ஞாயிறு, 29 செப்டம்பர், 2024

சக்கரவர்த்தித் திருமகன் - இராஜாஜி - முன்னுரை

முன்னுரை

‘சக்கரவர்த்தித் திருமகன்’ எழுதி முடித்ததும் புஸ்தகமாகத் தொகுத்து நன்றாக அச்சடித்துக் குறைந்த விலைக்கு மக்களுக்குத் தரவேண்டிய பணியை பாரி நிலையத்தார் எடுத்துக் கொண்டார்கள். அவர்களுக்கு என்னுடைய நன்றி.


சீதை, ராமன், ஹனுமான், பரதன் இவர்களை விட்டால் நமக்கு வேறு என்ன செல்வமோ நிம்மதியோ இருக்கிறது? இந்தப் பழஞ் செல்வத்தை எடுத்து வாசகத் தமிழில் எழுதும் சந்தர்ப்பம் எனக்கு ஏற்பட்டது என் அதிருஷ்டம். தமிழ்நாட்டில் அனைவரும் நான் எழுதியதை “கல்கி” பத்திரிகையில் படித்து சந்தோஷித்து. எனக்கு உற்சாகம் ஊட்டினார்கள். கங்கையும் காவேரியும் ஓடும் வரையில் சீதாராம சரிதம் பாரத நாட்டில் ஆண் பெண் குழந்தைகளனைவரையும் தாய்போல் பக்கத்திலிருந்து காக்கும். தமிழ் மக்களே! ராமாயணம் படிப்பதும் கேட்பதும் நல்லதா என்கிற கேள்விக்கு வெகுநாட்களுக்கு முன் தமிழன் கம்பன் பதில் சொல்லி விட்டான். வழி காட்டிவிட்டான். கம்பனை விட அறிவாளியோ நமக்கு நண்பனோ வேறு இல்லை.


நாட்டுக்கு நான் பல பணிகள் செய்ததாக நண்பர்கள் போற்றுவதுண்டு. அவற்றிலெல்லாம் 'வியாசர் விருந்து'ம் 'சக்கரவர்த் தித்திருமகனு'ம் எழுதி முடித்ததுதான் மேலான பணியென்பது என் கருத்து. எல்லாவற்றையும் விட அதுவே என் உள்ளத்துக்கு மகிழ்ச்சியும் அமைதியும் தந்தது.


பிராட்டியைத் தியானிப்போமாக. நம்முடைய பிழைகள் அதிகம். அவளுடைய கருணையின்றி நமக்குக் கதியில்லை. "குற்றம் செய்யாதார் எவர்தாம்?" என்று கேட்ட அவள் நம்மையும் காப்பாள். குறையும் பிழையும் நிரம்பிய இந்த நூலை, அவள் பாதத்தில் வைத்து வணங்குகிறேன். என் பணி பயன்படுவதாக.


சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரி

தியாகராய நகரம்

23-3-1956

முகவுரை

ஆண்டவன் விளையாட்டின் ரகசியத்தை யாரே அறிவார்! நம் செயல்கள் அனைத்தும் அவ்விளையாட்டில் அடங்கிய ஒரு அற்ப அம்சம். வால்மீகி பாடிய ராம சரிதத்தை நம் மக்களுக்கு எளிய பேச்சு நடையில் சொல்லலாம் என்று எண்ணி பண்டிதனல்லாத நான் ஆரம்பிக்கிறேன். கம்பர் பாடிய அவையடக்கத்தை வைத்துச் சொல்லுகிறேன்; பெரும் பாற்கடலை ஒரு பூனையானது மெள்ள உருட்டிக் குடித்து விடலாம் என்று பார்ப்பது போலாகும் நான் வால்மீகி ராமாயணத்தை எளிய முறையில் சரியாக எடுத்துச் சொல்ல முயல்வது. ஆயினும் கடலைத் தாண்டிய ஆஞ்சனேயன், ராம கதையை எந்தவிதமாக யார் சொல்ல முயன்றாலும் உதவுவான்.


பக்தியுடன் ஒருவன் செய்யும் பணியில் பெரியோர்கள் குற்றம் பார்க்க மாட்டார்கள். உற்சாகப்படுத்தி, பணியைப் பயன்படும்படியே செய்வார்கள்.


பிராணிகளுக்கு எலும்பும் சதையும் இருப்பது போல் தாவரங்களுக்கும் உண்டு. சில தாவரங்களுக்கு நம்மைப்போல் உள்ளே எலும்பும் வெளியே சதையும் இருக்கும். வேறு சிலவற்றிற்கு உள்ளே சதையும் வெளியே எலும்பும் அமைந்திருக்கும். மா, பலா, புளி, தேக்கு முதலிய மரங்களின் சதை அவற்றின் பச்சைப் பட்டை. மரத்தின் உயிர்ச்சத்து அந்தப் பட்டையின் வாயிலாகவே செல்கிறது. மரத்தின் உள்ளே நின்று பாரத்தைத் தாங்கும் நடு மரமே அதனுடைய எலும்பாகும். ஆனால் மரத்துக்கு வேண்டிய உயிர்ச்சத்து மரத்தின் பச்சைப் பட்டையில்தான் பாய்ந்து வருகிறது. எலும்பு உள்ளேயும் உயிர்ச்சத்து பச்சைப் பட்டையிலுமாக இந்த வகைத் தாவரங்களின் ஜீவனம் நடைபெறுகிறது.


இதற்கு நேர்மாறாக இருப்பது வாழை, தென்னை, பனை, கமுகு, நெல், புல், சோளம், கரும்பு இவைகளின் அமைப்பு. வெளிப்புறத்தில் எலும்பு, உள்ளே தண்டில் உயிர். பனை, தென்னை, வாழை, கரும்பு இவ்வகைத் தாவரங்களைப் போல் பிராணி வர்க்கத்திலும் ஆமை, சங்கு, சிப்பி, கிளிஞ்சல் முதலிய பிராணி வகைகள், உள்ளே உயிரும் வெளியே ஓடுமாக இருக்கின்றன. கிளிஞ்சல், சங்கு முதலிய பொருள்களை நாம் அந்தப் பிராணிகள் செத்த பின்னரே உபயோகப் படுத்துகிறோம். ஆனால் நீரில் உயிருடன் வாழும் போது ஓட்டிற்குள் உயிரும் சதையும் இருக்கும். நம்முடைய எலும்பு உள்ளே இருப்பதுபோல் இவற்றின் வெளியோடு அவற்றின் எலும்பு. உயிரும் உணர்ச்சியும் சதையும் ஓட்டிற்குள் மூடிக் காக்கப்பட்டிருக்கும்.


இவ்வாறே நூல்களையும் இரு வகையாக வகுக்கலாம். ஒரு வகைக்கு உயிர் அதன் பொருள். மற்றொரு வகை நூல்களுக்கு அதன் வடிவமே உயிர்.


விஷயங்களை விளக்கித் தரும் நூல்களான ரசாயனம், வைத்தியம், தேச சரித்திரம், பூகோளம், கணிதம் முதலியவை நூல்களின் பொருளில் உயிர் கொண்ட வகை. பாடல்களும் பெருங்காவியங்களும் கவிஞர் தந்த வடிவழகிலேயே தம் உயிரை வைத்து நிற்கின்றன.


உயிர் செய்யுளைப் பிரித்து உரை நடையில் எழுதினால் அந்தப் பொழிப்புரையில் உயிர் இருக்காது. கவிஞர் கொடுத்த வடிவத்தைச் சேதித்து விட்டால் மாண்டு போகிறது. ஒரு கணித நூலோ அல்லது வைத்திய நூலோ அவ்வாறு அல்ல. மனனம் செய்வதற்காக ஆசிரியர் செய்யுள் வடிவம் தந்திருந்தாலும் பழைய நாட்டுக் கணித நூல்களும் வைத்திய நூல்களும் இவ்வாறே செய்யுள் உருவத்தில் அமைக்கப்பட்டு வந்தன. அவற்றை விரித்து உரை நடையில் எழுதினாலும் பொருளிலே உயிர் கிடப்பதால் அதன் உயிர் நீங்காது.


கம்பர் பாட்டையோ அல்லது பாரதியார் பாட்டையோ உரைநடையில் எழுதினால் உயிரில்லாத உடல்தான் நிற்கும். பொருளுக்குச் சேதமில்லையாயினும், உரைநடையில் மாற்றி எழுதிய பாடல் உயிரிழந்த பிராணியைப் போல் கிடக்கும். அதனோடு பதவுரையும், 'விசேஷ' உரையும், இலக்கணக் குறிப்பும் எழுதிவிட்டாலோ அது சவச்சோதனை ஆலயமாகத் தான் பயன்படும். பிரேத சோதனையில் அறிவு வளர்ச்சிக்கு மிக்க பயன் உண்டு. ஆனால் அழகு இல்லை. உரைநடையில் மொழிபெயர்க்கப்பட்ட பாடலில் ஒளியில்லை; உயிரில்லை; பாடலின் தனிப் பயன் இல்லை. எவ்வாறாயினும் "யானை இருந்தாலும் ஆயிரம் வெள்ளி, இறந்தாலும் ஆயிரம் வெள்ளி" என்பது போல் சில நூல்கள் இரு விதத்திலும் பயன் தரும். 


காவியங்களையும் பாடல்களையும் அன்னியருக்காக மொழிபெயர்ப்பது தற்கால வழக்கத்தில் பதிந்து போயிருக்கிறது. தமிழருங்கூடக் கம்பனையும் பாரதியையும் திருக்குறளையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பதில் மிகவும் ஈடுபடுகிறார்கள். சில தமிழர் அவ்விதம் மொழி பெயர்த்ததைப் படித்தும் வருகிறார்கள். மொழிபெயர்த்த ராமாயணத்துக்கும் இறந்துபோன யானையைப் போல் கொஞ்சம் விலையுண்டு என்பதைச் சொல்லி விளக்குவதற்காகவே இந்த நீண்ட முன்னுரை.


வால்மீகி பகவான் ராமாயணம் பாடிய காலமும், ஸ்ரீ ராமசந்திரன் அவதரித்து இம்மண்ணுலகில் வாழ்ந்த காலமும் ஒன்றே என்பது புராணம் வாசிப்பவர்களுடைய பரம்பரைக் கொள்கை. உலக அனுபவத்தை வைத்து ஆராய்ந்து யோசித்தால், வால்மீகி ரிஷியானவர் ராமாயணத்தைப் பாடியதற்கு முன்னமேயே, அதாவது புராதன காலந்தொட்டே, சீதாராம சரித்திரம் மக்களிடை எழுத்து வடிவம் பெறாமலே பல நூற்றாண்டுகள் வாய்வழிக் கதையாக வழங்கி வந்திருப்பதாகத் தோன்றுகிறது. கர்ண பரம்பரையாக, முன்னமேயே இருந்த ராம சரிதத்தை எடுத்துக் கொண்டு அதற்கு வால்மீகி பகவான் நூல் வடிவம் கொடுத்தாற் போல் தோன்றுகிறது. அதனாலேயே கதையில் பல சிக்கல்கள் ஏற்பட்டதென்றும் ஊகிக்கலாம். வாலியைக் கொன்ற முறை அதில் காணும் நியாயக்குறை, சீதையைக் காட்டுக்கு அனுப்பிய அநீதி, இவை போன்ற இன்னும் பல சிக்கல்கள்.


வால்மீகி ரிஷியின் காவியத்தில் இராமனுடைய நடவடிக்கைகளை ஈசுவர அவதாரமாக வைத்து எழுதவில்லை. சில அதிகாரங்களிலும், இங்குமங்கும் சுலோகங்களிலும் தெய்வ அவதார விஷயத்தைச் சொல்லி வந்தாலும், மொத்தத்தில் வால்மீகி ராமாயணத்தில் காணப்படும் ராமன் ஒரு சிறந்த ராஜகுமாரன், வீர புருஷன்; அபூர்வமான தெய்விக நற்குணங்கள் பெற்றவன் அம்மட்டே; கடவுளாக வேலை செய்யவில்லை. வால்மீகி முனிவரின் காலத்திலேயே ஸ்ரீராமனைப் பற்றிய அவதாரக் கொள்கை ஓரளவு ஜனங்களின் மனத்தில் இருந்து வந்தது. வால்மீகி ராமாயணம் இயற்றிப் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு கம்பரும் துளசிதாஸரும் ராமாயணம் பாடினார்கள். இதற்குள் ஸ்ரீராமன் மகாவிஷ்ணுவின் அவதாரமே என்பது நாட்டிலே நன்றாக ஊர்ஜிதப்பட்டுப் போன கொள்கையாகிவிட்டது. ராமன் என்றாலும் கிருஷ்ணன் என்றாலும் மகாவிஷ்ணுவே; மகாவிஷ்ணு என்றால் ராமனே, கிருஷ்ணனே இந்த நிலைக்கு ஜனங்களின் கொள்கை வந்துவிட்டது. இதற்கு ஏற்ப பக்தியும் கோயில்களும் வழிபாடும் ஏற்பட்டு ஸ்திரமாகி விட்டன.


மக்களுடைய நம்பிக்கையும் வழிபாடும் இவ்வாறு பரிணமித்துவிட்ட பிறகு, கம்பரோ துளசிதாஸரோ மீண்டும் ராமனை எப்படி வெறும் வீரனாக வைத்துப் பாட இயலும்? அப்படிப் பாட முயன்றாலும் அது வீணாகும். கம்பரும் துளசிதாஸரும் பரிபூரண பக்தர்கள்; ஆழ்வார்களேயாவார்கள். அவர்கள் தற்கால சரித்திர ஆராய்ச்சியாளர் அல்லது நெடுங்கதை எழுத்தாளர்களைப் போன்றவர்கள் அல்ல! ராமாவதாரத்தை வால்மீகியைப் போல் வெறும் ஒரு வீர புருஷனைப் பற்றிய கதையாக எழுத முடியாத நிலையிலும், காலத்திலும், கம்பரும் துளசிதாஸரும் பாடினார்கள்.


ராமனை மானிடப் பிறவியில் அடைக்கக் கம்பருடைய பக்தி இடம் தராது. ஆனபடியால் கம்ப ராமாயணத்தில் அடிக்கடி, மிக ரசமான இடங்களில் ராமன் மகா விஷ்ணுவே, கடவுளே, அனைத்திலும் பரவி நிற்கும் பரம்பொருளே என்று வைத்து மனத்தை உருக்கும் முறையில் அற்புத அழகோடு பாடியிருக்கிறார்.


காலத்துக்கும் சூழ்நிலைக்கும் தக்கவாறு உண்மைக் கவிஞர்கள் பாட முடியுமேயொழிய வெறும் வற்றல் ஆராய்ச்சிகளைப் பாட்டாகப் பாடமாட்டார்கள்.


வால்மீகி ராமாயணத்துக்கும் கம்ப ராமாயணத்துக்கும் மற்றொரு பெரும் வித்தியாசம். வால்மீகி பகவான் பாடிய நூல் தமிழ் அகவற்பா முறையில் அமைந்தது என்று சொல்லலாம். கம்பர் பாடியது நிருத்தியத்துக்குத் தகுந்த பாட்டு. ஆங்கிலத்தில் சொல்வோமானால், வால்மீகி ராமாயணம் கம்பீர நாதம் பொருந்திய Blank Verse என்றும் கம்ப ராமாயணம் ஒரு Lyric என்றும் கூறவேண்டும்., கம்பருடைய பாட்டுக்கள் ஒவ்வொன்றும் எதுகையும் மோனையும் சந்தமும் கலந்து, பளிச்சுப் பளிச்சென்று ஆபரணங்களைப் பூண்ட மங்கையின் ஆடலைப் போல் மின்னித் துள்ளி நடனமாடுகிறது. தெய்விக அவதார விஷயத்தை வைத்து உண்டாகும் உணர்ச்சியுடன் நடனச் சுவையும் கலந்து கம்பருடைய ராமாயணம் பேரழகு அடைந்து விளங்குகிறது. ஆனால் அதைத் தமிழ் மக்கள் மட்டுமே அனுபவிக்க முடியும். அதன் அழகு மற்றவர்களுக்குச் சரியாக விளங்காது. கம்ப ராமாயணத்தை அன்னிய மொழியில் பெயர்த்து எழுதுவதிலாவது தமிழில் செய்யுள் உருவத்திலிருந்து வசனமாக்குவதிலாவது பெரும் பயன் ஒன்றுமில்லை. வசன எடுத்துச் சொல்லி விளக்கிவிட்டு, உடனே சரியான முறையில் பாட்டைப் பாடினால் நல்ல பயன் ஏற்படும். டி. கே. சி. மறைந்த பின் இதைச் சொல்லித்தான் என்ன பயன்?


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக