அழிவற்ற ஐசுவரியத்துக்கு அதிபதியாயிருக்கும் ஸ்ரீவேங்கடவாணன் காலம்காலமாக வேங்கடாசலத்தில் (பாவங்களைப்போக்கடிக்கும்மலை) ஆனந்தநிலையத்தில் வசித்து கொண்டு பக்தர்களுக்கு அனுக்ரகம் செய்து கொண்டிருக்கிறார். இந்நாட்டு மக்கள் அனைவருடைய உள்ளத்தையும் ஈர்த்திடும் திருத்தலம் திருமலை. பல்லாயிரக்கணக்கான பாமர மக்கள், அறிவாளிகள், விஞ்ஞானிகள் முதலானோர் நாள் தோறும் "ஸ்ரீனிவாசா, கோவிந்தா, முகுந்தா, மாதவா, பாலாஜி" என்று பலநாமங்களுடன் துதித்துக்கொண்டு அங்கு நின்ற கோலத்தில் காத்திருக்கும் பகவானிடம் மனக்கவலைகள் யாவும் ஒப்புவித்து சாந்தி பெற்று திரும்புகிறார்கள்.
குடும்பம் குடும்பமாக வேண்டுதல்கள் கொண்டு கன்னங்களில் அலகுகள் குத்திக்கொண்டும், மஞ்சள் உடைகள் அணிந்தும் "கோவிந்தா கோவிந்தா'' என்று கூறி உற்றார், உறவினர்கள் சூழ தங்கள் இருப்பிடத்திலிருந்து மேள தாளங்களுடன் ஊர்வலமாக வந்து பின்பு திருவேங்கட மலையேறி பாபங்களைப்போக்கிக் கொண்டு திரும்புகிறார்கள். ஊர்வலம் வரும் சமயத்தில் ஒரு சாரார் அவர்களுக்குக் காணிக்கைப்போட்டு துளசிபிரசாதங்கள் பெற்று வணங்கி ஓரமாக நின்று வழியனுப்புகிறார்கள், வாகன வசதிகள் ஏற்படாத பண்டைய நாட்களில் இரட்டை மாட்டு வண்டியில் செல்லுவார்கள். அடிவாரத்திலிருந்து மலைப் பாதை வழியாக புருஷோத்தமனை ஒரே மனதாக தியானம் செய்து கொண்டே ஏழு மைல் உயரம் எந்த விதமான சிரமமில்லாமல் ஏறிச் சென்று ஏழுமலையானை மனங்குளிர தரிசனம் செய்து கோரிக்கை காணிக்கைகளை உண்டியலில் செலுத்தி மனக் கவலைகளை அங்கேயே விட்டுவிட்டு "எல்லாம் வல்ல பரம புருஷனே, திருவேங்கடநாதனே எங்கள் கோரிக்கைகள் யாவும் நிறைவேற்ற வேண்டும்.
துன்ப நிவாரணம் உண்டாவதுடன் மீண்டும் உனது தலம் வந்து வணங்குகிறோம்” என்று தியானிக்கிறார்கள்.
இவ்விதம் மலைமேல் வீற்றிருக்கும் அண்ணல் ஸ்ரீ வேங்கடநாத சுவாமியைக் காட்டிலும் அவனது திருமார் உறைந்து திருச்சானூரில் வாசம் கொண்டிருக்கும் ஸ்ரீ அலர்மேல்மங்கைத் தாயார் வழிபட வருபவர்களுக்கு அதிகமாக அருள் புரிகிறாள். வேதவதி பத்மாவதி தாயார் என்ற நாமங்களும் உண்டு, மகரிஷிகள் வேதம் சொல்லும் காலத்தில் அவள் தோன்றியதால் "வேதவதி' என்ற காரணப்பெயராகும். ஸ்ரீ ஆண்டாள் போலவே ஸ்ரீமந் நாராயணனையே மணந்து கொள்ள வேண்டுமென்ற உறுதி மனப்பான்மை கொண்டிருந்தாள் வேதவதி. இமய மலைச் சாரலில் தவம் செய்தபோது இராவணன் இச்சிக்க அப்போது அவள் சாபமிட்டு அக்னியுடன் சேர்ந்தாள். இராமாயணத்தில், ராம லட்சுமணர்கள் இல்லாத சமயம் சீதா தேவியை அபகரிக்க இராவணன் வந்தான். இதை அக்னி தேவன் அறிந்து நிஜ சீதையை பாதுகாத்து வேதவதியை சீதை வேடத்தில் இருக்கச் செய்தான் என்பது புராண வரலாறு. அந்த வேதவதியே இந்த பத்மாவதி தேவி, ஸ்ரீதேவியின் அவதாரம்.
நம் நாட்டில் கடன் வாங்கி கலியாணம் செய்து கொண்ட கடவுள் யார் என்றால் திருப்பதி வெங்கடாசலபதியைத்தான் சொல்லுவார்கள். அரக்கர்களிடமிருந்து பூமாதேவியை
மீட்டபிறகு வைகுண்டத்திற்குத் திரும்பாமல் மலைமேல் இங்கேயே தங்கி விட்ட நாராயணனையே கணவனாக அடைய பத்மாவதி தேவி தவமிருந்தாள், மலைமேல் நின்ற வேங்கடநாதன் கலியாண செலவுக்கு குபேரனிடம் ஒரு கோடியே பதிநான்கு லட்சம் பொன் கடன் வாங்குகிறார். கலியுக முடிவில் அசலை திருப்பித் தருவதாக ஒப்புக்கொண்டு சிவன், பிரம்மா சாட்சிகளுடன் கடன் பத்திரம் எழுதியும் கொடுத்துவிடுகிறார். வட்டியை இப்படி மக்களின் பிரார்த்தனைகள் மூலம் வாங்கிக்கொள்கிறார் என்கிறார்கள்.
திருப்பதி உண்டியலில் செலுத்தப்படும் காணிக்கைகள் கலா சாலைகள், பள்ளிகூடங்கள், தங்கும் விடுதிகள், அனாதை இல்லங்கள், அன்னதானம் முதலிய தர்ம காரியங்களுக்குச் செலவிடப்படுகிறது. கலியாணம் செய்து கொண்ட வேங்கடேஸ்வரன் ஏன் தேவியுடன் இல்லாமல் பிரிந்து மலைமேல் தனியாக இருக்கிறார் என்பதற்கு செவிவழியாக வரும் வேடிக்கைக் கதை ஒன்று சொல்லப்படுகிறது, மணப்பெண் பத்மாவதி கணவன் வீட்டுக்கு வரும் போது நிறைய சீதனம் கொண்டு வந்தாள். ஆனால் ஒரே ஒரு பொருள் தூக்கி எறிய வேண்டிய பொருளான கருவேப்பிலையினைக் கொண்டு வரவில்லை. ஸ்ரீநிவாசன் இந்தப்பொருள் இல்லாமல் ஏன் வந்தாய் என்று கோபித்துக் கொள்ள மணப்பெண் ரோஷத்துடன் தாய் வீட்டுக்கு மலையடிலாரத்திலிருந்து 3 மைல் தூரமுள்ள திருச்சானூருக்கு போய்விட்டாளாம். (திருமலைக்கோயில் பிரஸாதங்களிலும் கருவேப்பிலையினைப் பயன்படுத்துதல் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு செய்தியாகும்.) அங்குத் தங்கியவள்தான், கணவன் வீட்டுக்குத் திரும்பவே இல்லை. ஏன் இப்படி செய்தோம் என்று பிற்பாடு தோன்றியதாம் ஸ்ரீனிவாசனுக்கு. கர்ம பூமி வாசிகள்தானே! தினமும் நள்ளிரவில் அம்மையார் இருக்குமிடம் போகிறார். "தீராத வினையெல்லாம் தீர்த்து வைப்பாய் கோவிந்தா” என்று வேண்டிடும் மக்களின் வினைகளை அகற்றிட அதிகாலையில் திருமலையை அடைந்து விடுகிறார்.
திருப்பதி திருமலை செல்லும் பக்தர்கள் முதலில் பத்மாவதி தாயாரின் அருள் பெற்று பிறகு மலைமேலிருக்கும் திருவேங்கடநாதனைத் தரிசிப்பது முறையாகும்.
திருவேங்கடமுடையான் திருவடிகளே சரணம்
நன்றி - சப்தகிரி 2016