செவ்வாய், 8 செப்டம்பர், 2020

ஶ்ரீமத் பாகவதம் - 183

 எட்டாவது ஸ்கந்தம் – பதினைந்தாவது அத்தியாயம்

(வாமனாவதார வ்ருத்தாந்தம் பலி விரிஜித் யாகம் செய்து ஸ்வர்க்கத்தை ஜயிக்கையில் தேவதைகள் பயந்து மறைதல்)

பரீக்ஷித்து மன்னவன் சொல்லுகிறான்:- ஸர்வேச்வரனாகிய ஸ்ரீமஹாவிஷ்ணு, தான் அவாப்தஸமஸ்தகாமனாயும் (விரும்பியது அனைத்தையும் அடையப்பெற்றவனாயும்), ஸமஸ்த ப்ரபஞ்சத்திற்கும் ஈச்வரனாயும் இருந்தும், ஒன்றும் இல்லாத தாழ்ந்தவன் போல், பலியிடம் மூன்று அடி நிலத்தை ஏன் வேண்டினான்? தான் வேண்டியதைப் பெற்றும், ஏன் பலியை அடக்கிக் கட்டுக்குள் வைத்தான்? நான் இதை தங்களிடமிருந்து அறிய விரும்புகிறேன்; ஏனென்றால், யாகங்கள் அனைத்துக்கும் ப்ரபுவும் பூர்ணனுமான (நிறைவாளனுமான) பகவானது இச்செயல் மிகவும் ஆச்சர்யமாய் இருக்கிறது.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- ப்ருகுவின் புதல்வரான சுக்ராசாரியரையும் ப்ருகு மகர்ஷியின் வம்சத்தினரான மற்ற ப்ராஹ்மணர்களையும், வேண்டியது அனைத்தையும் கொடுத்து, அவர்களின் சிஷ்யனான பலி பணிவிடை செய்து பூஜித்தான். அந்த பலி போரில் இந்த்ரனால் அடிக்கப்பட்டு, தன் தேஜஸ் இழந்து நின்றபோது, அவர்கள் அவனை மீண்டும் உயிர்ப்பித்தார்கள். அந்த மஹானுபாவர்கள் பலிக்கு முறைப்படி ராஜ்யாபிஷேகம் செய்து வைத்தனர். அளவற்ற சக்தியும், தன் சிஷ்யனிடம் ப்ரீதியும் உடைய அந்த ப்ருகு வம்சத்து ப்ராஹ்மணர்கள், ஸ்வர்க்கத்தைக் ஜெயிப்பதில் நோக்குடைய பலிக்கு, பகவானைப் ப்ரீதி அடையச் செய்யும் விச்வஜித் என்ற யாகத்தைச் செய்வித்தனர்.  

அந்த யாகத்தில், ஹோம குண்டத்தில் ஹவிஸ்ஸால் ஹோமம் செய்தபோது, யாகத்தீயிலிருந்து தங்கத் தகடுகள் பொருத்தப்பட்ட  (அல்லது பொன்னாடைகளால் போர்த்தப்பட்ட) தேர், சூர்யனுடைய குதிரைகள் போன்ற பச்சை நிறமுள்ள குதிரைகள், சிங்கம் பொறித்த தேர்க்கொடி ஆகியன வெளிவந்தன. பின், தங்கக் கம்பிகளால் சுற்றப்பட்ட தெய்வீகத்தன்மை வாய்ந்த வில்லும், குறையாத அம்புகள் உடைய இரண்டு அம்புறாத்தூணிகளும், திவ்யமான கவசமும் வந்தன. தாத்தாவான ப்ரஹ்லாதன் எப்போதும் வாடாத பூக்களாலான ஒரு மாலையையும், சுக்ராசாரியார் ஒரு சங்கையும் பலிக்குக் கொடுத்தனர். 

இவ்வாறு ப்ருகு வம்சத்து ப்ராஹ்மணர்களால் யாகத்தீயிலிருந்து பெற்றுத்தரப்பட்ட போர் தளவாடங்களை உடைய பலி, அவர்களாலே மங்கள ஆசீர்வாதம் செய்யப்பட்ட பிறகு, அவர்களை ப்ரதக்ஷிணம் செய்து (வலம் வந்து) வணங்கினான். பின் தாத்தாவான ப்ரஹ்லாதனை வணங்கினான். அவர்களது உத்தரவைப் பெற்று, மஹாரதனான பலி, அந்த திவ்ய ரதத்தில் ஏறி அமர்ந்து, கவசம் அணிந்து, வில், கத்தி, கேடயம், அம்புறாத்தூணிகளை எடுத்துக்கொண்டு, தாத்தா கொடுத்த வாடா மலர் மாலையையும் அணிந்து கொண்டான். கைகளில் பொன்னாலான தோள் வளையும், காதுகளில் மகர குண்டலங்களும் ப்ரகாசித்தன. தேரில் நிற்கும் பலி, யாககுண்டத்தில் கொழுந்துவிட்டு எரியும் அக்னி போல் ப்ரகாசித்தான்.   

பெரும் வலிமை உடைய பலியுடன் அவனைப் போன்றே பலம், ஐச்வர்யம் உடைய அசுர சேனைத் தலைவர்கள் தங்களது படைகளுடன் வந்து சேர்ந்து கொண்டனர். அவர்கள் ஆகாயத்தையே விழுங்குபவர்கள் போலவும், கோபத்தின் சிவந்த கண்களால் எட்டு திசைகளையும் எரித்து விடுபவர்கள் போலவும் இருந்தனர். 

பலிச்சக்கரவர்த்தி அசுர சேனைகளை அணி வகுத்துக்கொண்டு பூமியையும், ஆகாசத்தையும் நடுங்கச் செய்து கொண்டு, அனைத்துச் செல்வங்களும் நிறைந்த இந்த்ரப் பட்டணமான அமராவதியின் மீது படையெடுத்தான்.

தேவர்களின் தலைநகரான அமராவதியில் அழகிய நந்தவனங்களும், பூங்காக்களும் நிறைந்திருந்தன. அங்கு ஆண், பெண் பறவைகள் இனிமையாகக் கூவுகின்றன. மது உண்டு மயங்கிய வண்டுகள் இனிது பாடுகின்றன. அவ்வுத்யானங்களிலும், உபவனங்களிலும் (தோட்டங்களில்) தளிர், பூ, காய், பழம் முதலியவற்றால் பெரும்பாரமுடைய கிளைகள் அமைந்த கல்பவ்ருக்ஷங்கள் நிறைந்திருக்கும். மற்றும், அங்கு ஹம்ஸம், ஸாரஸம், சக்ரவாகம், நீர்க்காகம் முதலிய ஜலபக்ஷிகள் (நீர் பறவைகள்) பலவும் இனம் இனமாய் இருக்கப் பெற்ற தாமரையோடைகள் ஏற்பட்டிருக்கும். அவ்வோடைகளில், தெய்வ மடந்தையர்கள், தத்தம் காதலருடன் இறங்கி விளையாடிக் கொண்டிருப்பார்கள். 

த்ரிவிக்ரமாவதாரம் செய்த பகவானுடைய பாதாரவிந்தத்தினின்று (திருவடித்தாமரைகளிலிருந்து) உண்டான கங்காநதி அந்நகரை அகழிபோலச் சுற்றிக் கொண்டிருக்கும். மற்றும், அந்நகரம் ஸ்வர்ணமயமாகையால், அக்னிபோல ஜ்வலிப்பதும் யுத்தங்களுக்காகக் கட்டின மேற்கட்டடங்கள் அமைந்து உயர்ந்திருப்பதுமாகிய ப்ராகாரம் அமையப் பெற்றிருக்கும். மற்றும், அந்நகரத்தில் உள்வாசல்கள் பொன்பட்டம் கட்டின கதவுகள் அமைந்திருக்கும். கோபுரங்கள் ஸ்படிக ரத்னமயமாயிருக்கும். ராஜமார்க்கங்கள் தனித்தனியே பிரிக்கப்பட்டிருக்கும். அந்நகரம் விச்வகர்மாவென்னும் தெய்வ தச்சனால் இயற்றப்பட்டது; ஸபைகளாலும், முற்றங்களாலும், கிளைவீடுகளாலும், அழகாயிருக்கும். அங்கு ஏழடுக்கு மெத்தைகள் அளவற்றிருக்கும். மற்றும், அங்கு நாற்சந்தி வீதிகள் இந்த்ர நீலமணிகளால் இயற்றப்பட்டு, வஜ்ரமணிகளாலும், பவழங்களாலும் இயற்றின திண்ணைகள் அமைக்கப் பெற்றிருக்கும். 

யௌவனவயது (இளம் வயது) ஸௌகுமார்யம் (இளமை, ம்ருது தன்மை) இவை மாறாதிருக்கப் பெற்றவர்களும், நிர்மலமான ஆடைகள் உடுத்திருப்பவர்களும், சிறந்த ஸௌந்தர்யம் (அழகு) உடையவர்களுமாகிய மடந்தையர்கள், ஜ்வாலைகளோடு (தீப்பிழம்போடு) கூடின அக்னிகள்போல அந்நகரத்தில் திகழ்வுற்றிருப்பார்கள். காற்று, தெய்வப் பெண்களின் தலைச்சொருக்கினின்று நழுவின புதிய செங்கழுநீர்ப் பூமாலைகளின் பரிமளத்தை முகந்துகொண்டு, பொற்சாளரங்களினின்று வெளிவருகின்ற அகில் புகையின் வாஸனையோடு கூடி மார்க்கத்தில் வீசிக்கொண்டிருக்கும். அந்நகரில், தெய்வ மடந்தையர்கள் வெள்ளைத்துணி விரிக்கப்பெற்ற மார்க்கத்தில் நடப்பார்களேயன்றி, வெறுந்தரையில் நடக்கமாட்டார்கள். 

முத்துக்களால் இயற்றின மேற்கட்டுக்களும், ஸ்வர்ணத்தினால் இயற்றின ரத்னங்கள் இழைக்கப்பெற்ற த்வஜங்களும் (கொடிகளும்) பலவகைப் பதாகைகளும் அங்கு வரிசை வரிசையாய்க் கட்டப்பட்டிருக்கும். மயில், புறா, வண்டு முதலிய பறவைகளின் கோஷங்கள் எப்பொழுதும் அமைந்திருக்கும். விமானத்தில் ஸஞ்சரிக்கின்ற மடந்தையர்களின் பாடல்களால் மங்களமுற்றிருக்கும். மத்தளம், சங்கம், கனகத்தம்பட்டம், துந்துபி, தாளம், வீணை, முரஜம், வேணு முதலிய வாத்ய கோஷங்களாலும் மற்றும் பல வாத்யங்களோடு கூடின அப்ஸரஸ்த்ரீகளின் ஆடல்களாலும், கந்தர்வாதிகளின் பாடல்களாலும் அந்நகரம் மனத்திற்கினிதாய் இருக்கும். 

தன் அழகால் ஒன்றான திவ்யகீதங்களின் அதிஷ்டான தேவதையை வென்றிருக்கும். அதன் அழகை மற்ற எந்த நகரமும் ஜயிக்கவல்லதன்று. அந்நகரத்தின் ஒளியினால் ஸூர்யன் முதலிய க்ரஹங்களின் ஒளியும் மழுங்கிப்போகும். அதர்மிஷ்டர்களும் (நல்வழியைப் பின்பற்றாதவர்களும்), துர்ப்புத்தியுடையவர்களும் (கெட்ட புத்தி உடையவர்களும்) பூதங்களுக்கு த்ரோஹம் செய்பவர்களும் (பிராணிகளுக்குக் கெடுதி செய்பவர்களும்), மூர்க்கர்களும் (அறிவற்றவர்களும்), அஹங்காரமுடையவர்களும் (நான் என்ற கர்வம் உடையவர்களும்), காமுகர்களும் (தீவிர காதல் ஆசை உடையவர்களும்), லோபமுடையவர்களும் (பேராசை உடையவர்களும்) அந்நகரத்தை அணுக மாட்டார்கள். இந்தத் தோஷங்களற்ற புருஷர்களே அதை அடைவார்கள். 

பெரும் சேனையோடு சென்ற அந்தப் பலி இத்தகையதான அந்த அமராவதியென்னும் தெய்வ நகரத்தைக் கிட்டித் தன் ஸேனையினால் அதை நாற்புறத்திலும் தகைந்து (சூழ்ந்து), இந்த்ரனுடைய மடந்தைகளுக்குப் பயத்தை விளைவித்துக் கொண்டு, சுக்ராசார்யன் கொடுத்த பெருங்கோஷமுடைய சங்கத்தை எடுத்து ஊதினான். இந்திரன், பலியினுடைய அப்பெரிய முயற்சியைக் கண்டு, ஸமஸ்த தேவகணங்களுடன், ப்ருஹஸ்பதியை நோக்கி இவ்வாறு மொழிந்தான்.

இந்தரன் சொல்லுகிறான்:- பேரறிவுடையவரே! முன்பு நம்மால் தோல்வியடைந்து, நம்மேல் விரோதம் (பகைமை) கொண்டிருக்கிற பலி, இப்பொழுது செய்கிற இப்பெருமுயற்சியை நம்மால் பொறுக்கமுடியாதென்று நினைக்கிறேன். இவனுக்கு இப்படிப்பட்ட திறமை எவ்வாறு உண்டாயிற்று? இவன் சத்ருக்களை (எதிரிகளை) வெல்லுவதில் நிலைநின்ற திறமை அமைந்திருக்கிறான். இந்தப் பலியை எவனும் எந்த உபாயத்தினாலும் வெல்ல முடியாது. இவன் வாயினால் ஜகத்தையெல்லாம் பருகுபவன் போலவும், பத்துத் திசைகளையும் நக்குபவன் போலவும், கிளர்ந்து (நாற்புறத்திலும் சூழ்ந்து) எரிகின்ற ப்ரளயாக்னி (ஊழிக்கால, அழிவுக்கால நெருப்பு) போலக் கண்ணோக்கங்களால் ஆகாயத்தை எரிப்பவன் போலவும் திகழ்கிறான். என் சத்ருவாகிய (எதிரியான) பலிக்கு இவ்வாறு பிறரால் எவ்வகையிலும் வெல்ல முடியாதிருக்கும் பெருமை எந்தக் காரணத்தினால் உண்டாயிற்று? இவன் இந்த்ரிய பலம் (புலன்களின் சக்தி), மனோபலம் (மனதின் சக்தி), தேஹபலம் (உடல் சக்தி), தேஜஸ்ஸு (ஒழுக்கத்தினால் ஏற்படும் சக்தி) இவையெல்லாம் அமைந்து பெரிய முயற்சி கொண்டிருப்பதற்குக் காரணம் யாதோ, அதை எனக்குச் சொல்வீராக.

ப்ருஹஸ்பதி சொல்லுகிறார்:- இந்த்ரனே! உன் சத்ருவாகிய (எதிரியான) இந்தப் பலிக்கு, இப்படிப்பட்ட மேன்மை உண்டானதற்கான காரணத்தை நான் அறிவேன். வேதங்களை ஓதியுணர்ந்த சுக்ரன் முதலியவர்கள் தங்கள் சிஷ்யனாகிய பலிக்குத் தேஜஸ்ஸை (சக்தி, வலிமை, பெருமையை) விளைவித்தார்கள். பலிக்கு இந்தப் பெருமையெல்லாம் ப்ரஹ்ம தேஜஸ்ஸினால் (ப்ராஹ்மண சக்தியினால்) உண்டாயிற்று. ஆகையினால், பகவானைத்தவிர உன்னைப் போன்ற மற்ற எவனாவது அல்லது நீயேயாவது இவனெதிரில் ஒரு க்ஷணமும் நிற்கமுடியாது. நீங்கள் எல்லாரும் ஸ்வர்க்கத்தைத் துறந்து, எங்காயினும் போய் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து, சத்ருவுக்குத் (எதிரிக்குத்) தோல்வி நேரும்படியான காலத்தை எதிர்பார்த்துக் கொண்டிருப்பீர்களாக. இவன் இப்பொழுது ப்ரஹ்ம தேஜோபலத்தினால் (ப்ராஹ்மண சக்தியினால்) செய்யும் செயல்களெல்லாம் பயன்பெறும்படியான காலம் நேரப்பெற்று, நிலைகின்ற பராக்ரமமுடையவனாய் இருக்கிறான். மீளவும் இவன் அந்த ப்ராஹ்மணர்களையே அவமதித்துக் குடும்பத்துடன் அழியப்போகிறான். அந்தக் காலத்தை எதிர்பார்த்துக் கொண்டிருப்பீர்களாக.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- தேவதைகள் அந்தந்த ஸமயங்களில் செய்யத்தகுந்த கார்யங்களை அறிந்த ப்ருஹஸ்பதியுடன் தாங்கள் செய்ய வேண்டிய கார்யத்தைப்பற்றி நன்றாக ஆலோசித்துக் கொண்டு ஸ்வர்க்கத்தைத் துறந்து, காமரூபிகளாகையால் (நினைத்தபடி உருவங்களை எடுத்துக்கொள்ளக் கூடியவர்களாகையால்), நினைத்தபடி வடிவங்களைக் கொண்டு போனார்கள். இவ்வாறு தேவதைகள் மறைகையில், பலி அமராவதி பட்டணத்தைக் கைப்பற்றி மூன்று லோகங்களையும் தன்வசமாக்கிக் கொண்டான். பிறகு லோகங்களையெல்லாம் வென்றிருப்பவனும் தம்மைத் தொடர்ந்த சிஷ்யனுமாகிய பலியைக்கொண்டு அவனிடத்தில் வாத்ஸல்யமுடைய (தாய்க்குக் கன்றிடம் போல் பரிவு உடைய) ப்ருகுக்கள் (ப்ருகு வம்சத்து ப்ராஹ்மணர்கள்) ப்ராப்தமான (கிடைத்த) இந்த்ர பதவியை நிலைப்படுத்திக் கொள்ளும் பொருட்டு, நூறு அச்வமேத யாகங்களைச் செய்வித்தார்கள். 

பிறகு அந்தப் பலி, நூறு அச்வமேத யாகங்கள் செய்த ப்ரபாவத்தினால் மூன்று லோகங்களிலும் எல்லா திசைகளிலும் புகழ் பரவப் பெற்றுச் சந்த்ரன்போல விளங்கினான். நீண்ட ஸங்கல்பத்தையுடைய (மன வலிமை, ஆழ்ந்த விருப்ப சக்தி  உடைய) அந்த பலிசக்ரவர்த்தி தன்னை ப்ரயோஜனங்களெல்லாம் (பயன்கள் எல்லாம்) கைகூடப் பெற்றவன் போல நினைத்து, ப்ராஹ்மணர்களால் கைகூடுவிக்கப்பட்ட ஸம்ருத்தியையுடைய ஸம்பத்தை (செல்வச் செழிப்பை) அனுபவித்து வந்தான். 

பதினைந்தாவது அத்தியாயம் முற்றிற்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக