வியாழன், 3 செப்டம்பர், 2020

ஶ்ரீமத் பாகவதம் - 179

 எட்டாவது ஸ்கந்தம் - பதினொன்றாம் அத்தியாயம்

(தேவதைகள் அஸுரர்களை வதித்தலும், நாரதர் வந்து யுத்தத்தைத் தடுத்தலும், சுக்ரன் அஸுரர்களைப் பிழைப்பித்தலும்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- அப்பால், இந்த்ரன், வாயு முதலிய தேவதைகள் அனைவரும் பரமபுருஷனுடைய பேரருளால், அஸுரர்களின் மாயைகளால் நேர்ந்த மனக்கலக்கம் தீர்ந்து, முன்பு தாங்கள் எவரெவர்களால் த்வந்த்வ யுத்தத்தில் (ஒருவரோடு ஒருவர் செய்யும் சண்டையில்) அடியுண்டார்களோ, அந்த அஸுரர்களை எல்லாம் நன்றாக அடித்தார்கள். மஹானுபாவனாகிய தேவேந்திரன், பெருங்கோபத்துடன் பலியின்மேல் ப்ரயோகிக்க வஜ்ராயுதத்தை எடுத்து நோக்கினான். அப்பொழுது ப்ரஜைகள் “ஆ! ஆ!” என்று இறைச்சலிட்டார்கள். வஜ்ராயுதத்தை ஏந்தின இந்த்ரன், மஹாயுத்தத்தில் பெருங்கோபத்துடன் உலாவிக்கொண்டு சண்டை செய்ய வேண்டுமென்னும் விருப்பத்துடன் எதிரே நிற்கின்ற பலியைப் பொருள் செய்யாமல், இவ்வாறு மொழிந்தான்.

இந்த்ரன் சொல்லுகிறான்:- மூடா! துர்ப்புத்தியுடைய ஒருவன், அறியாத பிள்ளைகளைக் கபடத்தினால் (சூதினால், வஞ்சனையால்) கண்கட்டி ஜயித்து, அவர்கள் பணத்தைப் பறிப்பது போல, மாயையில் ஸமர்த்தர்களான எங்களை, நீ மாயையால் ஜயிக்க விரும்புகின்றாய். கீழான பதவியினின்றும் மேல் பதவியை ஏறப்பார்க்கிறாய். மாயைகளால் ஸ்வர்க்கத்தைக் கைப்பற்ற முயற்சி செய்கிறாய். இத்தகையனான உன்னைத் துஷ்ட ஜந்துக்களைப் (கொடிய பிராணிகளைப்) போல இப்பொழுது நான் வதிக்கின்றேன். துர்மாயைகளைக் (தீமை விளைக்கும் மாயாஜாலங்களைக்) கற்றறிந்து, கொழுத்திருக்கின்ற உன் தலையை நூறு கணுக்களையுடைய (பிரிவுகளை உடைய) வஜ்ராயுதத்தினால் அறுத்து விடுகிறேன். மந்தபுத்தி உடையவனே! நீ உன் ஜ்ஞாதிகளுடன் (கூட்டாளிகளுடன்) வந்து பலமுள்ளவளவும் யுத்தம் செய்வாயாக.

பலி சொல்லுகிறான்:- யுத்தம்செய்ய முயன்றவர்கள், அனைவர்க்கும் காலத்தினால் பரிபாக தசையை (பலன் கொடுக்கும் நிலையை) அடைந்த பூர்வ கர்மங்களுக்குத் தகுந்தபடி கீர்த்தி (புகழ்), ஜயம் (வெற்றி), அபஜயம் (தோல்வி), மரணம் (இறப்பு) இவை க்ரமமாக விளைகின்றன. பண்டிதர்கள், ஜயம் (வெற்றி), அபஜயம் (தோல்வி), புகழ் முதலிய பலன்களைப் பெறுகிற ஜனங்களைப் பார்த்துக் காலத்தினால் பரிபக்வமான (முதிர்ந்த) கர்மத்தின் பலனை அனுபவிக்கிறார்களென்று நினைப்பார்கள். ஆகையால், அவர்கள் ஜயாதிகளைப் (வெற்றிகளைப்) பற்றி ஸந்தோஷிக்கவும் மாட்டார்கள்; அபஜயாதிகளைப் (தோல்விகளைப்) பற்றி வருந்தவுமாட்டார்கள். உண்மை இப்படியிருக்க, ஜயித்தோமென்று ஸந்தோஷிக்கிற நீங்கள் அறிவுடையவர்களாக மாட்டீர்கள். நீங்கள் கர்மத்தினால் விளைகிற ஜயம் முதலிய பலன்களைப் பற்றி உங்கள் தேஹத்தையே காரணமாக நினைக்கிறீர்கள். நீங்கள் அறிஞர்களால் “இப்படியும் சில மூடர்கள் உண்டோ” என்று சோகிக்கத் தகுந்தவர்களாயிருக்கிறீர்கள். ஆகையால், மர்மத்தில் உறுத்தும்படியான உங்கள் வார்த்தைகளை நாங்கள் நன்றென்று கொள்ள மாட்டோம்.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- வீரர்களின் கொழுப்பை அடக்கும் திறமையுடைய மஹாவீரனாகிய பலி, இவ்வாறு மேன்மையுடைய தேவேந்த்ரனைப் பலவாறு வைது (திட்டி), அவ்வைதல்களால் (அந்த திட்டுகளால்) அடியுண்ட அவனை மீளவும் காது நுனி வரையில் இழுத்து விடப்பட்ட நாராசபாணங்களால் (சப்திக்கும் அம்புகளால்) அடித்தான். உண்மையை உரைக்கின்ற சத்ருவாகிய பலியினால், இவ்வாறு நிந்திக்கப்பட்ட (பழிக்கப்பட்ட) தேவேந்திரன், மாவெட்டியால் அடியுண்ட யானை போல, அவன் சொன்ன நிந்தனைகளைப் பொறுக்க முடியாமல், எங்கும் தடைபடாததும் சத்ருக்களை அழிப்பதுமாகிய வஜ்ராயுதத்தை, அவன்மேல் ப்ரயோகித்தான். 

அவ்வஸுரன் அதனால் அடிக்கப்பட்டு, இறகுகள் ஒடிந்த பர்வதம் (மலை) போல விமானத்துடன் கீழே விழுந்தான். அப்பால், அந்தப் பலியின் நண்பனாகிய ஜம்பனென்பவன் தன் ஸ்நேஹிதனாகிய (நண்பனான) பலி அடியுண்டு பூமியில் விழுந்திருப்பதைக் கண்டு, அவன் மாண்டபின்பும் அவனுடைய ஸ்நேஹத்தை (நட்பை) நினைத்து, அதற்குரியபடி செய்யமுயன்று இந்த்ரனை எதிர்த்தோடினான், மஹா பலிஷ்டனான அந்த ஜம்பாஸுரனும், ஸிம்ஹ வாஹனத்தின் மேல் ஏறிக்கொண்டு வந்து, வேகத்துடன் கதையையெடுத்து இந்த்ரனைக் கழுத்தடியில் அடித்து, அவனுடைய யானையையும் அடித்தான். ஐராவதம், கதையின் அடியினால் மிகவும் வருந்தித் தழதழத்து முழந்தாள்களால் பூமியை ஊன்றிக்கொண்டு, மூர்ச்சித்து விட்டது. பிறகு மாதலி, யானை மூர்ச்சித்ததைக் கண்டு பச்சை நிறமுடைய  ஆயிரம் குதிரைகள் பூட்டப்பெற்ற ரதத்தைக் கொண்டு வந்தான். இந்த்ரன் ஐராவதத்தை விட்டு, மாதலி கொண்டு வந்த ரதத்தின்மேல் ஏறிக்கொண்டான். 

அஸுர ச்ரேஷ்டனான ஜம்பாஸுரன், இந்த்ர ஸாரதியான மாதலி ஸமயம் அறிந்து ரதம் கொண்டு வந்த செயலைக்கண்டு “ஸாரதியென்பவன் இத்தகையனாயிருக்க வேண்டும்” என்று புகழ்ந்து யுத்தத்தில் சிரித்துக் கொண்டே ஜ்வலிக்கின்ற சூலத்தினால் மாதலியை அடித்தான். மாதலி, சூலத்தின் அடியாலுண்டான வருத்தம் பொறுக்க முடியாதிருப்பினும், தைர்யத்துடன் பொறுத்திருந்தான். இந்திரன் பெருங்கோபமுற்று வஜ்ராயுதத்தினால் ஜம்பனுடைய தலையை அறுத்தான். அந்த ஜம்பனுடைய ஜ்ஞாதிகளான (பங்காளிகளான) நமுசி, பலன், பாகன் என்னும் மூன்று அஸுரர்களும் நாரதர் மூலமாய் ஜம்பன் மரணம் அடைந்தானென்று கேள்விப்பட்டு விரைந்து, யுத்த பூமிக்கு வந்து சேர்ந்தார்கள்.

அவர்கள், கொடிய உரைகளால் இந்திரனை அவமதித்து, மேகங்கள் பர்வதத்தின் (மலைகளின்) மேல் ஜலதாரைகளைப் (நீர் பெருக்கைப்) பெய்வது போல, இந்த்ரனுடைய மர்மஸ்தானங்களில் (உயிர் நிலை இடங்களில்) பாணங்களைப் பெய்தார்கள். அவர்களில் பாணங்களை மிகவும் சீக்ரமாகத் தொடுத்து விடும் திறமையுடைய பலன், யுத்தத்தில் இந்த்ரனுடைய ஆயிரம் குதிரைகளையும் இந்த்ரனையும் அத்தனை பாணங்களால் ஒரே தடவையில் அடித்தான் பாகாஸுரன் இறுநூறு பாணங்களை ஒரே தடவையில் எடுத்துத் தொடுத்து, விடுத்து, மாதலியையும், ரதத்தையும், தனித்தனியே ஒவ்வொரு அவயவத்தையும் (உடலின் அங்கத்தையும்) விடாமல் அடித்தான். ரதத்திலாவது, மாதலியின் சரீரத்திலாவது, ஓரிடத்திலும்கூடப் பாணம் பொத்தாத (பிளக்காத) இடமேயில்லை. அவன் ஒரே தடவையில் பாணங்களை எடுத்துத் தொடுத்து விடுத்ததும், ஒரு அவயவமும் (அங்கமும்) தவறாமல் பாணங்களால் அடித்ததும் காண்போர்க்கு மிக்க அற்புதமாயிருந்தது. 

நமுசி, ஸ்வர்ணமயமான பிடிகளையுடைய பதினைந்து பெரிய பாணங்களால் இந்த்ரனை அடித்து யுத்தத்தில் நீர்கொண்ட மேகம்போலக் கர்ஜனை செய்தான். அப்பால் அந்த அஸுரர்கள் எல்லோரும் வர்ஷாகாலத்து ஸூர்யனை மேகங்கள் மறைப்பது போல, ரதத்தோடும் ஸாரதியோடும் கூடின இந்த்ரனை நாற்புறத்திலும் பாணங்களால் மறைத்தார்கள். அப்பொழுது அவ்விந்த்ரனைத் தொடர்ந்த தேவக்கூட்டங்களெல்லாம், அவனைக் காணாமல் மனம் தழதழத்து, நாயகனற்று (தலைவன் இல்லாமல்) ஸமுத்ரத்தினிடையில் ஓடம் உடைந்து பிரிந்து வருந்துகிற வர்த்தகர்கள் போல முறையிட்டார்கள். 

பிறகு தேவேந்திரன் பாணங்களின் பிடிகளாகிற கூட்டினின்று குதிரை, தேர், த்வஜம், ஸாரதி இவற்றுடன் வெளிப்பட்டு விடியற்காலத்து ஸூர்யன் போலத் தன்னொளியினால் திசைகளையும், ஆகாயத்தையும், பூமியையும் ப்ரகாசிக்கச் செய்து கொண்டு விளங்கினான். அந்த வஜ்ரபாணி (வஜ்ர ஆயுதத்தைக் கையில் உடையவன்) தன் ஸைன்யம் (படை) அஸுரர்களின் பாணங்களால் வருந்துவதைக் கண்டு கோபங்கொண்டு, சத்ருக்களைக் கொல்ல விரும்பி, வஜ்ராயுதத்தை ஏந்தினான். அவன் பலன், பாகன் இவர்களின் தலைகளை அவர்களுடைய பந்துக்கள் பார்த்துக் கொண்டிருக்கையில் அவர்களுக்குப் பெரும் பயத்தை விளைத்துக்கொண்டு எட்டு நுனிகளையுடைய வஜ்ராயுதத்தினாலேயே அறுத்தான். 

நமுசி, அவர்கள் மாண்டதைக் கண்டு, சோகம், பொறாமை, கோபம் இவற்றுடன் இந்த்ரனைக் கொல்ல விரும்பிப் பெருமுயற்சி கொண்டான். எக்கினால் இயற்றப்பட்டதும் பொன்னலங்காரம் செய்து சிறுமணிகள் கட்டப் பெற்றதுமாகிய சூலத்தையெடுத்துக் கோபாவேசத்துடன் இந்த்ரன் மேல் எதிர்த்தோடி மாண்டாயென்று மொழிந்து, சூலத்தைச் சுழற்றி ஸிம்ஹம்போலக் கர்ஜனை செய்துகொண்டே அதைத் தேவேந்த்ரன்மேல் ப்ரயோகித்தான். தேவேந்திரனும், ஆகாயத்தில் பெருங்கொள்ளி போல வருகின்ற அச்சூலத்தைப் பாணங்களால் ஆயிரம் துணுக்கைகளாக அறுத்துக் கோபத்துடன் அந்த நமுசியைக் கழுத்தில் வஜ்ராயுதத்தினால் நாற்புறத்திலும் பிளந்து, அவன் தலையை அறுக்கத் தொடங்கினான். இந்த்ரனால் பலமுள்ளவளவும் ப்ரயோகிக்கப்பட்ட மிக்க உறுதியையுடைய அவ்வஜ்ராயுதம் அந்த நமுசியின் கழுத்துத் தோலையுங்கூட அறுக்க வல்லதாகவில்லை. மஹாவீர்யமுடைய வ்ருத்ராஸுரனைக் கொன்ற வஜ்ராயுதம், நமுசியின் கழுத்துத் தோலால் திரஸ்கரிக்கப்பட்டது (அவமதிக்கப்பட்டது) என்பது மிகவும் ஆச்சர்யமாயிருந்தது. வஜ்ராயுதமும் தடைபட்டபடியால் சத்ருவாகிய அந்த நமுசியிடத்தினின்று தேவேந்திரன் பயந்தான்.

அவன், “எங்கும் தடைபடாத வஜ்ராயுதம் இப்பொழுது தடைபட்டதே. இது தெய்வாதீனமாய் நேர்ந்ததோ? அல்லது லோக விமோஹனார்த்தமாக (உலகத்தை மயக்குவதற்காக) நேர்ந்ததோ? முன்பு பெரிய பர்வதங்கள் (மலைகள்) இறகுகளுடன் பறந்து வந்து பூமியில் ஆங்காங்கு இறங்கிப் பாரங்களால் ப்ரஜைகளைப் பாழ்செய்கையில், அவற்றின் இறகுகளை இந்த வஜ்ராயுதத்தினால்தான் நான் சேதித்தேன் (வெட்டினேன்). மற்றும் த்வஷ்டாவின் தவப்பெருக்கே (தவத்தின் கூட்டம்) ஒரு வடிவங்கொண்டு வந்ததோ என்னும்படி மஹாவீர்யத்துடன் பிறந்த வ்ருத்ராஸுரனை இந்த வஜ்ராயுதத்தினால் கொன்றேன். மற்றும், மற்ற ஆயுதங்களால் எவ்வளவு அடிக்கினும் தோலும்கூட அழியப்பெறாத மஹா பலிஷ்டர்களான பலி, ஜம்பன், பலன் முதலிய அஸுரர்களும் இந்த வஜ்ராயுதத்தினால் இப்பொழுது அடியுண்டு மாண்டார்கள். 

அப்படிப்பட்ட இந்த வஜ்ராயுதம், அத்தகைய நானே ப்ரயோகித்தும் அற்பனான (தாழ்ந்தவனான) இந்த அஸுரனிடத்தில் தடைபட்டது. ததீசி மஹர்ஷியின் ப்ரஹ்ம தேஜோமயமான இவ்வஜ்ராயுதம், இப்பொழுது நிஷ்காரணமாக (காரணம் இன்றி) வெறுந்தடி போலாய் விட்டது. இனி இவ்வஜ்ரத்தை நான் எடுக்கமாட்டேன்” என்று மனவருத்தப்பட்டுக் கொண்டிருக்கையில், அசரீரி வாக்கு இந்திரனைக் குறித்து இவ்வஸுரன் “உலர்ந்த (காய்ந்த) பொருட்களாலாவது நனைந்த பொருட்களாலாவது வதிக்கத் தகுந்தவனல்லன். நனைந்தவைகளாலும், உலர்ந்தவைகளாலும் உனக்கு மரணம் இல்லையென்று இவனுக்கு நான் வரம் கொடுத்துவிட்டேன். தேவேந்தரனே! ஆகையால் இந்தச் சத்ருவை வதிப்பதற்கு நீ வேறு உபாயத்தை ஆலோசிக்க வேண்டும்.” என்று மொழிந்தது. 

இவ்வாறு கண்ணுக்குப் புலப்படாது மொழிந்த தெய்வமொழியைக் கேட்டு இந்த்ரன் மனவூக்கமுற்று உலர்ந்ததும் நனைந்ததுமாகாமல் இருவகையிலும் உட்பட்ட வஸ்து எதுவாயிருக்கலாமென்று தனக்குள் சிந்தித்து, அந்த இருவகைப்பட்ட வஸ்து நுரை என்று நிச்சயித்தான். பிறகு உலர்ந்ததும், நனைந்ததுமாகாமல் இருவகைப்பட்டதாகிய நுரையைக் கொண்டு வஜ்ராயுதத்தின்மேல் பூசி, அவ்வஜ்ராயுதத்தினால் நமுசியின் தலையை அறுத்தான். ஸமர்த்தனாகிய அந்தத் தேவேந்திரனை முனிவர்கள் கூட்டங்கூட்டமாய் நின்று துதித்தார்கள். புஷ்பங்களை அவன்மேல் இறைத்தார்கள். விஸ்வாவஸு, பராவஸு என்னும் கந்தர்வ ச்ரேஷ்டர்கள் கானம் செய்தார்கள். தெய்வ, துந்துபி வாத்யங்கள் முழங்கின. நாட்யப் பெண்கள் ஸந்தோஷமுற்று நாட்யமாடினார்கள். இந்த்ரனைப் போலவே வாயு, அக்னி, வருணன் முதலிய மற்றவர்களும் ஸிம்ஹங்கள், அற்ப மிருகங்களை வதிப்பது போலத் தங்களை எதிர்த்த சத்ருக்களை அஸ்த்ர ஸமூஹங்களால் (ஆயுத கூட்டங்களால்) அடித்துக் கொன்றார்கள். இவ்வாறு தேவதைகள் அஸுரர்களை வதித்துக் கொண்டிருக்கையில், ப்ரஹ்மதேவன் அஸுரர்கள் அழிந்து போவதைக் கண்டு, இனி அஸுரர்கள் அடியோடு முடிந்து போவார்களென்று நினைத்து, நாரத மஹர்ஷியை அனுப்ப, அவர் வந்து இந்த்ரன் முதலிய தேவதைகளைத் தடுத்தார்.

நாரதர் சொல்லுகிறார்:- ஸ்ரீமந்நாராயணனுடைய புஜங்களைப் பற்றியிருக்கிற நீங்கள், அம்ருதம் பெற்றீர்கள். அப்பொழுது ஸ்ரீமஹாலக்ஷ்மி உங்களுக்கு மூன்று லோகங்களின் ஐச்வர்யத்தைக் கொடுத்து வளர்த்தாள். ஆகையால், நீங்கள் இப்பொழுது கலஹத்தினின்றும் மீளுவீர்களாக.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- இந்திரன் முதலிய தேவர்கள் அனைவரும் நாரதமுனியின் வசனத்தைக் கேட்டு அதைக் கௌரவித்து, கோபத்தையும், அதனால் ஏற்பட்ட யுத்த ப்ரயத்னத்தையும் (முயற்சியையும்) நிறுத்தி அனுசரர்களால் (அவர்களைத் தொடர்ந்தவர்களால்) பாடப் பெற்று ஸ்வர்க்கலோகம் போய்ச் சோந்தார்கள். அப்பால் அந்த யுத்தத்தில் அடிபட்டு மிகுந்த தானவர்களும், தைத்யர்களுமாகிய அஸுரர்கள் அனைவரும் வஜ்ராயுதத்தினால் அடியுண்டு பூமியில் விழுந்திருக்கிற பலியை நாரதருடைய அனுமதியின் மேல் எடுத்துக்கொண்டு அஸ்தமய பர்வதத்திற்குப் போனார்கள். அங்குச் சுக்ராசார்யன், அவயவங்கள் அழியாமல் தலையோடிருக்கிற அஸுரர்களை ம்ருத ஸஞ்சீவினி என்கிற தன் மந்தரவித்யையினால் பிழைப்பித்தான். பலியும் அந்தச் சுக்ராசார்யனுடைய ஸ்பர்சத்தினால் (தொடுதலால்) இந்த்ரியங்களும் நினைவும் மீண்டு வரப்பெற்று யுத்தத்தில் தான் தோல்வியடைந்தானாயினும், உலகத்திலுள்ள ப்ராணிகள் அனைவரும் ப்ரக்ருதி ஸம்பந்தமுடையவர்கள் ஆகையால், அவர்களுக்கு ஜய (வெற்றி), அபஜயங்களும் (தோல்வி), ஸுகதுக்கங்களும் கர்மாதீனமாய் விளைகின்றனவென்று உலகத்தின் உண்மையை ஆராய்ந்தறிந்தவனாகையால் அதைப்பற்றி வருந்தவில்லை. 

பதினொன்றாவது அத்தியாயம் முற்றிற்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக