மூன்றாவது ஸ்கந்தம் - ஐந்தாம் அத்தியாயம்
தேவர்கள் பகவானைத் துதித்தல்
உத்தவரும் விதுரரும் பேசிக் கொண்ட பின், விதுரர் விடைபெற்றுச் சென்றார். பிறகு கங்கை நதியை அடைகிறார். அங்கே மைத்ரேயரைச் சந்தித்து, தனக்குண்டான ஐயங்களையெல்லாம் கேட்கிறார். விதுரர், மைத்ரேயரிடம் கூறுகிறார்: “மனிதன் பல செயல்களைப் புரிகிறான். தனக்கு இன்பம் ஏற்பட வேண்டும், துன்பம் கழிய வேண்டும் என்பதற்காகவே அவன் பல செயல்களைப் புரிந்தாலும், உண்மையில் இன்பம் கிடைப்ப தாகவோ, துன்பம் விலகுவதாகவோ தெரியவில்லையே! இவ்வுலகில் இன்பமும், துன்பமும் அவரவர் தம் வினைப்பயனால் அனுபவித்துக் கொள்வது. ஆனால், சாத்திரப்படியும், உண்மையாகவும் நிரந்தர இன்பம் – ஆனந்தம் – என்பது ப்ரம்மத்தை அனுபவித்தல் மட்டுமே!
“ஆத்மாவுக்கு எது இன்பம் கொடுக்குமோ அது நீடித்திருக்கும். உண்மையாகவும் இருக்கும். ஆனால், தனது உடலையும் மற்றவர்களையும் திருப்தி செய்வதற்காகச் செய்யப்படும் செயல்கள் ஒரு நாளும் நீடித்த இன்பத்தைக் கொடுக்காது. ஒரு குறுகிய காலகட்டத்துக்கு இன்பப்படுகிறது போலே ஒரு தோற்றத்தை ஏற்படுத்தும். ஆனால், அது க்ஷணத்தில் நீர்க்குமிழி போல் மறைந்து போகும்.
“இப்படி இருக்கும்போது உண்மையான, நீடித்த, ஆத்மாவுக்கு ஏற்றதான இன்பத்தைப் பெறுவதற்கு எவ்வளவோ நல்ல செயல்களை நாம் செய்ய வேண்டியுள்ளது. அந்தச் செயல்களையெல்லாம் சாஸ்திரங்கள் வாயிலாக மட்டுமே பெருமான் விதிக்கிறானா, அல்லது அவற்றை நேரடியாக உபதேசிப்பதற்காகத்தான் பல திருமேனிகளோடே இப்பூவுலகத்தில் பிறக்கிறானா? அப்படி பகவான் பிறந்திருக்கும்போது, நாம் அவனைப் புரிந்து கொண்டு ஆராதித்தால், நம்முடைய இருதயம் தூய்மை அடைவதாக உணர்கிறோமே! அது உண்மைதானா? நம் புலன்களால் காண மாட்டாத கடவுளை தூய இதயத்தால், மனத்தால் கண்டு விட இயலுமா? பகவான் பிறப்பதோடே நில்லாமல் பல அற்புதங்களைச் செய்து, நல்விளைவுகளை ஏற்படுத்தும் எவ்வளவோ திருவிளையாடல்களைப் புரிகிறார். இவற்றைச் செய்வதால் அவருக்கு என்ன பயன்? நமக்கு உபதேசிப்பதும் முன்னோடியாக இருப்பதுமே அவருக்கு விளையாட்டா? அவர் நம்மைக் காப்பது மட்டுமின்றி, உலகனைத்தையும் இறுதியில் தன்னிடத்திலேயே மீட்டுக் கொள்ளவும் செய்கிறாரே! இதற்கெல்லாம் என்ன காரணம்?
“அவரது இந்த மூன்று செயல்களையும் யோசிக்கும்போது, எதற்குச் செய்கிறார் – என்று எனக்கு வியப்பும், ஐயமும் ஏற்படுகின்றன. பகவானே இத்தனை தேவதைகளாக அதாவது ப்ரஹ்மா, இந்திரன், சந்திரன், குபேரன் முதலிய தேவதைகள் அனைவராகவும் இருக்கிறானாமே! எதற்காக? இந்த உலகம் ஏன் இவ்வளவு வேறுபட்டுக் கிடக்கிறது? எங்கு திரும்பினாலும் மாறுபாடுகள், உயர்வு – தாழ்வுகள், பொறாமை, தற்பெருமை இவையெல்லாம் எதற்காக? நாம் செய்யும் செயல்கள் ஒவ்வொருவருடைய ஆச்ரமத்திற்கும், வர்ணத்திற்கும் தகுந்தவாறு மாறுபடுகிறதே? இந்த அனுஷ்டானங்கள் எல்லாம் எக்காலத்திலும் நிலையானவையா? எனக்கு அப்படித் தோன்றவில்லையே!
“எத்தனையோ அனுஷ்டானங்களை நானும் செய்திருந்தாலும், அவற்றில் திருப்தி ஏற்படாமல், பகவானுடைய கதையைக் கேட்டுத்தான் திருப்தி அடைந்தேன். இதிலும் எனக்கு ஓர் ஐயம். வேதங்கள் சொன்னபடிக்கு நம்முடைய கர்மங்களைச் செய்வதால் ஏற்படும் திருப்தியை விட பகவானுடைய கதையைக் கேட்டால், மிகவும் திருப்தி அடைகிறோமே, அது எதனால்? யாருடைய செவி வழிதான் பெருமான் புகாமல் இருந்திருக்கிறான்? யாருடைய இதயத்தைத்தான் தன் அமுதமயமான கதைகளால் நிரப்பாமல் இருந்திருக்கிறான்? மேன்மேலும் அவன் கதையைக் கேட்க விழைகிறேன்.
“ஒரு தேன் வண்டு. அந்தந்தப் பூக்களில் அமர்ந்து அதனதன் ரஸத்தை ரசித்து ரசித்து பார்த்து எடுக்கும். அதே போல வேதங்களாகிற பூக்களில் இருந்து வழியும் சிறந்த கருத்துக்களாகிற தேனை, பக்தித் தேன் வண்டான நீர் எனக்காகப் பார்த்துப் பார்த்துத் தேர்ந்தெடுத்துக் கொடுக்க வேண்டும். நீர் பாரதத்தைப் புரியும்படி சொல்வதில் வல்லவராயிற்றே! எனவே உபதேசிக்க வேண்டும்” என்று வேண்டி நின்றார்.
அதற்கு விடை கூற முற்பட்ட மைத்ரேயர், முதலில் விதுரரைக் கொண்டாடுகிறார். “விதுரரே! வியாஸரின் அருளால் பிறந்தவர் நீர்! எமதர்ம ராஜன், மாண்டவ்யர் எனும் மஹரிஷியின் சாபத்தால், உம் வடிவத்தில் பிறந்திருக்கிறார். எவ்வளவு மேன்மை உமக்கு இருக்குமானால், கண்ணன் வைகுண்டத்திற்குப் புறப்படும்போது, உம்மை தனித்து ஞாபகம் வைத்துக் கொண்டு, பல கருத்துக்களை என்னிடத்தில் கூறி, உமக்குஉபதேசிக்கச் சொல்லி இருப்பார்! பகவானுடைய திருவுள்ளத்தில் ஒருவரின் ஞாபகம் வருகிறதென்றால், அதை விட அவருக்கு வேறு என்ன பேறு வேண்டும்? உம்முடைய ஐயங்களுக்கு விடை கூறுகிறேன், கேளும்!
“இவ்வுலகத்தைப் படைப்பதற்கு முன்னால், அதாவது ஆதி காலத்தில் பகவான் ஒருவரே தனித்து இருந்தார். அதாவது ‘ஸத்’தாகவே (உள்ள தன்மையுடையவராக) இருந்தார். அவரைத் தவிர மற்ற அத்தனையுமே அவரிடத்திலேயே லயித்து இருந்தன. அப்போது பார்ப்பவராக பகவான் மட்டுமே இருந்தார். பார்க்கப்படுகிற பொருள்கள் உருவத்தாலும், பெயராலும் வேறுபாடற்றுக் கிடந்தன. படைக்க நினைத்த கடவுள், தன்னுடைய திருமேனியாக இருக்கும் மூலப் ப்ருக்ருதியில் ஜீவாத்மாக்களை கர்ப்பமாகத் தரிக்கச் செய்தார்.
“பின் இவ்வுலகத்தையெல்லாம் முன்பு கூறியபடிக்கு, மஹத், அஹங்காரம், பஞ்ச தன்மாத்திரங்கள் (உணர்வுக் கூறுகள்), ஐந்து பூதங்கள் (இயற்கைப் பொருள்கள்) என்று வரிசையாகப் படைத்தார். பின் தன்னுடைய நாபிக் கமலத்தில் ப்ரஹ்மாவைப் படைக்க, அவர் ஏனைய தேவதைகளையெல்லாம் படைத்தார். அந்தத் தேவதைகள் உண்மையை உணர முற்பட்டவர்களாய், தங்கள் பிறவியின் ரகசியத்தை அறிய வேண்டி, பெருமானைக் குறித்துத் துதிக்கிறார்கள். ‘பகவானே! உன்னுடைய பாத கமலங்களுக்கு நமஸ்காரம்! யாருடைய திருவடிகளை ரிஷிகளும், சான்றோர்களும் வேதங்களைக் கொண்டு தேடுகிறார்களோ, எந்தத் திருவடியிலிருந்து பிறந்த கங்கை நீர் ஒரு முறை நீராடினாலோ, அருந்தினாலோ, பெயர் சொன்னாலோ மூவேழு இருபத்தோரு தலைமுறைகளுக்குப் பாவங்களைத் தீர்க்குமோ, எந்தத் திருவடியில் பக்தி ஏற்பட்டால் நம் இதயம் சுத்தி அடைந்து, தூய்மையான அறிவும், பற்றற்ற தன்மையும், பக்தியும் பெருகுமோ, அந்தத் திருவடிகளை வணங்குகிறோம். பகவானே! ‘நான்’ எனும் அஹங்காரமும், ‘எனது’ எனும் மமகார உணர்வும் மிக்கவனுக்கு நீ வெகு தூரத்தில் இருக்கிறாய். அது அற்றவர்களுக்கு நீ மிக அருகில் இருக்கிறாய்’ என்றனர்.”
ஆழ்வார் கூறுகிறார்: ‘சேயன், அணியன், சிறியன், மிகப் பெரியன்’ என்று பகவானைப் பற்றி உரைக்கிறார். பகவான் வெகு தொலைவில் இருப்பான். அதே சமயத்தில் வெகு அருகிலும் இருப்பான். பக்தி இருக்கிறவர்களுக்கு அருகிலும், அது அற்று செருக்கோடே திரிகிறவர்களுக்கு வெகு தொலைவிலும் உள்ளான் எம்பெருமான். அவனை, நம்மை உய்விப்பதற்காகவே ஆயர் குலத்தினில் தோன்றிய நம் அன்புக்குரிய இடைச்சிறுவன் என்று நினைத்தால்,அவன் இனிய அருட் சிறுவன். நாம் அன்பு செலுத்துவதற்கு எளியவன். அருள் அமுதமாய் அருகில் இருப்பவன். ஆனால், வைகுண்ட நாதன் என்று அவனை நினைத்தால், நாம் பயபக்தியுடன் போற்றத்தக்க பெரியோன்! நெடியோன்!
“பகவானை அடைய முற்படுபவர்கள், இரு வழிகளைப் பின்பற்றுகிறார்கள். ஒன்று - எளிய மார்க்கம். அவனிடத்தில் பக்தி கொள்கிறோம். அதுவே கனிந்து முற்றுகிறது. அதனால், எதிலும் பற்றில்லாத தன்மை ஏற்படுகிறது. இனி நாம் செய்வதற்கு என்ன உளது? நம்மால் நம்மைக் காத்துக் கொள்ள இயலுமா? அதற்கு அவனையன்றி யார் உள்ளார்கள்? நாம் அனுபவிப்பதற்கு அவனையன்றி எதுவும் இல்லையே! - என்கிற எண்ணத்தோடே அவன் திருவடிகளில் சரணாகதி செய்கிறோம். அதனால் உளம் கனிந்த பகவான், நம்மை அவனிடத்திற்கு அழைத்துப் போகிறார்.
“ஆனால், வேறு சிலர் பகவானிடத்திலே மறைஞான வழி நின்று தம் உள்ளத்தை அவனுக்கே அர்ப்பணித்து, அந்த ஞான மார்க்கத்தின் மூலமே முக்தி அடைய முயல்கிறார்கள். அது சாமான்யர்களுக்கு கடினமான மார்க்கம். ஆக, எப்படியோ பகவானை அடையத்தான் பண்டிதர்கள் தொடங்கி பாமரர் வரை அனைவரும் முற்படுகிறார்கள். தேவர்கள் தொடர்ந்து துதிக்கின்றனர்.
“இப்படி இருக்கும் நிலையில், எங்களை தேவர்களாகப் படைத்து, மேற்கொண்டு சிருஷ்டிக்க வைத்திருக்கிறீரே! அதற்குண்டான சக்தி எங்களுக்கு உண்டா? நாங்கள் அனைவரும் எப்போது முக்தி அடையப் போகிறோம்? இப்போது நாங்கள், தேவர்கள் என்கிற செருக்கோடே ‘நாம்தான் உலகத்தில் எல்லாவற்றையும் படைக்கப் போகிறோம், காக்கப் போகிறோம்’ என்கிற கர்வத்தோடே இனி எங்கள் சுகபோக வாழ்க்கையை அனுபவிக்கப் போகிறோம்... இனிய பண்டத்தை உண்ணப் போகிறவனுக்கு அதை மற்றொருவனுக்குக் கொடுப்பதற்கு மனம் வருமா? அது போலவே, மக்களும் தாங்கள் அனுபவிக்கும் சுக வாழ்க்கைக்கான நன்றிச் செய்கைகளை தெய்வங்களுக்குக் கொடுக்கப் போவதில்லை. தேவர்களாகிய நாங்களும் உலகில் படைக்கப் போகிறோம், அனுபவிக்கப் போகிறோமே தவிர, எங்கள் செயல்களைத் தங்களிடத்தில் ஸமர்ப்பிக்காமல் அலட்சியம் காட்டி விடுவோமோ – என்ற அச்சம் உண்டாகிறது. எனவே, முதலில் அத்தகைய சுயநலச் சிந்தையை நீக்கி, நாங்கள் படைப்பதற்குண்டான சக்தியை எங்களுக்குக் கொடுப் பீராக!” - என்று வேண்டி நின்றார்கள்.
இனி ஆறாவது அத்தியாயம்.
(தொடரும்)
நன்றி - துக்ளக்