வியாழன், 5 டிசம்பர், 2019

மயக்கும் தமிழ் - 30 - ஆழ்வார்க்கடியான் மை.பா.நாராயணன்

உன்னை நான் நினைக்கவும் நீ நினைக்க வேண்டும்!

புன்புல வழி அடைத்து அரக்கு இலச்சினை செய்து
நன் புல வழி திறந்து ஞான நற் சுடர் கொளீ இ
என்பில் எள்கி நெஞ்சு உருகி யுள் கனிந்து எழுந்தது ஓர்
அன்பில் அன்றி ஆழி யானை யாவர் காண வல்லரே?

திருச்சந்தவிருத்தம், திருமழிசையாழ்வார்

இறை உணர்வைப் பெறுவது எப்படி?

அந்த தூய்மையான சிந்தனையைப் பெறுவதற்கு எவையெல்லாம் தடையாக உள்ளன என்பதை பட்டியலிடுகிறார் ஆழ்வார், அதோடு நிற்காமல் அவற்றை எவ்வாறு களைய முடியும் என்பதற்கும் அவரே வழிவகை காண்கிறார். "தாழ்ந்ததான புலன்வழிச் செல்லும் பாதையை அடைத்து அரக்கு முத்திரையிட்டு, நல்லதான கடவுள் நெறியைத் திறந்து ஞானவிளக்கை ஏற்றி, எலும்புக்கு இடமாகிய இந்த உடம்பும் நெஞ்சும் உருகி, மனம் கனிந்து பரம பக்தியில் திளைத்தவர்களே" ஆழிப்படையை உடைய திருமாலைக் காணமுடியும். இப்படிப்பட்ட உணர்வுகளைப் பெறாதவர்கள் இறை உணர்வைப் பெறுவது கடினம் என்கிறார் திருமழிசையாழ்வார். ஏன் அப்படிச் சொல்கிறார் தெரியுமா? நாம் சென்னையில் இருப்போம். நம் மனம் சிங்கப்பூர் வீதிகளில் பயணம் செய்து கொண்டிருக்கும். அப்படிச் செய்யக் கூடாது. பின் எப்படி மனம் மாறவேண்டுமாம்? 


‘‘நெஞ்சு உருகி உள்கனிந்து
எழுந்ததோர் அன்பில் அன்றி’’ 

ஆழ்வார் தன்னுடைய அனுபவத்தில் இருந்தே நமக்கு பாடம் நடத்துகிறார். பாசுரத்தின் முதல் வரியிலேயே ‘‘புன்புல வழி அடைத்து அரக்கு இலச்சினை செய்து...’’ முக்கியமான பணப் பெட்டகங்களிலும் முக்கிய பத்திரங்கள் இருக்கும் பையிலும் அரக்கு முத்திரையிட்டு பாதுகாப்போமோ அப்படி நம் புலன்களை, அதாவது இந்திரியங்களை இன்னும் சொல்லப் போனால் பஞ்சேந்திரியங்களை அதன்போக்கில் திமிறிப் போகாமல் ஒரு கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்கிறார். இப்படியெல்லாம் படிக்கலாம், எழுதலாம். ஆனால், நடைமுறையில் கொண்டுவர முடியுமா என்று மிகச் சாதாரணமாக ஒரு கேள்வி வந்து நம்முன் எழும்! முயற்சியும், பயிற்சியும் இருந்தால் எல்லாம் சாத்தியமாகும். கூடவே நாம் உயர்ந்ததான பரந்தாமனைத் தானே நெஞ்சில் ஏந்த நினைக்கிறோம். 

அதனால் நிச்சயம் கைகூடும் என்ற நம்பிக்கை வைக்க வேண்டும். இருள் விலகி ஒளிபுக வேண்டுமானால் அங்கே மனக் கதவு திறக்க வேண்டும். மனக் கதவு திறந்தால்தானே ஞான தீபம் ஏற்ற முடியும். இறை உணர்வோடு இருந்தால் நல்லது நடக்கும் எனச் சொல்கிற ஆழ்வார் ‘‘அவனருளால் அவன் தாள்வணங்கி’’ என்பதைப்போல அதற்கும் அவன் காருண்யத்தை நினைத்தே விண்ணப்பத்தை அவனிடமே வைக்கிறார். உன்னை மனதாற நினைக்க வேண்டும். அதற்கு உன்னருள் வேண்டும். ஓர் அருமையான பாசுரத்தை இதே திருச்சந்த விருத்தத்திலிருந்தே தருகிறார் திருமழிசையாழ்வார் 

இரந்து உரைப்பது உண்டு வாழி! ஏமநீர் நிறத்து அமா! 
வரம் தரும் திருக்குறிப்பில் வைத்தாகில், மன்னுசீர் 
பரந்த சிந்தை ஒன்றி நின்று நின்னபாத பங்கயம் 
நிரந்தரம் நினைப்பதாக நீ நினைக்க வேண்டுமே!

திருச்சந்த விருத்தம், திருமழிசையாழ்வார்

இறைவா! உன்னை இடைவிடாது எப்போதும் நான் நினைக்க வேண்டும் இடையில் எந்தத் தொய்வும் எனக்கு ஏற்பட்டுவிடக் கூடாது. கவனச் சிதறல்களாலும் மதி மயக்கத்தாலும் நான் உன்னை நினைக்காமல் வேறு நினைவுகளில் மூழ்கிவிடக் கூடாது. என்னுடைய முன்னைப் பழவினையின் காரணமாக நான் நிலையில்லாத பொருட்களின் மீதும் அழியக் கூடிய தேகத்தின் மீதும் ஆசை வைக்காதபடி நீ பார்த்தருள வேண்டும். ஏன் என்றால் மனம் ஒரு குரங்கு. அது கிளைக்கு கிளை உடனே தாவும். ஆனால், மனித மனமே நொடிக்கு நொடி தாவிக் கொண்டே இருக்கும். எனக்கு சதா உன்னைப் பற்றிய சிந்தனை வேண்டும். உன் திருவடி தரிசனப்பேறு கிட்ட வேண்டும் என்கிறார். நாம் வங்கியில் நிரந்தர வைப்புத் தொகை வைப்பு வைப்போமே அதைப்போல நிரந்தரமாக உன் அருள் வேண்டுமென்று இறைவனிடம் யாசிக்கிறார். அவனிடம் யாசிக்காமல் வேறு யாரிடம் கேட்பது. ஊருக்கே... 

இந்த உலகத்திற்கே படியளக்கிற பரந்தாமன் அவன்தானே! ஆழ்வார்களும் அவர்களுடைய தமிழும் அடடா...! நிரந்தரம்  நினைப்பதாக நீ நினைக்க வேண்டுமே! பாசுரத்தின் கடைசி வரியை இப்படி முடிக்கிறார். பரமாத்மாவிற்கும் ஜீவாத்மாவிற்கும் உள்ள இந்தப் புனிதமான நட்பை, உறவை எப்படி கையாளுகிறார் பாருங்கள். நிரந்தரமாக நாங்கள் அதாவது, அடியார்கள் பக்தர்கள் நினைப்பதற்கு அதுவும் எப்படி? நிரந்தரமாக நினைப்பதற்கு நீ மனது வைக்க வேண்டும். எப்படிப்பட்ட மேலான சிந்தனை இருந்தால் இப்படியெல்லாம் நினைக்க முடியும். ஆழ்வார்களும் அவர்களுடைய அற்புதத் தமிழும் இறைவன் மேல் மாறாத பக்தியை, பற்றை, பாசத்தை, மேலான அன்பை வைத்திருப்பதை கண்கூடாக நம்மால் உணர முடிகிறது. பெரியாழ்வார் எல்லோரைக் காட்டிலும் எம்பெருமானுக்கே கண் திருஷ்டிபட்டுவிடக் கூடாது என்று பல்லாண்டு பாடினார். இதற்கு என்ன காரணம் என்னவென்றால் இறைவன் மேல் ஏற்பட்ட பொங்கும் பரிவுதான் காரணம். அவருடைய அன்புத் திருமகள் ஆண்டாள் நாச்சியாரோ...

‘‘குறை ஒன்றுமில்லாத கோவிந்தா
உன்தன்னோடு உறவேல் நமக்கு 
இங்கு ஒழிக்க ஒழியாது
அன்பினால் உன்றன்னை சிறு பேரழைத்தனமும் சீறியருளாதே
இறைவா நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய்’’

நாச்சியார் திருமொழி மிகவும் தீர்க்கமாக இருக்கும். சொல்ல வருவதை எந்தப் பிசிறும் இல்லாமல் மிகவும் ஆணித்தரமாகச் சொல்வாள். அவள் பாசுரங்களில் ஒரு விதமான அதீத நம்பிக்கையும் பரந்தாமன் மீதும் பற்றும் இருப்பதை நம்மால் உணரமுடியும் எங்களுக்கு எந்தக் குறையும் இல்லை என்கிறாள். குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா இந்த வார்த்தைகள் உச்சரிக்காத உதடுகள் உண்டா? மந்திரச் சொல் என்பது இதுதானா? இதையே தலைப்பாக வைத்து மாபெரும் 
புத்தகத்தை படைத்துவிட்டாரே காலம் சென்ற முக்கூர் லக்ஷ்மி நரசிம்மாச்சாரியார். காலம் தமிழுக்கும் தமிழர்களுக்கும் தந்த மாபெரும் கொடையாளி இல்லையா அவர்! ஆண்டாளின் பாசுரங்களில் உள்ள அற்புத வார்த்தைகள்தானே அந்தப் பெருமகனாரை ஈர்த்தது. இதனால் இதற்குக் காந்த சக்தியைப்போல் எல்லோரையும் கவருகிற பேராற்றல் உண்டு. இதனால்தானே திவ்ய பிரபந்த பாசுரங்களை மயக்கும் தமிழ் என்கிறார்கள், பெருமக்கள். 

திருமழிசையாழ்வார், ஆண்டாள் நாச்சியார், பெரியாழ்வார் என்று இல்லை. மற்ற எல்லா ஆழ்வார்களும் இதே ஒரு ஈர்ப்பு நிலையைத்தான் கையில் எடுத்திருக்கிறார்கள். இன்னும் சரியாகச் சொல்லப் போனால் அதற்கு ஆட்பட்டிருக்கிறார்கள். பேயாழ்வார் தன்னுடைய மூன்றாம் திருவந்தாதியில் ‘‘அனந்தன் அணைகிடக்கும் அம்மான் அடியேன் மனந்தன் அணைகிடக்கும் வந்து...’’ என்ன சொல்ல வருகிறார் தெரியுமா? எம்பெருமானை மகாவிஷ்ணு அனந்தசயனமாகிய படுக்கையைவிட்டு என்னுடைய மனத்திலே வந்து உறைகின்றான் என்கிறார். தன் பெருமைக்கு ஏற்றதான அரிய அவ்வளந்த சயனத்தை விட்டு இந்தக் கல் மனத்திலே வந்து தங்கினானே என்று உருகுகிறார் ஆழ்வார். பக்தியை பிரதானமாக ஆழ்வார் கொண்டிருப்பதனால்தான் ‘அடியேன்’ என்னும் வார்த்தை பாசுரத்தில் வந்து விழுகிறது. ஆழ்வார்கள் காட்டும் பக்தி நெறியிலே மனதைச் செலுத்தி மாலவனின் மனதில் இடம் பிடிக்கப் பிரயத்தயனப்படுவோம்!

நன்றி - தினகரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக