திங்கள், 30 செப்டம்பர், 2024

1. சந்தத்தைக் கண்டார்

ஒரு நாள் காலை வால்மீகி ரிஷியின் ஆசிரமத்துக்கு நாரத முனிவர் வந்தார். வால்மீகி ரிஷி அவரை உபசரித்து வணங்கி, "சகலமும் தெரிந்த நாரதரே, இந்த உலகத்தில் வீரர்களுக்குள் எல்லா நற்குணங்களும் அறிவும் பெற்ற உத்தம புருஷன் யார்?" என்று கேட்டார்.

எதற்காக வால்மீகிரிஷி இதைக் கேட்கிறார் என்று ஞான திருஷ்டியால் நாரதர் தெரிந்து கொண்டு, "சூரிய வம்சத்தில் பிறந்த ராமன் அயோத்தியில் அரசு புரிந்து வருகிறான். நீர் கேட்கும் உத்தம வீரன் அவன்தான்" என்றார்.


இப்படிச் சொல்லிவிட்டு ராம சரித்திரத்தைச் சுருக்கமாக விளக்கிச் சொன்னார். அதைக் கேட்ட வால்மீகி ரிஷி மிகவும் மகிழ்ச்சியடைந்தார். நாரதர் விடை பெற்றுச் சென்ற பிறகும் அதைப் பற்றியே தியானித்துக் கொண்டிருந்தார். பிறகு நதிக்கரைக்குப் போனார்.


குளிப்பதற்காக முனிவர் இடம் பார்த்துக் கொண்டு ஆற்றங்கரையில் உலாவிக் கொண்டிருந்த அந்தச் சமயம் மரக்கிளையில் ஆணும் பெண்ணுமாக விளையாடிக் கொண்டிருந்த இரண்டு கிரௌஞ்ச பட்சிகளுள் ஒன்று, எங்கேயோ நின்ற வேடன் எய்த அம்பு பட்டுக் கீழே விழுந்தது. பெண் பறவை, தன் காதலன் திடீர் என்று அடிபட்டுக் கீழே விழுந்து புரள்வதைப் பார்த்துக் கதறிக் கதறி அழுதது.


இந்த நிகழ்ச்சியைக் கண்ட ரிஷி, "அடே பாபீ! இப்படிச் செய்தாயே! நீ எவ்வளவு நாள் வாழ்ந்தாலும் இருக்க இடமின்றி அலையக் கடவாய்" என்று தன்னையுமறியாமல் வேடனைச் சபித்து விட்டார். அடுத்த கணம், 'இப்படி ஏன் செய்தேன்' என்று நினைந்து நினைந்து வருத்தப்பட்டார். ‘வேடனை நான் ஏன் சபித்தேன்? எனக்கென்ன உரிமை இதற்கு? கோபாவேசத்துக்கு இடம் தந்து விட்டேனே!’ என்று துக்கப்பட்டார்.


ரிஷியின் வாயினின்று வெளிப்பட்ட சாப மொழிகள் ஓர் அற்புத நாதத்தோடும் சந்தத்தோடும் அவருடைய காதிலேயே தொனித்தன. அதைக் கண்டு ரிஷியானவர் வியப்பு அடைந்தார். பறவைகளின் துக்கத்தைக் கண்டு தம் உள்ளத்தில் உதித்த கருணையும் அடங்காத மனக் கலக்கமும் சாப உருவம் கொண்டு தம்மையறியாமல் ஒரு அருமையான பாட்டாக அமைந்து விட்டதைக் கண்டு பேராச்சரியங் கொண்டார். 'இது எனக்கு விளங்காத ஆண்டவன் திருவிளையாடல்' என்று எண்ணித் தியானத்தில் அமர்ந்தார்.


இந்நிலையில் சாட்சாத் நான்முகக் கடவுளே பிரத்யட்சமாக வந்து, "ரிஷி சிரேஷ்டரே, திகைக்காதீர்! ராம சரித்திரத்தை எழுதும் முறை உமக்குக் காட்டவே இந்த நிகழ்ச்சி நடந்தது. சோகத்திலிருந்து தோன்றிய சுலோகத்தையே வைத்து ரகுநாதரின் கதையைப் பாடி உலகத்துக்கு உதவும் திறமை உமக்கு வரமாகத் தந்தேன்" என்று சொல்லி மறைந்தார்.


அதன் மேல் வேடனைக் கோபித்துச் சொன்ன சாப மொழிகளைத் திரும்பத் திரும்ப ரிஷியும் சீடர்களுமாகப் பாடிப் பாடி அந்தச் செய்யுள் வடிவத்தை மனத்தில் அமைத்துக் கொண்டார்கள். பின்னர் அந்தச் சந்தத்தில் ரிஷியானவர் ராம சரித்திரத்தைப் பூரணமாகப் பாடித் தம்முடைய சீடர்களுக்கும் கற்பித்தார். இதுவே வால்மீகி ராமாயணம் என்னும் புண்ணிய நூலின் அற்புதத் தோற்றுவாய்.


மக்களின் துக்கங்களை ஈசுவரனும் ஈசுவரியும் மானிட ஜாதியில் பிறந்து தாமே நேரில் அனுபவித்து, தருமத்தை உறுதிப்படுத்திவிட்டு மறைந்த இந்தப் புண்ணிய கதையை வால்மீகி மகரிஷி ஒப்பற்ற மதுரமான முறையில் பாடி உலகத்துக்குத் தந்தார். “பூமியில் மலைகளும் ஆறுகளும் உள்ளவரையில் இந்த ராமாயணம் மக்களிடை வழங்கும், எல்லாப் பாபங்களினின்றும் விடுதலை தரும்” என்று நான்முகன் ஆசீர் வதித்துச் சொன்னது பொய்யாகாது.


கோசல தேசமானது கங்கைக்கு வடக்கே சரயூ நதி பாய்ந்து செழிப்புற்ற விசாலமான தேசம். அந்த நாட்டின் தலைநகரம் அயோத்தி. மனு என்னும் புகழ்பெற்ற சூரிய குல அரசனால் நிர்மாணிக்கப்பட்ட நகரம். மிக்க அழகும் புகழும் பெற்ற பெரிய நகரம். வால்மீகி வருணித்திருப்பதைப் படித்தால் தற்கால ராஜதானி நகரங்களுக்கு எந்தவிதத்திலும் அயோத்தி குறைந்ததாகத் தோன்றவில்லை. அந்த நாட்களிலேயே பாரத தேசத்தில் நகரங்களும் நகரப் பண்பாடும் மிக உன்னத நிலை அடைந்திருந்தன என்று தெரிகிறது.


தசரத சக்கரவர்த்தி இந்த அயோத்தி நகரத்திலிருந்துகொண்டு ராஜ்யத்தை ஆண்டு வந்தான். தசரதன் தேவர்களுக்காக யுத்தம் செய்தவன். மூன்று உலகங்களிலும் புகழ் பெற்ற அரசன். இந்திரன், குபேரன் இவர்களுக்குச் சமானமாக இருந்தான். கோசலநாட்டு ஜனங்கள் மிகச் சந்தோஷமாகவும் யோக்கியமாகவும் வாழ்ந்து வந்தார்கள். எண்ணிறந்த வீரர்களடங்கிய பெருஞ்சேனை ராஜ்யத்தை நன்றாகப் பாதுகாத்து வந்தது. சத்துருக்கள் கிட்ட நெருங்க முடியாத நிலையில் தசரதன் அயோத்தி நகரத்தைப் பாதுகாத்து வந்தான். சேனாபலம், கோட்டை மதில் சுவர்கள், அகழிகள், எதிரிகளைத் தாக்கும் எந்திர அமைப்பு, இவைகளால் காக்கப்பட்ட அந்த நகரம் சத்துருக்களால் யுத்தம் செய்து பிடிக்க முடியாததாக இருந்தது. அந்த நகரத்துக்கு ‘அயோத்தி’ என்ற பெயர் மிகப்பொருத்தமாகவே இருந்தது. 'அயோத்யா’ என்றால் 'யுத்தத்தால் பிடிக்க முடியாத' என்று பொருள்.


தேவராஜனைப்போல் புகழும் ஐசுவரியமும் பெற்று அரசாண்டு வந்த தசரதனுக்கு மந்திரிகளும் சரியாக அமைந்திருந்தார்கள். அரசனுக்கு யோசனை சொல்வதிலும் இட்ட பணிகளை உடனே நிறைவேற்றுவதிலும் மிகுந்த சாமர்த்தியம் பெற்ற எட்டு மந்திரிகள் தசரதனுக்குச் சேவை செய்து வந்தார்கள். தர்மோபதேசம் செய்வதற்கும் பூஜை, வேள்விச் சடங்குகள் முதலிய காரியங்களை நடத்துவதற்கும், வசிஷ்டர் வாமதேவர் முதலிய ரிஷிகளும், வேறு சிறந்த பிராமணர்களும் அரசன் பக்கத்திலிருந்து வந்தார்கள்.


ஜனங்களைக் கஷ்டப்படுத்தாமல் சக்திக்குத் தகுந்தவாறு வரிகள் வசூலிக்கப்பட்டன. குற்றவாளிகளின் சக்தி, சூழ்நிலை இவற்றை உத்தேசித்து அபராதங்கள் விதிக்கப்பட்டன. ஆலோசனை சொல்லுவதில் நிபுணர்களும் ராஜ்ய காரியங்களில் சமர்த்தர்களுமான மந்திரிகளாலும் அதிகாரிகளாலும் சூழப்பட்டு ஆட்சி புரிந்த தசரதன் உதய சூரியன் ஜொலிப்பதுபோல் ஜொலித்தான்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக