மூன்றாவது ஸ்கந்தம் - நான்காம் அத்தியாயம்
ஞானம் விழைந்த விதுரர், மைத்ரேயரை நாடுதல்
கண்ணனின் நினைவில் உருகிய உத்தவர், தன்னைச் சற்றே ஒருநிலைப்படுத்திக் கொண்டு மேலும் விளக்குகிறார்:
“யது குலத்திலே பிறந்தவர்கள் அகங்காரத்தாலே ஒருத்தருக்கு ஒருத்தர் அடித்துக் கொண்டு மாள, கண்ணன் சரஸ்வதி நதிக் கரையில் ஓர் அரச மரத்தடியில் சாய்ந்து கொண்டு படுத்தான். தனது இடது காலை மடித்து அதன் மீது வலது காலை வைத்துக் கொண்டிருந்தான். அந்தச் சமயத்தில் நான் கண்ணனைச் சந்திப்பதற்காகச் சென்றேன். அவன் தனிமையில் இருந்தபடியால், என் மன விருப்பங்களையெல்லாம் சொல்லி அவனிடம் உபதேசம் பெற விழைந்தேன்.
“கண்ணன் அதைப் புரிந்து கொண்டு ‘உன் மனது எனக்குப் புரிகிறது. நெடுங்காலத்துக்கு முன்னால், சிருஷ்டித் தொடக்கத்தில் நான்முகனான ப்ரஹ்மாவிற்கு என்ன சிறந்த உபதேசங்களைச் செய்தேனோ, அவற்றை உமக்குச் சொல்கிறேன். இவை ரகசியங்கள். எளிதில் எவருக்கும் தெரியவராது. நான் சொல்லப் போவதைப் பற்றிய ஞானம் உமக்கு நெஞ்சில் பதிந்து கடைப்பிடிக்கப்படுமானால், அது ஒன்றினாலேயே எல்லையற்ற ஆனந்த முக்தியை அடைவீர்’ என்றார். அதைக் கேட்ட நான், பெருமானை ஸ்தோத்திரம் செய்தேன்.
“உன்னுடைய திருவடியும், ஸ்ரீபாதத் துளியும் யாருக்குக் கிட்டும்? உன் திருவடியை விட்டு, மற்றதில் யாருக்கு எண்ணம் செல்லும்? ஒவ்வொருவருக்குள்ளும் நீயே உறைகிறாய். ஆனால், மறைந்து உறைகிறாய். அடியார்களின் மனதுக்குள்ளே நீ மறைந்திருப்பது புரிகிறது. ஆனால், மதுராவிலிருந்து கோகுலத்திற்குப் போய் கம்ஸனுக்குப் பயந்தது போல் நடித்து, மறைந்து வாழ்ந்தாயாமே! அதுதான் ஏன் என்று புரியவில்லை. உனது மனித தேகத்தைப் பார்த்து நாங்கள் உனது மகிமையை அறியாது மயங்குகிறோம். எனினும் எல்லையற்ற ஞானமுடைய நீ, உன் அடியார்களுக்குக் குறைவில்லாத ஞானத்தை அருள்கிறாய்’ என்று துதித்தேன்” என்றார்.
ததாமி புத்தியோகம் தம்
(ஸ்ரீ பகவத் கீதை : 10-10)
– என்று கீதையில் கண்ணன் கூறுகிறான். பகவானே ஆத்மா, பரமாத்மா ஆகிய தத்துவங்களைப் பற்றிய ரகசியமான ஞானத்தை நமக்கு உபதேசிக்கிறான். அந்த ஞானத்தையே ஓடமாகக் கொண்டு நாம் சம்சாரக் கடலைத் தாண்ட வேண்டும்.
மேற்கொண்டு கண்ணன், உத்தவருக்கு ரகசியங்களை உபதேசித்தார்.
உத்தவர் கூறுகிறார் : “சாய்ந்து கொண்டிருந்த கண்ணனை வலம் வந்தேன். அவன் திருவடிகளை வணங்கி, விடைபெற்றுக் கொண்டு, இதோ இந்த யமுனை ஆற்றங்கரைக்கு வந்திருக்கிறேன். அவனைக் காணாது ஒரு பகல் பொழுது ஊழிக் காலம் போல் நீண்டு செல்கிறது. என்னைக் கண்ணன் பத்ரிகாச்ரமத்திற்குச் செல்லப் பணித்தான். அங்குதான் இப்போது போக வேண்டும்” என்று சொல்லிப் புறப்படுகிறார்.
சுகர் கூறுகிறார்: பரீக்ஷித் மஹாராஜனே! உன்னுடைய முன்னோர்களான விதுரரின் பங்காளிகள் அனைவரும் மாண்டு போன விவரத்தை விதுரர் கேள்விப்பட்டார். சோகப்பட்டார். எனினும் ஒருவாறு மனதைத் தேற்றிக் கொண்டு, உத்தவருக்கு கண்ணன் என்ன உபதேசித்தார் என்பதைத் தெரிந்து கொள்ள விழைந்து, விதுரர் கேட்கிறார்: “ஆத்மாவைப் பற்றிய ரகசியமான ஞானத்தை கண்ணன் உமக்கு உபதேசித்ததாகக் கூறினீர். பகவான் யோகிகளுக்கெல்லாம் தலைவன். உலகத்தையே தன் சங்கல்பத்தால் ஆட்டிப் படைப்பவன். அவன் உம்மிடத்தில் என்ன கூறினான் என்பதை அடியவரான எம்மிடம் கூறுவீரா?” என்று வினவினார்.
இதற்குப் பதில் கூறும் உத்தவர், “கண்ணன் சொன்ன சரித்திரங்களை எல்லாம் உமக்குச் சுருக்கமாகக் கூறினேன். அவனது திருமேனியின் அழகையும், பெருமைகளையும் வர்ணித்தேன். ஆனால், அதற்கு மேல் அவர் கூறியதை தாங்கள் பராசர மஹரிஷியுடைய சீடரான மைத்ரேயரிடம்தான் கேட்டுக் கொள்ள வேண்டும். உமக்கென்று சில ரகசியங்களை உபதேசிக்க வேண்டும் என்று மைத்ரேயரிடம் கண்ணன் கூறியுள்ளான். அவரைச் சந்தித்து அந்த ரகசியங்களைக் கேட்டுக் கொள்ளும்” என்றார்.
விதுரரும் திருப்தியோடு, “கண்ணன் எப்படி பணித்தாலும், அது என் நன்மைக்குத்தான் இருக்கும். மைத்ரேயரை சந்தித்துக் கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறிப் புறப்படுகிறார்.
அன்று இரவு இருவரும் யமுனைக் கரையில் ஒன்றாகத் தங்கினார்கள். இயற்கை அன்னையின் மடியில் நிம்மதியாக இருப்பதில்தான் எத்தனை ஆனந்தம்! நாம் புண்ணிய தீர்த்தங்களுக்கு யாத்திரை செல்லும்போது, அதில்தான் நீராட வேண்டும். அங்கு தங்கியிருந்து பக்தியுடன் ரசித்துப் பார்க்க வேண்டும். தென்னிந்தியாவிலும் வட இந்தியாவிலும் எத்தனையோ புண்ணிய க்ஷேத்ரங்கள் உள்ளன. அதன் பின்னால் நூற்றுக்கணக்கான புண்ணியக் கதைகள், தத்துவ உண்மைகளை வெளிப்படுத்தும் அருமையான கருத்துக்கள் இருக்கின்றன! இப்படிப்பட்ட இவர்களுடைய உரையாடலைக் கேட்ட பரீக்ஷித், இதைச் சொல்லிக் கொண்டிருந்த சுகாசாரியரிடம் ஓர் ஐயத்தை எழுப்புகிறான்.
“சுகாசாரியரே! அமுதிலும் இனிய கண்ணன் புறப்பட்டுப் போன பிற்பாடு, அவனது உயிருக்குயிரான உத்தவர் இப்பூவுலகில் ஏன் வாழ்ந்தார்? கண்ணனுடைய பிரிவாற்றாமையைப் பொறுக்க இயலாத அவரும் கூடவே சென்றிருக்க வேண்டியதுதானே?” என்று கேட்டார்.
சுகர் கூறுகிறார் : “நல்ல கேள்வி! ஆனால் உத்தவரை கண்ணன் இப்பூவுலகில் வைத்ததற்கு ஒரு பயன் உண்டு. பல மகான்கள் உடனே முக்தி வேண்டும் என்று வேண்டுவார்கள். ஆனால், அவர்களைக் கொண்டு உலகத்தைத் திருத்த வேண்டும் என்று பெருமான் விழைகிறான். அதற்காக அந்த மகான்களைத் துன்பப்படுத்தினாலும், இந்தப் பூவுலகத்தில் அவர்களை வைத்து, பக்தர்களுக்கு உயர் ஞானத்தை உபதேசிக்கிறான் எம்பெருமான். ஆகவேதான், உத்தவரால் உடனே புறப்பட முடியவில்லை.”
தன் முதல் பாடலிலிருந்தே பெருமானிடம் நம்மாழ்வார், ‘இப்பூவுலகில் என்னை வைக்காதே! எனக்கு முக்தி கொடு’ என்று வேண்டினார். ஆனால், அவரை 32 ஆண்டுகள் பூமியில் வாழ வைத்திருந்து, நான்கு திவ்ய பிரபந்தங்களைப் பாட வைத்தான் எம்பெருமான். விருப்பமில்லாதவரை ஏன் வைக்க வேண்டும்? இவ்வுலகத்தை அவரைக் கொண்டு திருத்த வேண்டும் என்பதற்காகத்தான்!
உத்தவர் யமுனைக் கரையில் விதுரரிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு பத்ரிகாச்ரமத்துக்குச் சென்றார். விதுரரும் ஒருபுறம் கண்ணனின் கதையைக் கேட்டு ஆனந்தக் கண்ணீர் வடித்தார். மற்றொருபுறம் இப்படி கௌரவர்கள், பாண்டவர்களது பரம்பரையினர் அனைவரும் அழிந்து போனார்களே! என்று துன்பப்பட்டார். இப்படிப்பட்ட துயரங்களை எல்லாம் தேற்றிக் கொள்ள ஒரே மருந்து பகவானைப் பற்றிய ஞானமே! அதை மைத்ரேயரிடம் பெறுவோம் – என்று எண்ணி கங்கைக் கரை நோக்கிப் புறப்படுகிறார் விதுரர்.
யமுனையில் நீராடி உரையாடிக் கொண்டிருந்த பரம பக்தர்கள் இருவரது வாயிலாக சில உபதேசங்களைப் பெற்றோம். மேலும் மைத்ரேயரிடம் கேட்க, கங்கைக் கரைக்குப் பயணம் செய்வோம். வாருங்கள்!
(தொடரும்)
நன்றி - துக்ளக்