ஶ்ரீமத் பாகவதம் - 182

 எட்டாவது ஸ்கந்தம் – பதினான்காவது அத்தியாயம்

(மனு முதலியவர்களுக்கு ஏற்பட்ட செயல்களை விவரித்துக் கூறுதல்)

பரீக்ஷித்து மன்னவன் சொல்லுகிறான்:- மஹானுபாவரே! மன்வந்தரத்தில் சொல்லப்பட்ட இந்த மனு முதலியவர்களில் எவரெவர் எந்தெந்த வ்யாபாரத்தில், யாவரால் நியமிக்கப்பட்டிருக்கிறார்களோ, அவற்றை எல்லாம் விவரித்துச் சொல்வீராக.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- மன்னவனே! மனுக்கள், மனுபுத்ரர்கள், ஸப்தரிஷிகள், இந்த்ரர்கள், தேவதைகள் ஆகிய இவர்கள் அனைவரும் யஜ்ஞாதி (யஜ்ஞன் முதலிய) அவதாரங்களைச் செய்த பரமபுருஷனால், தத்தம் வ்யாபாரங்களில் நியமிக்கப்படுகிறார்கள். மன்னவனே! பரமபுருஷனுடைய அவதாரங்களான யஜ்ஞன், முதலியவர்களை மொழிந்தேனல்லவா? 

மனு முதலியவர்கள், அந்த யஜ்ஞன் முதலியவர்களால் தூண்டப்பட்டு, உலகத்தின் போஷணத்தை (பாதுகாப்பை, காப்பாற்றுதலை) நடத்துகிறார்கள். காலக்ரமத்தில் அத்யயனம் செய்பவர் இல்லாமையால் அழிந்து போன வேத ஸமூஹங்களைத் தங்கள் யோக ப்ரபாவத்தினால் ஸப்தரிஷிகள் ஸாக்ஷாத்கரித்து (நேரில் கண்டு) ப்ரசாரம் செய்கிறார்கள். அந்த வேதங்களே ஸனாதனமான (பழமையான, எப்போதுமுள்ள) தர்மத்தை அறிவிக்கின்றன. 

மன்னவனே! பிறகு, மனுக்கள் யஜ்ஞாதி (யஜ்ஞன் முதலிய) ரூபியாய் அவதரித்த பகவானால் நியமிக்கப்பட்டு மனவூக்கமுற்று, அந்த வேதத்தினால் அறிவிக்கப்பட்ட தர்மத்தைத் தத்தம் காலத்தில் ப்ரஜைகளுக்கு உபதேசித்துப் பூமியில் பரவச் செய்கிறார்கள். மனுக்களின் புதல்வர்கள், அந்தந்த மன்வந்தரம் முடியும்வரையில் தத்தம் பிள்ளை, பேரன் முதலிய வரிசையாக வர்ண ஆச்ரம (ப்ராஹ்மண, க்ஷத்ரிய, வைச்ய, சூத்ர என்கிற வர்ணங்கள், மற்றும் ப்ரஹ்மசாரி, க்ருஹஸ்த, வானப்ரஸ்த, ஸன்யாஸி என்கிற ஆச்ரம) தர்மங்கள் அழியாதபடி ப்ரஜைகளைப் (மக்களைப்) பாதுகாக்கின்றார்கள். ரிஷிகள், பித்ருக்கள், பூதங்கள், மனுஷ்யர்கள் இவர்களுடன் யஜ்ஞாதி (யாகம் முதலிய) கர்மங்களில் தேவதைகள் ஹவிர்ப்பாகங்களைப் புசிக்கின்றார்கள். இந்த்ரன், யஜ்ஞரூபியான (யஜ்ஞன் முதலிய அவதாரங்களைச் செய்த) பகவானால் கொடுக்கப்பட்ட நிலைநின்ற த்ரைலோக்ய (மூன்று உலக) ராஜ்ய ஸம்பத்தை (சொத்தை) அனுபவித்துக்கொண்டு, ப்ரஜைகளுக்கு (மக்களுக்கு) வேண்டிய அளவு மழை பெய்து, மூன்று லோகங்களையும் பாதுகாக்கின்றான். யஜ்ஞரூபியாய் (யஜ்ஞன் முதலியவர்களாய்) அவதரித்த ஸர்வேச்வரன் மனு முதலியவர்களை நியமித்துக்கொண்டு, கபிலர் முதலிய ஸித்த உருவங்களைக் கொண்டு யுகங்களுக்குத் தகுந்தபடி ஜ்ஞானத்தை (தத்வங்கள், தர்மங்கள் இவற்றை) உபதேசிக்கிறான். 

மரீசி முதலிய ப்ரஜாபதிகளாய் ஸ்ருஷ்டியை நடத்துகிறான்; ராஜ ஸ்வரூபியாய் (அரசன் வடிவில்) துஷ்ட ஜந்துக்களை (கொடியவர்களை) வதிக்கிறான்; மீளவும் காலரூபியாய் (கால வடிவாய்) ஸமஸ்த வஸ்துக்களுடைய நாசத்திற்கும் காரணமாயிருக்கிறான்; ஸ்ருஷ்டி முதலிய கார்யங்களுக்குத் தகுந்தபடி தனித்தனியே குணங்களை ஏற்றுக்கொள்கிறான். இவ்வுலகத்திலுள்ள ப்ராணிகள் பற்பல நாம ரூபங்களுக்கிடமான மாயையினால் மதி (புத்தி) மயங்கி, ஜ்ஞானமே வடிவாகப் பெற்று, ஒருவாறாயிருக்கின்ற ஜீவாத்மாக்களை “இவன் தேவன், இவன் மனுஷ்யன்” என்று பலவாறு ப்ரமித்துச் (மயங்கி, மனக்கலக்கம் உற்று) சாஸ்த்ரங்களால் உன்னை நிரூபிக்கிறார்களன்றி உன்னைக்காண வல்லராகிறதில்லை. பழைய வ்ருத்தாந்தங்களை அறிந்த பெரியோர்கள் ஆயிரம் சதுர் யுகங்களைக் கொண்ட, ப்ரஹ்மாவின் ஒரு பகலான,  ஒரு கல்பத்திற்குப் பதினான்கு மன்வந்தரங்கள் அளவு என்று கூறுகிறார்கள்.

பதினான்காவது அத்தியாயம் முற்றிற்று.

கருத்துரையிடுக (0)
புதியது பழையவை