அன்பு நூல்… - மேஜர் நாராயணன்

"யார் ஒருவர் ராம நாமத்தைக் கேட்கிறாரோ அல்லது சொல்கிறாரோ, யார் ஒருவர் ராமாயணத்தை காது குளிர சொல்கிறாரோ அவர்களுக்கு 16 விதமான பேறுகள் நிச்சயம் கிடைத்து விடும் என ஒரு பெரிய லிஸ்ட்டே சொல்றார் மகரிஷி வால்மீகி. அந்த 16 பேறுகள் என்னென்ன தெரியுமா? கல்வி, அறிவு, ஆயுள், ஆற்றல், இளமை, துணிவு, பெருமை, பொன், பொருள், புகழ், நிலம், நன்மக்கள், நல்லொழுக்கம், நோயின்மை, முயற்சி, வெற்றி" என்றார் 'மனதிற்கினியான்' என்ற தம் சொற்பொழிவில் மேஜர் நாராயணன்.

“உலகத்துல கஷ்டத்தை அனுபவிக்காத மனிதர்களே இருக்க முடியாது. என்ன கஷ்டம் வந்தாலும் சரி பகவான்கிட்ட சரணாகதி பண்ணிட்டோம்னா போதும், அவை வந்த இடம் தெரியாமல் ஓடி விடும். 'பகவானே நீயே பார்த்துக்கோ எனக்கு ஒண்ணும் தெரியாது'ன்னு total surrender செய்வதுதான் சரணாகதி. அந்த சரணாகதி தத்துவத்துக்கு அதிக அளவு முக்கியத்துவம் ராமாயணத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது.

ராமாயணத்தின் ஒவ்வொரு காண்டத்திலும் சரணாகதி வரும். பால காண்டத்தில் தேவர்கள் சரணாகதி செய்வார்கள், அயோத்யா காண்டத்தில் ரிஷிகள் யாகத்தை காப்பாற்றணும்னு சரணாகதி பண்ணுவார்கள், கிஷ்கிந்தா காண்டத்தில் சுக்ரீவன் ராமரிடத்தில் சரணாகதி பண்ணுவார். சுந்தர காண்டத்தில் ராமரே சமுத்திரராஜனிடம் சரணாகதி பண்ணுவார்.

யுத்த காண்டத்தில் விபீஷண சரணாகதி வரும். 'சரணாகத வத்சலன்'னு ராமருக்கு ஒரு பெயரே உண்டு. ராவணனோடு போர் புரியும்போதுகூட 'இன்று போய் நாளை வா'ன்னு பெருமாள் சொல்றார். என்ன காரணம்? ‘நாளையாவது இவன் சரணாகதி பண்ணிட மாட்டான்னா'ன்னு நினைச்சாராம் ராமர்.

காருண்ய குணத்துக்கு எடுத்துகாட்டாய் விளங்கியவர் ராமர். ஸ்ரீரங்கத்தில் எட்டாம் திருநாள் உற்சவத்தின்போது, பெருமாளுக்கு மோஹினி கோலம். தாயார்போல அலங்காரம் பண்ணிவிடுவார்கள். அவருக்குக் கண் அலங்காரம் பண்ணி முடித்த பராசர பட்டரிடம் பெருமாள் கேட்பாராம்: ‘நான் தாயாரைப் போலவே இருக்கேன் இல்லையா? அதேமாதிரி வைர ஊசி மாலை, புஷ்ப பாவாடை, அட்டிகை, கூந்தல் இதெல்லாம் பார்த்தா தாயார் மாதிரியே இருக்கு இல்லயா?'ன்னு பெருமாள் கேட்கும் பொழுது, பட்டர் சொல்வாராம்: 'இல்லை... உம்மிடம் தாயாரின் கண்களில் தெரியும் அந்தக் கருணை, காருண்யம் இல்லை'னு. அந்தக் காருண்ய ரூபமாக, கருணாமூர்த்தியாகவே இருந்தவர் ராமர்.

ஒவ்வொரு நூலுக்கும் ஒவ்வொரு பெயர் உண்டு. கந்த புராணத்தை 'சிவ நூல்' என்று சொல்வார்கள், சீவக சிந்தாமணி இன்ப நூல். பெரிய புராணம் அருள் நூல். மகாபாரதம் அற நூல். சிலப்பதிகாரம் விதி நூல். இதில் ராமாயணம் அன்பு நூல். 'கூடி வாழ்ந்தால் கோடி நன்மை, யாதும் ஊரே யாவரும் கேளிர்'னு ரெண்டு message களையுமே சேர்த்து நமக்கு சொல்லியிருக்கார் ராமர் - ராமாயணத்தின் வாயிலாக.

ஹிம்சங்கற வார்த்தை திரிஞ்சு சிம்ஹன்னு மாறி வந்தது. அதேமாதிரிதான் 'மரா' திரிஞ்சுதான் 'ராம'ன்னு வந்தது. 'ம' என்றால் போக்கடிப்பது என்று அர்த்தம். 'ரா' என்ற சொல் பாவத்தைக் குறிக்கிறது. ஆக, ராம என்ற வார்த்தையே நாம் செய்த பாவங்களை போக்கடிப்பது என்ற பொருள்படும்படி அமைந்திருக்கிறது. 'இரா' என்றால் இல்லை என்றும் 'மன்' என்றால் தலைவன் என்றும் பொருள்படும். இவனுக்கு இணையான தலைவனே இல்லை என்பதைத்தான் இராமன் என்ற நாமம் காட்டுகிறது.

ஆச்சாரிய சம்பந்தம், ஆச்சாரிய அனுக்ரஹம்தான் மன நிம்மதிக்கும் மன மகிழ்ச்சிக்குமான ஒரே வழி என்பதையும் ராமாயணம் காட்டத் தவறவே இல்லை. பால காண்டத்தில் வசிஷ்டர் குருவா வந்தார். விஸ்வாமித்திரர் குருவா வந்து ராம லக்ஷ்மணர்களுக்கு பலா, அதிபலா மந்திரத்தை உபதேசம் பண்ணார். நாரதர் வால்மீகிக்கு குருவா வர்றார். ராமரே பரதருக்கு குருவாக வருகிறார். யுத்த காண்டத்தில் stress ரொம்ப வரும்போது, அங்கே அகஸ்திய முனிவரே குருவாக வருகிறார். சுந்தர காண்டத்தில் சீதை ஹனுமாரையே குருவாக பார்க்கிறாள். இப்படி ராமாயணம் முழுக்க குருவின் அனுக்ரஹம் அப்படீங்கறது இருந்துண்டே இருக்கு.

நம்மக்கிட்ட இருக்ககூடிய ஐந்து sensesல முக்கியமானது நம்மோட கேட்கும் திறன்தான். நாம் இறக்கக் கூடிய தருவாயில் கூட ஒவ்வொண்ணா நாம இழந்துண்டே வருவோம். நம்மால பார்க்க முடியாது, எதையுமே சுவைக்க முடியாது, வாயை திறந்து பேச முடியாதுனு... இப்படி எல்லாம் இருந்தாலும்கூட, நம்முடைய கேட்கும் திறன் மட்டுமே அப்படியே இருக்குமாம். ஸ்ரவணம் அவ்வளவு விசேஷம். ராம நாமத்தை கேட்டாலே போதும் சகலவிதமான தோஷங்களும் நீங்கப்பெற்று சந்தோஷத்தை அடைந்து விடலாம். அருணகிரிநாதர் தம்மோட திருப்புகழ்ல ராமாயணத்தோட மொத்த சாரத்தையும் அவ்வளவு அழகா பாடியிருக்கார். 

எந்தை வருக ரகுநாயக வருக 

மைந்த வருக மகனே யினிவருக 

என்கண் வருக எனதாருயிர் வருக ... 

அபிராம இங்கு வருக அரசே வருக 

முலை யுண்க வருக மலர்சூடிட வருக என்று பரிவினொடு கோசலை புகல ... வருமாயன்

கம்பர் சொல்றார்: “நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே சென்மமும் மரணமும் இன்றித் தீருமே இம்மையே ராம என்ற இரண்டெழுத்தினால்.”

அந்த ராம நாமத்தை சதா சர்வ காலமும் நாமும் இனி நினைப்போம்; அதையே ஜபிப்போம்; வாழ்க்கையில் வரக்கூடிய அத்தனை விதமான துன்பங்களையும் ஜெயிப்போம்."

தொகுத்தவர் நளினி சம்பத்குமார்

நன்றி - தீபம் ஜூன் 2015

கருத்துரையிடுக (0)
புதியது பழையவை