கேட்க விரும்புகிறோம். எந்தெந்த கதைகளில் பெரும்புகழனும், பெரியோர்களால் புகழத்தகுந்தவனும், ஷாட்குண்யபூர்ணனும் (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவனும்), தன்னைப் பற்றினாருடைய வருத்தங்களைப் போக்கும் தன்மையனுமாகிய, பரமபுருஷன் பாடப்படுகிறானோ, அந்தந்த கதைகளெல்லாம் மிகவும் புண்யத்தை விளைக்கவல்லவை; தனத்தை விளைக்கும்; சுபங்களையெல்லாம் கொடுக்கும்; பெருங்குணங்கள் அமைந்தவை. ஆதலால், பகவானுடைய புகழை உட்கொண்ட கஜேந்த்ரமோக்ஷ வ்ருத்தாந்தத்தை நாங்கள் கேட்க விரும்புகிறோம்.

ஸூதர் சொல்லுகிறார்:– ஓ, அந்தணர்களே! ப்ராயோபவேசம் செய்திருக்கிற (உண்ணாவிரதம் இருந்து உயிர் விட நிச்சயித்திருக்கிற) பரீக்ஷித்து மன்னவனால் பகவானுடைய கதையைச் சொல்லும்படி தூண்டப்பட்ட ஸ்ரீசுகமுனிவர், அம்மன்னவனைப் புகழ்ந்து, ஸபையில் முனிவர்கள் கேட்டுக் கொண்டிருக்கையில், கஜேந்த்ர மோக்ஷ வ்ருத்தாந்தத்தை மொழியத்தொடங்கினார். 

முதல் அத்யாயம் முற்றிற்று.

கருத்துரையிடுக (0)
புதியது பழையவை