ஶ்ரீமத் பாகவதம் - 180

 எட்டாவது ஸ்கந்தம் - பன்னிரண்டாவது அத்தியாயம்

(மோஹினியின் அழகைக் கண்டு ருத்ரன் மதி மயங்கின வ்ருத்தாந்தத்தைக் கூறுதல்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- பகவான் பெண்ணுருவம் கொண்டு அஸுரர்களை மதி மயக்கி, தேவதைகளுக்கு அம்ருதபானம் செய்வித்தானென்ற வ்ருத்தாந்தத்தை (கதையை) ருத்ரன் கேள்விப்பட்டு, பார்வதியுடன் வ்ருஷபவாஹனத்தின் மேலேறி ஸமஸ்த பூதகணங்களும் தொடர்ந்து வரப்பெற்று, பகவானுடைய பெண்ணுருவத்தைப் பார்க்க விரும்பி, அம்மதுசூதனன் இருக்கின்ற இடத்திற்கு வந்தான். அந்த ருத்திரன் உமையும் தானுமாகப் பகவானால் ஆதரவுடன் பூஜிக்கப்பெற்று, ஸுகமாக உட்கார்ந்து தானும் பகவானைப் பூஜித்துப் புன்னகையுடன் அவனைக் குறித்து இவ்வாறு மொழிந்தான்.

ருத்ரன் சொல்லுகிறான்:- தேவர்களுக்கும் தேவனே! உலகமெங்கும் நிறைந்திருப்பவனே! சேதனாசேதன ரூபமான ஜகத்திற்குள் புகுந்து நியமிப்பவனே! ஜகத்தெல்லாம் தானேயென்னும்படி அதைச் சரீரமாகவுடையவனே! சேதனாசேதன ரூபமான ஸமஸ்த வஸ்துக்களுக்கும் நீயே அந்தராத்மாவாய் இருக்கின்றாய். நீயே ஸகல ஜகத்காரணன் (எல்லா உலகக்கும் காரணம்). காரண அவஸ்தையில் (ஸ்ருஷ்டிப்பதற்கு முன்பு) நாமரூப விபாகங்களுக்கிடமின்றி (பெயர், உருவம் என்கிற வேறுபாடுகள் இன்றி) ஸூக்ஷ்மமான (நுட்பமாய் இருந்த) சேதனாசேதனங்களை நியமிப்பவன் நீயே. ஸூக்ஷ்ம  (பெயர், உருவம் என்கிற வேறுபாடுகள் இன்றி நுட்பமாயிருந்த) சேதனாசேதனங்களைச் சரீரமாகவுடைய உன்னிடத்தினின்றே இந்த ப்ரபஞ்சமெல்லாம் உண்டாயிற்று. இது உன்னிடத்திலேயே கடைசியில் மறைகின்றது. இதனுடைய ஸ்திதியும் (நீடிப்பும்) உன்னால் தான் நடக்கின்றது. இந்த ப்ரபஞ்சமெல்லாம் நீயே. நீ இந்த ப்ரபஞ்சத்தைக் காட்டிலும் இயற்கையில் விலக்ஷணனாயிருப்பவன் (வேறாய் இருப்பவன்). நீ தனக்குத்தானே தோற்றும் தன்மையுள்ள ஆத்ம வஸ்துக்களையும் (ஜீவாத்மாக்களையும்), பிறர்க்கே தோற்றும் தன்மையுள்ள அசேதனங்களையும் (அறிவற்ற ஜடப்பொருட்களையும்), சரீரமாகவுடையவன். ஆயினும், அந்தச் சேதனாசேதனங்களின் விகாரங்கள் (மாறுபாடுகள்) தன் மேல் தீண்டப்பெறாதவன். ப்ரபஞ்சத்திற்குள்ள ஸ்ருஷ்டி (படைப்பு), ஸ்திதி (காத்தல்), ஸம்ஹாரங்கள் (அழித்தல்) உனக்குக் கிடையாது. நீ ஸ்வரூபத்தினாலும் (இயற்கையான தன்மையினாலும்), ஸ்வபாவத்தினாலும் (குணங்களாலும்) விகாரமற்றவன் (மாறுபாடு அற்றவன்). என்றும் ஸங்கோசமின்றி (குறைவின்றி) அழியாததும் அளவற்றதுமான ஜ்ஞானமுடையவன்; அத்தகைய ஜ்ஞானத்தையே வடிவமாகவுடையவன். ஸ்வரூபத்தினாலும் (இயற்கையான தன்மையினாலும்), ஸ்வபாவத்தினாலும் (குணங்களாலும்) அளவற்றவனாகையால், நீயே பரப்ரஹ்மமென்று வேதங்களில் கூறப்படுகின்றனை. ஸத்வ, ரஜஸ், தமஸ் என்கிற மூன்று குணங்களை உடைய ப்ரக்ருதி ஸம்பந்தமாகிற ஸம்ஸாரத்திலிருந்து விடுபடுகையாகிற மோக்ஷமென்னும் நன்மையை விரும்புகிறவர்கள், இஹலோக ஸுகங்களிலும், பரலோக ஸுகங்களிலும் மனப்பற்றைத் துறந்து வேறு ப்ரயோஜனத்தை விரும்பாமல் உன் ஸ்வரூப, குண, விபூதிகளை மனனம் (மனதில் சிந்தனை) செய்து கொண்டு ஜகத்காரணனான உன் பாதாரவிந்தங்களை உபாஸிக்கிறார்கள். எங்கும் நிறைந்திருப்பதும் ஸ்வரூபத்தினாலும் (இயற்கையான தன்மையினாலும்), ஸ்வபாவத்தினாலும் (குணங்களாலும்), விகாரமற்றதும் (மறுபாடு அற்றதும்) சிறுமை, பெருமை, குறுமை முதலிய குணங்களற்றதும் சோகமற்றிருக்கை முதலிய எட்டுக் குணங்கள் அமைந்ததும், கேவல ஜ்ஞான ஆனந்த ஸ்வரூபமுடையதும் (அறிவும், ஆனந்தமுமே தனது இயற்கைத் தன்மையாய் உடையதும்) விகாரங்களற்றதும் (மாறுபாடு அற்றதும்), எல்லாவற்றிற்கும் காரணமும் எல்லாம் தனக்குச் சரீரமுமாகையால் ப்ரக்ருதி, புருஷ ஸ்வரூபமான ஸமஸ்த ப்ரபஞ்சத்தைக் காட்டிலும் வேறாகாததும், தனக்குச் சரீரமான ப்ரபஞ்சத்தைக் காட்டிலும் விலக்ஷணமாயிருப்பதும் (வேறாய் இருப்பதும்), ப்ரபஞ்சத்தின் ஸ்ருஷ்டி  (படைப்பு), ஸ்திதி (காத்தல்), ஸம்ஹாரங்களுக்குக் (அழித்தல்) காரணமுமாகிய பரப்ரஹ்மம் நீயே. உனக்கு நீயே நியாமகனன்றி (நியமிப்பவன் அன்றி) வேறொரு நியாமகன் (நியமிப்பவன்) எவனுமே இல்லை. 

ப்ரபஞ்சத்தின் ஸ்ருஷ்டி  (படைப்பு), ஸ்திதி (காத்தல்), ஸம்ஹாரங்கள் (அழித்தல்) இத்தகைய பரமாத்ம ஸ்வரூபத்தையொழிய மற்ற எதனாலும் நிறைவேற மாட்டாவாகையால், இத்தன்மைகளெல்லாம் அமைந்த நீயே, அவற்றை நடத்துகின்றாய் என்பது நிச்சயம். இந்தக் கல்யாண குணங்களெல்லாம் நிரை நிரையாய் (கூட்டம் கூட்டமாய்) அமைந்தவனாயினும், நீ எதிலும் அபேக்ஷையற்றவன் (விருப்பம் அற்றவன்). ஐச்வர்யங்களெல்லாம் நிறைந்தவனாகையால் ப்ரஹ்மதேவன் முதல், பூச்சி, புழு வரையிலுள்ள ஸமஸ்தமான ஜகத்தையும் த்ருணமாக (புல்லாக) நினைத்துப் பேசாதிருப்பவன். கார்யதசையை (ஸ்ருஷ்டி நிலையை) அடைந்து நாம ரூப விபாகங்களுக்கிடமாகிச் (பெயர், உருவங்களை உடைய) சேதனாசேதனங்கள் இரண்டும் அடங்கியிருக்கிற இந்த ப்ரபஞ்சத்தைக் காட்டிலும், இதற்குக் காரணனான நீ வேறுபட்டவனன்று. கார்யகாரணங்கள் இரண்டும் ஒன்றேயல்லவா? “அப்படியானால் அவையிரண்டும் ஒன்றோடொன்று பேதப்படாது (வேறுபடாது) இருக்க வேண்டுமே. சேதனாசேதன ரூபமான ப்ரபஞ்சத்தைக் காட்டிலும் விலக்ஷணனான (வேறானவனான) எனக்கு, அதைக்காட்டிலும் வேறாகாமை எவ்வாறு பெருந்தும்?” என்றால், நீ காரணதசையில் (ஸ்ருஷ்டிக்கு முன்பு) நாமரூப விபாகத்திற்கிடமல்லாத (பெயர், உருவம் என்கிற வேறுபாடுகள் இன்றி) ஸூக்ஷ்ம (நுட்பமான) சேதனாசேதனங்களைச் சரீரமாகக் கொண்டு ஒருவனாயிருந்தாய். உன் கார்யமான ஜகத்து, நாமரூபங்களுக்கிடமாகி (பெயர், உருவம் உடைத்தாய்) ஸ்தூலதசையை (நாம் பார்க்கும்படியான நிலையை) அடைந்திருக்கையால் பேதப்பட்டிருக்கிறதேயன்றி (மாறுபட்டிருக்கிறதே அன்றி), மற்றபடி பேதமில்லை. ஆகையால் கார்ய காரணங்களிரண்டுக்கும் வேறுபாடில்லை. ஸ்வர்ணம் (தங்கம்), கார்யகாரணாவஸ்தைகளிரண்டிலும் (தங்கம் ஆபரணமாக ஆவதற்கு முன்பும், பின்பும்) ஒன்றேயல்லவா? அவ்வாறே கார்யமான ஜகத்திற்கும் காரணமான பரப்ரஹ்மமென்று கூறப்படுகிற உனக்கும் வஸ்துபேதமில்லை (வேறுபாடு இல்லை).

காரணதசையில் (ஸ்ருஷ்டிக்கு முன்பு), உன் சரீரமான சேதனாசேதனங்கள் ஸூக்ஷ்மமாயிருந்தன (பெயர், உருவம் இன்றி நுட்பமாய் இருந்தன). கார்யதசையில் (ஸ்ருஷ்டியில்), அவை ஸ்தூலமாயிருக்கின்றன (பெயர், உருவங்களோடு நாம் பார்க்கும்படியாய் இருக்கின்றன). சிலர் ஜகத்தை உன்னைக் காட்டிலும் வேறுபட்டதென்று நினைக்கிறார்கள். அது, அவர்களுடைய அறிவின்மையின் கார்யமேயன்றி வேறன்று. ஸத்வாதி குணங்களின் பரிணாமமான ப்ரபஞ்சம், ப்ரக்ருதி, புருஷர்களைக் காட்டிலும் விலக்ஷணஸ்வரூபனான உனக்குச் சரீரமாயிருக்கின்றது. சரீரமும் ஆத்மாவும் வெவ்வேறாயினும் அந்தச் சரீராத்ம பாவரூபமான ஸம்பந்தத்தைப் பற்றி அபேதமும் (வேற்றுமையின்மை) உண்டாகையால், உன் சரீரமான ஜகத்திற்கும் உனக்கும் பேதமேயன்றி, அபேதமில்லை (ஒன்றல்ல) என்பது சேராது. ஜகத்து உனக்குச் சரீரமாயிருப்பதும், நீ அதற்கு அந்தராத்மாவாயிருப்பதும் ச்ருதி, ஸ்ம்ருதி, இதிஹாஸங்களால் ஏற்பட்ட விஷயமாகையால் அதை அழிக்கமுடியாது. வேதாந்தங்களை ஓதியுணர்ந்த வேதாந்திகள் உன்னை ப்ரஹ்மமென்றும், மீமாம்சகர்கள் உன்னை தர்மமென்றும், ஈச்வரனை ஒத்துக்கொண்ட சாங்க்யர்கள் ப்ரக்ருதி புருஷர்களைக்காட்டிலும் விலக்ஷணனாகையால் (வேறுபட்டவனாகையால்) பரேசனென்று (பர ஈசன்) கூறப்படுகிறானென்றும், பாஞ்சராத்ர ஆகம வல்லுனர்கள் விமலா, உத்கர்ஷினி, ஜ்ஞான, க்ரியா, யோக, ப்ரஹ்வீ, சத்ய, ஈசான, அனுக்ரஹ என்கிற ஒன்பது சக்திகள் அமைந்த இணையெதிரில்லாத பரதத்வம் என்றும், அஷ்டாங்க யோக மார்க்கத்தினர் உன்னை நிர்விகாரனென்றும் ஸ்வதந்த்ரனென்றும் மஹாபுருஷனென்றும் சொல்லுகிறார்கள். 

ருத்ரனென்று பெயர் பெற்ற நான், நீண்ட வாழ்நாளுடைய ப்ரஹ்மதேவன், மரீசி முதலிய ரிஷிகள் ஆகிய ப்ராணிவர்க்கத்தில் சேர்ந்த நாங்கள் உன்னுடைய மாயையினால் ஜ்ஞான ஸங்கோசத்தை (குறைவை) அடைந்திருக்கிறோம். ஆகையால் உன்னால் படைக்கப்பட்ட இந்த ப்ரபஞ்சத்தையே உள்ளபடி அறியவல்லரல்லோம். இனி உன்னுடைய ஸ்வரூபத்தையும் அளவற்றவைகளான உனது ரூப, குண விபூதிகளையும் எவ்வாறு அறிவோம்? 

நாங்களே அறிய மாட்டோமாயின், ஸர்வகாலமும் ஜ்ஞான ஸங்கோசத்திற்கு (குறைவிற்கு) இடமான அமங்கள (சுபம் அல்லாத) கார்யங்களில் ஊக்கமுற்ற தைத்யர், மனுஷ்யர் முதலிய மற்ற ப்ராணிகள் அறியமாட்டார்களென்பதைப் பற்றிச் சொல்லவேண்டுமோ? அப்படிப்பட்ட ஸ்வரூப (இயற்கைத்  தன்மை), ரூபாதிகளை (திவ்ய மங்கள விக்ரஹங்களை, திருமேனிகளை) உடையவனும், ஜ்ஞான ஸ்வரூபனுமாகிய (அறிவே வடிவானவனுமான) நீ, உன்னால் படைக்கப்பட்ட இந்த ப்ரபஞ்சம் முழுவதிலும் அந்தராத்மாவாய்ப் புகுந்து, காற்று ஸமஸ்த சேதனாசேதனங்களிலும் ஆகாசத்திலும் நிறைந்திருப்பது போல நிறைந்து, அவற்றையெல்லாம் ஸர்வகாலமும் அறிகின்றாய். மற்றும், இந்த ப்ரபஞ்சத்தினுடைய ஸ்ருஷ்டி (படைப்பு), ஸ்திதி (காத்தல்), ஸம்ஹாரங்களையும் (அழித்தல்) ப்ராணிகளின் சேஷ்டைகளையும் (செயல்களையும்) ஜகத்தின் ஸம்ஸார பந்தத்தையும் மோக்ஷத்தையும் நீயொருவனே அறிகின்றாய். ஸர்வஜ்ஞத்வம் (எல்லாவற்றையும் அறிதல்) முதலிய கல்யாண குணங்களால் லீலா ரஸங்களை அனுபவிக்கிற உன்னுடைய வராஹாதி அவதாரங்கள் பலவற்றையும் பார்த்திருக்கிறேன். நீ இப்பொழுது ஏற்றுக்கொண்ட பெண்ணுருவத்தை நான் பார்க்கவில்லை. ஆகையால் அவ்வுருவத்தை நான் இப்பொழுது பார்க்க விரும்புகிறேன். எந்தப் பெண்ணுருவத்தைக் கொண்டு தைத்யர்களை (திதியின் பிள்ளைகளான அஸுரர்களை) மதி (புத்தி) மயக்கி, தேவர்களுக்கு அம்ருதபானம் செய்வித்தனையோ, அப்படிப்பட்ட பெண்ணுருவத்தைப் பார்க்க நாங்கள் வந்திருக்கிறோம். அதைப் பார்க்க வேண்டுமென்று நாங்கள் ஆசைப்படுகிறோம்.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- இவ்வாறு சூலபாணியாகிய ருத்ரனால் வேண்டப்பெற்ற பகவான், சிரித்து ருத்ரனைப் பார்த்துக் கருத்து அறிய முடியாமல் கம்பீரமாயிருக்குமாறு இவ்வாறு மொழிந்தான்.

ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:- அம்ருத கலசத்தை அஸுரர்கள் பறித்துக் கொண்டு போகையில், தேவதைகளின் கார்யத்தை நிறைவேற்ற முயன்று அதற்குரிய உபாயத்தை ஆலோசித்து, காமுகர்களால் (காதல் ஆசையால் பீடிக்கப்பட்டவர்களால்) வெகுமதிக்கத்தக்கதும், காம விகாரத்தை விளைவிப்பதுமாகிய அற்புதமான பெண்ணுருவத்தை அஸுரர்களின் குதூஹலத்திற்காக (மகிழ்ச்சிக்காக) ஏற்றுக் கொண்டேன். தேவச்ரேஷ்டனே! அதை நீ பார்க்கவேண்டுமென்று விரும்புகின்றாயாகையால் உனக்குக் காண்பிக்கிறேன்.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- பகவான் இவ்வாறு மொழிந்து, அவ்விடத்திலேயே மறைந்தான். ருத்ரனோவென்றால், பார்வதியும் தானுமாய் நாற்புறத்திலும் உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தான். அப்பால் ருத்ரன் அவ்விடத்தில் விசித்ரமான புஷ்பங்களும் சிவந்தழகிய தளிர்களும் அமைந்த வ்ருக்ஷங்கள் (மரங்கள்) நிரம்பின உத்யானவனத்தில் பருத்து அழகிய நிதம்பத்தின் (முதுகுக்கும் இடுப்பிற்கும் கீழ் உள்ள உடலின் பகுதி) மேல் வெண்பட்டு வஸ்த்ரம் தரித்து, அதன்மேல் அரைநாண் மாலை அணிந்து பந்தடித்து விளையாடிக்கொண்டிருக்கிற ஒரு பெண்மணியைக் கண்டான். அவள் உயரக்கிளம்புகிற பந்தை அடிக்கடி அடித்து விளையாடும் பொழுது, நிமிர்வதும் வணங்குவதுமாய் இருக்கையால், அசைகின்ற கொங்கைகளின் பாரத்தினாலும் அவற்றின் மேல் அணிந்த ஹாரங்களின் (மாலை, செயின்) பாரத்தினாலும் நுண்ணிய இடை முறிபவள் போன்று தளிர்போன்ற பாதங்களால் இங்குமங்கும் உலாவிக்கொண்டிருந்தாள். நாற்றிசைகளிலும் கிளம்பிச் சுழன்று அசைந்து வருகிற பந்தைப் பார்த்து அடிக்கடி அடித்து விளையாடிக் கொண்டிருக்கையால், நீண்டு சஞ்சலித்துக்கொண்டிருக்கிற அவளுடைய கண்களின் கருவிழிகள் சோர்வுற்றிருந்தன. காதுகளில் அணிந்த அழகிய குண்டலங்களால் விளங்குகின்ற கபோலங்களாலும் (கன்னங்களாலும்) கறுத்த முன்னெற்றி மயிர்களாலும் அவளுடைய முகம் மிகவும் அலங்காரமுற்றிருந்தது. அவள் அரையில் நழுவுகின்ற வெண்பட்டையும், தலையில் அவிழ்கின்ற மயிர்ச்சொருக்கையும், அழகிய இடக்கையினால் முடிப்பதும், அத்தகைய மற்ற வலக்கையினால் பந்தை அடிப்பதுமாயிருந்து, தன் கபடச் (ஏமாற்று, சூது) செயலால் ஜகத்தையெல்லாம் மதிமயங்கச் செய்து கொண்டிருந்தாள். ருத்ரன், இவ்வாறு பந்தடிக்கும் விளையாட்டினால் சிறிது வெட்கமுற்று அதனால் புன்னகை உள்ளடங்கப்பெற்ற அப்பெண்மணியின் கடைக் கண்ணோக்கத்தினால் வஞ்சிக்கப்பட்டு, ஸர்வாங்கஸுந்தரியான அவளைத் தான் பார்ப்பதனாலும் அவள் தன்னைத் திரும்பிப் பார்ப்பதனாலும் மனம் தழதழக்கப் பெற்று, தன்னையும் அருகிலிருக்கின்ற பார்வதியையும், ப்ருத்யர்களான (சேவகர்களான) ப்ரதமகணங்களையும் அறியப்பெறாதிருந்தான். 

இப்படியிருக்க, அவள் அடித்துக்கொண்டிருக்கும் பந்து அவள் கையினின்று தவறி, வெகுதூரம் சென்றது. அப்பொழுது அந்தப் பந்தைத் தொடர்ந்து போன்ற அப்பெண்மணி, அரையில் உடுத்திருந்த மெல்லியதான ஆடையை அரைநாண்மாலையுடன் ருத்ரன் பார்த்துக் கொண்டிருக்கையில் காற்று பறித்துக்கொண்டு போயிற்று. இவ்வாறு காற்றினால் அரையாடை பறியுண்டவளும் அழகிய கடைக் கண்களுடையவளும் பார்க்கப் பதினாயிரங்கண்கள் வேண்டும்படி பேரழகியும் மனத்திற்கினியளுமாகிய அப்பெண்மணியைக் கண்டு, வெட்கமுற்றுக் கடைக்கண்ணேக்கங்களால் தன்னை நோக்குகின்ற அவளிடத்தில் மனவிருப்பங்கொண்டான். 

அம்மஹாதேவன் அம்மாதரசியின் கடைக்கண்ணோக்கத்தினால் விவேகம் பறியுண்டு, மன்மத விகாரம் தலைக்கொண்டு (காதல் ஆசை மேலிட்டு), வெட்கம் பறந்தோடப்பெற்றுப் பார்வதி பார்த்துக்கொண்டிருப்பினும் அவளருகே சென்றான். அரையில் ஆடையின்றியிருக்கிற அப்பெண்மணி, அவ்வாறு ருத்ரன் அருகே வரக்கண்டு மிகவும் வெட்கமுற்று, வ்ருக்ஷங்களில் மறைந்து சிரித்து, ஓரிடத்தில் நிலைகொள்ளாதிருந்தாள். ருத்ரன், காமனுக்கு உட்பட்டு இந்த்ரியங்களெல்லாம் கலங்கப்பெற்று யானைக் கூட்டங்களில் தலைமையுள்ள ஆண் யானை, காமவிகாரத்தினால் (காதல் ஆசை மேலிட்டால்) பெண்யானையைப் பின்பற்றுவதுபோல, அவ்வாறு மரங்களில் மறைவதும் வெளிப்படுவதுமாகிக் கடைக்கண்களால் மனத்தைப் பறிக்கின்ற அப்பெண்மணியைப் பின் தொடர்ந்து சென்றான். அவன் வெகுவேகமாகச் சென்று அவள் விரும்பாதிருப்பினும், அவளைத் தலைமயிர்ச் சொருக்கில் பிடித்துத் தன்னருகே இழுத்துப் புஜங்களால் அணைத்துக் கொண்டான். பருத்த இடையின் பின்புறமுடையவளும் பகவானுடைய மாயையினால் ஏற்பட்டவளுமாகிய அப்பெண்மணி, ஆண்யானையினால் அணைக்கப்பட்ட பெண்யானை போல் ருத்ரனால் அணைக்கப்பெற்றுத் தலைமயிர்கள் கலைந்து இப்படியப்படி அசைந்து மெல்ல மெல்ல அந்தத் தேவதேவனுடைய மார்பினின்றும் தன்னைப் பலாத்காரமாக விடுவித்துக்கொண்டு ஓடிப்போனாள். 

அந்த ருத்ரன் சத்ருவாகிய மன்மதனால் ஜயிக்கப்பட்டவன் போன்று ஆச்சர்யமான செயல்களையுடைய ஸ்ரீமஹாவிஷ்ணுவின் மாயையினால் ஏற்பட்ட அப்பெண்மணியின் பதவியை மீளவும் தொடர்ந்து சென்றான். வீணாகாத வீர்யமுடைய அத்தேவன், பெண்யானையைத் தொடர்ந்தோடுகிற மத்த கஜம் (மதம் கொண்ட யானை) போன்று அப்பெண்மணியைத் தொடர்ந்தோடும் பொழுது, அவனுடைய வீர்யம் வெளியாயிற்று. மஹானுபாவனான அந்த ருத்ரனுடைய வீர்யம் எங்கெங்கு விழுந்ததோ, அவ்விடங்களெல்லாம் பொன், வெள்ளி விளையுமிடங்கள் ஆயின. மற்றும், நதி, குளம், பர்வதம், வனம், உபவனம் முதலிய எவ்வெவ்விடங்களில் அவனுடைய ரேதஸ்ஸு (வீர்யம்) விழுந்ததோ, ஆங்காங்கு அந்த ருத்ரனுடைய ஸாந்நித்யம் (இருப்பு) உண்டாயிற்று. அதனால் அவனை உபாஸிக்கும் ரிஷிகள், அவ்வவ்விடங்களில் வாஸம் செய்யத் தொடங்கினார்கள். இவ்வாறு ரேதஸ்ஸு (வீர்யம்) வெளியாகையில், ருத்ரன் தான் பகவானுடைய மாயையாகிய மடந்தையினால் மதிமயங்கினதை அறிந்தான். 

மன்னவனே! அப்பால் அவன் காம விகாரத்தினின்று (காதல் ஆசையிலிருந்து) திரும்பினான். பிறகு, ஒருவராலும் அறியமுடியாத சேஷ்டைகள் (செயல்கள்) அமைந்தவனும், ஸகல ஜகத்ஸ்வரூபனுமாகிய (அனைத்து உலகு வடிவானவனுமாகிய) பகவானுடைய மஹிமையை அறிந்த ருத்ரன் அப்பெண்ணுருவத்தையும் அதன் சேஷ்டைகளையும் அற்புதமாக நினைத்தான். அனந்தரம் பகவான் தனக்கு அஸாதாரணமான புருஷ உருவத்துடன் தோன்றி, வெட்கமின்றித் தைர்யத்துடனிருக்கிற ருத்ரனைப் பார்த்து மிகவும் ஸந்தோஷமுற்று இவ்வாறு மொழிந்தான்.

பகவான் சொல்லுகிறான்:- ஓ தேவச்ரேஷ்டனே! நீ தெய்வாதீனமாய் ஸ்வயமாகவே காம விகாரத்தினின்று (காதல் ஆசையிலிருந்து) மீண்டு இயற்கையைப் பெற்றாய். ருத்ரனே! ஒருவராலும் கடக்கமுடியாத என் மாயையினால் நீ வெகுதூரம் மதி (புத்தி) மயங்கப் பெற்றாயல்லவா? ஆயினும் அதினின்று நீ ஸ்வயமாகவே மீண்டது அற்புதமே. உன்னைத் தவிர சப்தாதி விஷயங்களில் மனவிருப்பமுற்ற மற்ற எவன்தான் என் மாயையைத் தாண்டிப்போக வல்லனாவான்? என் மாயை, இந்த்ரியங்களை வெல்ல முடியாத மூடர்களால் வருந்தியும் கடக்கமுடியாத பற்பல தோஷங்களை விளக்கும். ஆகையால் ஜிதேந்திரியர்களைத் (இந்த்ரியங்களை வென்றவர்களைத்) தவிர மற்றவர்களால் அதை வெல்ல முடியாது. இத்தகைய என் மாயை ஸத்வ, ரஜஸ், தமஸ்ஸுக்கள் என்கிற மூன்று குணங்களையே வடிவமாகவுடையது. காலத்தைச் சரீரமாகவுடைய நான், ஸ்ருஷ்டி முதலிய காலங்களுக்கு உரியபடி ரஜஸ்ஸு முதலிய குணங்களின் அம்சத்தை ஏற்றுக்கொண்டு அதில் நிறைந்திருப்பேன். இம்மாயை உன்னை மயங்கச் செய்யாதிருக்குமாறு உனக்கு நான் அருள்புரிகிறேன்.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- இவ்வாறு பகவானால் அருள்புரியப்பெற்ற ருத்ரன், அவனிடம் விடைபெற்றுக் கொண்டு அவனை ப்ரதக்ஷிணம் செய்து நமஸ்கரித்து, ப்ரதம கணங்களுடன் (முதன்மை சேவகர் கூட்டத்துடன்) தன் வாஸஸ்தானமான கைலாஸ பர்வதம் போய்ச் சேர்ந்தான். பரத வம்சாலங்காரனே! பிறகு மஹானுபாவனாகிய ருத்ரன் ரிஷிச்ரேஷ்டர்கள் பலரும் கேட்டுக்கொண்டிருக்கையில், தன் சரீரத்தின் பாதியாகிய பார்வதியைக் குறித்து இவ்வாறு மொழிந்தான்.

ருத்ரன் சொல்லுகிறான்:- பரதேவதையும், கர்மத்தினால் விளையும் பிறவி முதலிய விகாரங்களற்றவனுமாகிய பரமபுருஷனுடைய மாயையின் மஹிமையைக் கண்டாய் அல்லவா? நான் ஸமஸ்த வித்யைகளுக்கும் அதிபதி; எதற்கும் உட்படாதவன். இப்படிப்பட்ட நானும், இம்மாயையினால் மதி (புத்தி) மயங்கப் பெற்றேன். தம்மைத் தாமே அடக்கியாளும் திறமையில்லாத மனுஷ்யர், தைத்யர் முதலிய மற்றவர்கள் இம்மாயையினால் மதி (புத்தி) மயங்குவதைப் பற்றிச் சொல்ல வேண்டுமோ? பல ஆயிரமாண்டுகள் தவம் புரிந்திருந்து, கடைசியில் அந்தத் தவத்தினின்றும் திரும்பியிருக்கின்ற என்னைப் பார்த்து, “நீ உபாஸிக்கும் வஸ்து எது” என்று வினவினாயல்லவா? நான் உபாஸித்த வஸ்து இதோ நேரே புலப்பட்ட இந்தப் புராணபுருஷனே. இவனைக் காலம் தீண்டாது. இவன் காலம் முதலிய ஸமஸ்த வஸ்துக்களையும் ஒரே தடவையில் ஸாக்ஷாத்கரிப்பவன்.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- மன்னவனே! சார்ங்கமென்னும் வில்லை ஏந்தி ஒருவராலும் வெல்லப்படாமல் அஜிதனென்று பெயர்பெற்ற பரமபுருஷனுடைய விக்ரமங்களை (வீரச் செயல்களை) இவ்வாறு உனக்கு மொழிந்தேன். இவன் ஸமுத்ரம் கடையும் பொழுது ஆமையின் உருவம் கொண்டு மந்தரமென்னும் மஹாபர்வதம் முழுகாதபடி அதை முதுகில் தாங்கிக் கொண்டிருந்தான். இந்த ஸமுத்ரம் கடைந்த வ்ருத்தாந்தத்தை அடிக்கடி கீர்த்தனம் செய்பவனும், அதைக் கேட்பவனும் எந்த முயற்சி செய்யினும் அது எக்காலத்திலும், எவ்விடத்திலும் வீணாகாது. பகவான் மேன்மையுடைய ப்ரஹ்மாதி தேவதைகளாலும் புகழத்தகுந்த மேலான புகழுடையவன். அவனுடைய குணங்களைச் சொன்னால், அது ஸம்ஸாரத்தில் விளையக்கூடிய ஆத்யாத்மிகம் முதலிய {ஆத்யாத்மிகம் (சரீரத்திற்கு ஏற்படும் தலைவலி, சளி முதலிய நோய்கள் மற்றும் மன நோய்களான காமம், கோபம், பயம் முதலியன)  ஆதிதெய்விகம் (குளிர், சூடு, மழை முதலியவற்றால் ஏற்படும் துன்பங்கள்), ஆதிபௌதிகம் (ம்ருகம், பறவை, மனிதர் முதலியவற்றால் வரும் துன்பங்கள்) என்று மூன்று வகையான} ஸமஸ்தமான வருத்தங்களையும் போக்கும். பகவான் மாயப்பெண்ணுருவம் கொண்டு அஸுரர்களை மதிமயக்கி வஞ்சித்து ஸமுத்ரம் கடைந்தெடுத்த அம்ருதத்தைத் தன் பக்தர்களான தேவதைகளுக்குப் பானம் செய்வித்தான். இந்த்ரியங்களை வெல்ல முடியாத மூடர்களுக்கு, அவனுடைய பாதாரவிந்தங்கள் எவ்விதத்திலும் எட்ட மாட்டாது. அவன் பக்தியினால் அடையத் தகுந்தவனேயன்றி, மற்ற எதற்கும் விஷயமாக மாட்டான். தன்னைத் தொடரும் ப்ராணிகளின் மனவிருப்பங்களையெல்லாம் நிறைவேற்றிக்கொடுப்பவன். அத்தகைய பரமபுருஷனை நான் நமஸ்கரிக்கின்றேன்.

பன்னிரண்டாவது அத்தியாயம் முற்றிற்று.

கருத்துரையிடுக (0)
புதியது பழையவை