திருமாலின் தசாவதாரத்தில் ஐந்தாவது அவதாரமாக பகவான் எடுத்த அவதாரம் வாமன அவதாரம். மஹாபலி சக்ரவர்த்தியின் கர்வத்தை அழிப்பதற்காக எடுத்த முதல் மனித அவதாரம். அவனிடம் மூவடி மண் கேட்டு மூவுலகங்களையும் அளந்தவன். மகாபலியின் அட்டகாசங்களால் தேவர்கள் அவதிபட்ட போது தேவர்களின் தாய் அதிதி, பகவானிடம் வேண்டி உயர்ந்த விரதமான “பயோ விரதத்தின்” பலனாக ஆவணி திருவோண நட்சத்திரத்தில் பகவானையே மகனாகப் பெற்றாள். சிறு பிராமணச் சிறுவனாய்த் தோன்றி, மகாபலியிடம் தன் காலால் மூன்றடி மண் கேட்டு பிறகு, அவனே ஓங்கி உலகளந்த உத்தமனாய் வளர்ந்து, மூன்றாவது அடியால் மஹாபலியை பாதாள லோகத்தில் அழுத்திய அவதாரம். மஹாபலியின் வள்ளல் தன்மையை எடுத்துக்காட்டவும், அவன் ஆணவத்தை அழிக்கவும் எடுத்த அவதாரம். தன் குலகுரு சுக்ராச்சாரியர் அறிவுரையை சட்டை செய்யாது, தான் கொடுத்த வாக்கை மீறாமல் நடந்ததால் அவன் புகழ் எவ்வாறு உயர்ந்தது என்பதை திருமால், தான் பெரிய உருவத்தை எடுத்து நமக்குக் காட்டினான். திருமால் இந்த அவதாரத்தில் கர்வபங்கம் தான் செய்தான் அழிவு ஏதும் இல்லை. இனி, பாசுரத்தில் வாமன அவதாரத்தை ஆழ்வார்கள் போற்றிப் புகழ்வதை காண்போம்.
"குறட்பிரமசாரியாய் மாவலியைக் குறும்பதக்கி அரசுவாங்கி" (பெரியாழ்வார் திருமொழி 4-9-7) வாமன அவதாரமெடுத்து மகாபலியிடம் சென்று அவன் கர்வத்தைப் போக்கி, மூவுலகங்களையும் இந்திரனுக்குக் கொடுத்த பெருமாள் திருவரங்கத்தில் பள்ளிக் கொண்டிருக்கிறார் என்கிறார் பெரியாழ்வார்.
"மன்னன் தன் தேவி மார் கண்டு மகிழ்வெய்த
முன் இவ்வுலகினை முற்றும் அளந்தவன்"
- பெரியாழ்வார் திருமொழி 2-5-9
வாமன அவதாரம் எடுத்தபோது இவன் அழகு பார்ப்போரை எல்லாம் மயங்க வைத்தது. மகாபலியின் மனைவியரும் அவன் அழகில் மகிழ்ந்தனர் என போற்றுகிறார் பெரியாழ்வார்.
ஆண்டாள் தன் திருப்பாவையில் மூன்றாவது பாட்டில் "ஓங்கி உலகளந்த உத்தமன்" என்றும், 17ஆம் பாட்டில் "அம்பரம் ஊடு அறுத்து ஓங்கி உலகு அளந்த உம்பர் கோமான்" என்றும், 24 ஆம் பாட்டில் "அன்றிவ்வுலகமளந்தாய் அடி போற்றி" என்றும் வாமன அவதாரத்தைப் போற்றுகிறாள்.
திருமழிசையாழ்வார் தன் திருச்சந்தவிருத்தம் 74ல் வாமனனாக அவதரித்த பெருமானுடைய இரு திருவடிகளையும் உபாயமென்றும், உபமேயமென்றும் தெரிந்து கொண்டு அவற்றை வணங்கினால் ஆத்மாவை பற்றிய உண்மை அறிவோடு கூட பக்தியாகிற செல்வமும் முழுமையாக உண்டாகும் என்கிறார்.
திருமங்கையாழ்வார் தன் பெரிய திருமொழியில் திருக்காழிச் சீராம விண்ணகர திருவிக்ரமனை பாடும் போது (3-4) திருவிக்ரமன் தன் மூன்றாம் அடியை மாவலி தலைமீது வைத்து, அவனை பாதாளமாகிற சிறையில் வைத்த பெருமானுடைய திருவடிகளைச் சேர வேண்டி இருப்பவர்கள் காழிச்சீராம விண்ணகரம் சென்று திருவிக்ரமனையும் தாயார் மட்டவிழ் குழலியையும் வணங்கி அருள் பெறலாம் என்கிறார்.
நடுநாட்டு திருப்பதியான திருக்கோவலூர் பெருமாள் திருவிக்ரமனை இடைச்சுழி ஆயனை பாடும்போது உலகத்தவர் இம்மைப் பயன்களைப் பெறுவதற்காக திரண்டு வந்து துதிக்க, ஒருவருக்கும் காண ஒண்ணா தவனாய் எங்கும் நிறைந்து இருப்பவர் என்று சிறப்பிக்கிறார். மேலும், காஞ்சிபுரத்தில் திருஊரகத்தில் உலகளந்த பெருமாளை பாடும்போது (திருநெடுந்தாண்டகம்-8) அடியார்கள் மனதில் வீற்றிருக்கும் எம்பெருமான் தான் திருக்கோயிலிலும் இருந்து நம்மை ரட்சிக்கிறார் என்கிறார்.
பொய்கை ஆழ்வார் தன் முதல் திருவந்தாதியில் (36) "பொன்னாழிக் கையால் நீ மண்ணிரந்து கொண்ட வகை" சம்சாரிகளுக்கு தன் உடலை சிறியவனாக சுருக்கிக் கொண்டு, நீ மாவலியிடம் பூமியை யாசித்த எளிமை குணத்தில் ஈடுபட்ட ஆழ்வார் “இதென்ன மாயம்” என்று மோகித்து நிற்கிறார்.
பூதத்தாழ்வார் தன் இரண்டாம் திருவந்தாதியில் “இவ்வுலகை மூவடியாலே அளந்து மூவடி நிலத்தை யாசித்தும்” (5), "கொண்டதுலகம் குறளுருவாய்" (18) வாமன வடிவில் மாவலியிடம் சென்று யாசித்து பூமி முதலிய உலகங்களை ஆக்கிரமித்தும், "நீயன்று லகளந்தாய் நீண்ட திருமாலே!" (30) உலகத்தை இரண்டடியால் அளந்ததை எண்ணி எண்ணி புகழ்கிறார்.
பேயாழ்வார் தன் மூன்றாம் திருவந்தாதியில் "அடிவண்ணம் தாமரை அன்றுலகம் தாயோன்" (5) உலகங்களைத் தாவியளந்த பெருமானுடைய திருவடிகள் தாமரைப்போல சிவந்திருந்த அழகை அனுபவிக்கிறார். "மண்ண ளந்த பாதமும்" (9) உலகளந்த திருவடிகளும் தாமரை மலரை ஒக்கும் என்கிறார். "வாய் மொழிந்து வாமனனாய் மாவலிபால் மூவடி மண் நீயளந்து கொண்ட நெடுமாலே" (18) வாமனனாகி மாவலியிடம் சென்று, மூவடி நிலத்தை (இரந்து பெற்று) அதை அளந்து கொண்ட உன் திருவடிகளில் எனக்கு நித்திய கைங்கர்யத்தைத் தந்தருளி உன்னுடைய அனுபவத்துக்கு இடையூறான சம்சார பயத்தையும் மாற்றியருள வேண்டும் என்கிறார்.
நம்மாழ்வார் தன் பெரிய திருவந்தாதியில் “சீரால் பிறந்து சிறப்பால் வளராது பேர் வாமனாகாக்கால் பேராளா” (16) மகானுபாவனான பெருமானே சிறப்புடன் பிறந்தான், சிறப்புடன் வளர்ந்தான் என்று புகழும்படி இல்லாமல் வாமனன் என்னும் குள்ளனாக அவதரித்து பூமியை தானமிக்கு பெற்றது மாயம்! நின் மாயங்களை நான் தெரிந்து கொள்ளும்படி கூறுவாய் என பெருமாளை கேட்கிறார்.
திருவாய்மொழி 2-2-3 ல் சிவனை, பிரமனை, பெரிய பிராட்டியையும் வேறுபாடு இன்றி அயர்வுறும் அமரர்கள் தொழும்படி தன் திருமேனியில் வைத்துள்ளவன் குள்ள உருவம் கொண்டு உலகத்தை அளந்து கொண்டு மிகப்பெரிய தெய்வத்தைக் காட்டிலும் உயர்ந்த தெய்வம் உள்ளதோ என சிறப்பித்துப் பாடுகிறார். 2-7-6 ல் திருவிக்ரமனாய் வந்த பெருமாள் எல்லார் தலைகளிலும் திருவடிகளை வைத்த சுசீலனின் திருவருள் என்னைப் பற்றி அவனிடம் தள்ளியது. ஆகவே நான் எந்த நிலையிலும் திருவிக்ரமனைப் பாடுவேன் என்கிறார்.
3-8-2 "ஞாலம் கொள்வான் குறளாகிய வஞ்சனே" மகாபலியால் கொள்ளப்பட்ட பூமியை மீட்கக் குறுகிய வடிவம் கொண்ட பிரம்மசாரியாய் வந்து, சிறுகாலை காட்டிப் பெரிய காலாலே உலகை அளந்தவனே உன்னுடைய இப்பெருமைகளை எல்லாம் என் நாக்கு சொல்லித் துதிக்க விரும்புகிறது என்கிறார்.
4-7-2 பூவுலகை அளந்துகொண்ட வாமனனே, குற்றம் இல்லாத அனுபவிக்க அனுபவிக்க குறைவு படாத ஆனந்தக் கடலை கொடுக்கின்ற வள்ளலே! என்றென்று நள்ளிரவிலும், நல்ல பகலிலும் நான் அழைத்தால் கள்ள மாயனே! உன்னை என் கண்கள் காணும்படியாக நடந்து வந்து திருவருள் புரிய வேண்டும் என்கிறார் வைணவ குலபதி நம்மாழ்வார். இவ்வாறு ஆழ்வார்களால் அனுபவித்த வாமனனை, திருவிக்ரமனை காஞ்சிபுரத்தில் உலகளந்தப் பெருமாளாக தனது வலது கரத்தால் ஒரு விரலைக் காட்டியபடி, வலது கால் மாவலி தலைமேல் கால் வைத்த படியும், இடது காலை உயரத் தூக்கியும் சேவிக்கலாம்.
நடுநாட்டு திவ்ய தேசமான திருக்கோவலூரில் தனது வலது காலை உயரத் தூக்கியபடியும், இடது திருவடியை பூமியில் பதித்தும், வலது கரத்தில் சங்கும், இடது கரத்தில் சக்கரமும் கொண்ட பெருமாளை சேவித்து மகிழலாம். சோழ நாட்டு காழிச்சீராம விண்ணகரத்தில் சிறிய திருமேனியாய் இடது காலை தூக்கியும் வரம் தரும் வரத ஹஸ்தத்துடன் சேவித்து அருள் பெறலாம். மேலும், திருநீர்மலையில் உலகளந்த பெருமாளாகவும் திருவரங்கத்தில் சிறிய மூர்த்தியாக வாமன வடிவில் கையில் குடையுடன் திருக்குறளப்பனாகவும் சேவித்து மகிழலாம்.
திருவோண நன்னாளில் ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி வணங்கி, அனைவரும் நீங்காத செல்வமும் நிறைந்து வாழ்வர் என்பது அசைக்க முடியாத உண்மை!
நன்றி - சப்தகிரி ஆகஸ்ட் 2020