ஶ்ரீமத் பாகவதம் - 178

 எட்டாவது ஸ்கந்தம் - பத்தாவது அத்தியாயம்

(அஸுரர்கள் த்வேஷத்தினால் (பகைமையால்) தேவதைகளோடு யுத்தம் செய்கையும், தேவதைகள் அஸுரமாயைகளால் வருந்துவதும், பகவான் அவ்விடம்வந்து ஆவிர்ப்பவித்தலும் (தோன்றுதலும்))

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- மன்னவனே! அஸுரர்கள் இவ்வாறு ஸமுத்ரம் கடையும் கார்யத்தில் முயற்சி ஏற்றுக்கொண்டவர்களாயினும், ஸர்வாந்தராத்மாவான பரமபுருஷனிடத்தில் மனப்பற்றின்றிக் கொழுத்து (கர்வமுற்று) இருந்தார்களாகையால், அம்ருதத்தை அடையவில்லை. ராஜனே! பகவான் இவ்வாறு அம்ருதத்தை உண்டாக்கித் தன் பக்தர்களான தேவதைகளைப் பானம் செய்வித்து, ஸமஸ்த பூதங்களும் பார்த்துக் கொண்டிருக்கையில், கருடவாஹனத்தின் மேல் ஏறிக்கொண்டு போனான். 

அவ்வாறு அம்ருதத்தை இழந்த அஸுரர்கள், தங்கள் சத்ருக்களான (எதிரிகளான) தேவதைகளுக்குப் பெரிய பலஸித்தி (பலன்) உண்டானதைப் பொறுக்கமுடியாமல், ஆயுதங்களை ஏந்திக்கொண்டு, தேவதைகளை எதிர்த்தோடினார்கள். அப்பால், தேவக்கூட்டத்திலுள்ளவர் அனைவரும் அம்ருதபானத்தினால் வலித்து, மேன்மையுடன் வளர்ந்திருக்கையாலும், ஸ்ரீமந்நாராயணனுடைய பாதாரவிந்தங்களைப் பணிகையாகிற பலத்தினாலும், உத்ஸாஹமுற்று, ஆயுதங்களை ஏந்திக்கொண்டு, அஸுரர்களை எதிர்த்துச் சண்டை செய்தார்கள்.

மன்னவனே! அந்த க்ஷீரசமுத்ரத்தின் கரையில், தேவதைகளுக்கும், அஸுரர்களுக்கும், மிகப் பயங்கரமான ஸங்குல (குழப்பமான) யுத்தம் நடந்தது. அது தேவாஸுர யுத்தமென்று பேர்பெற்றது. அது, காண்போர்களுக்கு மயிர்க்கூச்சலை விளைத்தது. அப்பொழுது, ஒருவர்க்கொருவர் சத்ருக்களான (எதிரிகளான) தேவாஸுரர்கள், பெரும் கோபாவேசமுற்று, யுத்தத்தில் ஒருவர்மேல் ஒருவர் விழுந்து, பாணங்களாலும், பலவகை ஆயுதங்களாலும், ஒருவரையொருவர் அடித்தார்கள். சங்கு, ம்ருதங்கம், துந்துபி, டமரு முதலிய வாத்யங்களின் த்வனியும் (ஒலியும்), யானைகளின் பிளிறல்களும், குதிரைகளின் கனைப்புக்களும், காலாட்படைகளின் (பூமியில் நின்று யுத்தம் செய்யும் வீரர்களின்) கர்ஜனையும், சேர்ந்து பெருங்கோஷம் உண்டாயிற்று. அந்தத் தேவாஸுர யுத்தத்தில் தேராளிகள் (தேரில் நின்று போர் செய்பவர்கள்) தேராளிகளோடும், காலாட்கள் (பூமியில் நின்று யுத்தம் செய்யும் வீரர்கள்) காலாட்களோடும், குதிரைகள் குதிரைகளோடும், யானைகள் யானைகளோடும் கலந்து, சண்டை செய்தார்கள். அந்தத் தேவாஸுர வீரர்களில் சிலர், ஒட்டைகள் மேலும், சிலர் யானைகள் மேலும், சிலர் கழுதைகள் மேலும், சிலர் வெளுத்த முகமுடைய கரடிகள் மேலும், சிலர் புலிகள் மேலும், சிலர் ஸிம்ஹங்கள் மேலும், சிலர் கழுக்கள் மேலும், சிலர் கங்கபக்ஷிகள் மேலும், சிலர் செந்நாய்கள் மேலும், சிலர் பருந்துகள் மேலும், சிலர் பாஸபக்ஷிகள் மேலும், சிலர் திமிங்கிலமென்கிற மத்ஸ்யங்கள் மேலும், சிலர் சரப மிருகங்கள் மேலும், சிலர் கடாக்கள் மேலும், சிலர் கட்க மிருகங்கள் மேலும், சிலர் பசுக்கள் மேலும், சிலர் எருதுகள் மேலும், சிலர் கவய மிருகங்கள் மேலும், சிலர் அருண மிருகங்கள் மேலும், சிலர் நரிகள் மேலும், சிலர் பெருச்சாளிகள் மேலும், சிலர் ஓணான்கள் மேலும், சிலர் நாய்கள் மேலும், சிலர் மனுஷ்யர்கள் மேலும், சிலர் ஆடுகள் மேலும், சிலர் க்ருஷ்ணஸார மிருகங்கள் மேலும், சிலர் ஹம்ஸங்கள் மேலும், சிலர் பன்றிகள் மேலும், மற்றும் பலர் ஜலம், பூமி, ஆகாயம் இவற்றில் வஸிப்பவைகளும் விகாரமான உருவமுடையவைகளுமான பலவகை ஐந்துக்கள் மேலும் ஏறிக்கொண்டு, சத்ருக்களை (எதிரிகளை) எதிர்த்தார்கள்.

ராஜனே! தேவதைகள், அஸுர ஸைன்யத்திலும் (படையிலும்), அஸுரர்கள் தேவ ஸைன்யத்திலும் (படையிலும்), முன்னே முன்னே நுழைந்து யுத்தம் செய்தார்கள். அந்தத் தேவாஸுரர்களுடைய இரண்டு ஸைன்யங்களும் (படைகளும்), வெளுத்த த்வஜ படங்களாலும் (கொடிகளாலும்), நிர்மலங்களும் (அழுக்கற்றவையும்) விலையுயர்ந்தவைகளும், வஜ்ர மணிகள் (ரத்னங்கள்) இழைத்த காம்புடையவைகளுமான குடைகளாலும், அத்தகைய விசிறிகளாலும் காற்றில் அசைகின்ற மயில்தோகைச் சாமரங்களாலும் அத்தகைய மேல் உத்தரீயங்களாலும், தலைப்பாகைகளாலும் சப்திக்கின்ற கவசங்களாலும் ஆபரணங்களாலும், சாணையிடப்பெற்று (தீட்டப்பட்டு) நிர்மலமாய் (அழுக்கற்று) இருப்பவைகளும் ஸூர்ய கிரணங்கள் பட்டு மிகவும் ஜ்வலிக்கின்றவைகளுமான ஆயுதங்களாலும், வீரர்களின் வரிசைகளாலும், ஜல ஜந்துக்களாலான (நீரில் வாழும் பிராணிகள்) ஸமுத்ரங்கள் போலத் திகழ்ந்தன. அஸுர ஸைன்யங்களுக்கு ப்ரபுவாகிய பலிசக்ரவர்த்தி, வைஹாயஸம் என்னும் விமானத்தில் ஏறிக்கொண்டு, உதயபர்வதத்தில் வீற்றிருக்கும் சந்த்ரன் போல விளங்கினான். அந்த வைஹாயஸ விமானம், நினைத்தபடியெல்லாம் போகும் திறமையுள்ளது; மயனால் நிர்மிக்கப்பட்டது. அதில் யுத்தத்திற்கு வேண்டிய அஸ்த்ரம், சஸ்த்ரம் முதலியவை அனைத்தும் அமைந்திருக்கும்; எல்லோர்க்கும் ஆச்சர்யத்தை விளைக்கும்; மிக்க விஸ்தாரமுடையது. அதற்கு நிகரான விமானங்கள் எவையுமே இல்லை. ஆகையால், இத்தகையதென்று அதன் நிலைமையை நிரூபிக்க முடியாது. நினைத்தவிடமெங்கும் நிற்குமாகையால், இன்ன இடத்தில் இருக்குமென்று நிரூபிக்க முடியாது. ஓரிடத்திலிருப்பினும், பேரொளியுடையதாகையால் கண்ணால் கண்டறிய முடியாது. ஸேனாதிபதிகள் அனைவரும் அவனைச் சூழ்ந்திருந்தார்கள். அவன், குடை, சாமரம் முதலிய உபசாரங்களெல்லாம் செய்யப்பெற்றிருந்தான். நமுசி, சம்பரன், பாணன், விப்ரசித்தி, அயோமுகன், த்விமூர்த்தன், காலநாபன், ப்ரஹேதி, ஹேதி, இல்வலன், சகுனி, பூதஸந்தராஸன், வஜ்ரதம்ஷ்ட்ரன், விரோசனன், ஹயக்ரீவன், சங்கு , சிரன், கபிலன், மேகதுந்துபி , தாரகன், உக்ரதருக்கு, சும்பன், நிசும்பன், ஜம்பன், உத்கலன், அரிஷ்டன், அரிஷ்டநேமி, மயன், த்ரிபுராதிபன் இவர்களும், பௌலோமர், காலகேயர், நிவாதகவசர் முதலிய மற்றவர்களும் தங்கள் தங்கள் வாஹனங்களில் ஏறிக்கொண்டு, அந்த பலி சக்ரவர்த்தியைச் சுற்றிலும் சூழ்ந்திருந்தார்கள். இவர்களெல்லோரும், அம்ருதத்தில் பாகம் நேரப்பெறாமல், ஸமுத்ரம் கடைந்த வருத்தத்தை மாத்ரம் அடைந்தவர்களாகையால், யுத்தத்தில் முன்நின்று தேவதைகளைப் பலவாறு வென்றார்கள். அவர்கள், ஸிம்ஹ நாதங்களைச் (சிங்க கர்ஜனை) செய்து, பெருங்கோஷமுடைய சங்கங்களை ஊதினார்கள். தேவேந்த்ரன் இவ்வாறு சத்ருக்கள் (எதிரிகள்) கொழுத்திருப்பதைக் கண்டு மிகவும் கோபித்துத் திக்கஜமான (திசைகளைக் காக்கும் யானையான) ஐராவதத்தின் மேல் ஏறி, அருவிகள் பெருகப்பெற்ற உதயபர்வதத்தின் மேல் ஏறின ஸூர்யன் போல ப்ரகாசித்தான். பலவகையான வாஹனங்களும், த்வஜங்களும் (கொடிகளும்), ஆயுதங்களுமுடைய தேவதைகளும், வாயு, அக்னி, வருணன் முதலிய திக்பாலகர்களும், தங்கள் தங்கள் கூட்டங்களோடு கூடி அவ்விந்தரனைச் சூழ்ந்து நின்றார்கள். அந்தத் தேவதைகளும், அஸுரர்களும் ஒருவர்க்கொருவர் ஸமீபத்தில் சென்று, ஒருவரையொருவர் பேர் சொல்லியழைத்து, வெசவுகளால் (கொடிய வார்த்தைகளால்) அவமதித்து, முன்னே சென்று, இரண்டிரண்டு பேர்களாக யுத்தம் செய்தார்கள். பலி சக்ரவர்த்தி, இந்த்ரனோடும், ஸுப்ரஹ்மண்யன் தாரகனோடும், வருணன் ஹேதியோடும், மித்ரன் ப்ரஹேதியோடும், யமன் காலநாபனோடும், வியவகாமன் மயனோடும், சம்பரன் த்வஷ்டாவோடும், விரோசனன் ஸவிதாவோடும், நமுசி பராஜிதனோடும், அர்விதேவதைகள் வ்ருஷபர்வனோடும், ஸூர்யனொருவன் பாணன் முதலிய பலிபுத்ரர்கள் நூறு பேர்களோடும், ஸோமன் ராஹுவோடும், அனிலன் புலோமனோடும், மஹாபலமுடைய பத்ரகாளிதேவி சும்பன், நிசும்பன் இவர்களோடும், வ்ருஷாகபி ஜம்பனோடும், விபாவஸு மாரிஷனோடும், இல்வல-வாதாபிகள் மரீசி முதலிய ப்ரஹ்மபுத்ரர்களோடும், துர்மர்ஷன் காமதேவனோடும், உத்கலன் ப்ராஹ்மி முதலிய ஸப்தமாதாக்களோடும், ப்ருஹஸ்பதி சுக்ரனோடும், சனி நரகனோடும், ம்ருத்துக்கள் நிவாத கவசர்களோடும், அஷ்டவஸுக்கள் காலகேயர்களோடும், விச்வதேவர்கள் பௌலோமர்களோடும், ருத்ரர்கள் க்ரோதவார்களோடும் கலந்து யுத்தம் செய்தார்கள். 

இவ்வாறு, யுத்தத்தில் அந்தத் தேவச்ரேஷ்டர்களும், அஸுரர்ரேஷ்டர்களும் இரண்டிரண்டு பேர்களாகக் கூட்டங்கூடி ஒருவரையொருவர் கிட்டிச் சண்டை செய்து, ஒருவரையொருவர் வெல்ல விரும்பி, கூரான பாணங்கள், கத்திகள், ஈட்டி, முஸுண்டி, சக்ரம், கதை ருஷ்டி, பட்டஸம்,சக்தி, உல்முகம், ப்ராஸம், பார்வதம், நிஸ்த்ரிம்சம், பல்லம், பரிகம், முத்கரம், பிண்டிவாலம், இவைகளால் பலம் உள்ள அளவு ஒருவரையொருவர் அடித்துத் தலைகளையும் அறுத்தார்கள். யானைகளும் யானைக்காரர்களும், குதிரைகளும் குதிரைக்காரர்களும், தேர்களும் தேராளிகளும், காலாட்களும் மற்றும் பலவகை வாஹனங்களும் முரிந்து விழுந்தன. ப்ராணிகள் அனைவரும், கை, துடை, கழுத்து, கால், இவைகளும் த்வஜங்களும் (கொடிகளும்), தனுஸ்ஸுக்களும் (விற்களும்), கவசங்களும், ஆபரணங்களும், அறுப்புண்டு விழுந்தார்கள். அந்தத் தேவாஸுரர்களின் அடிவைப்புக்களாலும், தேர்ச்சக்ரங்களின் உறைச்சல்களாலும், யுத்த பூமியினின்று பெருந்துகள் கிளம்பித் திசைகளையும், ஆகாயத்தையும், ஸூர்யனையும் மறைத்தது. பிறகு ரக்தப் பெருக்குக்களால், நாற்புறத்திலும் நனைந்து, அந்தத் தூள் முழுவதும் அடங்கிற்று. கிரீடங்களும் குண்டலங்களும் சிதறப்பெற்று, பரபரப்போடு கூடின கண்களுடையவைகளும் உதட்டைக் கடித்துக் கொண்டிருப்பவைகளுமான அறுப்புண்டு விழுந்த தேவாஸுரர்களின் தலைகளாலும், ஆபரணங்களும், ஆயுதங்களும் அமைந்த புஜதண்டங்களாலும் (கைகளாலும்) திரண்டு உருண்ட துடைகளாலும், நிறைந்த அந்த யுத்தகளம் முழுவதும் ஒருவாறு திகழ்வுற்றிருந்தது. அந்த யுத்தபூமியில், கபந்தங்கள் (தலை அற்ற உடலின் பகுதி) அறுந்து விழுந்திருக்கிற தங்கள் முகங்களிலுள்ள கண்களால் பார்த்துக்கொண்டே புஜதண்டங்களில் (கைகளில்) ஆயுதங்களை ஏந்தி யுத்தவீரர்கள் போலச் சத்ருக்களை எதிர்த்தோடக் கிளம்பின. 

பலிசக்ரவர்த்தி, மஹேந்த்ரனைப் பத்து பாணங்களாலும், ஐராவதத்தை மூன்று பாணங்களாலும், அந்த ஐராவதத்தின் பாதங்களைப் பாதுகாக்கும் நான்கு வீரர்களை நான்கு பாணங்களாலும், யானையை நடத்தும் பாகனை ஒரு பாணத்தினாலும் வருந்த அடித்தான். தனுர் வித்யையில் ஸமர்த்தனாகிய அத்தேவேந்த்ரன், அவ்வாறு வருகின்ற அந்தப் பாணங்கள் வந்து தன்மேல் விழுவதற்கு முன்னமே, கூரான அத்தனை பல்ல (கூரான ஈட்டி போன்ற) பாணங்களால் அவற்றைச் சிரித்துக்கொண்டே பிளந்தான். இந்த்ரன் செய்த பலம் பொருந்திய அச்செயலைக் கண்டு பலி, அதைப் பொறுக்க முடியாமல், தான் மறைந்து கொண்டு, அஸுரமாயையைப் படைத்தான். 

ப்ரபு! அதனால் தேவ ஸைன்யத்தின் (படையின்) மேல் ஒரு பர்வதம் (மலை) வந்து தோன்றிற்று. அந்தப் பர்வதத்தினின்று காட்டுத் தீப்பற்றி எரிகின்ற வ்ருக்ஷங்களும் (மரங்களும்) கல்லுளி போல் கூரான நுனிகளையுடைய கற்களும், வந்து விழுந்து அஸுர சத்ருக்களான தேவதைகளின் ஸைன்யத்தைச் (படையைச்) சூர்ணம் (தூள்) செய்தன. தேள்களும், கடிக்கும் தன்மையுடைய மஹா ஸர்ப்பங்களும், ஸிம்ஹம், புலி, பன்றி இவைகளும் மத்த கஜங்களும் கர்ஜித்துக்கொண்டு, அந்தப் பர்வதத்தினின்றும் (மலையிலிருந்து) வெளிப்பட்டன. அரையிலாடையின்றிக் கையில் சூலாயுதத்தை ஏந்திகொண்டிருக்கிற பலவாயிரம் ராக்ஷஸிகளும், அத்தகைய ராக்ஷஸர்களும் “கிழி! பிள! வெட்டு! குத்து!” என்று மொழிந்துகொண்டு கூட்டம் கூட்டமாய்க் கிளம்பினார்கள். மற்றும், ஆகாயத்தில் மிகப்பெரிய மேகங்கள் தோன்றிக் கம்பீரமாகவும் கர்ண கடோரமாகவும் (காதினால் கேட்கமுடியாததாய்) ஒலித்துக் காற்றினால் அடியுண்டு கர்ஜனைகள் செய்து, நெருப்புத் துணுக்கைகளைப் பெய்தன. அஸுர ச்ரேஷ்டனாகிய அந்தப் பலியினால் ஸ்ருஷ்டிக்கப்பட்ட காற்றுடன் கூடின அக்னி, ப்ரளயகாலாக்னி (ப்ரபஞ்சம் அழியும்போது ஏற்படும் நெருப்புப்) போலப் பொறுக்க முடியாத பெருங்கொடுமையுடன் தோன்றி, தேவதைகளின் ஸைன்யத்தைத் தஹித்து விட்டது. 

அப்பால், தேவதைகளுக்கு நாற்புறத்திலும் பெரு மழைக்காற்றுகளால் அலைகளும் நீர்ச்சுழிகளும் (தண்ணீர் சுழல்) கிளம்பப் பெற்றுக் கரைபுரண்டு கிளர்ந்தெழுந்து, மிகவும் பயங்கரமான ஸமுத்ரம் தோற்றிற்று. இவ்வாறு பலியைப் போல மற்ற அஸுரர்களும் தங்கள் தங்கள் கதி பிறர்க்குத் தெரியாதபடி மறைந்து, பயங்கரர்களாகி மிகவும் பயங்கரமான மாயைகளைப் படைத்துக் கொண்டிருக்கையில், தேவ ஸைன்யத்திலுள்ளவர் அனைவரும் வருத்தமுற்றார்கள். 

மன்னவனே! இந்திரன் முதலிய தேவதைகள் அனைவரும் அந்த மாயைகளுக்குப் பரிஹாரம் இன்னதென்று தெரியாமல், உலகங்களுக்கெல்லாம் ரக்ஷகனான பகவானை த்யானிக்கையில், பீதாம்பரம் உடுத்தவனும், அப்போது அலர்ந்த செந்தாமரைமலர் போன்ற திருக்கண்கள் உடையவனும், ஆயுதங்களை ஏந்தின எட்டுப் புஜங்கள் அமைந்தவனும், ஸ்ரீமஹாலக்ஷ்மி, கௌஸ்துபமணி, விலையுயர்ந்த கிரீடம், குண்டலம் இவை திகழப் பெற்றவனுமாகிய அப்பகவான், கருடனுடைய தோள் மேல் தளிர் போன்ற தன் பாதங்களைத் தொங்க விட்டுக்கொண்டு, அவர்களுக்கு ப்ரத்யக்ஷமாய் வந்து தோன்றினான். 

அவன், அவ்விடம் வந்து நுழைந்த மாத்ரத்தில் அஸுரர்களின் செயலாலுண்டான மாயைகளெல்லாம் மஹானுபாவனான அப்பகவானுடைய மஹிமையால், ஸ்வப்னத்தில் (கனவில்) கண்ட வஸ்துக்கள் விழித்துக் கொண்ட பின்பு மறைவது போல பறந்து போயின. பகவானை நினைத்த மாத்ரத்தில், ஆபத்துக்களெல்லாம் நீங்கிப்போகும். அவன் நேரே புலப்படுவானாயின், ஆபத்துக்கள் நீங்குவதைப் பற்றிச் சொல்ல வேண்டுமோ? 

ஸிம்ஹத்தை வாஹனமாகவுடைய காலநேமியென்னும் அஸுரன், அவ்வாறு யுத்தத்தில் பகவான் கருடவாஹனத்தின்மேல் வந்து தோன்றக்கண்டு, சூலத்தைச் சுற்றி அவன்மேல் ப்ரயோகித்தான். மூன்று லோகங்களுக்கும் ப்ரபுவாகிய பகவான், கருடன் தலைமேல் விழவருகின்ற அந்தச் சூலத்தை அப்படியே பிடித்துக்கொண்டு, அச்சூலத்தினாலேயே சத்ருவாகிய அந்தக் காலநேமியையும் அவனுடைய வாஹனமான ஸிம்ஹத்தையும் அடித்தான். அப்பால், மஹாபலிஷ்டர்களான மாலி, ஸுமாலியென்னும் இரண்டு அஸுரர்கள் பகவானை எதிர்த்து, அவனுடைய சக்ராயுதத்தினால் தலையறுப்புண்டு, யுத்த பூமியில் விழுந்தார்கள். அவர்களில் மாலி என்பவன், பகவானுடைய வாஹனமான கருடனைக் கூரான கதையால் நோக்கி அடித்தான். அடித்ததும், ஸந்தோஷத்தினால் கர்ஜனை செய்தான். ஆதிபுருஷனாகிய பகவான் அது கண்டு சக்ராயுதத்தினால் அவனுடைய தலையை அறுத்தான்.

பத்தாவது அத்தியாயம் முற்றிற்று.

கருத்துரையிடுக (0)
புதியது பழையவை