ஶ்ரீமத் பாகவதம் - 181

 எட்டாவது ஸ்கந்தம் – பதிமூன்றாவது அத்தியாயம்

(ஏழாம் மனு முதல் மற்ற மனுக்களைக் கூறுதல்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- இப்பொழுது இருக்கும் மனு ஏழாவது மனு. இவன் விவஸ்வானுடைய புதல்வன்; ராத்ததேவனென்று பெயர்பெற்றவன். இவனுடைய பிள்ளைகளைச் சொல்லுகிறேன் கேட்பாயாக. 

சத்ருக்களை அழிப்பவனே! இந்த ஏழாம் மனுவாகிய வைவஸ்வத மனுவுக்கு, இக்ஷ்வாகு, நபகன், த்ருஷ்டன், சர்யாதி, நரிஷ்யந்தன், நாபாகன், திஷ்டன், கரூஷகன், ப்ருஷத்ரன், வஸுமான் என்று பத்துப் பிள்ளைகள். 

இந்த மன்வந்தரத்தில் ஆதித்யர்கள், வஸுக்கள், ருத்ரர்கள், விச்வேதேவர்கள், மருத்துக்கள், அச்வினர்கள், ருபுக்கள் ஆகிய இவர்கள் தேவதைகளாய் இருக்கிறார்கள். புரந்தரனென்பவன் அவர்களுக்கு ப்ரபுவான இந்த்ரனாயிருக்கிறான். கச்யபர், அத்ரி, வஸிஷ்ட்டர், விஸ்வாமித்ரர், கௌதமர், ஜமதக்னி, பரத்வாஜர் என்னும் இவர்கள் இம்மன்வந்தரத்து ரிஷிகளாக ஏற்பட்டிருக்கிறார்கள். இம்மன்வந்தரத்திலும், பகவான் கச்யபரிடத்தினின்று அதிதிக்குப் பிள்ளையாக அவதரித்தான். இவன் விவஸ்வான் முதலிய ஆதித்யர்களுக்குப் பின்பிறந்தவன்; உபேந்த்ரனென்னும் பெயருடையவன். இவனே வாமன உருவம் கொண்டவன். இவ்வாறு ஏழு மன்வந்தரங்களை உனக்குச் சுருக்கமாகச் சொன்னேன். இனிமேல் வரப்போகிற மன்வந்தரங்களைச் சொல்லுகிறேன் கேட்பாயாக. 

பகவானுடைய அவதாரங்கள் அமைந்தவையாகையால், அவையும் அவச்யம் கேட்கத் தகுந்தவைகளே. மன்னவனே! விவஸ்வானுடைய பத்னிகள் இருவர். அவர்கள் விச்வகர்மாவென்னும் ப்ரஜாபதியின் புதல்விகள். ராஜேந்தரனே! அவர்கள் ஸம்ஜ்ஞையென்றும், சாயையென்றும் பெயருடையவர்கள். உனக்கு நான் இவர்களை முன்னமே (ஆறாவது ஸ்கந்தத்தில்) சொல்லியிருக்கிறேன். அவனுக்குப் படபையென்று மூன்றாம் பார்யையும் (மனைவியும்) ஒருத்தி உண்டென்று சிலர் சொல்லுகிறார்கள். அவர்களில், யமனென்றும், ச்ராத்த தேவனென்றும் ஸம்ஜ்ஞையின் பிள்ளைகள் இருவர். அவளுக்கு யமியென்று ஒரு பெண்ணும் உண்டு. அவள்தான் யமுனா நதி. சாயையின் பிள்ளைகளையும் சொல்லுகிறேன், கேள். 

சாயைக்கு ஸாவர்ணியென்றும், சனைச்சரனென்றும் இரண்டு பிள்ளைகள். தபதியென்று ஒரு பெண். இவளே ஸம்வரணனுடைய பார்யை (மனைவி). அச்வினர்கள் படபையின் பிள்ளைகள், எட்டாவது அந்தரத்தில் ஸாவர்ணி மனுவாயிருக்கப் போகிறான். 

மன்னவனே! ஸாவர்ணிக்கு நிர்மோஹன், விரஜஸ்கன் முதலிய பிள்ளைகள் பிறக்கப் போகிறார்கள். அந்த எட்டாவது மனுவின் அந்தரத்தில் தபர், விரஜர், அம்ருதப்ரபர் என்னும் இவர்கள் தேவதைகளாய் இருக்கப் போகிறார்கள். விரோசனனுடைய பிள்ளையாகிய பலி இந்தரனாயிருக்கப் போகிறான். மூன்றடிகள் தாவென்று வேண்டுகிற வாமன ரூபியான ஸ்ரீமஹாவிஷ்ணுவுக்கு இந்த பூமண்டலத்தை முழுவதும் கொடுத்து அவனுடைய அனுக்ரஹத்தினால் நேர்ந்த இந்த பதவியைச் சிலகாலம் அனுபவித்துத் துறந்து மோக்ஷ ஸித்தியைப் பெறப்போகிறான். மற்றும், இந்த  பலி பகவானால் கட்டுண்டு மீளவும் ஸந்தோஷமுற்ற அந்த பகவானாலேயே ஸ்வர்க்கத்தைக் காட்டிலும் மேற்பட்டதாகிய ஸுதலமென்கிற அதோலோகத்தில் (கீழ் லோகத்தில்) வஸிக்கும்படி நியமிக்கப்பட்டு இப்பொழுது இந்த்ரன்போல் இருக்கிறான். இந்த மன்வந்தரத்தில் காலவர், தீப்திமான், பரசுராமர், அச்வத்தாமா, க்ருபாசார்யர், ருச்யச்ருங்கர், எங்கள் தந்தையாகிய வ்யாஸ பகவான் ஆகிய இவர்கள் தங்கள் தங்கள் யோக ப்ரபாவத்தினால் ஸப்தரிஷிகளாய் இருக்கப் போகிறார்கள். 

ராஜனே! இவர்கள் இப்பொழுது தங்கள் தங்கள் ஆச்ரம ஸ்தானங்களில் இருக்கிறார்கள். இந்த மன்வந்தரத்தில் பகவான் தேவகுஹ்யரிடத்தினின்று ஸரஸ்வதியிடத்தில் அவதரித்து ஸார்வபௌமனென்று ப்ரஸித்திபெற்று வல்லமையினால் ஏழாம் மன்வந்தரத்து இந்த்ரனாகிய புரந்தரனிடத்தினின்று இந்த்ரபதத்தைப் பிடுங்கிப் பலிக்குக் கொடுக்கப் போகிறான். (சாக்ஷுஷமென்கிற ஆறாவது மன்வந்தரத்தில் துர்வாஸரின் சாபத்தால் இந்த்ரன் ஜச்வர்யத்தை இழந்து அஜித பகவானைச் சரணம் அடைந்து அவனுடைய உதவியால் அம்ருதத்தைப் புசித்துப் பலியை ஜயித்துத் தேவர் கூட்டத்துடன் மூன்று லோகங்களையும் ஆண்டு வருகையில், பலி பார்க்கவர்களால் பலம் வளரப்பெற்று இந்த்ரனை ஓட்டி ஸ்வர்க்கத்தைக் கைப்பற்றினான். அப்பொழுது அதிதி பகவானை ஆராதிக்க, பகவான் ஆதித்யர்களுக்குத் தம்பியாய் வாமனனாகப் பிறந்து பலியிடம் சென்று மூவடி வேண்டிக் கபடத்தினால் (சூதினால்) அவனிடத்தினின்று ஐச்வர்யத்தைப் பிடுங்கி இந்திரனுக்குக் கொடுத்து பலியை அனுக்ரஹித்து “இப்பொழுது நீ ஸுதலமென்னும் அதோ (கீழ்) லோகத்தில் இரு. ஸாவர்ணி மன்வந்தரத்தில் நீ இந்த்ர பட்டத்தை அனுபவிப்பாய்” என்று மொழிந்து அவனை ஸூதலத்தில் (பூமிக்குக் கீழ் உள்ள லோகம்) வைத்தான். எட்டாம் மன்வந்தரத்தில் அவன் மேல்வர, அப்பொழுது அவதரித்த ஸார்வபௌமன் என்னும் பகவான் அவனுக்குப் புரந்தரனிடத்தினின்று இந்த்ர பட்டத்தைக் கொடுக்கப் போகிறான் என்று கருத்து.

வருணனுடைய பிள்ளையாகிய தக்ஷஸாவர்ணி என்பவர் ஒன்பதாம் மனுவாய் இருக்கப்போகிறார். க்ருதகேது, தீப்தகேது முதலியவர் அவருடைய பிள்ளைகள். தாதா மரீசி கர்க்கன் முதலியவர் தேவதைகளாய் இருக்கப் போகிறார்கள். ச்ருதனென்று பெயர் பெற்றவன் இந்த்ரனாய் இருக்கப் போகிறான். த்யுதிமான் முதலியவர் ஸப்தரிஷிகளாய் இருக்கப் போகிறார்கள். அந்த மன்வந்தரத்தில் பகவான் ஆயுஷ்மான் என்பவர்க்கு அம்புதாரை என்பவளிடத்தில் ருஷபனென்னும் பெயர்கொண்ட புதல்வனாக அவதரிக்கப் போகிறான் அப்பகவானால் பாதுகாக்கப்பட்ட மூன்று லோகங்களையும் ச்ருதனென்கிற தேவேந்திரன் அனுபவிக்கப் போகிறான். 

பத்தாவது அந்தரத்தில் உபச்லோகருடைய புதல்வரும் மஹா குணசாலியுமாகிய ப்ரஹ்மஸாவர்ணி என்பவர் மனுவாய் இருக்கப் போகிறார். பூரிஷேணன் முதலியவர் அம்மனுவின் புதல்வர்கள். ஹவிஷ்மான்,  ஸுக்ருதி, ஸத்யர், ஜயன், மூர்த்தி முதலியவர் அப்பொழுது ஸப்தரிஷிகளாய் இருக்கப் போகிறார்கள். ஸுவாஸனர், விபுத்தர் முதலியவர் தேவதைகளாய் இருக்கப் போகிறார்கள். சம்புவென்பவன் இந்த்ரனாய் இருக்கப்போகிறான். ஸமர்த்தனாகிய பகவான் விச்வஜித் என்பவருடைய பார்யையாகிய விஷூசி என்பவளிடத்தில் தன்னுடைய அம்சத்தினால் அவதரித்து இந்த்ரனாகிய சம்புவுடன் ஸ்னேஹம் (நட்பு) செய்யப் போகிறான்.

சிறந்த மனமுடைய தர்மஸாவர்ணி என்பவர் பதினொன்றாம் மனுவாய் இருக்கப் போகிறார். அவருக்கு ஸத்யன், தர்மன் முதலிய பத்துப் பிள்ளைகள் பிறக்கப் போகிறார்கள். விஹங்கமர், காமகர், நிர்வாணர், ருசிகள் என்னுமிவர்கள் தேவதைகளாய் இருக்கப் போகிறார்கள். த்ருவன் என்பவன் இந்த்ரனாய் இருக்கப் போகிறான். அருணர் முதலியவர் ஸப்தரிஷிகளாய் இருக்கப் போகிறார்கள். அந்த மன்வந்தரத்தில் பகவான் ஆர்யகருக்கு அவருடைய பார்யையாகிய வைத்ருதை என்பவளிடத்தில் பிள்ளையாக அவதரித்து தர்மஸேதுவென்று ப்ரஸித்தனாய் இருக்கப் போகிறான். அவன் மூன்று லோகங்களையும் பாதுகாக்கப் போகிறான். 

ராஜனே! ருத்ரஸாவர்ணி என்பவர் பன்னிரண்டாம் மனுவாய் இருக்கப் போகிறார். தேவவான், உபதேவன், தேவஜ்யேஷ்ட்டன் முதலியவர் அவருடைய பிள்ளைகள். ருதுதாமா என்பவன் அந்த மன்வந்தரத்தில் இந்த்ரனாய் இருக்கப் போகிறான். ஹரிதர் முதலியவர் தேவதைகளாய் இருக்கப் போகிறார்கள். தபோமூர்த்தி, தபஸ்வி, ஆக்னீத்ரகர் முதலியவர் ஸப்தரிஷிகளாய் இருக்கப் போகிறார்கள். அப்பொழுது பகவான் ஸத்யஸஹஸ்ஸுக்கு ஸூந்ருதையிடத்தில் பிள்ளையாகப் பிறந்து ஸ்வதாமனென்று பெயர்பெற்று தன் திறமையினால் அந்த மன்வந்தரத்தை நடத்தப் போகிறான். 

சிறந்த மனமுடைய தேவஸாவர்ணி என்பவன் பதின்மூன்றாம் மனுவாய் இருக்கப்போகிறான். சித்ரஸேனன், விசித்ரன் முதலியவர் அம்மனுவின் பிள்ளைகள். ஸுகர்மர், ஸுத்ராமர் என்பவர் தேவதைகளாய் இருக்கப்போகிறார்கள். திவஸ்பதி என்பவன் இந்த்ரனாய் இருக்கப்போகிறான். அப்பொழுது நிர்மோகர், தத்வதர்சர் முதலியவர் ஸப்தரிஷிகளாய் இருக்கப்போகிறார்கள். அப்பொழுது பகவான் தேவஹோத்ரனுடைய பார்யையாகிய ப்ருஹதியிடத்தில் யோகேச்வரனென்னும் பெயர்பூண்டு பிறந்து இந்தரனாகிய திவஸ்பதியின் இஷ்டங்களை நிறைவேற்றப் போகிறான். 

இந்த்ரஸாவர்ணி என்பவன் பதினான்காம் மனுவாக வரப்போகிறான். உருபுத்தி, கம்பீரபுத்தி முதலியவர்கள் அவனுடைய பிள்ளைகள். பவித்ரர், சாக்ஷுஷர் என்பவர்கள் தேவதைகளாய் இருக்கப்போகிறார்கள். சுசி என்பவன் இந்த்ரனாய் இருக்கப்போகிறான். அக்னி, பாஹு, சுசி, சுத்தன், மாகதன் முதலியவர்கள் ஸப்தரிஷிகளாய் இருக்கப்போகிறார்கள். அப்பொழுது பகவான் ஸத்ராயணனுக்கு விதானையிடத்தில் பிள்ளையாகப் பிறந்து ப்ருஹத்பானு என்று பெயர்பெற்று யஜ்ஞ கர்மங்களைப் பரவும்படிச் செய்யப்போகிறான். 

ஓ மஹாராஜனே! கீழ்நடந்த ஆறு மன்வந்தரங்களையும் இப்பொழுது நடக்கிற மன்வந்தரத்தையும் மேல்வரப்போகிற ஏழு மன்வந்தரங்களையும் உனக்கு நான் சொன்னேன். இந்த பதினான்கு மன்வந்தரங்களே ஒரு கல்பமாம்; ஆயிரம் யுகங்கள் அடங்கினது. இந்த கல்பமே ப்ரஹ்மதேவனுக்கு ஒரு பகல். 

பதின்மூன்றாவது அத்தியாயம் முற்றிற்று.

கருத்துரையிடுக (0)
புதியது பழையவை