ஸுந்தர காண்டத்தில் ராக்ஷஸிகளின் மத்தியில் தேற்றுவாறின்றி துக்கமே வடிவாய் அமர்ந்திருக்கும் பிராட்டி ஜானகிக்கு பெரிதும் ஆறுதல் அளிக்கும் வகையில் விபீஷணனுடைய பெண்ணான த்ரிஜடை என்பவள் தான் கண்ட கனவு பற்றி கூறுகிறாள். இவள் கனவில் கண்டது ராமனின் வெற்றி. ராவணனின் வீழ்ச்சி. இவள் கண்ட கனவு அப்படியே பலிக்கிறது என்பதை பின்னர் நிகழ்ந்த நிகழ்ச்சிகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் புரியும். இது வால்மீகி ராமாயண வரலாறு.
பின்னிட்டு பூமாதேவி ஸ்ரீவில்லிப்புத்தூரில் கோதா தேவியாக அவதாரம் செய்து, சிறு வயது முதலே அரங்க நகரிலே பள்ளிகொண்ட அண்ணலை, அழகிய மணவாளனை நாயகனாக வரித்து அவனையே நினைந்து, ஆடிப்பாடி, அகங்கரைந்து, இசைபாடி, கண்ணீர்மல்கி, தூது விட்டு, பிரிவாற்றாமையால் வாடி பின்னர் கனவு காண்கிறாள். இங்கு பகவானுக்கு கோதாதேவியிடம் உள்ள ஈடுபாடு அவள் கனவு கண்டபடியே சிறிதும் மாறுதலின்றி வந்து கைத்தலம் பற்றுவதிலிருந்து நன்கு புலப்படும்.
“வாரணம் ஆயிரம் சூழ” என்று ஆயிரம் யானைகள் புடைசூழ கம்பீரமாக வருகிறான் என்கிறாள். வழி எங்கும் இவனுக்கு பூரணகும்பம் கொடுத்து வரவேற்பு. எங்கும் தோரணம். பிறகு பந்தலை வர்ணிக்கிறாள். பந்தலில் தான் எத்தனை அலங்காரம்! அந்தப் பந்தலில் ஓர் காளை புகுந்தது, அது யார் என்றால் அவன் தான் கோவிந்தன் என்கிறாள் இந்திரன் முதலான தேவர் குழாமெல்லாம் வந்திருக்க கூரை உடையை நாத்தனார் என்ற முறையில் பார்வதிதேவி உடுத்தி விட, சாஸ்திரோக்தமாக காப்பு நாண் கட்டுதல், கைத்தலம் பற்றுதல் (பாணிக்ரஹணம்) பொரியிடுதல் (லாஜஹோமம்) அம்மி மிதித்தல் (ஸப்தபதி) என வரிசையாக சாங்கோபாங்கமாக அரங்கனுடன் தான் இணைந்து திருக்கல்யாணம் நடந்த வைபவத்தைதான் கண்ட கனவாக பேசுகிறாள் தாயாரான ஆண்டாள். துஸ்வப்ந நாசனனான பகவானையே அனவரதமும் எண்ணுவோர்க்கு இதுபோன்ற மங்களகரமான கனவுகள் தோன்றுவது வியப்பில்லையே!
ஆண்டாளின் ஸ்ரீஸூக்திகளில் ஓர் தனி அழகு மிளிர்வதைக் காணலாம். ஸ்ரீவில்லிப்புத்தூரையே ஆயர்பாடியாகவும், வடபெருங்கோயிலுடையானையே கண்ணனாகவும் எண்ணிய தாயார் திருப்பாவை என்ற வேதங்களின் ஸாரமான ஒரு பொக்கிஷத்தை நமக்கு அருளியிருக்கிறாள். இதில் தான் எத்தனை அர்த்த விசேஷங்கள் ? எத்தனை அரிய கருத்துகள்? இதனால் அன்றோ இதை “வேதமனைத்துக்கும் வித்து” என்றார்கள்.
ஆண்டாளுக்கு பகவானுடைய பாஞ்சசன்யத்தில் ஒரு அலாதியான ஈடுபாடு. அதைக் குறிப்பிடும் போதெல்லாம் அதன் வெண்மையை விசேஷித்துக் கொண்டாடுவது கவனிக்கத்தக்கது.
பகவானின் இருப்பிடமோ பாற்கடல் - வெண்மை. படுக்கையோ அரவரசப் பெரும் சோதியான அனந்தன் எனும் உயர் வெள்ளை அணை. இவன் கையில் கொண்டிருப்பதும் வெண்சங்கு.
'புள்ளரையன் கோயில் வெள்ளை விளிசங்கின் பேரரவம்'
'பாலன்ன வண்ணத்துன் பாஞ்சசன்னியமே'
-திருப்பாவை
‘வெள்ளை விளிசங்கு இடங்கையில் கொண்ட விமலன்'
'கற்பூரம் நாறுமோ?......சொல்லாய் நீ வெண்சங்கே'
‘வெளியசங்கொன்றுடையானை...விருந்தாவனத்தே கண்டோமே'
-நாச்சியார் திருமொழி
வெண்மை தூய்மையைக் குறிக்கும் எனில், தூய அன்பால் பகவானுக்கு ஆட்பட்டவள். அவன் அன்பில், குணத்தில், பக்தியில் ஆண்டவன் அல்லவா ஆண்டாள். அவள் எண்ணத்தில் தூய்மை, பேச்சில் தூய்மை.
ஆண்டாளின் திவ்ய ஸூக்தியான திருப்பாவை 30 பாடல்களில் பதிமூன்று இடங்களில் 'பாடுவது' குறித்து வருகிறது. ஆனால் நாச்சியார் திருமொழியான 143 பாசுரங்களில் 'குளிரருவி வேங்கடத்து என் கோவிந்தன் குணம் பாடி' என்ற ஒரு இடத்தில்தான் பாடி என்ற பதத்தைக் காணமுடிகிறது. ஆண்டாளுக்கு ‘பாடவல்ல நாச்சியார்’ என்றொரு பெயரும் உண்டு.
ஆண்டாளின் ஸ்ரீஸூக்திகளை நன்கு உணர்ந்து, அபிப்ராயம் உணர்ந்து மன நிலை உணர்ந்து, அதன் சுவையை உணர்ந்து அறிந்து தக்கபடி விளக்கம் கூற யாரே வல்லார்? இதற்கு தகுந்த அதிகாரிகள் ஸ்ரீபாஷ்யகாரர், ஸ்வாமி தேசிகன் போன்ற பூர்வாசார்யர்களும் ப்ரக்ருதம் ஆண்டவன் ஸ்ரீவேதாந்த ராமாநுஜ மஹதேசிகனும் தான்.
ஸ்வாமி தேசிகன்,
“வேயர் புகழ் வில்லிபுத்தூர் ஆடிப்பூரம்
மேன்மேலும் மிக விளங்க விட்டு சித்தன்
தூய திருமகளாய் வந்து அரங்கனுக்கு
துழாய் மாலை முடிசூடிக்கொடுத்த மாதே
நேயமுடன் திருப்பாவை பாட்டு ஆறு ஐந்தும்
நீ உரைத்த தையொரு திங்கட்பாமாலை
ஆய புகழ் நூறுடன் நாற்பத்து மூன்றும்
அன்புடனே அடியேனுக்கருள்செய் நீயே”
என்று போற்றிப்புகழ்கிறார்.
மேலும் கோதா ஸ்துதியில்:
நாகே சய: ஸுதனு பக்ஷிரத: கதம் தே
ஜாத: ஸ்வயம்வர பதி: புருஷ: புராண: |
ஏவம்விதா: ஸமுசிதம் ப்ரணயம் பவத்யா
ஸந்தர் சயந்தி பரிஹாஸ கிரஸ்ஸகீனாம் ||
என தோழிகள் ஆண்டாளை கேலி செய்வதை வர்ணிக்கிறார்.
“ஏனம்மா போயும் போயும் இப்படி ஒரு புருஷனையா வரிக்க வேணும் ? இவன் படுக்கையோ பாம்பு, வாஹனமோ பக்ஷி (கருடன்)” இத்யாதி இத்யாதி.
மேலும் ஆண்டாள் சூடிக்களைத்த மாலையையும் உத்தரீயத்தையும் (மேலாடை) தான் அணிந்து கொள்வதால் ஸகல ஸௌபாக்யங்களையும் அடையப் பெற்றதாக அரங்கன் பூரிக்கிறான் என்கிறார்.
‘சூடாபதேன பரிக்ருஹ்ய தவோத்தரீயம்
மாலாமபி த்வதலகை: அதிவாஸ்யதத்தாம்
ப்ராயேண ரங்கபதிரேஷ விபர்த்ல் கோதே
ஸௌபாக்ய ஸம்பதபிஷேக மஹாதிகாரம்’
பிறகு இவர்கள் (ஆண்டாளும் அரங்கனும்) மாலை மாற்றிக் கொள்ளும் அழகு, தூக்கத்தின் போது கூட (ஒரு கணம் கூட மாறாமல்) மிகவும் போஷித்து இவள் உள்ள தெற்கு திக்கையே (ஸ்ரீரங்கத்துக்கு தெற்கே ஸ்ரீவில்லிப்புத்தூர் இருப்பது கவனிக்கத்தக்கது) பகவான் பார்ப்பதால் தென் திசையானது எல்லாவற்றிற்கும் (மற்ற திக்குகளை விட) உயர்ந்ததாக ஆயிற்று உனது அவதாரத்தால் என போற்றுகிறார். அபராதம் செய்த சேதனனும் ஆண்டாள் அரங்கன் பக்கலிலே இருந்தால் அவளது கருணையால் மன்னிக்கப் பெறுகிறான் என்கிறார்.
நாச்சியார் திருமொழியில்
‘கண்ணாலம் கோடித்து கன்னிதன்னைக் கைப்பிடிப்பான்
திண்ணார்ந்திருந்த சிசுபாலன் தேசழித்து
அண்ணாந்திருக்கவே, ஆங்கவளைக்கைப்பிடித்த
பெண்ணாளன் பேணுமுர் பேரும் அரங்கமே’
என ருக்மிணி கல்யாண வரலாறைப்பேசி அரங்கன் புகழ் பாடுகிறாள் ஆண்டாள்.
பகவானுடைய பிரிவைத் தாள முடியாமல் விரகத்தால் ஆண்டாள் மனம் தவிக்கிறது. பகவானையே எண்ணி அவன் வயப்பட்டிருக்கிறாள். அவன் வரவில்லை என மனம் வேதனையால் துடித்தாலும் தோழியர் பகவானை ஏசிப் பேசினால் மனம் பொறுக்கவில்லை.
“வேலால் துண்ணம் பெய்தாற்போல்
வேண்டிற்றெல்லாம் பேசாதே” … என்றும்
“கற்றனபேசி வசவுணாதே” … என்றும் அவர்களை கோபிக்கிறது தாயார் உள்ளம்.
“புண்ணிற் புளி பெய்தாற்போல்” என ஏற்கனவே நொந்திருக்கிறேன் ஏன் இன்னமும் வார்த்தைகளால் துன்புறுத்துகிறீர்கள். உண்மையில் என் தாபம் தீர்க்க நீங்கள் விரும்பினால் கண்ணன் திருவடிகள்பட்ட மதுரையிலோ, ஆய்ப்பாடியிலோ, யமுனைக் கரையிலோ, கோவர்த்தன மலைக்கருகிலோ கொண்டுவிடுங்கள் என்கிறாள்.
'கூட்டிலிருந்து கிளி எப்போதும் கோவிந்தா கோவிந்தா என்றழைக்கும் ஊட்டக் கொடாது செறுப்பனாகில் உலகளந்தான் என்று உயரக்கூவும்' என்கிறாள் மற்றொரு பாசுரத்தில்.
“பெண்ணின் வருத்தமறியாத பெருமான் அவன், அவள் உடுத்திக் கலந்த பீதகவாடையால் எனது வாட்டம் தெளிய வீசுங்கள். குடந்தையில் பள்ளிகொண்ட ஆராவமுதனின் அமுதவாயில் ஊறிய நீரை கொண்டுவந்து கொடுங்கள். அதைப் பருகி இளைப்பாறுகிறேன். அவன் சூடிய துழாய் மாலையை என் குழலில் சூட்டுங்கள்” என்றெல்லாம் அரற்றுகிறாள்.
குயிலைப் பார்த்து :- 'உன் காதலியோடு உடன் வாழ்குயிலே என் கரு மாணிக்கம் வரக் கூவுவாய்' என்றும், ‘விண்ணில் மேலாப்பு விரித்தாற் போல் மேகாரங்கள்' எனத் தொடங்கி மேகத்தை நோக்கியும் தூது விடுகிறாள்.
பாஞ்ச சந்நியத்தைப்பார்த்து :- ‘இந்திரனும் உன்னோடு செல்வத்திற் கேலானே' என பாஞ்சசன்ணியம் செய்த பேரை வியக்கிறாள்.
இப்படி அரங்கனுக்கு துழாய்மாலை சூடிக்கொடுத்த சுடர்க்கொடியான ஆண்டாளின் பாடல்கள் அமுதத்துக்கு ஒப்பானவை. இதை உணர்ந்து இதில் சூழ்ந்து, ரஸித்து இந்த திவ்ய ஸுக்திகளை அனுஸந்தானம் செய்தால் ஐஹிக ஆமுஷ்மிக பலன்கள் கிட்டும் என்பதில் ஐயமே இல்லை. ஆண்டாளின் அருளைப்பெற்றால் அரங்கன் அருள்தானே வந்து தடுத்தாட்கொள்ளும்.
ஆண்டாள் திருவடிகளே சரணம்.
நன்றி - ஶ்ரீ ரங்கநாத பாதுகா ஆவணி 1974