செவ்வாய், 1 அக்டோபர், 2024

2. குறை தீர்ந்தது!

ஆண்டுகள் பல நன்றாகக் கழிந்தன. ஆயினும் அரசனுக்கு ஒரு பெருங்குறை. புத்திர பாக்கியம் இல்லாத குறை. ஒருநாள் அப்போது வசந்தருது. அரசனுக்கு ஓர் எண்ணம் தோன்றிற்று. "அசுவமேத யாகமும் புத்திர காமேஷ்டியும் செய்வித்தேனானால் ஒரு வேளை மக்கட்பேறு பெறுவேனோ?" என்று எண்ணினான். குருக்களைக் கேட்டதில் அவர்களும் ரிஷ்யசிருங்க முனிவரைத் தருவித்து அவர் தலைமையில் வேள்வியை நடத்தத் தீர்மானித்தார்கள். தீர்மானித்தபடி சகல ஏற்பாடுகளும் செய்தார்கள். அரசர்களுக்கு அழைப்பு, யாகசாலை நிர்மாணத்துக்கு வேண்டிய காரியங்கள் எல்லாம் மிகத் தீவிரமாக நடைபெற்றன.

அந்தக் காலத்தில் வேள்வியென்றால் சாமான்யமல்ல. யாக மேடைக்கு உரிய அளவுகள் எடுத்து மிக ஜாக்கிரதையாகச் செய்ய வேண்டும். அதற்கே தனி நிபுணர்கள் உண்டு. அவர்கள் கலந்து நிச்சயித்து உத்தரவிட்டபடி வேலைக்காரர்களைக் கொண்டு எல்லாம் தயாரிக்க வேண்டும். யாக பாத்திரங்கள் செய்யும் நிபுணர்களைத் திரட்டி, அவர்களுக்கு இன்ன இன்னது செய்யுங்கள் என்று சொல்லி வேலை வாங்கவேண்டும். தச்சர்கள், சிற்பிகள், குளம் கிணறு வெட்டுகிறவர்கள், சித்திரக்காரர்கள், பாடகர்கள், வாத்திய சங்கீதக்காரர்கள், நிருத்திய கலைஞர்கள் இன்னும் இம்மாதிரியான பல பேர்களைத் திரட்ட வேண்டும். விருந்தினர்கள் தங்குவதற்கு ஒரு புதிய நகரமே நிருமாணித்து ஆயிரக்கணக்கான ஜனங்களுக்குப் போஜனமளித்து, உபசரித்து, மாடுகள், துணிகள் முதலியன கொடுக்க வேண்டும். ஆட்டம், சங்கீதம், வேடிக்கை முதலியவைகளையும் ஏற்பாடு செய்து, பெருங்கூட்டத்தைத் திருப்தி செய்து அனுப்ப வேண்டும். தற்கால உலகில் ராஜாங்க ஆதரவில் நடத்தப்படும் பெரிய சம்மேளனங்களைப் போலவே அந்தக் காலத்தில் வேள்விகள் நடத்தப்பட்டன.


எல்லாக் காரியங்களும் சரியாகவும் மும்முரமாகவும் நடத்தப்பட்டு, யாகக்குதிரையும் அதனுடன் ஒரு வீரர் படையும் பல நாடுகள் சுற்றி வரும்படி அனுப்பப்பட்டன. ஒரு வருஷம் கழித்து எந்த இடையூறுமில்லாமல் யாகக்குதிரையும், குதிரையை அழைத்துச் சென்ற வீரர்களும் வெற்றிக் கொண்டாட்டத்துடன் நகரத்துக்குத் திரும்பி வந்தார்கள்.


அதன்மேல் யாகத்தை சாஸ்திரப்படி செய்ய ஆரம்பித்தார்கள். அயோத்தியில் இது நடக்க, தேவர்களுக்குள் நடந்த யோசனையை வால்மீகி பின் வருமாறு சொல்லுகிறார் :


நான்முகக் கடவுளைப் பார்த்துத் தேவர்கள் சொன்னார்கள்: 


"பகவானே! உம்முடைய வரத்தைப் பெற்றுக்கொண்டு ராவணன் என்ற அரக்கன் எங்களுக்கெல்லாம் மிகுந்த தொல்லை தந்து வருகிறான். அவனை நாம் அடக்கவோ, ஜெயிக்கவோ, கொல்லவோ முடியவில்லை. உம்முடைய வரத்தினால் அவனுக்குப் பாதுகாப்பு ஏற்பட்டு அவனுடைய அகங்காரம் அதிகரித்து துஷ்டனாகப் போய், அவன் எல்லாரையும் அவமதித்தும் கொடுமை செய்தும் வருகிறான். இந்திரனைத் துரத்திவிட்டுத் தேவலோகத்தையே கைப்பற்ற எண்ணுகிறான். அவனைக் கண்டு சூரியனும் வாயுவும் வருணனும் யாவருமே பயப்பட்டு நடுங்குகிறார்கள். அவன் அகங்காரத்தை

அடக்கி அவன் கொடுமையை முடிவுக்குக் கொண்டுவரும் யோசனை நீர்தான் சொல்ல வேண்டும்."


இதைக் கேட்ட பிரம்மன், "இந்த ராவணன் தவம் செய்து வரம் பெற்றிருக்கிறான். வரம் கேட்கும்பொழுது, நல்ல வேளையாக அவனே ஒரு விஷயத்தை விட்டு விட்டான். தேவ, கந்தருவ, ராக்ஷசர்களால் தனக்கு மரணம் உண்டாகக் கூடாது என்று வரம் பெற்றானேயொழிய மானிடர்களைப் பற்றிக் கேட்கவில்லை. மனித ஜாதியை மறந்தோ அலட்சியம் செய்தோ விட்டுவிட்டான். ஆனபடியால் இதற்குவழி உண்டு" என்றான். எல்லாருக்கும் ஒரே மகிழ்ச்சி. 


உடனே மகாவிஷ்ணுவைச் சரணடைந்தார்கள். “லோக நாதனே! ராவணன் என்ற துஷ்டன் பிரம்மாவினிடம் வரம் பெற்று உலகத்தை இம்சை செய்து வருகிறான். அதைப் பொறுக்க முடியவில்லை. அவன் அமரத்வம் கேட்டுப் பெற்ற வரத்தில் மனிதனால் அவனுக்கு மரணமில்லை என்று சேர்க்கப்படவில்லை. மறந்தோ, அலட்சியம் செய்தோ அவன் அதைக் கேட்கவுமில்லை, பிரம்மனிடமிருந்து பெறவுமில்லை. ஆகையால் தங்களுடைய அருள் எங்களுக்கு வேண்டும். மனித ஜன்மம் எடுத்துத் தாங்கள்தான் எங்களைக் காப்பாற்ற வேண்டும்” என்றார்கள்.


நாராயணனும் அப்படியே என்று ஒப்புக் கொண்டு, “பூவுலகில் புத்திர பாக்கியத்துக்காக யாகம் செய்யும் தசரதனுக்கு நான்கு குமாரர்களாக நான் அவதரித்து ராவணனைக் கொன்று உங்களுக்கு விடுதலையும் தருவேன்” என்றான். அவ்வாறே தசரதனுடைய மூன்று மனைவியரின் வயிற்றில் கர்ப்பவாசம் செய்யத் திருவுளங் கொண்டான்.


ரிஷ்ய சிருங்கர் வேள்வித்தீயில் ஆகுதி விட்டார். நெய்யைத் தீ விழுங்கிற்று. தீயிலிருந்து பொங்கி எழுந்தது. கொழுங்கனல் போன்ற ஒரு பெரிய உருவம். அதன் பிரகாசம் சூரியனைப் போல் கண்களைக் கூசச் செய்தது.


இரு கைகளாலும் ஒரு திவ்விய தங்கப் பாத்திரத்தை ஏந்தி நின்றது. கம்பீரமான துந்துபி சுவரத்தில் சொல்லிற்று. “தசரத மகாராஜனே! உன்னுடைய பிரார்த்தனையை ஒப்புக்கொண்டு தேவர்கள் இந்தப் பாயசத்தை உன் மனைவியர்களுக்கென்று அனுப்பியிருக்கிறார்கள். உனக்குப் புத்திர பாக்கியம் உண்டாகும். இதைப் பெற்றுக் கொண்டு உன் பத்தினிகளுக்குத் தருவாயாக. மங்களம்!” என்றது.


தசரதனும் அடங்கா மகிழ்ச்சியடைந்து குழந்தையைத் தூக்கியெடுப்பதுபோல் வெகு பிரியமாகப் பாத்திரத்தைப் பெற்றுக் கொண்டான். நெருப்பினின்று கிளம்பிய யாக புருஷனும் மறைந்தான்.


வேள்வி முடிந்த பின் அரசன் பாயச பாத்திரத்தை அப்படியே எடுத்துக் கொண்டு அந்தப்புரம் சென்று தனது மனைவியரிடம் கூறினான்.


“தேவர்களின் பிரசாதம் இதோ கொண்டு வந்திருக்கிறேன். இதை நீங்கள் மூவரும் அருந்திப் புத்திரப்பேறு அடையுங்கள்!” என்று சொன்னான்.


இந்த மகிழ்ச்சிச் செய்தியைக் கேட்டதுமே அந்தப்புரம் சரத்கால சந்திர காந்தியின் பொலிவு அடைந்தது. தசரதனுக்கு மூன்று பத்தினிகள். பாத்திரத்திலுள்ள பாயசத்தில் பாதி கௌசல்யா தேவி அருந்தினாள். சுமித்திரைக்கு அப்படியே தந்து மிகுதியில் ஒரு பாதியை அவள் அருந்தினாள். மிஞ்சிய பாயசத்தில் பாதியைக் கைகேயி அருந்தினாள். பின்னர் எஞ்சி நின்ற பாயசத்தைத் தசரதன் மறுபடி சுமித்திரைக்குக் கொடுத்தான்.


பரம ஏழை ஒருவன் பணம் நிறைந்த பானை ஒன்று புதைத்துக் கிடந்ததைத் திடீர் என்று அடைந்து பெற்ற மகிழ்ச்சியைப் போல் தசரதனுடைய மூன்று மனைவிகளும் மகிழ்ந்து மனம் பூரித்தார்கள். எதிர்பார்த்தபடி மூன்று ராஜ பத்தினிகளும் கர்ப்பம் தரித்தார்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக