புதன், 4 டிசம்பர், 2019

சங்கின் சஞ்சலம் - ர.வேங்கடரத்தினம்

ஸ்ரீ வைகுண்டம்! 


பரமபத நாதனும் தேவியரும் எங்கோ சென்றுள்ள தருணம். சங்கமும் சக்கரமும் மட்டுமே உள்ளனர்.


சக்கரத்தாழ்வான் ஓரக் கண்ணால் சங்கரையனைப் பார்க்கிறான். ஏளனமாகச் சிறிது சிரிக்கிறான். சங்கரையன் பாராதது போல் இருக்கவே, சுதர்சனன் மீண்டும் சிறிது உரக்கவே கனைத்துக் கவனத்தை இழுத்த பின் கேலியாகச் சிரிக்கிறான்.


வலம்புரியான் விழிக்கிறான். வினாவுகிறான் - “சுதர்சனா, சிரிக்கிறாயே தனக்குள்ளேயே. என்ன வந்து விட்டது உனக்கு?”


“எனக்கொன்றும் வரவில்லை? உன்னைப் பார்த்தேன். சிரிப்பு வந்தது, என்னால் அடக்கிக் கொள்ள முடியவில்லை. சிரித்தேன்.”


“என்னைப் பார்த்தா சிரித்தாய்? காரணம்?”



“அப்படிக்கேள். சொல்கிறேன்” என்ற பீடிகையைக் கேட்டதுமே, வலம்புரியானுக்குச் சிறிது உள்ளம் கலங்குகிறது, இவன் என்ன சொல்வானோ தன்னைப்பற்றி என்று.


“நாம் இருவரும் எம்பெருமானின் இரு திருக்கரங்களிலும் என்றுமே இருப்பவர்கள்…”.


“ஆம், அது முற்றும் சரி” 


“அவசரப்படாதே. முழுதும் கேள்” என்ற சிறு குட்டுக் குட்டிவிட்டுச் சக்கரத்தாழ்வான் தொடர்கிறான். 


“நான் ஐயனின் திருக்கரத்தில் இருப்பது சரி, அவர்க்கு நான் தேவை, அவருடைய வலக்கரமாக விளங்குபவன் நான்…”


“வலம் - இடம், கீழ் - மேல் என்ற வேறுபாடுகள் அனைத்திற்கும் அப்பாற்பட்ட பரம்பொருளின் சந்நிதானத்தில் இதென்ன பேச்சு?”


“உன் சாமர்த்தியமான விளக்கம் ஏதும் வேண்டேன். நான் ஈசனின் வலக்கரமாக இருக்கிறேன் என்பது ஒன்று. நீ இடக்கரமாக இரு. இதில் எனக்கொன்றும் வருத்தம் இல்லை. ஆனால்...... உண்மையைச் சொன்னால், கோபம் கொள்ள மாட்டாயே?” சக்கரத்தாழ்வான் எள்ளி நகைக்கும் குரலில் கேட்கிறான்.


பஞ்சசனன் ஒரு வினாடி திகைத்து நிற்கிறான்.


“பகவான் எதற்குத்தான் உன்னை அநாவசியமாக, எங்கே சென்றாலும் சுமந்து செல்கிறாரோ? பகைவர்கள் மாய்ப்பது முழுதும் என் பணி.”


“நீயோ அலங்காரமாக இடத்திருக்கரத்தில் என்றுமே இருப்பதோடு சரி, நீ நம்பெருமானுக்கு என்ன பணி செய்திருக்கிறாய்? நீயே சொல்லு.”


பஞ்சசனன் ஏற்கெனவே கூனிக் குறுகியவன் தலை குனிகிறான். சக்கரன் தொடர்கிறான். 


“எம்பெருமானின் திருநாமமே சக்கரபாணி என்பதை நீ மறந்தாயா?”


வலம்புரியானின் வாய் துடிக்கிறது. “அப்படிப் பார்த்தால், எவரும் சங்கு சக்கரம் என்று என்னைத்தான் முதலில் சொல்வர், சக்கர - சங்கு என்ற பேச்சு வழக்கில் இல்லையே.”


சுதர்சனன் சளைக்கவில்லை. “சங்கு சக்கர சுவாமி எனும் போது, நான் எம்பெருமானை ஒட்டி இருக்கிறேன். அவர்க்கு அடுத்தது நான். நீ அவரை விட்டுத் தள்ளியிருப்பவன். ஏற்கிறாயா இதை?”


வலம்புரியினால் வாய் திறக்க முடியவில்லை; சுருண்டு அமர்ந்து விடுகிறான், சுதர்சனன் உருண்டு ஓடுகிறான் வெற்றி பெற்ற இறுமாப்பில். 


ஸ்ரீ தேவி வருகிறாள். தனித்துப் பஞ்சசனன் குறுகிக் கிடப்பதைக் காண்கிறாள், பிராட்டி அன்புடன் அவனை விளிக்கிறாள், “என்ன நேர்ந்தது உனக்கு? சோர்ந்து சுருண்டு கிடக்கிறாயே?”


அழமாட்டாக் குறையாக, அவ்வளவையும் வலம்புரியான் தேவிக்குச் சொல்கிறான்.


தேவிக்கும் மனம் சிறிது கலங்குகிறது. இதற்குள் அங்கே வந்து நிற்கிறார் சாட்சாத் திருமால், வழக்கமான புன்னகை ஒளிர கேட்கிறார். “என்ன விஷயம் இது? சுதர்சனன் அங்கே நிற்கிறான், வலம்புரியான் இங்கே கலங்கிய கண்களோடு கொஞ்சம் நீரிட்ட நிலையில் உள்ளான்.”


பிராட்டி கூறுகிறாள் “நாதா, தங்களுக்குத் தெரியாததா இங்கு நடந்தது? சக்கரன் வலம்புரியானை ஏளனமாகப் பேசுகிறானாம்.”


“ஆமாம், உன் மனசு பொறுக்குமா? இருவரும் ஒரே ஊர்க்காரர்கள் ஆயிற்றே?”


பகவான் கடைக் கண்ணினால் தேவியின் முகத்தைக் கவனிக்கிறார், லஷ்மி தேவி பிறந்தது திருப்பாற்கடலில், சங்கமும் தோன்றியது ஆழ்கடலிலே தான், இதையே பரந்தாமன் குறிப்பிடுகிறார்.


தேவி - “இதில் எனக்கும் ஒரு குட்டா?” என்கிறார். எம்பெருமான் நகைத்தவாறு விளக்குகிறார், “குட்டு அல்ல. நீ அவனைக் கண் கலங்க விடலாமா என்றுதான் கேட்கிறேன். விளக்க வேண்டியது தானே உன்மையை?”


பிராட்டி ஒரு கணம் வாய் திறவாது இருக்கிறாள்.


“விளங்கவில்லையா என் அருமை. நாயகிக்கும்?” எனக் கேட்டுவிட்டுத் திருமால் சிரிக்கிறார்.


லக்ஷ்மி தேவி அப்படியே நிற்கிறாள்.


“இன்னுமா விளங்கவில்லை. இப்பொழுது?” எனக் கேட்டுவிட்டு ஐயன் உரக்க - அண்ட சராசரமுமே இடிந்து விழும் போலச் சிரிக்கிறார். உலகமே ஒரு கணம் நடுக்குற்று ஓய்கிறது. வெளியே இருக்கும் சுதர்சனன் எட்டிப் பார்க்கிறான். வலம்புரியான் திகைத்து நிற்கிறான். பிராட்டியின் உடலும் ஒரு முறை நடுக்குற்று மீள்கிறது.


“புரிந்ததா இப்போதாவது? நரசிம்ம அவதாரத்தில் எங்கே போய் இருந்தாய் என்று வாய் திறந்து கேளடா, வலம்புரி, இரணிய வதையின் போது, சுதர்சனம் எனக்கு என்ன பணி செய்தானாம், சொல்லச் சொல்லு. பார் இந்த என் கைந்நகங்களை, இன்னும் அந்த இரத்தக் கறை போகவில்லை!”


பகைவானின் திருக்கர விரல் நுனிகளில் இரத்தச் செம்மை தெரிகிறது. வலம்புரியானுக்குச் சிறிது வலிவு வந்து விடுகிறது. சுதர்சனனைத் தேடிச் செல்கிறான்.


“எட்டிப் பார்த்தாயே, சுதர்சனா ஐயன் கூறியதைக் கேட்டாயா?”


“கேட்டேன், நன்றாகக் கேட்டேன்.”


“போதுமா? இன்னும் விளக்க மேண்டுமா உன் பிரமாதக் கைங்கரியத்தை?”


சங்கரையனுக்குச் சுதர்சனன் சளைப்பதாக இல்லை.


“சரி, அப்படியே இருக்கட்டும், ஆக, இரணிய வதையின் பொழுது மட்டும் பகவானுக்கு நான் பயன்படவில்லை. வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் அல்லவா? எம்பெருமான் தம் திருப்பற்களாலும் திருநகங்களினாலும் இரணியனைக் கிழித்துப் போட்டதில், அதிசயம் என்ன? அது அவர் திருவுள்ளம். என் கேள்வி, நீ எம்பெருமானுக்கு எப்பொழுதேனும் கைங்கரியம் புரிந்தாயா என்பதல்லவா? பதில் சொல்.”


வலம்புரியான் வகையாகச் சிக்கித் தவிக்கிறான். விடை இல்லை வாய் திறக்க, உதடுகள் துடிக்கப் பிராட்டியின் சந்நிதானத்திற்கு விரைகிறான். அன்னை அனைத்தையும் கேட்கிறாள். ஐயனின் அற்புத லீலைகளில் இதற்கும் ஒரு சமாதானம் இருக்குமே என, பரந்தாமன் பால் திரும்புகிறாள். திருமால் திருமுகத்தில் புன்னகை ஒளி வீசிச் சுடர்கிறது.


அப்பேரொளியில் பிராட்டியின் திருமுக மண்டலமும் மின்னுகிறது.


“சுதர்சனத்தைச் சிறிது பொறுத்திருக்கச் சொல்” - திருமாலின் இம்மொழிகளைக் கேட்டு அன்னை வியப்புடன் நிற்கிறாள். சிறிது என்றால், எவ்வளவு யுகங்கள் என்னும் குறிப்பு அந்நோக்கில் தென்படுகிறது.


பரமனே விளக்குகிறார், “குரு ஷேத்திரப் போர் என்று ஒரு பெரும் யுத்தம் மூளப்போகிறது, பார்த்துக் கொண்டே இரு. அங்கே எனக்கு வேலை வெறும் தேர் ஓட்டுவது மட்டுமே, சக்கரத்தை எடுத்துச் செல்லப் போவதே இல்லை. சுதர்சனம் துருப்பிடித்து விடாதபடி நீ பார்த்துக் கொள், என் அருமைத் தேவி.” 


வெளியிலே நிற்கும் சுதர்சனத்திற்குப் பேரிடியாக இருக்கிறது ஐயனின் இப்பேச்சு. பரந்தாமன் தொடர்ந்து சொல்கிறார் - “ரத சாரத்தியத்தின் போது, சங்கம் எப்படியும் வேண்டும். என்னோடு கூடவே இருப்பான் பஞ்சனன், அந்த யுத்தத்தில் அசுவத்தாமா என்ற ஒரு யானை இறந்து விழும். உடனே 'அசுவத்தாமா யானை ஒழித்தாயிற்று' எனப் போர்க்களத்தில் பாண்டவரின் அறிவிப்புத் தொடரும். அந்தத் தருணம் இந்தச் சங்கரையன் மூலம் நான் 'யானை' என்ற சொல் காதில் விழாதவண்ணம் முழக்கம் செய்து, போரின் போக்கையே - மாற்றப் போகிறேன். மாவீரன் அசுவத்தாமன் இறந்ததாகத் துடிதுடித்துப் போவர் பகைவர். இவ்வளவு சுவாரசியமான வேலையெல்லாம் வைத்திருக்கிறேன் உன் அருமைப் பஞ்சசனனுக்கு!”


இவ்வாறு ஐயன் திருவாய் மலர்ந்தருளுகிற தருணம், அங்கே சாயக் கொண்டையும் சுடர்க்கொடியுமாய் அழகு மின்னும் எழில் உருவாக வருகிறாள் கோதா நாச்சியார் - சாட்சாத் நம் ஆண்டாள். பகவானின் எழில் வதனத்தில் அற்புதக் குறுநகை மின்னியோடுகிறது. பரந்தாமன் பகர்கிறார் - “நல்ல வேளையில் வந்தாய், கோதா தேவி! பஞ்சசனன் இங்கே ஒரு நாழிகையாய்க் கண்ணீர் விட்டு அழாக்குறையாகக் கலங்கி நிற்கிறான். நீதான் அவனைச் சமாதானப் படுத்த வேண்டும். லஷ்மி தேவி கூட இயலாமல் நின்றுவிட்டாள்.”


ஆண்டாளுக்கு லஷ்மிப் பிராட்டி நடந்தது அனைத்தையும் எடுத்து இயம்புகிறாள். புரிகிறது கோதா தேவிக்கு ஐயனின் கட்டளை, தேனினும் இனிய திவ்வியத்தமிழில் ஆன்டாள் நாச்சியார் திருமொழிப் பாசுரத்தை ஐயனின் எதிரே இசையோடு வழங்குவாள்.


“கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ 
திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்திருக்குமோ
மருப்பொசித்த மாதவன் தன் வாய்ச் சுவையும் நாற்றமும் 
விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண் சங்கே”


“கடலில் பிறந்து கருதாது பஞ்சசனன் 
உடலில் வளர்ந்துபோய் ஊழியான் கைத்தலத் 
திடரில், குடியேறித் தீய அசுரர் நடலைப் 
படமுழங்கும் தோற்றத்தாய் நற்சங்கே!”


“தடவரையின் மீதே சரற்கால சந்திரன் 
இடையுவா வில்வந் தெழுந்தாலே போல் நீயும் 
வட மதுரையார் மன்னன் வாசுதேவன் கையில் 
குடியேறி வீற்றிருந்தாய் கோலம் பெரும் சங்கே”


“மன்னாகி நின்ற மதுசூதன் வாய் அமுதம் 
பன்னாளும் உண்கின்றாய் பாஞ்ச சன்னியமே.”

“உண்பது சொல்லில் உளகளந்தான் வாய் அமுதம்!” 


இப்பொழுது சுதர்சனன் தலை குனிவுடன் வலம்புரியானைப் பார்க்கிறான். வலம்புரியான் கோதா தேவியின் திருப்பாதத்தைப் பெருமிதத்தோடு நோக்குகிறான், எம்பெருமானும் பிராட்டி லஷ்மியும் கோதையின் கீதத்தில் ஆழ்கின்றனர்.  

ஆண்டாள் திருவடிகளே சரணம்.


நன்றி - சப்தகிரி ஜனவரி 1985

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக