எண்ணும் திருநாமம் திண்ணம் நாரணமே!
வையமேழும் உண்டு ஆலிலை வைகிய
மாயவன் அடியவர்க்கு
மெய்யனாகி தெய்வநாயகனிடம்
மெய்தகு வரை சாரல்
மொய் கொள் மாதவி செண்பகம்
முயங்கிய முல்லையங்கொடியாட
செய்ய தாமரைச் செழும் பனை
திகழ் தரு திருவஹிந்திரபுரமே...
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
என்ன ஒரு அற்புதமான பாசுரம். இந்தப் பாசுரம் நூற்றியெட்டு திவ்ய தேசங்களில் நடுநாட்டிலுள்ள இரண்டு திவ்யதேசங்களுக்குரியது. ஒன்று திருக்கோவிலூர். மற்றொன்று திருவஹிந்திரபுரம். இரண்டையுமே பார்க்கப் பார்க்க காண கண்கோடி வேண்டும். திருவஹிந்திரபுரம் என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது வேதாந்த தேசிகர். எப்படிப்பட்ட மகா புருஷர். அவரின் மூச்சுக்காற்று உலவுகிற புனித மண் அல்லவா? எப்படி ராமானுஜரையும் திருக்கோட்டியூரையும் பிரிக்க முடியாதோ அதேபோல் திருவஹிந்திரபுரத்தையும் ஸ்வாமி வேதாந்த தேசிகரையும் பிரித்துப் பார்க்க முடியாது. பாசுரத்தின் அர்த்தத்திற்கு வருவோம்! மெய்யடியார்களே! ஏழு உலகங்களையும் உண்டு ஆலந்தளிரில் கண் வளர்ந்த வியக்கத்தக்க சக்தி வாய்ந்தவன்; அடியார்களுக்குத் தன்னை உள்ளபடி காட்டும் மெய்ய நாயகனாகிய தெய்வ நாயகன்.
இப்பெருமானுடைய திருமேனியை அழகாகப் பெற்றிருக்கின்ற இந்தப் புனித மண்ணில், குறிஞ்சி நிலத்தில் மலரும் அழகான குருக்கத்திப் பூக்கள் செண்பக மரத்தைத் தழுவி வளரும். பக்கத்திலேயே அழகிய முல்லைக் கொடிகள் காற்றில் அசைந்தபடி இருக்குமாம், எழிலும், பொழிலும் உடைய திருவஹிந்திரபுரம்.
செந்தாமரைப் பூக்கள் பூத்துக் குலுங்குமாம். இங்கே இந்த திவ்ய க்ஷேத்ரத்திலே இருக்கிற இறைவன் எப்படிப்பட்டவனாம்? எடுத்த எடுப்பிலேயே பாசுரத்தில் சொல்கிறாரே திருமங்கையாழ்வார். 'ஆல் இலை வைகிய மாயவன்' அதாவது பெரிய உலகங்கள் எல்லாவற்றையும் அடக்கியவன். எங்கே அடக்கினானாம்? சிறிய வயிற்றில் அதுவும் எங்கே இருந்துகொண்டு தெரியுமா? சிறிய ஆலந்தளிரில்... இதே கருத்தை திருப்பாணாழ்வாரும் சிந்தித்திருப்பது மிகவும் வியப்பாகவும் ஆச்சரியமாகவும் இருக்கிறது. தன்னுடைய அமலனாதிப்பிரானில்,
ஆலமா மரத்தின் இலைமேல் ஒரு பாலகனாய்,
ஞாலம் ஏழும் உண்டான் அரங்கத்து அரவின் அணையான்,
கோல மாமணி ஆரமும் முத்துத் தாமமும் முடிவில்ல தோரெழில்
நீல மேனி ஐயோ! நிறை கொண்டது என் நெஞ்சினையே!
ஆழ்வார்களின் கால நிலைகள் மாறுபடலாம். ஆனால், பகவான் கண்ணனை, அந்த மாயக் கூத்தனை எப்படி ஒரே நேர்க்கோட்டில் சிந்தித்திருக்கிறார்கள். பார்ப்பதற்கு சிறியவன். படைப்பதில் பெரியவன் இல்லாவிட்டால் பார்த்தனுக்கு சாரதியாக இருந்திருப்பானா? தேரிலே நடுநாயகமாக அர்ஜுனனை உட்கார வைத்துவிட்டு அகிலத்தையே படைத்த அண்ட சராசரங்களின் நாயகன் சர்வ லோகத்தையும் ஆட்டிப் படைக்கும் தெய்வ நாயகன் தேரை ஓட்டுவானா? அர்ஜுனனுடைய தேரை மட்டுமா ஓட்டுகிறான்.
பக்தர்களாகிய நம் மனத்தேரையும் தானே ஓட்டிக் கொண்டிருக்கிறான். இப்படிப்பட்ட அற்புதங்களை படைத்த இறைவன் ஆலந்தளிரில் வாசம் செய்கிறான் என்றால் என்ன அர்த்தம்? உருவம் கண்டு எள்ளாதே என்பதுதான். அவன் தேவைப்படும்போது விஸ்வரூபத்தை எடுக்கத் தவறாதவன். கண்ணன் மீது யாருக்குத்தான் காதல் இல்லை, அந்த மா மாயனிடம் உள்ளத்தை பறிகொடுக்காதவர்கள் யாராவது இருக்க முடியுமா? ஆண்டாள்கூட, தன்னுடைய திருப்பாவையில் மாயனை மன்னு வடமதுரை மைந்தனை என்றால், அவருடைய திருத்தகப்பனாரோ கண்ணனை தேனில் இனிய பிரானே என்கிறார். எல்லாவற்றையுமே இருந்த இடத்தில் இருந்துகொண்டு தன்னுடைய ஞானதிருஷ்டியால் அறியும் ஆற்றல் பெற்றவரான ஆழ்வார்களின் தலைமகன் நம்மாழ்வார். ஒருபடி மேலேபோய் தன்னுடைய திருவாய்மொழிப் பாசுரத்தில்,
‘‘கண்ணன் கழல் இணை
நண்ணும் மனம் உடையீர்!
எண்ணும் திருநாமம்
திண்ணம் நாரணமே!’’
என்ன அற்புதமான பாசுரம்! என்ன சொல்ல வருகிறார் தெரியுமா? அடியவர்களுக்கு எளியவனான கண்ணபிரானுடைய திருவடிகளை அடைய வேண்டும் என்ற மனத்தினை உடையவர்களே நீங்கள் எண்ணத்தக்க திருப்பெயர் நாராணன் என்பதேயாகும். திருவஹிந்திரபுரத்து பாசுரம். அதுவும் மாயவன், தெய்வ நாயகன். என் மனம் எங்கெங்கோ சென்று விட்டது. நம் வீட்டில் பிறந்த குழந்தையை கொண்டாடி மகிழ்வதுபோல் கண்ணனை இந்த உலகமே கொண்டாடி மகிழ்கிறது. அவனைவிட அனுபவிக்கத்தக்கவர்கள் இந்த உலகத்தில் யார் இருக்கிறார்கள். அதனால்தான் திருமங்கையாழ்வாருக்கு எல்லாப் பெருமானும் கண்ணனாகவே தெரிகிறார்கள்போலும். திருவஹிந்திரபுரத்து மூலவரின் திருநாமம் என்ன தெரியுமா?
தெய்வநாயகன். கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம் தேவர்களுக்குத் தலைவன். ஆதலால் தேவநாதன் என்ற பெயரும் உண்டு. தாயார் வைகுண்ட நாயகி, ஹேமாம்புஜ வல்லித் தாயார். தாயாரைப் பார்ப்பதற்கு காணக் கண்கோடி வேண்டும் என்கிறார்கள். அடடா என்ன பேரழகு! இப்பெருமானுக்கு தாஸ ஸத்யன், அச்சுதன், ஸ்த்ரஜயோதிஹ் அனகஞ்யோதிஷ், திரிமூர்த்தி என்று ஐந்து பெயர்களை பிரமாண்ட புராணம் சூட்டி மகிழ்கின்றது. இதில் என்ன வியப்பு என்கிறீர்களா? இதை அப்படியே அருமையாக தமிழ்ப்படுத்தியிருக்கிறார் நம் திருமங்கையாழ்வார். அடியார்க்கு மெய்யன் மேஷ சோதியன் மூவராகிய ஒருவன் என்று எளிய இனிய தமிழில் தந்திருக்கிறார்.
இதனால்தானோ என்னவோ நாலாயிர திவ்ய பிரபந்தத்தை திராவிட வேதம் என்று கூறி உள்ளம் மகிழ்கிறது வைணவ உலகம்! இந்தத் திருவஹிந்திரபுரத்து பெருமாள் கோயில் பக்கத்திலேயே திருமாலின் திருஅவதாரங்களில் ஒன்றான ஹயக்ரீவர் கோயில் அமைந்திருக்கிறது. சின்னஞ் சிறிய மலையில் பார்ப்பதற்கு ரம்மியமான சூழலில் குதிரை முகம் கொண்ட இந்த ஹயக்ரீவர்தான் குழந்தைகளின் படிப்பிற்கும் ஞானத்திற்கும் அறிவு மேன்மைக்கும் ஆதாரமாகத் திகழ்கிறார். வேதாந்த தேசிகர் அருளிய ஹயக்ரீவ மந்திரத்தை படிப்பவர்கள் சகல நன்மைகளும் பெற்று வருகிறார்கள். கடலூருக்குப் பக்கத்தில் இருக்கிற திருவஹிந்திரபுரத்துக்குச் சென்று தெய்வநாயகனையும் ஹேமாம்புஜ வல்லித் தாயாரையும் ஹயக்ரீவரையும் மனம் குளிர தரிசித்தால் நமக்கு எல்லாம் சித்தியாகும்.
நன்றி - தினகரன்