ஞாயிறு, 20 அக்டோபர், 2019

ஆண்டாள் கூறும் நப்பின்னை பிராட்டி யார்? - வேளுக்குடி கிருஷ்ணன்

திருப்பாவையில் 18, 19, 20 ஆகிய மூன்று பாசுரங்களிலும் நப்பின்னைப் பிராட்டி பற்றி ஆண்டாள் அழைக்கிறாள். ‘உந்து மத களிற்றன் ஓடாத தோள் வலியன் நந்தகோபாலன் மருமகளே நப்பின்னாய் என்று பதினெட்டாம் பாட்டு. ‘குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில் மேல் மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி கொத்தலர் பூங்குழல் நப்பின்னை  என்று 19ஆம் பாசுரம். ‘செப்பன்ன மென்முலை செவ்வாய் சிறுமருங்குல் நப்பின்னை நங்காய் திருவே துயில் எழாய் என்று 20ஆவது பாசுரம். இப்படி மூன்று பாடல்களில் நப்பின்னைப் பிராட்டியை பற்றி ஆண்டாள் அழைக்கிறாளே அவள் யார்? யாருடைய அவதாரம்? அவளுடைய பின்புலம் என்ன? கண்ணனை அவள் கல்யாணம் பண்ணிக் கொண்டதாக எங்கு கூறப்பட்டுள்ளது? இது கேள்வி.

பதில்

பகவானுடைய மூன்று முக்கியமான தேவிமார்கள் ஸ்ரீதேவி பூதேவி நீளாதேவி. அவர்களுள் நீளாதேவியுடைய அவதாரம்தான் நப்பின்னைப் பிராட்டி. ஸ்ரீதேவியினுடைய அவதாரம் சீதா ருக்மணி ஆகியோர். பூதேவியுடைய அவதாரம் ஆண்டாள். நீளாதேவி நாச்சியாரின் அவதாரம் நப்பின்னை

நீளா என்பது தேவியின் திருநாமம். அவளுக்கு ஒரு வர்ணமும் உண்டு ஒரு கலர். Hue. ஶ்ரீ மகாலட்சுமி செவப்பா இருப்பது தெரியும், ‘மையார் கருங்கண்ணி கமல மலர்மேல் செய்யாள் என்று பாசுரம். அதே பூமாதேவி கரும்பச்சை வர்ணத்தில் இருப்பாள் எங்களுடைய ஆண்டாள் நிறம் அதுவே. அதுக்கு அடுத்தது நீளாதேவி, ஆங்கிலத்தில் இண்டிகோ அப்படினு ஒரு கலர் சொல்வோம் கிட்டதட்ட ஊதா நிறம் மாதிரி என்று வச்சுக்கோங்க. அந்த நிறத்தோடு தான் நீளாதேவி இருப்பார். அவளுடைய அவதாரம்தான் நப்பின்னை பிராட்டி

இந்த ஒவ்வொரு நாச்சியாருக்கும் ஒவ்வொரு கோயிலில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ மகாலட்சுமிக்கு திருவெள்ளரை என்ற திவ்யதேசம், புண்டரீகாக்ஷ பெருமாள். அது ஸ்ரீரங்கத்துக்கு அருகிலேயே இருக்குற க்ஷேத்திரம். அதுக்கப்புறம் அனைவரும் அறிந்தது பூமாதேவிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள். மூன்றாவது நீளாதேவிக்கு திருநறையூர் நாச்சியார் கோவில் கும்பகோணத்துக்கு அருகில். இப்படி மூன்று நாச்சியார்களுக்கு மூன்று இடங்களில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது

கூந்தல் மலர் மங்கைக்கும் மண்மடந்தைக்கும் குலவாயர் கொழுந்துக்கும் கேள்வன் தன்னை என்று ஆழ்வார் பாடுகிறார். இதிலே ஆயர் குலப் பெண்ணாகப் பிறந்தவள் தான் நப்பின்னை

கண்ணனுடைய தாய் யசோதை, யசோதைக்கு உடன்பிறந்தவர் கும்பர் என்று பெயர் பெற்றவர். அந்த கும்பருடைய மகள் தான் நப்பின்னை. அவளும் ஆய் குலப்பெண். பகவான் பிறந்ததே சத்திரியனாக இருக்க, அதற்குத் தகுந்த பீஷ்மகரருடைய பெண்ணான ரூக்மிணியை கல்யாணம் பண்ணிக் கொண்டார். அவன் மதுராவிலிருந்து கோகுலத்துக்கு போய் ஆய் குலத்தில் வளர்ந்த படியால், அந்த கோபக்குமராத்தியாய், ஒரு கோபனுடைய பெண்ணாக இருந்த நப்பின்னையை கல்யாணம் பண்ணிக் கொள்கிறார். ஆனால் கண்ணன் 8 பேரை கல்யாணம் பண்ணிக் கொண்டது யாருயாரு எதுஎது என்று பாகவத புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது, அதுல நப்பின்னை என்கிற பெயர் வராது. ஆனால் மற்றொரு பெயருக்குரிய கதையும் நப்பின்னையுடைய கதையும் ஒன்றாக இருக்கும்

நப்பின்னையை கல்யாணம் பண்ணிக்கொள்ள அவர் தந்தை ஒரு சுயம்வரம் வைத்தார். அதிக பலம் வாய்ந்த ஏழு காளை மாடுகள். அந்த ஏழையும் யார் அடக்குகிறார்களோ அவர்களுக்கு என் பெண்ணை கொடுப்பேன் என்று வைத்தார். கண்ணன் அந்த ஏழு காளை மாடுகள் பேரில் குதித்தார். அவற்றை அடக்கி, நப்பின்னையை கல்யாணம் பண்ணிக் கொண்டார். இதே சரித்திரம் பாகவதத்திலும் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் அங்கு நப்பின்னை என்கிற பேர் மட்டும் கையாளப்படவில்லை மற்றபடி கதை இதே.

ஸ்ரீ மகாலட்சுமியை விட பூமாதேவிக்கு கருணை அதிகம் பொறுமை அதிகம், அவளையும் விட நீளாதேவிக்கு எல்லார் பேர்லயும் அன்பு பாசம். ‘உடன் அமர் காதல் மகளிர் திருமகள் மண்மகள் ஆயர் மடமகள்என்று ஆழ்வார் பாடுகிறார்

வராக பெருமானை சரணமாக பற்ற வேண்டுமானால் அதற்கு பூமாதேவியை முன்னாடி பற்ற வேண்டும். அதே ராமாவதாரத்தில் சரணாகதி பன்னுவதென்றால் ஸ்ரீதேவி நாச்சியாரின் அவதாரமான சீதையும் முன்னிட வேண்டும். கிருஷ்ணா அவதாரத்தை பற்ற வேண்டுமானால் நீளாதேவியின் அவதாரமான நப்பின்னையை பற்ற வேண்டும். அதனாலதான் கண்ணனையே வேண்ட வந்த ஆண்டாள் திருப்பாவையில் முதலில் நப்பின்னையை பிரார்த்தித்து பின்னால் கண்ணனிடத்தே செல்கிறார்.

ஶ்ரீமகாலட்சுமி தாயார் யாரிடத்திலாவது குற்றத்தை பார்த்தால் குற்றமிருக்கிறது, ஆனால் யார் தான் குற்றம் புரியாதவர்கள் மன்னித்து ஏற்றுக்கொள்ள வேண்டியது தான் என்று கூறுவளாம். ஆனால் பூமாதேவியோ, அவர் குற்றமே புரியவில்லையே என்று சொல்லுவளாம். நீளாதேவி குற்றம் என்ற ஒன்று உலகத்தில் கிடையாது என்று சொல்லி விடுவாளாம். அப்படியென்றால் அடுத்தடுத்து கருணையில் மிக்கவர்கள். இவர்கள் அனைவரும் போட்டியிட்டுக் கொண்டு ஜீவாத்மாக்கள் ஆன நம்மை ரக்ஷிக்கின்றனர்

நாமும், முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று கப்பம் தவிர்க்கும் கலியான கண்ணனை, நப்பின்னை நங்காய் திரு, அவள் திருவடிகளைப் பற்றி கிருஷ்ணானுபவத்தை அடைய பிரார்த்திப்போம்.

நன்றி - என்பணி ஆடியோ.

3 கருத்துகள்: