பகவானிடம் அவனுடைய அநுபவத்தில் ஸதா காலமும் ஆழ்ந்து கிடந்தமையால் ஆழ்வார்கள் என்று காரணப் பெயர் தோன்றியது. இதை அவர்களே 'காலாழும், நெஞ்சழியும், கண் சுழலும்' என்று பாடியிருக்கிறார்கள். ஆக இப்படி ஆழ்வார்கள் பன்னிருவர்களும் பகவானிடம் ஆழங்கால் பட்டுக் கிடந்தமையை அவரவர்கள் பாசுரத்தின் மூலம் நிறைய காணலாம். பகவான் ஒருவனே புருஷோத்தமனாகிறான். நாம் எல்லோரும் அவன் வரையில் ஸ்தீரீ ரூபங்களே (பெண்களே) புருஷோத்தமனான எம்பெருமானை ஆண் உருமாறி பெண் உருக்கொண்டு அவனை அநுபவித்த ஆழ்வார்களும் உண்டு, அதாவது பெண் வடிவை தானாக ஏறிட்டுக் கொண்டார்கள், இப்படியாக எம்பெருமானை அநுபவித்தவர்களில் ஆண்டாள் என்னும் கோதை மிகவும் முக்கியமாகிறாள். காரணம் ஆழ்வார்கள் பெண் உருவை தானாக ஏற்றுக் கொண்டார்கள். ஆனால் கோதையோவென்றால் இயற்கையாகவே பெண் உருவோடு பகவானை அநுபவித்தவள் ஆகிறாள். இதை பெரியோர்கள் கூறும் பொழுது ஆழ்வார்களின் தன்மையை 'மேட்டுமடை' என்றும், ஆண்டாளின் தன்மையை 'பள்ளமடை' என்றும் சொல்லுவது வழக்கம். இப்படி அநுபவிக்க ஆண்டாளின் தூய காதலைக் காண்போம்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் பிராம்மண வகுப்பில் பிறந்த மஹா பக்தரான பெரியாழ்வார் புஷ்ப கைங்கர்யம் செய்து (மாலைகள் கட்டி) வாழ்ந்து வருகிறார். புத்திரன் (ஸந்ததி) இல்லாக் குறையுடன் வாழ்ந்து வந்த விஷ்ணு சித்தருக்கு பகவத் க்ருபையால் பூமி பிராட்டியின் அம்சமாக ஓர் நன்னாளில் அவர் தம் நந்தவனத்தில் திருத்துழாய் செடியின் கீழ் ஒரு பெண் குழந்தை இருக்கக் கண்ட ஆழ்வார் மிகுந்த சந்தோஷத்துடன் குழந்தையை எடுத்துப் போய் தன் மனைவியிடம் கொடுத்து இருவரும் ஆனந்தமாக அக்குழந்தையை வளர்த்து வருகிறார்கள், குழந்தை அதிவிலக்ஷணமாக நாளொருமேனியும், பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வருகிறது.
குழந்தைக்கு கோதை என்று பெயர் வைத்து ஜாதகாதி கர்மாக்களையும் குறைவற செய்தார்கள். இப்படி வளர்ந்து வரும் குழந்தையானது, திருத்துழாய் எப்படி வளரும் போதே நறுமணத்துடன் இருக்குமோ, அதுபோல் திருத்துழாயின் கீழ் பிறந்த கோதையும் தன் சிறுவயதிலேயே எம்பெருமான் மேல் பக்தி நிறைந்தவளாக அவனைப் புகழ்ந்து, ஆடியும் பாடியும் வருகிறாள், கோதை வளர, வளர அவளது பகவத் பக்தியும் வளர்ந்து வருகிறது. பகவானுக்கே நாம் அடிமை செய்ய வேண்டும் என்ற எண்ணமும், பகவத் தொண்டு மிகவும் சிறந்தது என்ற நோக்கமும் உள்ளவளாகவும் இருந்து வருகிறாள்.
இப்படி வளர்ந்து வரும் கோதைக்கு ஓர் சந்தேகம் தோன்றுகிறது. அதாவது நாம் ஆசைப்படும் பகவான் நம்மை விரும்புவானோ? அதற்கு தகுந்த அழகும், பண்பும் நம்மிடம் இருக்கிறதா? என்ற சந்தேகம் தான். அதை பரீக்ஷித்துப் பார்க்க எண்ணி தன் பிதாவால் பகவானுக்கு கட்டிவைக்கப்பட்டிருந்த மாலையை தன் கழுத்தில் போட்டுக் கொண்டு, நிலைக் கண்ணாடி முன்பு நின்று தன்னை அழகு பார்த்தாள். ஆஹா! நாம் நல்ல அழகுடன் தான் இருக்கிறோம் என்று தனக்குள் மகிழ்ந்து, இது போல் பல நாட்கள் தன்னை அழகு படுத்திக் கொண்டு, மாலையுடன் கண்ணாடி முன் நின்று ஆனந்தித்து வருவதும் வழக்கமாகிறது. பிறகு பல நாட்கள் கழித்து பெரியாழ்வார் அரங்கனுக்கே கோதையை பாணிக்ரஹணம் பண்ணிக் கொடுத்து விடுகிறார். இவள் சூடிக் களைந்த மாலையை அரங்கன் திருப்தியாக சாத்திக் கொள்வதால் "சூடிக் கொடுத்த நாச்சியார்'' என்ற சிறப்புப் பெயர் பெறுகிறாள். ஆண்டவனையே தன் பாமாலையாளும் ஆட் கொண்டபடியால் ''ஆண்டாள்'' என்ற பெயரும் இவளுக்கு ஏற்படுகின்றது.
ஒரு ஸமயம் வடபெருங்கோயில் உடையானை ஸேவிக்கச் சென்ற கோதைக்கு அங்கு ஓர் அதிஸயம் கண்டு தம் காதலுக்கு இடையூறு செய்யும் அந்த காக்ஷி கண்டு பேச, அதுவே அவளது ப்ரபந்தமாக ஆகிவிடுகிறது. அது அவளின் ப்ரபந்தமான ''நாச்சியார் திருமொழியில்'' 7ம் தசகத்தில் 10 பாசுரங்களாக வெகு அழகாக அமைந்திருக்கிறது. அதுவே இவ்வியாஸமாகும்.
பகவானையே அடைய பல நோன்புகள் நூற்று பல அரும்பாடுகள் பட்டு அடைந்த கோதைக்கு அங்கு பகவான் கையில் அமர்ந்திருக்கும் சங்கைப் பார்த்து ஒரு ஸமயம் பொறாமையும், மற்றொரு ஸமயம் ''உன் பாக்கியம் தான் என்னே'' என்று அதிசயமும் ஏற்படுகிறது.
ஏ சங்கே! பகவானுடைய அதரத்தைப் பருகும் பாக்கியத்தைப் படைத்த உன்னைக் கேட்கிறேன். அந்த பகவானின் திருவாய் அமுதமானது எப்படிப்பட்ட ரஸம் உடையது. கற்பூரத்தின் ரஸத்தைக் கொண்டதா, தாமரைப் பூவின் பரிமளத்தை ஒத்ததா அல்லது மதுரமான அமிர்தம் போன்றதா, அந்த அதிஸயத்தை (ருசியை) எனக்குச் சொல்லுவாயாக!
ஆஹா உன் அதிர்ஷ்டம் தான் என்னே! நீ பிறந்ததோ ஒன்றுக்கும் உதவாத உப்புக் கடலில், நீ வளர்ந்ததோ என்றால் பஞ்ஜஜனன் என்கிற அசுரனிடத்தில், இப்படியாக பிறந்தும், வளர்ந்தும் இருக்க உன் பாக்கிய விசேஷத்தால் ஸ்ரீகண்ணனின் திருக்கையில் அதிகம்பீரமாக வீற்றிருக்கிறாய், ஏ கோலப் பெரும் சங்கே! நீ ஸ்ரீவாஸுதேவன் கையில் இருப்பதும், அல்லாமல் நீ அவன் செவியில் பெண்களாகிய எங்களைப்பற்றி ஸதா காலமும் கோள் சொல்வது போல் தோன்றுகிறது, நீ அவன் செவியோடு, செவியாய் சாய்ந்திருப்பதைப் பார்த்தால், அப்படி நீ என்ன தான் ரகசியம் சொல்லுகிறாய், எங்களை ஏற்றுக்கொள்ளும்படி அவனிடம் நீ சொல்லலாகாதா!
ஏ, பாஞ்ஜஜன்னியமே! உன்னுடன் கூடப்பிறந்த பல பேர்கள் இருக்க அவர்கள் இருக்கிற இடம் யாருக்கும் தெரிவது இல்லை. அப்படியிருக்க நீ மட்டும் எப்போதும் பகவானைவிட்டு பிரியாமல் அவனது திருவாயின் அமுதத்தை பருகும் பாக்கியம் உனக்கு மட்டுமே கிடைத்திருக்கிறது. நீ கொடுத்து வைத்தவன். முன் செய்த தவப் பயனால் கிடைத்தது. வாழ்க நீ!
இவ்வுலகில் புண்ணிய தீர்த்தங்கள் பல உள்ளன. அதில் போய் தீர்த்தாமாட (ஸ்நானம் செய்ய) எல்லோரும் பல கஷ்டங்கள் பட்டு (படாதனபட்டு) தீர்த்தமாடி புண்ணியம் ஸம்பாதிக்கிறார்கள். அப்படி இருக்கும் போது நீ மட்டும் ஒரு பிரயாசையும் படாமல் உயர்ந்த புண்ணிய தீர்த்தமான எம்பெருமான் வாய் அமுதத்தில் இடைவிடாது அதில் அமிழ்ந்தும், பருகியும் உயர்ந்த புண்ணியங்களை எல்லாம் அடைந்து விட்டாய். உன் அதிர்ஷ்டமே அதிர்ஷ்டம், முன் செய்த புண்ணியம்.
நீ எம்பெருமான் திருக்கையில் வீற்றிருக்கும் அழகு எப்படியிருக்கிறது என்றால் அப்போது அலர்ந்த செந்தாமரைப் பூவில் இருக்கும் தேனைப் பருக வரும் அன்ன பக்ஷி போல் இருக்கிறது. அதாவது அவனுடைய சிவந்த கண்ணும், ஆடையும், கருத்த திருமேனியும் கொண்ட செந்தாமரைக் கண்கள் திருக்கையில் கண்வளரும் வெளுத்த பறவை போல் காக்ஷி அளிக்கும்.
ஏ, சங்கே! உன்னை ஒன்று கேட்கிறேன். நீ பண்ணுவது கொஞ்சமும், நியாயம் அற்றதும், செய்யத் தகாததும் ஆகும். எங்களைப் போன்ற பெண் குலத்தை எல்லாம் நீ விரோதித்துக் கொள்கிறாய். அவன் பத்தினிகளாகிய நாங்களே அநுபவிக்க வேண்டியதை நீ ஒருவனே ஏக போகமாக அநுபவித்து வருவது கொஞ்சமும் நியாயம் இல்லை. நன்கு யோசித்துப் பார். வீணாக எங்களின் கோபத்திற்கு ஆளாகாதே.
செல்வச் சீமானான சங்கே, நீ இரவும் பகலும் உண்ணும் ஸ்ரீ கண்ணபிரானின் அதரமானது உனக்கு ஒருவனுக்கு மட்டும் சொந்தமன்று. அக்கண்ணபிரான் மனைவிகளான எங்கள் பதினாராயிரம் பெண்களுக்கும் சொந்தம் என்று தெரிந்து கொள், அதுவும் நாங்கள் பார்த்திருக்கும் போதே எங்கள் எதிரிலேயே நீ இந்த அக்கிரமமான காரியம் செய்வது உனக்கு நன்று அன்று. உன்னை பகவத் பக்தன் என்றும், ஸாது என்றும் பெரியோர்கள் கூறக் கேட்டிருக்கிறோம். அப்படிப்பட்ட நீயா எங்கள் விரோதத்தை சம்பாதித்துக் கொள்கிறாய், இது நன்றாக இருக்கிறதா என்று பார்.
ஏ, சங்கே! எப்படி சரத் காலத்தில் பௌர்ணமி சந்திரன் உதயகிரியில் உதிக்கிறார் போல் நீயும் வடமதுரை மன்னனின் 'நீல மலை போன்ற திருமேனியில் அவன் கையில் வெண்மையாக அழகாக சரத்கால சந்திரனைப் போல ஸேவை தருகிறாய். உன் பாக்கியமே பாக்கியம்', இப்படி பாஞ்ஜஜன்னியத்தின் பெருமையை பற்றிக் கூறிய சூடிக்கொடுத்த நாச்சியாரின் இப்பத்துப் பாசுரங்களையும் சொன்னவர்கள், கேட்டவர்கள், எல்லோரும் இடைவிடாமல் இருந்துவரும் ஸ்ரீகண்ணனின் பாஞ்ஜஜன்னியம் போல் அவனுக்கு தொண்டு செய்து அவன் கூடவே இருக்கும் பாக்கியவானாகி விடுகிறார்கள் என்று பாசுரம் முடிவு பெறும் போது கூறுகிறாள் கோதை,
நாமும், கோதையின் தெய்வீகக் காதல் கதையைக் கேட்டு பேரின்பம் அடைவோம் வாரீர். பகவானிடம் பிரியா காதல் கொள்ளுவோம் வாரீர்.
ஆண்டாள் திருவடிகளே சரணம்
நன்றி - ஶ்ரீ ரங்கநாத பாதுகா புரட்டாசி 1987